ஞாயிறு, செப்டம்பர் 29, 2013

குழந்தை வளர்ப்பில் - தந்தையின் பங்கு!


(ஓர் தந்தையாய் என்னை முழுமனதாய்-அங்கீகரித்த "என்னவளுக்கு" சமர்ப்பனம்!!!)

       நேற்று காலை, என் நண்பனின்-நண்பர் ஒருவர் முக-நூலில் ஓர் பதிவை வெளியிட்டிருந்தார்! அது ஓர் நகைச்சுவயான கதை - அதை படிக்க இங்கே சொடுக்குங்கள்! அதை படித்தவுடனேயே எனக்கு பிடித்துபோனது! ஆனால், அந்த தந்தையை "அத்தனை அறிவிலியாய்" காட்டி இருந்தது என்னை வேதனைக்கு உள்ளாக்கியது. உடனே, எனக்கு குறையாய் பட்ட விசயத்தை சுட்டிக்காட்டி பகிரவேண்டும் என்றெண்ணி, பின் அன்று மாலை வரை தள்ளிவைத்தேன். அந்த நண்பருக்கு பல வாசகர் வட்டம் இருப்பதை அறிந்து கொஞ்சம் யோசித்தேன்; பயமல்ல! அது மிகப்பெரிய உறவும்-உணர்வும் சார்ந்த கதை! என்னுடைய கருத்து தவறாய் எடுத்துக்கொள்ளப்பட்டால், எழுதியவர் மட்டுமல்ல; அவரின் வாசகர் வட்டத்தையும் நான் சமாளிக்கவேண்டும். முதலில், அதற்கு என்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளவேண்டும்; அதற்கான பொருமையை நான் முன்கூட்டியே பழக ஆரம்பித்துவிட்டேன். ஏனெனில், ஒர் கட்டத்தில் என்னுடைய கருத்தும் - அது சார்ந்த விவாதங்களும் "தனி-நபர்" வரை கொண்டுசெல்லும் அபாயம் இருப்பதையும் உணர்ந்தேன் (அப்படித்தான் இறுதியில் சென்றது!). எல்லாவற்றையும் என்னுள் விவாதித்து - நேற்று மாலை என்னுடைய கருத்தை வெளியிட்டும் விட்டேன். அட...அட...அட... அந்த நிமிடம் முதல் இந்த நிமிடம் வரை; இன்னமும் எங்கள் விவாதம் ஓயவில்லை! இதில், பரிதாபம் என்னவென்றால் - நான் மட்டும் தனித்து இருப்பதாய் படுகிறது; இருக்கட்டுமே, தனியாய் இருந்தால் என்ன? மோதித்தான் பார்ப்போமே! ஹா...ஹா...ஹா...

        குழந்தை வளர்ப்பில் - அத்தி பூத்தார்ப்போல் அங்கொன்றும், இங்கொன்றும் - தவறான தாய்-கள் இருக்கிறார்கள் எனினும், பெரும்பான்மையில் தாய்-க்கு நிகர் எவருமில்லை! இது, எனக்கு தெளிவாய் தெரியும்! இதற்கு ஓர் தாயாய், அவள் தாயான தருணம் முதல்(மட்டுமல்லாது!) பார்த்ததன் அடிப்படையில் நான் கொடுக்கும் உதாரணம் "என்னவள்"; என்னவளை அவள் கருவுற்ற நாள் அன்று முதல் என்பதைக் காட்டிலும் - "அவள் கருவுறுவதற்கு ஆயத்தமான நாள் முதலே" உண்ர்ந்தவன் என்ற அடிப்படையில் சொல்கிறேன். இதை விளக்கிட பின்வரும் 2 காரணிகள் போதும்: 1. அவள் கருவுற்றிருக்கிறாள் என்பதை அவளே முதலில் உணர்ந்து அன்று காலையே என்னிடம் சொன்னாள்! எனக்கு அதிசயமாய் இருந்தது; ஆணுக்கே உறிய தோரணையில் - உனக்கு எப்படி தெரியும்? என்றேன்! நான் உணர்கிறேன்! என்றாள். எனக்கு தெரியாமல் (அவளுடைய பெட்டியையும் நான் தான் அடுக்கினேன் என்ற போதும்) திருமணமான பின் அவள் முதன்முதல் என்னுடன் போர்த்துக்கல் நாட்டிற்கு வந்தபோது, எனக்கே தெரியாமல் "கருவுற்றிருப்பதை அறியும் கையடக்க கருவி" ஒன்றை வாங்கி வந்திருக்கிறாள்; அப்படி ஒன்று இருக்கிறது என்றே எனக்கு அன்று தான் தெரியும் (இதுபோன்று தான் ஆண்/தந்தை பின்தங்கி இருக்கிறான்!). அதில், பரிசோதனை செய்து எனக்கு முடிவை காண்பித்தாள்; பின் இருவரும் சேர்ந்தே வெறொரு கருவியையும் வாங்கி பரிசோதனை செய்த (பார்க்க! இடது புகைப்படம்) பின்னர் தான் மருத்துவரையே பார்க்க சென்றோம்.

       ஓர் பெண் பிறக்கும்போதே தாயாகிறாளா? என்பது எனக்கு தெரியாது; ஆனால், குழந்த பெற ஆயத்தமாகும் முன்னரே "ஓர் தாயாய் யோசிக்க ஆரம்பிக்கிறாள்" என்பது எனக்கு வெகு நிச்சயமாய் தெரியும்! 2. ஓர்முறை எம்மகளுக்கு மருந்து ஒன்றை வாங்கி வரச்சொன்னாள், என்னவள்! நானும், உடனே வாங்கி வந்தேன்! அதை ஓர்முறை பார்த்தவள், கொதித்தெழுந்து விட்டாள்; "முடிவுக்காலம் (Expiry Date)" பார்த்து வாங்கமாட்டீங்களா? என்றாள். என்னடா இது, வீணாப்போனதை கூடமா விற்பார்கள்? என்று எண்ணினேன் (உண்மையில், முடிவுக்காலம் 1 மாதத்தில் இருந்தது - அதைக்கூட ஓர் தாய் ஏற்கமாட்டாள்!). இது தான், ஓர் ஆண் குணம் அல்லது ஓர் தந்தையின் குணம்; அதுமாதிரி பார்க்கவேண்டும் என்று பெரும்பான்மையான ஆண்(தந்தை)களுக்கு தெரியாது! இங்கே தான் தாயும், தந்தையும் வெவ்வேறு உலகத்தை சேர்ந்தவர்கள் என்பதை "எளிதில்" உணரமுடியும்; இப்படித்தான், குழந்தை வளர்ப்பில் ஓர் தந்தை அந்நியப்பட்டு இருப்பதை காட்டவேண்டும். இதுதான், யதார்த்தம்! இதை விடுத்து - மேற்கூறிய கதையில் வரும் உவமானத்தில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை. ஆயினும், அந்த கதை சொல்லும் நீதியில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை! இதைத்தான் என்னுடன் வாதிடுபவர்களுக்கு புரியவைக்க சிரமப்பட்டு போராடிக்கொண்டு இருக்கிறேன். ஆண் இப்போது தான், "குழந்தை வளர்ப்பில்" தனக்கும் பங்கு உண்டு என்பதை உணர்ந்திருக்கிறான். அவனை முதலில், அவன் செய்யும் சிறு-செயலையும் பாராட்டி வரவேற்கவேண்டும் என்பதே என் வாதம்.

      இதை முதலில், அவனின் மனைவி - அதாவது ஓர் தாய் தான் வரவேற்று அவனுக்கு சகலமும் கற்றுக்கொடுக்க வேண்டும். அவள் நேரடியாய் "உங்களுக்கு இதெல்லாம் தெரியாது..." என்றோ அல்லது மறைமுகமாய் வெறொருவரிடம் "அவருக்கு அதெல்லாம் ஒன்றும் தெரியாது..." என்றோ கூறி அவனை விளக்கி வைக்கக்கூடாது. அவன் செயலை பரிகாசம் செய்யக்கூடாது; குறிப்பாய், மேற்கூறிய கதையில் வரும் "சற்றும் உண்மை இருக்க வாய்ப்பில்லாத" உதாரணம் கொண்டு! நான் மேற்குறிப்பிட்ட 2 விசயங்கள் போன்று எவ்வளவோ உள்ளன! அதைப்போன்ற விசயங்களைக் கூறி விளக்கவேண்டும்! அதை விடுத்து - இப்படி ஏன் ஓர் ஆணை/தந்தையை சித்தரிக்கவேண்டும்? "இதைக்கூட பார்த்து வாங்கமாட்டீங்களா??" - இதைக்கேட்ட நாள் முதல், எந்த அவசரத்திலும் ஓர் திண்பொருளைக் கூட முடிவுக்காலம் பார்க்காமல் வாங்குவதில்லை! ஆண் எதையும் புரிந்து கொள்ளமுடியாத முட்டாள் அல்ல; குழந்தை வளர்ப்பில் "அவனுக்கு முந்தைய தலைமுறை ஈடுபட்டதாய்; கதையாய் கூட" கேட்டறியாதவன்! அதை முதன்முதலாய் செய்ய முற்படுகையில் - அவனை இருகரம் கூப்பி வரவேற்கவில்லை எனினும், அவனுக்கு ஆறுதலாய் இருக்கவேண்டும் என்னவள் எனக்கு இன்றளவில் அவள் எனக்கு செய்திட்ட பெரு-விசயம், பின்வருவது: 2011 ஆம் ஆண்டு "சனவரி மாதம் 27 ஆம் தேதி" போர்த்துக்கல் நாட்டில் இருந்து நானும் என்மகளும் மட்டும் இந்தியா சென்றோம்! அன்று என்மகளுக்கு 18 மாதங்களுக்கு 6 நாட்கள் குறைவு! இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா?

       சொல்கிறேன்! அன்று வரை என்மகள் தாய்ப்பால் அருந்தினாள்! பல நாட்கள் முன்பிருந்தே என்னவள் நிறுத்த முயற்சித்தும் - என்மகளின் பிடிவாதத்தால் இயலாமல் போயிற்று! அவள் கடைசியாய் "லிஸ்பன்" விமான-நிலையத்தில் தாய்ப்பால் அருந்தினாள் - அதாவது, நாங்கள் "பாதுகாப்பு பரிசோதனை"க்கு செல்லும் வரை!! ஓர் குழந்தையை தாய்ப்பால் மறக்கடிக்க செய்வது எத்தனை கடினம் என்பதை இதைப் படிக்கும் தாய்மார்களுக்கு நான் சொல்லத் தேவையில்லை. தாய்ப்பாலை நிறுத்திய உடன் தாய்க்கு என்னென்ன விளைவுகள் இருக்கும் என்பதையும் நான் சொல்லத் தேவயில்லை! நான் இல்லாது, என்னவளே அவளின் பிரச்சனையை சமாளிக்கவேண்டும் என்பதும் அவளுக்கு தெரியும்! அவள் இல்லாது, எம்மகள் படப்போகும் பிரச்சனையும் அவளுக்கு தெரியும்!! ஓர் தந்தையாய் நான் அனைத்தையும் சமாளிப்பேன் என்ற பெருத்த-நம்பிக்கையைக் கொண்டு; என்னையும் திடப்படுத்தி எங்களை வழியனுப்பி வைத்தாள்! என்மகளை; என்னவள் என்னிடம் கொடுத்தது போலவே - இந்தியா சென்று சேர்ப்பித்தேன் {என்மகள் அன்று அணிந்திருந்த ஆடை (பார்க்க! வலது புகைப்படம்) கூட இன்னும் என் நினைவில் இருக்கிறது!}. அங்கு சென்றதும் யாரைப் பார்த்தாலும் அழுவாள்! என்னை, கழிவறை செல்லக் கூட அவள் அனுமதிப்பதில்லை. என்மகளுக்கு சாதாரண பாலை பழக்க - என்குடும்பம் முழுதும் சேர்ந்து போராடினோம்! மீண்டும் என்மகளுடன் தனியாய் விமானப்-பயணம் செய்யும் வாய்ப்பிற்காய் காத்துக்கொண்டு இருக்கிறேன்; அது ஓர் இனிய-அனுபவம்!

        இங்கே என்னுடைய தற்பெருமையை கூறவருவதாய் எவரும் தவறாய் எண்ணவேண்டாம்; அது என் நோக்கமும் அல்ல! அதேபோல், நீங்கள் உங்கள் குழந்தைக்கு என்னென்ன செய்தீர்கள் என்று ஒப்பிட்டு-பட்டியல் இடவும் வேண்டாம்! என்மகள் என்னிடம் இருக்கும்போது, என்னவளால் எந்த-மனக்குறையும் இன்றி வெகு-நிம்மதியாய் இருக்கமுடியும்; இது ஓர்-தந்தையாய் என்மேல் என்னவளுக்கு இருக்கும் நம்பிக்கை! அவளின் நம்பிக்கையும், அவள் தந்த ஊக்கமும் தான் என்னை குழந்தை-வளர்ப்பில் வெகுவாய் ஈடுபடுத்தியது. இதை அனைத்தையும் தாண்டி, எங்களுக்குள் எப்படிப்பட்ட கருத்து வேறுபாடு/பிரச்சனை வரினும்; குழந்தை-வளர்ப்பில் எனக்குள்ள உரிமையை ஒருபோதும் அவள் தடுத்ததில்லை! கணவன்/மனைவி என்ற "இருவருக்குள்" பிரச்சனை வரும்போது; இந்த சமுதாயமும்/சட்டமும் "குழந்தை வளர்ப்பு" என்பதை முன்னிறுத்துகிறது! ஆனால், அதற்கான பயிற்சியை ஓர்-தந்தைக்கு அளிப்பதில்லை! என்ற கசப்பான உண்மையே என்னுடைய என்னுடைய வாதத்திற்கு காரணம். இது குறித்து, என்னுடைய ஆற்றாமையை "குழந்தை யாரிடம் வளரவேண்டும்???" என்ற தலையங்கத்தில் பதிவு செய்து இருக்கிறேன். எனவே, மேற்கூறியதை வெறும்-கதையாய் மட்டும் என்னால் பார்க்கமுடியவில்லை! இப்படிப்பட்ட கதைகளும்/பேச்சுக்களும் தான்; கணவன்/மனைவி பிரச்சனை வரும்போது - அங்கே "பிள்ளை-தந்தை"பிரிவை முதன்மைப்படுத்துகிறது! "எனக்கு அப்படி நேரவில்லை!" என்று; என்னால் "சும்மா" இருக்கமுடியவில்லை! எனவே, பிள்ளை வளர்ப்பில்...
   
தந்தயின் பங்கை - முதலில் துவங்க அனுமதிப்போம் என்பதே என் வேண்டுகோள்!!!

பின்குறிப்பு: தயவுசெய்து மீண்டும், "அது உடல் சார்ந்தது", "பத்து மாதம் சுமந்தவளுக்கு தெரியும்" என்று விவாதிக்காதீர்கள்! என்மகள் கருவுற்ற நாள் முதல், பிறந்த 10-ஆவது நிமிடம் அவளை என்கரங்களில் தாங்கியது வரை, தனியாய் என்னவளுடன் இருந்து - அவளின் தாய்மையை "உடலால் இல்லை" எனினும், உணர்வால் உணர்ந்தவன்! அதை நானே, இவ்வலைப்பதிவின் முதல்-தலையங்கத்தில் எழுதியவனும் கூட!! பெண்கள் - கருவைத் தாங்கும் வரத்தை விரும்பி-பெறவுமில்லை; ஆண்கள் அந்த வரத்தை வெறுத்து-மறுக்கவுமில்லை! இது இயற்கை/இறைவனால் அமையப்பெற்றது; இது மாறு-பட்டும் இருந்திருக்கக்கூடும்! அதனால், இது போன்ற வாதத்தை தயவுசெய்து முன் நிறுத்தாதீர்கள்! "அந்த வரத்தை மதிக்காத அளவிற்கு ஆண்வர்க்கம் இன்னும் தரம்-தாழவில்லை"! மேலும், இங்கே எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் வாதம் "குழந்தை வளர்ப்பது பற்றி! குழந்தை பெறுவது பற்றி அல்ல"! அருள்கூர்ந்து - இவை இரண்டும் முற்றிலும் மாறுபட்ட இருவேறு பிரிவுகள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்!

ஞாயிறு, செப்டம்பர் 15, 2013

விநாயகர் சதுர்த்தி...



       
           இரண்டு நாட்களுக்கு முன், மும்பை கடலில் விநாயகர் சிலையை மூழ்கடிக்க சென்ற பக்தர்களை (???!!!) பாறை-மீன்கள் கடித்துவிட்டன என்ற செய்தியை நாளிதழ் ஒன்றில் படித்தேன். உடனே, ஆஹா! கடவுள் கண் திறந்துவிட்டான் என்று ஆனந்தப்பட்டேன்; ஆயினும், அவர்களின் உயிருக்கு எதுவும் ஆபத்தில்லை என்று தெரிந்து (மன்னிக்கவும்!)வருத்தப்பட்டேன்! அந்த கடவுள், அவர்களை கொன்றிருக்கவேன்டாமா? என்று சினம் வந்தது; பின் (எப்போதும் போல்!?) கடவுள் நின்று தான் கொல்வான்! என்று நானே சமாதானம் அடைந்தேன். ஒன்றுமட்டும் உண்மை! இயற்கை/இறைவன் இம்மாதிரி அறிவிலிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சரியான எச்சரிக்கை என்பதே அது. என்னென்ன ஆர்ப்பாட்டங்கள் இந்த சதுர்த்தி தினத்தில்?! ஓர் 20 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறெல்லாம் இருந்தது கிடையாது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது; நான் இளங்கலை (1989-1992) சென்னை-மாநிலக் கல்லூரியில் படிக்கும்போது தான் முதன்முதலில் சென்னையில் இதுபோன்ற-திருவிழா பெரிய அளவில் கொண்டாடப்பட்டது! அப்போது, எவனோ கிறுக்கு-பக்தன் ஒருவனால் திருவல்லிக்கேணி பெரு-சாலையில் உள்ள மசூதியில் தொழுதவர்களுடன் தகராறு ஆரம்பித்து பெருத்த பிரச்சனை வெடித்தது. இதுதெரியாத, நானும் என் நண்பர்கள் சிலரும் அதற்கருகில் இருக்கும் தெருவொன்றில் நடந்துகொண்டிருக்கும்போது - திடீரென எங்கள் முன் ஓர் "தேநீர் கண்ணாடிக்குடுவை" ஒன்று விழுந்து நொறுங்கியது! முதலும், கடைசியுமாய் அன்றுதான் நான் கண்ணீர்-புகையை நேரில் கண்டது!

  எப்படி, எங்கு ஓடினோம் என்றே எங்களுக்கு தெரியவில்லை; கிடைத்த வீட்டுக்குள் புகுந்துகொண்டோம்! பின்னர், நிலைமை சரியானதும் ஒருவாறாய் சேப்பாக்கம்-மைதானம் பக்கத்தில் இருக்கும் எங்கள் விடுதியை சென்றடைந்தோம்! பல நாட்கள் எங்களுக்கு அந்த படபடப்பு இருந்தது; பின், சில ஆண்டுகள் ஒவ்வொரு சதுர்த்தியின் போதும் அந்த நினைவும், படபடப்பும் இருந்தது. எனக்கு தெரிந்து, தமிழகத்தில் "விநாயகர் சதுர்த்தி" ஊரளவில் பெரிய திருவிழாவாய் கொண்டாட ஆரம்பித்ததற்கு அதுதான் ஆதியாய் இருந்திருக்கவேண்டும். அதற்கேற்றாற்போல் அந்த ஆண்டு துவங்கி தான் இந்த ஊர்வலங்கள் பிரபலம் ஆகத்துவங்கின. அதற்கு முன், ஒவ்வொருவரும் தத்தம் வீடுகளில் மட்டும் தான் ஓர் சிரிய சிலை-வைத்து வழிபட்டு பின்னர் அவரவர் வீட்டில் உள்ள/ ஊர்-பொதுக் கிணற்றில் 3-ஆம் நாள் விடுவது வழக்கம். நான் மேற்கூறிய ஆர்ப்பாட்டமும், போராட்டமும் கலந்த சதுர்த்தி திருநாளை காண்பதற்கு முன் ஒவ்வொரு ஆண்டும், எங்கிருந்தாலும் என் வீட்டிற்கு சென்றுவிடும் வழக்கம் கொண்டவன். சதுர்த்தி என்றால், நான் தான் என் வீட்டில் வினாயகர் சிலையை செய்துகொண்டு வருவது முதல், அவரை அலங்காரம் செய்வது வரை அனைத்தும் செய்வேன். இதற்காகவே, அன்று காலையே எங்கள் ஊரில் இருக்கும் ஆசாரி-வீட்டிற்கு சென்றுவிடுவேன். எங்கள்-ஊரில் அடுத்தடுத்து 3 ஆசாரிக்குடும்பங்கள் இருந்தன! அதில், நடுவில் இருந்த நாராயண-ஆசாரி வீடு தான் என் விருப்பம்; அவர், பலதரப்பட்ட சிற்பங்களையும் - அச்சுக்களையும் செய்வதில் வல்லவர்.

      ஆண்டுதோறும் சதுர்த்தி தினத்தின் காலை அவர் வீட்டிற்கு சென்று 3 மணிநேரம் கழித்து சிலையுடன் திரும்பி வருவேன்! எங்கள் தெருவின் முடிவில் தான் அவர் வீடு; பின் ஏன் 3 மணி நேரம் என்கிறீர்களா? சொல்கிறேன்! சிலை-வடிக்க ஓர் 5 நிமிடங்கள் போதும்; ஆனால், நான் அவருடனே இருந்து அனைவருக்கும் சிலைகள்-வார்ப்பதை இரசிப்பேன்; பின் அவருக்கு களிமண் பிசைந்து குழைவாய் கொடுக்க பழகினேன். பின், அச்சில் எண்ணையை தேய்க்கும் வேலையை செய்ய ஆரம்பித்தேன். பின் சிலையை வார்த்தவுடன் அதன் சுற்றியுள்ள பிசிறுகளை அகற்றி, அவருக்கு கண்கள் (குண்டுமணி என்று சொல்வோம்) வைப்பேன். இப்படியாய், சில ஆண்டுகளில் - நானே சிலையை வார்க்க பழகிவிட்டேன். இதனால், தான் ஒவ்வொரு ஆண்டும் 3 மணி நேரம்(ஆவது) ஆகும்; நான், அன்று விரதம் இருப்பேன் என்பதால் சிற்றுண்டி பற்றி கவலை இல்லை. என் அம்மாவும், படையலுக்கு வேண்டிய வேலைகளை செய்து கொண்டிருப்பார்; ஆதலால், என்னைப்பற்றி கவலைப்படுவதில்லை. சிலையை வார்ப்பது - மிக எளிதான வேலைதான்; அதுவும், களிமண்-சிலை! ஆனால், அதற்கு ஓர் அழகியல், பொறுமை, ஈடுபாடு அனைத்தும் வேண்டும். களிமண்ணில் இருக்கும் சிறு, சிறு கற்களை அகற்றுவதில் இருந்து அதில் இருக்கும் மற்ற மண்ணை களைந்து அதிலிருக்கும் தூசுகளை அகற்றுவது வரை - அது ஓர், சுகமான ஈடுபாடு! உண்மையில், என்னுடைய உணர்வில் - எனக்கு விநாயகர் சதுர்த்தி போன்று நான் மனமொன்றி ஈடுபட்ட/ஆனந்தப்பட்ட, இறை-சார்ந்த திருநாள் வேறெதுவும் இல்லை!

       எங்கள் விநாயகருக்கு நான் வீட்டிற்கு வந்து தான் அனைத்தும் செய்வேன்; முதலில், அவருக்கு கண்-கொடுப்பேன் (?!). பின், எங்கள் சேர்-குழியில் இருந்து புது-நெல் எடுத்து அவரைச் சுற்றிலும் ஒன்றொன்றாய், நெருக்கமாய் செருகுவேன்! இப்படியாய், அனைத்தும் செய்ததும், அவரை காணும் ஆனந்தம் இருக்கிறதே! அட, அட, அட... ஆனால், இப்போது போன்று அன்றைக்கு இந்த அளவில் தொழில்நுட்பம் இல்லை! இருந்திருந்தால், (இன்றுபோல்)என்னுடைய அலைபேசியிலேயே அவரை அத்தனை அலங்காரத்துடன் புகைப்படம் பிடித்து; என்னுடைய தொகுப்புகளில் "மின்னணு-கோப்பாய்" வைத்திருந்து இருப்பேன். அதில் ஒன்றை, இந்த தலையங்கத்தின் புகைப்படமாகவும் கொடுத்திருப்பேன். என்னுடைய சிலைகளின் ஒன்றின் நினைவாய் ஓர் புகைப்படம் கூட இல்லாது போனது என் துரதிஷ்ட்டம். அதனால்தான், எனக்கு மிகவும்-பிடித்த "திருச்சி உச்சிப்பிள்ளையார்" கோவில்-புகைப்படத்தை கொடுத்திருக்கிறேன்! அனைத்து அலங்காரமும் முடித்ததும், எங்கள் நிலத்திற்கு சென்று நெற்கதிர், சோளங்கதிர், கேழ்வரகு கதிர், கம்பங்கதிர் போன்றவற்றை சேகரித்து வருவேன். பெரும்பாலும், எங்கள் நிலத்தில் விளைந்தது தான்! இல்லையெனின், அண்டையர் நிலம்; நாங்கள் அன்று விலைகொடுத்து வாங்கிய பொருட்கள் மிகக்குறைவு. பின், சாலயோரம் இருந்த அரசாங்கத்தின் இலவம்பழம் (மண்படாது)சேகரித்து வருவேன். எல்லாவற்றையும் அவரிடம் கொண்டுவந்து சேர்த்ததும் சாமி-அறையே மிக அழகாய் காட்சி அளிக்கும்.

    மேற்கூறிய வண்ணம், நாங்கள் விளைவித்த அனைத்தையும் அவரிடம் சேர்ப்பது - "நன்றாக விளையவைத்து இருக்கிறாய், இறைவா! மகிழ்ச்சி" என்று நன்றி கூறும் செயலாய் தோன்றும்! இவை அத்தனையும் செய்து, 3-ஆம் நாள் அந்த சிலையை என்னையே என் தாய் எடுத்துசென்று கிணற்றில் வீச-சொல்லும் போது இனம்புரியாத சோகம் வரும்; ஆத்திரம் வரும். எனினும், அவரை நானே தான் கிணற்றிலும் வீசி-இருக்கிறேன்; ஆனால், இதில் இருக்கும் ஓர் பேருண்மையை பின்னால், நானே உணர்தேன்! அப்படி களிமண்ணால் செய்த சிலையை நம் கிணற்றில் வீசிடும்போது அந்த களிமண் நம் கிணற்றில் இருக்கும் மண்ணின் தன்மையை மாற்றும்; நீர் சுத்தமாக உதவும் - இது போன்ற பல காரணங்கள்/நியாயங்கள் இருந்தன. ஆனால், இப்போது பலதரப்பட்ட இரசாயனப் பொருட்கள் கொண்டு செய்திடும் பெருஞ்சிலைகளை கடலில் சேர்த்திடும் போது - பாதகங்கள் தான் விளையும். உண்மையில், சதுர்த்தி என்பது இப்போதிருக்கும் பிரம்மாண்டம் அடைந்தவுடன் - மனமொன்றி செய்த அந்த திருநாளை சுத்தமாய் மறந்துவிட்டேன். இந்தமுறை கூட, இங்கிருக்கும் என் தமக்கை-மகன் கூறி தான் அன்று சதுர்த்தி என்றே எனக்கு தெரியும். இப்போது சொல்லுங்கள்! பக்தி என்ற பெயரில் "என்போன்றோர் கொண்ட எந்த உணர்வும்" இல்லாது, பக்தி என்பதை நகைப்புக்குள்ளாக்கி சில அறிவிலிகள் முறையற்ற வழியில் சதுர்த்தியை கொண்டாடுதல் மட்டுமன்றி கடல் போன்ற நீர்-நிலைகளை மாசுபடுத்துவது பார்த்து மனம் கொதிக்கத்தானே செய்யும்?? அதனால் தான்...

மீன்கடிபட்டவர்கள் மேலும் துன்பபட்டிருக்க வேண்டும் என்று நினைத்தேன்!!!

நான் - வரவா? செலவா??


      என்னப்பன் "வரவு-செலவு" கணக்கு எழுதும் பழக்கம் உள்ளவர்! பல-ஆண்டுகள் தொடர்ந்திடும் அப்பழக்கத்தை இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறார். எந்த சூழலிலும், இன்றுவரை அப்பழக்கத்தை நிறுத்தியது இல்லை!! 20 ஆண்டுகள் இருக்கும் என்று நினைக்கிறேன்; அன்றொரு நாள் என்னப்பனின் மேலும் 20 ஆண்டுகள் பழைய "வரவு-செலவு" கணக்கு ஏடு ஒன்றை காண நேர்ந்தது! ஓர் ஆர்வத்தில் அதை புரட்டி பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு ஓர் அதிர்ச்சி!! ஆம்; 11.8.1972 என்ற தேதியிட்டு "இன்று இளங்கோவன் பிறந்தான்" என்று எழுதி இருந்தார்! அதை "வரவு, செலவு" என்ற இரண்டு பத்திகளுக்கு பொதுவாய் எழுதி இருந்தார். எனக்கு பெருத்த ஆர்வம் எழுந்தது; என்னப்பனிடம் - அவருக்கு "நான் - வரவா? அல்லது செலவா??" என்று கேட்கவேண்டும் என்று தோன்றியது. ஓரிரு நாட்கள் கழித்து அவரிடமே கேட்டேன்; அவர் சிரித்துக்கொண்டே நாயகன்-கமல் பாணியில் "தெரியலையேப்பா!!" என்றார். நானும் அத்துடன் விட்டுவிட்டேன்.

        அதன் பின், நான் மேலும் பழைய ஏடுகளை தேடலானேன்; ஆனால், என் தமையன் மற்றும் தமக்கை பிறந்த நாளில் அவர் அவ்வாறு எழுதியிருந்ததாய் எனக்கு சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை! நான் பிறந்ததை மட்டும் ஏன் அவ்வாறு எழுதினர்? உண்மையில், நான் ஏன் அவ்வாறு எழுதினீர்கள் என்று கேட்டபோது அப்படி ஒன்றை எழுதியதே அவருக்கு நினைவில்லை!! இன்றுவரை அவர் ஏன் அப்படி எழுதினர் என்று எனக்கு தெரியவில்லை; ஆனால், இது நடந்து ஓர் 10 ஆண்டுகள் கழிந்ததும் - கண்டிப்பாய், நான் என்னப்பனுக்கு வரவாய் தான் இருந்திருக்கிறேன் என்று தோன்றியது! மறுப்பேதுமின்றி, இன்று-நான் அந்த கேள்வியை அவரிடம் கேட்டால் அவரும் இதையே சொல்வார்!! ஆனால், நான் இன்றுவரை அப்படி கேட்டதில்லை; அது தேவையும் இல்லை!  ஆனால், இந்த சம்பவத்தை நினைக்கும்போதெல்லாம் என்னுள் வேறோர் கேள்வியை கேட்டு பதிலும் தேடுவேன்! அது, என்னப்பன் தவிர வேறெவருக்கும் நான் வரவாய் இருக்கிறேனா என்பது...

வெகுநிச்சயமாய், நான் பலருக்கும் வரவாய்-தான் இருந்திருக்கிறேன்/இருக்கிறேன்!!!   

ஏன் இந்த மொழி-வெறி?



       நேற்று "முக-நூல்" பகிர்வு ஒன்றில் மேற்கூறிய படத்தையும் அதை சார்ந்த கருத்தையும் காண-நேர்ந்தது! "இந்தி"யை தாய்மொழியாய் கொண்டோர் இப்படி கொண்டாடுவதில் எனக்கோ/ இந்த பகிர்வை எழுதியவருக்கோ எந்த ஆட்சேபனையும் இல்லை! அதை, அவர்கள் எல்லைக்குள் வைத்துக் கொள்ளவேண்டும்!! எம்-எல்லைக்குள், நீங்கள் பேசுவதோடு இருக்கட்டும்; விருப்பம் இருப்பின் நாங்களும் பேசுவோம்! ஆனால், உம்மொழி சிறந்த-மொழி என்று எங்கள் இடத்தில் பறைசாற்றிக்கொள்வது நாகரீகமாய் தெரியவில்லை. நானும், என்-தாய்மொழி மீது பற்று கொண்டவன் என்பதை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பதிந்து வருபவனே! சமீபத்தில் கூட "தமிழ் வளர" என்ற விருத்தப்பாவை எழுதி இருந்தேன். ஆனால், அது என்-மொழியை எப்படி வளர்ப்பது என்ற தெளிந்த பார்வையை எடுத்துரைக்க எழுதியது! அதிலும் கூட, வேற்று மொழியை தவறாய் விமர்சிக்கக்கூடாது என்று எழுதி இருந்தேன்; மேலும், என்னை "தமிழ் பேசும் இந்தியன்" என்றே குறிப்பிட்டு இருந்தேன்.

           உங்களின் மொழிப்பற்று, உங்களின் எல்லைக்கு/வரம்புக்கு உட்பட்டு இருக்கட்டும்!  நம் அண்டை மாநிலம் ஒன்றில் "அந்த மொழியை கற்க! இல்லை எனில், அந்த மாநிலத்தை விட்டு விலகுக!!" என்பதை ஆங்கிலத்தில் (??!!) ஓர் கவிதை வடிவில் எழுதி இருப்பர்! என்னதான், அவர்கள் எல்லை என்றாலும் - அம்மொழி தெரியாத காரணத்திற்காய், அந்த மாநிலத்தை விட்டு விலக சொல்ல எந்த ஓர் இந்தியனுக்கும் உரிமை இல்ல?! அப்படியிருக்க, நம் எல்லைக்குள் "பிறர்" வந்து இப்படி எழுதுவதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? ஆம்! எங்கே சென்றனர் "தமிழையும்/தமிழனையும்-காப்பது தம் கடமை" மட்டுமே என்பது போல்-அறிக்கைகள் விடும் "மஞ்சள்-துண்டு"காரரும் (2G பயமா?), கறுப்புத்-துண்டுக்காரரும் மற்றும் கருப்புச்-சட்டைக்காரரும்? ஒருவேளை, இதில் "அரசியல் ஆதாயம்" எதுவும் இல்லையோ?! இவர்கள் அனைவரும் வெறும் "வாய்ச்சொல்" வீரர்களாய் இல்லாமல், முதலில் இந்த பகிர்வில் குரல்-கொடுத்திருப்போர் போன்று தமிழ் எனும் உணர்வை வளர்க்க பாடுபடட்டும்...

பின் தானாய், தமிழன் எனும் உணர்வை ஒவ்வொரு தமிழனும் கொள்வான்!!!       

விழியமுதினியும், கும்கியும்...



    என் மகள் விழியமுதினி முதன்முதல் திரையரங்கில் பார்த்த படம் "கும்கி"; அதையும் (நான் எதிர்பார்த்தவாறே) முழுதும் பார்க்கவில்லை. என்னவள் மற்றும் என் தமக்கை-தமையன் மக்களுடன் சென்றிருந்தோம்! நான் முன்பே சொல்லியிருந்தேன்; விழி எப்போது சொல்கிறாளோ அப்போது நானும்-அவளும் சென்றுவிடுவோம் என்று! படம் ஆரம்பிக்கும் முன் அரங்கினுள் அங்கும், இங்கும் ஓடிக்கொண்டு இருந்தாள்; எந்த பிரச்சனையும் இல்லை! அதன் பின், படம் ஆரம்பித்து விளக்கை அனைத்ததும் அவள் முகம் உடனே மாறிற்று! சரி, கிளம்பவேண்டியது தான் என்று நினைத்தேன்; கொஞ்ச நேரம் ஒட்டிக்கொண்டு இருந்தாள். பின், அப்பா! கிளம்பலாம் என்றாள்; நான் அவளைத் தூக்கிக்கொண்டு "ப்ரொஜெக்டர்" அறையில் இருந்து ஒளிக்கற்றை வருவதை காண்பித்து, இதன் மூலம் தான் படம் சென்று திரையில் தெரிகிறது என்று சொல்லி திரை அருகில் சென்று அதையும் காண்பித்தேன்! ஒருவேளை, அதற்குள் யானை வந்துவிட்டது; அவள் கொஞ்சம் சுவராசியமாய் அமர்ந்தாள்.

         இப்படியாய் இடைவேளை வரை தாக்குபிடித்து விட்(டாள்/டேன்)! அதன் பின் கிளம்பியே ஆகணும் என்றாள்; சரி என்று கிளம்பியதும் அவளின் பெரிய-அண்ணனையும் (தமையன் மகன்) கூடவே அழைத்துக்கொண்டு வந்துவிட்டாள். இதுதான் அவளின் (இன்னமும் கூட)முதல் திரையரங்க அனுபவம். ஆனால், அவளுக்கு அந்த படத்தின் பாடல்கள் (குறிப்பாய் "அய்யய்யோ ஆனந்தமே"! - அவள் அம்மாவுக்கு பிடித்தது என்பதால்). எனக்கு பிடிக்கும் என்பதால் "எப்போ புள்ள சொல்லப்போற" பாடலும்  கொஞ்சம் பிடிக்கும். அவளின் விருப்பம் - "சொய்ன், சொய்ன்" பாடல். எல்லாப் பாடல்களையும்  பாடுவாள்; அதிலும் "அய்யய்யோ ஆனந்தமே" பாடலை அவள் பாடும் விதம் மிகவும் அருமை! அவளின் மழலை-இராகம் என்னை கிறங்கடிக்கும்! அவள் ஒரு தினுசாய் "அய்யய்....யோ! ஆனந்.....தமே!!" என்று (சீர்??!!)பிரித்து பாடுவாள்; அவளால், மூச்சு பிடிக்கவும் முடியாது. எனினும், எப்படியோ மூச்சை இழுத்து பாடிவிடுவாள். உண்மையில், அது ஓர் தெய்வீக-இராகம்!! இப்படியாய்...

நம் பிள்ளைகள் - எதில் ஆச்சர்யப்படுத்துகிறார்கள் என்பதற்கு இலக்கணம் ஏதுமில்லை!!!

பின்குறிப்பு: சில நாட்கள் கழித்து (படத்தின் நாயகன் செய்வது போலவே)அவளும் ஓர் குச்சியை தோளில் வைத்துக்கொண்டு ஆடிக்கொண்டே பாட ஆரம்பித்தாள்! அட...அட...அட... இதுதான் சுகம்!! எனக்கென்னவோ, அவள் முதல் மதிப்பெண் எடுப்பது போன்ற எதுவும் - எனக்கு பெருத்த சந்தோசம் அளிப்பதாய் தெரியவில்லை. இந்த வயதில், அவளிடம் இது போன்ற சந்தோசத்தை மட்டுமே எதிர்பார்க்கிறேன் - இன்னமும் பாடு, மகளே!!!

ஞாயிறு, செப்டம்பர் 08, 2013

தமிழ் வளர...


பாவேந்தருக்கு சமர்ப்பனம்!
(என்னுடைய முந்தைய-கிறுக்கல்; இப்போது, முறைபயின்ற-ஓவியமாய்!)

*****


தமிழ்இனி மெல்லச் சாகும்
       என்றனர் தமிழ்ச்சான் றோராம்!
உமிழ்வதாய் உணரப் பெரினும்
       இல்லையென் றிடதுணி வில்லை!
அமிழ்தமாய் இருந்தஎம் தமிழும்
       தொய்ந்து தான்உள் ளதின்று!
குமிழ்தேக் குபோன்றே எந்தமிழ்
       செழித்திடல் யாங்கனம் சொல்வீர்!!!

திரைப்படப் பெயர்மாற் றுவதால்
        செழிக்குமோ? இல்லை சிறார்தம்
துறைப்பா டப்புத் தகத்தை
        தமிழில் படிப்பதால் மாறுமோ??
அரசுசார் அலுவலர் கையொப்பம்
        இடுவதால் மாறுமோ? இல்லைநம்
அரசியலார் "வாய்ச்சொல் வீரராய்"
        முழங்குவ தால்தான் மாறுமோ???
  
முகங்கள் முப்பது கோடியாம்;
        அகங்கள் ஆயினும் ஒன்றென!
யுகங்கள் பலவாய் சொன்னதை
        மதங்கள் பலவும் ஏற்றன!
தேகங்கள் அவைதம் நிறத்தில்
        மட்டுமே பேதம்! அல்லவே?
நகங்கள் அடியினில் ஓடிடும்
        இரத்த அணுக்கள் தம்மில்!

ஏனையும் தமிழில் என்பதும்!
        வேற்றுமை தகர்த்து ஒற்றுமை
"ஆனை"யும் காத்தநம் நாட்டை;
        "ஆற்றினை இழந்த கடல்அது
வானையும் மண்ணையும் மழைநீர்
        அற்றதாய் மாற்றி; உலகப்
பானையை வெப்பம யமாய்செய்
        ததுபோல்" மயானமாய் ஆக்கிடும்!!

"தமிழ்வள ர"தமிழைப் பயிலல்
       வேண்டும்! மாறாய் பலதையும்
தமிழில் படித்தல் முறையோ?
        சங்கத் தமிழ்நூல் களையே
தமிழென வெறுமே வாதிடல்
        தொடர்ந்து; தங்கிடத் தவிக்கும்
தமிழனைத் தாங்கிடச் செய்வோம்!!
        மொழியினும் முதன்மை மனிதமாம்!!!

மொழி-ஆய் செய்யும் அறிஞரை
        ஊக்கம் கொடுத்தே; அவரை
பழிப்பதை குறைப்போம்! அவர்தம்
        சுயத்தைக் காப்போம்! அவர்பின்
மொழியை மட்டுமா? மனிதமும்
        சேர்த்தே காப்பர்! ஆங்குமோர்
செழிப்புறும் நாட்டையும் காப்பர்!
        உணர்வரோ இதையும் படிப்பர்??

இவைகளை செய்திடின் இனிவரும்
        தலைமுறை யரேனும்; தமிழ்தனை
அவையினில் வெறுப்புடன் அன்றிலாம்
       விருப்புடன் கற்பரே! கேட்பரோ;
அவைதனில் வீற்றமர்ந் திருப்போர்??
       கேட்டிடின்! வருவரே நம்தமிழ்ச்
சுவையினில் திளைக்கவே பற்பலர்!
       கோட்டையில் இருப்போர் கேட்பரோ???

மொழியது உணர்வாய்; ஒட்டிவாழ்
       உறவாய் இருத்தல் அவசியம்!
பழியாய் பிறர்மேல் வஞ்சகம்
       உறைந்தே இருத்தல் அசிங்கம்!!
ஊழியாய் எவர்மொழி அதுவையும்
       எண்ணிடல் இழுக்காம் என்பதாம்;
மொழிமேல் ஈர்ப்புகொள் "தமிழ்மொழி
       கதைக்கும் இந்தியன்" விருப்பமாம்!!!

நா. முத்துக்குமார் அவர்களுக்கு...




          நா. முத்துக்குமார் அவர்களே! உமக்கு தெரியாத பல்லாயிரக் கணக்கான இரசிகர்களுள் ஒருவனாய் - சமீபத்தில் நானும்!! வெகு-சத்தியமாய், இதற்கு முன் நீங்கள் எழுதிய பாடலை/பாடல்களை கேட்டு இரசித்திருப்பேன்! ஆனால், எழுதியது நீர்தான் என்று தெரிந்திருக்க வாய்ப்பற்று போயிருக்கும். ஏனெனில், (ஆயிரக்கணக்கான பாடல் தொகுப்பு என்னிடம் இருந்தும்)நான் இரசித்த பாடல்களின் ஆசிரியரை "பெரும்பாலும்" இதுவரை தெரிந்துகொள்ள முனைந்ததில்லை! ஆனால், தங்களின் "ஆனந்த யாழை மீட்டுகிறாய்..." என்ற தமிழ்த்திரைப்பாடலை கேட்டவுடன் - எழுதிய உம்-பெயரை "உடனே" கண்டுகொண்டேன். இந்த 1 வாரத்தில் அந்த பாடலை 300 முறைகளாவது இணையத்தில் பார்த்தும், கேட்டும் இருப்பேன். அந்த பாடல் - என்னை மனமுருக வைத்துவிட்டது; அந்த பாடல் தவிர அப்படத்தின் மற்ற பாடல்களைக்-கூட இதுவரை கேட்டதில்லை! அது என்னுள் எழுப்பிய தாக்கத்தால் - என்னுள் புதைந்து இருந்தவற்றை ஓர் தலையங்கமாய் கடந்த வாரம் எழுதியிருந்தேன்.

        சரி! அந்தப்பாடலை பாராட்டிட பல்லாயிரம் பேர் இருக்கக்கூடும். அதிலுள்ள (எனக்கு தவறென பட்ட)பின்வரும் குறைகளை/திருத்தங்களை எவரும் கூறி-இருத்தல் சாத்தியமன்று. 1. "அன்பெனும் குடையை..." என்ற வரி; அதில் தொடர்வது "அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்" என்பது! குடையை-கொடுக்கும் மகளே ஏன் (அதற்குள்)"மழைத்துளிகளையும்" கூட்டவேண்டும்? என்மகள் அப்படி செய்யமாட்டாள் என்ற "திமிரால்" வந்தது இந்த கேள்வி. 2. "தூரத்து மரங்கள்..." எனத்துவங்கும் 4 வரிகள் "தென்றலில் வாசம் தூக்குதடி" என்றிருப்பின் "த்"-ன் 4 உயிர்மெய் எழுத்துக்கள் "துவக்கங்களாய்"  இருந்திருக்கும். 3. இதுதான் முக்கியம் என்று நான் கருதுகிறேன்! "அதை கையில் பிடித்து..." என்ற வரி "...அனுப்படி" நல்லபடி என்று முடிந்திருக்கவேண்டும்! "நல்ல படி" என்ற சீரை "அடி" என்ற வார்த்தைக்கு "ஒப்பாய்" புகுத்தி இருப்பது தெளிவாய் புரிகிறது! "அனுப்படி" நல்லபடி என்று இருந்திருந்தால் மற்ற "அடி"களுடன் கணக்கச்சிதமாய் பொருந்தி இருக்கும்! 

அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து
வீட்டுக்கு "அனுப்படி" நல்லபடி!!!

பின்குறிப்பு: தன்மகளை "அடி" என்று அழைப்பதில் இருக்கும் "திமிரை/கர்வத்தை" உணர்ந்த அப்பன் நான் என்பதில் பெருமை கொள்கிறேன். நல்ல படி, என்பது இராகத்துடன் ஒத்து-போகலாம்; ஆனால், மேற்கூறிய தகப்பனின் கர்வம் "அடி"பட்டுப்போகிறது! தயைகூர்ந்து, இப்பதிவு உங்களை சேர்ந்திடும் பட்சத்தில் உங்களின் தொடர்பு-விவரத்தை எனக்கு தெரிவிக்கவும்!! நாம் இதை இன்னமும் விரிவாய் விவாதிக்க முடியும்!!!

பாவேந்தரும், அறிவியலும்...


    சமீபத்தில் நான் "விருத்தப்பா" எழுதத் துவங்கியதையும், அதற்கான காரணத்தையும் "விருத்தப்பா பகுதியின் முன்னுரையாய்" எழுதி இருந்தேன். விருத்தப்பா எழுத என்னப்பனிடம் இலக்கணம் கற்ற போது, அவர் முதலில் "அறு-சீர் விருத்தம்" பழகு; அது தான் "எண்-சீர் விருத்த"த்தை காட்டிலும் எளிது! இலக்கண-விதிகளும் சற்று எளிதாய் இருக்கும் என்றார்! தொடர்ந்து, பாவேந்தரின் "அழகிய சிரிப்பு" படி; அது முழுதையும் அவர் "அறு-சீர்" விருத்தமாய் எழுதி இருப்பார் என்றார்!! நான் உடனேயே படிக்காமல் - அவர் கூறிய இலக்கணத்தை புரிந்துகொண்டு எழுத துவங்கிவிட்டேன்; என்னப்பன் இலக்கணத்தை புரிய வைத்ததால், விதிகளும் தெரிந்திருந்ததால் - எளிதாய், எழுதவும் ஆரம்பித்துவிட்டேன். பின்னர் தான், "அழகிய சிரிப்பை" படிக்க ஆரம்பித்தேன். என்னப்பன் முன்பே "அறு-சீர்" பற்றி விளக்கியதாலோ என்னவோ, நான் விருத்தம் பற்றிய விதிகளை பற்றி ஏதும் கவனம் கொள்ளாமல் எடுத்தவுடனே - "அழகின் சிரிப்பை" வெகுவாய்  இரசிக்க ஆரம்பித்து விட்டேன்.

       அதனால், அழகின் சிரிப்பின் "அழகியலை" ஆரம்பம் முதலே அனுபவிக்க முடிந்தது! இன்னும் 30-ல் ஓர் பங்கு பக்கங்களைக் கூட கடக்கவில்லை! அதற்குள் 1000 பிரம்மிப்பு!! அதிகாலை துவங்குவதை இப்படி விவரிக்கிறார் "இளங்கதிர் எழுந்தான்; ஆங்கே இருளின்மேல் சினத்தை வைத்தான்" என்கிறார்! அதிகாலையில், இருள் விலகும் வேகத்தை உணர்ந்தோர்க்கு இந்த வரியின் அற்புதம் புரியும்; அந்நேரத்தில் இருள் மிக-வேகமாய் விலகும் (சினம் கொண்ட வலியோரை பார்த்து ஓடும் எளியோர் போல்!). இப்படியாய் நான் படித்த சொற்ப-பக்கங்களிலேயே அழகின் சிரிப்பில் மூழ்கி இருக்கும்போதே; கடலைப்பற்றி விளக்கும் ஓர் விருத்தத்தில் "பெருநீரை வான்மு கக்கும்; வான்நிறம் பெருநீர் வாங்கும்" என்று சொல்வதை கண்டேன்! அட, அட, அட... இதைவிட எளிதாய் "ஒளிச்சிதறல் விளைவை (Scattering Effect)" விளக்கமுடியுமா என்று தெரியவில்லை!! அதாவது, கடலின் நிறமாய் காண்பது வானின் பிரதிபலிப்பு என்கிறார் (வானின் நிறத்திற்கும் - அதே விளைவே காரணம் என்பது வேறு!).

(Sir CV)இராமன் "நோபெல்" பெற்றதை; (பாரதியின்)தாசன் "நாவலில்" உற்றதாய்!!!  

பின்குறிப்பு: பாவேந்தர் பல-படைப்புகளில்/பல-இடங்களில் அறிவியலை புகுத்தி இருக்க வேண்டும் என்று திடமாய் நம்புகிறேன்! அதுகுறித்து ஓர் ஆய்வை மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளேன்; பார்ப்போம்...என்னால் எந்த அளவில் அதை நிறைவேற்றமுடியும் என்று!!         

இதை கவனித்து இருக்கிறீர்களா???



   இதை படிப்போரில் எத்தனை பேர் கீழ்வரும் இரண்டையும் உணர்ந்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை! 1. நாம் முதன்-முதலில் பார்த்த ஓர் இடம் (பொருள்/நபர்) நமக்கு நன்றாய் நினைவில்-பதியும்! நாம் முதலில், பார்த்தபோது நம்-மனதில் பதிந்த எண்ணம் அப்படியே இருக்கும் - அங்கு பார்த்த மரம், அந்த தெரு, அதன் புதிய-தன்மை - இப்படி பலவும்! நாளடைவில், நாம் அந்த இடத்திற்கு மிகப்பரிச்சயமாய் ஆகியிருப்போம்! பின்னர், ஓர்நாள் நாம் முதன்-முதலில் கண்ட காட்சி நினைவுக்கு வரும்; அல்லது நீங்களே கூட முயற்சித்து நினைவுபடுத்தலாம்! அதன்பின் அப்படியே "முதலில் பார்த்த" அதே நினைவுகளுடன் பார்க்க முயலுங்கள்; முடியவே முடியாது?! குறைந்தபட்சம், பெரும்பான்மை யானவற்றை நம்மால் மீண்டும் அதே போல் பார்க்க இயலுவதில்லை! (ஓர் தத்துவம்: பின்னர், ஏன் மிக-நெருங்கிய உறவிடம் ஆரம்பத்தில் இருந்தது போலவே, இப்போதும் எதிர்பார்க்கிறோம்???)! ஓர் யதார்த்தம்: அதனால் தான், முதல்-பார்வை (FIRST IMPRESSION) சிறந்ததென நம்பப்படுகிறது!!!

        2. நமக்கு மிக-நெருங்கிய ஒருவர் செய்யும் செயல் (குறிப்பாய், அதிக சந்தோசம் அல்லது அதிக துக்கம் கொடுக்கும் ஒன்று!) முன்பே அதுபோல் நடந்ததாய் தோன்றும்! பலநேரங்களில், அப்படி நடந்திருக்க(க்/வும்)கூடும்!! இதில் என்ன ஆச்சர்யம் என்று நினைக்கிறீர்களா? சிலசமயங்களில் அந்த நிகழ்வு அதே வரிசையில் நிகழ்வதாய் உணரக்கூடும்; இது தான் ஆச்சர்யம்! அதே வரிசையில் அந்த நிகழ்வுகள் நடந்தாய் என்-மனதுள் ஓர் காட்சி ஓடும்போது என்னால், உண்மையா/பொய்யா என்று "உண்மையில்" யூகிக்க முடிவதில்லை! இது போல் பலருக்கும், நேருமா? நேர்ந்திருக்கிறதா?? என்று எனக்கு தெரியவில்லை. இதற்கு கண்டிப்பாய் அறிவியல்-சார்ந்து ஏதேனும் விளக்கங்கள் கூட இருக்கக்கூடும். ஆனால், இந்த நினைவு "இந்த-அளவில்" இருக்கும்போது பிரச்சனை ஏதும் இல்லை; அது அளவைத்தாண்டி நடக்கும்போது தான் அது "உளவியல்" சம்பந்தமான பிரச்சனையை ஆகிறதோ? சரி! இப்போது உங்கள் முறை...

இவை இரண்டையும்; ஓர் முறை உங்களுக்குள் முயன்று பாருங்கள்!!! 

ஞாயிறு, செப்டம்பர் 01, 2013

மகள்-தந்தை உறவு...



       நண்பர் "திரு. சுடர் பாலா" மகள்-தந்தை உறவை வெளிப்படுத்தும் ஓர் காணொளியை "முக-நூலில்" பகிர்ந்திருந்தார். அருமையான பதிவு! "மகள்-தந்தை உறவு" எப்போதும் தனி(த்தது)-தான்!! ஓர் 2 ஆண்டுகளுக்கு முன்பு, அக்காணொளியின் ஆரம்பத்தில் வரும் "சொற்றொடரை" என்-அனுபவம் மூலமே உணர்ந்தேன்; ஆம், அன்றொரு நாள் என்மகளை முத்தமிட்டபோது, என்னவளை முத்தமிடும் உணர்வை பெற்றேன். அப்போது, தான் எனக்கு புரிந்தது; முத்தத்தில் காமம் இல்லையென்று; இன்றேல், என்மகளை முத்தமிட்டபோது அந்த உணர்வு வந்திருக்காது. மிக-அழகாய் இருக்கிறது - அந்த சொற்றொடரை பின்தொடரும் காணொளியும்; ஓர்முறையேனும்  பாருங்கள்! இதைப்பார்த்தவுடன், நான் வெகுநாட்களாய் தள்ளிவைத்த "மகள்-தந்தை உறவு" தலையங்கத்தை எழுதவேண்டும் என்று தோன்றியது. ஏற்கனவே, நான் அதிகமாய் என்மகளை பற்றி என்னுடைய வலைப்பதிவில் எழுதுகிறேனோ என்ற அச்சம் இருந்தது! ஆனால், அவளைப்பற்றிய எந்த விசயத்தையும் நான் வலுக்காட்டாயமாய் திணித்ததில்லை!! அது, இயல்பாய் நான் சொல்லவருவதோடு கலந்துவிடுகிறது. இந்த தலையங்கம் வெறும் "மகள்-தந்தை" உறவின் பெருமை-கூறுதலல்ல! இந்த பேருறவை பல்வேறு கோணங்களில் இருந்து வழக்கம்போல் "பொதுநலத்தோடு" விளக்கி இருக்கிறேன். திருமணத்திற்கு பின் "மகள்-தந்தை" உறவு எப்படி மற்ற உறவுகளை பாதிக்கிறது என்பதையும் அலசி இருக்கிறேன். நம்மகளின் திருமண வாழ்க்கையின் வெற்றிதானே ஓர் தந்தையாய்; நம்மை நிறைவுறச் செய்யும்??? 

   என்னுடைய முதல்-தலையங்கத்தை "எம்மகள் (அவள் பெயரும்) தோன்றிய கதை..." என்று தலைப்பிட்டு எழுதியபோது, ஏன் சொந்த விசயத்தை எல்லாம் இப்படி எழுதுகிறீர்கள் என்று பதறியது சில நட்புகள்! அவர்களுக்கு - அதில் இருந்த பொதுநலம் தெரியவில்லை!! மற்றவர்களைப் போல - தம்மகளுடன் தாம் கொண்ட உறவு  மூலமாய் பார்க்கத் தவறியவர் அவர்கள். அதனால்தான் இதை வலியுறுத்துகிறேன்! அந்த பொதுநலம் இருந்ததால் தான், எங்கோ ஓர்மகள் அவள் தகப்பனாலேயே கொல்லப்பட்டபோது "என்ன மனுசன்டா நீ???..." என்று கோபம் கொள்ளமுடிந்தது. அவனை, மரணம்வரை கொண்டு சென்று - உயிர்பிக்கவேண்டும்; அதையே மீண்டும், மீண்டும் செய்யவேண்டும் என்ற ஓர் கொடுமையான தண்டனையை முன்மொழிய முடிந்தது. அதற்கு அடுத்த வாரமே, ஆத்திரத்தில் தன்-மனைவியை கொன்றுவிட்ட கணவனின் மனநிலையை ஆராய்ந்து "குழந்தை யாரிடம் வளரவேண்டும்???..." என்றும் எழுதமுடிந்தது. நான் என்மகள் மேல் கொண்டிருக்கும் அன்பினால் "தந்தை-மகள் உறவு" என்ற புதுக்கவிதை விளைந்தது; அந்த அன்பு பலருக்கும் புரியவேண்டும் என்ற பொதுநலமே அடிக்கடி அவளை சம்பந்தப்படுத்தி எழுத தூண்டுகிறது. என்மகள்தான் நான் ஓர் சிறந்த கணவனும்-கூட என்பதை, உணரவைத்தாள்; அதுசார்ந்து என்னுள் இருந்த தீயவைகளுக்கு தீயிட்டவளும் அவளே! அதனால் தான், "சிறந்த கணவன் ⇔ சிறந்த தந்தை" எழுத முடிந்தது. என்மகளை சுமக்க எனக்கு வாய்ப்பில்லையே என்ற ஆதங்கத்தால் "தாயுமானவன்" என்ற புதுக்கவிதை பிறந்தது.

           என்மகளின் நினைவுகள் என்னை வாட்டுவதால் "என்ன வாழ்க்கை இது?..." என்று எழுதியபோது, என்னை விட அதிகமான வலிகளுடன் இருக்கும் தந்தைகளையும் என்னால் விவரிக்கமுடிந்தது. ஏன் இந்த உறவு மட்டும் மிகப்பலமானதாய் படுகிறது? இந்த உறவினுள் நாம் எதை தேடுகிறோம் என்ற கேள்வி பலமுறை என்னுள் எழுந்ததுண்டு! எனக்கு உறுதியாய் தெரிந்திட்ட ஒன்று "நாம், நம்மகளுள்; நம் அம்மாவை" தேடுகிறோம் என்பதே! அந்த புரிதல்தான் "மகளான என்-தாய்" என்று எழுத வைத்தது! இந்த உறவை, விவரமாய் கூறவேண்டிய தருணம் வந்துவிட்டதாய் உணர்கிறேன்! முதலில் கவனிக்க வேண்டிய ஒன்று, வாழ்நாளின் பெரும்பகுதியில் (சுமார் 25 ஆண்டுகள்) நம்-தாயின் கவலைகளை சரியாய் புரிந்து அவளுக்கு "பக்கபலமாய் இருக்கும்" வாய்ப்பு பலருக்கு கிடைப்பதில்லை. நம் அம்மா அதை வெளிக்காட்டுவதில்லை அல்லது (அந்த வயதில்)நமக்கு புரிவதில்லை; வெகுசிலருக்கே அந்த பாக்கியம் கிடைக்கிறது. நம் தாயின் கவலை எல்லாம் தெரியவரும்போது, அவளுக்கு நம் உதவி தேவைப்படுவதில்லை! ஒன்று அவள் அதற்கு அவள் பழகி இருப்பாள் அல்லது அந்த கவலை தீர்ந்திருக்கும். இது தெரிந்தவுடன் - நாம் முதலில் செய்ய முனைவது, நம் அன்பு அனைத்தையும் நம் தங்கை அல்லது தமக்கை போன்ற உறவுகளிடம் காண்பிக்க எண்ணுவதே!! அதிலும், குறிப்பாய் நம் தங்கையிடம்!!! அதனால்தான் பல-சில்மிஷங்களை, பல சண்டைகளை செய்துவந்த ஒருவன் - 25 வயதை நெருங்கும்போது "தமையனாய்(அண்ணனாய்)" உருவெடுக்கிறான்.

      தமையன், தமக்கை, தங்கை, தம்பி போன்ற உணர்வுகளின் உன்னதம் தெரியாத பலர், ஒரு குழந்தைக்கு-மேலிருந்தால் பிரச்சனைகள் வரும் என்று சிறுபிள்ளைத்தனமாய் முடிவெடுப்பதை  "எத்தனை குழந்தைகள் வேண்டும்???" என்ற தலையங்கத்தில் குறிப்பிட்டேன். எனக்கு தங்கை இல்லை என்பதால், என் பெரியம்மா-மகளிடம் எனக்கு அளவுகடந்த அன்பு எழுந்தது! அவள் தான், உண்மையில் என்-தமக்கையை(யே) புரிந்துகொள்ள செய்தாள்!! ஏனெனில், அம்மாவுக்கு செய்யமுடியாததை எல்லாம் செய்ய முதலில் நாம் நாடுவது நம்மை விட இளையவரை!! அதனால்தான் "தமையன்-தங்கை" எப்போதும் "தமக்கை-தம்பி" உறவைவிட உயர்வாய் பார்க்கப்படுகிறது! நம்மை விட இளையவராயின்-எளிதில் அவர்களை நல்வழிப்படுத்த முடியும்; அம்மாவை போல் வருந்தவிடமாட்டேன் என்பது போன்ற உள்ளுணர்வு. எது எப்படியோ, நாம் முதலில் நம் அம்மாவை புரிந்தவுடன் - அவளுக்கு செய்ய முடியாததை எல்லாம் - தங்கை, தமக்கை போன்ற உறவுகளுக்கு அவ்வாறு செய்திட ஆசைப்படுகிறோம். இப்படியாய் செல்லும் வாழ்க்கையில், நம் கண்முன்னே ஓர் பெண் பிறக்கும் போது; அந்த-பெண் எனும் உறவின் மேல் ஓர் அளவுகடந்த பாசம் பெருக்கெடுக்கிறது. அந்த பெண் - நம் தங்கை அல்லது தமக்கையின் மகளாய் கூட இருக்கலாம்; தமையன் அல்லது தம்பி மகளாய் கூட இருக்கலாம். அதனால் தான், என் தமையனுக்கு என்மகள் மேல் ஓர் அலாதிப்பிரியம்; ஆனால், அவருக்கு என்மகளை அருகிருந்து அவ்வப்போது பார்த்துப்பழக வாய்ப்பற்று போனது துரதிஷ்டம்!! 

       அதே பெண் - நமக்(கு/கே) "மகளாய்" பிறக்கும்போது அந்த பாசம்  எல்லையற்று-விரிகிறது! எனவே, "மகள்-தந்தை" உறவின் ஆணி-வேர்; அந்த தந்தை தன் தாய்க்கு செய்யவேண்டியதை எல்லாம் தன்-தாயாக எண்ணி தன்-மகளுக்கு செய்ய முனைவதே என்பதை என்னால் ஆணித்தரமாய் கூறமுடியும்! இதை மேலும், விவரமாய்; "வேறொரு கோணத்தில்" இப்போது பார்ப்போம்!! தன்-தாயை மதித்து அவள் மூலம் தன்-மகளை பார்க்கும்/பார்த்த ஓர் தகப்பன் வளர்க்கும் ஓர் பெண், "குடும்ப விளக்கு"ஆய் இருப்பாள். அப்படித்தான், என்-நண்பி ஒருவள் "இரண்டு மகள்களை" வைத்துக்கொண்டு - எல்லா பிரச்சனைகளுக்கு இடையிலும் அவளின் கணவன் மற்றும் அவன் குடும்பத்தாருடன் வாழ்கிறாள். அவளின் தந்தை, இதுபோன்ற காரணங்களுக்காய் அவளை "வாழா-வெட்டியாய்" பார்க்க-விரும்பமாட்டார் என்பது அவளுக்கு தெரியும். இதுமாதிரி, பல-பெண்களை நான் பார்த்திருக்கிறேன்; மருப்பேதுமின்று, நீங்களும் பார்த்திருப்பீர்கள்!   ஆனால், இம்மாதிரி எந்த எண்ணமும் இல்லாது "தன்-மகள்" என்பதை மட்டும் பார்க்கும் தந்தைகள் பலர் உள்ளனர்; அவர்களால், பல உறவுகளும் கெடுகின்றன! அவர்களை, அருகிருந்து கவனியுங்கள்; கண்டிப்பாக, அவர்களுக்கு; அவர்களின் தாய்-மேல் எந்த அக்கறையும் இருப்பதில்லை; அதே போல், அவரின் தமக்கை/தங்கை போன்ற உறவிடமும் எந்த-அன்பும் இருப்பதில்லை. அதனால்தானோ என்னவோ, அவர்கள் தம் சொந்த மகள் "வாழாவெட்டியாய்" பல-ஆண்டுகளாய் தன்னுடனே இருப்பதை(யும்) புரிந்து கொள்வதில்லை.

       அப்படி இருப்பது உறவுப்(பா/ப)லமில்லாத "மகள்-தந்தை" உறவாய் எனக்கு படுகிறது; "அறியாத வயதில் வரும் காதல்" போன்றதாய் எனக்கு படுகிறது! அங்கே, உணர்வு/உறவை விட "உணர்ச்சி" தான் அதிகம் இருக்கும்! அதனால் தான், அவர்கள் எளிதில் உணர்ச்சிவயப்படக் கூடியவராய் இருப்பர். பகல் நேரத்தை கூட விட்டுவிடுவோம்; அது எப்படி, தன் இளைய-மகள் கணவனை விட்டு  பிரிந்திருக்கும் போது; இரவானதும், தன்-மனைவியுடன் ஓர் தகப்பனால், நிம்மதியாய் உறங்கமுடிகிறது?? "அவ்வை ஷண்முகி" திரைப்படத்தில் "இந்த 65 வயசுல, உங்களுக்கு ஓர் துணை தேவைப்படும்போது... உங்க மகள் வாழாவெட்டியாய் இருப்பது உங்களுக்கு தெரியவில்லையா?" என்றோர் வசனம் வரும். அந்த வசனம் மட்டுமல்ல - அந்த படம் முழுதுமே ஓர் பொக்கிஷம்! "திருமணமாகாத (ஓர்)மகள்-தந்தை" உறவு எப்படி இருக்கவேண்டும் என்பதையும், "திருமணமான (ஓர்)மகள்-தந்தை" உறவு எப்படி இருக்கக்கூடாது என்ற இரண்டையும் உணர்த்தும் படம்.  ஆனால், நான் இந்த விசயத்தில் மிகத்தெளிவாய் இருக்கிறேன்; என்னைப்போன்று "இன்னுமோர் தந்தை இல்லை" என்ற கர்வத்திற்கு நிகராய், என்-மகளின் திருமண வாழ்க்கையும் நன்றாக அமை(ந்/த்)திடுதல் வேண்டும் என்ற வேட்கையும் இருக்கிறது"வெறும், வாதத்திற்காய் சொல்லவில்லை; இறையருளால், நானும்-நீங்களும் அத்தனை காலம் வாழ்ந்தால், நான் சொல்லியவண்ணம் வாழ்தலை" எல்லோரும் காணவும் முடியும்; அதையும், என்னால் ஓர் தலையங்கமாய் அந்த-நேரத்தில் எழுதவும் முடியும்.  

       அதனால் தான், நான் ஓர் நல்ல "மருதந்தை"யையாயும் இருக்க ஆசைப்படுகிறேன். என்மகள், மேற்கூறிய என்-நண்பியை போல் இல்லாமல் என்னுடன் வந்து இருப்பாள் எனில் - அதிகபட்சமாய் 2 மாதங்கள் பொறுத்துக்கொள்வேன். பின், முதலில் என்மகள் மற்றும் மருமகனிடம் பேசி இருவரையும் சமாதானப்படுத்த முயல்வேன்; என்மகள் கூறுவதை-மட்டும் கேட்டால் "எங்கள் உறவு; தெளிவற்றது" என்று அர்த்தம்! அடுத்து, இருவரையும் மிகச்சிறந்த மனோதத்துவ நிபுணர்கள் 3 பேர்களிடமாவது கலந்தாலோசித்து - அதற்கோர் தீர்வு காண முயல்வேன்; 1 நிபுணர் மட்டும் என்றால் - தவறு நேரக்கூடும்!! இது இரண்டும் கைகொடுக்கவில்லை எனில், கண்டிப்பாய் என்மகளுக்கு "விவாகரத்து" பெற்றுத்தருவேன்!!! என் மகளின்-சந்தோசம் அல்லது அவள் என்னுடன் இருப்பது மட்டும் முக்கியமல்ல; "என் மருமகன்" சந்தோசத்தையும் நான் கவனிக்கவேண்டும்!! என் மருமகன் அவன்-குழந்தைகளை எப்போது வேண்டுமானாலும் வந்து-பார்க்க/ அழைத்துக்கொண்டு செல்ல சட்ட-ரீதியாய் வழிசெய்து கொடுப்பேன்! கண்டிப்பாக, இந்த 3-ஐயும் செய்யாது; என்மகளைப் போல நானும் "வெட்டியாய்; வாழ்ந்து" கொண்டிருக்காமாட்டேன். இந்த "தெளிவான புரிதல்" இருப்பதால்தான் "தாய்க்கு பின் தாரம்; தந்தைக்கு பின் யாராம்???" என்று என்னால் கேள்வி கேட்க முடிந்தது! அதில், என்மகளுக்கு கணவனிடம் எப்படி இருக்கவேண்டும் என்பதை அவளுக்கு தகுந்த வயதுவந்தவுடன் (அவளின், திருமணத்திற்கு முன்) விளங்கவைப்பேன் என்று கூற(வும்)முடிந்தது!! "மகள்-தந்தை" உறவு...

திருமணத்திற்கு பின்னும், சிறந்திருக்க வேண்டுமானால்; 
"நம் மகளும், நம் மருமகனும்" சந்தோசமாய் வாழ்தல் மிகமுக்கியம்!!!

மகளே! விழியமுதினி...

(முன்பு "கவிதை என்று நான் கிறுக்கியது" - இப்போது "விருத்தப்பா"வாய்!
என்னப்பனின் கருத்து கேட்டிட வேண்டும்!!)

அமிழ்ததினும் இனியவள்என் மகளாம்! எல்லா
       விழிகளிலும் அழகாம்அ வளின்ஈர் கண்கள்!
தமிழ்அளிக்கும் அமுததுவாம் அவள்நல் உள்ளம்;
       வழிநடத்தும் ஆலயமாம் அவள்பேர் ஞானம்!!
குமிழ்ந்திடுமாம் அண்டமெலாம் அவள்கால் கீழாம்
       விழிதிறக்கும் முன்னெழுத நினைத்த இப்பேர்
தமிழ்க்கவியோ! தாமதமாய் முடிந்தும்; யாரும்
       விழிவிரிக்கும் வண்ணமாய்வந் ததும் காணீர்!!!

கருவறையில் நுழைந்தவுடன் உறுதி கொண்டேன்;
       விந்தணுவில் வென்றதுஎன் மகள்தான் என்றே!
தெருவறையில் துவங்கிபின் சமையற் கட்டில்
       சாந்தமாகும் இளந்தென்றல் எனவே பெற்றோர்
இருவர்எம் மனமுழுதும் பெயர்என்? என்ற
       சிந்தனையும் மகிழ்தென்றல் உருவில் கண்டோம்!!
ஒருவாறாய் கண்டிட்டேன் எனைசார் மொத்த
       சொந்தமெலாம் கொண்டாடும் புகழ்பேர் ஒன்றாம்!!!

"விழியமுதி னி"யென்றபொன் பெயராம்! அந்த
       பெயர்கண்ட வரலாற்றின் விளக்கம் கேளீர்!!
மொழியதுவின் பால்கொண்ட உயர்ந்த பண்பால்;
       உயர்கண்டம் ஆசியாவின் உயிர் காக்கும்
மொழியாம்நம் தமிழதுவின் "ய/ழ"வும் கொண்டு
       துயர்க்கஞ்சேன் என்றெண்ணி பெயர் கண்டேன்;
"ழ,ய"கரம்ஒன் றாய்சேர்ந்தே! இதுவும் சொல்லும்;
       உயர்குணமும் "எண்ணித்து ணிககர்  மம்"என!!!

கர்வமொன்று முளைத்ததுஎன் மனதில் கேளீர்!
       என்னுயிராம் மகளின்பேர் தனித்து வேண்டி;
ஆர்வமொன்று சூழ்ந்ததென்னுள் - தேடினேன் எங்கும்
       எண்பதுக்கு மேற்பட்டும் தொகுப்பில் மூழ்கி;
ஆர்க்குமிங்கு இல்லையென்றே துருப்பும் கண்டேன்!!
       எண்ணித்து ணிந்தகர்மம் அதுவும் பொய்த்தல்;
சர்வசத்தி யமாய்சாத்தி யமில்லை! என்றே
       என்னய்யன் வள்ளுவன்சொன் னதுவும் மெய்யே!!!     

என்றுநான்கேட் பேன்?மகளும் இசையாய் இப்பேர்
       உரைப்பதையும்! அவளோர்நாள் இசைவாய் சொல்லும்
அன்றுதான்என் மகிழ்திருநாள்!! வருமே அந்நாள்
       விரைவினிலே! "விழியப்பன் கணக்கும்" பொய்த்தல்     
நன்றன்றாம்  எனஉணர்ந்த மகளும் இன்றே
       விரைந்திடுவாள்! எவ்வுலகு(ம்) அழிந்தும் எஞ்சும்  
ஒன்றென்றே இட்டபெயர் வையத்தோர் யார்க்கும்
       பறையறைந்தே செப்பிடுவாள்; அவள்பேர் காப்பாள்!!! 

சரியும், தவறும்...



தவறை தவறென
தயங்காது சுட்டுவோரை;
"தவறு"என்பது! எப்படி
தார்மீகமாய்; "சரி"யாகும்???

இதுதான் - கமலை, புரிந்துகொள்வது!!!



     என்னுடைய வலைப்பதிவை தொடர்ந்து படிப்போருக்கு நான் கமல்-ஹாசன் அவர்களின் "அபிமானி" என்பது "வெளிப்படையாய் தெரிந்த-இரகசியம்(Open Secret)". நான் என்னை, கமலை அருகிருந்து கவனிக்க ஆரம்பித்தபின் அவரின் இரசிகன் என்று எப்போதும் கூறியதில்லை! என்னைப் பொருத்தவரை "இரசிகன்" என்பவன் அவன் விரும்புவது இருந்தால்(மட்டுமே) இரசிப்பவன்; ஆனால், அபிமானி என்பவன் ஒருவர் தருவதை (அப்படியே)விரும்புவன். அதனால் தான், "அன்பே-சிவம்" படத்தை பலதாரரும் பல-ஆண்டுகளுக்கு பின் புகழ ஆரம்பிப்பதற்கு முன், என் போன்றோர் அந்தப்படம் வந்தவுடனே(யே) இரசித்தோம். "மகாநதி" படத்தை 11 முறை திரைப்பட-அரங்கில் காண வைத்தது; அந்த படம் "வசூல்-ரீதியாய்" வெற்றிபெறாதது என் போன்றோருக்கு ஓர் பெரியகுறை; அதுபோல், பலபடங்களை கூறலாம்! நான், இங்கே கூறமுனைவது; விஸ்வரூபம் திரைப்படம் பற்றி நான் சமீபத்தில் "இணைய-தளம்" ஒன்றில் கண்ட காணொளி குறித்து! இதுதான், கமலை புரிந்துகொள்ளும் விதம்!!

       நான் பெரும்பாலும், கமலை "உணர்வு-ரீதியாய்" பார்ப்பவன்; அதாவது பல உறவுகள், பல நிகழ்வுகள் குறித்து அவரின் உணர்வும், உணர்ச்சியும் எப்படி இருக்கும் என்று பார்ப்பவன். அது சார்ந்தே, என்னுடைய பதிவிலும், அவர் பற்றி கூறியிருப்பதை நீங்கள் காணமுடியும். ஆனால், இந்த கானொளியில்  அந்த நபர் அந்த திரைப்படத்தின் திரைக்கதையை, ஒவ்வொரு சிறுவிசயத்திலும் இருக்கின்ற நுணுக்கங்களை, எப்படி ஒவ்வொரு காட்சியும் ஓர் பெரிய உண்மையை/கருத்தை "வசனமே இல்லாது" சொல்லி இருக்கிறது என்பதையும் விளக்கி இருக்கிறார். அதுமட்டுமல்ல, திரைப்பட தலைப்பில் வரும் அதே "எழுத்துருவை(Font) அவரும் உபயோகித்திருக்கிறார் - இதுதான், கமலை விரும்புவோரின் திறன்!  கண்டிப்பாக, அவரை பாராட்டவும்; அவர் "அறிவு-ரீதியாயும்" பார்த்திருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டவும் கடமைப்பட்டிருக்கிறேன். அந்த நபர் பெயரைக்கூட குறிப்பிடாது "secretagent786" என்று இரகசியமாயும் வைத்திருக்கிறார். அவர் "இரகசிய-இரசிகனாய்"-ஆகவே இருக்கட்டும்...

    (சிலமணித்துளிகள் செலவிட்டு)அந்த காணொளியை "ஒர்முறையேனும் கண்டிடிடுங்கள்!!!