ஞாயிறு, ஜூலை 28, 2013

என்ன விதமான மனநிலை இது???
       நாம் ஒவ்வொருவரும், ஓர் விசயத்தை ஏதாவது ஓர் சூழ்நிலையில் கவனித்திருக்கக்கூடும்! இறந்த ஒருவரைப் பற்றி பெரும்பாலும் எவரும் தவறாய் விமர்சிப்பது இல்லை!! இறந்தவர் ஓர் பெரிய-போக்கிரியாய் அல்லது பெரிய-சர்வாதிகாரியாய் இருந்திருப்பினும் - இறந்த பின் அவரைப் பற்றி பெரிதாய் விமர்சிப்பது இல்லை; அல்லது சில நாட்களுக்கு பிறகு விமர்சிப்பது (குறைந்து/நின்று) விடுகிறது!!! "விஸ்வரூபம்" திரைப்படத்தில் ஓர் காட்சி வரும்; தீவிரவாதத்துக்கு உதவிய ஒருவர் இறந்துவிடுவார். அவரைப் பற்றிய கலந்துரையாடல் வரும்போது, ஓர் பெண்மணி, அவர் தான் இறந்துவிட்டாரே; அவரைப்பற்றி ஏன் விமர்சிக்கவேண்டும்? என்பார். உடனே, கமல் "இறந்துவிட்டால், எல்லாவற்றையும் மன்னித்துவிட வேண்டுமா? அப்போ "ஹிட்லரையும்" மன்னித்துவிடலாம் என்பார்". காண்பதற்கு இது ஓர் சாதாரண உரையாடல் போல் தோன்றினாலும், ஆழ்ந்து பார்த்திடின் - சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட ஓர் குடிமகனின் கோபத்தை/அக்கறையை அது உணர்த்துவது புரியும். இந்த நிகழ்வை, இறப்பதற்கும் செய்த தவறுக்கும் என்ன தொடர்பு என்பது போல் பல-கோணங்களில் விவாதிக்க முடியும் - நான், தொடர்ந்து வலியுறுத்துவது போல், இது தான் கமல்! அவரை "உதட்டோடு முத்தம்" கொடுப்பவர் என்ற ஓர்-கீழ்த்தரமான வட்டத்துக்குள் பார்ப்பது முறையல்ல. எப்படியாயினும், ஒருவர் இறந்துவிட்டால் அனைத்தையும் மறந்துவிட்டு அவரை தூற்றிட்ட உறவுகள் அனைத்தும் - அந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு "உண்மையாய்" அழுவர்.

        இதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்; பார்த்து கொதித்திருக்கிறேன்! இது கமல் கேட்டது போல், ஏன் மன்னிக்கவேண்டும் என்றல்ல!! என்னுடைய பார்வை, வேறுவிதமாய் இருந்து வந்திருக்கிறது; இறந்தவுடன் (மன்னித்/மறந்)துவிட்டு அவரின் இறுதி-நிகழ்ச்சியில் அழுகிறீர்களே?! அதை ஏன் அவர்கள் உயிரோடு இருக்கும்போது செய்யவில்லை? என்ற கோபம் எனக்கு தலைதூக்கும்!! என்னதான், ஒருவர் இறந்தவுடன் வரும் அழுகை "உணர்ச்சி-வெடிப்பின் (Emotional Burst)" வெளிப்பாடு எனினும் - அதில் ஓர் உண்மை இருக்கிறது என்பதை எவரும் மறுக்கவோ/மறைக்கவோ முடியாது. இருப்பினும், அந்த உணர்வு ஏன் - சம்பந்தப்பட்டவர் உயிரோடு இருக்கும்போது வருவதில்லை? என்னைப் பல நாட்கள் உறுத்திக்கொண்டிருக்கும் சிந்தனை இது; இருக்கும்போது ஒருவரை சிறிதும் மதிக்காது, அவர் இறந்தபின் அவருக்காய் கதறி-அழும் செயல் எனக்கு பெருத்த அபத்தமாய் தோன்றும்; இறந்தவருக்கு அந்த செயல் - தெரியப்போவதில்லை! "உணர்ச்சி-வெடிப்பின்" காரணமாய் விளைவது(தான்) எனினும் - அது பெருத்த தவறாய் எனக்கு தோன்றும். அதனாலேயே, என்னுடைய அத்தை ஒருவர் இறந்த போது நான் அவரின் இறுதிநிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை; பெங்களூரில் இருந்து கிளம்பி, பின் நின்றுவிட்டேன். எங்கள் உறவுகள் அவர் இருக்கும்போது செய்த பலசெயல்கள்  என்னுடைய நினைவுக்கு வந்து சென்றது; இதையெல்லாம் மீறி அவர்களின் "அர்த்தமில்லாத-அழுகையை" பார்க்க என் மனது ஒப்புக்கொள்ளவில்லை!!!

         இம்மாதிரி ஓர் செயல் எப்படி நடக்கிறது - என்ன விதமான மனநிலை இது??? இதை தீவிரமாய் ஆழ்ந்து யோசிக்கும்போது - முதலில் புரிந்தது, இவர்கள் - சம்பந்தப்பட்டவர்கள் உயிரோடு இல்லை என்பதை உணர்கிறார்கள்; அவர்கள் மேல் இனியும் கோபமாய்/ஆதங்கமாய் இருப்பதில் எந்த நியாயமும் இல்லை என்று உணர்வதாய் பட்டது! இது பாராட்டப்படவேண்டிய செயல் தானெனினும், இந்த நிகழ்வு சம்பந்தப்பட்டவர் உயிரோடு இருக்கும்போது ஏன் நிகழவில்லை என்ற கேள்வி வந்தது!? ஒருவேளை, அவர்கள் இறந்துவிடுவார்கள் என்று தோன்றவில்லையா!? இருக்கக்கூடும்; ஏனெனில், எழுத்துசித்தர்-பாலகுமாரன் அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவது போல் "நமக்கு முன்னே பிறந்தவர், நம்முடன் பிறந்தவர், நமக்கு பின் பிறந்தவர் - இப்படி அனைவரும் இறந்தாலும்; நாம்(மட்டும்) உயிர்த்திருப்போம் என்று நாம்-ஒவ்வொருவரும் திடமாய் நம்புகிறோம்" என்ற கூற்றுதான் நினைவுக்கு வருகிறது. எத்தனை பேருண்மை இது?! நாம் இறந்துவிடுவோம் என்று நாம் நம்புவதே இல்லை - எந்த நிலையிலும்! இதை ஓர் அம்சமாய் "மரணத்திற்கு பிறகு, என்ன?" என்ற தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். நம்முடைய மரணத்தையே நாம் நம்பவில்லை எனும்போது - நம்முடைய எதிரியின் மரணத்தை பற்றி நாம் யோசிப்பதில்லை என்பதில் பெருத்த-ஆச்சர்யம் இல்லை என்று படுகிறது. இதை எண்ணும் போது, "மரணத்திற்கு பிறகு, என்ன?" என்ற தலையங்கத்தை மேலும் விளக்கவேண்டும் என்று தோன்றியது.

    அத்தலையங்கத்தில் குறிப்பிட்டது போல் என்னுடைய சுற்றமும், நட்பும் செய்த/செய்யும் பல செயல்களை மரணத்திற்கு பின் ஒன்றுமேயில்லை என்ற உண்மையை உணர்ந்ததால்தான் என்னால் மன்னிக்கவும்/ மறக்கவும் முடிகிறது. கண்டிப்பாய், முதலில் நம்முடைய மரணத்திற்கு பின் எந்த காழ்ப்புணர்ச்சியும் இருக்கப்போவதில்லை என்பதை நாம் உணரவேண்டும். அதேபோல், நம் எதிரியாய் நினைக்கும் எவருடைய மரணத்திற்கு பின்னும் நம்முடைய காழ்ப்புணர்ச்சிகள் எதுவும் இருக்கப்போவதில்லை என்ற உண்மையையும் உணரவேண்டும். அதாவது, காழ்ப்புணர்ச்சியால் விளையும் எந்த செயலும் எவரேனும்-ஒருவரின் எவரின் மரணத்திற்கு பின் நிலைக்கப்போவதில்லை என்று விளக்கமாய் கூறிடவேண்டும் என்று தோன்றியது. பின் ஏன், நாம் உயிர்த்திருக்கும்போதே இதனை உணர்ந்து நம்-மனதை பண்பட செய்யக்கூடாது?! அதுவும், இங்கே எவரின் வாழ்வும் நிரந்தரமில்லை எனும் நிலையில்லாத-வாழ்க்கையில், முடிந்தவரை நாம் நம்முடைய காழ்ப்புணர்ச்சிகளை விரைவில் மாற்றிகொள்வது அவசியமில்லையா?! இதற்கு ஏன் ஒருவரின் மரணம் வரை காத்திருக்கவேண்டும்! மறுப்பின்றி, மண்ணில் பிறந்தோர் அனைவரும் இறக்கத்தான் போகிறோம்! எப்போது என்பது மட்டும்-தான் எவருக்கும் தெரியாது! பின் ஏன், இம்மாதிரி எண்ணத்தை முயன்று உருவாக்கி நம்மை நாமே செம்மைப்படுத்திக் கொள்ளக்கூடாது?! முயன்றால் முடியாதது எதுவும் இல்லை; இந்த கணத்தில் இருந்தாவது முயன்று தான் பார்ப்போமே!!!

       இந்த முயற்சியில் நாம் வென்றால் - நாம் இழப்பது நம்முடைய காழ்ப்பு/ பகைமை உணர்ச்சிகளை தான்! அந்த இழப்பு நம்முடைய வாழ்க்கையை வெற்றியடையச்-செய்யும் என்பது தீர்க்கமான உண்மை. இம்மாதிரியான பல சிந்தனைகளுக்கும் வித்து என்-சிறிய வயதில் என்னுள்ளே எழுந்த "இறந்த பிறகு என்னவாய் ஆவோம்?" என்ற அந்த கேள்விதான். என்னுள் எழுந்த அந்த கேள்வியும்; அந்த கேள்வியால் விளைந்த நன்மைகளும் இன்னும் பலரையும் சென்று சேர்ந்திடவேண்டும் என்ற நல்லெண்ணத்தால்தான் - இதை  என்னுடைய கடமையாய் எண்ணி மீண்டும், மீண்டும் வலியுறுத்துகிறேன். இறந்தபின் நாம் சிந்தும் கண்ணீரால், எந்த பலனும் இருக்கப்போவதில்லை!  அல்லது அந்தநேரத்தில் நிகழும் மனமாற்றம் சம்பந்தப்பட்டவருக்கு நிச்சயம் தெரியப்போவதில்லை! பின், எதற்காய்/எவர்க்காய் இம்மாதிரியான காழ்ப்பு/பகைமை உணர்ச்சிகளை கொள்ளவேண்டும்? இம்மண்ணுலகில் இருக்கும் வரை - நம்மால் இயன்றவரை இத்தகைய உணர்ச்சிகளை விட்டுவிட்டு - சம்பந்தப்பட்டவர் உயிர்த்திருக்கும் போதே அன்பு பாராட்ட முயல்வோம்!! இல்லையெனில், "என்ன விதமான மனநிலை இது?" என்ற கேள்வி எவர்-மூலமாவது தொடர்ந்துகொண்டே தானிருக்கும். என்ன ஓர் விந்தை! மரணம் என்ற ஓர் நிகழ்வு எத்தனை விதமான யோசனைகளைகளுக்கு வித்திடுகிறது? மரணத்தின் மர்மம் மட்டும் தெரிந்துவிட்டால், வாழ்க்கை சுவராசியமாய் இருக்காது போலும்! அதனால் தானோ, இன்னமும் தொடர்கிறது இந்த கேள்வி...

இறந்த பிறகு என்ன ஆவோம்???                     

எத்தனை பேருக்கு கிடைத்ததிது/கிடைக்குமிது???
    மேலிருக்கும் புகைப்படங்கள், என்மகளின் 4-ஆவது பிறந்தநாள் (சூலை 2, 2013) கொண்டாட்டத்தின் போது எடுத்தவை! இரண்டு புகைப்படங்களிலும் இருப்பவர் - என்மகளின் வகுப்பு-ஆசிரியை!! அவரை இந்த கொண்டாட்டத்திற்கு அழைத்தது - முழுக்கமுழுக்க என்னுடை செயல். அவரை இம்மாதிரி விழாவிற்கு அழைத்தது சரியில்லை என்று (நேரிடையாகவும்/மறைமுகமாகவும்) சிலர் கூறினர். அவர்கள், இந்த நிகழ்வை எந்த விதத்தில் பார்த்தனர் என்று தெரியவில்லை; என்னுடைய பார்வையும் கோணமும் வேறானது. அவர்களின் கூற்றைப் போல், என்மகளும் - அவளின் நண்பிகளும் சிலமணித்துளிகள் கொண்டாட்டத்தை மறந்து உரைந்துபோய் நின்றது உண்மை! அதைத்தான் முதல் புகைப்படம் உணர்த்துகிறது - குறிப்பாய், என்மகள்! அபூர்வமாய் தான் அவள் இப்படி "பவ்யமாய்" இப்படி நிற்பாள்!! ஆனால், அதன்பின் அவர்கள் இயல்பு-நிலைக்கு திரும்பி விட்டனர். ஆசிரியை/ஆசிரியர் என்பவர் "ஒழுங்க படிக்கலைன்னா??!!" என்று குழந்தைகளை மிரட்டுவதற்காய்-மட்டும் அல்ல!!!

   நம்மில், எத்தனை பேருக்கு 4 வயதில் நமக்கு சொல்லிக்கொடுத்த ஆசிரியை/ஆசிரியரை நினைவிருக்கிறது? 12 ஆண்டுகளும் ஒரே பள்ளிக்கூடத்தில் படித்த/படிக்கும் சிலருக்கு இது சாத்தியமாதல் கூடும்! எவருக்காய் இயற்பியலில் ஆராய்ச்சி செய்யவேண்டும் என்று எண்ணினேனோ, அந்த 12-ஆம் வகுப்பு ஆசிரியரை(யே) அதன் பின் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை - அவருக்காய் நான் ஆராய்ச்சி-படிப்பை படித்தேன் என்பது கூட அவருக்கு(இன்றுவரை) தெரியாது!! அவரை தொடர்பு  கொள்ள இன்றுவரை முயன்றுகொண்டிருக்கிறேன் - இது தான் எதார்த்தம்!!! ஆனால், என்மகளுக்கு - அவளின் ஆசிரியையுடன் அவளின் பிறந்தநாளன்று புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது! அதிலும், 2-ஆவது புகைப்படத்தை போன்றொரு நினைவுச்சின்னம் எத்தனை பேருக்கு கிடைத்திருக்கிறது? வெகுநிச்சயமாய், என்மகள் ஓர் 20 ஆண்டுகள் கழித்து இதற்காய் என்னை மெச்சுவாள் என்ற நம்பிக்கை இருக்கிறது; எனக்கு அதுதான் முக்கியமாய் படுகிறது...

மற்றவர்களின் அர்த்தமில்லாத விமர்சனம் அல்ல!!!    

Quinoa எனும் "திணை-அரிசி"
      என் நண்பன் "சுரேஷ் பாபு" வெகுநாட்களாய் "Quinoa" என்று ஒன்று உள்ளது; அது அரிசிக்கு மாற்றானது - அது உடலுக்கு நல்லது என்று கூறிவருகிறான். என்னுடைய உடல் பருமன் கூடிக்கொண்டே போவதால் - என்னை அதை உண்ணும்படி வற்புறுத்தினான்! நானும், போர்த்துக்கல் நாட்டில்  இருந்தபோதும்; இங்கே அபு-தாபியிலும் அதை தொடர்ந்து  தேடிக்கொண்டே இருந்தேன்!! ஆனால், இதுவரை "Organic" மூலம் பயிரடப்பட்ட விலையுரந்த "Quinoa"-வையே பார்த்தேன். நானும், அது அவனிருக்கும் "அமெரிக்கா" போன்ற நாடுகளில் தான் கிடைக்கும் என்று விட்டுவிட்டேன். என் சமீபத்திய இந்திய-பயணத்தின் போதுதான் "Quinoa" என்பது "திணை-அரிசி" என்று உணர்ந்தேன். நண்பனாலும், அது எப்படி இருக்கும் என்று விளக்கமுடிந்ததே தவிர அது "திணை-அரிசி" என்று தெரியவில்லை. எனக்கு பெருத்த அதிர்ச்சியாய் இருந்தது; ஏனெனில், நான் சிறு-பிள்ளையாய் இருந்த போது என்-அம்மா திணை-அரிசியில் பல உணவு வகைகள் செய்து கொடுத்தது நினைவிலிருக்கிறது.

     இப்போது என்னுடைய கிராமத்தில் கூட கேழ்வரகு, கம்பு போன்ற பல தானியங்களை போல் "திணை-அரிசி"-யின் புழக்கமும் மலிந்துவிட்டது. திணை-அரிசி அங்கங்கே இயற்கையாய் விளைவதை கூட என் கிராமத்தில் கண்டிருக்கிறேன். இந்த உணவு வகைகள் குறையத்-துவங்கி, பின் அதை உண்போர் "வசதி-இல்லாதவர்" என்ற உருவகமும் தோன்ற ஆரம்பித்தது. திணை-மாவு, கேழ்வரகு-மாவு, கம்பு-மாவு போன்ற வேறு-வகைகளில் உண்டனர்; பின், அதுவும் அறவே நின்றுவிட்டது. இப்போது, உணவகங்களில் "Raagi-Dosa" தின்பது வசதியானோர் என்றாகிவிட்டது. ஏன்டா! அதைத்தானடா கிராமத்தில் "கூழ்" என்றும் முருங்கை-இல்லை சேர்த்து "கேழ்வரகு-அடை" போன்று கொடுத்தனர் என்று கூவத்தோன்றுகிறது! இப்போது - சென்னை, புதுவை பொன்ற நகரங்களில் "கூழை" சாலையோர கடைகளில் வாங்கி-குடிப்பது வெகுவாய் பெருகிவிட்டது!! திணை-அரிசியும் மறுபிரவேசம் எடுக்குமோ??? இதுபோன்ற மாற்றங்கள் தானாய் விளைந்ததாய் தெரியவில்லை! சரி...

இதை எவர் குற்றம் என்று கூறுவது???    

எத்தனை மென்மை???     சென்ற வாரம் - ஓர் மாத கால விடுப்பில், இந்தியாவிலிருந்து - இங்கே அபு-தாபி வந்த பின், வழக்கமான "வீடு சுத்தம்" செய்யும் வேலையை செய்தேன். இந்த முறை, பெரிதும் மெனக்கிட்டு 3 மணி நேரம் சுத்தம் செய்தேன்; முதலில் வீட்டை கூட்டி-பெருக்கிய பின் கிடைத்த "தூசுக்கும்பலை" பார்த்ததும், எனக்கு பெருத்த ஆச்சர்யம்! உடனே, அதை புகைப்படமாய் எடுத்தேன். அதைத்தான் இந்த படைப்பின்-படமாய் தந்துள்ளேன். இப்படியுமா, மென்மையான தூசுகள் இருக்கும் என்று ஓர் ஆச்சர்யம்!! முதலில் வீட்டை கூட்ட ஆரம்பித்த போது இத்தனை சேரும் என்று நினைக்கவே இல்லை. இங்கே, தூசு மிகவும் மென்மையாய், சிறிதாய் இருக்கும் என்று உணர்ந்திருக்கிறேன். 6 மாத குழந்தை வைத்திருக்கும் என் தமக்கை-மகனிடம் கூட, குழந்தையை பத்திரமாய் பார்த்துக்கொள் - இங்கிருக்கும் தூசு அத்தனை மென்மை என்று பலமுறை எச்சரித்து இருக்கிறேன். எனினும், அந்த துகள்களை ஒன்றாய் சேர்த்து, அத்தனை அருகில் பார்த்தவுடன் ஓர் பரவசம் அடைந்தேன். 

       குளிர்பிரதேசங்களில் காணும் "பனிப்படலம்" போல், சிலமுறை "தூசுப்படலத்தை" பனிப்படலம் போலவே வாகனம் ஓட்டும்போது உணர்ந்திருக்கிறேன். எனினும், மேற்கூறிய நிகழ்வு என்னை அது பற்றி நிறைய யோசிக்க வைத்தது. இந்த சூழல் தான், இங்கிருக்கும் அமீரக-மக்களை அப்படியொரு உடையை அணிய வைத்திருக்கிறது என்று எண்ணத் தோன்றியது. குறிப்பாய், பெண்கள்! கண்ணை மட்டும் விடுத்து உடல் அத்தனையையும் துணியால் போர்த்த - இது முதன்மையான காரணமாய் இருக்கவேண்டும். உடையும், உணவும் - சூழல் சார்ந்து அமைவது என்பது எல்லோருக்கும் தெரிந்தது தானே?! இது போல், பலவிசயங்கள் என்னுள் எழுந்தன; ஆயினும், இது "மனதங்கம்" என்பதால் விளக்கமாய் எழுதப்போவதில்லை. உங்களுள் எழும் மற்ற விசயங்களை, "விருப்பிருந்து" வாய்ப்பு-கிடைப்பின் பின்னூட்டமாய் பகிருங்கள். கற்பனையும், அதை சார்ந்த விளக்கங்களும் இங்கிருந்து/இதிலிருந்து தான் எழவேண்டும் என்ற நியதியில்லை! எனவே...

விரையட்டும், உங்கள் கற்பனைக்-குதிரை!!!    

சனி, ஜூலை 27, 2013

முன்னுரை...      இந்த வாரம் முதல் எனக்கு பிடித்த விசயங்களை, நான் வியந்து பார்த்த விசயங்களை சுருக்கமாய் எழுத எத்தனித்து, இன்னுமொரு பிரிவை உருவாக்கி இருக்கிறேன். விவரித்து எழுதும் வடிவத்தை - வழக்கமாய், எல்லோரும் அழைப்பது போல் - "தலையங்கம்" என்று குறிப்பிடுவது போல் அல்லாது, ஓர் புதிய வடிவில் பெயரிடுதல் வேண்டும் என்று தோன்றியது. எனவே, சிறிது நேரம் செலவிட்டு ஓர் பெயர்-வடிவத்தை கண்டிட்டேன்; இவ்வாறு, வேறெவரும் குறிப்பிடுகின்றனரா என்று எனக்கு தெரியவில்லை! இந்த பகுதியை "மனதங்கம்" என்று அழைக்க விரும்புகிறேன். மனிதனின் உடலில் முதலில் முக்கியமானது "தலை" என்பதால் தான் விவரித்து எழுதும் விசயத்தை "தலையங்கம்" என்று அழைப்பதாய் தோன்றியது!! "மனம்" என்பது "தலை"-க்கு அடுத்த முக்கியமான பகுதி என்பதால்தான் இந்த பிரிவை "மனதங்கம்" என்று பெயரிட்டிருக்கிறேன். மேலும், இதில் என் மனதில் பட்ட/மனதை தொட்ட விசயங்களை எழுத எத்தனிருப்பதாலும், இந்த பெயரிடுதல் மிகவும் பொருத்தமாய் இருப்பதாய் உணர்ந்தேன். இந்த பகுதியின்-பெயர் புதியதாய்/பொருத்தமாய் இருப்பதாய் நீங்களும் நம்புவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது - அவ்வாறே, இந்த பகுதியில் வரும் படைப்புகளும் இருக்கும்.

உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றிகள் பல!!!