ஞாயிறு, ஏப்ரல் 22, 2012

குழந்தை யாரிடம் வளரவேண்டும்???...


(தலையங்கத்தின் "நீளம்" சற்று அதிகம் என்பது எனக்கு தெரிகிறது; ஆனால், எடுத்துக்கொண்ட களத்திற்காய் வேண்டி அதை பொறுத்தருள்வீர்கள் என்று நம்புகிறேன்)

      கடந்த வார தலையங்கத்தை தொடர்ந்து, இந்த வாரமும் நாளிதழில் வெளிவந்த செய்தி ஒன்று என்னை நிலைகுலைத்து விட்டது; இந்த செய்தி சார்ந்த என் பார்வையை எழுதவேண்டும் என முடிவெடுத்து இரண்டு மாதங்களுக்கும் மேல் ஆகிறது. இது தான் சரியான சந்தர்ப்பம்!  கடந்த வாரம் குறிப்பிட்ட தந்தைக்கு நேரெதிர் துருவம்; இரண்டு எல்லையில் இருக்கும் எந்த உறவும் சங்கடம் தான். கடந்த வாரம் சுட்டிக்காட்டப்பட்ட தந்தை "சிறுபான்மையில்" ஓர் மிகப்பெரிய கொடியன்; இந்த வாரம் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தந்தை "பெரும்பான்மையில்" தன்னிலை தவறியவர். செய்தி இது தான்; "குழந்தையை யார் வளர்ப்பது?" என்ற விவாதத்தின் அடிப்படையில் எழுந்த பிரச்சனையில் ஓர் தந்தை, தன்னிலை தவறி தன்னுடைய மனைவியை (குழந்தையின் தாயை) கொன்றுவிட்டார். இந்த பிரச்சனையின் அடிப்படையையும் அது சார்ந்து தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளையும் கலந்தாயும் முன், படித்த செய்தியின் கரு; மனைவியை கொன்றதற்காய் கணவன் (தந்தை) சிறைச்சாலைக்கு செல்லும் முன் - அந்த பாச மிகு தந்தையும், மகளும், ஒருவொருக்கொருவர் கட்டியணைத்து அழுது தங்களின் பாசத்தை வெளிப்படுத்தும் புகைப்படத்துடன், செய்தி வெளியாகி இருந்தது. அந்த குழந்தையின் எதிர்காலம் என்ன? உறவுகள் ஆயிரம் இருப்பினும், அது குறுகிய காலத்திற்கு வேண்டுமானால் பலன் தரக்கூடும். ஆறு வயது துவங்கி வாழ்க்கை முழுதும் அவ்வாறெனின் அந்த குழந்தையின் வாழ்க்கை என்னாவது? என்று என்னும்போது நம் மனம் பதறுகிறது தானே??

        ஓர் குழந்தை சரியாய் வளர அக்குழந்தை ஒரு குறிப்பிட்ட வயது வரை தாயுடன் தான் வளரவேண்டும் என்று சட்டம் இருக்கிறது. ஆணாதிக்கம் உச்சத்தில் இருந்தபோது, அதாவது, ஆண் என்பவன் குடும்ப-வேலைகள் எதுவும் செய்யாது (செய்யவும் தெரியாது), அனைத்தும் பெண் தான் செய்யவேண்டும் என்று எண்ணியிருந்த காலகட்டத்தில் வேண்டுமானால், இது சரியாய் இருந்திருக்கலாம். குழந்தை வளர்ப்பது, தாயின் (பெண்) வேலை; பொருளீட்டுவது தந்தையின் (ஆண்) வேலையாய் இருந்திருக்கலாம். இன்று சூழல் வேறு என்பதை என்னுடைய சமீபத்திய தலையங்கத்தில் கூட விளக்கமாய் எழுதி இருந்தேன். இங்கே, வேலைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு, வீட்டு வேலைகள் பகிர்ந்துகொள்ளப்படாத போது அதை ஒரு குறையாய்/ பிரச்சனையாய் இல்லத்தரசிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இன்னமும் குழந்தை வளர்ப்பதில் மட்டும் - அதிலும் குறிப்பாய், கணவன் மனைவிக்கிடையில் பிரச்சனை வந்த பின் - ஏன் தாய் மட்டுமே (வயது நிர்ணயம் இருப்பினும்) வளர்க்க வேண்டும் என்று சட்டமும் சொல்கிறது?; இல்லத்தரசிகளும் வாதாடுகின்றனர்? இதில் ஏதேனும் ஒரு நிலைப்பாட்டில் அவர்கள் இருக்கவேண்டும். ஒன்று, எந்த சூழ்நிலையிலும் குழந்தை வளர்ப்பது பகிர்ந்து கொள்ளப்படவேண்டும் என்று இருக்கவேண்டும்! ஒரு செய்கையில் இருக்கும் இரண்டு விதமான சாத்தியக்கூறுகளையும் (பெண் சூழலுக்கு தக்கவாறு) எடுத்துக்கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது?

        இது கண்டிப்பாய் மாறவேண்டும்; எப்படி இன்றைய கணவன்மார்கள் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்கிறார்களோ, அது மாதிரி பிரச்சனை எழுந்த பின் அல்லது "விவாகரத்து" பெற்றபின் "குழந்தை வளர்க்கும் உரிமை" அந்த தந்தைக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும்; அது தான் நியாயம். குழந்தை, தாய்ப்பால் குடிக்கும் பருவத்தை கடக்கவில்லை எனில், நிச்சயம் அது தாயுடன் தான் இருக்கவேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், கண்டிப்பாய் எந்த கணவனும் பிரச்சனை செய்யப்போவதில்லை; அதற்கும் காரணம், கணவனுக்கு இயற்கை அல்லது இறைவன் அந்த சக்தியை கொடுக்கவில்லை என்பது தான். நான், இங்கே எடுத்துக்கொண்டிருக்கும் வாதம் அப்பருவம் கடந்த குழந்தைகளைப் பற்றித்தான் என்று தயைகூர்ந்து உணர்ந்து கொள்ளுங்கள். குழந்தை தாயுடன் தான் வளரவேண்டும் என்பதற்கு பலநாட்களாய் சொல்லப்பட்டு வந்த காரணங்களுள் முக்கியமான ஒன்று, ஆணுக்கு அந்த பொறுமை இல்லை என்பது. ஆனால், இன்று உண்மை நிலை வேறு; ஆணின் பொறுமை பன்மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதால் தான் "இன்றுமா, இல்லத்தரசிகள் இளைத்தவர்கள்?" என்ற தலையங்கம் எழுதவேண்டி வந்தது. எப்படி, ஆணாதிக்கத்தம் உச்சத்தில் இருந்தபோது கூட, குடும்பம் என்பது சிதறாமல் இருந்ததற்கு பெரும்-காரணம் பெண்ணின் பக்குவமும்/ பொறுமையும் தான் என்பது உண்மையோ!, அது போல் இப்போது சிறிய பிரச்னைக்கு கூட குடும்பம் சிதறுவதற்கு காரணமும் பெண்ணின் பக்குவமின்மை மற்றும் பொறுமையின்மை தான் கரணம் என்பதும் உண்மை.

      இதற்கு முழு காரணம், குடும்பம் என்பது இன்னமும் பெண்ணை முதன்மைப் படுத்தி துவங்குவதால் தான்; இந்த முதன்மையை முழுதுமாய்-முறையாய் உணராத போது தான் அன்றும் பிரச்சனை, இன்னமும் பிரச்சனை. இந்த பொறுமை மற்றும் பக்குவத்திற்கு கண்டிப்பாய் அவர்களுக்கு கிடைத்திருக்கும் வரமான "தாய்மை" அடையும் நிலையை  சிறந்த உதாரணமாய் கொள்ளலாம். ஆண்கள், அதை ஏற்கத் தயாரில்லை என்று அர்த்தம் இல்லை; இயற்கையோ அல்லது இறைவனோ ஆண்களுக்கு அந்த சந்தர்ப்பம் அளிக்கவில்லை.  அடுத்து சொல்லப்படும் காரணம், வீட்டு வேலைகளை - குறிப்பாய் சமைப்பது - ஆணுக்கு செய்யத்தெரியாது என்பது தான். இப்போது நிலைமையே வேறு! வேலையை சரியாய் செய்யவில்லை என்பதற்காய் இப்போது பிரச்சனைகள் எழுகின்றன!! இது தான் காலச்சுழற்சி; எதுவும் செய்வதில்லை என்பது மாறி "சரியாய்" செய்வதில்லை என்று மாறி இருக்கிறது. எனவே, இக்காரணத்திற்காகவும் குழந்தை தந்தையுடன் வளரக்கூடாது என்பதில் எந்த அர்த்தமும் இருக்கமுடியாது. இது மாதிரி, எந்த விசயத்தை எடுத்துக்கொண்டாலும், பெண்கள் தங்கள் உரிமைகளை போராடி பெரும் அதே வேலையில், இந்த வேலைகள் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்பதும் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ வலியுறுத்தப்பட்டு வரப்பட்டுள்ளது. அது கூட ஓர் காரணமாய் இருக்கலாம், ஆண்களின் இந்த மாற்றத்திற்கு! காரணம் எதுவாயினும், வீட்டு வேலைகளை ஆண்கள் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது அப்பட்டமான உண்மை!!

     இதில், குழந்தை பெண்ணெனும் போது, கேவலமான ஓர் வாதம் வரும் பாருங்கள்!; அது தான் என்னை மிகவும் காயப்படுத்துவது. "அவள் பருவம் அடைந்தால்" நீ என்ன செய்வாய் என்பது தான் அந்த கேள்வி! பெண்களும், சமுதாயமும் - ஆண்களை - அந்த நிகழ்வுகளில் சேர்ப்பதே இல்லை; அக்குழந்தையின் தந்தை உட்பட! இதே நிகழ்வு, ஆணுக்கும் இயற்கையாய் நடக்கிறது; ஆனால், அது நடைபெறும் விதம் சாதாரணம் என்பது உண்மையாயினும் அவனுக்கும் நடக்கிறது என்பதே உண்மை; பின் ஏன் அதை ஆண் புரிந்து கொள்ளமாட்டான் என்று எண்ணப்பட்டது? இதை ஏன், குறைந்தது அவன் மகளுக்கு நிகழும் போதாவது விளக்கப்படவில்லை? அந்தக் குழந்தை அவன் இரத்தம் அல்லாவா?? எத்தனையோ பெண்கள் இதனை சார்ந்தும் மற்ற பிரச்சனைகளின் அடிப்படையிலும் "ஆண் மருத்துவரை" சந்தித்து விளக்குகிறார்கள் தானே?? என்னதான் தொழிலின் அடிப்படையில் என்றாலும், அவர் ஓர் ஆண்; அவருக்கு அது சார்ந்த விளக்கங்களும், வேதனைகளும், வலிகளும் தெரிந்திருக்கிறது என்பதற்கு மேலாயும், அவருக்கு கற்றுத்தரப்பட்டிருக்கிறது. அது ஏன், ஓர் கணவனுக்கு/ சகோதரனுக்கு அல்லது தந்தைக்கு சொல்லித்தரப்படவில்லை? பின், ஒரு பிரச்சனை வரும்போது மட்டும் ஏன் அதனை சுட்டிக்காட்டி அது ஆணின் தவறு என்பது போல் ஏன் விவரிக்கப்படுகிறது?? இதுவும் நான் மேற்கூறிய வண்ணம், இரண்டு சாத்தியக்கூறுகளையும் ஒருவரே, தங்கள் சூழ்நிலைக்கு தகுந்தார்ப்போல் எடுத்துக் கொள்வது அன்றி வேறென்ன???

      எனவே, குழந்தை தாயுடன் தான் வளரவேண்டும் என்ற கட்டுப்பாட்டில் எந்த வரைமுறையும் இருப்பதாய் எனக்கு படவில்லை; கண்டிப்பாய் இந்த விதியும் தளர்த்தப்பட வேண்டும். நான் முன்பே கூறியிருந்தவாறு, என்ன தான் பாசத்தின் அடிப்படையில் இந்த நிகழ்வை பார்ப்பினும், ஒரு கணவனாய் அவர் செய்ததில் சிறிதும் நியாயம் இல்லை. எனினும், அவர்களிடையிலான உண்மை நிலையை கண்டிப்பாய் ஆராய வேண்டும். மேலும், நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தியின் அடிப்படையில்  அக்குழந்தை எட்டு மாதத்தில் இருந்தே தன் தந்தையுடன் வளர்ந்ததாய் தெரிகிறது. திடீரென, அந்த மனைவி வந்து பிரச்சனை செய்திருக்க வாய்ப்பேயில்லை; அப்படி இருப்பின் அது(வும்) தவறு கூட. அதனால், அந்த பிரச்சனையின் விதத்தை - அதன் ஆழத்தை கண்டிப்பாய் ஆராய்ந்தறிய வேண்டும். அந்த மனைவியை கொலை செய்யும் அளவிற்கு அந்த தந்தையை கொண்டு செல்ல இந்த இடைவெளியில் நடந்த நிகழ்வுகள் தான் முக்கிய காரணமாய் இருக்கும். எனவே, இந்த அடிப்படையில் அந்த தந்தையின் நிலை என்ன என்பதை கண்டறிய வேண்டும். இது கண்டிப்பாய், அந்த தந்தையை ஆதரிக்கும் எண்ணத்தில் இல்லை; ஆனால், அந்த குழந்தையின் எதிர்காலத்தை முக்கியமாய் கருத வேண்டும். மேலும், அந்த குழந்தை தந்தையுடன் மிகுந்த பற்றுடன் இருப்பதை நாளிதழில் வந்த புகைப்படமும் அந்த பாசத்தை அவர்கள் (காவலர்கள் உட்பட) விவரித்த விதத்திலும் புரிந்து கொள்ளமுடிகிறது.

       கண்டிப்பாய், ஒரு நல்ல தந்தையாய் திகழ்ந்திருக்கிறார்; அவர் நல்ல கணவனாய் இராததற்கு நான் என்னுடைய மற்றுமொரு தலையங்கத்தில் குறிப்பிட்டது போல் விதிவிலக்கான காரணம் உண்டா என்பதை ஆராய வேண்டும். அது கண்டிப்பாய் அக்குழந்தையின் எதிர்காலத்தை நிர்ணயிக்க உதவும். சென்ற வாரம், மனித நேயமே இல்லாத ஓர் தந்தை தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தேன். இந்த வாரம், பாசம் மிகுந்த ஓர் தந்தை தன்னிலை தவறிய காரணத்தை அறிந்து அவரின் மகளின் எதிர்காலம் கருதி அதிகம் தண்டிக்கப்படக்கூடாது என்று எழுதி இருக்கிறேன். இரண்டிற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது; முதல் நிகழ்வில், அக்கொடிய தந்தை பலநாட்களாய் அக்குழந்தையை தொடர்ந்து சித்தரவதை செய்து அந்த செய்கையால் அக்குழந்தை இறந்துவிட்டது. ஆனால், இந்த நிகழ்வில் - ஓரிரு நிமிடத்துளிகள் தன்னிலை தவறியதன் விளைவால் அந்த மனைவி கொலைசெய்யப்பட்டிருக்க அதிக வாய்ப்பு உள்ளது. கண்டிப்பாய், அந்த கணவன் தன்னுடைய மனைவியை கொன்றதை நினைத்து - தன்னுடைய "மகளின்" என்திர்காலம் கருதியாவது - இப்போதே கவலை கொள்ள நினைத்திருக்கக்கூடும். இந்த "உணர்தலை" விட மிகப்பெரிய தண்டனை எதுவும் இருக்கமுடியாது. இந்த "உணர்தல்" வரவேண்டும் என்பதால் தான் கடந்த வார தலையங்கத்தில் தண்டனை வேண்டும் என்றேன்; இந்த நிகழ்வில் "உணர்தல்" இப்போதே வந்திருக்கும் என்பதால், தண்டனை வேண்டாம் என்கிறேன்.

       சமீபத்தில் தந்தை-மகள் பாசத்தை உணர்த்தி, அந்த மகளை தன்னிடம் வைத்துக்கொள்ள போராடும் "மனநிலை பாதிக்கப்பட்ட" ஓர் தந்தையின் நிலையை உணர்த்தும் ஓர் தமிழ்த்திரைப்படம் வந்து அனைவரின் ஆதரவுடன் வெற்றியும் பெற்றது. மனநிலை சரியாக உள்ள ஓர் தந்தைக்கு இந்த உரிமை மறுக்கப்படும் போது அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை நாம் உணரவேண்டும். உண்மையில், அந்த இயக்குனர் பெருமளவில் பாராட்டப்பட வேண்டியவர்; எனினும், அந்த தீர்ப்பையும் மீறி தந்தையே அம்மகளை பெண் வீட்டாரிடம் கொடுப்பது போல் முடிவு இருந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படியாயின், அத்தந்தை அந்த மனநிலையிலும் அக்குழந்தையை அந்த தருணம் வரை சிறப்பாய் வளர்த்ததாய்  கான்பித்திருக்கத் தேவையில்லை; அந்த தந்தை பின் எதற்காய் - எந்த பிடிமானத்திற்காய் வாழ்வான்?. மேலும், அது மனநிலை தவறிய தந்தை (அல்லது தாய்) வளர்க்கும் குழந்தை சரியாய் வளராது என்ற தவறான கண்ணோட்டத்தை(கூட) கொடுக்கக்கூடும்; பெரும்பான்மையான "மனநிலை தவறியவர்கள்",  மனநிலை கொண்ட பெற்றோர்களால் வளர்க்கப்பட்டவர்கள் என்பது தான் கசப்பான உண்மை. கண்டிப்பாய், அந்த இயக்குனர் சமுதாயத்தின் விமர்சனம் கருதியோ அல்லது பெண்களையும் பெண் வீட்டாரையும் சமாதானப்படுத்துவதற்காகவோ அவ்வாறு செய்திருக்கக் கூடும். இல்லையேல், நீதிமன்றத்தின் தீர்ப்பையே முடிவாய் விட்டிருக்கவேண்டும்.

         ஒரு வேலை, அந்த இயக்குனர் அத்தந்தையின் உயரிய குணத்தை உணர்த்தக்கூட அப்படியொரு முடிவை அளித்திருக்கக் கூடும். ஆனால், நீதிமன்றத்தோடு விட்டிருப்பின் சரியான மனநிலையுடன் போராடும் தந்தைகளுக்கு அது மிகப்பெரிய ஊக்கமாய் இருந்திருக்கும். ஆனால், இந்த முடிவிலும் நான் ஒரு பெரிய சமுதாயப் பார்வையை பார்க்கிறேன். அது! என் மகள் நன்றாய் இருக்கவேண்டும் என்று மனநிலை சரியில்லாத தந்தை கூட விரும்புவதை உணர்த்துவதாய் பார்க்கிறேன். இங்கே மிக முக்கியமான ஒன்று! இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட தம்பதியர் "இந்தியர்" அல்ல; தமிழகத்தில் வாழும் வேறு நாட்டவர் என்பது தான். இங்கே இன்னுமொன்று புலப்படுகிறது; "தந்தை-மகள்(மகன்)" உறவிற்கு மொழி, மதம் மட்டுமல்ல எந்த நாட்டவர் என்பதும் முக்கியம் இல்லை; இதில் பாசம் தான் அடிப்படை. எனவே, இந்த பிரச்னையை கணவனும் - மனைவியும் தங்களுடைய காழ்ப்புணர்ச்சிகளின் அடிப்படையில் அல்லாது, அக்குழந்தியின் எதிர்காலத்தை முன்னிறுத்தி அணுகவேண்டும். ஏனெனில், தன் குழந்தை யாரிடம் "சரியாய்" வளரும் என்பதில் அக்குழந்தையின் பெற்றோர் தவிர, வேறு யார் தெளிவாய் முடிவெடுத்து விட முடியும்? எனவே, குழந்தை யாருடன் வளர வேண்டும் என்பதில் எந்த கட்டுப்பாடும் இருக்கமுடியாது; இருக்கவும் கூடாது. தேவை எனில், பெற்றோர் பிரிந்திருக்கும் வேலையில் கண்டிப்பாய் (தாய்ப்பால் அருந்துவதை தவிர்த்த) குழந்தை...

தந்தையுடன் தாராளமாய் வளரலாம்!!!

தமிழின் பெருமை...



தமிழின் பெருமை...
டுத்தாண்டு துவங்கும் நாளில்ல!
ண்டுகள் தழைக்கும் நூலிலுண்டு!! - மேலும்
கழ்ச்சி மறந்து, வளரும்
கை குணம் கொண்டு,
ள்ளம் உவந்து - நன்மை
ருக்கு பயக்க - உறுதியாய்
வரும் தமிழனின் ஒற்றுமையை
கலைவனின் கட்டை விரலை 
ந்து விரல்களிலிருந்து துண்டித்த
ற்றன் செயல் போலல்லாது
ஒளவையின் "ஆத்திச்சூடி" போல்
தாய் வாழ்வதிலும் உள்ளது!!!

தாயுமானவன்...


பத்து மாதம் தாய்போல்
சுமத்தலியலாது கருவில்; மாறாய்
பின்வரும் காலம் முழுதும்
சுமப்பர், கருவுக்கு வெளியே!
வாழ்க்கை முழுதும் சுமப்பதால்
தந்தை ஆனவன் - தாயுமானவன்!!

காதலும், காமமும்...



காதலும், காமமும்
கலக்கும் கலவையில்
இருக்கிறது; இல்வாழ்க்கையின்
இனிமையும் இரகசியமும்!
காதல் மிகுந்தாலோ,
காமம் மிகுந்தாலோ,
இல்லத்தில் இடம்பெறுவது
இம்சையும் இழிநிலையும்!!

இல்லறமும் துறவறமும்...




இல்லறத்திலும் அவ்வப்போது
துறவறம் ஆட்கொண்டால்
நிறைபெறும் இல்வாழ்க்கை!!!

நதிநீர்...


எதிர்வரும் தடைகள்
எதையும் எதிர்த்து
இழந்ததை எண்ணி
இடிந்து விடாது,
எஞ்சிய நீருடன்
எழுச்சி கொண்டு;
கடல் சேர்ந்து
கடமை முடிக்கும்
நதிநீர் போல்
நாமும் தடைகள்
விரட்டி முடிப்போம்
வாழ்வெனும் கடமையை!!!

கனவு கா(ணீ/ணா)தீர்...




கனவு காணீர்...
கனவு-மட்டுமே காணாதீர்!
கூடட்டும் முயர்ச்சியும்
கடின உழைப்பும்!!
வாழ்க்கை இருக்கும்
கலையாத கோலமாய்!!!

ஞாயிறு, ஏப்ரல் 15, 2012

என்ன மனுசன்டா நீ???...

(ஊடகத்தில் வெளிவந்த செய்தியை முழுதும் உண்மை என்று நம்பி, 
அதன் அடிப்படையில் இத்தலையங்கம் எழுதப்பட்டுள்ளது)

    தலைப்பைப் படித்தவுடனே, கோபமாய்/உணர்ச்சி பொங்க எழுதப்போகிறேன் என்பது புரிந்திருக்கும். ஆம், சில தினங்களுக்கு முன் நாளிதழில் வெளிவந்த "மனதைக் குலைக்கும்" ஓர் செய்தியைப் படித்து அதீத கோபத்துடன் எழுந்ததே இக்கேள்வி! ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமான செய்தி காயப்படுத்தும்! சஞ்சலப்படுத்தும்! கோபமூட்டும்! என்னை, இச்செய்தி மிகவும் பாத்தித்தது. இம்மாதிரி செய்ய ஒரு மனிதனால் எப்படி முடிந்தது? அவனுக்கு "மனசாட்சி" என்பது துளியளவும் இல்லையா?? என ஆதங்கப்பட்டு; என்னுள் நானே கலந்தாலோசனை செய்த போது எழுந்த கேள்வி தான் "என்ன மனுசன்டா நீ???". இவ்விசயம் நான் இதற்கு முன் எழுதிய சில தலையங்கங்களுடன் தொடர்புடையதே! சரி, என்ன விசயமென்று சொல்கிறேன்; "மூன்று மாத பெண்" குழந்தையை அவள் தந்தையேக் கொடுமைப்படுத்தி, அதன் விளைவாய் அக்குழந்தை கொடூரமாய் கொல்லப்பட்டதை படித்ததும் இந்த எண்ணமும், கேள்வியும் தோன்றியது.

      இச்செயலை, எக்காரணம் கொண்டு விளக்கினாலும் நியாயப்படுத்த முடியாது! ஏனெனில், அவனை எவ்விதத்திலும்; மூன்று மாத வயதுடைய பெண் குழந்தை பாதித்திருக்க வாய்ப்பேயில்லை!அச்செய்தியைப் படிக்கும்போதே கண்கள் கலங்கிவிட்டன; முழுதாய் படிக்கவே இயலவில்லை; ஏதோ, என் மிக நெருங்கிய உறவுக்கு நேர்ந்ததாய் ஓர் வேதனை! பெருவலி! பெருங்கோபம்! அச்செய்தியை முழுமையாய் விவரிக்கப் போவதில்லை; அதை விவரிக்கும் மனவலிமை இல்லை. அக்குழந்தையைப் பெற்ற அந்த "சகோதரியின்" மனம் என்ன வேதனை அடைந்திருக்கும்?  பிறந்து, இறப்பது கொடுமை! இறந்து பிறப்பது ஓர் புதுக்கவிதையில் குறிப்பிட்டது போல் "மாகொடுமை". ஆனால், பிறந்து சரியாய் பார்க்கும் திறனை அல்லது கேட்கும் திறனை கூட பெறாத ஓர் சிசு அவள் தந்தையின் சித்திரவதைக்கு உள்ளாகிக் கொல்லப்படுவதை எப்படி விவரிக்க முடியும்? இதனை அந்த சகோதரி எப்படி கடந்து - மீண்டு வரப்போகிறார்?

        "ஏன் பெண் பிள்ளையை பெற்றாய்?" என அக்கயவன், அச்சகோதரியை அடித்தானாம்; எந்த பரிமாண வளர்ச்சிக் கட்டத்தில் இருக்கிறான் இன்னும்? இவனைப் போல் ஒரு சில கயவர்களால் தான், பெண்ணைப் பாதுகாக்க "இன்னமும்" கடுமையான சட்டங்கள் இருக்கின்றன. சமீபத்திய தலையங்கமான "இன்றுமா, இல்லத்தரசிகள் இளைத்தவர்கள்?" என்பதில் குறிப்பிட்டவாறு, இந்த சட்டங்கள் தவறான முறையில் பயன்படுவது மறுப்பதற்கில்லை! ஆனால், இம்மாதிரி துயரம் கொ(ள்ளு/ல்லு)ம் சகோதரிகள் இன்னும் இருக்கிறார்கள் என்பதற்கு இந்நிகழ்வு ஓர் சாட்சி.  அவனைப் பெற்றெடுக்க ஓர் பெண் வேண்டும்! அவன் "உடல் திமிருக்கு" ஓர் பெண் வேண்டும்!! ஆனால், அவனுக்கு பெண் குழந்தை வேண்டாமாம்!? இவனை ஏன் "என்ன மனுசன்டா நீ???" என்று கோபப்பட்டு கேட்கக்கூடாது? அச்செய்தியின் வாசகர்கள் "பின்னூட்டம்" முழுதும் படித்தறிந்தேன். கிட்டத்திட்ட அணைத்து பின்னூட்டங்களும் அவனைத் "தூக்கில்" இடவேண்டும்...

         என்றே குறிப்பிட்டது! அச்செய்தியின் தொடர்ச்சியாய் வந்த செய்தியில், அச்சகோதரி கூட அதே கருத்தை தெரிவித்ததாய் அறிந்தேன். இத்தண்டனையை (அச்சகோதரி சம்மதத்துடன்) வேறு விதமாய் கொடுக்கவேண்டும் என எண்ணுகிறேன். தூக்கிலிட்டு விட்டால் - தூக்கிலடப்படும் அச்சில நிமிடத்துளிகளுக்கு மட்டுமே; வேதனையோ அல்லது அச்செயலைப் பற்றிய சிந்தனையோ  இருக்கும்! அவனை வாழ விடவேண்டும்; ஆனால், அவன் அனுதினமும் அந்த செயலின் வீரியத்தை உணரும் படி தண்டிக்க வேண்டும் என்பதே என் முடிவு! "மரண தண்டனை" என்பது ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்கு இதுவும் ஓர் காரணமாய் இருக்கக்கூடும். தண்டனை என்பது, ஒருவர் செய்யும் தவறை; அவரும்/அவர் போன்றோரும் உணரச் செய்யும் விதமாய் இருத்திடல் வேண்டும். முதலில், அவன் "மனநிலை" பாதிக்கப்பட்டவனா? என்பதைச் சரிபார்க்கவேண்டும்! ஏனெனில்; மனநிலை பாதிக்கப்பட்டவனைத் தண்டித்தால்,  அவனுக்குத் தண்டனையின் நோக்கம் புரியாது!

       அவ்வாறிருப்பின், முதலில் அவனை குணப்படுத்தி; குற்றத்தை உணரவைத்து பின் அவனை தண்டிக்கவேண்டும். குற்றம் செய்தவன், தண்டனையை உணராதபோது தண்டனையே பயனற்றதாகி விடும்!  என்னளவில், இக்கொடூரக் கொலை செய்தவன் "மரண தண்டனை" அனுபவிக்கக் கூடாது! மாறாய், அவனை தொடர்ச்சியாய் மரணத்தின் முந்தைய நிலை வரை துன்புறுத்தி; பின் உயிர்ப்பித்து, மீண்டும் அவனை மரணத்தின் எல்லை வரை கொண்டு செல்ல வேண்டும். அதாவது, அவன் மரணத்தை உணரவேண்டும்; ஆனால், மரணிக்கக் கூடாது! இது, மிகக் கொடிய தண்டனையென எண்ணக்கூடும்! ஆனால், இத்தகைய தண்டனைத் தவறு செய்தவர் மட்டுமல்ல - வேறெவரும் கூட அப்படியொரு தவறைச் செய்யத் துணியாத பயத்தை அளிக்கும்! மேலும், இந்த தண்டனையை எல்லோரும் பார்க்கும் படி கூட செய்யலாம். "இது மனித நேயமல்ல!" போன்ற பல வாதங்களை பலர் வைக்கக்கூடும். ஆனால், இவனைப் போல் தவறு செய்பவர்கள்...

         தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். இதைத் தடுக்க வேறு வழி இருப்பதாய் எனக்கு தெரியவில்லை! இவ்வலைப்பதிவின் முதல் தலையங்கத்தில், மருத்துவர் ஒருவர் கருவிலிருந்த என் மகளின் காலை சோதனைச் செய்யத் தட்டியது  எந்த அளவிற்கு என்னைத் துயரப்படுத்தியது என எழுதி இருந்தேன். அந்த அளவிற்கு என் மகள் மேல் மட்டுமல்ல; எல்லோர் மீதும் எனக்கு உணர்ச்சி சார்ந்த பற்று உண்டு. அதனால் தான், நான் மேற்கூறிய அளவுக்குக் கொடிய தண்டனையை பரிந்துரைக்க செய்திருக்கிறேன்! இதில் தவறேதும் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை; "பெண் சிசுக்கொலை" குறைந்து வருகிறது என சமீபத்திய தலையங்கத்தில் கூட குறிப்பிட்டிருந்தேன்; அது உண்மையும் கூட. இம்மாதிரியான கொடூரக் கொலைகள், சிசுக்கொலையை விட பன்மடங்கு அதீதமானது! "தொட்டிலை" ஆட்டிவிடுவது போல் குழந்தையைச் சுவற்றில் மோதுவான் என்று அந்த தாய் கூறியதைப் படித்த போது, என்னையே சுவற்றில் மோதியது போல் உணர்ந்தேன்.

         மேலும், அச்சகோதரியை அடித்து வரதட்சனை கொடுமை வேறு செய்திருக்கிறான். அவனின் தவறுகள்/ குற்றங்கள் உறுதி செய்யப்பட்டதும்; மேற்கூறிய வண்ணம் அவனை தண்டிக்கவேண்டும். நான் சொல்வதால், உடனே அவ்வாறு தண்டித்துவிட மாட்டார்கள் என்பது எனக்கு தெளிவாய் தெரியும். நான் அடிக்கடி குறிப்பிடுவது போல் சட்டங்களும்; அதையொத்தத் தண்டனைகளும் சமூகத்தின் பிரதிபலிப்பே! வரதட்சனைக் கொடுமை சட்டத்தை தவறாய் கையாள்வதைக் குறிப்பிட்டு, அதில் மாற்றம் வரவேண்டும் என்றது போல், இம்மாதிரியானக் கயவர்களை தண்டிக்கும் சட்டத்திலும் மாற்றம் கொண்டு வரவேண்டியது அவசியம். இத்தலையங்கத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவேண்டும்! அப்போது தான், இது பெருமளவில் பரவும்! மொழிபெயர்ப்பு, இதே உணர்வுகளை அளிக்குமா? என்பது சந்தேகமே. இருப்பினும், இந்ததண்டனையின் தன்மையைப் பரிமாற்றம் செய்வதற்காகவாது; அதை விரைவில் செய்யவேண்டும்!

அந்த பிஞ்சு குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும்!!!

- விழியப்பன் எனும் இளங்கோவன் இளமுருகு
{www.vizhiyappan.blogspot.com} 

தமிழ் அடுத்தாண்டு வாழ்த்து...



     இவ்வலைப்பதிவை பின்பற்றும் அன்பர்களுக்கும் மற்ற தமிழ் அன்பர்களுக்கும் என்னுடைய உளம் கனிந்த "தமிழ் அடுத்தாண்டு வாழ்த்துக்கள்". எல்லோரும், எல்லா வளமும் பெற்று இந்த ஆண்டு முழுதும் (மட்டுமல்லாது; எப்போதும்) இன்பமுடன் இருக்க, அதற்கான முயற்சிகளும் - செய்கைகளும் சரியாய் அமைய, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இந்த ஆண்டு துவங்கும் முதல் நாள் மட்டுமல்ல; எல்லா நாட்களிலும் இதே புத்துணர்ச்சியும், உணர்வும் - உறவுகள் துவங்கி அனைவர் இடத்திலும் தொடர்ந்திட என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள். என்னுடைய நெருங்கிய வட்டத்திற்கு தெரியும்; நான் பல ஆண்டுகளாய் அடுத்து வரும் ஆண்டை "புத்தாண்டு" என்று அழைப்பதில்லை என்பது. புதியதாய், எந்த ஆண்டிலும் ஏதும் இல்லை என்பதே என் எண்ணம். நாம் எப்படி கடந்த ஆண்டுகளை "பழைய ஆண்டு" என்று அழைப்பதில்லையோ, அவ்வாரே வருகிற ஆண்டையும் "புத்தாண்டு" என்று அழைப்பதில் எந்த அர்த்தமும் இருப்பதாய் எனக்கு படவில்லை. வருகிற எந்த ஆண்டிலும், நாம் முன்பே பழகிய நாட்கள் (தேதிகள்) தான் வரப்போகின்றன; அனுபவம் கண்டிப்பாய் மாறுபடும்; அதற்காய் இதை "புத்தாண்டு" என்றழைக்கவேண்டியதில்லை. அப்படி பார்ப்பின், ஒவ்வொரு "நிமிடத்துளி" கூட புதியது தான். மேலும் வரப்போகிற நாளுக்கான வேலையை முன் கூட்டியே முடிவு செய்யும் நாம், அதை ஏன் புதியதாய் பார்க்கவேண்டும். இந்த எண்ணம் மாறினாலேயே, ஆண்டின் துவக்க நாளில் தோன்றும் ஒழுக்கமும், புத்துணர்ச்சியும் என்றென்றும் தொடரும் என்று தோன்றுகிறது.

        இந்த மகிழ்ச்சியான நேரத்தில், "ஆண்டு துவக்கத்தை" விளம்பர நோக்காய் பார்க்கும் சில அரசியல்வாதிகள் பற்றியும் குறிப்பிடுதல் அவசியம் என்று படுகிறது. தமிழில் துவங்கும் ஆண்டு மட்டுமல்ல; வேறு எந்த மொழி அல்லது மதம் சார்ந்த ஆண்டும் துவங்குவது, அம்மொழியில் உள்ள படி, முதல் மாதத்தின் முதல் நாள் தான். இது தான் காலம் காலமாய் பின்பற்றப்பட்டு வரும் ஒன்று. இதை ஏனோ, தன்னை "பகுத்தறிவு வாதி" என்று (தானே)அழைத்துக்கொள்ளும் ஓர் அரசியல்வாதி "பகுத்துணராது" தை மாதம் முதல் தேதியை ஆண்டின் துவக்கமாய் அறிவித்து மிகப்பெரிய குழப்பத்தை உருவாக்கினார். அதை சட்டமாய் அறிவித்து, அனைவரையும் அவ்வாறே பழகவும் கட்டளையிட்டார். அதற்கு அவர் கூறிய காரணம், எப்போதும் போல் - தமிழும், தமிழனும். அதாவது, தமிழர் திருநாள் தான் ஆண்டின் துவக்கமாய் வேண்டுமாம். எவர் கேட்பது? தமிழ் என்று சொல்லிக்கொண்டு இது மாதிரி செய்யப்படும்  தேவையில்லாத செய்கைகளை?? நமக்கு முன் எத்தனையோ சந்ததிகள் தொடர்ந்து செய்து வந்த ஒரு விசயத்தை மாற்றும் அதிகாரத்தை, யார் அவருக்கு கொடுத்தது??? இதை, அந்த கட்சியின் பிரதான எதிர்கட்சி மட்டும் எதிர்த்தது! பெரும்பாலோனார்களால் அதை எதிர்க்க முடியவில்லை; அல்லது எதிர்க்க அனுமதிக்கப்படவில்லை. ஏன் இந்த விளம்பர எண்ணமும், குழப்பமும்? இதை பெரும்பாலோனோர் பின்பற்றவில்லை என்பது உண்மை தான்; இருப்பினும், ஏன் இந்த தேவை இல்லாத மாற்றம்??

           இந்த ஆண்டு, ஆட்சிக்கு வந்த அந்த பிரதான எதிர்கட்சி அந்த சட்டத்தை மாற்றி மீண்டும் முதல் மாத முதல் நாளான, "சித்திரை முதல் நாளை" ஆண்டின் துவக்கம் என்று அறிவித்தார். முன்பு ஓர் அரசியல்வாதி தவறான மாற்றம் செய்தபோது குரல் கொடுக்காதவர்கள் கூட, இப்போது ஏன் மீண்டும் மாற்றி அமைக்கவேண்டும் என்று வாதிடுகின்றனர். பின் மாற்றாமல் என்ன செய்வது! ஏதும் செய்ய இயலாத என்னைப்போன்றோர் பலரின் எண்ணத்தை எவர் எப்படி நிறைவேற்றுவது? இவ்விரு கட்சிகளும், பல்வேறு விசயங்களில் இது மாதிரி ஆட்சி மாற்றம் வந்ததும், முந்தைய அரசு செய்ததை மாற்றுவதை தொடர்ந்து செய்து வருவது மறுக்கமுடியாத உண்மை! ஆனால், தமிழ் ஆண்டு துவக்கத்தை மற்ற விசயங்களைப் போல், அவற்றுடன் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது; இது நம்முடைய உணர்வு, பழக்கம், பாரம்பரியம்!!! இந்த நல்ல சட்ட மாற்றத்தை அரசியல் சாயம் கொண்டு பார்ப்பது நிச்சயம் தவறு! என்னைப்போல் அரசியல் சாராத ஒருவருக்கு இதன் உண்மை நிச்சயம் தெரியும். மேலும், இதை மீண்டும் மாற்றியமைத்த அரசியல் வாதி "சித்திரை முதல் நாள்" தான் ஆண்டின் முதல் துவக்கம் என்பதை வரலாறு மற்றும் தமிழ்க் காவியங்கள் கொண்டு சான்றுகள் கொடுத்து வேறு விளக்கியுள்ளார். முதலில், முதல் சட்ட மாற்றமே தேவை இல்லாத ஒன்று; அதற்கு இம்மாதிரி சான்றுகள் காட்டி வேறு, ஒருவர் விளக்க வேண்டி இருக்கிறது. எனவே, எல்லா மொழிகளிலும் மதங்களிலும் இருப்பது போல் தமிழ் ஆண்டும், முதல் மாதம் முதல் நாள் துவங்குவது தான் சிறந்தது; அது தான் நியாயமும் கூட. எனவே,

சித்திரை முதல் நாளே, ஆண்டின் துவக்க நாளே!!!                       

சித்திரைத் திருநாள் வாழ்த்து...



இனிய இந்நன்னாளில் 
இனிதாய் இன்பமாய்
இயல்பாய் இருக்க- அவை
இருதியற்றும் இருக்க;
இறைவனை இறைஞ்சும்
இணையில்லா.... இளங்கோ

உறவுகளைக் கொள்(ல்)வதா?...



உறவுகளைக் கொல்வதால் - மகிழ்ச்சி
வெறுமனே இரு(க்)கும்; மாறாய்
உறவுகளைக் கொள்வதால் - மகிழ்ச்சி
வரையறையற்று பெருகும்!!!

காதலின் அதிசயம்...



ஒருதலைக்காதல்...

திருமணத்திற்கு முன் மட்டுமல்ல
திருமணத்திற்கு பின்னும் சாத்தியம்
முன்னதில் - இழப்பது காதல்(மட்டும்)
பின்னதில் - இழப்பது வாழ்க்கை(முழுதும்)!!!

சமரசம்...



சமரசம் இன்றேல்...

குடும்பத்தில் இல்லை நவரசம்!
உறவுகளிடம் இல்லை பழரசம்!!
வாழ்க்கையிலே இல்லை பரவசம்!!!

பூவும் - பூவையரும்...



பூவும் - பூவையரும்
ஓர் ஒப்பீடு...

மொட்டு         - குழந்தை
அரும்பு          - மழலைப்பருவம்
மலர்தல்         - கன்னிப்பருவம்
மலர்ந்தது      - முதிர்கன்னி
இதழுதிர்தல் - குடும்பத்தலைவி
வாடிய பின்    - வாழ்ந்து முடித்த(வாழ்க்கையிழந்த) பெண்!!!

ஞாயிறு, ஏப்ரல் 08, 2012

இறைவழிபாட்டில் நேர விரயம் தேவையா?...



          ஏழு வருடங்களுக்கு பிறகு, இந்த வருடம் மாலை அணிந்து கடந்த டிசம்பர் 2011 இறுதியில் சபரி மலைக்கு சென்றிருந்தேன். எப்போதும் போல் அல்லாமல், சிறுவழிப் பாதியிலேயே சென்றேன்; நான் ஒரு மாத கால விடுப்பில்  இந்தியா சென்றிருந்தாதால் - பெருவழிப் பாதையில் சென்று நேரத்தை வீணாக ஆக்கவேண்டாம் என்று எண்ணினேன். ஆனால், கால விரயம் வேறு வழியில் வந்தது; அதுவும் ஒரு நாளுக்கு மேல் வீணாக ஆகிவிட்டது; உடன் என்னுள் ஓர் கேள்வி எழுந்தது. அது - இவ்வளவு நேரம் செலவிட்டு (குறிப்பிட்ட)கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடவேண்டுமா? என்பது தான். இந்த கேள்வி எழுந்தவுடன், என்னை நானே பலமுறை கேள்வி கேட்க ஆரம்பித்தேன். திரும்ப திரும்ப கேட்டதன் விளைவாயும், எனக்கு நிகழ்ந்த இரண்டு அனுபவங்களின் வாயிலாயும்  நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன். அது என்ன முடிவு என்பதை அறியும் முன் எனக்கு நிகழ்ந்த அனுபவத்தை விளக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த வருடம் சபரிமலை செல்லவே பெரும்பிரச்சனையான சூழல் உருவானது - எனக்கு மட்டுமல்ல; அத்தனை பக்தர்களுக்கும் தான். அது "முல்லைப் பெரியாறு" அணை சம்மந்தமாய் இரு மாநிலங்களுக்கு  இடையே உருவான பதட்டமான சூழல். அது என்னை மிகவும் பாதித்ததால் அது குறித்த என்னுடைய பார்வையை ஒரு கவிதையாய் சபரி மலை செல்லும் முன்பே எழுதியிருந்தேன். நாளுக்கு ஒரு செய்தியாய், ஊடகத்திற்கு ஒரு செய்தியாய், சென்று வந்த பக்தர்களும் ஆளுக்கு ஒரு அனுபவமாய் கூறினார்.

     செல்ல இயலுமா/ இயலாதா என்ற சந்தேகத்துடன் தான் இந்தியா கிளம்பினேன். பெரும்பிரச்சினை என்பது உறுதியானால், என் தாயை வணங்கிவிட்டு அவரிடமே மாலையை கழட்டிவிடுவது என்ற தீர்மானமும் கொண்டேன். என் தாய், எங்கள் ஊரில் அருகில் இருக்கும் ஐயப்பன் கோவிலுக்கு (சதாக்குப்பம் என்ற இடத்தில் உள்ளது) சென்று மாலையை கழட்டலாம் என்ற யோசனையை கூட கூறினார். சந்நிதானம் சென்று வரிசையில் நின்று காலதாமதம் ஏற்படும் என்பதால், இந்த வருடம் இணைதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வசதியின் மூலமாய் தேதியும் நேரத்தையும் பதிவு செய்து வைத்திருந்தோம். ஆனால், சரியாக அன்றைய தினம் பார்த்து, என் முந்தைய தலையங்கத்தில் குறிப்பிட்ட என் மகள் பள்ளியில் சேர்வதற்கான நேர்முகத் தேர்விற்கு அழைப்பு வந்திருந்தது. இரண்டு பெற்றோர்களும் இருக்கவேண்டும் என்பது அந்த பள்ளியின் கட்டாய விதி; மேலும், நான் ஊருக்கு சென்றிருந்தது முக்கியமாய் இந்த காரனத்திற்காய் தான். இது தெரிந்ததும், உடனடியாய் வேறொரு தேதிக்கு முன்பதிவு செய்ய முனைந்தபோது, முன்பதிவுகள் அனைத்தும்  முடிந்து போயிருந்தது. உடனே, என்னுடன் வருவதாய் ஒப்புக்கொண்டவர்களிடம் சூழலை விலக்கிவிட்டு, என்னால் அன்றைய தினத்தில் வரமுடியாது; என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறிவிட்டேன்; அவர்கள் என்னுடன் வருவதாய் கூறிவிட்டனர். இந்தியாவுக்கு சென்றபின் சூழலை கேட்டறிந்து, தெரிந்த ஓட்டுனர் ஒருவர் அளித்த உறுதியின் அடிப்படையில் அவரை அழைத்துக்கொண்டு நாங்கள் ஐந்து பெரியவர்களும் ஓர் சிறியவன் உட்பட ஆறு பேர் பயணத்தை துவங்கிவிட்டோம்.

       இந்த தடைகளை எல்லாம் தாண்டி சந்நிதானம் அடைந்து வரிசையில் நிற்க ஆரம்பித்தோம். சரியாய் மதியம் இரண்டரை மணியளவில் வரிசையில் நின்றோம்; ஏழு மணி நேரத்திற்கும் மேலாய் வரிசையில் நின்றும், வரிசை ஐந்நூறு மீட்டர் கூட நகரவில்லை. ஏழு மணி நேரத்தில், ஆறு மணி நேரம் இடைவிடாத கடுமையான மழை; அதிலும் மூன்று மணி நேரத்திற்கு மேலாய் மேற்கூரை எதுவும் இல்லாத வெட்டவெளியில் நின்றிருந்தோம். மழையும் நிற்கவில்லை; வரிசையும் நகரவில்லை. மழை காரணமாய், தரிசனம் பார்த்தவர்கள் கீழே இறங்கமுடியாத சூழல்; எங்கும் பக்தர்கள் கூட்டம். அதனால், வரிசை நகரவில்லை. கூட்டம் அதிகமானதால், நிற்பது கூட சிரமாமனது - மூச்சு விடக் கூட கடினமாய் இருந்தது. நான், தரிசனம் பார்க்கப்போவதில்லை, திரும்ப வாகனத்திற்கு செல்வதாய் கூறினேன். என்னுடன் வந்தவர்களும் அதையே ஆமோதித்து, என்னுடன் வருவதாய் கிளம்பினார்கள். நான் வரும் வழியில், என்னால் முடிந்த அளவிற்கு எல்லோரிடமும் நிகழ்வை விளக்கி, அந்த மாநில மக்கள் தரும் தொல்லைகளையையும் தாண்டி நாம் ஏன் இங்கு வரவேண்டும்? தமிழ்நாட்டிலே ஏராளமான் ஐயப்பன் கோவில்கள் இருக்கு! அதில் ஏதாவது ஒரு கோவிலுக்கு செல்லலாம்!! எல்லோரும் ஐயப்பன் தான், என்றேன்!!! அநேகமாய், அனைவரும் அதை ஆமோதித்தனர். ஒரு குறிப்பிட்ட சதவிகித்தத்தினர் எங்களுடனே திரும்பவும் செய்துவிட்டனர். இதற்கு இடையில், எங்களுடன் வந்த சிறுவனை அவன் தந்தையுடன் குழந்தைகளுக்கான சிறப்பு வழியில் அனுப்பிவிட்டோம்.

         திரும்ப வந்துகொண்டிருந்த வழியில், அம்மாநிலத்தை சேர்ந்த காவலர் ஒருவரை எனக்கு தெரிந்த ஒரு குறுக்குவழியை காண்பித்து, இப்போது அந்த வழியில் செல்லமுடியுமா என்று வினவினேன். அவர், ஏன் திரும்ப செல்லுகிறீர்கள் என்றார்! நான் விளக்கத்தை கூறினேன். உடனே, அவர் மிகவும் வற்புறுத்தி எங்களை முன்பதிவு செய்த வரிசையில் செல்லுமாறு கூறினார். நான் ஏற்கனவே இருந்த விரக்தியில் "இல்லை, நாங்கள் திரும்ப செல்கிறோம்" என்று எவ்வளவு சொல்லியும் கேளாமல், எங்களை மிகவும் வற்புறுத்தி அந்த வரிசையில் அனுப்பிவைத்துவிட்டார். அந்த நல்ல உள்ளத்திற்கு நன்றிகள் பல, இங்கே கூறிக்கொள்கிறேன். சந்நிதானம் அடைந்து சாமியை காண நுழைவாயிலை அடைந்த போது, சந்நிதானம் மூடப்பட்டுவிட்டது. திறக்க  இன்னும் மூன்று மணி நேரம் ஆகும் என்றுவிட்டனர்; நான், சரி மீண்டும் திரும்பி விடலாம் என்றேன். ஆனால், அவர்கள் இன்னும் மூன்று மணி நேரம் தானே என்றனர். சரி என்று காத்திருந்து தரிசனம் செய்துவிட்டு வாகனம் அருகே சுமார் காலை ஆறு மணியளவில் வந்தோம். வந்ததும், அடுத்த சோதனை! குழந்தையுடன் சென்றவர் இன்னமும் வரவில்லை; மீண்டும் ஆறு மணி நேரம் காத்திருந்தோம். சரி, அவரை விட்டு-விட்டு கிளம்புவது என்று முடிவெடுத்துவிட்டோம். கிளம்பும்போது, சாதுர்யமாய் எங்கள் ஓட்டுனர் அங்கிருந்த ஓட்டுனர் ஒருவரிடம் அவர் வந்தால், எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் என்று கூறியிருந்தார். அதன்படியே, பின்னால் வந்த ஒரு வாகனத்தில் அனுப்பிவைத்தார்; அருகில் இருந்த நகரத்தில் இன்னும் மூன்று மணி நேரம் காத்திருந்து அவரை அழைத்துக்கொண்டு வந்தோம்.

    இதற்கு இடையில், நாங்கள் கிளம்பிய அன்றிரவு தான் "தானே" புயலின் கோரத்தாண்டவம் நிகழ்ந்தது. அதன் தாக்கம் அதிகமிருந்த ஒரு நகரமான புதுவையில் தான் என்னவளும், என் மகளும் இருக்கிறார்கள். என் அக்கா கடலூரின் அருகில் வசிக்கிறார். வந்திருந்த மற்றவரின் குடும்பங்கள் சென்னையில் உள்ளது. நாங்கள், தரிசனம் முடித்து கிளம்பியவுடன், அலைபேசியில் தொடர்பு கொண்டால் என்னவள் நடந்தது அனைத்தும் சொல்லி விளக்குகிறாள். என்னுடைய விடுப்பில் மூன்று நாட்கள் வீணானது மட்டுமல்ல; அவர்களுடன் இந்த தருணத்தில் இருக்கமுடியவில்லையே என்ற ஆற்றாமை! அதிலும், ஆங்கில "அடுத்தாண்டு" பிறக்கும் வேலையில் (எனக்கு)பெயர் தெரியாத ஒரு ஊரை தாண்டி வந்துகொண்டிருக்கிறோம். "என்ன வாழ்க்கை இது?" என்று தோன்றியது! இதற்கு இடையில், வரும் வழியில், அலைபேசியில் பேசும் போது என் மகள் அவளின் மழலை மொழியில் அவள் ஆசையாய் வாங்கிய "கிறிஸ்துமஸ்" நட்சத்திர விளக்கு புயலால் அறுந்து சென்று விட்டதை ஆதங்கமாய் கூறினாள். எனக்கு சிரிப்பும் வருகிறது; அவளின் வருத்தமும் புரிகிறது. இந்த புயல், ஒரு சிறுகுழந்தையை கூட பாதித்திருக்கிறதே என்று எண்ணி பார்க்கிறேன்; அவளை பொறுத்த வரையில், அவளுக்கு அது ஓர் பேரிழப்பு தானே. எல்லாம் முடிந்து, அவர்களை சென்று சேர்ந்த பின் என்னை சேர்ந்தது "சளியும் - இருமலும்"; இரண்டு வாரங்கள் மிகவும் சிரமப்பட்டுவிட்டேன். கிட்டத்திட்ட "பன்னிரண்டு" மணி நேரம் மழையில், அந்த காத்திருத்தலின் காரணமாய், நின்றதன் விளைவு. 

        சில வாரங்களுக்கு முன் காத்திருப்பு பற்றி ஓர் அழுத்தமான புதுக்கவிதை வெளியிட, இந்த நிகழ்ச்சி முக்கிய காரணம். சபரிமலை நிகழ்ச்சி நடந்த மூன்று வாரத்தில் திருப்பதி பல்கலைக்கழகத்தில் ஒரு உரை நிகழ்த்துவதற்காய் சென்றிருந்தேன். அப்போது, திருமலை சென்றபோது தரிசனத்திற்காய் ஆறு மணி நேரம் விரயமானது - அதுவும் அதிக பணம் கொடுத்து "சிறப்பு வழியில்" சென்றும்! இவ்விரண்டு நிகழ்வுக்கு பின் தான் அந்த கேள்வி எழுந்தது! இறைவழிப்பட்டிற்கு இவ்வளவு நேர விரயம் அவசியம் தானா? இந்த நேர விரயம் ஒரு பிரசித்திப் பெற்ற கோவிலுக்கு செல்லவேண்டும் என்ற என் தவறான கண்ணோட்டத்தால் விளைந்தது. அப்படி ஒரு கோவிலுக்கு சென்றால், அதிக பக்தர்கள் காரணமாயும் அல்லது மேற்கூறிய இயற்கை சீற்றம் காரணமாயும், நேர விரயமாவதை தடுக்க முடியாது. நான் செய்ய வேண்டியது, அதிகம் கவனிக்கப்படாத என்னுடைய குலதெய்வம் போன்ற அமைதியான கோவிலுக்கு செல்லவேண்டும் என்று புரிந்தது. அத்தனை மணி நேரம் விரயம் செய்து, கடவுளை அமைதியாய் அருகிருந்து சில மணித்துளிகள் அல்ல; சில "நிமிடத்துளிகள்" கூட காணமுடியாத வேதனையில் இதயம் கனக்காது. சிலமணித்துளிகள் விரயம் செய்து, இறைவனை (பல)மணிக்கணக்கில் கூட தரிசிக்க முடியும். இதுபோல் அனைவரும் செய்யின், சில கோவில்கள் மட்டும் உயர்வாய் படாது; மேலும், பல கோவில்கள் பக்தர்களற்று வெறிச்சோடி இருக்காது.

     இங்கே ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். என்னுடைய தாய், எங்கள் நிலத்தில் ஒரு "புற்றுக்கோவில்" (திருப்பாலப்பந்தல் என்ற ஊரில்) உருவாக்கி இருக்கிறார்; எங்கள் ஊரிலிருந்தும், சுற்றும் உள்ள ஊர்களில் இருந்தும் பலர் அங்கு சென்று வழிபடுகிறார்கள். பொங்கலிட்டு சாமிக்கு படைக்கிறார்கள். என் தாய் எவ்வளவு வற்புறுத்தியும், இது வரை நானே அங்கு சென்று வணங்கியதில்லை; அவர் வற்புறுத்தலுக்காய் தான் சிலமுறை சென்றிருக்கிறேன் - அதுவும் சரியாய் வணங்கியது இல்லை. ஏனோ! இந்த தலையங்கத்தை முடிக்கும் போது அந்த கோவிலுக்கு மனமுவந்து சென்று வழிபட வேண்டும் என்று தோன்றியது. "அருகில் இருக்கும் ஒன்றின் அருமை நமக்கு தெரியாது" என்பது காலகாலமாய் சொல்லப்பட்டு வரப்படும் ஒன்று! அதை நாம் உணராது, நம்மை வற்புறுத்தி - காலவிரயம் செய்து, பிரசித்திப் பெற்ற கோவிலுக்கு சென்றால் தான், கேட்டது கிடைக்கும்/ நடக்கும் என்று நாம் தவறுதலாய் உணர்ந்திருப்பதாய் அல்லது உணர்த்தப்பட்டிருப்பதாய் பட்டது. அதற்காய், இறைவழிபாடே வேண்டாம் - அது உண்மையில்லை, என்ற முடிவிற்கு தவறுதலாய் நான் செல்ல விரும்பவில்லை அல்லது கூற வரவில்லை. மாறாய், நேரவிரயமில்லாத அமைதியான வழியில் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்று திடமாய் நம்புகிறேன். அதற்கு நம் அருகில் இருக்கும் ஒரு சிறிய கோவில் கூட போதுமானது. கண்டிப்பாய், இதை உணர்ந்து இத்தலையங்கம் எழுத தான் எனக்கு இந்த நிகழ்வுகள் நடந்ததாய் எண்ணி - மனநிறைவுடன் முடிக்கிறேன்.


கடவுள் அனைவரும் ஒன்றென்றால், கோவிலும் ஒன்று தானே!!!

வாழ்வோம் உண்மையாய்...



விருப்பு - வெறுப்பு
உறவு - பகை
கோபம் - சாந்தம்
சேர்தல் - பிரிதல்
முதல்...
பிறப்பு உட்பட
நிரந்தரமில்லை ஏதும்!
ஆனால்...
இறப்பு நிச்சயம்!!
ஆதலால்...
வாழ்வோம் உண்மையாய்!!!

ஓட்டமும் நடத்தலும்...



ஓட்டத்தையும் நடத்தலையும் விட்டுவிட்டு
ஆட்டத்தை ஆரம்பித்த பின்தான்
ஆட்டுவிக்க ஆரம்பித்தது - நோய்;
விட்டதே மருந்தாயான, விந்தையென்ன? 

கனவு...



கனவு...
சாதனையின் விதை
வேதனையில் கவிதை
விதையோ, கவிதையோ
விருட்சமாவதில் இருக்கிறது
கனவின் வீரியம்!!!

அழிச்சாட்டியம்...



யானையை தொற்றினாலோ
மனிதனை பற்றினாலோ
மதமெனும் மமதையின்
முதன்மைப்பணி அழிச்சாட்டியமே!!!

இயற்கையை சிதைப்பதால்...



இயற்கையை சிதைப்பதால் - பூமித்தாயின்...

அழுகை             - ஆழ்குழாய் கிணற்றின் நீர்
கோபம்              - கட்டிடங்கள் குலுங்கும் நிலநடுக்கம்
ருத்ரதாண்டவம் - பூகம்பமும் அதைசார்ந்த "சுனாமி"யும்

சிதைப்பது இன்னமும் தொடர்ந்தால்
உலகம் அழிவது நிச்சயம்!!!