ஞாயிறு, டிசம்பர் 15, 2013

நான் ஏன் எழுதுகிறேன்???
        என் நண்பர் ஒருவர் சமீபத்தில் "அண்ணா! உங்கள் எழுத்து போரடிக்குது!!" என்றார். நாங்கள் பலதும் விவாதித்தோம்; (எனக்கு புரிந்த அளவில்)அவருடைய குற்றச்சாட்டு "என்னுடைய  பதிவில் எந்த முடிவும் இல்லை; அது ஒருதலையாய் இருக்கிறது" என்பனவே! நானும், என்னுடைய எழுத்து முறை பற்றி என்னப்பன் குறிப்பிட்டதை அவருக்கு நினைவூட்டினேன்; அதே "எழுத்துச்-சித்தர் பாலகுமாரன்" தாக்கம்-தான் "இன்னவென்ற முடிவை" நான் சொல்லாமல் இருக்க காரணம். நான் எழுதி இருக்கும் பல தலையங்களுக்கு "இதுதான் முடிவென்பதே, இல்லை!" என்பது எனக்கு தெரியும். நான் எனக்கு தெரிந்த நியாயங்களை (என் பக்கத்து நியாயம் அல்ல; எனக்கு தெரிந்த நியாயம்!) அடிப்படையாய் கொண்டு தான் எல்லாம் எழுதுகிறேன்; எனக்கு அந்த நியாயங்கள் பெரும்பான்மையில் இருக்கின்றன என்று தெரிந்தால் மட்டுமே - அது பற்றி எழுதிகிறேன். மற்றபடி, எனக்கு இது பற்றி தான் எழுதவேண்டும்; இவர் பற்றி தான் எழுதவேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லை. 

        அதனால் தான், பெண்ணியம் பற்றி யோசிக்க/அது பற்றிய செயல்கள் செய்யும்; அது பற்றி எழுதும் - அதே வேளையில், பெண்ணியம் தவறான பாதையில் செல்கிறது என்பதையும் என்னால் எழுத முடிகிறது. என் பெண்ணைப்பற்றி வானளாவ புகழும் அதே வேளையில் (4 வயதே ஆன)என்மகளின் வருங்கால வாழ்க்கை பற்றி யோசித்து "என் வருங்கால மருமகனிடம்" எப்படி இருக்கவேண்டும் என்று யோசிக்க முடிகிறது. "மரணத்திற்கு பிறகு, என்ன...???" என்ற கேள்வியே என்னுடைய எல்லா தேடல்களுக்கும்/ எல்லாவற்றின் மீதான புரிதல்களுக்கும் காரணம். இங்கே, என் விருப்பும்-வெறுப்பும் எதுவும் இல்லை; நான் உண்மையின்-விளிம்பில் நின்று எல்லாவற்றையும் ஆராய முற்படுகிறேன். அதனால், வழக்கமான சுவராஸ்யங்கள்  இல்லாதிருக்கக்கூடும். என் நண்பரால் என்ன குறைகிறது என்று சரியாய் கூற முடியவில்லை; அப்படி எதுவும் இருப்பின் - அவரோ! இல்லை வேறெவரோ!! எனக்கு சரியாய் விளக்கும் பட்சத்தில் - அதை நிவர்த்தி செய்துகொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

        என் நண்பருடனான விவாதத்திற்கு பின் - எனக்குள் நான் யோசிக்க ஆரம்பித்தேன்! என்னுள் "நான் ஏன் எழுதுகிறேன்?!" என்ற கேள்வி எழுந்தது. அந்த தருணத்தில் "எழுத்துச்-சித்தர்" அவர்களின் பேட்டி ஒன்றை காண நேர்ந்தது. ஆரம்பத்தில், இது போன்ற சூழலை எதிர்கொண்டபோது அவரும் அப்படி யோசித்தாய் கூறினார்; எழுதுவது அவருக்கு பிடித்து இருப்பதாயும், எழுதுவது அவரை தெளிவு-படுத்துவதாயும், நேர்மை-படுத்துவதாயும் குறிப்பிட்டு இருந்தார். உடனே, என் அடிமனதில் அதே போன்ற உணர்விருப்பது தெரிய வந்தது; மேலோட்டமாய் நான் அப்படி யோசித்ததுண்டு எனினும் - அவர்போல் ஆழ சென்று யோசிக்கவில்லை. உண்மை தான்! உண்மை பால் எனக்கு இருந்த நட்பு இன்னமும் நெருக்கமாய் ஆகி இருக்கிறது; எனது "உண்மையின் தரம்" வெகுவாய் உயர்ந்து இருக்கிறது. நான் கோபமாய் பார்த்த பல விசயங்களை/நிகழ்வுகளை நிதானமாய் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன்; பொய்யிலிருந்து "இன்னும் வெகு-தூரம்" போக ஆரம்பித்திருக்கிறேன்.

        அந்த நிதானம் - உறவு மற்றும் நட்பு சார்ந்த என்னுடைய புரிதலை அதிகமாக்கி இருக்கிறது; செயலில் ஓர்தெளிவு வர ஆரம்பித்து இருக்கிறது; மற்றவர்களின் குற்றச்சாட்டை "எடுத்தவுடன் அலட்சியம் செய்துவிட்டு பின்னர் யோசிப்பது போய்", உடனுக்குடன் குற்றச்சாட்டை ஊடுருவி பார்க்க ஆரம்பித்து இருக்கிறேன். அதில் உண்மை இருக்கும் பட்சத்தில், அந்த குறைகளை உடனடியாய் களைய-முற்படுகிறேன். "எழுத்துச்-சித்தர்" சொல்லியது போல் எழுதுவது ஓர் வரம்! பிடித்திருப்பதால் அதை செய்வதாய் சொன்னார்; எனக்கும் அப்படித்தான்! எழுதுவது எனக்கு பிடித்திருக்கிறது! எதை வேண்டுமானாலும், எழுதலாம்; ஆனால், அதில் உண்மை இருக்க வேண்டும் என்றார். ஆம்! என்னுடைய எழுத்துக்களில் - ஆரம்பம் முதல் உண்மை மட்டுமே இருக்கிறது; என்னுடைய எழுத்துக்கள் என்னை நேர்மையாய், உண்மையாய் இருக்க உதவுவது போல் - "வெகு சிலரையாவது" அப்படி இருக்க வைத்தால் போதுமானது; அதற்காகத் தான் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

       சூழ்நிலை மற்றும் சம்பந்தப்பட்டவர் நிலை கருதி, சில உண்மைகளை நான் (நேரடியாய்)எழுதாது போனதுண்டு!; ஆனால், பொய்யாய் எதுவும் எழுதியதில்லை/எழுதப்போவதுமில்லை! என்மகளுக்காய் "சற்றும்-பொய் கலக்காமல்" எழுதுகிறேன். இந்த 4 வயதில், இரண்டரை ஆண்டுகளுக்கும் மேல் நான் அவளுடன் இல்லை; என் குடும்பத்தை விட்டு 25 ஆண்டுகள் வெளியே வாழ்ந்து வருகிறேன்; அதில் 10 விழுக்காடு தான் எனினும், என்னை வெகுவாய் பாதித்திருப்பது என்மகளுடனான பிரிவு! "வாழ்க்கை என்னவென்று, அவள் ஆராயும்போது", நான் உயிர்த்திருப்பேனா??!! என்று தெரியவில்லை. என்னுடைய எழுத்துக்கள் இருக்கும்; அவள் என்னுடைய எழுத்துக்களை என்றேனும் ஓர்நாள் படிப்பாள் என்ற நம்பிக்கை நிறைந்திருக்கிறது. "என்னைவிட, வேறெவர்?! என்னைப் பற்றி" என்மகளிடம் - உண்மையாய் விளக்கிட முடியும்? வாழ்க்கையை புரிந்துகொள்ளும் வித்தையை விட, வேறென்ன என்மகளுக்கு "பெரிதாய்" கொடுத்திட முடியும்??? எனவே, வெகு நிச்சயமாய் நான் எழுதுவது...

நான் புரிந்திட்ட வாழ்வியலை; (மற்றவர்/என்ம)களுக்கும் விளக்கிடவே!!!

பின்குறிப்பு: எழுத்தில் - பெரிதாய் "பொய்யை" கலந்து விடமுடியாது; பேசும்போது பொய் சொல்லிவிட்டு, பிறகு இல்லை என்று சாதிக்கும் வாய்ப்பிருக்கிறது. அதுவும், பொய்யென்று பின்னால் நிரூபிக்கப்படலாம்; அல்லது அவரே ஒப்புக்கொள்ளலாம்! ஆனால், அதுவரை அந்த பொய் காக்கப்படும்; அதனால், பலரும் பலதும் அனுபவிக்கக்கூடும். எழுத்தில், அது சாத்தியமன்று; உண்மை இல்லை எனில், "தன் நெஞ்சே தன்னைச்சுடும்!"; நம் சுயத்தை இழப்பது நமக்கே தெரியும்;  "சுயத்தை உண்மையாய் நேசிப்போர் எவர்க்கும்" - மெய்யுணர்ந்தே சுயத்தை இழத்தல் சாத்தியமன்று! குறுகிய-காலத்திற்கு வேண்டுமானால், பொய்யாய் ஏதும் எழுதிக்கொண்டு இருக்கலாம்; ஒர்காலகட்டத்தில் அது தானாய் நின்றுவிடும். என்னுடைய எழுத்துக்கள் - இப்போதில்லை எனினும், என்றேனும் ஓர்நாள் பலரையும் சென்றடையும் என்ற நம்பிக்கை எனக்கு மிகுந்திருக்கிறது. 

கூடலும், தேடலும்...கூடலில் உண்டோ?!;
கொடுத்தலும், பெறுதலும்?
...

தேடலில் எதற்கோ??!!;
விருப்பும், வெறுப்பும்??
...

கூடலில், தேடலும்;
தேடலில், "கூடல்"உம்;
கலக்கட்டும்...
"கூடலில்"-பகிர்தல் போலே!!! 

கல்லறையும், ம(னி)தமும்...


கல்லறைகள் கூட
"பல்-அறை"களாய் சிதறியிங்கே!!!
...

பின்னெப்படி?!
...

மதமும், மனிதமும்
"மிதமாய்" சேர்வதிங்கே???

மனிதமும், உறவும் எங்கே சென்றுகொண்டிருக்கிறது???
      தான் பெற்ற மகளை இப்படியா?! ஒருவன் செய்வான்? "என்ன மனுசண்டா நீ???"-ன்னு இன்னுமோர் முறை கதறிட தோன்றுகிறது! இந்த  மாதிரியான தகப்பன்களை என்ன செய்வது? "என்ன மனுசண்டா நீ???" தலையங்கத்தில் நான் பரிந்துரை செய்த தண்டனை சற்றும்-தவறில்லை என்று படுகிறது. இப்படியெல்லாம் செய்ய இவர்களுக்கு எப்படி துணிவு வருகிறது? எவர் இவர்களுக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது?? பெண்ணை(அல்லது மகனை)பெற்றதால் மட்டும் இப்படி செய்யலாமா???   இரண்டு நாட்கள்முன் நாளிதழில் படித்த செய்தி இதுதான்: வங்க-தேசத்தில் ஓர்கிராமத்தில் பக்கத்து வீட்டுக்காரன் ஒருவனுடன் "சீட்டு விளையாடி" அனைத்தும் தோற்ற ஓர்தகப்பன் தன் 13-வயது மகளை திருமணம் செய்து கொடுப்பதாய் ஒப்புக்கொண்டு தோற்றுவிட்டானாம்! அதன்படி திருமணம் செய்து வைக்க இரண்டு-வீட்டாரும் ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்கின்றனராம்! பெண்ணுக்கே மிகக்குறைந்த வயது; அவளை மணக்க இரு(ப்ப/ந்த)வனுக்கு இருமடங்கிற்கும் கூடுதலான வயதாம்!!

       நேற்று ஒர்செய்தி: "மது போதவில்லை; வாங்கி வா" என்று சொல்லியதை கேளாத (ஒன்றுவிட்ட)தகப்பனை ஒருவன் கொன்றுவிட்டானாம்! அதாவது, அந்த தாயின் முதல்-கணவனுக்கு பிறந்தவனாம்; கொல்லப்பட்டது இரண்டாம் கணவன். அது கிடக்கட்டும்! பெற்ற தகப்பனா? இல்லை ஒன்றுவிட்ட-தகப்பனா?? என்பதல்ல கேள்வி! இதில், இருவரும் ஒன்றாய் சேர்ந்து வீட்டிலேயே மது அருந்திக்கொண்டு இருந்தனராம். எது எப்படியோ, "மது வாங்கிவரவில்லை" என்பதற்காகவா ஒருவரை கொல்வது? "போதையில்" என்ற வாதமே தவறானது"; அப்படி எனின், ஏன் தலைமறைவாக வேண்டும்?! என்ன கொடுமையடா?? ஏன் இப்படி உறவு(கள்) என்றால் என்னவென்று சற்றும் புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்? இதுபோன்றே, ஏன் கள்ளக்காதல்களும் - அவை சார்ந்த கொலைகளும் தொடர்கின்றன?; பிடிக்கவில்லை என்றால், விவாகரத்து பெற்று (பிடித்தவருடன்)இயல்பாய் வாழலாமே??. விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வளர்வது கிடக்கட்டும்; உண்மையில்...

மனிதமும், உறவும் எங்கே சென்றுகொண்டிருக்கிறது???

இது எப்படி/ஏன் சாத்திய(ம்/மில்லை)???...
      இது மட்டும் எப்படி சாத்தியமாகிறது? எனை சார்ந்த உறவிடமும், நட்பிடமும் இல்லாத அந்த நம்பிக்கை இந்த விசயத்தில் மட்டும் எப்படி சாத்தியமாகிறது! எனது நட்பும், உறவும் என்னிடம் காட்டிடாத அந்த நம்பிக்கை இந்த விசயத்தில் மட்டும் எப்படி வருகிறது? ஏன் வருகிறது?? வேறு வழியில்லை என்பதாலா? ஒருவேளை எனக்கும், என் உறவுக்கும்/நட்புக்கும் - ஒருவரையொருவர் விட்டால் வேறு வழியில்லை என்ற நிலை வந்தால் தான் - இப்படிப்பட்ட நம்பிக்கை பலப்படுமோ?! ஆம்! திசம்பர் 25-ஆம் தேதி இரவு பயணிக்க என்னால் எப்படி "ஓர் பேர்-நம்பிக்கையோடு" திசம்பர் 3-ஆம் தேதியே "விமான பயணச்-சீட்டு" வாங்க முடிகிறது? உண்மையில், இது சாதாரணம் தான்! நான் 3 மாதங்களுக்கு முன்பெல்லாம் சீட்டு வாங்கிய அனுபவம் உண்டு; 6 மாதங்களுக்கு முன்பு சீட்டு வாங்(கியோ/குவோ)ரையும் நான் பார்த்ததுண்டு! இந்த நம்பிக்கை எப்படி வருகிறது?! எவர் கொடுத்த தைரியத்தால் வருகிறது??!! இது ஏன் மற்ற விசயங்களில் வருவதில்லை?

       6 மாதத்திற்கு பின் நான் உயிர்த்திருப்பேன் என்ற நம்பிக்கையை விட அதிகமான-நம்பிக்கை எதுவும் இருக்க முடியுமா? ஏன் "நாம் இல்லை என்றால் என்னாவது?" என்று யோசிப்பதே இல்லை? அடிக்கடி, நான் இது சார்ந்து எழுதுவது "அபத்தமாய்" படக்கூடும்; ஆனால், நான் சொல்லும் இது போன்ற உவமானங்களுக்கும், நம் வாழ்வியலுக்கும் பேர்-ஒற்றுமை உண்டு! என்னைக்கேட்டால், இது போன்ற நம்பிக்கைகள் தான் "நம்பிக்கையின் எல்லையாய் (Height of Belief)" இருக்க முடியும்! இதை தாண்டிய நம்பிக்கை எதுவும் இருக்கமுடியாது என்பதே என் நம்பிக்கை. அப்படி இருக்க, ஏன் நா(ன்/ம்) நம் உறவுடனும், நட்புடனும் - அவநம்பிக்கை கொண்டு முரண்பட்டு நிற்றோம்??! ஏன், நம்மால் ஒருவரை ஒருவர் நம்பிக்கை எனும் "கை" கொண்டு "அரவணைத்து" செல்ல முடிவதில்லை? இப்படியோர் அவநம்பிக்கை கொண்டு நாம் என்ன சாதிக்கப் போகிறோம்?? எல்லோரும், எல்லோரையும் அனுசரித்து போவது சாத்தியமில்லை என்பது எனக்கும் தெரியும். குறைந்தது...

முதல்-நிலை (உறவு/நட்பு)களிடம் ஒரு "சிறிய-நிலைத்த" நம்பிக்கை கொள்ளலாமே???

ஞாயிறு, டிசம்பர் 08, 2013

ஆண்களின் குணம்...      "ரொம்ப சந்தோஷம்பா!" என்று சொல்லிவிட்டு அடுத்து "என்ன திடீர்னு?" என்றொரு கேள்வியையும் கேட்டார். "என்ன திடீர்னு?" என்ற கேள்வி என்னுள் "ஓர் தேடலை" விதைத்தது! ஏன் அவர் அப்படி கேட்டார் என்று யோசிக்க ஆரம்பித்தேன். ஆனால், அதே விசயத்தை என் தாயிடம் சொல்லியபோது "வாப்பா! வந்து சந்தோஷமா இருந்துட்டு போப்பா!! நானே கேட்கனும்னு இருந்தேன்" என்றார். என்னப்பன் மட்டும் ஏன் அப்படி கேட்டார் என்று யோசிக்க ஆரம்பித்தேன். செய்தி இது தான்: சென்ற வாரம் என்னப்பனிடம் அலைபேசியில் "இன்னைக்கு தான் விமானச்-சீட்டு" வாங்கினேன்; 25-ஆம் தேதி கிளம்பி 26-ஆம் தேதி ஊருக்கு வருகிறேன் என்றபோது தான் என்னப்பன் அப்படி கேட்டார். "என்ன திடீர்னு" என்பது ஓர் சாதாரண கேள்வி தான்! அதற்கு முந்தைய நாள் கூட அவரிடம் பேசினேன்; அப்போது கூட நான் ஊருக்கு போகும் திட்டம் இல்லை; அடுத்த நாள் காலை தான் "திடீர்னு" நானே விமானச்-சீட்டு வாங்கினேன்.

    அதனால், அவரின் கேள்வி மிக நியாயமானது; ஆனால், முந்தைய-நாள் என் தாயிடமும் தான் பேசினேன்; ஆனால், அவர் மட்டும் அப்படி ஏன் கேட்கவில்லை?! என்னப்பனும் அங்ஙனம் கேட்காமல் இருந்திருக்கலாமே?! என்ற கேள்வியும் எழுந்தது. இது தான், ஆண்களின் குணம் என்ற பேருண்மை புரிந்தது; இங்கே தான், பெண்ணிலிருந்து மாறுபட்டு "முரண்பட்டதாய்" ஆணினம் இருக்கிறது. எந்த ஒரு விசயத்தையும் "உயிரோடும்/உணர்வோடும்" மட்டும் பார்த்திட ஓர் பெண்ணால் மட்டுமே முடியும்; அது அவர்களுக்கு கிடைத்த வரம். ஓர் ஆண் மட்டும் "இந்த 2 உ-க்களையும்" தாண்டி உண்மை என்ற 3-ஆவது "உ"-வையும் ஆராய முற்படுகிறான். உண்மையை ஆராய்தல் தான் ஆண்மையின் அடையாளமாய் இருக்கிறது. இதையே ஓர் ஆழ்ந்த விசயத்தை கொண்டு பார்ப்போம்;  ஓர் பெண் தன் காதலன்/கணவன் ஆகிய ஓர் ஆணை "மிக எளிதில்" நான் உங்களை "முழுமையாய் நம்புகிறேன்" என்று கூறிவிடுவாள். அதை சார்ந்த அனைத்தையும் எளிதில் அந்த ஆண்-மகனுக்காய் செய்ய ஆரம்பிப்பாள்.

      ஆனால், ஓர் ஆண் தன் காதலி/மனைவி ஆகிய ஓர் பெண்ணை "அத்தனை எளிதில்" நான் உன்னை "முழுமையாய் நம்புகிறேன்" என்று (வாய்விட்டு)கூறிவிடுவதில்லை. சற்றே சிந்தித்து பாருங்கள்: அதனால் தான் ஓர் பெண் "என்னங்க என்னை உண்மையாகவே விரும்பறீங்களா?/ என்னை கடைசிவரைக்கும் கைவிட மாட்டீங்களா??/ என்னை யார் என்ன சொன்னாலும் விட்டுக்கொடுக்காமல் இருப்பீங்களா???" போன்ற கேள்விகளை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறாள். அதாவது, ஓர் பெண்ணின் சிந்தனை "உறவும்/உணர்வும்" வரை மட்டும் இருக்கிறது; ஆனால், ஓர் ஆண் இவையிரண்டையும் தாண்டி "உண்மை" என்னவென்பதையும் அறிய முற்படுகிறான். காதல்/திருமண பந்தத்தில் இணைந்த தருணத்தில்; அந்த ஆரம்ப காலத்தில் ஓர் பெண் தான் சார்ந்த ஆணிடம் மட்டுமன்றி ஊரார் அனைவரிடமும் "என் காதலன்/ கணவன் மாதிரி யாரும் இல்லை" என்று கூறுவாள்; அதில் எந்த அளவிற்கு உண்மை என்று  ஓர் பெண் ஆராய்வதோ/ கவலை கொள்வதோ இல்லை.

      அதனால் தான், அவர்களுக்குள் ஓர் பிரச்சனை வந்துவிட்டால், ஓர் பெண் உடனடியாய் அந்த உறவை "அறுத்து விட" துணிகிறாள். திருமணமான பெண் எனில், முதலில் கணவனை பிரிந்து "தந்தை வீட்டிற்கு" சென்றுவிடுவது; அவர்களால், ஓர் காதலியை போல் உடனடியாய் "அறுத்து விட" முடிவதில்லை. அதிலும் குழந்தை இருப்பின் - கண்டிப்பாய் உடனடியாய் "அறுத்து விடுதல்" பற்றி யோசிப்பதேயில்லை; ஆனால், பிரிந்து-இருக்க எந்த தயக்கமும் காட்டுவதில்லை. ஆண்கள் தவறே செய்யவில்லையா?! என்ற விதண்டா-வாதம் வேண்டாம்! நான், இங்கே பெரும்பான்மை சார்ந்த நிகழ்வுகள் கொண்டு ஓர் புரிதலை நோக்கி பயணப்படுகிறேன். "என் ஆணைப்போல் யாருமில்லை" என்று கூறிய அதே பெண் அதே ஊராரிடம் "ஒரு நாள் அந்த ஆளு கூட இருந்து பாருங்க!, தெரியும்!!" என்கிறாள். இந்த சொற்றொடர் வந்த பின், அங்கே எவராலும் ஏதும் பேச இயலாது போகிறது. ஆக, இந்த 2 நிலையிலும் - ஓர் பெண் "உண்மை" என்னவென்பது பற்றி சிந்திப்பதே இல்லை.

        ஒரேயொரு விசயத்திற்கு எப்படி 2 உண்மைகள் இருக்க முடியும்? ஓர் ஆணுக்கு காதல்/திருமண பந்தத்தில் இணைந்த தருணத்தில் அவனின் பெண் மீது சந்தேகம் (எது குறித்தும்) இருக்கும். ஆனால், ஓர் கட்டத்தில் அவன் உண்மை அறிந்து நம்பிக்கை கொள்கிறான்; அதன் பின், அவனின் சிந்தனையும் செயலும் உறவை விரிவுபடுத்துவதில் (குழந்தை, மற்ற உறவுகள் என) இருக்கும். அவனின் நம்பிக்கை எந்த சூழலிலும் மாறுவதில்லை. என்னப்பனின் அந்த கேள்வி! ஓர் உண்மை/விளக்கம் வேண்டியே! அதே உண்மை/விளக்கம் தேடல்தான் - ஒட்டுமொத்த ஆணின் குணம் பற்றி என்னை அலச வைத்திருக்கிறது. இங்கே இன்னுமொரு சிக்கலும் இருக்கிறது; தன் மகன்/தந்தை - உறவுகளிடம் இருக்கும் குறைகளை/தவறுகளை தாண்டி - அவர்களை ஓர் பெண்ணால் நேசிக்கமுடிவது போன்றே; தன் காதலன்/கணவன் (மற்றும் பிற உறவுகள்) இடத்திலும் இருக்கமுடியும் எனின், பெரும்பான்மையான பிரச்சனைகளின் தடயமே அழிந்திடும். எனவே, என்னுடைய பார்வையில் ஓர் ஆணின் குணம் எப்போதும்...

உண்மையை சார்ந்தே பயணப்பட்டு கொண்டு (இருக்கிறது/இருக்கும்)!!!

இதுவும் மகிழ்ச்சியாய் தான் இருக்கிறது!!!...     "அழுத்திட்டம்பா! இருங்க, 'கட்' ஆயிடும்!!" என்றாள் என் மகள். எனக்கு இரண்டு ஆச்சர்யங்கள்; ஒன்று! அவள் ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ளும் வேகம்; மற்றொண்டு அவள் கற்றவைகளை ஒப்பிடும் அறிவு. நேற்று நானும் என்மகளும் கணினி வழியே  வழக்கம்போல் (சனிக்கிழமை) "ஸ்கைப்பில்" உரையாடிக்கொண்டு இருந்தோம்; அவ்வப்போது நடப்பது போல் திடீரென "ஸ்கைப்பில்" காணொளி நின்றுவிட்டது. எப்போதாவது மதியம் உறங்கும் என்னவளை - எழுப்ப சொல்லிட எனக்கு மனமில்லை; ஆயினும், என் மகளை நான் பார்க்கவேண்டும். என் மகளுக்கு ஸ்கைப்பில் என்ன செய்வதென்றே தெரியாது; ஆனால், அவள் சகலத்தையும் கவனிப்பாள் என்பது தெரியும்.  எனவே, என் மகளிடம் "கர்ஸரை கொண்டு வீடியோ போன்று இருப்பதை "க்ளிக் செய்" என்றேன்; அவளுக்கு சரியாய் புரியவில்லை. ஒரு ஸ்கொயர் (அவளுக்கு தெரிந்தது); அதன் பக்கத்தில் ஸ்பீக்கர் (இதுவும் அவளுக்கு தெரிந்தது) போன்று ஒன்று இருக்கும் - அதை க்ளிக் செய் என்றேன்".

       அவள் செய்துவிட்டேன் என்றாள்; என்னால் நம்பமுடியவில்லை! சிறிது நேரம் கழித்து "வீடியோ" வந்தது; எனக்கு பெருத்த மகிழ்ச்சி; "சூப்பர் விழிக்குட்டி! இந்த பாப்பா எல்லாத்தையும் கரெக்டா செய்யுதே!" என்று மகிழ்ந்தேன். ஓர் அரை-மணி நேரம் கழித்து எனக்கு உறக்கம் வருவதை பார்த்து "சரி நீங்கள் போய் படுங்கள்" (நிஜமாகவே, 4 வயதா மகளே உனக்கு??!!) என்றாள். அவளிடம் "டிஸ்கனெக்ட்" செய்வது எப்படி என்று கூறி, செய்ய சொன்னேன்; அவள்  "அழுத்திட்டம்பா! இருங்க, 'கட்' ஆயிடும்!!" என்றாள்; வீடியோ சிறிது தாமதித்து வந்தது போன்றே "சற்று தாமதித்து, கட் ஆகிடும்" என்பது அவளின் புரிதல். மீண்டும், சொன்னேன்; உடனே "கட்" ஆகிவிட்டது. நான், பெருத்த சந்தோசத்துடன் "சூப்பர் விழி!" என்று கத்தினேன்; பின்னர்தான் புரிந்தது - நான் சொன்னதை அவள் கேட்டிருக்க முடியாதென்று. மாலை அலைபேசியில் அழைத்து சொல்லலாம் என்றெண்ணி பிறகு வேண்டாம் என்று விட்டுவிட்டேன்; இதை என்மகளிடம் சொல்லாது இங்கே இப்படி எழுதுகிறேன்...

மறுப்பேதுமின்றி - இதுவும் மகிழ்ச்சியாய் தான் இருக்கிறது!!!  

பெண்ணின் "இரு-துருவம்"...பெண்களுக்கு மட்டுமே...
கண்ணிரண்டு பார்க்கும்
ஓர் உருவமாய்!!..
...
...
...

இருவேறு நியாயங்களை;
இருவேறு தருணங்களில்
ஒரே விசயத்திற்காய்
விவாதித்தல் சாத்தியம்!!!

பெண்ணால் மட்டுமே முடிந்தது...ஓர் உறவு வேண்டும் என்று விரும்பும்போது - ஒரு பெண்ணால் அவள் சார்ந்த ஆணைப்பற்றி கிட்டத்திட்ட 100 % நல்ல-விதமாய் கூறமுடியும்! 

ஆனால் அதே உறவு வேண்டாம் என்று முடிவெடுக்கும்போது - அதே பெண்ணால் அதே ஆணைப்பற்றி முழுக்க-முழுக்க 100 % தவறான-விதமாய் கூறமுடியும்!

{அதனால் தான் "பெண்ணின் மனதை புரிந்துகொள்ள முடியாது!" என்கிறார்களோ!!!}

காலத்தை வெல்வோரின் காமம்...


காமத்தைக் கடக்காமல்
காதலைக் கடத்தலாகாது!
காலனே பணித்திடினும்...

காமத்திற்காய் காதலரிடம்
காலில் விழுதலும்;
காதலற்றார் ஒருவரிடம்
காமம் அடைதலும்;

காலத்தை வெல்வோர்
"காசு"க்காகவும் செய்யார்!!

ஞாயிறு, டிசம்பர் 01, 2013

பெண்கள் "மது"அருந்துவது தவறா???     முக-நூலில் நண்பர் ஒருவர் 2 பெண்கள் "டாஸ்மாக்" கடையில் நிற்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அவர்கள் ஏதும் மது வாங்கினார்களா? என்பது பற்றி (புகைப்படம் மூலம்)எனக்கு எந்த உறுதியான-சான்றும் இல்லை! அதனால் தான் "நிற்கும்" என்று கூறினேன். உடனே, இது பற்றி (வழக்கம்போல்)பலரும் தங்களுடைய வாதங்களை "காமெண்ட்டு"களாய் கூறி இருந்தனர்; ஓரிருவர் தவிர மற்ற எல்லோரும் - அது தவறு, பண்பாடு கெட்டுவிட்டது, பெண்ணென்றால் அடக்கம் வேண்டும் - இப்படி பலவிதமாய் சாடி இருந்தனர். நானும் அதற்கு "காமெண்ட்டு" எழுதி இருந்தேன்: "ஆணென்ன? பெண்ணென்ன?? நீயென்ன??? நானென்ன???? எல்லாம் ஓர் (குடிகார)இனம் தான்" என்பதே அது. அதன் பின், என்னுள் ஓர் கேள்வி எழுந்தது?! பெண்கள் "மது"அருந்துவது தவறா??? என்று! உடனே, இந்த தலையங்கம் எழுத ஆரம்பித்துவிட்டேன். வெகு-நிச்சயமாய், இது அவர்களின் சுதந்திரம் சார்ந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

       ஓர் முகம்மதிய சகோதரர் - திருக்குரானில் சொல்லப்பட்டிருக்கும் ஓர் செய்தியை கொடுத்து அதன் சான்றையும் கொடுத்து இருந்தார். அதில் - பெண்கள் "முன்-கை மற்றும் முகம்" போன்ற உறுப்புகளை மற்றும் தான் வெளியில் காட்டலாம்; மற்ற உறுப்புகளை மறைக்க வேண்டும் என்று இருப்பதை குறிப்பிட்டு - அதை அந்த பெண்களிடம் தெரிவியுங்கள் என்று கூறியிருந்தார். முகம்மதிய சமூகத்தியர் மேல் எனக்கு அளவு-கடந்த மரியாதையும், அவர்கள் நம்பிக்கை குறித்து பெருத்த ஆச்சரியமும் இருப்பது வேறு விஷயம்; அவர்களின் உருவிலா-வழிபாட்டை பற்றி கூட மிகப்பெருமையாய் எழுதியவன் நான். ஆனால், இந்த விசயத்தில் எனக்கு பெரிதும் உடன்பாடு இல்லை; இது, அவர்கள் மதத்தில் "முறையாய்" கடைபிடிப்பதை நானும் அறிவேன்; ஆனால், அதில் ஓர் அடக்குமுறை இருப்பதாய் எனக்கு தெரிகிறது - அவ்வாறு சொல்லியெல்லாம் "மற்ற மதத்தில்" இருக்கும் இக்காலப் பெண்களை இதுபோன்ற விசயத்தில் கட்டுபடுத்த முடியாது என்று தோன்றியது!

    இன்னுமொருவர் "மாதராய்ப் பிறந்திடவும் நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா..." என்ற முண்டாசுக் கவிஞன் வரிகளை குறிப்பிட்டு இருந்தார். இதைப்படித்தவுடன் - எனக்குள் ஓர் பொறி தட்டியது; முண்டாசுக் கவிஞன் என்ன சொல்ல வந்திருப்பார் என்று யோசிக்க ஆரம்பித்தேன். முண்டாசுக்கவிஞன் - பெண்மையும், அவர்களுக்குள் இருக்கும் தாய்மையும் அவர்களுக்கே உரித்தான முதல் மற்றும் தனிப்பெருமை என்பதால் தான் அப்படி சொல்லி இருக்கவேண்டும். இது புரிந்ததும், மேலே குறிப்பிட்ட முகம்மதிய சகோதரர் குறிப்பிட்டதும் இது சார்ந்தே இருக்கவேண்டும் என்ற உண்மை புரிந்தது; அவர்கள் இதை அணுகும்-முறை வேண்டுமானால் அடக்குமுறை கொண்டதாய் இருக்கலாம்; சொல்ல எத்தனித்திருக்கும் கருத்து ஒன்றே என்று தோன்றியது. எனவே, நம் முன்டாசுக்கவிஞனும், திருக்குரானும் - பெண்மையும், தாய்மையும் போற்றி பாதுகாக்க படவேண்டும் என்ற ஒன்றுபட்ட கருத்தில் தான் இவைகளை சொல்லி இருக்கவேண்டும் என்பது புரிந்தது.

        இவ்விரண்டும் புரிந்த பின் - மற்றவர்கள் கருத்தும் இது சார்ந்ததாய் தான் இருக்கவேண்டும் என்பது   புரிய ஆரம்பித்தது. அதை அவர்கள் தவறான விதமாய், தவறான வார்த்தைகள் கொண்டு வேண்டுமானால் சொல்லி இருக்கலாம். ஆனால், அவர்களின் அடி-மனதில் - அவர்களுக்கு தெரிந்தோ/தெரியாமலோ இந்த எண்ணம் தான் இருந்திருக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது. இந்த புரிதல் வந்த பின், இந்த விசயத்தை எப்படி தெளிவாய் பார்ப்பது என்று யோசிக்க ஆரம்பித்தேன். எனக்குள் ஓர் கேள்வி எழுந்தது; தாய்மை என்பது பெண்களுக்கு மட்டுமே சாத்தியமானது என்ற இயற்கை/இறைவனின் நிமித்தத்தால் - அவர்கள் இப்படி மது-அருந்துவது போன்ற செய்கையை செய்வது தவறு என்று சொல்வது எப்படி நியாயமாகும்?! என்ற கேள்வி எழுந்தது. 8 ஆண்டுகள் ஐரோப்பிய-கண்டத்தில் வாழ்ந்தபோது "நிறைய மது அருந்தும் - நிறைய புகைப் பிடிக்கும்" பல பெண்கள் தாய்மை அடைந்து, தாய்மையை அனுபவித்து நல்ல தாயாய் இருப்பதை பார்த்திருக்கிறேன்.

      அங்கே, பெண்கள் மது-அருந்துவது போன்ற செய்கைகள் செய்வது தவறாய் பார்க்கப்படுவதில்லை. மேலும், ஒவ்வொரு பெண்ணும் - தாய்மை அடைய ஆயத்தமாகும் முன் 2 மாதங்கள் "பல விதமான சோதனைகள் செய்து, பல விதமான மருந்துகள் உட்கொண்டு" (புகைப்பிடித்தல், மது-அருந்துதல் போன்ற பல விசயங்களை அறவே நிறுத்தி) பின்னர் தான் தாய்மை அடைய தேவையான செயலில் ஈடுபடுகின்றனர். இது போன்ற எவ்வித பழக்கமும் இல்லாதவர்களும் கூட - அதே முறையில் தான் தாய்மை அடைகின்றனர். அவர்கள் சார்ந்த ஆண்களும் அதற்கு எல்லாவிதத்திலும் உதவியாய் இருந்து பொறுமை காக்கின்றனர். இங்கே - குறிப்பாய், ஆண்கள் சார்ந்து எந்த நிபந்தனையும் இல்லை; அவன் - எதை வேண்டுமானாலும் செய்யலாம். இது சார்ந்த எந்த புரிதலும் இங்கே இல்லை; ஒரு பெண்ணின் தாய்மையில் ஆணுக்கும் பங்குண்டு என்பதை எவரும் உணர்வதே இல்லை. அதனால் தான் - ஓர் பெண் மதுக்கடையில் நிற்பது-கூட தவறு என்பதாய் பார்க்கப்படுகிறது. எனவே, என்னுடைய பார்வையில்...

ஓர் பெண் "மது-அருந்துவதில்" எந்த தவறும் இல்லை!!!     

பின்குறிப்பு: ஆயினும், பெண்கள் யாரும் - தாய்மை அடையும் அந்த வாய்ப்பு/வரத்தை இயல்பாய் பார்க்கவேண்டும் என்ற வேண்டுகோளும் எனக்கு இருக்கிறது. ஒரு பெண் தாய்மை அடைவதில் வேண்டுமானால் - ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் சரிவர பங்கும்/பொறுப்பும் - இருக்கலாம்; ஆனால், தாய்மையை - அனுபவிப்பது/ காப்பது/ நிறைவு செய்ய வைப்பது - போன்ற எதிலும் "ஆண்களுக்கு எந்த வாய்ப்பும்"இல்லை என்பதை பெண்கள் உணரவேண்டும். அதனால் தான் முண்டாசுக்கவிஞன் "நல்ல மாதவம், செய்திடல் வேண்டுமம்மா" என்றார். அதற்காய் - சில நேரங்களில், சில விசயங்களில் - அவர்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டுமெனில், அவர்கள் அதை மனமுவந்து செய்யவேண்டும்.

தமிழில் பேசினால் அபராதம்???
       நண்பர் ஒருவர் 2 நாட்களுக்கு முன் தன்னுடைய பேச்சு-ஆங்கிலப்பயிற்சி வகுப்பு அனுபவம் பற்றி கூறிக்கொண்டு இருந்தார். அவ்வப்போது, இந்த அனுபவம் பற்றி பலரும் கூறக்கேட்கும் வாய்ப்பு கிடைப்பதுண்டு. அந்த நண்பர் - ஆங்கில வகுப்பில் "தமிழில் பேசினால்" ஒரு வார்த்தைக்கு 10 உரூபாய் அபராதம் விதிக்கின்றனர் என்றார். முதலில் எனக்கு திகீரென்றது?! இவர்கள் தமிழ் நாட்டில் தான் இருக்கின்றனரா?! என்ற ஐயம் வந்தது. பின்னர், சரி ஆங்கிலம் கற்க விருப்பப்பட்டு தானே?! செல்கின்றனர். தமிழில் பேசாது இருந்தால் ஆங்கிலம் பேசுவது எளிதாய் இருக்கும்; அதனால் தான் அபராதம் விதிக்கின்றனர் என்ற உண்மை விளங்கிற்று. அந்த செயல் சரியென்றே எனக்கு தோன்றியது. ஆயின், அதே போல் அபராதம் விதிக்கும் வேறொரு சூழல் எனக்கு நினைவில் வந்தது! இதை பலரும் கண்டிப்பாய் கேட்டிருப்பீர்; சமீபத்தில் வெளியான "தங்க-மீன்கள்" திரைப்படத்தில் கூட இது சார்ந்த ஓர்-வசனம் வரும். ஆம்! அதே தான்... பள்ளியில் விதிக்கும் அந்த அபராதம் பற்றி தான்!!

     பள்ளியில் ஆங்கிலம் தவிர்த்து பல பாடங்களும் - குறிப்பாய், வாழ்வியல் பற்றியும் கற்பதே ஒவ்வொரு குழந்தையின் முதல் தேவையாய் இருக்கிறது. அப்படி எனும்போது - தமிழ்நாட்டில் "தமிழை தாய்மொழியாய்" கொண்ட ஒரு குழந்தையிடம் "தமிழில் பேசினால், அபராதம்!" என்று பல பள்ளிகளும் செயல்படுவது எப்படி நியாயமாகும்? ஆங்கில் கற்கவேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை! குழந்தைப்பருவம் எதையும் கற்கும் வல்லமை கொண்ட அபூர்வபருவம்! அவர்கள் ஒரேநேரத்தில் பலத்தையும் கற்கும் ஆற்றல் கொண்டவர்!! அவர்கள் அனைத்தையும் கற்கும்போதுதான் அவர்களின் "தனித்திறன்" என்னவென்பதை அறிய(வும்)முடியும்! அப்படி இருக்கும் போது, அறிவியல் மற்றும் பிற பாடங்கள் குறித்து (ஆங்கிலத்தில் தான் படிக்கின்றனர் எனினும்)தமிழில் ஓர் ஆசிரியர்/ ஆசிரியையிடம் சந்தேகமோ/விளக்கமோ கேட்பது எப்படி தவறாகும்?! தமிழில் விளக்கம் கூறி பின்னர் ஆங்கிலத்தில் விளக்குவதில் என்ன தவறு இருக்கிறது. அதை விடுத்து தமிழ்ச் சூழலில் வளரும்...

ஓர் குழந்தை தமிழில் பேசுவதற்கு அபராதம் விதிப்பது எப்படி நியாயமாகும்???!!!  

திருமணம்...
(என்னுடைய முந்தைய-கிறுக்கல்; இப்போது, முறைபயின்ற-ஓவியமாய்!)
*****


எதிரெதிராம் துருவங்கள் இரண்டை ஒன்றாய்
         இணைப்பதேயாம் திருமணம்!ஆம் தெரிந்தே செய்யும்
விதிவினையாம் இந்நிகழ்வும்! இணைப்போர் சூழ்ச்சி
         செய்தேதான் உண்மைதனை மறைப்பர்; ஆங்கே
துதிபுரிந்தே கைகொடுப்போர் பலரும்! பத்தும்
          இருந்தென்ன பயன்?பத்தில் எதுவும் பந்தம்
புதிதில்சேர் மணமக்கள் குணத்தில் இன்றேல்;
          ஓங்கிடுதல் எங்கனமாம் குடும்பம் ஒன்றும்?

என்பணம் என் இனம்என்ற முதன்மை வந்தால்
          எவர்மனம்தான் ஒக்கும்?யார் உரைப்பர் ஆர்க்கும்?
இன்பங்கள் பலவிருந்தும் புதிதாய் சேர்தல்
          இல்லையாம்ஓர் உறவுமரம் விருத்தம் கூட்ட!
துன்பங்கள் சிலவிருந்தும் கழிதல் மட்டும்
          அதிகரிக்கும் மர்மமும்என்? எவர்தான் சொல்வர்??
இன்னல்கள் துடைக்கும்நம் உறவும் கொன்று
          உவர்ப்பாய்வாழ் தல்எதற்காம்? உணர்தல் நன்றாம்!

குழந்தையும்ஓர் குதூகலமாய் வரும்நாள் எல்லாம்
          மாறிடும்!காத் திருப்போம்அந் தநாளும் ஓர்நாள்
அழகியலாய் வந்திடுமாம்! விருப்பம் சேர்ந்தும்
          வெறுப்பனைத்தும் கலைந்தும்ஓர் தெளிவும் பூக்கும்!
அழுகையையும் அழித்தேநாம் குடும்பம் ஓங்கும்
          ஓர்வழியும் கண்டுணர்ந்து உரைப்போம்! நம்மால்
அழகியல்சேர் திருமணம்நாம் மடிந்தும் என்றும்
          வாழ்ந்திடவே! முயற்சியொன்றும் பயின்றே வீழ்வோம்!!! 

நம்பிக்கையும், அவநம்பிக்கையும்..."அவ" தான்
ஓர் நம்பிக்கை...
"அவ"நம்பிக்கையாய்
மாறக் காரணம்!!!

("அவள்" என்ற பொருளில் "நான்-கூறவில்லை"!)

ஞாயிறு, நவம்பர் 24, 2013

"பேய்-பயம்" சரியா? தவறா??
     கடந்த வார "நீயா? நானா?" பேய் பற்றிய ஓர் அலசல் என்பது தெரிந்தவுடன், எப்போதும் ஓரிரு நாட்களில் "நீயா? நானா?"-வைப் பார்த்துவிடும் நான் நேற்று வரை தள்ளிபோட்டேன். இறுதியில், நேற்று மதியம் அதைப் பார்த்துவிட்டேன்; பின்னர் இரவு 8 மணி வரை இயல்பாய் வேலைகளை செய்துகொண்டு இருந்த எனக்கு, இரவு வந்ததும் ஓர் பயம் கலந்த பரவசம் வந்துவிட்டது. "அப்பார்ட்மெண்டில்" தான் வசிக்கிறேன் எனினும், (என்னுடைய ஃபிளாட்டில்)தனியாய் இருப்பதால் ஒருவித பயம். "இறைவன் இருக்கிறாரா? இல்லையா??" என்ற தலையங்கத்தில் கூறியது போன்றே பேய் இருக்கிறதா? இல்லையா?? என்பதும் ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கை. எனக்கு பேய் இருக்கிறதா? இல்லையா?? என்பது பற்றி ஏதும் சான்றுகள் இல்லை; ஆனால், எனக்கு பேய் பற்றிய பயம் இருக்கிறது. இந்த பயத்தை ஒப்புக்கொள்ள எனக்கு எந்த பயமும் இல்லை!! இது சார்ந்த பயத்தால், நான் கொடுத்த தொல்லைகள் குறித்து என்-தாயும், தமக்கையும் நன்கு அறிவர்.

        பேய்-பயம் பெரும்பாலும், பெரும்பாலோருக்கு இரவில் தான் வருகிறது! இருளில் இருக்கும் மர்மம் தான் - இதற்கெல்லாம் காரணம் என்று தோன்றுகிறது. இருட்டில் மறைந்து இருந்து நம்மைப்போன்ற ஒரு மனிதன் "திருடனாய்" நம்மைத் தாக்கும்போதே?! நிலை குலைந்து விடுகிறோம். ஆனால், உருவமே இல்லாது அல்லது தெரியாது, பலரும் பார்த்திராத "பேய் என்ற ஒன்று" தாக்கினால்??!! எனவே, பேய் இருக்கிறதா? இல்லையா?? என்பதை தாண்டி - என்னுடைய பார்வை பேய்-பயம் சரியா? தவறா?? என்பதை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. பேய் வேண்டுமானால், இல்லாமல் இருக்கலாம்! ஆனால், மரணம் நிச்சயம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்! இருப்பினும், மரணம் உறுதியானது என்றும்; அது எப்போது வேண்டுமானாலும் நிகழும் என்பதையும், நாம் ஏற்றுக்கொள்வதே இல்லை!! மேலும், "எதிர்காலத்தில் வரப்போகும் 3-ஆம் தலைமுறையையும் தாண்டி" சொத்து-சேர்க்க நாம் ஆசைப்படுகிறோம். அதனால் தான், மரணிக்கமாட்டோம் என்று திடமாய் நம்புகிறோம். 

     மரணம் வெகு-நிச்சயம் என்று நான் திடமாய் நம்புவதால் தான் "மரணத்திற்கு பிறகு, என்ன...???" என்று யோசித்து என்னால் - வாழ்க்கை குறித்த புரிதலை பார்க்க முடிந்தது. "மரண-நம்பிக்கை" மற்றும் "பேய்-நம்பிக்கை" - இவை இரண்டிற்கும் ஓர் தொடர்பு இருப்பதாய் படுகிறது. ஒரு சிறிய குட்டையில் இறங்க, குறைந்த-அளவு மின்சாரம் தேவைப்படும் ஓர் உபகரணத்தை தொட - இப்படி சிறுசெயல்கள் துவங்கி - "அணு-உலை" எதிர்ப்பு வரையிலான அனைத்து பயத்திற்கும் காரணம் - நாம் உயிர்த்திருக்க வேண்டும் என்ற ஆசைதான். அதே ஆசைதான் - பேய் என்ற ஒன்று நம்மை கொன்றுவிடுமோ?! என்ற பயம் வரவும் காரணம்! அதனால் தான், இவை இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்றேன். அதே சமயம், இங்கே - சுனாமியை எதிர்த்து நீந்துபவர்கள், அதிகபட்ச மின்சாரம் பயன்படுத்தும் உபகரணத்தை அனாவசியமாய் கையாளுவோர் - துவங்கி "அணு-உலையால்" எந்த ஆபத்தும் இல்லை என்று வெகு-நிச்சயமாய் நம்புவோர் வரை - அனைவரையும் பார்க்கிறோம்.

        இப்படி இருக்க, பேய் பற்றிய பயம் மட்டும் ஏன் அதிக அளவில் இருக்கிறது? அல்லது அது சார்ந்து மட்டும் ஏன் அதிகம் விவாதிக்கப்படுகிறது என்று யோசிக்க ஆரம்பித்தேன். மரணத்தை பார்த்து வந்தேன்; மரணம் இப்படித்தான் இருந்தது என்றோ?! அல்லது இப்படி, இப்படியாய் - மரணத்தில் இருந்து தப்பி வந்தேன் என்றோ??!! கூறிட எவரும் இல்லை! மிகப்பெரிய நோயில் இருந்து தப்பியோரை நமக்கு தெரியும்; ஆனால், அது மரணத்தை வென்றதாய் அர்த்தம் அல்ல; மரணத்தை தள்ளி வைத்த செயல்; அவ்வளவே!! மேலும், மரணம் பற்றிய எந்த நிதர்சனமும் அதன் மூலம் கிடைப்பதில்லை. ஆனால், பேய் பற்றி நிறையக் கதைகள் உண்டு; பார்த்ததாய்/கேட்டதாய்/தப்பித்ததாய் பலரும் கூறுகின்றனர். பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன! ஆனால், இதுதான் மரணம் என்று கூறிட எதுவும்/எவரும் இல்லை! அதனால் தானோ என்னவோ, மரணம் உறுதி என்ற நம்பிக்கையும் நேரடியாய் வரவில்லை! ஆனால், உயிர்-பயம் அனைவருக்கும் இருக்கிறது! அது தான் மரணத்திற்கும், பேய்க்கும் உள்ள தொடர்பு.

     மரணம் உறுதி என்று நம்ப மறுப்போர் பலருக்கும் - மேற்குறிப்பிட்ட பல காரணங்கள் மூலம் உயிர்-போய்விடுமோ?! என்ற பயம் மட்டும் இருக்கிறது என்பதுதான் நிதர்சனம்! பேய்-பற்றிய உறுதியான சான்றுகள் எதுவும் இல்லை எனினும், அது சார்ந்த கற்பனைகளும்/ கதைகளும் அதிகம். அதனால்தான், மற்ற காரணிகளைப் போல் அல்லாமல், பேய் பற்றிய பயம் மட்டும் தனியாய் பார்க்கப்படுகிறது. பேய் - நேரடியாய் உயிரோடு சம்பந்தப்பட்டு இருக்கிறது என்ற நம்பிக்கையே இதற்கு காரணமாய் தெரிகிறது. இதை எளிதாய் விளக்க வேண்டுமெனில் "எந்த சண்டை வந்தாலும், உறவில் இருக்கும் ஒருவர் - இன்னுமொருவர் உண்ணும் உணவில் நஞ்சை கலக்கமாட்டார்கள்" என்ற நம்பிக்கை மட்டும் இல்லை எனில் உணவு-விடுதியில் கூட உணவு-உண்ண பயப்படுவோம்! இல்லையேல், தினமும் குறைந்தது 3 முறையாவது நாம் செத்து-பிழைக்கவேண்டும் அல்லவா? எனவே, பேய் என்பது இருக்கிறதா? இல்லையா?? என்பதைக்காட்டிலும், அதில் நம்பிக்கை இருக்கிறதா என்பதே முக்கியம்; மேலும்...

அது சார்ந்த உயிர்-பயத்தில் எவருக்கும் எந்த சந்தேகமும் இருக்கமுடியாது!!!

பின்குறிப்பு: இதை அனைத்தையும் தாண்டி, மரணம் என்பது வெகு-நிச்சயம் என்பதை முழுமையாய் பெரும்பான்மையில் நம்புவதில்லை எனினும், மரணிக்கக்கூடாது என்ற ஆசை இல்லாத எவரும் இருப்பதில்லை! அதனால் தான், மரணம் என்பது நிகழாவண்ணம் தடுக்க - எது குறித்தும் ஓர் பயம் இருக்கிறது. பேயை விடுங்கள்! சிறு குட்டையில் இறங்க பயப்படுவோர் பலரை நான் பார்த்திருக்கிறேன்; நீங்களும் வெகு-நிச்சயமாய் பார்த்திருப்பீர்கள். எனக்கு நன்றாய் நீந்த தெரியும் என்பதால் - கடல் குறித்து கூட எனக்கு "ஓர் துளி" பயமும் இல்லை! பேய் என்பது என்னவென்றே தெரியாததால், அது குறித்து எனக்கு பயம் இருக்கிறது; சிறு-குட்டையில் இறங்கக்கூட பயப்பட பலர் இருக்கும்போது "பேய் "பற்றி பயப்பட?!" நான் ஏன் பயப்படவேண்டும்???!!! 

பெண் சமுதாயம்...


(என்னுடைய முந்தைய-கிறுக்கல்; இப்போது, முறைபயின்ற-ஓவியமாய்!)
*****

பெண்களுக்கு யார்எதிரி? யுகங்கள் நூறாய்
          ஆணாதிக்கம் எனும்திமிரால் மடமை கொண்ட
ஆண்களுமோ; மனம்திருத்தி மகளிர் தம்பேர்
          பெருமையையும் முழுவதுமாய் உணர்ந்தார்! இன்றோ;
தூண்களுக்கு ஒப்பாய்பெண் அவள்வேண் டியாய்,
          இல்லறங்கள் பெற்றனவாம் அவள்நல் உள்ளம்!
பெண்களேதான் அவர்கட்கு தடைகற் கள்ஆம்;
           என்பதுவே என்னுள்ளம் உணர்த்தும் உண்மை!!      

கணவனவன்  இழந்தபெண்ணை வையகம் எங்கும்
          "கோவலன்"கள் எவனும்;கீழ் தரமாய் பாரான்!
கண்ணகிகள் அவர்தம்மே அதுபோல் செய்வர்!!
          மலர்,பொட்டு இரண்டுமட் டுமா?பெண் கள்தம்
கண்கள்?அல் லவே!என்றேல்; அவர்கள் ஆர்க்கும்
          வருமேஇந் நிலை;என்றே உணர்ந்தார் இல்லை??
குணங்கள்அல் லவா?பெண்கள் அவர்கள் கண்கள்
          என்றாங்கே உணரவில்லை??? சரியா இஃதும்?   

மருமகன்தம் மகளின்பால் காட்டும் பாசம்
          எனும்உரத்தின் வீரியம்பல் கிடவேண் டும்பெண்;
மருமகள்தம் மகனிடம்ஓர் உரமும் வேண்டல்
          தவறென்றாய்; உரைப்பதுவும் முறையோ? இல்லப்
பெரும்புகழ்சேர் திருவிளக்காம் "புகுந்தாள்" இன்பம்
          காப்பதையேன் மறந்துபோனர்? முகங்கள் பல்கொள்
பெருமகள்;தம் மகளவளின் வடிவம் என்றாய்
          உணரமறுப் பதேன்?உணர்வீர் பெண்கள் யாரும்!!       

அண்ணனிடம் உரிமைகோரும் தங்கை ஆங்கே;
         புதுஉறவாம் அண்ணியவள் அவனுள் பங்கும்
கொண்டவள்என் பதைஉணர்தல் மறந்தர்! என்தூண்,
         என்கனவன்; என்றென்னும் தமக்கை யாரும்
தூண்வேண்டல் பெண்கள்தம் இயல்பாம் என்றே;
         ஏன்உணர்தல் மறந்தர்?யார் உரைப்பர் பெண்கள்
அண்டமே;பெண் குலத்திற்கோர் தடைகள் என்றே?!
         புரிந்திடுமோ பெண்ணியத்தை பரிவோர் யார்க்கும்??
    
பொன்நகைக்காய் புன்னகையை அழித்தல் போலாம்
         பெண்ணினங்கள் அழிவதையும் உணர்ந்தார் இல்லை!
துன்பஅம்பும் தொடுக்கும்ஆண் இனங்கள் உண்டாம்;
         தந்தையாய்! தமையனாய்!தம் பியாய்!வன் காமம்
தன்னுள்சூழ் மாமனாராய்! கொழுந்தன் என்றோர்
         கொடியனாய்!எப் புத்தியற்ற கணவன் என்றாய்;
தன்னிலையில் இருந்திடாத பல,ஆண் கள்சேர்
         உலகொன்று உண்டெனினும்; இருப்போர் சிற்றோர்!!!              

"குறிஞ்சிபூ"வாய் அங்குமிங்கும் இருத்தல் உண்டாம்;
         பூவையர்அண் டம்காப்போர்! "ரோஸ்"பூக் கள்போல்
செறிந்துபூத்தல் என்றாம்?பின் எவர்க்காம்?? "காளான்"
         போலெங்கும் முளைத்திருக்கும் மகளிர் "சங்கம்"?
ஆறிடுமோ! பெண்களே,பெண் களுக்குள் ஆக்கும்
         இரணங்கள் தரும்இப்பேர் வடுக்கள்? சொல்வீர்;
அறிவையும்;காத் திடும்பெண்கள் யாரும்! நீவிர்
         இதைஉணரின் வேண்டிடுமோ? சங்கம் ஏதும்???

பெண்குலத்தை பெண்களேநல் வழியில் போற்றும்
         வகைசெய்வீர்! வாழ்க்கைதானே இயல்பாய் மாறும்!
உண்மையில்பின் எவர்சொல்வர்? பெண்கள் யாரும்
         நிகரில்லை ஆணுக்கென்று?? எதற்காய் பின்னர்
வேண்டும்முப் பதைஒட்டும் விழுக்கா டுக்காய்
          போராட்டம்?! நிரந்தரமாய் வராதோ! நல்ல
பண்பாடும்? உணர்வரோ!நல் இதயம் கொண்ட
          பெண்டிரும்?? உணர்தலேயாம் உயர்ந்த உள்ளம்!!!

இரண்டாம் உலகம் (2013)
விழியப்பன் பார்வை: இரண்டாம் உலகம் (2013) திரைப்படம்

         மிகுந்த எதிர்பார்ப்புடன் 2 நாட்களுக்கு முன் இரண்டாம் உலகம் (2013) திரைப்படம் பார்த்தேன். இறுதியில், சராசரியான "காதல் கதை" கொண்ட திரைப்படத்தை பார்த்ததை விட எந்த பெரிய-நிறைவும் இல்லை.
 • முதலில், படம் மிகப்பிரம்மாண்டமாய் எடுக்கப்பட்டு இருக்கிறது - என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை! அதிகம்  செலவாகி இருக்கும் என்பதிலும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை!! ஆயினும், பிரம்மாண்டம் மட்டுமே படம் அல்லவே?! ஆனால், ஆரம்பம் முதலே ஏதோ பெரிய குறை இருப்பது - உறுத்திக்கொண்டே இருந்தது.
 • பலரையும் போல், இடைவேளைக்கு பின் படம் சரியான தளத்தில் செல்லும்; செல்வராகவன் ஏமாற்றமாட்டார் என்ற எண்ணம் நிறைந்திருந்தது. உடன் வந்திருந்தவரிடம், அதையே சொல்லி வந்தேன். அதே எண்ணத்துடன் தான் - இரண்டாம் பாகத்தைப் பார்க்க ஆரம்பித்தேன்.
 • சிலர் "அவதார்" படம் பார்த்துவிட்டு அனைவரும் "ஜேம்ஸ் கேமரூனை" பெருமையாய் சொல்லி "படம் மிகப்பெரிய "காட்சி-விருந்து (Visual Treat)" என்று பாராட்டினோம் அல்லவா?! ஓர் தமிழ்ப்படத்தைப் பற்றி அவ்வாறே பாராட்ட வேண்டிய தருணம் இது என்று வாதிடுகின்றனர்! இல்லை எனவில்லை, தமிழ் திரை-வரலாற்றில் நல்ல "காட்சி-விருந்து" கொண்ட படங்களில் ஒன்று என்பதில் எந்த ஐயமும் இல்லை!
 • காட்சி விருந்தை மட்டும் எப்படி பார்க்கமுடியும்? அப்படியானால் - கும்கி, தங்க-மீன்கள், மைனா, எந்திரன் - போன்ற பல படங்கள் காட்சி-விருந்தை வெகுவாய் படைத்தனவே?! மேலும், "அவதார்" படம் - "காட்சி விருந்து" மட்டுமல்லாமல் நல்ல கதையை, நல்ல அறிவியல் அடிப்படையை கொண்டு இருந்ததை எவரும் மறுக்க முடியாது. அதனால் தான், அவதார் திரைப்படம் அத்தனை பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றது.
 • இந்த படத்தில் செல்வராகவன் என்ன சொல்ல வருகிறார் என்பதை இறுதி வரை புரிந்துகொள்ளவே முடியவில்லை!!! இன்னமும், என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை! இரண்டாம் உலகம் ஒன்று இருக்கிறது என்கிறார் - சரி, (கற்பனையே என்றாலும்) இருக்கட்டும்; ஒப்புக்கொள்கிறோம்! அதை நோக்கித்தான் "இன்றைய அறிவியலும், இந்திய அறிவியலும்" பயணப்பட்டுக் கொண்டு இருக்கிறது. 
 • எனவே, இந்த திரைப்படத்திலும் - இரண்டாம் உலகம் உருவாக்கப்பட்டு விட்டது! ஒப்புக்கொள்வோம்!! சரி, அங்கேயுமா?! வில்லன் ஒருவரை கடத்த (சரி, பெரும்பான்மையான பெண் என்ற காரணத்தை விட்டுவிட்டு "கடவுள்" என்ற மாற்றம் உள்ளதே?! என்றே கொள்வோம்?!) முயல்வதாய், அதனை முறியடிக்க "ஹீரோ" சண்டை இடுகிறார்... என்று தொடர்வது??
 • புதிய உலகம் - எவரும் பார்த்திராத உலகம்! அறிவியல் கூட அங்கே இன்னும் உயிர்கள் வாழ சாத்தியம் இருக்கிறதா என்று ஆராய்ந்து கொண்டிருக்கும் உலகம்!! அங்கே, வாழ்வியல் அடிப்படையில் - எத்தனை கற்பனைகளை திணிக்கலாம்?! இயல்பு-உலக மக்கள் பொல்லாத தோற்றம், குடிக்க நல்ல தண்ணீர் இல்லாதது, சரியான மின்சாரம் இல்லாதது, சரியான மருத்துவ வசதி இல்லாதது போல் - எத்தனை, எத்தனை காரணிகளை கையாண்டிருக்க வேண்டிய தளம் இது? அந்த உலகத்தில் வேறுபட்டு எதையாவது சொல்லி இருக்கலாமே??!!
 • அந்த உலகத்தில் எல்லா வசதிகளும், வண்ணமயமான விளக்குகள் முதல் கொண்டு - அனைத்தும் இருக்குமாம். மாட-மாளிகைகள் இருக்குமாம்! அனைத்து சராசரியான வார்த்தைகள் கொண்டு (கணவன், மனைவி உட்பட) தமிழ் பேசுவார்களாம்; ஆனால், காதல் என்னவென்றே தெரியாதாம்! ஏன், அந்த வரத்தை கூட தெரியாதாம்!! காதல் இல்லாததால் "பூக்கள்" மட்டும் பூக்காதாம்?! ஆஹா.... என்ன ஒரு அற்புதமான சிந்தனை?!?!
 • அதனால், இங்கே இயக்குனர் எடுத்துக்கொண்டிருப்பது - காதல் இன்னமும் அந்த உலகத்தில் முளைக்கவில்லை என்பதை காட்டவாம்!? என்னையா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க, என்னை மாதிரியான "கோடிக்கணக்கான இரசிகர்கள்"??-ஐப் பற்றி?!! ஹீரோவின் அப்பாவுக்கு தன்-மகன் சிங்கத்தைக் கொல்ல காட்டுக்கு செல்லும்போது பதறும் அளவுக்கு "அன்பும்/ பாசமும்" இருக்குமாம்??!! ஆனால், (அவர் உட்பட) எந்த ஆணுக்கும் பெண் மீது காதல் இருக்காதாம்! பெண்ணை போதைப்பொருளாகவே எல்லாரும் பார்ப்பார்களாம்?! பெண் மீது காதல் இல்லாமல் மகன் என்ற பாசம் எப்படி வரும்? என்ன விதமான கதையம்சம் இது?!
 • கதையின் கருவாய் சொல்லப்படும் - இன்னுமொரு காரணம் "காதல் ஒருவனை எத்தனை தூரம் வேண்டுமானாலும் பயணிக்க வைக்குமாம்"! சரி, அதுவும் இருக்கட்டும்; "முதல் உலக" ஹீரோவை "இரண்டாம் உலகம்" வரை பயணிக்க வைக்கிறது. அவனின் வேலை, அங்கே இருக்கும் ஓர் பெண்ணுக்கு "காதலை" உணர்த்துவது/ காதலை வரவைப்பது/ காதலை புரிய-வைப்பது என்பது போல் - கதை நகர்கிறது!
 • ஆனால், அதற்கான திரைக்கதை அமைப்பில் - எந்த வலுவான காட்சியும்/செய்கைகளும் இல்லை!! "சக்களத்தி சண்டை" போன்று இரண்டு உலக ஹீரோக்களுக்குள் "சக்கலத்தன் சண்டை" என்பது போல்  தொடர்ந்து திரைக்கதை நகர்ந்து கொண்டு இருக்குமாம்! திடீரென, ஒரேயொரு இடத்தில் முதல் உலக ஹீரோ "புகைப்படத்தை" காட்டி கதை சொல்வானாம் - உடனே, இரண்டாம் உலக ஹீரோயினுக்கு காதல் புரிந்து விடுமாம்! அதன் பின், இரண்டாம் உலக ஹீரோயின் காதல்-வயப்பட்டு, இரண்டாம் உலக ஹீரோ மேல் "ஒரே காதலாய்" பொழிவாளாம்; உதட்டோடு முத்தமிடுவாளாம்! உடனே, இரண்டாம் உலக ஹீரோ "காதல்னா என்ன?"ன்னு கேட்கும்போது, முதல்-உலக ஹீரோ தான் காதலை சொல்லிக்கொடுத்ததாய் சொல்கிறது காட்சி அமைப்புகள்.
 • சரி, காதல்னா என்னன்னே தெரியாது; இரண்டாம் உலக ஆண்கள் அனைவரும், அனைத்துப் பெண்களையும் போதைப்பொருளாய் பார்க்கும் போது - இரண்டாம் உலக ஹீரோ மட்டும், ஒரு பெண்ணை அத்தனை காதல் நிறைந்து - ஒரு பெண்ணை முறையாய் அடைய நினைப்பது எப்படி வந்தது? (காதல் என்ற)பெயரே தெரியாது வந்தது என்றே கொண்டாலும், அதே வண்ணம் அந்த பெண்ணுக்கும் (இயல்பாய், போகப்போக)வந்ததாய் காட்டி இருக்கலாமே?!  இறுதியில் - அப்படித்தானே, இயல்பாய் அந்த பெண்ணுக்கு வந்ததாய் தோன்றுகிறது?! பிறகு, என்ன முதல்-உலக ஹீரோவுக்கு இரண்டாம் உலகில் வேலை?! அதுவும், அந்த வேலையை சற்றும் சரியாய் செய்யாத போது??!!
 • என்னைக்கேட்டால், இந்த படத்திற்கு 2 காதல்கள் தேவையே இல்லை! அதுவும், காதல் பற்றியே அத்தனை ஆழமாய் படத்தை நகர்த்தி இருக்க தேவையில்லை!! இல்லை எனில், குறைந்த பட்சம் படத்தின் பெயரை "இரண்டாம் காதல்" என்றாவது வைத்து இருக்கலாம்!
 • இம்மாதிரி பல கேள்விகள் எழுகின்றன! அனைத்தையம் கேட்டிட நான் விரும்பவில்லை; படம் எடுப்பது எத்தனை சிரமமான விசயம் என்பதை - அனுபவம் இல்லை எனினும் - என்னால் முழுதுமாய் உணர முடிகிறது! ஆனால், இவை எல்லாம் அடிப்படையான விசயங்கள்! இரண்டு விதமான காதல்களை சொல்வதற்கு "ராஜா-ராணி" போன்ற திரைப்படங்கள் போதாதா??!! அதற்கு ஏன், 6 ஆண்டுகள் சிரமமும், இத்தனைப் பொருட்செலவும்??!!
 • இன்னமும், இரசிகர்களாகிய எங்களையே காரணம் சொல்லி - அதனால் தான் காதல் காட்சிகள் வைத்தோம்! ஆடைகள் குறைந்த பாடல்கள் வைத்தோம்! என்று கூறி - எங்களை மென்மேலும் கொச்சைப் படுத்தாதீர்கள்!!! ஆளவந்தான், விக்ரம், குணா, மகாநதி - போன்ற படங்கள் இரசிகர்களால் பெரிதும் நிராகரிக்கப்பட்ட காலம் எல்லாம் எப்போதோ மாறிவிட்டது. அதனால் தான் - சேது, பிதாமகன், நந்தா, மைனா, பிஸ்ஸா, ஆடுகளம், எந்திரன், அந்நியன், கும்கி போன்று பல படங்கள் - இப்போது தொடர்ந்து வெற்றிபெற்று வருகின்றன! இரசிகர்களின் இரசிப்புத்தன்மை வெகுவாய் உயர்ந்து - வெகுகாலம் ஆகிவிட்டது. உண்மையில், இப்போது இயக்குனர்களின் திறமையும், திரைக்கதை வலுவும் குறைந்து வருகிறதோ என்ற சந்தேகமே எனக்கு வலுக்கிறது.
பின்குறிப்பு: இந்த படத்தை ஒரு முறையாவது பாருங்கள் - அதுவும், திரையரங்கில் பாருங்கள்! இம்மாதிரியான, தயாரிப்பாளர்களை காப்பாற்றவாவது - இதை செய்யுங்கள்!! இல்லையெனில், இது போன்ற படங்களை எடுக்க ஒருபோதும் "எவரும்" முன்வர மாட்டார்கள்! நான் முன்பே கூறிய வண்ணம் - இது மிகவலுவான தளம்-கொண்ட திரைப்படம்! நல்ல காட்சி-விருந்தாய், (சிறு, சிறு குறைகள் இருப்பினும்) நல்ல "கிராபிக்ஸ்" வேலைகள் நிறைந்த படம். ஆனால் - மிகக்குறைந்த தரமான கதை, மிகவும் வலுவிழந்த திரைக்கதை போன்றவற்றால் - இந்த படம், ஒரு சாதாரணமான படமாகத் தான் தோன்றுகிறது! மிகமுக்கியமாய் "இரண்டாம் உலகம்" என்ற தலைப்பு சற்றும் பொருந்தவே இல்லை!!!

திங்கள், நவம்பர் 04, 2013

"காரில்" முன்சீட்டு"காரில்" முன்சீட்டில் உட்காருவது குறித்து, அதற்கான போட்டி பற்றி உங்களுக்கு தெரியும். அதில்...
 1. பெரும்பாலும் பலரும் உட்காருவது - வேடிக்கை பார்ப்பதற்காய் இருக்கும்.
 2. உடல்பருத்த சிலர் உட்காருவது - செளகர்யம் கருதியாய் இருக்கும்.
 3. உடல்மெலிந்த சிலர் (இன்னொருவர் உட்கார்ந்தும் கூட இடம் மிகுதியாய் இருக்கும்!) உட்காருவது - தானும் உறங்காது, ஓட்டுனரையும் உறங்கவிடாது பார்த்துக்கொண்டு மற்ற வாகனங்களை கவனித்து பத்திரமாய் செலவதற்காய் இருக்கும்.
இப்போது... (ஆங்!... அதேதான்!!) சாதாரணமாய் "காரில்" முன்சீட்டில் உட்காருவதற்கே இப்படி பலதரப்பட்ட காரணங்களும், முதன்மைத்துவங்களும் இருக்கும்போது...
 • ஒருவரின் பங்கும் - ஒவ்வொரு உறவும் சார்ந்தும் மாறுபடும்!/ மாறுபடவேண்டும்!! என்பதை  ஏன் ஒப்புக்கொள்ள மறுக்கிறோம்? 
 • அவ்வாறே, ஒவ்வொரு உறவையும் பொறுத்து - சில விசயங்களின் முதன்மைத்துவங்களும் மாறுபடும்!/ மாறுபடவேண்டும்!! என்பதை ஏன் ஒப்புக்கொள்ள மறுக்கிறோம்??

ஞாயிறு, நவம்பர் 03, 2013

என்மகள் யாரைப்போல் இருக்கிறாள்???
       மேலுள்ள புகைப்படங்களில் இடது-பக்கம் இருப்பதை பாருங்கள்! நானும் என்மகளும் ஒன்றாய் இருக்கும் புகைப்படங்களுள் எனக்கு மிகவும் பிடித்தமானது. இதுபற்றி நானே சிலாகித்து பலரிடமும் கூறியதுண்டு, பின்வருமாறு! முதலில், நானும் என் மகளும் பார்க்கும் விதத்தை கவனியுங்கள்; இருவரும் ஒருபோலவே பார்ப்போம்! இருவரின் புருவங்களும் சுருக்கி இருக்கும் அளவை பாருங்கள் - இரண்டும் ஒரேமாதிரியே இருக்கும். இருவரின் முக-வடிவம், கூந்தல்-வடிவம், இருவரும் கைகோர்த்து இருக்கும் விதம் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.  இந்த புகைப்படத்தை எடுத்தது, என் அண்ணன்; இது எடுக்கப்பட்டது என் மகள் 2 ஆண்டுகள் கடந்த 2-ஆம் நாள்! அந்த வயதில், அவளுக்கு என்ன சொல்லி என்னைப்போலவே செய்கைகளை கொண்டிருக்க செய்திருக்க முடியும்?! இது, இயல்பாய் வந்தது. சரி! எல்லா தந்தைக்கும் இதுபோன்ற உணர்வே இருக்கும்; இதில் என்ன இருக்கிறது? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நான் இங்கே விளக்க-முனைவது, வேறொரு பரிமாணம். 

     என்மகள் என்னைப்போலவே இருக்கிறாள் என்று நானும் நினைத்துக்கொண்டு, எல்லோரும் சொல்லக்கேட்டுக் கொண்டு இருக்கும்போது - என்தங்கை ஒருவள் (அவள் நான் அடிக்கடி குறிப்பிடும் என் நண்பனின் தங்கை!); "அண்ணா! விழி அப்படியே அப்பா போல் இருக்கிறாள்!" என்றாள். என்னப்பனே எனினும், அதை என்னால் ஒப்புக்கொள்ளவே முடியவில்லை; அவளிடமும் இல்லையில்லை, என்னைப்போல் தான் இருக்கிறாள் என்று வாதிடவும் இல்லை. ஆனால், இதற்கு முன் பலமுறை "நீங்க, அப்படியே அப்பா போல் இருக்கீங்கண்ணா!" என்று கூறியிருக்கிறாள்; அப்போதெல்லாம், அது கேட்டு அகமகிழ்ந்தேன். ஆனால், என்மகளை அவர்-போல் இருக்கிறாள் என்பதை, என்னால் ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை?! என்று யோசிக்க ஆரம்பித்தேன். அதற்கு எனக்கு - இந்த சமுதாயம் சார்ந்த பார்வையில் ஒரு விளக்கம் கிடைத்தது; அதுதான் காரணமா?! என்று எனக்கு தெரியவில்லை! ஆனால், அதுவும் ஓர் காரணமாய் - அடிமனதில் இருப்பதை மறுப்பதற்கில்லை என்றே படுகிறது.

         இந்த சமுதாயம் சார்ந்த பார்வையை பார்க்கும் முன் வேறு சில நிகழ்வுகளை விளக்குதல் அவசியம் என்று தோன்றுகிறது; என்னவள் அடிக்கடி, எம்மகளின் சில நடவடிக்கைகள் "அவளின் தந்தை (என் மருதந்தை) போல் இருக்கின்றன!" என்பாள். முதலில், அது எனக்கு கோபத்தை கொடுக்கும்; பின் நாளடைவில், அதில் என்ன தவறு இருக்கிறது?! அதுபோல தானே என்மகள் செய்கிறாள்/இருக்கிறாள் என்ற உண்மை விளங்கும். மெல்லமெல்ல என்னவள் சொல்வதில் எந்த தவறும் இல்லை என்று உணர்ந்துவிட்டேன். இதுமட்டுமல்ல! என்னவள் அதே-விதம் எம்மகளை என்னப்பனுடனும் ஒப்பிட்டு பேசுவாள்; குறிப்பாய், "விழி சாப்பிடற விஷயத்தில் அப்படியே உங்க-அப்பா மாதிரி" என்பாள். ஆம்! என்னப்பன் சாப்பிடும் விதத்தை எங்கள் உறவுகள் பலவும் இரசித்து கூறி இருக்கின்றன. ஒருவேளை, அவருக்கும் சமைக்க தெரியும் என்பதாலோ என்னவோ?! சாப்பாட்டில் எந்த குறை இருந்தாலும் - ஒருமுக பாவனையும் இல்லாது சுத்தமாய்/சுவைத்து சாப்பிடுவார்.

        என்னவளின், இவ்விருவிதமான செய்கைகளை நினைக்கும்போது - என்னுடைய சிந்தனை மேலும் விசாலமாகும்! ஏன், என்மகள் என்னப்பன் போல் இருப்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை?! என்பதற்கு இந்த சமுதாயம் ஓர் காரணமாய் இருக்கலாம் என்று பின்வருமாறு உள்ளது! இயற்கை/இறைவன் விந்தையால் - ஓர்பெண் ஒர்குழந்தையை தன்குழந்தை என்று நிரூபிக்க எந்த அவசியமும் இல்லை! அவளின் - வலியும்/வேதனையும் அனைவரும் அறிவர்; முன்புபோல், (திரைப்படத்தில் கூட)குழந்தை மாறிப்போவதாய் காண்பிக்கும் சாத்தியமும் இப்போது இல்லை! மருத்துவமனை செயல்முறை அத்தனை சீர்மை! அதனால், ஓர்பெண் தன்குழந்தையை எவரிடம் ஒப்பிடவும் தயங்குவதில்லை என்று தோன்றுகிறது! ஆனால், ஓர் ஆணின் நிலை அப்படியல்ல; வேறொருவர் மாதிரி இருக்கும் பட்சத்தில் அவன் சந்திக்கவேண்டிய சூழல் வேறுவிதமாய் இருக்கிறது! இதைத்தான் பல திரைப்படங்களும் "நகைச்சுவை" என்ற பெயரில் காண்பிக்கின்றன.

   ஒருவேளை, அதனால்தான் நான் (அல்லது வேறொரு ஆண்) அப்படி ஒப்புக்கொள்ள முடியவில்லையோ?! இம்மாதிரி சிந்தனைகளுடன் ஆலோசித்துக் கொண்டிருக்கும் போதுதான் என்மகளின் 4-ஆவது பிறந்தநாளன்று எடுத்த புகைப்படத்தை (வலது!) பார்த்தேன். நானும், என்னப்பனும் - மேற்கூறிய வண்ணமே - ஒரேமாதிரி தலையை சாய்த்து இருப்பதும், ஒரேமாதிரி முக-அமைப்பு கொண்டிருப்பதும், ஒரே-அளவில் சிரிப்பதும் - இப்படி பலவான ஒற்றுமைகளையும் காண நேர்ந்தது. அட! நான் அப்படியே என்னப்பன் போலவே இருக்கிறேனே?! என்று சிலாகித்து கொண்டிருக்கும் போதுதான்; "அடே இளங்கோ! நீ அப்படியே உன்னப்பன் போல் இருக்கிறாய் என்றால், உன்மகள் - அப்படியே உன்னப்பன் போலிருப்பதில்" என்ன தவறடா?! என்று உள்மனம் கேட்டது. அடடே! ஏன் இத்தனை நாளும், இதை யோசிக்கவில்லை?! என்ற சிந்தனை வந்தது; சமுதாயம் என்ன?! எவர் என் ஆழ்மனதில் அப்படியோர் தவறான சிந்தனையை விதித்திருந்தால் எனக்கென்ன...

ஆம்! என்மகள் என்னப்பன் போல் தான் இருக்கிறாள்!!!              


படிப்புக்கும், சாதனைக்கும் என்ன சம்பந்தம்???     ஒவ்வொரு முறையும் என்மகளுடன் - என்னவள் "ஹோம்-வொர்க்" முடிக்க போராடிக்கொண்டு இருக்கும் போதும் - நான் கேட்பது "ஏன் அவளை இப்படி போட்டு படுத்துறாங்க, அவங்க ஸ்கூல்ல?!" என்பது தான். என்னவள் சொல்லும் பதில் "உங்க பொண்ணு மட்டும் கஷ்டப்படல; எல்லாப் பசங்களும்  தான் படிக்கறாங்க!; போட்டி அப்படி இருக்கிறது" என்பது தான். மறுக்கவில்லை! இன்று பிள்ளைகள் எடுக்கும் மதிப்பெண் அப்படித்தான் இருக்கிறது. ஆனால், என்னுடைய "மனதங்கம்" வேறுவிதமானது; இருப்பினும், என்னவள் படும்-பாட்டை அறிந்து அவளுடன் - இப்போதெல்லாம் எதுவும் விவாதிப்பது இல்லை. மேற்கூறிய கேள்வியைக்கூட கேட்பதில்லை! ஆயினும், என்னுள் அந்த கேள்வி தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. "படிப்புக்கும், சாதனைக்கும்/வேலைக்கும் என்ன சம்பந்தம்?" என்பது தான் அந்த கேள்வி! தேவையற்ற/முறையற்ற இந்த போட்டியால் - எந்த நன்மையும் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை; குழந்தைகள் "குழந்தைகளாய்" இருக்க-வேண்டியதை தொலைத்துவிட்டதை தவிர!!!

     இந்த கல்வி-முறையை நான் முன்பே பலமுறை பலவிதங்களில் விவாதித்து இருக்கிறேன்; என்னுடைய பார்வையாய் பதிந்தும் இருக்கிறேன். இருப்பினும் - என்மகள் போன்ற குழந்தைகள் படும் இன்னலை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை! ஓர் குழந்தைகளின் தரம் என்ன? அவர்களின் விருப்பு என்ன?? அவர்களின் ஆற்றல் என்ன??? என்பது போன்ற எந்த சிந்தனையும் இல்லாத "கல்வியல் முறை". எந்த படிப்பு எவருக்கு உகந்தது - என்பது பற்றிய அக்கறை இல்லாத கல்விமுறை. மேலும், இம்மாதிரி ஒருவர் படிக்கும் படிப்புக்கும் அவர் திறமைக்கும்/சாதனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பின் ஏன், இந்த வயதிலேயே அவர்களுக்கு இப்படிப்பட்ட கல்விச்சுமையை கொடுக்க வேண்டும்?! பள்ளி-முடித்து, எந்த பிரக்ஞையும் இல்லாமல் - பெருங்கூட்டமாய் சென்று ஒரு குறிப்பிட்ட உயர்-கல்வியை படிப்பது தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது. அப்புறம் எதற்கு 3 வயதில் ஒரு குழந்தை இந்த பாடுபட வேண்டும்? இவர்களிடம் எனக்கு இருப்பது இந்த ஒரேயொரு கேள்விதான்...

"Bill Gates" அவர்கள் கல்லூரி "டிராப்-அவுட்" என்பது எத்தனை பேருக்கு தெரியும்???     

என்மகளும், என்தாயின் "மகனும்""செல்போனில்" தீபாவளி வாழ்த்து
சொல்கையில் "ஏதாவது செஞ்சு
சாப்பிடுடா!" என்று அழுகையுடன்;
சொல்லும் என்தாயிடம்; எப்படி

சொல்வேன்? எப்படி சொல்வேன்??

முறுக்கு முதல் அனைத்தாலும்
"கிறுக்காய்; பலரையும்" சுவையால்
கட்டிப்போடச் செய்யும் வித்தையை
கிட்டியவன் - என்தாயிடம்; எப்படி

சொல்வேன்? எப்படி சொல்வேன்??

"என்மகள் அருகில் இல்லாததால்;
எனக்கேதும் செய்யவே பிடிக்கவில்லை!"
என்ற உண்மையை, எப்படி
என்தாயே?! உன்னிடம் திடமனதாய்,

சொல்வேன்? எப்படி சொல்வேன்??

உன்மகன் ஆனபின் தானே;
"நான்ஆனேன்?! என்னுயிர் ஆகிட்ட
என்மகளின் அப்பனாய்??!!"- தனித்திருப்பது
"உன்மகனும்" தானென்பதை அறிந்தும்...

எப்படி சொல்வேன்? சொல்-தாயே!

கடைப்பிள்ளை என்மீது மட்டுமல்ல;
கடவுள்மீதும் பித்து கொண்டவள்-என்ற
காரணத்தால்; "விரதம்"என பொய்
கூறிவிட்டேன் - மன்னித்துவிடு! என்பதைக்கூட?!;

எப்படி சொல்வேன்??? சொல்-தாயே!!! 

விழியப்பனோடு விவாதிப்போம் (03112013)
புகைப்படத்தில் உள்ள வாசகம் போன்ற பலவற்றை, பலரும் கேட்டிருக்கக் கூடும். தமிழில் சொல்லவேண்டுமானால் "கற்பழிப்பு என்பது தவிர்க்கமுடியாது போனால், அமைதியாய் அதை அனுபவியுங்கள்" என்று பொருள் கூறலாம். இதை மேலோட்டமாய் பார்க்கும்போது தவறாய் தோன்றக்கூடும். நானும், அப்படி யோசித்தவனே! ஆனால், ஆழ யோசிக்கும்போது - அவ்வாறு செய்ய முடிந்தால் - அந்த சம்பவம் "உளவியல்" போன்ற பின்விளைவுகளை தவிர்க்கக்கூடும் என்ற அர்த்தத்தில் கூறப்பட்டிருக்கலாம் என்று தோன்றியது!! இது போன்று பல காரணங்களும், இருக்கக்கூடும் என்று தோன்றியது!!!

இது சாத்தியமா?! என்று தெரியவில்லை! ஆனால், இதுபற்றி ஆழ யோசித்தபோது - எனக்கு வேறொரு யோசனை வந்தது. இம்மாதிரி கற்பழிப்பு என்பது தவிர்க்கமுடியாதது என்ற நிலை வரும்போது - பெண்கள், தங்கள் உடைகளை தாமே களைந்து எறிந்துவிட்டு "வாடா, மனித-மிருகமே?! இதற்கு தானே ஆசைப்பட்டாய்" என்று ஆவேசமாய் கதறி - ஓர் இறுதி-முயற்சி செய்து பார்க்கலாம் என்று தோன்றுகிறது. 

என்னுடைய கூற்றிற்கு இது தான் காரணம்: நிர்வாணத்தில், ஆபாசம் இல்லை! காமம் இல்லை!! அங்கே எந்த உணர்ச்சிகளும் இல்லை!!! இப்படி ஓர் பெண் செய்யும் போது - அந்த மனிதமிருகம் தடுமாறிட சாத்தியம் இருக்கிறது. அதை வைத்து, அவனை வீழ்த்த முனையலாம்! அல்லது அந்த மிருகம், செய்வதறியாது - கற்பழிப்பில் இறங்காமல் இருப்பதற்கும் சாத்தியம் இருப்பதாய் படுகிறது.

(குறிப்பு: கோவில்களில் இருக்கும் எந்த நிர்வாண-சிலையும் நம்மில் எந்த உணர்ச்சியையும் தூண்டாதத்திற்கு "வெறும்-பக்தி மட்டும்" காரணம் அல்ல! உண்மையில், இம்மாதிரியான விளக்கங்களை உண்டாக்கக் கூட அங்ஙனம் படைக்கப்பட்டிருக்கலாம்!!)

- இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? வாருங்களேன், விவாதிப்போம்!!  

வெள்ளி, நவம்பர் 01, 2013

அதீத நம்பிக்கை...
ஒவ்வொரு இரவும், நாளை காலை "எழுந்திரு(க்க/ப்போம்)" என்று "அலாரம்" வைத்து உறங்குவதைக் காட்டிலும் "அதீத நம்பிக்கை" வேறெதுவும் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை!!!


(குறிப்பு: வேறென்ன காரணம் தேடுகிறோம்? இதைக் காட்டிலும் வெகு-குறைந்த அளவே வேண்டிடும் "நம்பிக்கையை", அதை எதிர்பார்ப்பவரிடம் காட்டிட???

(மற்ற)பெண்ணியவாதிகளிடம் ஓர் கேள்வி...


பெண்ணியம் பற்றி பேசுவோரிடம் ஓர் கேள்வி!
(நானும் பெண்ணியத்தை ஓர் நடுநிலையோடு அணுகுபவன் என்பதை மனதில் கொள்க!)...

எல்லாவற்றிலும் - சமவுரிமை கேட்கும்போது - வீடு வாங்குவது, சொத்து வாங்குவது போன்ற விசயங்களில் மட்டும் (இன்னமும்)ஏன் "அது ஆணின்(ஆண்மையின்) அடையாளம்" என்று தனித்து பார்க்கப்படுகிறது???!!!

"வலி"யில் வலியது...உலகின் மிகச்சிறந்த பலசாலியின் மிகப்பலமான அறைதல் தருவதை விட; "உலகே அவரென" நினைக்கும், மிக-மென்மையான ஒருவரின் பேரமைதி தரும் "வலி" அதிகமாய் இருப்பதேன்???

(வலியில் ஒன்று மனம் சார்ந்து இருப்பதால் மட்டும் என்று எனக்கு தோன்றவில்லை!!!)

ஆம்ப்லெட்டில் பூண்டு...
என்னவளும், என்மகளும் - இங்கு வந்திருந்த போ து; வாங்கிய "பூண்டு" நிறைய மீந்து போயிருந்தது! என்ன செய்வதென்று யோசித்தபோது (வழக்கம் போல்) ஓர் புதிய யோசனை (??!!) வந்தது. பூண்டை பொடிப்பொடியாய் நறுக்கி "ஆம்ப்லேட்" செய்தேன் (முதல் படம்); நல்ல சுவையாக இருந்தது. வேறெங்கும் இது போல் செய்கிறார்களா?! என்று எனக்கு தெரியவில்லை. என்னைப் பொருத்தவரை - இது புதிய விசயம். 2 நாட்கள் கழித்து, பூண்டுடன் - நறுக்கிய காய்கறிகளையும் - சேர்த்து இன்னுமோர் "ஆம்ப்லேட்" செய்தேன் (இரண்டாவது படம்). அது, மேலும் நல்ல-சுவையாய் இருந்தது!!

விருப்பம் இருப்பின், நீங்களும் - இதுபோல் செய்து பார்க்கலாமே?

வெள்ளி, அக்டோபர் 25, 2013

விழியப்பனோடு விவாதிப்போம் (25102013)விழியப்பனோடு விவாதிப்போம் (25102013):

ஓர்நாள் - என்னுடன் வேலை செய்யும் நண்பி ஒருவர் தான் "விவாகரத்து" செய்யவிருப்பதை கூறினார். நான் உட்பட பலரும் அதிர்ந்தோம்; அவளுக்காய் வருந்தினோம்! அந்த அளவிற்கு நல்ல-பெண் அவள். பின்னொரு நாள் - விவாகரத்து ஆகிவிட்டது என்றாள்; அனைவரின் இதயமும் கனத்தது!! அதன்பின் அவளை இயல்பாய் பார்ப்பதே அரிதாய் இருந்தது. 

சிலமாதங்கள் சென்றபின் -  ஓர் நாள், மீண்டும் தன் கணவனோடு இருப்பதாய் கூறினாள். எனக்கு மிகுந்த சந்தோசம்! நம் நாட்டில் - விவாகரத்து பெற்றவர் விவாகரத்துக்கு பின்னும் நிம்மதியில்லாமல் இருக்கும் (அல்லது) இருக்கவிடாது செய்யும் சூழ்நிலை/சமூகத்தால் - நான் "விவாகரத்து ஆகிவிட்டது, என்றாயே?!"என்றேன். அதற்கு அவள் கூறிய அந்த பதில் "சொற்ப வார்த்தைகளையே" கொண்டிருந்தாலும் என்னுள் பல-புரிதல்களை விதைத்தது. 

அந்த பெண் சொன்ன பதில் மிகச்சரியாய் இதுதான்: "Elan! It is just a paper"!

இதைக் கேட்ட பின் நான் விக்கித்து போனேன்! பின் என்னுள் நானே "It is just a paper" என்று சொல்லிப்  பார்த்தேன். ம்ம்ம்... PAPER; அடேய், இளங்கோ! அது வெறும்-பேப்பர்(காகிதம்)டா என்று என் மனம் சொன்னது.

விவாகரத்து என்பது - ஒன்றுமேயில்லை என்பதை இதைவிட வேறு எவர்/எப்படி தெளிவாய் விளக்கிட முடியும்???

குறிப்பு: "ஒவ்வொரு மணமுறிவுக்கு(விவாகரத்துக்கு)" பின்னும் "பல கரங்கள்" ஒலியெழுப்பி மகிழ்ந்தாலும் - அதன் பின் வாழ்நாள் முழுதும் "இரண்டு மனங்கள்" (மட்டும்)தொடர்ந்து அழுதுகொண்டே தான் இருக்கின்றன.

*******

சரி, இப்போது விவாதம்! எல்லாவற்றையும் மீறி - பலரும் விவாகரத்து தான் இறுதி என்று ஏன் முடிவு செய்கின்றனர்? அல்லது அதுதான் முடிவென வேகுபலரும் மனதிலாவது நினைத்திட என்ன காரணம்?? விவாகரத்துகள் ஏன் அதிகமாகிக் கொண்டே போகின்றன???        

வெள்ளி, அக்டோபர் 11, 2013

விழியப்பனுடன் விவாதிப்போம் (07102013)விழியப்பனுடன் விவாதிப்போம் (07102013):

நான் என் வாழ்க்கையில் சந்தித்த அனுபவம் கீழ்வருவது!

ஓர் மாமியார் என்னிடம் சொன்னார்! "என்மருமகள், என்னுடைய பெயரனுக்கு ஆசையாய் நான் வாங்கிக் கொடுத்த "முருக்கை" பிடுங்கி எறிந்துவிட்டாள்" என்று! எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது; எப்படி? அந்த மருமகள் அப்படி செய்யலாம் என்று!! எனக்கு அந்த மருமகளையும் பரிச்சயம் என்பதால் அவரிடம் "இப்படி செய்யலாமா? இது நியாயமா?!" என்று கேட்டேன். அந்த மருமகள் சிரித்துக் கொண்டே "அட நீங்க வேற! அந்த முருக்கை 'நாய்' நக்கிவிட்டது!'; அதனால் தான், பிடுங்கி எறிந்துவிட்டேன்" என்றார். மனித-மனம் தான் குறங்கு ஆயிற்றே! நான் உடனே "அடடே! ஏன் இதை அந்த மாமியார் புரிந்து கொள்ளவில்லை" என்று நினைக்க ஆரம்பித்துவிட்டேன். இது தான் பிரச்சனை இங்கே!! நாய் நக்கியதை பார்த்தும் அந்த மாமியார் பொய் சொல்லி இருக்கலாம்! அல்லது அந்த மருமகள் அப்படி ஓர் கதையை பொய்யாய் சொல்லியும் இருக்கலாம்!!

இப்போது அடுத்த கட்டம்: மாமியார், தன் கனவனிடம் "உங்க மருமகள்" என்னை மதிக்கறதே இல்லை; அதை என்னன்னு கேட்கக் கூடாதா?! மருமகள், தன் கனவனிடம் "உங்க அம்மா" என்னை நம்பறதே இல்லை; அதை என்னன்னு கேட்கக்கூடாதா??!! அந்த இரு கனவன்கள் சும்மாவே இருக்க நினைத்தாலும் இவர்கள் விடுவதில்லை. ஆதலால், தந்தை; தன் மகனிடம் "ஏண்டா! உன் பெண்டாட்டியை கொஞ்சம் புரிந்து நடந்துக்க சொல்லக்கூடாதா?!". மகன், தன் தந்தையிடம் "ஏன்! உங்க பெண்டாட்டியை கொஞ்சம் புரிந்து நடந்துக்க சொல்லக்கூடாதா??!!". மாமியார்-மருமகள் பிரச்சனை, இப்போது தந்தை-மகன் பிரச்சனையாய் உருவாக ஆரம்பித்துவிட்டது.

நான் கூறியது - ஓர் வீட்டில் நான் பார்த்த ஒரேயொரு நிகழ்வை தான்! இதுபோல் நூற்றுக்கணக்கான நிகழ்வுகள், பல்லாயிரக்கணக்கான இல்லங்களில் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இப்போது, விவாதத்திற்கான கேள்வி:

இந்த பிரச்சனையை மாமியாரும்; மருமகளும் எப்படி அனுகவேண்டும்? அதை எப்படி தந்தையும்-மகனும் எடுத்து செல்லவேண்டும்??

{குறிப்பு: தயவு செய்து, நீங்கள் கருத்திடும் முன் - இரண்டு "திறமையான" மனைவிகள் (மாமியார் & மருமகள்) நடத்தும் நாடகத்தால்; பாதிக்கப்படுவது இரண்டு "அப்பாவியான" கனவன்கள் (தந்தை & மகன்) என்பதை நினைவில் கொள்ளுங்கள்!!!}

விழியப்பனோடு விவாதிப்போம் (01102013)


(விழியப்பனோடு விவாதிப்போம் என்று தலைப்பிட்டு "முக-நூலில்" தொடர்ந்து ஒவ்வொரு விவாதத்தை 2 வாரங்களாய் நடத்தி வருகிறேன். ஏதோ, ஓரளவிற்கு சிலர் விவாதம் செய்கின்றனர். சரி! அதை அப்படியே வலைப்பதிவிலும் பதிந்து வாதத்திற்கு விட்டுவிடலாம் என்றோர் முயற்சி!) 
***************


விழியப்பனோடு விவாதிப்போம் (01102013):

வெகு-நிச்சயமாய் புகைப்படத்தில் உள்ள வாசகத்தை பலரும் படித்திருப்பீர்! அதில் உண்மையும் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். நான் முதன்முதலில் இந்த வாசகத்தை அறிந்தது, என்னவளின் மூலமாய்! அவள் எனக்களித்த முதல்-பரிசில் இந்த வாசகமே இருந்தது.

விவாதத்தை நான் இப்படி துவங்குகிறேன்:

1. ஓர் உறவில் (உதாரணம்: கணவன்/மனைவி) ஒருவர் இதை பின்பற்றி அடுத்தவர் திரும்பி வருவார் என்று காத்திருக்கிறார்; அவர் திரும்பி வரவேயில்லை! இப்போது; முதலாமவர், இரண்டாமவர் எப்போதும் நம்மவராய் இருந்ததில்லை என்றே நினைக்கவேண்டுமா?
2. சரி, இரண்டாமவரும் அங்ஙனமே நினைத்திருந்தால்? இப்போது சொல்லுங்கள்!

(உள்ளீடு: எந்த ஓர் உறவிலும், எத்தனை வாதிட்டும்; எவர் அதிக-அளவில் அன்பு வைத்திருந்தார் என்பதை அறியவோ/முடிவிடவோ முடியாது! அதிலும் குறிப்பாய், அந்த உறவில் விரிசல் இருக்கும்போது!)

என்னதான், நம்மொழியில் இதனை மிக-எளிதாய் "விட்டுக்கொடுத்தல்" என்ற ஒற்றை-வார்த்தையில் கூறி இருந்தாலும் - அங்கும், எவர் (முதலில்)விட்டு கொடுப்பது? எத்தனை காலத்திற்கு/முறை விட்டு கொடுப்பது?? போன்ற கேள்விகள் தொடர்ந்து இருந்துகொண்டே தான் வருகிறது. 

செவ்வாய், அக்டோபர் 08, 2013

ராஜா ராணி (2013)விழியப்பன் பார்வை: "ராஜா ராணி (2013)" திரைப்படம்

        நேற்று-மாலை பலரும் பரிந்துரை செய்ததன் பேரில், "ராஜா ராணி" திரைப்படம் பார்த்தேன். அந்த படத்தின் மீதான என்னுடைய பார்வையே கீழ்வருவது. முதலில், நான் படம் பார்க்க ஆரம்பித்த அந்த "திகிலான" அனுபவத்தை பகிர ஆசைப்படுகிறேன். ஆம்! திகில் தான்; 19:00 மணி காட்சிக்கு நான் இருக்கை-சீட்டு வாங்கியது 18:31 மணிக்கு (பார்க்க! மேலிருக்கும் புகைப்படம்; அதில், வாங்கிய நேரத்த்தில் ஏதோ தவறு உள்ளதாய் தெரிகிறது!); ஆனால், நான் தான் முதல் ஆள்! உடனே "என்னடா! சிக்கிட்டமா?"ன்னு ஓர் பயம். சரி, இன்னும் 29 மணித்துளிகள் இருக்கின்றனவே என்ற நிம்மதியோடு 2 சமோசாக்களை கொறித்துவிட்டு - திரையரங்கினுள் "ஓர் திகிலோடே??!!" நுழந்தே ந்! ஒருவரே வாங்கி இருந்தாலும், இங்கே படத்தை "காண்பிக்காமல்" விடமாட்டார்கள்! ஆனால், அங்கே ஒருவர் மட்டும் இருந்தார்; அப்பாடா! என் வரிசை எண் 8; இருக்கை எண் 11 (மேலுள்ள, படத்தை பார்க்க), அவரது இருக்கை எண் 13. "பயம்-நீங்கி" அவரருகே சிரித்துக்கொண்டே ஒரு வணக்கம் சொல்லி அமர்ந்தேன்; மனுசன்! ஒரு சிறு-புன்னகைக் கூட பதிலாய் வரவில்லை. பாவம்! அவர் எவ்வளவு நேரம் தனியாய் அமர்ந்து "நடுங்கிக் கொண்டு" இருந்தாரோ??!! அடுத்தது ஒருவர் வந்தார்; இருக்கை எண் 12 - எங்கள் இருவருக்கும் இடையில் வந்து அமர்ந்தவர், எல்லாமும் காலியாய் இருக்க வேறொரு இருக்கைக்கு சென்றார். என்ன காரணமோ (???!!!) அவர் அமர்ந்த இருக்கை எண் "9"!. அப்பாடா! மூவர் ஆயிற்று; தெம்பாய் படம் பார்க்க ஆரம்பித்(தேன்/தோம்)! பின், சிறிது நேரத்தில் 4 பேர் வந்து (அவர்களுக்குள்ளாகவே, எப்போது ஆரம்பித்ததோ என்ற சலனங்களோடும்) எங்கள் வரிசையிலேயே அமர்ந்தனர் என்பது வேறு விசயம். ஆனாலும், 7 பேர் மட்டும் பார்ப்பது ஓர் சுகம் தான் (இதற்கு முன், 5 பேர்களுடன் "பரதேசி" படம் பார்த்தேன் - அபுதாபியில் நான் காலடி வைத்து 2-ஆம் நாள் பார்த்த படம்!). இந்த சூழலில், நாம் சிரிப்பதை நாமே கேட்கும் ஓர் சுவராஸ்யம் இருக்கும் (மற்றவரின் சிரிப்பொலியையும் கூட!)...


சரி, திரைப்படத்திற்கு வருவோம்!

பாராட்டில் என்னுடைய பங்கு:
 • பலரும், குறிப்பிட்டபடி அருமையான படம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை!
 • ஏன் எல்லோரும் இன்னுமொரு "மெளன ராகம்" என்கின்றனர் எனபது எனக்கு புரியவில்லை. இரண்டுக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன என்பது என் கருத்து. இப்படி ஒப்பிடுவதால், மணிரத்னம் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் போகலாம்! ஆனால், இம்மாதிரி இயக்குனர்களை அது பாதிக்கக் கூடும்! என்பது என் எண்ணம்.
 • "ஏன், வெகுவாய் எல்லோராலும் பாராட்டப்படுகிறது?" என்றால், இங்கே பல திரைப்படங்களும் - கனவன்/அல்லது மனைவியின் "முதல் காதல்" பற்றி விவாதிக்கின்றன; ஆனால், அங்கே வாதங்களும்; பழிவாங்குதலும் தான் அதிகம் இருப்பதாய் காண்பிக்கப்படும்! "அவர்கள்"-ஐ விடவா இதற்கு ஓர் பெரிய உதாரணம் வேண்டும்? ஆனால், விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களே திருமணமான இருவரில்-ஒருவர் (கனவன் அல்லது மனைவி) மற்றவரின் "முதல் காதலை" இயல்பாய் பார்ப்பது போல் (இது மட்டுமே - சில காட்சிகளுடன் - எனக்கு தெரிந்து இப்படம் "மெளன ராக"த்துடன் தொடர்பில் இருப்பது!) காண்பிக்கின்றன. ஆனால், இங்கே திருமணமான இருவரும் மற்றவரின் "முதல் காதலை" இயல்பாய் பார்ப்பது போல் காண்பித்து இருக்கின்றனர். மேலும், காட்சிகள் யதார்த்தமாய்! அதனால் தான், இம்மாதிரியான படங்கள் பெரிதும் போற்றப்படுகின்றன என்பது என் எண்ணம்.
 • சரவெடிக்களில் என் நினைவில் இப்போது வந்தவை: 1. "கஸ்டமர் சர்வீஸ்"னா? எனக்கு "4 கஸ்டமர்ஸ்" பிடிச்சு தருவீங்களா? 2. "டார்லிங்! பியர் சாப்பிடறீங்களா/வேணுமா"? 3. "டார்லிங்" ஒரு "லாங்க்-டிரைவ்" போலாமா?? 4. என்ன மாபிள்ளை பரிசை பார்த்தீங்களா? ம்ம்ம்... பார்த்தேன்..."நானும் பார்த்தேன்". 5. என்ன ப்ரதர்? பலர் பல இடங்களில்; ஆனாலும், நஸ்ரியா கேட்கும்போது கொள்ளை-அழகு! 6. அவரு நிறைய "சினிமா" பார்ப்பாரு, போல தெரியுது! இப்படி பல இருக்கின்றன! ஆனால், எனக்கு அவை முழுதுமாய் நினைவில் இல்லை.
 • இயக்குனர் புதியவரா? எனக்கு கண்டிப்பாய் புதியவர்! "வாழ்த்துக்கள் தோழரே! தொடரட்டும் உமது கலைப்பணி". அவர் புதியவர் இல்லை எனில், இந்த வாக்கியத்தில் சிறிது மாற்றம் செய்து கொள்ளுங்கள்; ஆனால், என் "வாழ்த்துக்கள்" அப்படியே இருக்கட்டும்!

பலரும் பார்க்கத் தவறியதாய் - என் பார்வையில்:
 • ஏம்ப்பா? "சத்யராஜ் நல்லா பன்னி இருக்கார்னு" பொதுவா சொல்லிட்டா எப்படிப்பா? இம்மாதிரி கதைகளில் "தந்தை-மகள்" உறவை இதற்கு மேலும் என்னத்த சிறப்பாய் சொல்லிட/காட்டிட முடியும்?? ஒரு "அப்பனா" பெரு-மகிழ்ச்சி அடைந்து சொல்கிறேன்: "யோவ், சத்யராஜ்-ஜு! ஒரு அப்பனா வாழ்ந்து இருக்கய்யா நீ! வாழ்த்துக்கள் யா!". என்ன, இப்படி வாழ்த்தறேன்னு பார்க்கறீங்களா? இது சந்தோசம்-ங்க! அப்படித்தான் வரும் வார்த்தைகள். இன்னமும், புரியலைன்னா - பெண்டாட்டிகள் சந்தோஷமா "டேய், புருஷான்னு" கூப்பிடுவாங்களே! அதை நினைவுப் படுத்திக் கொள்ளுங்கள்; தெளிவாய் புரியும் (சந்தோஷத்துல-ங்கறத, "அடிக்கோடிட்டு" படிங்க! ரெண்டு பேருக்கும் தான் சொல்ட்றேன்!). என் பார்வைகளில் சில...
 • பதிவுத்-திருமண அலுவலக வாசலில் ஓர் நாள் முழுவதும் காத்திருந்து, அந்த ஏமாற்றத்தில் மகள் அழும்போது - தானும், இயல்பாய் அழும் அந்த காட்சி! இதை விட, ஓர் தந்தையை அத்தனை பொருப்பாய் காண்பிக்கவே முடியாது! மகள் அழுவது, காதலன் வராத ஏமாற்றத்தில்... ஆனால், அப்பன் அழுவது? அதுவும் இயல்பாய்?? ஆங்ங்... அது தான்! அதனால் தான், இங்கே அப்பனைப் பற்றி மட்டும் கூறி உள்ளேன். மகள் இம்மாதிரி இருப்பதை பலமுறை, பல விதங்களில், பல படங்களில் பார்த்துவிட்டதால் - அது பற்றி பெரிதாய் இங்கே பேச(ப்போவது) இல்லை (ஆனால், முன்பே ஒரு சிறிய விசயத்தில் சொல்லிவிடேன்; அது "டார்லிங்" என்ற ஒற்றை சொல்!). 
 • எனக்கென்னவோ? இந்த தந்தை-மகள் உறவை இன்னமும் காட்டி இருக்கலாம் என்று ஓர் ஏக்கம்! ஆனால், இன்னும் கொஞ்சம் "அதிகமாய்" சொல்லி இருந்தாலும் - அது படத்தின் கருவை அப்படியே மாற்றி விடும் "அபாயம் இருப்பதை" இயக்குனர் தெளிவாய் உணர்ந்து இருக்கிறார். இது போதுமய்யா!... அட! இதுவே போதுமய்யா!!
 • ஒரேயொரு விசயம், இதற்கு மகுடமாய்! கிளம்பும்போது, தேவையே இல்லாதது போல் தோன்றும்! மாப்பிள்ளையிடம் சொல்லும் "த்தேங்க்ஸ்"ங்க என்ற ஒற்றை சொல்! அடுத்த காட்சியிலேயே, வாசலில் "என்னை ஏமாத்த நீ நடிக்கற; ஆனால், மாப்பிள்ளை ஏம்மா நடிக்கனும்?"; தொடர்ந்து, தலையைத் தடவி "இது தான் உன் வீடு; இது தான் உன் வாழ்க்கை" - ஆயிரமாயிரம் விளக்கங்களை கொடுக்கும் நிகழ்வை - "வெறும் சொற்ப வார்த்தைகள்" கொண்டு! 
 • மன்னிக்கவும்! "தங்க-மீன்கள்" படத்தை இங்கே வெளியிடாததால் இன்னமும் பார்க்கவில்லை. ஓர் தந்தையாய், அந்த படத்தை திரையரங்கில் அல்லது அங்கீகரிக்கப்பட்ட விதத்தில் பார்க்கவேண்டும் என்று உணர்ந்து இன்னமும் பார்க்கவில்லை. ஆனால், ஒரு இளவயது-மகளையும் - தந்தையும் மைய்யப்படுத்திய படம் என்பது எனக்கு தெரியும். ஆனால், அந்த உறவு ஓர் கட்டாயம் போல் (மீண்டும், மன்னிக்கவும்!) எல்லா "தந்தை-மகள்" இடையேயும் பார்க்கலாம். ஆனால், இந்த வயது மகள்-தந்தை உறவு - வேறு! அது தான், உண்மையான உறவை நிலை-நாட்டும் என்பதை சமீபத்தில் என் தலையங்கம் ஒன்றின் மூலமாய் விளக்கி இருந்தேன். இந்த உறவை இப்படியோர் புரிதல் தான் அடுத்த கட்டத்திற்கு இட்டுச்செல்லும் என்பது என் எண்ணம். அந்த வகையில் - இந்த படம் "உயர் தர 'தங்க-மீன்கள்'" என்பதே என் கருத்து.

குறையில் என்னுடைய பார்வை:
 • அது என்னப்பா, அப்படி ஒரு "ட்விஸ்ட்" - அந்த சூர்யா கதா-பாத்திரத்தில்! இடைவேளையில் கழிவறை சென்றபோது, வழக்கம் போல் என் சிந்தனையில் (அது தானே, என் போன்ற பலருக்கும் போதி-மரம்???) அந்த "ட்விஸ்ட்" தெரிந்துவிட்டது (விவேக் ஓர் படத்தில் சொல்வது தான் நியாபகம் வருகிறது: "அங்க கொண்டுபோயா வச்சிருக்கீங்க "ட்விஸ்ட்"டை???). இன்னும், கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம்!!
 • இறுதியில், சூர்யா சொல்லும் காரணம் எதுவும் - நியாயமானதாய் படவில்லை. இங்கே, திரைக்கதையில் ஓர் தொய்வு இருப்பது தெளிவாகிறது. இதற்கு பேசாமல், மேற்கூறிய "ட்விஸ்ட்"டை கொடுக்காமலேயே இருந்திருக்கலாம்.
 • ஏம்ப்பா, அந்த "கீர்த்தனா"வை "இறக்கச்" செய்ய வேறு வழியே தெரியவில்லையா? அப்பட்டமாய் தெரிகிறது - அது சம்பந்தப்பட்ட காட்சிகள் ஆரம்பிக்கும் போதே??!! விபத்தை, விபத்தாய் காண்பிக்க ஆயிரம் வழிகள் இருக்கின்றன! இது, யதார்த்தமாய் தோன்றவே இல்லை; மன்னிக்கவும்! இதற்கு பேசாமல், அந்த பெண்ணை "கொலையே" செய்து இருக்கலாம்.
 • குட்டைப்-பாவாடையும், அது போன்ற உடைகளும் - நயந்தாராவுக்கு சற்றும் பொருத்தம் இல்லை என்பது என் எண்ணம். அழகில்லை! என்பதை காட்டிலும் அசிங்கமாய் தெரிகிறார். எவரேனும், அவருக்கு எடுத்து சொல்லவும்! சாதாரண "ச்சூடிதாரில்" அலலது ஓர் புடவை/அரைப்புடவையில் அவர் அபார-அழகாய் தெரிகிறார். 

என்னுடைய சரவெடி:
 • "போடா, டே!" - எப்படிப்பா, சூர்யாவுக்கு அப்படியோர் தைரியம் வந்தது? - அதுவும், "ஜான்"ஐ பார்த்து சொல்ல??!! "காதலித்து பார்" - என்னென்ன வரும் என்று ஓர் கவிஞர் அழகாய் சொல்லி இருப்பார். இங்கே பாருங்கள்! "திருமணம் செய்ததால்" எப்படி சூர்யாவுக்கு தைரியம் வந்ததுன்னு - ஏன்னா, திருமணம் "ரொம்ப கஷ்டம் பா"! எல்லா தைரியத்தையும் வரவைக்கும்.... ஹா...ஹா....ஹா...
 • "ஓன் சந்தோசம் தான் போயிடுச்சே; உங்க அப்பா, அம்மா சந்தோசத்துக்காக, வாழ்ந்தா தான் என்ன?" - அடப்பாவிகளா! கடைசியில - சந்தானத்தையும் இப்படி "சீரியஸா" பேச வச்சுட்டீங்களே!
 • யப்பா! "கஸ்டமர் சர்வீஸ்"-ங்கறதுக்கு இப்படி ஒரு விளக்கதத்தை "எந்த ஹோட்டல்ல" ரூம் போட்டு யோசிச்சீங்கன்னு சொல்ல முடியுமா??
 • "What? What??" மற்றும் "Funny(கிட்டத்திட்ட "பன்னி" என்பது போல்)  boy" யோவ்! "நான் கடவுள்" இராஜேந்திரன், நீயும் "கலக்கி" இருக்கய்யா!

முடிக்கும் முன்:

"There is (LIFE/LOVE) after love failure"- அழகாய் தான் இருக்கிறது இந்த சொற்றொடர்! ஆனால், நீங்களும் - இதே மாதிரி அந்த சொற்றொடரை படம் முடிந்து, திரை "மூடும் முன்"  போட்டிருந்தால் இன்னமும் - பொருத்தமாய் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்!!

ஞாயிறு, அக்டோபர் 06, 2013

சண்டைகள் இருந்தாலும், உண்மையும் இருக்கட்டும்...       கடந்த வாரம் முதல் "குட்டிச் சுட்டீஸ்" என்ற நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகிறேன். உம்மில் பலரும் பார்த்திருப்பீர் என்பதில் எந்த ஐய்யமும் இல்லை. அந்த நிகழ்ச்சி எனக்கு கொடுத்த புரிதலை இங்கே விளக்க ஆசைப்படுகிறேன். ஆரம்பத்தில், குழந்தைகள் தம் பெற்றோர் செய்யும் தவறுகளை/அவர்களின் சண்டைகளை விளக்கும்போது - எல்லோர் போலவும் சிரித்து மகிழ்ந்தேன். நாளடைவில், சிரிப்பதையும் தாண்டி - அந்த சிறு குழந்தைகளின் பேச்சாற்றலை/நினைவாற்றலை மெச்ச செய்தேன். பின்பு, என்னில் இடிபோல் இறங்கியது அந்த கேள்வி. இந்த குழந்தைகள்; பெற்றோரின் செயல்களை விளையாட்டாய் தான் பார்க்கிறார்களா? என்று! இல்லையென்று தோன்றியது; என்னதான் அந்த மழலைகள் சிரித்துக் கொண்டு சொன்னாலும் - அவர்களின் மனதிற்குள் இருக்கும் அழுத்தத்தை/ அழுகையை என்னால் உணர முடிந்தது. அவர்களால் அது தவறு என்று தம் பெற்றொர்க்கு சொல்ல; அதனால் தாம் பாதிக்கப்படுகிறோம் என்பதை சொல்ல தெரியவில்லை என்று தோன்றியது.

     அந்த நிகழ்ச்சி நடத்துபவர் அவ்வப்போது "பெற்றோர்கள் தங்கள் தவறுகளை உணர்வதாயும்; சிலர், முற்றிலும் சண்டையை நிறுத்திவிட்டதாய் கூறியதாயும்" கூறுவார். முற்றிலும், நிறுத்தி விட்டனர் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை! அது தேவையும் இல்லை!! முறன்பாடுகளின் இரு-எல்லைகள் தான் கனவனும்/மனைவியும் (விதிவிலக்குகள் இருக்கலாம்!); அப்படி இருக்க சண்டையை நிறுத்துதல் சாத்தியமோ/அவசியமோ இல்லை. உடனே, சிலர் நாங்கள் குழந்தைகள் எதிரே சண்டையிடுவதே இல்லை எனலாம்! அது, மிகவும் ஆபத்தானது. பிரச்சனை என்று வரும்போது எவர் ஒருவரும் - தான் சரி! என்ற நிலையிலேயே வாதாடுவர்; அதற்கு பல பொய்கள் தேவைப்படும். குழந்தைகள் எதிரில் சண்டையிடாது - பின், குழந்தைகளுக்கு தெரியவரும் போது - அங்கே பல பொய்கள் விதைக்கப்படும். இந்த பொய்கள் எல்லாம் தெரியவரும்போது - குழந்தைகள் மேலும் அதிகமாய் பாதிக்கப்படுவர். எனவே, நாம் குழந்தைகள் எதிரில் சண்டை போடுகிறோமா? இல்லையா?? என்பதிருக்கட்டும்...

சண்டகள் இருந்தாலும் - அவற்றில் உண்மையோடு இருப்போம்!!!     

பாலகுமாரனும், நானும்...       சமீபத்தில், முக-நூலில் நண்பர் ஒருவர் "படித்ததில் பிடித்தது" என்று சொல்லி நான் சொன்ன ஓர் வாக்கியத்தை குறிப்பிட்டு அப்படியே என்னுடைய தலையங்கத்தின் இணைப்பையும் கொடுத்திருந்தார். எனக்கு அது பெருத்த சந்தோசத்தை கொடுத்தது; ஆயினும், அவ்வப்போது என்னில் எட்டி பார்க்கும் அந்த பயம் கலந்த கேள்வி மீண்டும் தலையெடுத்தது! "எழுத்துச்-சித்தர் பாலகுமாரன்" சொன்னதை அப்படியே சொல்கிறேனா? என்பதே அந்த கேள்வி. அதற்கான காரணத்தை விளக்க வேண்டியதும் என் கடமை. 1990-களில் பாலகுமாரனை வெறித்தனமாய் படித்தவன் நான்! ஒவ்வொரு மாதமும் என்னப்பன் அனுப்பும் பணத்தில் - பாலகுமாரன் புத்தகங்களுக்காகவே ஓர் பகுதியை செலவிடுவேன்! திருச்சி-மேலப்புலிவார் சாலையில் இருந்த ஓர் புத்தகக் கடையில் தான் பெரும்பாலும் அந்த புத்தகங்களை வாங்குவேன். வாங்கிய உடனே அதற்கு அட்டையிட்டு, பி றகுதான் படிக்கவே ஆரம்பிப்பேன். எனக்கு பிடித்த வாக்கியங்களை அடிக்கோடு இட்டிட எப்போதும் மறந்ததில்லை!

    அப்படியோர் ஈடுபாடு - அவரின் படைப்புகளின் மேல்; அவர் என்னுள் எழுப்பிய தாக்கங்கள் மிகப் பலமானது. ஆனால், 1990-களின் இறுதி நெருங்குவதற்குள் அவரை படிப்பது படிப்படியாய் குறைந்து - பின் முழுதும் நின்றுவிட்டது. ஆனால், என்னுடைய செயல், சிந்தனை எவற்றிலும் பாலகுமாரன் இருப்பதை நானறிவேன். இந்த வலைப்பதிவின் முதல் தலையங்கத்தை என்னப்பனிடம் காட்டி அவரின் கருத்து கேட்டபோது - அவர், பாலகுமாரனின் தாக்கம் அதிகம் இருக்கிறது என்றார். ஆனால், அது எப்படி என்று எனக்கு புரியவில்லை; அவரே தொடர்ந்து சொனனார். நீ எழுதும் முறைக்கு இலக்கணத்தில் "நேர்க்கூற்று" என்றார்; பாலகுமாரனும் அவ்வாறே என்றார். ஆம், பாலகுமாரன் தான் சொல்ல வருவதை, நேரடியாய் தான் சொல்வார். வேறொரு கதை/அல்லது வடிவில் சொல்வதில்லை. மேற்கூறிய நண்பர், நான் எழுதிய வரிகளை பகிர்ந்து அதைப் படித்தபோது, எனக்கே மிகவும் பிடித்துப்போனது. உடனே, அந்த கேள்வியும் வந்தது...

பாலகுமாரன் சொன்னதை, அப்படியே சொல்கிறோமா?

பின்குறிப்பு: பாலகுமாரனின் தாக்கம் என்னுள் இருப்பதில் எனக்கு பெரும்-மகிழ்ச்சியே! ஆனால், அவர் சொன்னதை அவரை குறிப்பிடாமல் நான் சொன்னால் - அது எந்த விதத்திலும் சரியாகாது. எனவே, அப்படி எவரேனும் என் பதிவுகளில் காண நேர்ந்தால் - மறக்காமல் உடனே எனக்கு சுட்டிக்காட்டுங்கள். நான், உடனே அதற்கு மன்னிப்பு கோரி - தெளிவுபடுத்துதல் அவசியம்!