ஞாயிறு, நவம்பர் 11, 2012

மரணத்திற்கு பிறகு, என்ன…???


(இவ்வலைப்பதிவிற்காய் எழுதப்பட்ட முதல் தலையங்கம்) 

        நம்மில் எத்தனை பேர் "மரணத்திற்கு பிறகு என்ன...?" என்று, எந்த வயதில் யோசித்திருப்போம் என எனக்கு தெரியவில்லை. எனக்கு முதலில் இந்த கேள்வி எழுந்தது சுமாராக 4-ஆவது வயதில். எதற்கு அந்த வயதில் அந்த கேள்வி எழுந்தது என எனக்கு விளங்கவில்லை, இன்னமும் அதற்கு பதிலும் கிடைக்கவில்லை; ஆனால், ஒன்று மட்டும் புரிகிறது - நம் உடம்பில் உயிர் இருக்கும் வரை தான் உணர்வு, உறவு, நட்பு எல்லாமும்! "நிலையில்லாத வாழ்க்கையிது" என்பதை உணராமல் நாம் என்னென்ன தவறுகள் செய்கிறோம் என்ற ஒரு சிறிய தன்னிலை அலசலாக இதை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், மரணத்திற்கு பிறகு என்ன என்பது, இன்னமும் ஒரு பெரிய கேள்விதான்!!! எனக்கு அதற்கு விடை தெரியவில்லை; நான் அக்கேள்விக்கு பதிலளிக்கவும் முனையவில்லை; அந்த கேள்வியால் என்னுள் எழுந்த மாற்றங்களையே இங்கே அலசி இருக்கிறேன். ஒருவேளை, அதற்கு விடை தெரியக் கூடாது என்பது தான் இறைவன் அல்லது இயற்கையின் கட்டளையோ என்னவோ? இதை, இறைவன் (அல்லது இயற்கை) எதேச்சையான, இயல்பான ஒரு விசயத்தால் மறைமுகமாக உணர்த்தி இருப்பதாய் தோன்றுகிறது. ஆம்! மரணத்திற்கு பின் நாம் என்ன ஆவோம் என்பது, தொண்டைக்கு பிறகு நாம் அருந்திய உணவின் "சுவை" எங்கே போகிறது?! என்பது போல் தான் தோன்றுகிறது. எந்த நாட்டு உணவாயினும், எத்தனை பெரிய உணவகத்தில் வாங்கிடினும், எவர் சமைத்திடினும் - அந்த "சுவை" எனும் (கோபம், பழி வாங்குதல் போன்ற) உணர்வு - எங்கே போகிறது?

      என்னுள் எழுந்த இந்த கேள்வியை முதலில் என் தாயிடம் கேட்டேன்: அம்மா! என்றழைத்தவுடன் விரைவாக என்னிடம் வந்தவரிடம்,  "இறந்தவுடன் நாம் என்ன ஆவோம்" என வினவினேன் (எனக்கும் இன்னமும் அந்த நிகழ்ச்சி என் மனக் கண்ணாடியில் தெரிகிறது - ஆம்! நான் சரியாக கேட்டது "செத்த பிறகு என்னம்மா ஆவோம்"). அவர் வந்த வேகத்தில் என்னை அறைந்துவிட்டு சென்றார். கேள்விக்கு பதில் தெரியாத குழப்பத்திலும், அறைதல் தந்த வலியிலும் அழுதேன். அதன் பிறகு, சில/பல முறைகள் கேட்டேன்; பதிலாக கிடைத்தது, அதே அறை தான் - மீண்டும் அழுகைதான். ஏனோ, இதை என் தந்தையிடம் கேட்கவில்லை; அவரின் அடி பற்றி முன்பே "கும்பிடறேன்பா" என்ற தலையங்கத்தில் விளக்கியுள்ளேன்!!! அவரிடம் மட்டுமல்ல; வேறு எவரிடமும் இன்னமும் கேட்டதில்லை. சற்றே வளர்ந்தவுடன் எவரிடமும் கேட்க கூடாது என முடிவு செய்தேன். என் அம்மாவின் செய்கையில் ஒன்று மட்டும், பின்னால் - என்னால் ஓரளவு நிகழ்வுகளை அலசிப் பார்க்க முடிந்த போது, புரிந்தது! அது அவர்களுக்கு விடை தெரியவில்லை என்பது மட்டுமல்ல - நம்மில் பலர் மரணத்தை ஏற்க மறுப்பது மட்டுமன்றி; அது உண்மை என்பதை ஏற்கவோ அல்லது அதற்கு பிறகு என்ன என்பதை பற்றி யோசிக்கவோ தயங்குகிறோம். இதை பற்றி யோசிக்க ஆரம்பித்து, அதன் உண்மையை உணர்ந்து விட்டால், நம்முடைய பல பிரச்சனைகளை நாம் மிக எளிதாய் அணுகுவோம் என திடமாக நம்புகிறேன்; அதையே என்னுடைய பார்வையில் இங்கே விளக்கியுள்ளேன்.

     நான் அதிகம் பாதிக்கப்படுவது, எவரும் பொய் சொல்கிறார்கள் என தெரிய வரும்போது தான்.  அதிலும், நான் செய்யாத ஒன்றை செய்ததாக கூறும்போதோ அல்லது சொல்லாத ஒன்றை சொன்னதாக கூறும்போதோ தான். அம்மாதிரி தருணங்களில், நான் என்னிலை தவறிவிடுகிறேன்; என்னையே நான் வருத்திக்கொள்வதும் உண்டு. பல தருணங்களில் என் கோபத்தை உடனடியாக அவர்களிடம் காண்பித்திருக்கிறேன்; ஆனால், என்னுடைய கோபம் அவர்களையும் கோபப்படுத்தி, சூழ்நிலையை மேலும் துன்பமாக மாற்றி விடுகிறது. ஆனால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் என் கோபம் குறைந்து நானே பிரச்னையை தீர்க்கும் வழியை செய்துவிடுவேன்.  மேலும், என் மனதில் அந்த கேள்வி மீண்டும் எழுந்துவிடும் - "மரணத்திற்கு பிறகு என்ன...?". இந்த சிந்தனை வந்தவுடன், நான் என்னுடைய காழ்ப்புணர்ச்சிகள் அனைத்தையும் மறந்து விடுவேன். நிகழ்வுகளின் பாதிப்பு அதிகமாய் இருப்பின், இந்த சிந்தனைக்கு பிறகும் என்னுள் ஒரு கலந்துரையாடல் ஒரு சில நாட்கள் நடக்கும். அவர்கள், இவ்வளவு செய்த பின்னும் நான் ஏன் அவர்களை மன்னிக்க வேண்டுமென்று அல்லது அவர்களை ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று! முடிவில் நான் எவர் செய்த தவறையும், துரோகத்தையும் மறந்து விடுவேன். இதில் என்ன, பெரிய ஆச்சர்யம்!? நம்மில் பல பேர் அதைத் தான் செய்கிறோம் எனலாம்! நான் சொல்ல முனைவது, என்னுள் நான் நிகழ்த்திய கலந்துரையாடல் மூலமே, நான் அதை செய்வேன்; மற்றவர்கள் மன்னிப்பு கோருவதற்காய் நான் காத்திருப்பதில்லை.        

          இதைப் படிக்கும் சிலர், என்னுடைய மிக நெருங்கிய உறவு மற்றும் நட்பு வட்டாரங்கள் சொல்வது போல், நான் ஒரு கோழை, திடமில்லாதவன் எனலாம். என்னை, நானே  "நீ என்ன திடமில்லாத கோழையா?" என்று கேட்டதுண்டு. பல குழப்பங்களுக்கும், அலசல்களுக்கும் பிறகு, என் மனதில் மீண்டும் எழும் கேள்வி "மரணத்திற்கு பிறகு என்ன...?". இறந்த பிறகு என்ன?, எப்போது இறப்போம்?? என்ற கேள்விகளுக்கே விடை தெரியாது, என் சுற்றத்தையும்/ நடப்பையும்  "பழிக்கு பழி" வாங்கி என்ன சாதிக்கப் போகிறேன்? இம்மாதிரி சமயத்தில் வள்ளுவப்பெருந்தகையின் "ஊழிற் பெருவழி யாவுள?…" குறள் எனக்கு நினைவு வந்து விடும். இல்லையெனினும், என்னப்பன் இதை எனக்கு நினைவூட்ட தவறமாட்டார்.  அவர் அடிக்கடி உபதேசிக்கும் குறள்களில் இதுவும் ஒன்று. இது நினைவுக்கு வந்தவுடன்/ நினைவூட்டப் பட்டவுடன் என் "துன்ப-மேகங்கள்" விலக ஆரம்பித்து என் "மனமெனும் வானம்" இலகுவாக ஆரம்பித்து விடும். இதை விடுத்து, நான் அவர்களை காயப்படுத்துவதால், அவர்கள் மீண்டும் என்னைக் காயப் படுத்த எத்தனிப்பார்கள்! இந்த தொடரல் எது வரை தொடரும்? எது வரை தொடர வேண்டும்?? எதற்காக தொடர வேண்டும்???  முடிவில், எவரோ ஒருவர் இதை நிறுத்தவேண்டும், அல்லவா? அதைத்தான் "நானே" செய்கிறேன்/ செய்ய முயல்கிறேன். இதை நான் பின்பற்ற எனக்கு "மரணத்திற்கு பிறகு என்ன...?" என்ற கேள்வி மட்டுமல்ல,  மிகப்பெரிய போராட்டங்களும், மிகப் பெரும் இழப்புகளும் தேவைப்பட்டன; இன்னும் தேவைப் பட்டுக் கொண்டு தானிருக்கின்றன. 

        இங்கே வலி பற்றி எழுதும் போது, ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். எல்லா வலிகளும், ஒரு நாள் மகிழ்ச்சியான அனுபவமாய் மாறும் என்பது மனித வாழ்வியலில் ஒரு மறுக்கமுடியாத உண்மை. என் அம்மா அடித்ததின் வலி கூட இன்று எனக்கு ஒரு இன்ப-அனுபவம் தான்; எனக்குள்ளே விவாதித்து வாழ்க்கை பற்றிய ஒரு தெளிவை அடைவதற்கு அந்த அனுபவமே உதவியது. சரி, "மரணத்திற்கு பிறகு என்ன?" என்பதற்கு மீண்டும் வருவோம். இதற்கு மருத்துவ ஆராய்ச்சியின் மூலம் சில காரணங்களை (உடல் என்னவாகும், உயிர் என்னவாகும்) ஓரளவிற்கு விளக்க முடியும் என்றே வைத்துக் கொள்வோம். அறிவியல் மூலமாயும் சில விளக்கங்களை கூற முடியும் எனவும் வைத்துக் கொள்வோம். நான் என்னவாகப் போகிறேன்? நம் முன்னோர் விதைத்த நம்பிக்கையின் விளைவாய், பேய், பிசாசு அல்லது ஆவியாய் அலைவோம் என்றும் வைத்துக் கொள்வோம். இவையாவும்/சிலவாயினும் உன்மையாயினும், அதற்கு தெளிவான சான்றோ அல்லது முழுமையான விளக்கமோ இல்லை. அப்படியிருக்கையில், நான் எந்த சித்தாந்தத்தை நம்பி (இந்த நிலையில்லா வாழ்க்கையில்) என்னுடைய பொறுமையை கடைப்பிடித்து இந்த சூழ்நிலையிலிருந்து மீண்டு வருவேன்? அதற்குள் என் வாழ்வே முடிந்துவிட்டால், என்னுடைய கோபமும், பழி வாங்கும் செயலும் என்னவாகும் என்பதே என்னுடைய கேள்வி! என்னுடையது என நினைத்திருக்கும் எல்லாமும் என்னவாகும் என்பதும் என் கேள்வி!! இவர் எனக்கு பகை என்று எண்ணி, (இறந்த) பிறகு என்ன சாதிக்கப் போகிறேன் என்பதே என் கேள்வி!!!

     மாறாய், நான் அவர்களின் செய்கைகளை மறந்து - ஏன் மீண்டும் என் வட்டத்துக்குள் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பதே என் கேள்வி? இதை செய்வதால், தோற்றதாய் ஆகிவிடுமோ?? என் உறவு அல்லது நட்பு வட்டாரத்தை என்னுடனே வைத்திருக்க நான் ஏன் தோற்கக் கூடாது??? இதை அவர்கள் உணரும்போது, அவர்களுக்குள்ளும் ஒரு  மாற்றம் நிகழும் தானே! அது எனக்கு மிகப் பெரிய வெற்றியாய் அமையும் தானே. ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் ஒரு தோல்விச் சரித்திரம் தொடர்ந்து வந்து கொண்டு தானே இருக்கிறது? எனக்கே பொய் கூறுவது பிடிக்காது எனினும், சூழ்நிலை காரணமாய் என்னிலை தவறி நான் அப்படி செய்ய நேரும் போது, முடிந்த அளவு உடனடியாக தொடர்புடையவர்களிடம் மன்னிப்பு கேட்டு விடுவேன். இல்லையெனில், என்னால் நிம்மதியாக என்னுடைய வேலைகளில் கவனம் செலுத்த முடிவதில்லை; உறங்கக்கூட முடிவதில்லை. ஏதோ இழந்ததை போன்ற உணர்வுடனே செயல்படுவேன். என் சுற்றத்தில் உள்ளவர்கள் எளிதில் என்னை உணர்ந்து கேட்பார்கள் "என்ன ஆயிற்று என்று?"; இது தான் என் இயல்பு. இது என் சுய விளம்பரமல்ல; நான் என்னுடைய குறைகளை உடனுக்குடன் சரி செய்கிறேன்/செய்ய முயல்கிறேன். அடுத்தவர் குறைகளையும் பொறுத்து அவர்களை அனுசரித்து செல்கிறேன்/செல்ல முயல்கிறேன். இறுதியாய் ஒன்று தெளிவாய் விளங்கிற்று; அது "மரணத்திற்கு பின் என்ன?" என்பதற்கு பதில் கிடைக்காவிடினும், நாம் கண்டிப்பாய் எந்த தடையுமின்றி யோசிக்க வேண்டியது, மேலே விளக்கியுள்ள படி...


மரணத்திற்கு முன் என்ன செய்வது என்பதே!!!

1 கருத்து:

  1. சாகாமல் கற்பதே கல்வி என்று வள்ளலார் கற்பித்து உள்ளார். இன்று நாம் கல்லூரியிலும்,பள்ளியிலும் கற்கும் பாடம் நம்மை சாகாமல் காப்பாற்றாது.மாறாக நம்மை நோக வைத்து சகாடித்துவிடும். நான் என் மாணவர்களிடம் வள்ளலாரை பற்றி பல முறை கூறி கல்வி பற்றி வள்ளலார் சொன்ன இந்த கருத்தையும் கூறுவேன்.மரணத்திற்கு பின் மனிதரின் நிலை என்ற நூலை நான் 18வயதில் வாங்கினேன்.ஆர்வமாக படித்து அறிந்தேன்.தற்போது அந்த நூல் எங்கே என்று தெரியவில்லை. மரணத்தை பற்றி நான் பலமுறை பல நூல்களில் வாசித்து தெரிந்து கொண்டேன்.தற்கொலை எவ்வளவு கொடுமையானது என்பதையும் அறிந்தேன்.வாழும் போது ஏற்படும் துயரை தங்காமல் தற்கொலை செய்து பின் காற்றாய் பசி,தாகம்,மோகம் உடன் இந்த உலகில் நம் காலம் முடியும் வரை சுற்றிக்கொண்டு இருப்போம். செத்தப்பின் அந்த உயிர்க்கு காலம் அறிய முடியாது.வாழும் போது ஏற்படும் கோபங்களை மறந்து,மன்னித்து வாழவேண்டும் என்பது நல்ல கருத்து.மரணத்திற்கு முன் நாம் வள்ளலார் சொன்ன வழியை பின் பற்றவேண்டும்.

    பதிலளிநீக்கு