வெள்ளி, அக்டோபர் 25, 2013

விழியப்பனோடு விவாதிப்போம் (25102013)



விழியப்பனோடு விவாதிப்போம் (25102013):

ஓர்நாள் - என்னுடன் வேலை செய்யும் நண்பி ஒருவர் தான் "விவாகரத்து" செய்யவிருப்பதை கூறினார். நான் உட்பட பலரும் அதிர்ந்தோம்; அவளுக்காய் வருந்தினோம்! அந்த அளவிற்கு நல்ல-பெண் அவள். பின்னொரு நாள் - விவாகரத்து ஆகிவிட்டது என்றாள்; அனைவரின் இதயமும் கனத்தது!! அதன்பின் அவளை இயல்பாய் பார்ப்பதே அரிதாய் இருந்தது. 

சிலமாதங்கள் சென்றபின் -  ஓர் நாள், மீண்டும் தன் கணவனோடு இருப்பதாய் கூறினாள். எனக்கு மிகுந்த சந்தோசம்! நம் நாட்டில் - விவாகரத்து பெற்றவர் விவாகரத்துக்கு பின்னும் நிம்மதியில்லாமல் இருக்கும் (அல்லது) இருக்கவிடாது செய்யும் சூழ்நிலை/சமூகத்தால் - நான் "விவாகரத்து ஆகிவிட்டது, என்றாயே?!"என்றேன். அதற்கு அவள் கூறிய அந்த பதில் "சொற்ப வார்த்தைகளையே" கொண்டிருந்தாலும் என்னுள் பல-புரிதல்களை விதைத்தது. 

அந்த பெண் சொன்ன பதில் மிகச்சரியாய் இதுதான்: "Elan! It is just a paper"!

இதைக் கேட்ட பின் நான் விக்கித்து போனேன்! பின் என்னுள் நானே "It is just a paper" என்று சொல்லிப்  பார்த்தேன். ம்ம்ம்... PAPER; அடேய், இளங்கோ! அது வெறும்-பேப்பர்(காகிதம்)டா என்று என் மனம் சொன்னது.

விவாகரத்து என்பது - ஒன்றுமேயில்லை என்பதை இதைவிட வேறு எவர்/எப்படி தெளிவாய் விளக்கிட முடியும்???

குறிப்பு: "ஒவ்வொரு மணமுறிவுக்கு(விவாகரத்துக்கு)" பின்னும் "பல கரங்கள்" ஒலியெழுப்பி மகிழ்ந்தாலும் - அதன் பின் வாழ்நாள் முழுதும் "இரண்டு மனங்கள்" (மட்டும்)தொடர்ந்து அழுதுகொண்டே தான் இருக்கின்றன.

*******

சரி, இப்போது விவாதம்! எல்லாவற்றையும் மீறி - பலரும் விவாகரத்து தான் இறுதி என்று ஏன் முடிவு செய்கின்றனர்? அல்லது அதுதான் முடிவென வேகுபலரும் மனதிலாவது நினைத்திட என்ன காரணம்?? விவாகரத்துகள் ஏன் அதிகமாகிக் கொண்டே போகின்றன???        

வெள்ளி, அக்டோபர் 11, 2013

விழியப்பனுடன் விவாதிப்போம் (07102013)



விழியப்பனுடன் விவாதிப்போம் (07102013):

நான் என் வாழ்க்கையில் சந்தித்த அனுபவம் கீழ்வருவது!

ஓர் மாமியார் என்னிடம் சொன்னார்! "என்மருமகள், என்னுடைய பெயரனுக்கு ஆசையாய் நான் வாங்கிக் கொடுத்த "முருக்கை" பிடுங்கி எறிந்துவிட்டாள்" என்று! எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது; எப்படி? அந்த மருமகள் அப்படி செய்யலாம் என்று!! எனக்கு அந்த மருமகளையும் பரிச்சயம் என்பதால் அவரிடம் "இப்படி செய்யலாமா? இது நியாயமா?!" என்று கேட்டேன். அந்த மருமகள் சிரித்துக் கொண்டே "அட நீங்க வேற! அந்த முருக்கை 'நாய்' நக்கிவிட்டது!'; அதனால் தான், பிடுங்கி எறிந்துவிட்டேன்" என்றார். மனித-மனம் தான் குறங்கு ஆயிற்றே! நான் உடனே "அடடே! ஏன் இதை அந்த மாமியார் புரிந்து கொள்ளவில்லை" என்று நினைக்க ஆரம்பித்துவிட்டேன். இது தான் பிரச்சனை இங்கே!! நாய் நக்கியதை பார்த்தும் அந்த மாமியார் பொய் சொல்லி இருக்கலாம்! அல்லது அந்த மருமகள் அப்படி ஓர் கதையை பொய்யாய் சொல்லியும் இருக்கலாம்!!

இப்போது அடுத்த கட்டம்: மாமியார், தன் கனவனிடம் "உங்க மருமகள்" என்னை மதிக்கறதே இல்லை; அதை என்னன்னு கேட்கக் கூடாதா?! மருமகள், தன் கனவனிடம் "உங்க அம்மா" என்னை நம்பறதே இல்லை; அதை என்னன்னு கேட்கக்கூடாதா??!! அந்த இரு கனவன்கள் சும்மாவே இருக்க நினைத்தாலும் இவர்கள் விடுவதில்லை. ஆதலால், தந்தை; தன் மகனிடம் "ஏண்டா! உன் பெண்டாட்டியை கொஞ்சம் புரிந்து நடந்துக்க சொல்லக்கூடாதா?!". மகன், தன் தந்தையிடம் "ஏன்! உங்க பெண்டாட்டியை கொஞ்சம் புரிந்து நடந்துக்க சொல்லக்கூடாதா??!!". மாமியார்-மருமகள் பிரச்சனை, இப்போது தந்தை-மகன் பிரச்சனையாய் உருவாக ஆரம்பித்துவிட்டது.

நான் கூறியது - ஓர் வீட்டில் நான் பார்த்த ஒரேயொரு நிகழ்வை தான்! இதுபோல் நூற்றுக்கணக்கான நிகழ்வுகள், பல்லாயிரக்கணக்கான இல்லங்களில் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இப்போது, விவாதத்திற்கான கேள்வி:

இந்த பிரச்சனையை மாமியாரும்; மருமகளும் எப்படி அனுகவேண்டும்? அதை எப்படி தந்தையும்-மகனும் எடுத்து செல்லவேண்டும்??

{குறிப்பு: தயவு செய்து, நீங்கள் கருத்திடும் முன் - இரண்டு "திறமையான" மனைவிகள் (மாமியார் & மருமகள்) நடத்தும் நாடகத்தால்; பாதிக்கப்படுவது இரண்டு "அப்பாவியான" கனவன்கள் (தந்தை & மகன்) என்பதை நினைவில் கொள்ளுங்கள்!!!}

விழியப்பனோடு விவாதிப்போம் (01102013)


(விழியப்பனோடு விவாதிப்போம் என்று தலைப்பிட்டு "முக-நூலில்" தொடர்ந்து ஒவ்வொரு விவாதத்தை 2 வாரங்களாய் நடத்தி வருகிறேன். ஏதோ, ஓரளவிற்கு சிலர் விவாதம் செய்கின்றனர். சரி! அதை அப்படியே வலைப்பதிவிலும் பதிந்து வாதத்திற்கு விட்டுவிடலாம் என்றோர் முயற்சி!) 
***************


விழியப்பனோடு விவாதிப்போம் (01102013):

வெகு-நிச்சயமாய் புகைப்படத்தில் உள்ள வாசகத்தை பலரும் படித்திருப்பீர்! அதில் உண்மையும் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். நான் முதன்முதலில் இந்த வாசகத்தை அறிந்தது, என்னவளின் மூலமாய்! அவள் எனக்களித்த முதல்-பரிசில் இந்த வாசகமே இருந்தது.

விவாதத்தை நான் இப்படி துவங்குகிறேன்:

1. ஓர் உறவில் (உதாரணம்: கணவன்/மனைவி) ஒருவர் இதை பின்பற்றி அடுத்தவர் திரும்பி வருவார் என்று காத்திருக்கிறார்; அவர் திரும்பி வரவேயில்லை! இப்போது; முதலாமவர், இரண்டாமவர் எப்போதும் நம்மவராய் இருந்ததில்லை என்றே நினைக்கவேண்டுமா?
2. சரி, இரண்டாமவரும் அங்ஙனமே நினைத்திருந்தால்? இப்போது சொல்லுங்கள்!

(உள்ளீடு: எந்த ஓர் உறவிலும், எத்தனை வாதிட்டும்; எவர் அதிக-அளவில் அன்பு வைத்திருந்தார் என்பதை அறியவோ/முடிவிடவோ முடியாது! அதிலும் குறிப்பாய், அந்த உறவில் விரிசல் இருக்கும்போது!)

என்னதான், நம்மொழியில் இதனை மிக-எளிதாய் "விட்டுக்கொடுத்தல்" என்ற ஒற்றை-வார்த்தையில் கூறி இருந்தாலும் - அங்கும், எவர் (முதலில்)விட்டு கொடுப்பது? எத்தனை காலத்திற்கு/முறை விட்டு கொடுப்பது?? போன்ற கேள்விகள் தொடர்ந்து இருந்துகொண்டே தான் வருகிறது. 

செவ்வாய், அக்டோபர் 08, 2013

ராஜா ராணி (2013)



விழியப்பன் பார்வை: "ராஜா ராணி (2013)" திரைப்படம்

        நேற்று-மாலை பலரும் பரிந்துரை செய்ததன் பேரில், "ராஜா ராணி" திரைப்படம் பார்த்தேன். அந்த படத்தின் மீதான என்னுடைய பார்வையே கீழ்வருவது. முதலில், நான் படம் பார்க்க ஆரம்பித்த அந்த "திகிலான" அனுபவத்தை பகிர ஆசைப்படுகிறேன். ஆம்! திகில் தான்; 19:00 மணி காட்சிக்கு நான் இருக்கை-சீட்டு வாங்கியது 18:31 மணிக்கு (பார்க்க! மேலிருக்கும் புகைப்படம்; அதில், வாங்கிய நேரத்த்தில் ஏதோ தவறு உள்ளதாய் தெரிகிறது!); ஆனால், நான் தான் முதல் ஆள்! உடனே "என்னடா! சிக்கிட்டமா?"ன்னு ஓர் பயம். சரி, இன்னும் 29 மணித்துளிகள் இருக்கின்றனவே என்ற நிம்மதியோடு 2 சமோசாக்களை கொறித்துவிட்டு - திரையரங்கினுள் "ஓர் திகிலோடே??!!" நுழந்தே ந்! ஒருவரே வாங்கி இருந்தாலும், இங்கே படத்தை "காண்பிக்காமல்" விடமாட்டார்கள்! ஆனால், அங்கே ஒருவர் மட்டும் இருந்தார்; அப்பாடா! என் வரிசை எண் 8; இருக்கை எண் 11 (மேலுள்ள, படத்தை பார்க்க), அவரது இருக்கை எண் 13. "பயம்-நீங்கி" அவரருகே சிரித்துக்கொண்டே ஒரு வணக்கம் சொல்லி அமர்ந்தேன்; மனுசன்! ஒரு சிறு-புன்னகைக் கூட பதிலாய் வரவில்லை. பாவம்! அவர் எவ்வளவு நேரம் தனியாய் அமர்ந்து "நடுங்கிக் கொண்டு" இருந்தாரோ??!! அடுத்தது ஒருவர் வந்தார்; இருக்கை எண் 12 - எங்கள் இருவருக்கும் இடையில் வந்து அமர்ந்தவர், எல்லாமும் காலியாய் இருக்க வேறொரு இருக்கைக்கு சென்றார். என்ன காரணமோ (???!!!) அவர் அமர்ந்த இருக்கை எண் "9"!. அப்பாடா! மூவர் ஆயிற்று; தெம்பாய் படம் பார்க்க ஆரம்பித்(தேன்/தோம்)! பின், சிறிது நேரத்தில் 4 பேர் வந்து (அவர்களுக்குள்ளாகவே, எப்போது ஆரம்பித்ததோ என்ற சலனங்களோடும்) எங்கள் வரிசையிலேயே அமர்ந்தனர் என்பது வேறு விசயம். ஆனாலும், 7 பேர் மட்டும் பார்ப்பது ஓர் சுகம் தான் (இதற்கு முன், 5 பேர்களுடன் "பரதேசி" படம் பார்த்தேன் - அபுதாபியில் நான் காலடி வைத்து 2-ஆம் நாள் பார்த்த படம்!). இந்த சூழலில், நாம் சிரிப்பதை நாமே கேட்கும் ஓர் சுவராஸ்யம் இருக்கும் (மற்றவரின் சிரிப்பொலியையும் கூட!)...


சரி, திரைப்படத்திற்கு வருவோம்!

பாராட்டில் என்னுடைய பங்கு:
  • பலரும், குறிப்பிட்டபடி அருமையான படம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை!
  • ஏன் எல்லோரும் இன்னுமொரு "மெளன ராகம்" என்கின்றனர் எனபது எனக்கு புரியவில்லை. இரண்டுக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன என்பது என் கருத்து. இப்படி ஒப்பிடுவதால், மணிரத்னம் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் போகலாம்! ஆனால், இம்மாதிரி இயக்குனர்களை அது பாதிக்கக் கூடும்! என்பது என் எண்ணம்.
  • "ஏன், வெகுவாய் எல்லோராலும் பாராட்டப்படுகிறது?" என்றால், இங்கே பல திரைப்படங்களும் - கனவன்/அல்லது மனைவியின் "முதல் காதல்" பற்றி விவாதிக்கின்றன; ஆனால், அங்கே வாதங்களும்; பழிவாங்குதலும் தான் அதிகம் இருப்பதாய் காண்பிக்கப்படும்! "அவர்கள்"-ஐ விடவா இதற்கு ஓர் பெரிய உதாரணம் வேண்டும்? ஆனால், விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களே திருமணமான இருவரில்-ஒருவர் (கனவன் அல்லது மனைவி) மற்றவரின் "முதல் காதலை" இயல்பாய் பார்ப்பது போல் (இது மட்டுமே - சில காட்சிகளுடன் - எனக்கு தெரிந்து இப்படம் "மெளன ராக"த்துடன் தொடர்பில் இருப்பது!) காண்பிக்கின்றன. ஆனால், இங்கே திருமணமான இருவரும் மற்றவரின் "முதல் காதலை" இயல்பாய் பார்ப்பது போல் காண்பித்து இருக்கின்றனர். மேலும், காட்சிகள் யதார்த்தமாய்! அதனால் தான், இம்மாதிரியான படங்கள் பெரிதும் போற்றப்படுகின்றன என்பது என் எண்ணம்.
  • சரவெடிக்களில் என் நினைவில் இப்போது வந்தவை: 1. "கஸ்டமர் சர்வீஸ்"னா? எனக்கு "4 கஸ்டமர்ஸ்" பிடிச்சு தருவீங்களா? 2. "டார்லிங்! பியர் சாப்பிடறீங்களா/வேணுமா"? 3. "டார்லிங்" ஒரு "லாங்க்-டிரைவ்" போலாமா?? 4. என்ன மாபிள்ளை பரிசை பார்த்தீங்களா? ம்ம்ம்... பார்த்தேன்..."நானும் பார்த்தேன்". 5. என்ன ப்ரதர்? பலர் பல இடங்களில்; ஆனாலும், நஸ்ரியா கேட்கும்போது கொள்ளை-அழகு! 6. அவரு நிறைய "சினிமா" பார்ப்பாரு, போல தெரியுது! இப்படி பல இருக்கின்றன! ஆனால், எனக்கு அவை முழுதுமாய் நினைவில் இல்லை.
  • இயக்குனர் புதியவரா? எனக்கு கண்டிப்பாய் புதியவர்! "வாழ்த்துக்கள் தோழரே! தொடரட்டும் உமது கலைப்பணி". அவர் புதியவர் இல்லை எனில், இந்த வாக்கியத்தில் சிறிது மாற்றம் செய்து கொள்ளுங்கள்; ஆனால், என் "வாழ்த்துக்கள்" அப்படியே இருக்கட்டும்!

பலரும் பார்க்கத் தவறியதாய் - என் பார்வையில்:
  • ஏம்ப்பா? "சத்யராஜ் நல்லா பன்னி இருக்கார்னு" பொதுவா சொல்லிட்டா எப்படிப்பா? இம்மாதிரி கதைகளில் "தந்தை-மகள்" உறவை இதற்கு மேலும் என்னத்த சிறப்பாய் சொல்லிட/காட்டிட முடியும்?? ஒரு "அப்பனா" பெரு-மகிழ்ச்சி அடைந்து சொல்கிறேன்: "யோவ், சத்யராஜ்-ஜு! ஒரு அப்பனா வாழ்ந்து இருக்கய்யா நீ! வாழ்த்துக்கள் யா!". என்ன, இப்படி வாழ்த்தறேன்னு பார்க்கறீங்களா? இது சந்தோசம்-ங்க! அப்படித்தான் வரும் வார்த்தைகள். இன்னமும், புரியலைன்னா - பெண்டாட்டிகள் சந்தோஷமா "டேய், புருஷான்னு" கூப்பிடுவாங்களே! அதை நினைவுப் படுத்திக் கொள்ளுங்கள்; தெளிவாய் புரியும் (சந்தோஷத்துல-ங்கறத, "அடிக்கோடிட்டு" படிங்க! ரெண்டு பேருக்கும் தான் சொல்ட்றேன்!). என் பார்வைகளில் சில...
  • பதிவுத்-திருமண அலுவலக வாசலில் ஓர் நாள் முழுவதும் காத்திருந்து, அந்த ஏமாற்றத்தில் மகள் அழும்போது - தானும், இயல்பாய் அழும் அந்த காட்சி! இதை விட, ஓர் தந்தையை அத்தனை பொருப்பாய் காண்பிக்கவே முடியாது! மகள் அழுவது, காதலன் வராத ஏமாற்றத்தில்... ஆனால், அப்பன் அழுவது? அதுவும் இயல்பாய்?? ஆங்ங்... அது தான்! அதனால் தான், இங்கே அப்பனைப் பற்றி மட்டும் கூறி உள்ளேன். மகள் இம்மாதிரி இருப்பதை பலமுறை, பல விதங்களில், பல படங்களில் பார்த்துவிட்டதால் - அது பற்றி பெரிதாய் இங்கே பேச(ப்போவது) இல்லை (ஆனால், முன்பே ஒரு சிறிய விசயத்தில் சொல்லிவிடேன்; அது "டார்லிங்" என்ற ஒற்றை சொல்!). 
  • எனக்கென்னவோ? இந்த தந்தை-மகள் உறவை இன்னமும் காட்டி இருக்கலாம் என்று ஓர் ஏக்கம்! ஆனால், இன்னும் கொஞ்சம் "அதிகமாய்" சொல்லி இருந்தாலும் - அது படத்தின் கருவை அப்படியே மாற்றி விடும் "அபாயம் இருப்பதை" இயக்குனர் தெளிவாய் உணர்ந்து இருக்கிறார். இது போதுமய்யா!... அட! இதுவே போதுமய்யா!!
  • ஒரேயொரு விசயம், இதற்கு மகுடமாய்! கிளம்பும்போது, தேவையே இல்லாதது போல் தோன்றும்! மாப்பிள்ளையிடம் சொல்லும் "த்தேங்க்ஸ்"ங்க என்ற ஒற்றை சொல்! அடுத்த காட்சியிலேயே, வாசலில் "என்னை ஏமாத்த நீ நடிக்கற; ஆனால், மாப்பிள்ளை ஏம்மா நடிக்கனும்?"; தொடர்ந்து, தலையைத் தடவி "இது தான் உன் வீடு; இது தான் உன் வாழ்க்கை" - ஆயிரமாயிரம் விளக்கங்களை கொடுக்கும் நிகழ்வை - "வெறும் சொற்ப வார்த்தைகள்" கொண்டு! 
  • மன்னிக்கவும்! "தங்க-மீன்கள்" படத்தை இங்கே வெளியிடாததால் இன்னமும் பார்க்கவில்லை. ஓர் தந்தையாய், அந்த படத்தை திரையரங்கில் அல்லது அங்கீகரிக்கப்பட்ட விதத்தில் பார்க்கவேண்டும் என்று உணர்ந்து இன்னமும் பார்க்கவில்லை. ஆனால், ஒரு இளவயது-மகளையும் - தந்தையும் மைய்யப்படுத்திய படம் என்பது எனக்கு தெரியும். ஆனால், அந்த உறவு ஓர் கட்டாயம் போல் (மீண்டும், மன்னிக்கவும்!) எல்லா "தந்தை-மகள்" இடையேயும் பார்க்கலாம். ஆனால், இந்த வயது மகள்-தந்தை உறவு - வேறு! அது தான், உண்மையான உறவை நிலை-நாட்டும் என்பதை சமீபத்தில் என் தலையங்கம் ஒன்றின் மூலமாய் விளக்கி இருந்தேன். இந்த உறவை இப்படியோர் புரிதல் தான் அடுத்த கட்டத்திற்கு இட்டுச்செல்லும் என்பது என் எண்ணம். அந்த வகையில் - இந்த படம் "உயர் தர 'தங்க-மீன்கள்'" என்பதே என் கருத்து.

குறையில் என்னுடைய பார்வை:
  • அது என்னப்பா, அப்படி ஒரு "ட்விஸ்ட்" - அந்த சூர்யா கதா-பாத்திரத்தில்! இடைவேளையில் கழிவறை சென்றபோது, வழக்கம் போல் என் சிந்தனையில் (அது தானே, என் போன்ற பலருக்கும் போதி-மரம்???) அந்த "ட்விஸ்ட்" தெரிந்துவிட்டது (விவேக் ஓர் படத்தில் சொல்வது தான் நியாபகம் வருகிறது: "அங்க கொண்டுபோயா வச்சிருக்கீங்க "ட்விஸ்ட்"டை???). இன்னும், கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம்!!
  • இறுதியில், சூர்யா சொல்லும் காரணம் எதுவும் - நியாயமானதாய் படவில்லை. இங்கே, திரைக்கதையில் ஓர் தொய்வு இருப்பது தெளிவாகிறது. இதற்கு பேசாமல், மேற்கூறிய "ட்விஸ்ட்"டை கொடுக்காமலேயே இருந்திருக்கலாம்.
  • ஏம்ப்பா, அந்த "கீர்த்தனா"வை "இறக்கச்" செய்ய வேறு வழியே தெரியவில்லையா? அப்பட்டமாய் தெரிகிறது - அது சம்பந்தப்பட்ட காட்சிகள் ஆரம்பிக்கும் போதே??!! விபத்தை, விபத்தாய் காண்பிக்க ஆயிரம் வழிகள் இருக்கின்றன! இது, யதார்த்தமாய் தோன்றவே இல்லை; மன்னிக்கவும்! இதற்கு பேசாமல், அந்த பெண்ணை "கொலையே" செய்து இருக்கலாம்.
  • குட்டைப்-பாவாடையும், அது போன்ற உடைகளும் - நயந்தாராவுக்கு சற்றும் பொருத்தம் இல்லை என்பது என் எண்ணம். அழகில்லை! என்பதை காட்டிலும் அசிங்கமாய் தெரிகிறார். எவரேனும், அவருக்கு எடுத்து சொல்லவும்! சாதாரண "ச்சூடிதாரில்" அலலது ஓர் புடவை/அரைப்புடவையில் அவர் அபார-அழகாய் தெரிகிறார். 

என்னுடைய சரவெடி:
  • "போடா, டே!" - எப்படிப்பா, சூர்யாவுக்கு அப்படியோர் தைரியம் வந்தது? - அதுவும், "ஜான்"ஐ பார்த்து சொல்ல??!! "காதலித்து பார்" - என்னென்ன வரும் என்று ஓர் கவிஞர் அழகாய் சொல்லி இருப்பார். இங்கே பாருங்கள்! "திருமணம் செய்ததால்" எப்படி சூர்யாவுக்கு தைரியம் வந்ததுன்னு - ஏன்னா, திருமணம் "ரொம்ப கஷ்டம் பா"! எல்லா தைரியத்தையும் வரவைக்கும்.... ஹா...ஹா....ஹா...
  • "ஓன் சந்தோசம் தான் போயிடுச்சே; உங்க அப்பா, அம்மா சந்தோசத்துக்காக, வாழ்ந்தா தான் என்ன?" - அடப்பாவிகளா! கடைசியில - சந்தானத்தையும் இப்படி "சீரியஸா" பேச வச்சுட்டீங்களே!
  • யப்பா! "கஸ்டமர் சர்வீஸ்"-ங்கறதுக்கு இப்படி ஒரு விளக்கதத்தை "எந்த ஹோட்டல்ல" ரூம் போட்டு யோசிச்சீங்கன்னு சொல்ல முடியுமா??
  • "What? What??" மற்றும் "Funny(கிட்டத்திட்ட "பன்னி" என்பது போல்)  boy" யோவ்! "நான் கடவுள்" இராஜேந்திரன், நீயும் "கலக்கி" இருக்கய்யா!

முடிக்கும் முன்:

"There is (LIFE/LOVE) after love failure"- அழகாய் தான் இருக்கிறது இந்த சொற்றொடர்! ஆனால், நீங்களும் - இதே மாதிரி அந்த சொற்றொடரை படம் முடிந்து, திரை "மூடும் முன்"  போட்டிருந்தால் இன்னமும் - பொருத்தமாய் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்!!

ஞாயிறு, அக்டோபர் 06, 2013

சண்டைகள் இருந்தாலும், உண்மையும் இருக்கட்டும்...



       கடந்த வாரம் முதல் "குட்டிச் சுட்டீஸ்" என்ற நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகிறேன். உம்மில் பலரும் பார்த்திருப்பீர் என்பதில் எந்த ஐய்யமும் இல்லை. அந்த நிகழ்ச்சி எனக்கு கொடுத்த புரிதலை இங்கே விளக்க ஆசைப்படுகிறேன். ஆரம்பத்தில், குழந்தைகள் தம் பெற்றோர் செய்யும் தவறுகளை/அவர்களின் சண்டைகளை விளக்கும்போது - எல்லோர் போலவும் சிரித்து மகிழ்ந்தேன். நாளடைவில், சிரிப்பதையும் தாண்டி - அந்த சிறு குழந்தைகளின் பேச்சாற்றலை/நினைவாற்றலை மெச்ச செய்தேன். பின்பு, என்னில் இடிபோல் இறங்கியது அந்த கேள்வி. இந்த குழந்தைகள்; பெற்றோரின் செயல்களை விளையாட்டாய் தான் பார்க்கிறார்களா? என்று! இல்லையென்று தோன்றியது; என்னதான் அந்த மழலைகள் சிரித்துக் கொண்டு சொன்னாலும் - அவர்களின் மனதிற்குள் இருக்கும் அழுத்தத்தை/ அழுகையை என்னால் உணர முடிந்தது. அவர்களால் அது தவறு என்று தம் பெற்றொர்க்கு சொல்ல; அதனால் தாம் பாதிக்கப்படுகிறோம் என்பதை சொல்ல தெரியவில்லை என்று தோன்றியது.

     அந்த நிகழ்ச்சி நடத்துபவர் அவ்வப்போது "பெற்றோர்கள் தங்கள் தவறுகளை உணர்வதாயும்; சிலர், முற்றிலும் சண்டையை நிறுத்திவிட்டதாய் கூறியதாயும்" கூறுவார். முற்றிலும், நிறுத்தி விட்டனர் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை! அது தேவையும் இல்லை!! முறன்பாடுகளின் இரு-எல்லைகள் தான் கனவனும்/மனைவியும் (விதிவிலக்குகள் இருக்கலாம்!); அப்படி இருக்க சண்டையை நிறுத்துதல் சாத்தியமோ/அவசியமோ இல்லை. உடனே, சிலர் நாங்கள் குழந்தைகள் எதிரே சண்டையிடுவதே இல்லை எனலாம்! அது, மிகவும் ஆபத்தானது. பிரச்சனை என்று வரும்போது எவர் ஒருவரும் - தான் சரி! என்ற நிலையிலேயே வாதாடுவர்; அதற்கு பல பொய்கள் தேவைப்படும். குழந்தைகள் எதிரில் சண்டையிடாது - பின், குழந்தைகளுக்கு தெரியவரும் போது - அங்கே பல பொய்கள் விதைக்கப்படும். இந்த பொய்கள் எல்லாம் தெரியவரும்போது - குழந்தைகள் மேலும் அதிகமாய் பாதிக்கப்படுவர். எனவே, நாம் குழந்தைகள் எதிரில் சண்டை போடுகிறோமா? இல்லையா?? என்பதிருக்கட்டும்...

சண்டகள் இருந்தாலும் - அவற்றில் உண்மையோடு இருப்போம்!!!     

பாலகுமாரனும், நானும்...



       சமீபத்தில், முக-நூலில் நண்பர் ஒருவர் "படித்ததில் பிடித்தது" என்று சொல்லி நான் சொன்ன ஓர் வாக்கியத்தை குறிப்பிட்டு அப்படியே என்னுடைய தலையங்கத்தின் இணைப்பையும் கொடுத்திருந்தார். எனக்கு அது பெருத்த சந்தோசத்தை கொடுத்தது; ஆயினும், அவ்வப்போது என்னில் எட்டி பார்க்கும் அந்த பயம் கலந்த கேள்வி மீண்டும் தலையெடுத்தது! "எழுத்துச்-சித்தர் பாலகுமாரன்" சொன்னதை அப்படியே சொல்கிறேனா? என்பதே அந்த கேள்வி. அதற்கான காரணத்தை விளக்க வேண்டியதும் என் கடமை. 1990-களில் பாலகுமாரனை வெறித்தனமாய் படித்தவன் நான்! ஒவ்வொரு மாதமும் என்னப்பன் அனுப்பும் பணத்தில் - பாலகுமாரன் புத்தகங்களுக்காகவே ஓர் பகுதியை செலவிடுவேன்! திருச்சி-மேலப்புலிவார் சாலையில் இருந்த ஓர் புத்தகக் கடையில் தான் பெரும்பாலும் அந்த புத்தகங்களை வாங்குவேன். வாங்கிய உடனே அதற்கு அட்டையிட்டு, பி றகுதான் படிக்கவே ஆரம்பிப்பேன். எனக்கு பிடித்த வாக்கியங்களை அடிக்கோடு இட்டிட எப்போதும் மறந்ததில்லை!

    அப்படியோர் ஈடுபாடு - அவரின் படைப்புகளின் மேல்; அவர் என்னுள் எழுப்பிய தாக்கங்கள் மிகப் பலமானது. ஆனால், 1990-களின் இறுதி நெருங்குவதற்குள் அவரை படிப்பது படிப்படியாய் குறைந்து - பின் முழுதும் நின்றுவிட்டது. ஆனால், என்னுடைய செயல், சிந்தனை எவற்றிலும் பாலகுமாரன் இருப்பதை நானறிவேன். இந்த வலைப்பதிவின் முதல் தலையங்கத்தை என்னப்பனிடம் காட்டி அவரின் கருத்து கேட்டபோது - அவர், பாலகுமாரனின் தாக்கம் அதிகம் இருக்கிறது என்றார். ஆனால், அது எப்படி என்று எனக்கு புரியவில்லை; அவரே தொடர்ந்து சொனனார். நீ எழுதும் முறைக்கு இலக்கணத்தில் "நேர்க்கூற்று" என்றார்; பாலகுமாரனும் அவ்வாறே என்றார். ஆம், பாலகுமாரன் தான் சொல்ல வருவதை, நேரடியாய் தான் சொல்வார். வேறொரு கதை/அல்லது வடிவில் சொல்வதில்லை. மேற்கூறிய நண்பர், நான் எழுதிய வரிகளை பகிர்ந்து அதைப் படித்தபோது, எனக்கே மிகவும் பிடித்துப்போனது. உடனே, அந்த கேள்வியும் வந்தது...

பாலகுமாரன் சொன்னதை, அப்படியே சொல்கிறோமா?

பின்குறிப்பு: பாலகுமாரனின் தாக்கம் என்னுள் இருப்பதில் எனக்கு பெரும்-மகிழ்ச்சியே! ஆனால், அவர் சொன்னதை அவரை குறிப்பிடாமல் நான் சொன்னால் - அது எந்த விதத்திலும் சரியாகாது. எனவே, அப்படி எவரேனும் என் பதிவுகளில் காண நேர்ந்தால் - மறக்காமல் உடனே எனக்கு சுட்டிக்காட்டுங்கள். நான், உடனே அதற்கு மன்னிப்பு கோரி - தெளிவுபடுத்துதல் அவசியம்!