ஞாயிறு, மே 18, 2014

தென்னவனும் - மதிப்பெண்ணும்...         சென்ற வாரம் பள்ளி-இறுதியாண்டு தேர்வு முடிவுகள் வெளிவந்த அடுத்த கணம்; என்தமக்கை-மகன், என்தமையன்-மகன் தென்னவன் எடுத்த மதிப்பெண்களை இணையதள-பிரதியுடன் அனுப்பி இருந்தான். வார-இறுதி என்பதால் கூடுதலாய் உறங்கிக் கொண்டிருந்த நான், உடனடியாய் எழுந்து முதலில் என்தமக்கை மகனை அழைத்து பேசிவிட்டு; அடுத்து தென்னவனை அழைத்து பேசினேன். எனக்கு பெருத்த சந்தோசம்! வெகு சமீபமாய் நான் அப்படியொரு சந்தோசத்தை அடைந்ததில்லை. பிறகு, என்தமையனிடம் பேசினேன்; ஆனந்தத்தில் என் கண்கள்-ஈரமாகி என் குரல்-உடைந்தது! ஆனால், என்தமையனால் அதை கண்டுகொள்ள முடியவில்லை; என் தாயாய் இருந்திருப்பின், உடனடியாய் "ஏம்பா/ஏண்டா? கொரலு ஒரு மாதிரியா இருக்கு??" என்று கேட்டிருப்பார்! அப்படி எவரேனும், அன்று கேட்டிருந்திருப்பின் - நான் உடனடியாய் அழுதிருப்பேன். அந்த கணம், உணர்வின் வெகு-விளிம்பில் இருந்தேன். எங்களுடைய எவரின் நம்பிக்கையையும் அவன் வீணடிக்கவில்லை!

            தென்னவன் பெற்றிருந்த மதிப்பெண்கள் 1150/1200. இதைவிட, அதிக மதிப்பெண்கள் பலரும் பெற்றிருகின்றனர்! அதைப் பற்றியெல்லாம், துளியும் கவலை இல்லை; எங்கள் குடும்பத்தில் அவன் எடுத்திருப்பது தான் அதிக மதிப்பெண்கள்! இதற்கு 3-ஆண்டுகளுக்கு முன் என்தமக்கை ஏறக்குறைய அதே மதிப்பெண்கள் பெற்றிருந்தான். எனக்கு, இந்த மதிப்பெண்கள்-அடிப்படையிலான கல்வி-முறையில் (இன்னமும்)உடன்பாடு இல்லை எனினும், அவன் எடுத்திருந்த மதிப்பெண்கள் என்னை வெகுவாய் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை! இங்கே எவரின் உடன்பாடும் முக்கியம் இல்லை; அவனின் வாழ்வை-தீர்மானிக்கப்போகும் "உயர்கல்வியை" நிர்ணயிக்கப்போகும் கல்லூரி/கல்வி-நிறுவனம் - இந்த மதிப்பெண்ணை தான் அடிப்படையாய் கொண்டு செயல்பட போகிறது. எனவே, எனக்கு பெருத்த சந்தோசம்; முக்கியமாய், எனக்கும்/என்தமையனுக்கும்; நாங்கள் எவ்வளவு முயன்றும் முடியாத - கணிதத்தில் 200/200 என்ற இலக்கை - அவன் அடைந்ததில் பெரிய திருப்தி.

          அடுத்ததாய், அவன் பொறியியல்-படிப்பில் சேர்வதற்கான "கட் ஆஃப்" மதிப்பெண் 198.5 என்பதை பார்த்தேன். அடடா! இன்னும், 1 அதிகமாய் பெற்றிருந்தால் - நன்றாக இருந்திருக்குமே என்ற "நற்பாசை" எனக்கும் எழுந்தது! மதிப்பெண்-என்ற கல்வி-முறையிலே எந்த நம்பிக்கையும் இல்லாத எனக்கே, இந்த ஆசை எழும்போது?! சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கு எப்படி இல்லாமல் போகும் என்ற கேள்வியும் எழுந்தது! கல்வி-சார்ந்த என்னுடைய முந்தைய தலையங்கங்கள் நினைவுக்கு வந்தன! நான், இன்னமும் அதையேதான் அறிவுறுத்த விரும்புகிறேன்; மதிப்பெண் மட்டுமே - ஒருவரின் தரத்தை நிர்ணயிக்க முடியாது! ஆனால், இதுபோல் அடுத்த-கட்டத்திற்கு இட்டுச்செல்லும் ஒரு கருவியாய் வேண்டுமானால், இருக்கலாம் என்று புரிந்தது! அவன் இயற்பியலில் 199-உம்; வேதியலில், 195-உம் எடுத்திருந்தான்! வேதியலில், இன்னும் 4-மதிப்பெண்கள் பெற்றிருந்தால் கூடுதல்-சிறப்பாய் இருந்திருக்குமே?! என்ற ஆசை எழுந்தது!

     என்னை நானே கேள்வி கேட்க  ஆரம்பித்தேன்! ஏன், அதிக-மதிப்பெண் என்ற எண்ணம் எனக்குள்ளும் வந்தது என்று யோசிக்க ஆரம்பித்தேன்! நான் 912 மதிப்பெண்கள் மட்டும் தான் எடுத்தேன்; ஆனால், அதுவே எங்கள்-பள்ளியின் (திருக்கோவிலூர்) முதல் மதிப்பெண்!  முன்பெல்லாம், இவ்வளவு மதிப்பெண்கள் பெறுவது சாதாரணம் அல்ல; உண்மையில், இன்றும்(கூட) அத்தனை எளிதல்ல! ஆனால், இந்த பிள்ளைகள் - எல்லா சுகத்தையும் இழந்து 1-க்கு; 2-ஆண்டுகள் படிக்கின்றன! ஆம்! 11-ஆம் வகுப்பு படிக்கும்போதே - இவர்களுக்கு 12-ஆம் வகுப்பு பாடங்கள் ஆரம்பித்து விடுகின்றன. அதிலிருந்து, அவர்களுக்கு விடுப்பு என்பதே இல்லாமல் போய்விடுகிறது; நிறைய பிள்ளைகள் தீபாவளி/பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு கூட வீட்டிற்கு வரமுடியாத சூழல். இப்படி, இந்த வயதில் அனுபவிக்க வேண்டிய பலதையும் அனுபவிக்க முடியாமல் - பெருஞ்சிரமப்பட்டு படிக்கும் இவர்களிடம் இன்னமும், எதிர்பார்ப்பது எப்படி நியாயமாகும்??!!

          இது 99.99-க்கும்; 100-க்கும் உள்ள வித்தியாசத்தைப் போன்றது! 0.01 தான் வித்தியாசம் எனினும், 100 என்பது முற்றிலும் மேன்மை தானே?! என்று நியாப்படுத்த தோன்றியது! ஆனால், மதிப்பெண் மட்டுமே ஒருவரின் தரத்தை நிர்ணயிக்க முடியாது என்பது எப்படி சரியோ; அதுபோல், ஒருவர் படிக்கும் கல்லூரி/கல்வி-நிறுவனம் மட்டுமே(கூட) ஒருவரின் தரத்தை நிர்ணயிக்க முடியாது என்ற உண்மையும் விளங்கியது; இவையிரண்டும், ஒரு காரணியாய் வேண்டுமானால் இருக்கலாம்! எனவே, அவன் எடுத்திருப்பது எந்த விதத்திலும் குறைவில்லாத; நிறைவளிக்கும் மதிப்பெண்ணே! என்று உணர்ந்தேன். எந்த கல்வி-நிறுவனத்தில் வேண்டுமானால் கிடைக்கட்டும்; அவனின் திறமை தான் முக்கியம்! அதை எங்கிருந்து கொண்டு வேண்டுமானாலும், உயர்த்திக் கொள்ளலாம்! அதற்கு ஒரு மாணவனின் தரம் தான் மிக-முக்கியம்; அது தென்னவனிடம் மிகுந்து இருகிறது, என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை! எனவே, அவனுக்கு எந்த கல்வி-நிறுவனத்தில் வேண்டுமானால் இடம் கிடைக்கட்டும் என்ற...

உறுதி மேலோங்கியது! அதையே, என்குடும்பத்தார்க்கும் சொல்லிவருகிறேன்!!!

பின்குறிப்பு: நம் பிள்ளைகள் எத்தனை மதிப்பெண்கள் எடுத்திருப்பினும், அதை வரவேற்போம்! அவர்களின் திறமைக்கேற்ற எதிர்காலம் அவர்களுக்கு நிச்சயம் இருக்கிறது என்பதை உணர்வோம்! நம்புவோம்!! அதிகமாய் எடுத்திருந்தால், மகிழ்ச்சி என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஆனால், அதற்காய் துவண்டுவிட வேண்டாம். அவர்களுக்கு உரித்தான - உன்னத வாழ்க்கையை நாம் கண்டிப்பாய் அமைத்து கொடுக்க முடியும். தேர்ச்சி பெற்ற அனைத்து மாணாக்கர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!     

என்மகளின் முதல் கையொப்பம்...        மேலுள்ள புகைப்படத்தில் இருப்பது - என்மகளின் 1-ஆம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பத்தில் நானும், அவளும் கையொப்பம் இட்ட பகுதி! சென்ற முறை விடுப்பில் இந்தியா சென்றதற்கு என்மகளின் பள்ளி-சேர்க்கையே காரணம் என்பதை முந்தைய தலையங்கத்தில் கூறி இருந்தேன். அவளின் பள்ளியில் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ததும், அவளும் கையொப்பம் இடவேண்டும் என்பதை அறிந்தேன். நான் என்னுடைய 1-ஆம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பத்தில் கையொப்பம் இட்டேனா?! என்பது எனக்கு தெரியவில்லை! இது, எந்த தலைமுறையில் ஆரம்பித்தது  என்பதும் தெரியவில்லை. சேர்க்கை நாளுக்கு 2-வாரங்களுக்கு முன்பிருந்தே என்னவளும்; என் மரு-பெற்றோர்களும் என்மகளுக்கு கையொப்பம் இடும் பயிற்சியை தொடர்ந்து அளித்தனர். பள்ளியில், அவளின் பெயரை எழுதிட சொல்லக்கூடும் என்பதால் அந்த பயிற்சி என்று என்னிடம் கூறியிருந்தனர். எனக்கு, என்மகள் விண்ணப்ப படிவத்தில் கையொப்பம் இடவேண்டும் என்பது தெரியாது!

    என்மகள் அப்படி கையொப்பமாய் எழுதி காண்பித்திருக்கிறாள் எனினும், அவள் முதன்முதலாய் அதிகாரபூர்வமாய் விண்ணப்பத்தில் அப்படி கையொப்பம் இட்டதை கண்டு - பெருத்த சந்தோசம்! இதற்கு முழுமுதல் காரணம் - என்னவளே!! அவளின் பெருத்த முயற்சியும்; அவள் கொடுத்த பயிற்சியும் முக்கிய காரணிகள். வேறெவருக்கும் இப்படி கையொப்பம் இட்டது நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை. அப்படி இட்ட கையொப்பத்தின் நகலை எத்தனை பெற்றோர்கள் எடுத்தனர் என்று தெரியவில்லை. நான் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதை அடுத்த அறையில் சென்று சமர்ப்பிக்கும் முன்னர் - என்னுடைய அலைபேசியில் "தவறாமல்" பதிவு செய்துவிட்டேன். இது எனக்களித்த சந்தோசத்தை விட - என்மகள் வளர்ந்தவுடன் அவளுக்கு பெருத்த சந்தோசத்தை கொடுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை! இது சிலருக்கு சாதரணமாய் படக்கூடும்; ஆனால், இந்த விசயம் எத்தனை பெரியது என்பது என்மகளுக்கு பிற்காலத்தில் புரியும். பணம், சொத்து - இவைகளைக் காட்டிலும்... 

இதுபோன்றவைகளை; என்மகளுக்காய் சேர்ப்பதில் தான் எனக்கு பெருத்த சந்தோசம்!!!