வெள்ளி, மார்ச் 30, 2012

இன்றுமா, இல்லத்தரசிகள் இளைத்தவர்கள்?...


         தலைப்பை பார்த்தவுடனே புரிந்திருக்கும் - எதைப்பற்றி எழுதப்போகிறேன் என்று! "ஆணாதிக்கம்" தலைவிரித்தாடிய கோரக்கதைகளை எல்லாம் நாம் கேட்டிருக்கிறோம் அல்லது அது பற்றி படித்திருக்கிறோம். ஆனால், இப்போது நிலைமை அப்படித்தான் இருக்கிறதா? என்று எவரேனும் கேட்டால் சிறிதும் யோசிக்காமல் இல்லை என்று தீர்மானமாய் மறுத்து விடலாம்!!. ஆணாதிக்கமே இல்லை என்று கூறவில்லை; இன்னமும் இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். ஆனால், பெரும்பான்மையாய்  அது குறைந்திருக்கிறது என்பதில் எவருக்கும் இருவேறு கருத்துகள் இருக்கமுடியாது! ஆணாதிக்கத்தின் விளைவாய் பூவையர்கள் இழந்தது சொல்லில் அடக்கமுடியாதவை. ஆனால், ஆணாதிக்கத்தின் பால் எழுந்த எதிர்வினை பல சந்ததிகளாய் பெண்களால் அடுத்த தலைமுறைக்கு சொல்லப்பட்டு, இன்று சம்பந்தமே இல்லாமால் வேறொரு ஆணுலகத்தை "அந்த எதிர்வினை" பாதித்துக்கொண்டிருப்பதாய் படுகிறது. அதைத்தான் சமீபத்தில் என்னுடைய புதுக்கவிதையில் வெளிப்படுத்தியிருந்தேன். நாம் கவனிக்க வேண்டியது, இன்றும் பெண்கள் அடக்கிவைக்கப்பட்டிருப்பதாய் என்றெண்ணி, என்றோ எவர்க்காகவோ உருவாக்கப்பட்ட "சட்டங்களை" இன்னமும் ஏன் மாற்றாமல் கடைபிடிக்கிறோம் என்பது தான்; அதை எவ்வாறெல்லாம் பெண்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் தவறான விதத்தில் பயன்படுத்துகிறார்கள் என்பது தான். இதை யோசித்தபோது எழுந்த கேள்வி தான் "இன்றுமா, இல்லத்தரசிகள் இளைத்தவர்கள்?".

   ஆணாதிக்கத்தின் பாதிப்பிலிருந்து பெண்களை பாதுகாக்க இயற்றப்பட்ட சட்டங்களுள் மிக முக்கியமானதாய்  கருதப்படுவது "வரதட்சனை ஒழிப்பு சட்டம்". வரதட்சனை என்பது பொருளாதாரத்தை மையமாய் கொண்டுதான் ஆரம்பித்திருக்க வேண்டும். நம் நாட்டில், திருமணம் முடிந்ததும் பெண் வீட்டார் "குடும்பம் நடத்துவதற்காய்" பொருட்கள் கொடுப்பது வழக்கம். அதுவும், திருமணம் நடக்கும் இடத்திலேயே அனைவர் முன்னிலையிலும் கொடுப்பர். அதாவது, தங்கள் பெண்ணின் கணவனுக்கு உதவுவதற்காய் என்று எடுத்துக்கொள்ளலாம். இதனால் தான் அந்த கணவனோ அல்லது அவனை சார்ந்தவர்களோ திருமணத்திற்கு பின்னரும் கேட்க ஆரம்பிக்கிறார்கள் என்று தோன்றுகிறது. தயைகூர்ந்து நான் வரதட்சனையை ஆதரிப்பதாய் தவறாய் எண்ணி விடாதீர்கள்; நான், வரதட்சனையை முழுமையாய் ஆராய்ந்தறிய முயற்சிக்கிறேன். சரி, இங்கே தவறு எங்கே நடக்கிறது என்றால் - திருமணத்திற்கு பின்னரும் கணவனோ அல்லது அவன் குடும்பமோ மீண்டும், மீண்டும் கேட்கும்போது - இருப்பவர்கள் கொடுத்துவிடுகிறார்கள். எதுவும் இயலாதவர்களால் எதையும் செய்ய முடியவில்லை; அப்போது பல குடும்பங்களில், நான் "ஆணைப் பெற்றவன்" என்னும் திமிர் தலை தூக்க ஆரம்பிக்கிறது. இது தான் வரதட்சனை கொடுமையாய் உருமாறுகிறது; பெரும்பாலும் இது பொருளாதாரத் தேவைக்காய் இருப்பினும் பொருளாதரத்தையும் தாண்டிய காரணங்களும் நிறைய இருக்கத் தான் செய்கின்றன. 

      சரி, நாம் நம்முடைய தலையங்கத்தின் கருவிற்கு வருவோம். இன்று மிகப்பெரும்பான்மையான பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள்; அதனால் பொருளாதாரத் தரம் உயர்ந்திருக்கிறது. கணவன்-மனைவி இருவரும் சேர்ந்தே குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்துவிடுகின்றனர்; பெண் வீட்டாரை தொல்லை செய்வது "மிகப்பெரிய" அளவில் குறைந்திருக்கிறது என்பது கண்கூடாய் தெரிகிறது. பொருளாதராத் தரம் உயர்ந்திருக்கிற காரணத்தினால், வரதட்சனை கொடுமை மிகப்பெரிய அளவில் குறைந்திருக்கிறது. இதன் விளைவாய் தான், வரதட்சனைக்-கொடுமையை காரப்படுத்தி நடந்த "பெண் சிசுக்கொலை" பெருமளவில் குறைந்திருக்கிறது!!! பின் ஏன் "வரதட்சனை ஒழிப்பு சட்டம்" என்பது மாறவில்லை? நான், அந்த சட்டத்தை நீக்கவேண்டும் என்று கூறவில்லை! ஏன் அந்த சட்டத்தின் கடுமை(கூட) குறையவில்லை?? எல்லா சட்டங்களும் ஒரு சமுதாயத்தை பிரதிபலிப்பவை தான்; சமுதாயத்தில் உள்ள குறைகளை நீக்கி சமுதாயத்தை சீர்படுத்த தான். அப்படியாயின், சமுதாயம் தன் குறையை களைந்து தன்னை சீர்படுத்திக் கொண்ட பின் அதை மதித்து சட்ட மாற்றமும் வரவேண்டும் தானே??? இன்று நம் நாட்டில் "மரண தண்டனை" ஒழிக்கப்படவேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கியிருக்கிறது. உச்சபட்ச தண்டனையே ஒழிக்கப்படவேண்டும் எனின், இந்த சட்டம் மட்டும் தொடர்ந்து அவ்வாறே இருப்பது எங்கனம் நியாயமாகும்? ஏன், சம்மந்தப்பட்டோர் இதை செய்ய எத்தனிக்கவில்லை??

       இந்த சட்டத்தை நீக்கினால் அல்லது கட்டுப்பாட்டை தளர்த்தினால், "வரதட்சணை கொடுமை" மீண்டும் தலைதூக்கும் என்று எவரும் வாதிட்டால், நான் அதை தீர்க்கமாய் மறுப்பேன். இந்த சமூக-மாற்றம் சட்டத்தின் கொடுமையால் நிகழவில்லை என்பதை உணர்த்த தான், வரதட்சணையின் ஆதாரத்தை நான் விளக்கமாய் எழுத வேண்டிய அவசியம் ஏற்ப்பட்டது. இது ஓர் காலச்சுழற்சி!  மேலும், சட்டமும் அதன் தண்டனையும் குற்றத்தை முழுமையாய் ஒழிக்க உதாவாது. அப்படியாயின், உலகம் முழுதும் ஏன் "தீவிரவாதம்" துவங்கி பல குற்றங்கள் தொடர்ந்து நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்து கொண்டே போகவேண்டும்? மேலும், இந்த குறிப்பிட்ட சட்டம் இப்போது தவறான முறையில் உபயோகிக்கப்படுகிறது என்பது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன், "இந்திய நிர்வாக சேவை (IAS)" தேர்வு வென்ற உயர்ந்த அதிகாரி ஒருவர் (மற்றும் அவர் குடும்பம்) அவரின் மருமகளை வரதட்சனை கொடுமை செய்ததாய் ஊடகங்கள் மூலம் பெரிதுபடுத்தப்பட்டது. அதன் பின், அது உண்மையா பொய்யா என்ற செய்தியை எந்த ஊடகமும் உறுதி செய்யவில்லை! அதே போல், உச்ச நடிகர் ஒருவரின் காதல் திருமணம் செய்த மகள் மிகக்குறுகிய காலத்தில் "வரதட்சணை புகார்" அளித்தது பரபரப்பான செய்தியை உண்டாக்கியது. ஆனால், அதன் பின் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. ஒன்று மட்டும் உண்மை! இவை போன்றவை உண்மை செய்தி அல்ல!! இல்லையேல், இந்த ஊடகங்கள் அதன் தொடர்ச்சியை வெளியிட்டிருக்கும்.

    பெரும்பாலும், வரதட்சணை-கொடுமை சட்டத்தை "தவறாய் பயன்படுத்தும்போது", அந்த கணவனுக்கு - மனைவி என்பவளிடம் இருந்து எந்த ஆதரவும் இல்லாமல் இருக்கும் கொடுமை வேறு. இதில் வேண்டுமென்றே ஆதரவு தராமல் இருக்கும் பெண்களும் உண்டு; பெற்றவர்களால் அந்த ஆதரவு மறுக்கப்படும் பெண்களும் உண்டு; பெண்ணின் பொய்யை உணராது (சில சமயத்தில் உணர்ந்தும் கூட, உணர்ச்சிவயப்பட்டு) அவளை ஆதரிக்கும் "நல்ல பெற்றோர்களும்" உண்டு. செய்யாத தவறுக்காய் தண்டனையும் அனுபவிக்கவேண்டும் - மனைவி மற்றும் குழந்தையை (இருப்பின்) பிரிந்திருக்க வேண்டும். இந்த சூழ்நிலையை ஓர் இயக்குனர் "அழகான தலைப்பில்" தமிழ்ப் படமாய் பத்து ஆண்டுகளுக்கு முன் கொடுத்திருந்தார்; எவர் மனதையும் உருக்கும் திரைக்கதை. அந்த திரைப்படம் மட்டும் இப்போது வெளியிடப்பட்டிருக்குமேயானால், மிகப்பெரிய வெற்றியை ஈட்டியிருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை. மேற்கூறிய திரைப்படத்தில் நாயகன் இறுதியில் குடும்பத்துடன் சேர்ந்ததாய் காண்பிக்கப்பட்டிருக்கும். ஆனால், நடைமுறையில் அந்த மாதிரியான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. தவறான பொய் புகார் கொடுக்கும்போதோ அல்லது அதைத் தொடர்ந்து மேற்கூறிய திரைப்படத்தில் வருவது மாதிரி நிகழ்சிகள் நடக்கும்போதோ அத்தகைய தவறு செய்பவர்களை (மனைவி எனும் பெண் உட்பட) அது பாதிக்காதா? இது எப்படி சாத்தியமாகிறது!!! இந்த எல்லா பொய்களையும், தவறுகளையும் தாண்டி வாழ்க்கை என்று ஒன்று உள்ளதை, அதுவும் குழந்தை இருந்தால் அதன் வாழ்க்கையும் பாதிக்கும் என்பதை எப்படி உணராமல் போகிறார்கள்?

         இங்கே எவர் வாழ்க்கையும் நிரந்தரமில்லை; கணவன் முன்பே இறந்துவிட்டால், பரவாயில்லை; சரி பெண்ணின் பெற்றோர்கள் அவர்கள் இருக்கும் வரை பார்த்துக்கொள்வார்கள். ஒருவேளை, அந்த பெண்ணின் பெற்றோர்கள் முன்பே இந்துவிட்டால்? ஏன், ஒரு பெண்ணால் தனியாய் வாழ முடியாதா? என்ற கேள்வி எழலாம்!! முடியலாம்; சரி, பொய்யும் தவறும் கலந்து செய்த ஓர் வினையால் ஏன் வாழ்க்கை அறுபடவேண்டும்? அதற்கு ஏன் திருமணம் செய்யவேண்டும்?? தனியாகவே இருந்து விடலாமே??? இதைப் பற்றி எந்தப் பிரக்ஞையும் இல்லாத அளவிற்கு பெண்ணும் அவரை சார்ந்தவர்களும் செய்கைகள் செய்ய எது காரணம்? உயர்ந்த பொருளாதார தரம் என்று எடுத்துக் கொள்ளலாமா?? உண்மையாய் இந்த சித்தரவதைக்கு ஆட்படுத்தப்படும் "சகோதரிகளை" பற்றி நான் இங்கே கூறவில்லை; மேலும் அம்மாதிரி பாதிக்கப்படுபவர்களில் பெரும்பான்மையோனோர் "குடும்பம்" என்பதை முன்னிறுத்தி பிரச்சனைகளை சமாளித்து தான் பயணப்படுகிறார்கள். இதை எல்லாம் யார், எப்படி தவறு செய்பவர்களுக்கு எடுத்துரைப்பது! இம்மாதிரி, அப்பாவியான ஆண் தண்டிக்கப்படுவதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று "வரதட்சனை தடுப்பு சட்டம்" என்பதில் உள்ள ஒரு விதி; உண்மை தெரியாத முன்னரே தண்டிக்கும் அதிகாரம். அதனால் தான் இது மாற்றப்படவேண்டும் என்கிறேன். இது போன்று பல சட்டங்களால் பல விதத்திலும் இன்று ஆண்கள் தவறேதும் செய்யது தண்டிக்கப்படுகிறார்கள். எனவே, அனைத்து விதத்திலும், என்னுடைய பார்வையில், இன்று...

இல்லத்தரசிகள் இளைத்தவர்கள் இல்லை!!!

பின்குறிப்பு: இத்தலையங்கம் வெளியிடும் சில தினங்களுக்கு முன் நாளிழதில் ஒரு செய்தி படித்தேன். விவாகரத்து வழக்கில் உடனடியாய் "விவாகரத்து" பெறுவதற்கு வசதியாய் ஓர் திருத்தம் வந்துள்ளதாம்; அந்த பிரிவின் கீழ் கணவன் விண்ணப்பித்ததால், அதை எதிர்த்து மனைவி விண்ணப்பிக்கமுடியுமாம்! ஆனால், மனைவி விண்ணப்பித்தால், கணவன் மறுத்து விண்ணப்பிக்கமுடியாதாம்!! என்ன விதமான நியாயம் இது? அதற்கு, கணவன் அந்த பிரிவின் கீழ் விண்ணப்பிக்க முடியாது என்று கூறிவிடலாமே?? அல்லது, மனைவி விண்ணப்பித்தால் (மட்டுமே) கண்டிப்பாய் விவாகரத்து கிடைக்கும் என்று அர்த்தமா, அதுவும் உடனடியாய்??? ஒருவேளை, சட்டம் தெரிந்தவர்களுக்கு இதன் உண்மை நிலை புரியுமோ????

தாய்...


உயிர் ஈந்தாள் தாய்
உலகம் கான்பித்தாள் தாய்
உறவு உருவாக்கினாள் தாய்
உள்ளம் வலிமையாக்கினாள் தாய்
உரிமை கொடுத்தாள் தாய்
உணர்ச்சி ஊட்டினாள் தாய்
உணவு படைத்தாள் தாய்
உள்ளதத்தனையும் பகிர்ந்தாள் தாய்
உம்மக்கட்கும் தொடர்ந்தளித்தாள் தாய்

உதிர்த்தவள் மனம் பித்-தாய்
உந்தன் மனமோ வெத்-தாய்
உள்ளுனர்வில்லாது ஏன் குழந்-தாய்!
உன்தாய் அவளை மறந்-தாய்???

தமிழ் தாகம்...பௌதீகம் படித்து
சௌகர்யம் நினைத்து
கெளரவம் தொலைத்து
மௌனம் காத்து
ரௌத்திரம் குறைத்து

ஒளவையே! என்ன நிகழ்ந்தது?...
வௌவால் வாழ்க்கையே கிடைத்தது!!!

இணையம்...


புரியாததை புரிய வைப்பதிலும்
பிரிந்தவரை இணைத்து வைப்பதிலும்
பிரிவின் துயரை குறைப்பதிலும்

சமயத்தில்...
பிள்ளைகளின் ஒழுக்கத்தை கெடுப்பதிலும்(கூட)
இணையம்... இமயம்!!!

மழையின் வரலாறு...


வானம்  -  மழையின் தாய்!
மேகம்  -  மழையின் கருவறை!
இடி          -     மழைப்பிரசவத்தின் அலறல்-ஒலி!
மின்னல்   -     மழைப்பிரசவத்தின் மகிழ்ச்சி-ஒளி!
தூரல்       -     பிரசவித்த மழைக்குழந்தை!
பூமி           -   மழைக்குழந்தையின் செவிலித்தாய்!
ஓடை       -  துள்ளியோடும் மழைக்குழந்தை!
நதி           -     பருவமெய்திய மழைக்கன்னி!
கடல்        -     மழையின் கல்லறை
நீராவி      -     மழையின் மறுபிறப்பு

இழப்புகள்...வாடிய பூக்கள்
இழப்பது மனம்
வாழாத பூவையர்
இழப்பது குணம்
வாக்கு தவறுபவர்
இழப்பது இனம்

ஆனால்...
வாழ்க்கை தவறுபவர்
இழப்பது ஜனனம்...

தவறுமேல் தவறு...காதலிக்கும் போது
உன்னை மறக்கிறாய்!
காதல் முறிந்தபின்
உன்னை வெறுக்கிறாய்!!
உருண்டோடும் காலத்தில்(ஓர்நாள்)...
காதலையே மறுக்கிறாய்!!!

வெள்ளி, மார்ச் 16, 2012

என்ன வாழ்க்கை இது?...
        என்ன வாழ்க்கை இது? - நான் அடிக்கடி குறிப்பிடும்படி என்னவளும், என் மகளும் கடந்த ஓராண்டு காலமாய் இந்தியாவில் இருக்கிறார்கள்; அவர்கள் என்னுடன் இல்லாததிலிருந்தே என்னுள் அடிக்கடி எழும் கேள்வி தான் இது - என்ன வாழ்க்கை இது? சேமிப்பு என்பதை பற்றி நான் யோசிக்க கூட தவறியதன் காரணமாய், பொருளாதாரத்தை மையமாய் கொண்டு இங்கே தனியே சிறிது காலம் இருக்கவேண்டிய கட்டாயம். அதன் அவசியத்தை என்னுடைய சமீபத்திய தலையங்கத்தில் கூட குறிப்பிட்டிருந்தேன். இந்த தனிமை என்னென்ன விளைவுகளை உண்டாக்குகிறது, அதனால் உருவாகும் மன அழுத்தங்கள் மற்றும் பல விசயங்களை என்னுடைய பார்வையில் இங்கே விளக்கியிருக்கிறேன். என்னவள் என்னுடன் இல்லாதது மிகப்பெரிய வலி எனினும், அதை என்னால் உணர்ந்து உள்வாங்கிக்கொள்ள முடிகிறது; இந்த தனிமையின் அவசியத்தை புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால், என்னுடைய மகள் விசயத்தில் அவ்வாறு எளிதாய் சமாதானம் அடைய முடியவில்லை. அவள் பள்ளி ஆண்டு விழாவுக்காய் "நடனம்" எல்லாம் கற்று ஆடுகிறாளாம், இந்த வயதில்; என்னால் எதையும் உடனிருந்து பார்க்கமுடியவில்லை. உடனே எழுவது தான் - என்ன வாழ்க்கை இது! ஒவ்வொரு வாரக் கடைசியிலும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் ஒரு மணி நேரம் இணையம் மூலமாய் அவளிடம் உரையாட மட்டுமே முடிகிறது. அதுவும் பல நேரங்களில் பல்வேறு காரணங்களால் தடைபடுகிறது. பெரும்பான்மையான குழந்தைகள் போல், அவளும் தொலைபேசியில் பேசுவதை விரும்புவதில்லை; இல்லையேல், தினமும் கூட அவளிடம் சிறிது நேரம் உரையாட முடியும்.

        வருடம் ஒரு முறை இந்திய சென்று வருவது தான் வழக்கம்; சில நேரத்தில் ஒன்றரை வருடம் கழித்து கூட சென்றிருக்கிறேன். ஆனால், இப்போது வருடம் இருமுறை சென்று வருகிறேன்; கடந்த முறை இந்தியா சென்று வந்த பின்பு ஒவ்வொரு முறை அவளிடம் இணையம் மூலம் பேசும் போதும் (அரிதாய் அவள் பேசும் தொலைபேசி உரையாடலின் போதும்) அவள் "அப்பா! இங்கே வா!! இங்கே வா!!!" என்று விடாது அழைத்துக்கொண்டே இருப்பாள். நானும் அப்போதைக்கு ஏதேனும் சமாதானம் சொல்லி சமாளிப்பேன்; ஆனால், அவள் முகம் வாடுவதை கண்கூடாய் பார்க்கமுடியும். அவளும் ஒரு மாதத்திற்கும் மேலாய் அழைத்து ஒரு சமயத்தில் நிறுத்தி விட்டாள். நானும், சரி அவள் என்னால் வர முடியாது என்பதை உணர்ந்து கொண்டாள் என்று எண்ணினேன். ஆனால், அது தவறு என்று ஓர் நாள் புரிந்தது! ஓர் நாள் அவளை பேச அழைக்கும் படி என்னவளிடம் கூறினேன்; என்னவள் அழைத்ததும் என் மகள் "அப்பா மேல் கோபமாய் இருக்கேன்" என்று பதில் சொன்னாள். நான் அப்போதைக்கு அதை விளையாட்டாய் எடுத்துக்கொண்டேன்; ஓர் நாள் இணையத்தில் வந்தவள் எப்போதும் என்னை பார்த்ததும் எப்போதும் "அப்பா! அப்பா!! அப்பா!!!" என்றழைப்பவள் அன்று ஓர் வார்த்தை கூட பேசவில்லை. மாறாய், அன்று எப்போதும் அல்லாது அவள் கணினியில் Tom & Jerry Cartoon பார்க்க ஆரம்பித்துவிட்டாள். அவளுக்காய், அவள் பிறக்கும் முன்னர் இருந்தே அந்த cartoon-களை நான் தான் சேகரித்தேன் எனினும், அது என்னை மிகவும் பாதித்து விட்டது. அதனால், என்னவளிடம் கூட எதுவும் சொல்லாது இணையத்தை துண்டித்துவிட்டு சென்றுவிட்டேன்.      

             இந்த பாதிப்பு நிகழ்ந்த சில நிமிடங்களில் என்னப்பன் எனக்கு விடுபட்ட அழைப்பு (Missed Call) கொடுத்தார். நான் பலமுறை அவருக்கு விடுபட்ட அழைப்பு கொடுத்த பின் சிறிது காத்திருக்க சொல்லியிருக்கிறேன்; கணினி மூலமாய் என் தொலைபேசிக்கு அழைத்து பின்பு அவருக்கு அழைக்கவேண்டும் என்று விளக்கியிருக்கிறேன். ஆனால் அவருக்கு அது புரிந்ததாய் தெரியவில்லை. நான் மீண்டு அழைக்கும் முன் பல முறை விடுபட்ட அழைப்பு கொடுப்பார்; இருவரும் ஒரு சேர உபயோகத்தில் இருப்பதால் என்னால் அவரை தொடர்பில் வரவழைக்க இயலாது. சில முறை அவரை சிறிதாய் கடிந்திருக்கிறேன். அது போல் அன்றும் பலமுறை அழைத்துவிட்டார்; நான் ஏற்கனவே என் மகள் பேசாத அழுத்தத்தில் இருந்ததால் அவரை பெரிதாய் கடிந்து கொண்டேன். அவரின் நீண்ட நாள் கனவான "புதிய இரண்டு சக்கர வாகனம்" வாங்கி அதை கடையில் இருந்து எடுத்து செல்லும் முன் முதலில் எனக்கு தெரிவிக்க (ஓர் குழந்தையின் மனநிலையோடு) அழைத்தவரை இவ்வாறு நோகடித்தது பின்பு தெரிந்தது! அவர் அதை பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை எனினும், என்னால் இன்னமும் கூட அந்த நிகழ்வை சீரணிக்க முடியவில்லை. என் மகள் பேசாததால் ஏற்பட்ட அழுத்தம், ஒரு சிறிய விசயத்திற்காய் என் தந்தையின் மனதை காயப்படுத்தும் அளவிற்கு சென்றுவிட்டது - என்ன வாழ்க்கை இது! பிறகு, காரணமே இல்லாமல் பகல் 12:30 மணியளவில் படுத்து உறங்கிவிட்டேன்; அன்றைய பொழுதையே வீணாக்கிவிட்டேன்.

       பின் ஒன்று புரிந்தது! என் மகள் என்னை அழைத்து, அழைத்து பார்த்து நான் வராததால் ஏமாற்றமும், கோபமும் அடைந்திருக்க வேண்டும்!! பாவம்!!! குழந்தை உள்ளம்; என்னாலேயே என்னை - என் உணர்வுகளை, உணர்ச்சிகளை - கட்டுப்படுத்த முடியாத போது மூன்று வயது கூட ஆகாத அந்த குழந்தையால் எப்படி இதை உணர்ந்து அவளை கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்? என் செய்கை உணர்ந்து கூனி குறுகினேன்; என் தவறு உணர்ந்தேன். பின் ஒரு நாள் என் தாயை அழைத்து பேசினேன்; நடந்தவற்றை விளக்கினேன். என் தாய் மிகவும் வேதனை அடைந்து என்னை கடிந்துகொண்டார்; அவள் ஒரு சிறிய குழந்தை தானே! அவளுக்கு என்ன தெரியும்; அவள் விளையாட்டு பிள்ளை தானே டா!! என்றார். அவரிடம், என் மகள் நான் அவள் அழைத்ததும் வராததால் கோபமாய் இருக்கக் கூடும் என்றேன்! அவர் இருக்காதா பின்னே! உன் மகள் தானடா அவள்? உனக்கு வரும் கோபம் அவளுக்கும் வரும் தானே என்றார். என்னுடைய வேதனையை என்னைப் பெற்றவளுக்கும் கொண்டு சேர்த்துவிட்டேன். அவர் அவன் மகன் வேதனையைக் கண்டு வேதனை அடைந்திருக்கக்கூடும். அப்போது தான் என் தாய், நான் 1989 - லிருந்து வீட்டை விட்டு வெளியே தங்கி வாழ்வதை (அதாவது என் தாயை பிரிந்து வாழ்வதை) தொடர்ந்து மனம் நொந்து சொல்வதை நான் சிறிதும் பொருட்படுத்தாது அவரின் அந்த கருத்தை உதாசீனப்படுத்தியது புரிந்தது! உடனே, என் மகள் என்னைப்போல் தானே என்னைப் பொருட்படுத்தாது இருக்கிறாள் - அதுவும் இந்த சிறிய வயதில் - அதில் என்ன தவறு இருக்கமுடியும் என்ற கேள்வியும் எழுந்தது!

      என் தாயிடம் பேசிய பின் எனக்கும் பெரும் தெளிவு வந்தாதாய் தோன்றிற்று! நான் எழுதிய "குழந்தை வளர்க்க" என்ற புதுக்கவிதையை நானே முழுக்க உள்வாங்காததாய் உணர்ந்தேன். ஆம்! குழந்தை வளர்க்க குழந்தையாய் மாறவேண்டும் என்று கூறிய நானே, என் தனிமை இழைத்த வெறுமை பால் அவளின் மனநிலைக்கு சென்று என் மகளை உணராது தவறினேன். இத்துனை அகவை கடந்தும் நானே, நினைத்தது நடக்கவில்லை எனில் நிலைதடுமாறும் போது, அந்த பிஞ்சு உள்ளம் தானழைத்ததும் தந்தை வரவில்லை என்பதால் எப்படி தன்னிலை மாறாது இருக்க முடியும்? பொருளாதார சூழ்நிலை காரணமாய், என்னுடைய தெளிவில்லாத திட்டமிடுதலால் நான் இங்கு இருக்கவேண்டிய கட்டாயத்தை என் மகள் புரிந்துகொள்ளவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? இல்லை அவளுக்கு புரியும் வயது தான் வந்துவிட்டதா?? என் மகள் என்னுடன் இல்லாததன் கொடுமையை அதற்கான காரணம் புரிந்தும் என்னால் மீண்டு வர முடியவில்லையே! அவளை மட்டும் அதைத் தாண்டி வரவேண்டும் என நான் எதிர்ப்பார்ப்பது எங்கனம் நியாயமாகும்??? கண்டிப்பாய் இது மாதிரி பல தந்தைகள் மற்றும் தாய்கள் இருக்கிறார்கள்; என் மகளாவது பரவாயில்லை - அவளின் தாயுடனும் மற்றும் அவளின் அம்மம்மா மற்றும் அம்மப்பாவுடன் இருக்கிறாள். எத்துனை பெற்றோர்கள் தனித்தனியே வெவ்வேறு தேசத்தில் (அதாவது தாய்தேசம் தவிர்த்து) இருக்கிறார்கள்? குழந்தை தாயுடன் மட்டும் (அல்லது சில தருணங்களில் தந்தையுடன்) வாழ்ந்து அவதிப் பெறுகிறார்கள்??

        இதை விட கொடுமை, ஒரே தேசத்தில் வெவ்வேறு பகுதிகளில் இருப்பது! அதையும் தாண்டிய கொடுமை, திருமணம் நடந்து முடிந்தவுடனேயே கணவனும் மனைவியும் பிரிந்திருப்பது. இதைப் பார்க்கும் போது என்னுடைய நிலை அத்துணை கடினமானதாய் இல்லை என்பது புரிகிறது. மிக நிச்சயமாய் மகளை (குழந்தையை) பிரிந்திருப்பது இம்மாதிரி தனிமைப்பட்டவர்களின் வேதனைகள் பலவற்றில் ஒன்றே!! இது போல் பல பிரச்சனைகள் உள்ளன - வயதான பெற்றோர், வறுமையில் வாடும் பெற்றோர் போன்று பல காரணங்கள் உள்ளன, "என்ன வாழ்க்கை இது" என்று யோசிக்க. ஏனோ, இதை என் மகளின் பிரிவை முன்வைத்து விளக்கவேண்டும் என்று தோன்றியது! உண்மைதானே!! பெற்றோரின் வாழ்க்கை - குறிப்பாய் பிரிந்து இருப்பவர்க்கு - பெரிதும் குழந்தைகளை சார்ந்தே அல்லவா இருக்கிறது!!! அதனால், என் மகளை முன்னிறுத்தி விளக்கியது பொருத்தமானதாய் படுகிறது. சமீபத்தில் வெளிவந்த ஓர் தமிழ் படத்தில் ஐந்து ஆண்டுகள் கழித்து (பிறந்து ஓர் முறை கூட பார்க்காது) மகளைப் பார்க்கப்போகும் ஓர் தந்தையின் மனநிலையை அவர்களுக்குள் நடைபெறும் தொலைபேசி உரையாடலை மட்டும் கொண்டு மிகச்சிறந்த திரைக்கதை அமைத்து ஓர் இயக்குனர் விளக்கி இருந்தார். கண்டிப்பாய் என்னை மட்டுமல்ல! அனைவரையும் (மீண்டும் குறிப்பாய், பிரிந்து வாழும் பெற்றோரை) அந்த காட்சிகள் பாதித்திருக்கும். பொருளாதாரப் பிரச்சனை காரணமாய் நிகழும் இந்த பிரிவை உணர்த்த மிகச் சிறந்த உவமானம் அது! தவறை நம் மீது வைத்துக் கொண்டு குழந்தை மீதோ மற்றவர் மீதோ கோபத்தை வெளியிடுதல் எங்கனம் நியாயமாகும்? கண்டிப்பாய் என்னைப் போன்றவர் எவரும் இருப்பின், இதை சரியாய் உணர்தல் வேண்டும்.

பிரிவை விட இத்துயரங்கள் எவையும் வலிமையானதல்ல!!!
       
பின்குறிப்பு: இத்துனை உணர்ந்தும் கூட இத்தலையங்கம் வெளியிடும் இரண்டு நாட்கள் முன்னர், மீண்டும் மீண்டும் அழைத்தும் என் மகள் தொலைபேசியில் பேசாததால் சிறிது கோபம் வந்தது. ஆனால், வந்த வேகத்திலேயே மறைந்ததும் கூட; நான் இதை இன்னும் பொறுமையாய் சிறிது காலத்திற்கு பழகவேண்டும்; பிறகு தான் இது எனக்கு இயல்பாய் வருதல் சாத்தியம் என்பது புரிந்தது.

ஒரே பயணம்?...பத்து மாதம் சுமந்து
சேயை பார்க்கும் தாயும்
பத்து மாதம் கழித்து
தாயை பார்க்கும் சேயும்

பாவிக்கும் பயணம் ஒன்றோ????

உணரப்படவேண்டிய உண்மை...மின்சாரம் பாய்வது
புவி சுற்றுவது
இறைவன் இருப்பது - போல்
என்னுள் நீயிருப்பதும்...

உணர்த்தப்பட வேண்டியதல்ல;
உணரப்படவேண்டிய உண்மை!!!

முறிக்கவேண்டிய உறவு...ஆண்டுகள் பலவாய்...
இன்று நாளை
என்றெண்ணி எண்ணி
முறிக்கவேண்டிய (ஓர்)உறவு
இன்னமும் தொடர்ந்து
கொண்டிருக்கிறது - குடிப்பழக்கம்!!!

எவர் பதிலளிப்பது?...


கொன்றால் பாவம்!
தின்றால் போச்சு!!
சரி...
தின்றதன் பாவம்?

ஒன்றும் இரண்டும்...கழுத்தில்...
இரண்டு தலைகள் சங்கடம்!
காதலில்...
ஒரு தலை(யே) சங்கடம்!!

வெள்ளி, மார்ச் 09, 2012

சுவாமியே சரணம் ஐயப்பா (பாகம்-1)...

                ("சபரி மலை" பாதையின் கடின தன்மையை உணர்த்தும் படம்; நன்றி - தினமலர்)
*******

        "சுவாமியே சரணம் ஐயப்பா" - தலையங்கத்தின் தலைப்பை பார்த்தவுடனேயே புரிந்திருக்கும்; எதைப் பற்றி எழுதப் போகிறேன் என்று. சரியாக, ஏழு வருடங்களுக்கு பின், இந்த வருடம் "மாலை" அணிந்து சபரி மலை சென்றேன். டிசம்பர் மாதம் இந்தியா சென்ற போது, சபரி மலை சென்று "ஐயனை"  கண்டு வந்தேன். "மாலை போடுதல்" தொடர்பாய் என்னுடைய எண்ணங்களை/ அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இத்தலையங்கம். இது கடவுள் இருக்கிறாரா? இல்லையா?? என்பது போன்ற வாதம் இல்லை! இருக்கிறார் என்பது என் நம்பிக்கை; இல்லை என்பது மற்றவர் நம்பிக்கை. நம்பிக்கை என்பது தனிப்பட்ட மனிதனின் விருப்பு/ வெறுப்பு கலந்தது. "மாலை" அணிந்தவுடன் நான் உணர்ந்த முதல் விசயம், எப்போதும் "ஒரு அசாதாராண மனம்" மூலம் எழும் கிளர்ச்சி,  இம்முறை இல்லை என்பது தான். தீர யோசிக்கும் போது, பின் வருவது புரிந்தது: "மாலை" அணியும் தினத்திற்கு முன்னிரவு, "மாலையை" பசும்பாலில் மூழ்கவைத்து அடுத்த நாள் காலை அணிவது வழக்கம். இத்தேசத்தில் (பெரும்பாலும் அனைத்து மேலை நாடுகளிலும்) கிடைக்கும் பால் செயற்கை முறையில் பதப்படுத்தப்பட்ட பால் ஆதலால், நம் ஊரில் (குறிப்பாய், மாட்டிலிருந்து கறந்தவுடன்) கிடைக்கும் பாலில் உள்ள அந்த வசீகர மனம் இல்லை என்பதை உணர்ந்தேன். இப்போது தான், எதற்கு பாலில் மூழ்கவைக்கிறோம் என்பதற்கு ஒரு காரணம் புரிந்திருப்பதாய் படுகிறது. அந்த மனத்தை "துளசி செடியில்" செய்த மாலையை அணிந்து உணர்ந்தவர்க்கு இதன் முழு பொருளும் தெரியும்.

      மாலை, அணியும்போது கடைபிடிக்க வேண்டிய விசயங்கள் என்று சிலவுண்டு; இது நம்மை வழிநடத்தும் "குரு சுவாமி"களை பொறுத்து சிறிது (சமயத்தில் பெரிதும்) மாறுபடுவது உண்டு. ஆனால், அதன் அடிப்படை ஒன்றாகத் தானிருக்கும். முதலில், காலை - மாலை, இரு நேரங்களில் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்பார்கள்; ஆரம்பத்தில் இதை செய்யவேண்டும் என்பதற்காய் செய்தேன். பிறகு, யோசித்து அதன் பொருள் உணர்ந்தேன்; பெரும்பாலும், மாலை அணிவது "கார்த்திகை" மாதத்தில் தான் அதிகமாய் இருக்கும்; அப்போது, குளிரும் அதிகமாய் இருக்கும். அம்மாதிரி சமயத்தில், அதிகாலை நேரங்களில் குளிர்ந்த நீரே வெதுவெதுப்பாய் தானிருக்கும்; அந்த பதத்தில் உள்ள நீரில் குளித்தால் பின் குளிரின் காட்டம் நம் உடலுக்கு தெரியாது. மாறாய், வெந்நீர் அந்நேரத்துக்கு இதமாய் இருக்குமே தவிர பின் குளிரின் தன்மை உடலை வாட்டும். இன்றைய காலகட்டத்தில், சபரி செல்லும் வழியில் நிறைய வசதிகள் வந்துவிட்டன; ஆனால், அந்த காலத்தில் இவ்வளவு வசதிகள் இல்லை; இவ்வளவு பாதுகாப்புகளும் இல்லை. அப்போது, "பெரும்பாதை" பயணமாய் காட்டு வழி செல்பவர்களுக்கு அதிகாலை (மற்றும் அந்தி சாய்ந்த) நேரம் தான் உகந்ததாய் இருந்திருக்கும் - வெய்யில், காட்டு விலங்குகள் போன்ற பல்வேறு தொல்லைகளிருந்து தப்பிக்க அது தான் சரியான நேரமாய் இருந்திருக்கும். அப்போது, குளிப்பதற்கு வெந்நீர் தேடி அலைய முடியாது; எனவே, ஒரு பயிற்சிக்காகக் கூட அது ஆரம்பித்திருக்கக் கூடும்.

           ஒரு வேலை மட்டும் உண்பது, அல்லது குறைத்து உண்பது என்பது. இப்போது இருப்பது போல் அந்த காலத்தில் அவ்வளவு கடைகள் வழியெங்கிலும் இருந்திருக்க சாத்தியமே இல்லை. அதனால், குறைத்து உண்டு 41 நாட்கள் (அல்லது குறிப்பிட்ட நாட்கள்) விரதமிருக்கும் போது, நம்முடைய உடல் உறுப்புக்கள் அந்த சூழலை சமாளிக்க தயாராகிவிடுகின்றன.  மேலும், அறிவியல் சார்ந்து பார்த்தால், உடல் உறுப்புகளுக்கு ஓய்வளிக்கும் பொருட்டு விரதமிருத்தல் ஒரு நல்ல பழக்கம். இது உலகின் பல மதங்களில் பொதுவாய் காணப்படுகிறது; மேலும் அனைத்து மதங்களிலும் இம்மாதிரி கடவுள் சார்ந்த விரதம் இருக்கும் வழக்கம் இருக்கிறது. காலனி இல்லாமல் நடந்து பழகுவது; பெரும்பாதையில் (அல்லது சிறுபாதையில் கூட) நடந்து அனுபவப்பட்டவர்களுக்கு தெரியும், அந்த மலைகளின் தன்மை என்னவென்று! அவைகளின் மேல் காலணியுடன் நடப்பது மிகவும் ஆபத்தானது; வெறும்கால்களுடன் நடப்பதே மிகவும் கடினம் - அதுவும் மழை வந்துவிட்டால், அது சிரமத்திலும் சிரமம். அங்கே, காலணிகளுடன் நடத்தல் ஆபத்து என்பதால், அதை பழகிக்கொள்வதற்கு வேண்டியே அதை ஒரு பயிற்சியாய் செய்ய பணித்திருக்கிறார்கள். புலால் உணவு இந்த மாதிரியான சூழலில் சரியாய் சீரனமடையாது என்பதால் தான் "சைவ" உணவை வலியுறுத்தி உள்ளனர்.  வேட்டி அணிவதன் அர்த்தம் எளிதாக விளங்கிவிடும்; மற்ற துணிகளை காட்டிலும், வேட்டியை எளிதில் துவைத்து, உணர்த்திவிட முடியும். அடர்த்தியான வண்ணமுள்ள வேட்டிகள் (குறிப்பாய், கருமை) விலங்குகளை அச்சுறுத்த மட்டுமல்ல; தொலைவில் வேறு ஒருவர் (அல்லது குழு) செல்வதை மிக எளிதாய் அறிந்து விடமுடியும்.

          வழியில், நிழற்படம் எடுக்கக் கூடாது என்பது (இப்போது அப்படி இல்லை என்பதும் உண்மை); ஒரு முறை நாங்கள் எண்ணற்ற நிழற்படங்கள் எடுத்தோம் நாங்கள் கடந்து செல்லும் வழியில். சபரி சென்று வந்த பின், அந்த "நிழற்ப்பட கருவி" எங்கள் விடுதியில் களவு போய்விட்டது. அது ஏன் களவு போனது? என்பது இன்னமும் கூட புரியவில்லை. இது தெய்வத்தின் செயல் என்று கூறவரவில்லை; ஆனால், எதனால் இது நிகழ வேண்டும்? புகைப்பங்களை அச்சிட்ட பின் களவு போயிருக்கலாம் அல்லவா? சில நேரங்களில், நடந்த செயலுக்கு நம்மால் சரியான காரணத்தைக் கொடுக்க முடியாது அல்லவா? அது போன்ற சம்பவம் இது. விரதத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் தண்ணீர், பழரசம், பால், சுவைநீர் தவிர (அதுவும் அளவுடனே) வேறு எதையும் சாப்பிடக்கூடாது என்று ஒரு நிபந்தனை உண்டு. நான், அப்படித்தான் ஒரு வேலை உணவு மட்டும் அருந்தி (இன்னமும்) இடையில் அனுமதிக்கப்பட்டவைகளை உண்பது வழக்கம். ஆனால், ஓராண்டு உடன் மாலை அணிந்திருந்த நண்பர்களுடன் சேர்ந்து பல விரத நாட்களில் சேர்ந்தாற்போல் குறைந்தது "10 வடைகள்" தின்றதுண்டு; அது எந்த மாதிரியான விரதம் என்பது இன்னமும் விளங்கவில்லை. மாலை நேரங்களில், அளவுக்கதிமாய் நொறுக்குத்தீனி தின்றதுமுண்டு. இது ஏதோ, ஓரிரு ஆண்டுகள் மாலை அணிந்திருந்தபோது செய்ததெனினும், செய்திருக்கிறேன்; கட்டுப்பாடுகளை மீறியிருக்கிறேன் என்பதே உண்மை. நான், மிக முயன்று தோற்றது, அதிகாலை எழுந்திருப்பது!  இந்த ஆண்டு, அந்த தவறை திருத்திக்கொள்ள தீவிர முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறேன்.

         என்னைப் பொறுத்தவரை, ஒரு கடமைக்காய் "மாலை" அணிவதை விட அதில் முடிந்த அளவு கட்டுப்பாடுகளை மேற்கொள்வதே சிறந்தது என்று நம்புகிறேன். என் அம்மா கூட என் பாதம் தொட்டு வணங்குவார்! நம்மைப் பெற்றவள், நம் பாதம் தொழுவது எவ்வளவு பெரிய விசயம்!! அதற்கு அந்த தாய் நம்மை எப்படி நம்பியிருக்க வேண்டும்? நம்மை தெய்வமாக மதித்து மற்றவர் தரும் மரியாதை அது; நமக்கு கொடுப்பதல்ல.  அதற்கு தகுதியாய் இருக்க, இம்மாதிரி சின்னஞ்சிறு காட்டுப்படுகளை கூட கடைபிடிக்கவில்லை எனில், மாலை அணிவதில் எந்த அர்த்தமும் இருப்பதாய் எனக்கு படவில்லை. எனக்கு சற்றும் மனது ஒவ்வாத விசயம் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். அது, மாலை அணிந்த பின் வீட்டிலுள்ள பெண்களிடம் (குறிப்பாய், மனைவியிடம்) அதிகம் பேசக்கூடாது; பற்றற்று இருக்கவேண்டும் என்பது. மேலும் அவர்கள் சுத்தமாய் இருந்து சமைத்த உணவை மட்டும் உண்ணவேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள். இங்கு, எனக்கு எழும் கடுமையான கேள்வி, இது தான். பிரமச்சரியரான "ஐயப்பனுக்கு" மாலையிட்டால் மட்டும் கடுமையான "பிரம்மச்சரியம்" கடைப்பிடிக்க வேண்டும் எனில், (மன்னிக்கவும்) "இரண்டு மனைவிகள்" கொண்ட கடவுளுக்கு "மாலை" அணிந்தால் என்ன செய்யவேண்டும்?? இந்த விசயத்தில் கட்டுப்பாடு வேண்டாம் எனவில்லை!; மனதை கட்டுப்படுத்த, "காமத்தை" கட்டுபடுத்த வேண்டும் என்பது மறுக்கமுடியாத உண்மை!!!. ஆனால், அதன் வரைமுறை கண்டிப்பாய் எல்லை கடந்து சென்றிருக்கிறது. இதன், ஒரு சாரலாய் தான் பெண்களுக்கு "சபரி மலை" செல்ல மறுக்கப்பட்டதும் அதனால் எழுந்த பிரச்சனைகளும். ஒருவேளை, இது பெண்களுக்கு "காட்டுவழி" பாதுகாப்பில்லை என்பதற்காய் கூட சொல்ல முற்பட்டிருக்கலாம்; சொல்லும் முறை மாறும்போதும், எல்லை மீறும்போதும் தான் பிரச்சனை எழுகிறது என்று தோன்றுகிறது.
      
     என்னளவில், "மாலை" அணிவதற்கு உண்டான கட்டுப்பாடுகளில் , பெரும்பாலானவற்றை நான் பின்பற்றுகிறேன். முடிந்த அளவிற்கு அவைகளுக்கான காரணங்களை அறிந்து கொள்ள முயற்சி செய்கிறேன். எத்துனை வசதிகள், சபரி பயணத்திற்காய் பெருகிக் கொண்டு போனாலும், அதன் அடிப்படையான மேற்கூறிய கட்டுப்பாடுகளை நான் எப்போதும் தொடர்ந்து கடைபிடிப்பேன். அதற்கு முக்கிய காரணம்! சபரி கோவில் என்பது மற்ற எல்லா கோவில்களிலிருந்தும் மாறுபட்டிருப்பதால்; அதாவது, நினைத்தவுடன் ஒருவர் "சபரி மலை" சென்று விட முடியாது; எல்லோராலும் செல்லவும் முடியாது. அங்கு செல்ல குறைந்தது "ஏழு மைல்" தூரம் (சரியான அளவுதானா எனத் தெரியவில்லை!) எவராயினும் நடந்து தான் ஆகவேண்டும். பெரும்பாதை (அல்லது சிறுபாதை கூட) கடந்து சந்நிதானத்தை அடையும் போது ஒரு பரவசம் வரும் பாருங்கள்! அதை நடந்து சென்று அனுபவித்தால் தான் புரியும். இதுவரை, நான் கார்த்திகை மாதம் மாலையணிந்து சென்ற போது "சிறிய பாதை"-யில் சென்றதில்லை. இந்த முறை, அப்படித் தான் செல்லப் போகிறேன்; எனக்கு இருக்கும் குறைந்த விடுப்பில், மற்ற வேலைகளையும் பார்க்க வேண்டும். இது, கண்டிப்பாக நான் நியாயப்படுத்த சொல்லும் காரணம் தான். எனினும், அது ஓர் சுகமான அனுபவம்; முடிந்தால் முயன்று பாருங்கள். "என்னய்யனை" பற்றி ஒரு தலையங்கத்தில் முடித்துவிட முடியாது; அதனால், மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் அடுத்த பாகம் எழுதுகிறேன்.

சுவாமியே! சரணம் ஐயப்பா…

பின்குறிப்பு: இந்த வருடம் அரசியல் சார்ந்த இருமாநில எல்லை பிரச்சனை காரணமாய், சபரி மலை சென்ற பக்தர்கள் அடைந்த துயரங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும். எனக்கு அந்த மாதிரி பிரச்சனை நேரவில்லை எனினும், எனக்கு வேறு மாதிரியான ஒரு பிரச்சனை வந்தது. அது இறைவழிபாட்டில் உள்ள ஒரு மிகப்பெரிய குறைகளுள் ஒன்றை எனக்கு சுட்டிக்காட்டி விளங்க வைத்தது. அது என்னவென்று ஒரு சில வாரங்களில் வேறொரு தலையங்கமாய் எழுதுகிறேன்.          

பிறப்பும் இறப்பும்...


பிறந்து இறப்பதை விட
இறந்து பிறப்பது மாகொடுமை!
இறப்பை நினைத்து நிதம்சாகாது
பிறப்பை மாற்றுவோம் சாதனையாய்!!!

மக்கள் பேச்சு...


அன்பு கொடிது
அனைத்தும் கொடிது
என்பர் - தம்
மக்கள் ஓர்கணம்
பேச மறுப்பின்!!!!

பந்து விளையாட்டு...பெரும்பாலும் விளையாட்டு
பந்தை சார்ந்திருப்பதேன்?
பூமியே ஓர்
பந்து என்பதால்தானோ??

எதிர்வினை...ஒவ்வொரு வினைக்கும்
சமமான எதிர்வினையுண்டு
உண்மைதான்...

என்றோ எவரோ
செய்த ஆணாதிக்கத்தின்
எதிர்வினையை இன்று
எதிர்கொள்பவர் ஆண்களே!!!

ஒருவழிப் பாதையும்; ஒருதலைக் காதலும்...


ஒருவழிப் பாதையில்
எதிரே வருவது பிழையாம்!
ஒருதலைக் காதலில்
எதிரவர் வராதது பிழையாம்!!

வெள்ளி, மார்ச் 02, 2012

பெயரை எப்படி வைத்தல்/ எழுதுதல் வேண்டும்?...
     சமீபத்தில் ஓர் பள்ளியில் என் மகளின் முழுப்பெயரை அப்படியே எழுத தயக்கம் காட்டியது மட்டுமல்லாமல், பெயரில் மாற்றம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தியும் உள்ளனர். என்னுடைய மகளின் முழு பெயர் என் முதல் தலையங்கத்தில் குறிப்பிட்டது போல் விழியமுதினி வேனில் இளங்கோவன். என்னுடைய பெயர் இ. இளங்கோவன் என்று தான் என்னுடைய எல்லா சான்றிதழ்களிலும் இருக்கும். ஆனால், முதன் முதலில் நான் "பாஸ்போர்ட்" எடுத்த போது என்னுடைய பெயர் விவரித்து எழுதப்பட்டிருந்ததை அறிந்தேன். அதாவது, முதன்மை பெயர் - இளங்கோவன்; குடும்ப பெயர் - இளமுருகு - என்றிருந்தது. அதன் பின், இந்த நாட்டிலிருந்து வந்த அனைத்து ஆவணங்களிலும் என்னுடைய பெயர் "இளங்கோவன் இளமுருகு" என்று தானிருந்தது; இன்னமும் இருந்து கொண்டு வருகிறது. இது முதலில் எனக்கு குழப்பமாய் இருப்பினும், பின் எனக்கு அவ்வாறு எழுதும் முறை பிடித்திருந்தது. என்னுடைய பெயரை அப்படியே "இளங்கோவன் இளமுருகு" என்றே எழுத பழகினேன்; இப்போதும் அப்படியே எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்த குழப்பம் வந்தவுடன், திருமணமாகி எனக்கு பிறக்கும் குழந்தைக்கு முழுப்பெயரரையும் பதிய வேண்டும் என்று எண்ணினேன்; அதுவும் என் மனைவியின் பெயரும் அதில் இடம் பெயரவேண்டும் என்று முடிவெடுத்தேன். இதற்கு சாதகமாய், என் மகளும் இங்கேயே பிறந்தாள்; இங்கே இருக்கும் "இந்திய தூதரகத்தில்" கூட முழுப்பெயரும் பதியவேண்டும் (அவ்வாறு மட்டுமே பதிவார்கள்) என்பதால், என் எண்ணம் எளிதில் நிறைவேறிவிட்டது.

         இப்போது, அந்த பெயரில் தான் பிரச்சனை என்று பள்ளிகள் கூறிவருகின்றன. என்னால், அவர்கள் கூறுமாறு எளிதில் ஏதோ ஒரு வகையில் அந்த பெயரை மாற்றிவிட முடியும்; என்னவள் கூட இதை மீண்டும், மீண்டும் கேட்டதால்  அந்த முடிவிற்கு வந்துவிட்டாள். ஆனால், என்னால் அப்படி ஒப்புக்கொள்ளமுடியவில்லை; ஏனெனில் அந்தபெயர் வைக்க நாங்கள் எத்தனை முயற்சிகள் எடுத்தோம் என்பது - மேற்குறிப்பிட்ட என் முதல் தலையங்கம் - படித்த உங்களுக்கும் தெரியும். முதலில் ஒரு பள்ளியில், பெயரில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கைக்கு வரைமுறை உள்ளது; கணினியில், அதற்கு மேல் இருப்பின் பெயரை பதியமுடியாது; பிற்காலத்தில், சான்றிதழ்களில் பதிவது கடினமாய் இருக்கும் என்றனர். பின், கல்வித்துறையில் இது பற்றி என் "மருதந்தை" விளக்கம் கேட்டார்; இடைவெளி உட்பட "முப்பது" எழுத்துக்கள் வரை பதியலாம் என்றனர். என் மகளின் பெயர் - VIZHIYAMUDHINI VENIL ELANGOVAN - சரியாய் வரைமுறைக்குட்பட்ட எண்ணிக்கையிலான எழுத்துக்களை கொண்டுள்ளது என்று அறிந்து கொண்டோம். இங்கே எனக்கு எழும் கடுமையான கோபம் கலந்த கேள்வி, இந்தப்பெயரை தமிழில் "விழியமுதினி வேனில் இளங்கோவன்" என்று எழுதினால் வெறும் பதினேழு எழுத்துக்கள் தான். தமிழை ஆட்சி மொழியை கொண்ட ஓர் மாநிலத்தில், பெயரை "ஆங்கிலத்தில்" எழுதி பழகி அந்த எழுத்துக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு விதிப்படுத்துதல் எங்கனம் நியாயமாகும்? பிறகெதற்கு, அனைத்து கட்சிகளும் தமிழ் வளர்ச்சி பற்றி முழக்கமிடுகின்றன??

       சரி, நம் நாட்டில் பல்வேறு மொழிகள் பேசும் மாநிலங்கள் உள்ளதால் - ஒரு பொதுமொழியாய் "ஆங்கிலம்" உபயோகிக்கப்படுகிறது என்ற வாதம் வரலாம். உண்மைதான்! இல்லை எனவில்லை; அப்படியாயின், தமிழகம் மற்றும் புதுவை தவிர (என்னறிவில்) மற்ற அனைத்து மாநிலங்களும் பெயரை விவரித்து எழுதுவது மற்றும் இரண்டுக்கும் மேற்பட்ட பெயர்களை உடையது - என்று தான் பொதுவாய் உள்ளது. அப்படியாயின், அதே பொதுமை எண்ணத்தோடு இந்த மாநிலங்களிலும் பெயரை விவரித்து எழுதவேண்டியது தானே? இதில் ஏன் இந்த பிடிவாதம் அல்லது குழப்பம்?? நான் சென்ற முறை விடுப்பில் நம் நாட்டிற்கு சென்ற போது "ஆதார்" (AADHAAR) என்ற பெயரில் இந்தியா முழுவதும் கொடுக்கப்பட்டு வருகின்ற "இந்தியாவின் ஒருமைப்பட்ட அடையாளம் தரும் துறை" என்ற பொருளில், அதாவது Unique Identification Authority of India (UIDAI) எனும் துறையில் பதிவு செய்தேன். என் மகளுக்கும் அந்த அடையாள அட்டைக்காய் பதிந்தோம். அதில், என் மகளின் பெயரை முழுமையாய் பதிந்தனர்; இது ஒருமைப்பட்ட அடையாளம் எனில், அது தான் மேற்கூறிய இரண்டு மாநிலங்களில் பள்ளி போன்ற இடங்களில் பதியப்படவேண்டும் அல்லாவா? பிறகு ஏன், இத்தனை தடைகள்? அதிலும், ஒரு பள்ளியில் கூறிய காரணம் - உண்மையில் - அபத்தமான காரணம்! எனக்கு அதை நினைக்கும் போதெல்லாம் சிரிப்பு வருகிறது; அவர்களால் வருகைப்பதிவேட்டில் இந்தப் பெயரை எழுதுவது சிரமமாய் இருக்குமாம்! அதற்காய் நான் விதிமுறைகளின் படி வைத்திருக்கும் என் மகளின் பெயரை மாற்ற வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்?

       இன்னுமொரு பள்ளியில், எதற்கு மூன்று பெயர்கள்? ஏதாவது ஒரு பெயரை குறைத்து விடுங்கள் என்றனராம்! மகளின் பெயர் மற்றும் தந்தையின் பெயர் போதும்; தாயின் பெயரை எதற்கு சேர்க்கிறீர்கள் என்றனராம்! என்னவள் கூட அவ்வாறு செய்து விடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள்; அவளால் மேலும், மேலும் இது பற்றி எவர் கூறுவதையும் கேட்க முடியவில்லை - எனவே, அந்த முடிவுக்கு வந்துவிட்டாள். ஆனால், என்னால் அப்படி எளிதில் ஒப்புக்கொள்ளமுடியவில்லை! என்ன தவறு என்றே தெரியாத போது, எதற்காய் மாற்றப்படவேண்டும்? 1990 - களின் இறுதியில் என்று நினைக்கிறேன். தமிழக அரசு, தாயின் பெயரை கண்டிப்பாய் ஒருவரின் பெயருடன் இணைக்கவேண்டும் என்று ஓர் ஆணை பிறப்பித்தது; எனக்கு நன்றாய் நினைவிருக்கிறது! என் நண்பர் ஒருவர் இப்போது எப்படி இணைப்பது - எப்படி எல்லா சான்றிதழ்களிலும் மாற்றுவது என்று மிகவும் கவலையுற்றார். எனினும், பல ஆணைகள் பின்பற்றப்படாதது போல், இந்த உத்திரவும் கைவிடப்பட்டது வேறு விசயம். எனவே, எப்படி பார்ப்பினும் என் மகள் பெயர் வரைமுறைகளைப் பின்பற்றி வைக்கப்பட்டதே; பின் எவ்வாறு,  பள்ளியில் அது தவறு என்று வாதிடப்படுகிறது. மேலும், சில மதங்களில் ஒருவருடைய பெயரிலேயே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெயர்கள் இருக்கும்; அதன் பின் அவர்களுடைய தந்தை அல்லது குடும்ப பெயர் இருக்கும். என்னுடன் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அம்மாதிரி பெர்யர்களைக் கொண்ட சில  மதங்களை (மற்றும் மற்ற மாநிலங்களையும்) சார்ந்த நண்பர்கள் படித்துள்ளனர். 

         நம் நாடு அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய ஒரு சமத்துவ நாடு என்பது பேச்சளவில் மட்டும் தானா? அம்மதத்தை சார்ந்த மாணாக்கர்களை பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள் தானே?? அப்படியாயின், என் மகள் பெயரில் மட்டும் ஏன் இத்துனை வாக்குவாதங்கள்??? ஒரு வேலை, இந்த மதத்தை சார்ந்த மாணாக்கர்கள் இவ்விரு மாநிலங்களில் முதன்மை பெயர் மற்றும் தந்தை பெயரின் முதலெழுத்து (initial) மட்டும் தான் கொண்டிருக்கவேண்டும் என்ற எழுதப் படாத சட்டம் இருக்கிறதா? என்ன நடப்பினும், என் மகளின் பெயரை மாற்றக்கூடாது என்ற முடிவுடன் உள்ளேன்; அவ்வாறே என் மருதந்தையிடமும் கோரியிருக்கிறேன். அவரின் பாதுகாப்பில் தான் இப்போது என்னவளும், என் மகளும் இருக்கின்றனர். அவர் கண்டிப்பாய் அந்த மாதிரி சூழல் வராது என்று வாக்குறுதி கொடுத்து இருக்கிறார். இந்த முடிவை மாற்றாமல் போராடுவேனா? அல்லது ஓர் சராசரி தந்தை போல் - எதற்கு பிரச்சனை - என்று பணிந்து போவேனா?? என்பதற்கு காலம் தான் பதிலளிக்கவேண்டும். இதில் எது சரி என்று எண்ணி பின்பற்றுவது என்பதிலும் தெளிவில்லை. என்னைப் பொறுத்தவரை, என் மகளின் பெயர் அனைத்து விதிகளுக்கு உட்பட்டு தானிருக்கிறது. எனவே அதை எக்காரணம் கொண்டும் மாற்றவேண்டிய அவசியம் இல்லை என்று உறுதியாய் நம்புகிறேன். எனவே அவளின் பெயர்... 

விழியமுதினி வேனில் இளங்கோவன்!!!

பின்குறிப்பு: என்னுடைய எண்ணத்தில் தவறு ஏதேனும் இருப்பின், தயைகூர்ந்து "பின்னூட்டம்" மூலம் தேர்விக்கவும். அல்லது, நீங்கள் இம்மாதிரி பிரச்சனைகளை சந்தித்திருப்பின் - அது தொடர்பான உங்களின் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளவும். அது - கண்டிப்பாய் எனக்கு மட்டுமல்ல; என் மாதிரி நிலையிலிருக்கும் மற்ற அனைவருக்கும் பயனுள்ளதாய் இருக்கும். 

பாண்டிய மன்னனுக்கு பிழை தெரியுமா? தெரியாதா??..."என் கருத்துக்களை அப்படியே (பிழை தெரியாமலும்/ பிழை பொருத்தும்) ஏற்றுக்கொள்ளும் "பாண்டிய மன்னர்களுக்கும்", அதில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டும் "நக்கீரர்களுக்கும்" என் நன்றியை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கிறேன்". 

        இது என்னுடைய வலைப்பதிவின் விளக்கமாய், வலைப்பதிவின் பெயரின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள வாக்கியம். இதை எழுதும் போது, இதில் உள்ள ஒரு புதுமையான செய்தி எனக்கு தெரிய வந்தது; அது ஒரு புதிய "பட்டிமன்ற/ பட்டிமண்டப" தலைப்பாய் உபயோகிக்கலாம். என்னறிவுக்கு எட்டிய வரையில், அந்த மாதிரி தலைப்பில் பட்டிமன்றமோ/ பட்டிமண்டபமோ நடந்திருப்பதாய் தெரியவில்லை. அவ்வாறு எவருக்கு தெரிந்திருப்பின்/ தெரியவரின் எனக்கு தெரிவிக்க வேண்டுகிறேன்; அது என் தவறான கருத்தை மாற்றிக்கொள்ள உதவும். மேற்கூறிய விளக்கம், சிவனின் "திருவிளையாடல்" கதையை ஒன்றி வந்தது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதில் வரும் சிவனின் வாதமான "பெண்களுக்கு இயற்கையிலேயே கூந்தலில் மனமுண்டா, இல்லையா?" என்பதின் அடிப்படியில் கூட வாதம் செய்து கேட்டிருக்கிறேன். தருமிக்கு சிவன் அப்பரிசை பெற்றுத்தந்தது சரியா, தவறா என்ற அடிப்படையில் கூட வாதம் நடந்திருக்கிறது. நக்கீரன்-ஐ பற்றி சொல்லவே வேண்டாம்; அவரைப் பற்றி பலவித வாதங்கள் நடந்திருக்கிறது.

         இந்தப்புது விளக்கத்தை எண்ணிப்பார்க்கையில், நம் செம்மொழியாம் "தமிழ்" எத்துனை வலிமையானது என்று மேலும் உறுதியாய் எண்ணத் தோன்றியது. ஒரு சிறு வார்த்தை மாற்றத்தைக் கொண்டு தமிழில், எத்துனை பெரிய வித்தியாசம் அதன் பொருளில் தோற்றுவிக்கக்கூடும் என்பதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன. இதுவும், அப்படிப்பட்ட ஒன்று தான்; ஒரு கவித்துவத்திற்கு தான் முதலில் அடைப்புக்குறிக்குள் இருக்கும் அந்த வார்த்தைகளை வைத்தேன். அதன் பொருள், உண்மையில், அந்த விளக்கத்தை உண்டாக்கும் போது எனக்கு விளங்கவில்லை. அதுதான், நம்மொழியின் தனிச் சிறப்பு; அதனால் தான், வள்ளுவப்பெருந்தகை வெறும் "ஏழு வார்த்தை"களைக் கொண்டு 1330 குறள்-களை எழுத முடிந்தது. வள்ளுவர் கூறாத ஒன்றைக் கூட (எது சம்மந்தமாயினும்) திருக்குறளில் இல்லையென சுட்டிக்காட்ட முடியாது! எங்கனம் முடிந்தது அப்படி செய்ய, அதும் வெறும் ஏழு வார்த்தைகளைக் கொண்டு? அது தான், நம் செம்மொழியின் சொல்வன்மை. அதை உபயோகிப்பவர் திறமையில் உள்ளது; அதில் ஆயிரமாயிரம் அர்த்தங்களை கொண்டு வருவது.        

         சரி, திருவிளையாடலில் வரும் அக்கதையின் அடிப்படையில் பார்க்கும்போது, அதில் சம்மந்தப்பட்ட பாண்டிய மன்னனுக்கு தமிழ்ப்புலமை மிகுந்து இருந்தது தெரியவருகிறது. அவரின் தமிழ்ப்புலமையை எடுத்துரைக்கும் வகையிலும் சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, பாண்டிய மன்னனுக்கு தமிழ்ப்புலமை இருந்தது என்பதை எவரும் மறுக்கமுடியாது. சரி, ஒரு முறை "பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மனம் உண்டா, இல்லையா?" என்ற சந்தேகம் வர, அவர் அதை தீர்க்கும் புலவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு என்று அறிவிக்கிறார். அதையறிந்து, "தருமி" என்னும் வறுமையில் வாடும் புலவன் அதைப் பெற கடவுளிடம் முறையிடும்போது, சிவன் வந்து உதவுகிறார். அப்போது, அவர் மன்னனின் சந்தேகம் தீர்க்கும் பாடலை இயற்றி தருமியுடன் கொடுத்து, பாண்டிய மன்னன் பரிசு வழங்க ஆயத்தமாகும் வரை செல்கிறது. அப்போது தான், நக்கீரன் அப்பாடலில் "பொருட்குற்றம்" உள்ளதை கண்டறிந்து, பரிசு கொடுப்பதை தவறு செய்கிறார். பின், சிவன் வந்து நக்கீரனின் தமிழ்ப்புலமையுடன் விளையாடி, அவர் புகழை உலகறிய செய்யத்தான் அத்திருவிளையாடல் என்று கூறி முடிக்கிறார்.

                   சரி, இப்போது தான் என் சிந்தனையில் அந்த கேள்வி எழுகிறது! அது, தமிழ்ப்புலமை  கொண்ட பாண்டிய மன்னர் ஏன் பரிசளிக்க ஆணை பிறப்பித்தார்? அவரின் தமிழ்ப்புலமை எங்கே போனது?? அல்லது ஏன் அது மறைக்கடிக்க/ மறைக்க பட்டது??? உண்மையில், அவர் பொருட்குற்றம் உணராமல், அவசரப்பட்டு பரிசளிக்க ஆணையிட்டரா? அப்படியாயின் அவரின் தமிழ்ப் புலமை சந்தேகத்துக்குரியதாய் ஆகிவிடும்; இருக்கக்கூடும், மன்னனுக்கு அனைத்தும் தெரிந்திருக்கவேண்டிய அவசியம் இல்லைதான்; மேலும், அதற்காகத்தான் "புலவர் சபை" இருந்திருக்கக் கூடும். இதை அரசனாய் இருந்து பார்க்கையில், அரசனின் கடமையை கருத்தில் கொண்டு ஒரு ஏழைக் குடிமகனுக்கு உதவியாய் இருக்க வேண்டிக் கூட "அந்த சிறு" தவறையுணர்ந்தும் , அதைப் பொருட்படுத்தாமல் அந்த தவறை மன்னித்து ஆணைப் பிறப்பித்திருக்க சாத்தியம் உண்டு தானே? இதில், எது உண்மை?? இதை எவர் எடுத்துரைப்பது??? அதனால் தான், இது (இதுவரை உண்மையில் இல்லை எனின்) ஒரு புதிய விவாத தலைப்பாய் ஆகக்கூடும் என்றுரைத்தேன். ஒருவேளை, இதையும் சிவன் வேண்டுமென்றே (வெளியில் சொல்லாமல்) தன் திருவிளையாடல்களில் ஒன்றாய் சொல்லாமல், விட்டுவிட்டாரோ? அதை நாமே உணரவேண்டும் என்று ஒதுக்கிவிட்டாரோ?? அது அந்த சிவனுக்கே வெளிச்சம்.

          குறிப்பு: எல்லாம் வல்ல சிவனுக்கும், எல்லாம் தெரிந்த தமிழரிஞற்கும் ஒரு வேண்டுகோள்! இத்தலையங்கத்தில், ஏதேனும் "பொருட்குற்றம்" இருப்பின் தண்டனையின்றி சுட்டிக்காட்டுங்கள். என் தவறைத் திருத்திக் கொள்கிறேன்.

நகரமும் கிராமமும்...
நகரம்    - அறிவால் அனுபவம் தேடுமிடம்  
கிராமம் - அனுபவத்தால் அறிவை அடையுமிடம்

நகரம்    - இமயம் தொடும் கட்டிடங்கள்
கிராமம் - இதயம் தரும் உள்ளங்கள்

நகரம்    - உறவுகளை பிரிக்கும் வேலி
கிராமம் - உறவுகளை இணைக்கும் சங்கிலி 

நகரம்    - உறவினர் எவரென்று தெரியாதவர்
கிராமம் - தெரிந்தவர் எல்லாம் உறவினர்

நகரம்    - கழிவுகளை உருவாக்கும் நிறுவனங்கள்
கிராமம் - கழிவுகளை உரமாக்கும் விளைநிலங்கள்

நகரம்    - கலாச்சாரத்தில் பல்கிவரும் பரிமாணங்கள்
கிராமம் - பாரம்பரியத்தை பாதுகாக்கும் பெட்டகங்கள்

நகரம்    - சுகாதார சூழலின் இறப்பிடம்
கிராமம் - சுற்றுப்புற சூழலின் பிறப்பிடம்

நகரம்    - பாசத்தின் விலை கேட்கும் 
கிராமம் - பாசத்திடம் பணமே தோற்கும்

நகரம்    - நாட்டின் வளர்ச்சிக்கு காரணம்தான்
கிராமம் - நாட்டை வாழ்விக்க கிராமம்தான்

காகிதத்தின் பரிணாமம்...


காவியமாவதும்
காசாவதும்
கலையாவதும்
கப்பலாவதும்
கசங்கிப்போவதும்

காகிதம் சேரும்
கரத்தில் உள்ளது!

ஊர்க்குருவியை"யும்" ஊக்குவிப்போம்...


உயரஉயர பறந்தாலும்
ஊர்க்குருவி பருந்தாகாது!
ஆயினென்ன...?

உயரப் பறப்பதே
ஊர்க்குருவியின் சாதனையே!
உயர நினைப்போர்க்கு
ஊக்கம் அளிப்போம்!!

எதிர்மறையில் தேவையானவை....


அறுபடவேண்டிய கொடி  - தொப்புள்கொடி
அழிக்கவேண்டிய உயிர்   - நுண்ணுயிர்
தடுக்கவேண்டிய தானம்   - உயிர்தானம்
பழுக்கவேன்டாத பழம்     - எட்டிப்பழம்
மூட்டவேண்டிய தீ            - தகன தீ

எதிர்மறையும் தேவையானதே!!!

தாய்மொழி...உயிர் பகிர்ந்தது தாய்
உணர்வு பழக்கியது மொழி
உயிரும்-உணர்வும் கலந்தது தாய்மொழி!!!

உதடும் உண்மையும்...உதட்டிற்கும் உண்மைக்கும்
இடையிலான ஒவ்வாமை!
உறவுகளை ஒட்டாமல்
இடைமறிப்பதில் ஒற்றுமை!!