செவ்வாய், ஜனவரி 31, 2017

குறள் எண்: 0548 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 055 - செங்கோன்மை; குறள் எண்: 0548}

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்

விழியப்பன் விளக்கம்: நீதி கோருவோரை - எளிமையுடன் அணுகி ஆராய்ந்து, செங்கோலை செலுத்தாத அரசாள்வோர்; தாழ்மையான நிலையை அடைந்து, தானாகவே கெட்டழிவர்.
(அது போல்...)
ஆதரவு தேடுவோரை - கருணையுடன் நெருங்கி மதித்து, மனிதத்தை செழிப்பிக்காத மனிதர்கள்; ஆதரவற்ற முதுமையை அடைந்து, சுயத்தை இழப்பர்.

திங்கள், ஜனவரி 30, 2017

குறள் எண்: 0547 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 055 - செங்கோன்மை; குறள் எண்: 0547}

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்

விழியப்பன் விளக்கம்: அரசாள்பவர், நாட்டைக் காப்பர்! செங்கோல் தவறாமல், நீதியை நிலைநாட்டும் முறை - அரசாள்பவர்களை காக்கும்.
(அது போல்...)
போராடுவோர், உரிமையை உறுதியாக்குவர்! அறம் தவறாமல், கோரிக்கையை உரைக்கும் ஒழுக்கம் - போராடுவோரை உறுதியாக்கும்.

ஞாயிறு, ஜனவரி 29, 2017

குறள் எண்: 0546 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 055 - செங்கோன்மை; குறள் எண்: 0546}

வேல்அன்று வென்றி தருவது மன்னவன்
கோல்அதூஉம் கோடாது எனின்

விழியப்பன் விளக்கம்: அரசாட்சிக்கு வெற்றியை தருவது, வேல் இல்லை! அரசனின் செங்கோலே முதற்காரணம்; மேலும், அச்செங்கோலும் சார்பில்லாமல் இருக்குமாயின்!
(அது போல்...)
குடும்பத்திற்கு சிறப்பு சேர்ப்பது, சொத்து இல்லை! குடும்பத்தின் தன்னொழுக்கமே முதன்மை; மேலும், அவ்வொழுக்கமும் குறையில்லாமல் இருப்பின்!

சனி, ஜனவரி 28, 2017

குறள் எண்: 0545 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 055 - செங்கோன்மை; குறள் எண்: 0545}

இயல்புளிக் கோல்ஓச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு

விழியப்பன் விளக்கம்: செங்கோலின் இயல்புடன், அரசாங்கம் நடக்கும் மன்னரின் நாட்டில்; பருவ மழையின் அளவும், பயிர்களின் விளைச்சலும் - இயல்பான வகையில் ஒன்றியிருக்கும்.
(அது போல்...)
உறவின் இயல்புடன், குடும்பம் நடக்கும் சமூகத்தின் அரணில்; அறச் செயல்களின் அளவும், மனிதத்தின் ஆக்கமும் - இயல்பான முறையில் இணைந்திருக்கும்.

வெள்ளி, ஜனவரி 27, 2017

குறள் எண்: 0544 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 055 - செங்கோன்மை; குறள் எண்: 0544}

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு

விழியப்பன் விளக்கம்: குடிமக்களை அன்பால் தழுவி, செங்கோலை நிலைநாட்டி, மாநிலத்தை ஆளும் அரசரின்; பாதையைத் தழுவி, குடிமக்களும் நிலைபெறுவர்.
(அது போல்...)
குடும்பத்தை அறத்தால் பழகி, வாய்மையைப் போதித்து, குடும்பத்தை வழிநடத்தும் பெற்றோரின்; இயல்பை பழகி, குடும்பத்தினரும் வழிநடப்பர்.

பொ(று/ரு)க்கி...


         வசைபாட உபயோகிக்கப்படும் "பொறுக்கி" என்ற சொல்லைப் பற்றி, சில விடயங்களை அலசி ஆராய்ந்து; அவற்றில் தேவையானவற்றைப் "பொருக்கி" எடுத்து - என் புரிதலை விளக்கி இருக்கிறேன். அருள்கூர்ந்து உங்கள் புரிதலைப் பகிருங்கள்.
 1. "பொறுக்கி" என்ற சொல்லுக்கு வல்லின "ற" எழுத்தே சரியென்று அறிகிறேன். அப்படியெனில், இந்த "பொறுக்கி" என்ற சொல் எப்படி வந்திருக்க வேண்டும்? "பொறுமையை இறுக்கி (அல்லது) இருத்தி" வைத்திருப்பவன் என்ற பொருளில் வந்திருக்க வேண்டும். பின் ஏன், இந்த சொல் தவறானப் பார்வையில் பார்க்கப்படுகிறது? சரி, ஒரு புரிதலை நோக்கி பயணிப்போம்.
 2. வேலை ஏதும் இல்லாமல், ஊர் சுற்றிக்கொண்டு இருப்போரை "பொறுக்கி" என்று அழைப்பது வழக்கமே! இந்த சொல்லாடல் எப்படி வந்திருக்க வேண்டும்? ஒருவேளை... அவசரப்பட்டு எந்த வேலையையும் ஏற்காமல்; (பள்ளி/கல்லூரி) படிப்பை முடித்து, தன் தகுதி/திறனுக்கு ஏற்ற வேலைக்காக "பொறுமையை இறுக்கி" இருப்போர் என்ற பொருளில் உருவாகி இருக்கலாம். 
 3. அதுதான், தன் பிள்ளைகள் எந்த வேலையும் செய்யாமல் இருப்பதை பார்த்து "பொறுமையை இறுக்க" முடியாத பெற்றோர், "இவ்வளவு பொறுமையை இறுக்கிக் கொண்டிருக்கிறாயே?!" என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தும் நோக்கில் "பொறுக்கி" என்று கோபமாய் திட்ட வித்திட்டிருக்க வேண்டும். அதுதான், அப்படி சரியான/முறையான வேலையை செய்யாத சமூக விரோதிகளையும் "பொறுக்கி" என்றழைப்பதற்கு காரணமாய் அமைந்திருக்கும்.
 4. ஒருவேளை...! இந்த "பொறுக்கி" என்ற வசைபாடும் சொல் "பொருக்கி" என்று இடையின "ர" எழுத்தைக் கொண்டு உதயமாகி இருக்கும் என்று வாதத்திற்காய் எடுத்துக் கொண்டால் - அதையும் அருமையான சொல்லாகவே தெரிகிறது. அது தேடலையும்; அதன் மூலமாய் நல்லதை தேர்ந்தெடுக்கும் திறனையும் குறிப்பதாகிறது.
 5. மீண்டும் மேற்குறிப்பிட்ட உதாரணத்தையே எடுத்துக் கொண்டால், தன் தகுதி/திறன் இவற்றிற்கு பொருத்தமான ஒரு "நல்ல" வேலையை தேடிக் கொண்டிருப்போர் என்ற அடிப்படையில் பிறந்திருக்க வேண்டும். காய்கறி போன்ற பொருட்கள் வாங்கும்போது "பார்த்து, பொருக்கி எடுங்கள்" என்று சொல்வது நாம் அனைவரும் அறிந்ததே.
 6. இப்படி வல்லினம் (அல்லது) இடையினம் என்று எந்த எழுத்தைக் கொண்டு இந்த சொல் இருப்பினும், நல்ல புரிதல்களைத் தானே கொடுக்கின்றன? பின் ஏன், இந்த சொல் "மெல்லினத்தாரை" காயப்படுத்த/வசைபாட "வல்லினத்தாரால்" பயன்படுத்தப் படுகிறது?
 7. "மயிர்" என்ற அருமையான தமிழ் வார்த்தையைக் கொச்சைப் படுத்தியது போல், "பொறுக்கி" என்ற வார்த்தையையும் கொச்சைப்படுத்தி விட்டோமா? மயிர் போன்றே சில உறுப்புகளையும் கொச்சைப்படுத்தி இருக்கிறோம்!
 8. இவ்வளவு ஏன்... "ஆத்தா" என்ற அன்புமிகு சொல்லக் கூட கொச்சைப்படுத்தி இருக்கிறோம்.
 9. இப்படி, நாம் கொச்சைப்படுத்திய "நல்ல தமிழ்ச்சொற்கள்" பற்பல! அதில், இந்த "பொறுக்கி" என்ற வார்த்தையும் இணைந்துவிட்டதோ?
 10. பெரும்விந்தை என்னவென்றால்... "பொறுக்கி" என்ற இந்த தமிழ்ச்சொல்லை சமீபத்தில் ஒருவர், தமிழர்களை நோக்கி பொதுமையில் சொல்ல; அதை மையப்படுத்தி, தமிழ்ச் சூழலில் பலரும் "பொறுக்கி" என்ற பொருளில் (பதிலுக்கு) திட்டிட, வார்த்தைகளைத் தேடிப் "பொருக்கி'க் கொண்டிருப்பது தான்! 
சிதைந்த நற்சொற்களை "பொருக்கி" எடுப்போமா???

பதிந்தவர்: விழியப்பன் எனும் இளங்கோவன் இளமுருகு
நாள்:         27.01.2017

வியாழன், ஜனவரி 26, 2017

குறள் எண்: 0543 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 055 - செங்கோன்மை; குறள் எண்: 0543}

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்

விழியப்பன் விளக்கம்: பண்பில் சிறந்தோர் கற்கும் மறைநூல்களுக்கும், அவர்களின் அறத்திற்கும்; அடிப்படையாய் இருப்பது, அரசாள்பவரின் செங்கோல் நிலைநாட்டும் அறமே ஆகும்.
(அது போல்...)
பொதுவாழ்வில் வென்றோர் கடைப்பிடிக்கும் கொள்கைகளுக்கும், அவர்களின் அன்புக்கும்; ஊக்கமாய் இருப்பது, குடும்பத்தின் உறவுகள் விதைக்கும் கருணையே ஆகும்.

புதன், ஜனவரி 25, 2017

குறள் எண்: 0542 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 055 - செங்கோன்மை; குறள் எண்: 0542}

வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி

விழியப்பன் விளக்கம்: உலகிலுள்ள உயிர்களின் வாழ்விற்கு, மழை முக்கியமானது போல்; நாட்டிலுள்ள குடிமக்களின் வாழ்வியலுக்கு, அரசாள்பவரின் செங்கோல் இன்றியமையாதது.
(அது போல்...)
உடம்பிலுள்ள உறுப்புகளின் செயல்பாட்டிற்கு, உயிரணு தேவையானது போல்; மனதிலுள்ள எண்ணங்களின் செயல்வடிவத்திற்கு, ஒருவரின் வைராக்கியம் அவசியமானது.

செவ்வாய், ஜனவரி 24, 2017

காளைப் பிரச்சனையும்; காளையர் எழுச்சியும்...


காடுறையும் விலங்குகளை மக்கள் முன்பு
     காட்டிஅதன் காட்சியினில் வருவாய் ஈட்டும்
பீடுநிறை செயல்தன்னால் உரிமை மாளும்
     பொய்மைமிகு எண்ணத்தால் "ஆர்வ லர்கள்"
தேடிட்டார் தடைச்சட்டம்; அதனால் மூன்று
     தேய்ந்திட்ட ஆண்டுகளில் தமிழர் வீரம்
மாடுபுகழ் "ஜல்லிக்கட்டு" காட்சி மாய்த்தார்!
     முடிந்ததெனில் நடத்துவீர்என கூவல் விட்டார்!

ஐங்கரத்தன் ஆனைமுகன் தெய்வம் தானே!
     ஆனாலும் மனத்தில்ஒரு கலக்கம் இன்றி
இங்கிருக்கும் பாகனவன் யானை தன்னை;
     இருமாப்பாய் நடத்திஅதை தெருக்கள் தோறும்
பங்கமதை இழைக்கின்றான்; பிச்சை தானும்
     பசியுடனே எடுக்கின்ற காட்சி தன்னால்
அங்கத்தை வருத்திஅதன் உரிமை போக்கும்
     அசிங்கத்தை யார்உணர்ந்து தடுப்பார்? கேளீர்!

உரத்தகுரல் எழுப்பிடுவேன்; பலரும் நாட்டில்
     உரிமையுடன் தன்னலத்திற் கென்றே நாளும்
பரந்திட்ட எண்ணமுடன் பண்பில் லாமல்
     பழக்கமென தன்வாழ்வில்; மனதில் ஈவு
இரக்கமின்றி ஆடுமாடு பறவை கோழி
     இரையாக்கும் வன்மனத்தீர்! வதைத்தல் ஏனோ?
சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்! உண்மை சொல்வீர்!
     செவ்வியநல் திறமாமோ? பதில்தான் என்ன?

தொடர்ந்துவரும் நாட்களிலே தொல்லை இன்றி
     தூர்வாறும் அரசியலார்; "பீட்டா" போன்ற
இடர்கூட்டும் தொல்லைகள் தொடரா வண்ணம்
     இனக்கவலை தீரட்டும்;  இதுபோல் நாட்டில்
படர்கின்ற பெருந்துன்பம் ஏது மின்றி
     பரவலென ஆட்சிநலம் பெறுதல் வேண்டும்!
சுடர்நாளும் மக்கள்மனம் ஆளும் போக்கால்
     சொந்தமென அனைவருமே சண்டை மாய்ப்போம்!

கற்புநிறை மனத்துடனே உணவுச் சாலை
     கண்டதிரு வள்ளலார் வழியில் செல்வோம்!
எண்ணத்தின் தூய்மைதனில்; உண்மை! நேர்மை!
     எழுவதனால் மாந்தருக்குள் மாண்பு கூடும்!
உண்மையுடன் நான்சொல்வேன்; உறுதி அந்த
     உயர்வாக்கும் புகழுலகம் ஒளிரும்! வாழும்!
கண்ணியத்தில் கடமையுடன் கவிதை சேர்ப்போம்!
     கட்டுப்பா டாய்இணைந்து உரிமை காப்போம்!

எந்தஒரு தூண்டுதலும் இன்றி, இந்நாள்
     எப்படித்தான் நடக்கிறதோ! கட்டுக் கோப்பாய்;
சொந்தமென மனத்திருத்தி மாண வர்கள்
     சுடர்விட்டார் உரிமையுடன்! கட்டுக் கோப்பாய்
இந்நிலத்தில் இருமூன்று நாட்க ளாக
     இளைஞருடன் சிறுவர்களும் தாயும் ஒன்றாய்!
வந்திங்கே ஆயிரமாய் கூடி நின்றார்!
     வார்த்தையிலை; பாராட்டு கூற என்னால்!

ஆயிரத்து தொள்ளாயிரத் தறுபத் தைந்தில்
     ஆர்வமுடன் இந்தியினை எதிர்த்த போரில்
உயிரழந்தோர் ஏராளம்! பள்ளிக் கூடம்
     உருப்படியாய் நாற்பத்தைந் துநாட்கள் மூடி
தயிராக உரைந்துவிட்ட நாளில் அன்று
     தளமாக தூண்டுதலால் வெற்றி கண்டார்!
பயிராகும் இளைஞரின்று தானாய் கூடி
     பண்பழிய கண்ணியத்தால் வாழ்ந்து நின்றார்!

இந்நாளில் அரசியலார் "ஜல்லிக் கட்டு"
     இனிதாக நடப்பதற்கு சட்டம் போட்டார்!
எந்நாளும் இதைஏலோம்! "பீட்டா" என்னும்
     எதிரிக்கு தடைபோட வேண்டும்! எங்கள்
சொந்தத்தை காத்திடவும் சூளு ரைப்போம்!
     சுரண்டவந்த அந்நியரின் வழிஅ டைப்போம்!
எந்தஒரு கருத்துக்கும் இடம்இங் கில்லை
     எல்லார்க்கும் மதிப்பளிப்போம்! இதயம் கொள்வீர்!

இன்றிருக்கும் சூழ்நிலையே வளர வேண்டும்!
     இனிமையுடன் இளைஞர்களின் எண்ணம் சூழல்
குன்றொளிரக் காட்டிடவே; அறிஞர், நல்லோர்!
     குறையாமல் அறம்கூறி வளர்த்தல் வேண்டும்
அன்றந்த காந்திகண்ட "அகிம்சை" முற்றும்
     அழியாமல் மடைமாற்றம் செய்தலே நாட்டில்
குன்றாமல் வெளிநாட்டின் ஆதிக் கத்தை
     குறைத்திடலாம்! தாயகத்தை காப்போம்! வாரீர்!

இன்றிந்த இளைஞருடன் மாண வர்கள்
     இணைந்து வெற்றிபெற்ற செய்கை; அந்நாள்
குன்றமர்ந்த தகப்பனுக்குச் சாமி யான
     குமிழ்சிரிப்பின் முருகன்அவன் அருளோ? அன்றி
"அன்னையிடம் பாலுண்டு" பண்பாய் வாழும்
     "அறிவாலே" விளைந்ததுவோ? எதுவா னாலும்
நின்றொளிரக் காத்திடுவோம்! புகழும் நீண்டு
     நிலைத்திடவே வாழ்த்திடுவோம்! மானம் காப்போம்!

அழிந்தொழிந்த தமிழர்தம் பண்பு; மாண்பு
     அகழ்ந்தெடுக்கும் வாய்ப்புத்தான் இந்த நேரம்
விழித்திட்ட இளைஞர்களின் எழுச்சி தன்னால்
     விலைபோகா ஒருவழியைக் காண்போம்! நம்மில்
இழந்திட்ட புகழ்பாதை காத்தல் நன்றாம்!
     இதுவன்றோ "நல்லநேரம்" நாமும் திட்டம்
செழிப்புடனே தீட்டிடுவோம்! "காம ராசர்!"
     செதுக்கிட்ட பாதையிலே நடத்தல் செய்வோம்!

என்னுடைய இதயத்தில் உறுதி ஆக
     எழிலிடத்தைப் பெற்றிருக்கும் வெற்றி வாகை;
புன்முறுவல் முகத்துடன் கூடி நிற்கும்;
     புதுமைமிகு இளைஞர்களே! முதிர்ந்த நெல்லும்
இன்முகத்தில் வளைந்திடுதல் போல; நீங்கள்
     இதயத்தில் ஏற்றிடுவீர்! முதல்வர் மற்றும்
குன்றொளிரும் பிரதமரும் கொடுக்கும் அந்த
     குணம்நிறைந்த வாக்குறுதி ஏற்றல் நன்றாம்!

"மெரினா"வில் மட்டுமன்று; திருச்சி சேலம்
     மதுரையுடன் மாடுபுகழ் "அலங்கா நல்லூர்"
உரிமையுடன் "ஜல்லிக்கட்டு" நடக்க வில்லை
     உறுதியான உள்ளத்தில் மறுத்து விட்டார்!
செரிந்திட்ட நல்மனத்தில் அரசு இந்நாள்
     சிதறாமல் சட்டத்தை கொடுத்த போதும்
புரியாத புதிரல்ல; நிலையாய் "சட்டம்"
     போடும்வரை ஒய்வில்லை; தொடர்ந்தார் போரை;

இதையேநாம் முதலாய்க் கொள்வோம்! நம்மின்
     இதயத்தின் மகிழ்ச்சிஒலி நிலைத்து நாளும்
சிதையாமல் தமிழகத்தின் வாழ்வு காப்போம்!
     சிறிதளவும் சிதறாமல் சிறப்பு சேர்ப்போம்!
கதையாக இதையாக்கல் வேண்டாம்; போற்றும்
     கவிதையினில் வரலாறாய் போற்றிக் காத்து;
விதையாக "புறத்தோடு" "அகமும்" கூறும்
     விதியாக்கி நூல்படைப்போம்; புனிதம் வாழும்!

எனக்கெந்தன் தந்தைவைத்த பெயரை மாற்றி
     இளமுருகுவாய் வலம்வந்தேன்; தமிழுக் காக
அன்றெனக்கு மொழிப்போர்தான் தூண்டு கோலம்!
     அதுபோன்ற நிலைஎதுவும் இன்றில் லாமல்
தன்மனத்தில் அனைவருக்கும் இனிதாய் தோன்றி
     தழைத்திட்ட ஆலமர விழுதாய் வாழும்
என்றிந்நாள் உணர்வதனால்; இனிதாய் சொல்வேன்
     இனிநம்மின் நாட்டினிலே நேயம் வாழும்!

{புலவர். இளமுருகு அண்ணாமலை}

குறள் எண்: 0541 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 055 - செங்கோன்மை; குறள் எண்: 0541}

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை

விழியப்பன் விளக்கம்: நடந்ததை தீர ஆராய்ந்து, எவரிடத்திலும் எந்த சார்பின்மையும் இன்றி; இறையாண்மை கொண்டு, தெளிவுடன் நீதி வழங்குவதே முறையானதாகும்.
(அது போல்...)
கொள்கையை ஆழ உணர்ந்து, ஒருவரிடமும் எந்த பகையும் இன்றி; அறத்தன்மை நிறைந்து, தேவையுடன் உரிமை கோருவதே போராட்டமாகும்.

திங்கள், ஜனவரி 23, 2017

அதிகாரம் 054: பொச்சாவாமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை

0531.  இறந்த வெகுளியின் தீதே சிறந்த
           உவகை மகிழ்ச்சியிற் சோர்வு

           விழியப்பன் விளக்கம்: அபரிதமான இன்பத்தில், மகிழ்ந்து களைத்ததால் விளையும் மறதி;
           அதீதமான கோபத்தை விட, மிகுந்த தீமையானதாகும்.
(அது போல்...)
           மிகையான சுதந்திரத்தில், முறையற்ற செயல்களால் விளையும் சீர்கேடு; ஆழ்ந்த
           அடிமைத்தனத்தை விட, அதீத பாதகமானது.
      
0532.  பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
           நிச்ச நிரப்புக்கொன் றாங்கு

           விழியப்பன் விளக்கம்: இடைவிடாத வறுமை, அறிவைச் சுருக்கிக் கெடுப்பது போல்;
           மறதியெனும் குறைபாடு, சிறப்பைச் சுருக்கும்.
(அது போல்...)
           தீராத குழப்பம், சிந்தனையைச் சிதைத்து சிதறடிப்பது போல்; தானெனும் அகந்தை,
           மனிதத்தைச் சிதைக்கும்.
           
0533.  பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்து 
           எப்பால்நூ லோர்க்கும் துணிவு

           விழியப்பன் விளக்கம்: மறதியெனும் குறையுள்ளோர், புகழ் அடைதல் சாத்தியமாகாது;
           உலகிலுள்ள எவ்வகை கல்வியைப் பயின்றோர்க்கும், இது பொதுவான கருத்தாகும்.
(அது போல்...)
           தானெனும் அகந்தையுள்ளோர், பிறவிப்பயன் பெறுதல் இயலாது; புவியிலுள்ள எவ்வித
           சக்தியைக் கொண்டோர்க்கும், இது சமமான விதியாகும்.

0534.  அச்சம் உடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
           பொச்சாப்பு உடையார்க்கு நன்கு

           விழியப்பன் விளக்கம்: ஐயம் உடையோர்க்கு, எவ்வொன்றும் பாதுகாப்பை அளிப்பதில்லை
           போல்;  மறதி உடையோர்க்கு, எவ்வொன்றும் நன்மைப் பயப்பதில்லை.
(அது போல்...)
           சந்தேகம் உள்ளோர்க்கு, எவ்வுறவும் நம்பிக்கை தருவதில்லை போல்; பொறாமை
           இருப்போர்க்கு, எதுவொன்றும் மகிழ்ச்சியைத் தருவதில்லை. 

0535.  முன்உறக் காவாது இழுக்கியான் தன்பிழை
           பின்ஊறு இரங்கி விடும்

           விழியப்பன் விளக்கம்: எதிர்வரும் இடையூறுகளுக்கு, முற்காப்பைத் திட்டமிடாமல் -
           மறதியோடு இருப்போர்; இடையூறுகள் வந்தபின், தம் மறதியை எண்ணி வருந்திடுவர்.
(அது போல்...)
           முதுமைப் பிணிகளுக்கு, இளமையில் மருந்திடாமல் - பொறுப்பின்றி இருப்போர்; முதுமை
           வந்தபின், தம் பொறுப்பின்மையை நினைத்து வருந்துவர்.

0536.  இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
           வாயின் அதுஒப்பது இல்

           விழியப்பன் விளக்கம்: எவரிடத்திலும்/எந்நிலையிலும் - மறதியில்லாத நிலைப்பாடு,  
           தொய்வின்றி வாய்க்குமானால்; அதற்கு ஒப்பான நன்மைப் பயப்பது, வேறெதுவும் இல்லை.
(அது போல்...)
           எப்படைப்பிலும்/எவ்வகையிலும் - குறையில்லாத சமூக-அக்கறை, தொடர்ந்து
           இருக்குமானால்; அதற்கு இணையான பிறவிப்பயன் தருவது, வேறேதும் இல்லை.

0537.  அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
           கருவியால் போற்றிச் செயின்

           விழியப்பன் விளக்கம்: மறதியைக் களையும் வைராக்கியமான மனதுடன், செயல்களைச்
           செய்தால்; செய்வதற்கு இயலாத, அரிதான செயலென்று ஏதுமில்லை.
(அது போல்...)
           பின்வாங்குதலை ஒழிக்கும் திண்ணமான துணையுடன், போராட்டங்களை நடத்தினால்;
           தீர்க்க முடியாத, சவாலான பிரச்சனையென்று ஒன்றுமில்லை.

0538.  புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
           இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்

           விழியப்பன் விளக்கம்: "திருக்குறள் போன்ற" புகழப்பட்ட விடயங்களை, மதித்து பின்பற்றி
           நடக்க வேண்டும்; அப்படி செய்யாமல் மறந்தோர்க்கு, ஏழு பிறவியிலும் பயனில்லை.
(அது போல்...)
           "மழலை போன்ற" சிறப்பிக்கப்பட்ட விடயங்களை, உணர்ந்து கூர்ந்து அனுபவிக்க
           வேண்டும்; அப்படி செய்யத் தவறியவர்க்கு, ஏழு இசைகளிலும் இன்பமில்லை.

0539.  இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம்
           மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து

           விழியப்பன் விளக்கம்: நம்முடைய பெருத்த மகிழ்ச்சியால், மனவலிமை பெற்று மனமயக்கம்
           உருவாகும்போது; மறதியால் கெட்டு அழிந்தவர்களை, மனதில் நினைக்கவேண்டும்.
(அது போல்...)
           நம்முடைய பெருகிய வருமானத்தால், பொருளாதாரம் வளர்ந்து ஆதிக்கம் எழும்போது;
           ஆணவத்தால் வாழ்வியல் தவறியவர்களை, எண்ணிப் பார்க்கவேண்டும்.

0540.  உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
           உள்ளியது உள்ளப் பெறின்

           விழியப்பன் விளக்கம்: நாம் அடைய எண்ணியதை மறவாமல், மனதில் உறுதியோடு
           இருப்பின்; எண்ணியதை அடைவது மிக எளிதாகும்.
(அது போல்...)
           நாம் பிறந்த காரணத்தை இகழாமல், வாழ்வியலில் நெறியோடு ஈடுபடின், பிறவிப்பயன்
           பெறுவது மிக எளிதாகும்.

குறள் எண்: 0540 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0540}

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்

விழியப்பன் விளக்கம்: நாம் அடைய எண்ணியதை மறவாமல், மனதில் உறுதியோடு இருப்பின்; எண்ணியதை அடைவது மிக எளிதாகும்.
(அது போல்...)
நாம் பிறந்த காரணத்தை இகழாமல், வாழ்வியலில் நெறியோடு ஈடுபடின், பிறவிப்பயன் பெறுவது மிக எளிதாகும்.

ஞாயிறு, ஜனவரி 22, 2017

குறள் எண்: 0539 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0539}

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து

விழியப்பன் விளக்கம்: நம்முடைய பெருத்த மகிழ்ச்சியால், மனவலிமை பெற்று மனமயக்கம் உருவாகும்போது; மறதியால் கெட்டு அழிந்தவர்களை, மனதில் நினைக்கவேண்டும்.
(அது போல்...)
நம்முடைய பெருகிய வருமானத்தால், பொருளாதாரம் வளர்ந்து ஆதிக்கம் எழும்போது; ஆணவத்தால் வாழ்வியல் தவறியவர்களை, எண்ணிப் பார்க்கவேண்டும்.

சனி, ஜனவரி 21, 2017

குறள் எண்: 0538 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0538}

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்

விழியப்பன் விளக்கம்: "திருக்குறள் போன்ற" புகழப்பட்ட விடயங்களை, மதித்து பின்பற்றி நடக்க வேண்டும்; அப்படி செய்யாமல் மறந்தோர்க்கு, ஏழு பிறவியிலும் பயனில்லை.
(அது போல்...)
"மழலை போன்ற" சிறப்பிக்கப்பட்ட விடயங்களை, உணர்ந்து கூர்ந்து அனுபவிக்க வேண்டும்; அப்படி செய்யத் தவறியவர்க்கு, ஏழு இசைகளிலும் இன்பமில்லை.

வெள்ளி, ஜனவரி 20, 2017

குறள் எண்: 0537 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0537}

அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்

விழியப்பன் விளக்கம்: மறதியைக் களையும் வைராக்கியமான மனதுடன், செயல்களைச் செய்தால்; செய்வதற்கு இயலாத, அரிதான செயலென்று ஏதுமில்லை.
(அது போல்...)
பின்வாங்குதலை ஒழிக்கும் திண்ணமான துணையுடன், போராட்டங்களை நடத்தினால்; தீர்க்க முடியாத, சவாலான பிரச்சனையென்று ஒன்றுமில்லை.

முதல் முறையாய் ஒரு போராட்டம்

{2017 ஆம் ஆண்டு பொங்கலை ஒட்டி;
தமிழகம் முழுவதும் "ஏறு தழுவுதல்" சார்ந்து நடந்த போராட்டக் காட்சிகள்}

நானறிந்த வகையில்...
 1. முதல் முறையாய் ஒரு போராட்டம் - மனதுக்கு எந்த நெருடலையும் அளிக்காமல்; சரியாய்/முறையாய் நடத்தப்படுகிறது.
 2. முதல் முறையாய் ஒரு போராட்டம் - மக்களுக்காக, மக்களால் முன்னின்று நடத்தப்படுகிறது.
 3. முதல் முறையாய் ஒரு போராட்டம் - அரசியலை விலக்கி வைத்து நடத்தப்படுகிறது.
 4. முதல் முறையாய் ஒரு போராட்டம் - அரசியல்வாதிகளை விலக்கி வைத்து நடத்தப்படுகிறது.
 5. முதல் முறையாய் ஒரு போராட்டம் - எல்லா அரசியல் கட்சிகளையும் விலக்கி வைத்து - மக்களால் நடத்தப்படுகிறது.
 6. முதல் முறையாய் ஒரு போராட்டம் - மாணவர்களால்/இளைஞர்களால்/பொதுமக்களால்; எவ்விதமான அரசியல் சார்பும் இன்றி முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது.
 7. முதல் முறையாய் ஒரு போராட்டம் - "எந்தப் பிரிவினையும் இல்லாமல்" - ஒட்டுமொத்த இனத்திற்காய்; ஒட்டுமொத்த இனத்தால் - நடத்தப்படுகிறது.
 8. முதல் முறையாய் ஒரு போராட்டம் - எந்த சுயஇலாபமோ/சுயநலமோ இல்லாமல் நடத்தப்படுகிறது.
 9. "மிக முக்கியமாய்"... முதல் முறையாய் ஒரு போராட்டம் - "எந்த தலைமையும் இல்லாமல்/எந்த தலைமையையும் எதிர்பார்க்காமல்" எல்லோரையும் முதன்மைப்படுத்தி நடத்தப்படுகிறது.
 10. முதல் முறையாய் ஒரு போராட்டம் - "எல்லோரும் எதிர்பார்க்கும் மாற்றம் வந்தே தீரும்!" என்ற நம்பிக்கைப் பெருக்கி இருக்கிறது.
என் சார்பிலும் நடக்கும் இந்தப் போராட்டத்தில், கலந்துகொண்டு கலாச்சாரம் காக்கப் போராடும் அனைத்து தமிழ் உள்ளங்களையும் மதித்து, என் தலை வணங்குகிறேன்.

தொடரட்டும்! வளரட்டும்!!

வியாழன், ஜனவரி 19, 2017

குறள் எண்: 0536 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0536}

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுஒப்பது இல்

விழியப்பன் விளக்கம்: எவரிடத்திலும்/எந்நிலையிலும் - மறதியில்லாத நிலைப்பாடு, தொய்வின்றி வாய்க்குமானால்; அதற்கு ஒப்பான நன்மைப் பயப்பது, வேறெதுவும் இல்லை.
(அது போல்...)
எப்படைப்பிலும்/எவ்வகையிலும் - குறையில்லாத சமூக-அக்கறை, தொடர்ந்து இருக்குமானால்; அதற்கு இணையான பிறவிப்பயன் தருவது, வேறேதும் இல்லை.

மனிதம் காப்போம்!

{என்னப்பனைத் தொடர்ந்து வற்புறுத்தியதன் விளைவாய்... 
"77 வயதில்" பல ஆண்டுகளுக்குப் பின் 
மீண்டும் எழுத ஆரம்பித்து இருக்கிறார். 
இரண்டு நாட்களுக்கு முன் அவரெழுதிய படைப்பு கீழே}
*******

கவிபாட புதுவையினில் "கவிஞர் தாகூர்"
      கல்லூரி முகப்பினிலே நின்று; நானும்
புவிவாழ்த்தப் பிறந்தகவி, அறிஞர் தம்மை
      பெருமையுடன் மனத்திருத்தி, புகழின் மேன்மை
செவிநிறையச் செய்யவேண்டும் என்றே! எந்தன்
      சிந்தனையில் தமிழ்வாழ்த்தி; சிறப்பு கூறும்
தவவாழ்வுப் பெரியோரின் வழியில் செல்வேன்!
      தமிழே!நீ என்வழியில் பயணம் செய்வாய்!

செந்தமிழே! உன்னால்தான் பெருமை பெற்றேன்!
      செங்கரும்பின் சாறெனவே இனிதாய் வாழ்ந்தேன்!
இந்நிலத்தில் ஒருமொழிதான் உன்போல் உண்டோ?
      இதுஉண்மை; "கால்டுவெல்" "மு.வ." போன்றோர்
விந்தையுடன் எடுத்துரைத்தார்! நாமும் நம்மின்
      விருப்பத்தை வெளிக்கொணர வேண்டும்; போற்றும்
சிந்தையினில் இனியேனும் உறுதி ஏற்போம்!
      சிறப்புடனே தமிழகத்தை வாழச் செய்வோம்!

"தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செய்தல் வேண்டும்!"
      தெளிவாக பாரதியார் சொன்ன தாலே;
உருவான தமிழ்ப்பலகை புதுவை மண்ணில்,
       உயிரோடு மணக்கிறது! எனினும் நம்மின்
ஒருமையிலா உள்ளத்தால்; தமிழ கத்தில்
       உருப்படியாய் அதுபோன்ற வாய்ப்பே காணோம்!
பெருமையுடன் தமிழர்களே ஆண்ட போதும்;
       பெயரளவும் தமிழ்ப்பண்பே மலர வில்லை!

எங்கெங்கு காணினும் பொய்மை வீசும்!
      யாரிடத்தும் மனத்திரையில் உண்மை இல்லை;
பொங்கிவரும் அன்பினிலே ஒளியைக் காணோம்!
      பொறுப்பற்ற பெரும்போக்கு மலர்தல் காண்பீர்!
பங்கம்தான் விளைந்திடுமோ தமிழர் வாழ்வில்?
      பதைத்தெந்தன் மனஓலம் பலமாய் இங்கே
சங்கொலியாய் கேட்கலையோ? காத்தல் யாரோ?
      சத்தியமாய் வேண்டுகிறேன்; மனப்புண் போமோ?

நான்எழுதும் கவிதையினால் நாட்டில் என்ன
     நலம்விளையப் போகிறது? மழையும் இந்நாள்
வான்மணக்க வரவில்லை! புயலால் வீணே
     வளர்மரத்தைச் சாய்த்ததுதான் மிச்சம்! பஞ்சம்
தானாக படிப்படியாய் பெருகி நாளை
     தமிழகத்தை தாக்கவும் கூடும்! இன்றே
மானத்தைக் காப்பதற்கு விரைவாய் நாமும்
     மாற்றுவழி சிந்திப்போம்! வாரீர்! காண்போம்!

தருமத்தை சூதழித்தால் மீண்டும் வெற்றி
     தவறாமல் பாரதியும் கிடைக்கும் என்றார்!
கருமத்தை எண்ணிடுவோம்! விரைந்து நாட்டில்
     கணக்கின்றி புதியவழி காண்போம்! நாளை
உருவாக்கும் அணைகளிலே நீரைச் சேர்ப்போம்!
     உருப்படியாய் திட்டமிட்டு பயிர்தான் காப்போம்!
திருவளர்க்கும் தலைவர்களால்; தேனும் பாலும்
     தெருவெல்லாம் பாயும்வழி காண்போம்! வாரீர்!

எண்ணத்தில் தெளிவுதனை என்றும் காணும்
     ஏற்றத்தை இளம்பிறையாய் வளர்த்தல் வேண்டும்!
திண்ணையில் தினம்கூடி வெற்றுப் பேச்சை
     தீமையுடன் வளர்க்காத பொதுமை வேண்டும்!
பண்ணையினில் கூட்டாக பயிர்வ ளர்க்கும்
     பாசம்தான் தவறாமல் தழைத்தல் வேண்டும்!
கண்ணெனவே விடுதலையைக் காத்து நாட்டில்
     காலமெல்லாம் உரிமைதனைப் பெறுதல் வேண்டும்!

துறைதோறும் பணம்ஒன்றே கொள்கை யாக
     துயர்நெஞ்சில் கொண்டதனால் மக்கள் யாரும்;
சிறைபோட்ட மனத்தினனாய் வாழ்தல் ஆமோ!
     சிரம்தாழ்ந்து கழிவினமாய் ஆதல் நன்றோ?
மறைஒன்றை மறவாமல் வகுத்தல் செய்தால்
     மனம்மீண்டும் உயர்வளத்தைப் பெற்றே; நாளும்
பறைகொட்டி தமிழினத்தின் மானம் காப்போம்!
     பலதிக்கும் உயிரோட்டம் செய்வோம்! வாழ்வோம்!

நான்எழுதும் பாடலினால் தமிழ கத்தில்
     நலம்வளரப் போகிறதா என்ன? இந்நாள்
வான்மழைதான் பொய்த்ததனால் தஞ்சை மண்ணில்
     வாடிவிட்ட உயிர்களினால் ஒன்று சொல்வேன்!
தேன்மணந்த நாட்டிலின்று; எதிலும் எங்கும்
     தெருமணக்கும் அவலம்தான்; இனிமே லேனும்
"மாண்புடைய அரசியலார்" ஒருமை எண்ணம்
     மறவாமல் கொள்வதனால் மனிதம் காப்போம்!


{புலவர். இளமுருகு அண்ணாமலை}

புதன், ஜனவரி 18, 2017

குறள் எண்: 0535 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0535}

முன்உறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்ஊறு இரங்கி விடும்

விழியப்பன் விளக்கம்: எதிர்வரும் இடையூறுகளுக்கு, முற்காப்பைத் திட்டமிடாமல் - மறதியோடு இருப்போர்; இடையூறுகள் வந்தபின், தம் மறதியை எண்ணி வருந்திடுவர்.
(அது போல்...)
முதுமைப் பிணிகளுக்கு, இளமையில் மருந்திடாமல் - பொறுப்பின்றி இருப்போர்; முதுமை வந்தபின், தம் பொறுப்பின்மையை நினைத்து வருந்துவர்.

செவ்வாய், ஜனவரி 17, 2017

குறள் எண்: 0534 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0534}

அச்சம் உடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு

விழியப்பன் விளக்கம்: ஐயம் உடையோர்க்கு, எவ்வொன்றும் பாதுகாப்பை அளிப்பதில்லை போல்;  மறதி உடையோர்க்கு, எவ்வொன்றும் நன்மைப் பயப்பதில்லை.
(அது போல்...)
சந்தேகம் உள்ளோர்க்கு, எவ்வுறவும் நம்பிக்கை தருவதில்லை போல்; பொறாமை இருப்போர்க்கு, எதுவொன்றும் மகிழ்ச்சியைத் தருவதில்லை.

திங்கள், ஜனவரி 16, 2017

குறள் எண்: 0533 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0533}

பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்து 
எப்பால்நூ லோர்க்கும் துணிவு

விழியப்பன் விளக்கம்: மறதியெனும் குறையுள்ளோர், புகழ் அடைதல் சாத்தியமாகாது; உலகிலுள்ள எவ்வகை கல்வியைப் பயின்றோர்க்கும், இது பொதுவான கருத்தாகும்.
(அது போல்...)
தானெனும் அகந்தையுள்ளோர், பிறவிப்பயன் பெறுதல் இயலாது; புவியிலுள்ள எவ்வித சக்தியைக் கொண்டோர்க்கும், இது சமமான விதியாகும்.

ஞாயிறு, ஜனவரி 15, 2017

குறள் எண்: 0532 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0532}

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு

விழியப்பன் விளக்கம்: இடைவிடாத வறுமை, அறிவைச் சுருக்கிக் கெடுப்பது போல்; மறதியெனும் குறைபாடு, சிறப்பைச் சுருக்கும்.
(அது போல்...)
தீராத குழப்பம், சிந்தனையைச் சிதைத்து சிதறடிப்பது போல்; தானெனும் அகந்தை, மனிதத்தைச் சிதைக்கும்.

சனி, ஜனவரி 14, 2017

குறள் எண்: 0531 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 054 - பொச்சாவாமை; குறள் எண்: 0531}

இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு

விழியப்பன் விளக்கம்: அபரிதமான இன்பத்தில், மகிழ்ந்து களைத்ததால் விளையும் மறதி; அதீதமான கோபத்தை விட, மிகுந்த தீமையானதாகும்.
(அது போல்...)
மிகையான சுதந்திரத்தில், முறையற்ற செயல்களால் விளையும் சீர்கேடு; ஆழ்ந்த அடிமைத்தனத்தை விட, அதீத பாதகமானது.

வெள்ளி, ஜனவரி 13, 2017

அதிகாரம் 053: சுற்றந்தழால் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 053: சுற்றந்தழால்

0521.  பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் 
           சுற்றத்தார் கண்ணே உள

           விழியப்பன் விளக்கம்: ஒருவர் எல்லாவற்றையும் இழந்த பின்னும், அவருடனான கடந்தகால
           அனுபவங்களைப்; பாராட்டி வலிமையூட்டும் சிறப்பு, சுற்றத்தாரிடம் உண்டு.
(அது போல்...)
           ஓர்தலைவர் உயிரோடு இல்லாத போதும், அவருடைய முந்தைய ஆட்சியை; மெய்சிலிர்த்து
           நினைவூட்டும் இயல்பு, சமுதாயத்தில் இருக்கும்.
      
0522.  விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
           ஆக்கம் பலவும் தரும்

           விழியப்பன் விளக்கம்: குறையற்ற அன்புடைய சுற்றம், ஒருவருக்கு கிடைக்குமானால்;
           எல்லாவிதமான செல்வங்களும், குறைவில்லாத வளர்ச்சியுடன் தொடரும்.
(அது போல்...)
           மாசற்ற வாய்மையுடைய குடும்பத்தலைவர், ஓர்குடும்பத்தை வழிநடத்தினால்; அனைத்து
           பண்புகளும், அழிவில்லாத நிறைவுடன் இருக்கும்.
           
0523.  அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
           கோடின்றி நீர்நிறைந் தற்று

           விழியப்பன் விளக்கம்: உறவுகளும்/நட்புகளும் சுற்றியிருக்க, அவர்களுடன் உறவாடி
           வாழாதோரின் வாழ்க்கை; சுற்றுக்கரை இல்லாத குளத்தில், நீர் நிறைந்திருப்பதைப்
           போன்றதாகும்.
(அது போல்...)
           எண்ணமும்/செயலும் ஒருமுகப்பட்ட, அவற்றை அலசி ஆராயாதோரின் செயல்பாடு;
           உயிர்ப்பு இல்லாத நிலத்தில், விதைகளை விதைப்பதற்கு ஒப்பாகும்.

0524.  சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான்
           பெற்றத்தால் பெற்ற பயன்

           விழியப்பன் விளக்கம்: ஒருவர் பெற்றிருக்கும், செல்வத்தின் உண்மையான பயன்; அவரின்
           உறவு மற்றும் நட்புகளால், சூழப்பட்டு வாழ்வதில் இருக்கிறது.
(அது போல்...)
           ஒருவர் பெற்றிருக்கும், பிறவியின் நிறைவான பயன்; அவரின் எண்ணம் மற்றும் செயலில்,
           பொதுநலத்தைச் சேர்ப்பதில் இருக்கிறது. 

0525.  கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
           சுற்றத்தால் சுற்றப் படும்

           விழியப்பன் விளக்கம்: இருப்பதைப் பகிர்வது/இன்மொழியில் பேசுவது - இரண்டையும்
           பழகினால்; பெருகிடும் சுற்றம், எப்போதும் சூழ்ந்து இருக்கும்.
(அது போல்...)
           நல்லதைச் செய்வது/எளிமையாய் இருப்பது - இரண்டையும் செய்தால்; நிறைந்த
           தொண்டர்கள், எக்காலமும் தொடர்ந்து வருவர்.

0526.  பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
           மருங்குடையார் மாநிலத்து இல்

           விழியப்பன் விளக்கம்: அதீதமாய் கொடையளித்து/சினம் இல்லாமலும் - இருப்போரை
           விட; பெருமளவு சுற்றமுடையவர், விரிந்த உலகத்தில் மற்றொருவர் இல்லை.
(அது போல்...)
           ஓயாமல் உழைத்து/குடும்பத்தைப் பிரியாமலும் - வாழ்வோரை விட; சுதந்திரமான
           சூழலுள்ளோர்; அகண்ட அகிலத்தில் வேறொருரவர் இல்லை.

0527.  காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
           அன்னநீ ரார்க்கே உள

           விழியப்பன் விளக்கம்: மறைக்காமல் - கிடைப்பதைப் பகிர, சுற்றத்தாரை அழைக்கும்
           காக்கையின்; பகிர்ந்தளிக்கும் குணமுள்ளவரையே, செல்வமும்/புகழும் சென்றடையும்.
(அது போல்...)
           மறுக்காமல் - பயின்றதைப் பயிற்றுவிக்க, மாணவர்களைச் சேகரிக்கும் ஆசிரியரின்;
           பயிற்றுவிக்கும் முனைப்புடையவரையே, கல்வியும்/ஞானமும் சேரும்.

0528.  பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
           அதுநோக்கி வாழ்வார் பலர்

           விழியப்பன் விளக்கம்: எல்லோரையும் சராசரியாய் பார்க்காமல், ஒவ்வொருவரின்
           தனித்திறனையும் - மன்னன் ஆய்ந்தறிந்தால்; அவ்வியல்பைப் பாராட்டி, பற்பலர்
           சுற்றிவாழ்வர்.
(அது போல்...)
           எல்லாவற்றையும் ஒன்றாய் பாவிக்காமல், ஒவ்வொரு தனித்துறையையும் - கல்வி-
           நிறுவனங்கள் மேம்படுத்தினால்; அவ்வாய்ப்பைக் கொண்டு, பல்துறையினரும் பயனடைவர்.

0529.  தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
           காரணம் இன்றி வரும்

           விழியப்பன் விளக்கம்: சுற்றத்தாருள் ஒருவராய் இருந்து, நம்மைப் பிரிந்து சென்றவர்;
           பிரிந்து சென்றதற்கான காரணம், தவறென உணரும்போது - மீண்டு(ம்) வருவர்.
(அது போல்...)
           பதவிகளில் ஒன்றைக் கொண்டிருந்து, கட்சியைப் பிரிந்து சென்றவர்; பிரிந்து சென்றதன்
           விளைவு, பாதகமென உணர்ந்தால் - மீண்டு(ம்) இணைவர்.

0530.  உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
           இழைத்திருந்து எண்ணிக் கொளல்

           விழியப்பன் விளக்கம்: காரணமின்றி பிரிந்து, காரணத்தோடு மீண்டும் வருவோரை;
           அரசாள்பவர் - ஆராய்ந்து அறிந்தபின், சுற்றத்தில் இணைத்துக் கொள்ளவேண்டும்.
(அது போல்...)
           பணத்திற்காக விலகி, பணத்திற்காக இணைய வருவோரை; நிர்வாகத்தினர் - தீர்க்கமாய்
           ஆராய்ந்தபின், பணியில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

குறள் எண்: 0530 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 053 - சுற்றந்தழால்; குறள் எண்: 0530}

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல்

விழியப்பன் விளக்கம்: காரணமின்றி பிரிந்து, காரணத்தோடு மீண்டும் வருவோரை;  அரசாள்பவர் - ஆராய்ந்து அறிந்தபின், சுற்றத்தில் இணைத்துக் கொள்ளவேண்டும்.
(அது போல்...)
பணத்திற்காக விலகி, பணத்திற்காக இணைய வருவோரை; நிர்வாகத்தினர் - தீர்க்கமாய் ஆராய்ந்தபின், பணியில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

"உழவர் திருநாள்" வாழ்த்தும்/அழைப்பும்...


இயற்கைப்பாசம் என்று"பசுத்தோல் புலியாய்"
“செயற்கைக் காளைப்பாசம்" காட்டுவரல்லர்!
வெண்பொங்கலோடு கரும்பும் இன்னபிறவும்
உண்பதற்கு உரமாய்உழவாய்  உதவிட்டஎம்

காளைக்கென தனிப்பொங்கல் ஒன்றையிட்டு
காளைகளும் பிள்ளைகளென அகமகிழ்ந்து
காலையிலே தூக்கம்துக்கம் இரண்டும்நீக்கி
காளைகளைக் குளிப்பாட்டிக் கும்பிடுவோர்!!

"வணங்கிடும் நாமேஎங்ஙனம் வதைப்போம்?"
விளங்கிடுமா இக்கதறலும் ”ஏறுதழுவலை
விளங்காமல்” விலங்குகாக்க வழக்குபதிந்த
விந்தைகூட்டத்திற்கு? தீர்ப்பீர் நியாயன்மீர்!

உப்பிட்டவரை மட்டுமல்ல!எம் வாழ்க்கையில்
துப்பிட்டவரையும் உள்ளவரை நினைப்போம்!
தமிழ்ப்பால் குடித்துதமிழ்த் தாயால்வளர்ந்த
தமிழர்களா துப்பிட்டகாளையின் கழுத்தறுப்பர்?

உற்றாருடன் ஊரேகூடிடும் உழவர்திருநாளில்
உம்மையும் வாழ்த்திவணங்கி அழைக்கிறோம்!
காளையை வணங்கும்எம் குணம்காணவாரீர்!
காணற்கரிய அக்காட்சியை கண்டுணர்வீர்!எம்

தழுவலுக்காய் ஏங்கியிருக்கும் காளைகளைத்
தழுவுவதற்காய் தவமிருக்கும் எந்தமிழ்நாட்டு
காளையர்களின் உள்ளுணர்வை உணர்ந்து
காளைகளைக் களங்களதனில் விட்டுவிடுவீர்!

பொங்கலிடும் எம்மவரவர் உள்ளமெலலாம்
பொங்கிடட்டும் புன்னகையும்! தமிழர்யாமும்
பொங்குஞ்சாய் பொத்திட்டக் காளைகளும்
பொங்கியெழுந்து புகட்டும் யாம்தழுவிடவே!

                - விழியப்பன் (எனும்) இளங்கோவன் இளமுருகு

வியாழன், ஜனவரி 12, 2017

குறள் எண்: 0529 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 053 - சுற்றந்தழால்; குறள் எண்: 0529}

தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்

விழியப்பன் விளக்கம்: சுற்றத்தாருள் ஒருவராய் இருந்து, நம்மைப் பிரிந்து சென்றவர்; பிரிந்து சென்றதற்கான காரணம், தவறென உணரும்போது - மீண்டு(ம்) வருவர்.
(அது போல்...)
பதவிகளில் ஒன்றைக் கொண்டிருந்து, கட்சியைப் பிரிந்து சென்றவர்; பிரிந்து சென்றதன் விளைவு, பாதகமென உணர்ந்தால் - மீண்டு(ம்) இணைவர்.

புதன், ஜனவரி 11, 2017

குறள் எண்: 0528 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 053 - சுற்றந்தழால்; குறள் எண்: 0528}

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்

விழியப்பன் விளக்கம்: எல்லோரையும் சராசரியாய் பார்க்காமல், ஒவ்வொருவரின் தனித்திறனையும் - மன்னன் ஆய்ந்தறிந்தால்; அவ்வியல்பைப் பாராட்டி, பற்பலர் சுற்றிவாழ்வர்.
(அது போல்...)
எல்லாவற்றையும் ஒன்றாய் பாவிக்காமல், ஒவ்வொரு தனித்துறையையும் - கல்வி-நிறுவனங்கள் மேம்படுத்தினால்; அவ்வாய்ப்பைக் கொண்டு, பல்துறையினரும் பயனடைவர்.

தமிழர் திருநாளும்; தமிழர் மனமும்...


செவ்வாய், ஜனவரி 10, 2017

குறள் எண்: 0527 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 053 - சுற்றந்தழால்; குறள் எண்: 0527}

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள

விழியப்பன் விளக்கம்: மறைக்காமல் - கிடைப்பதைப் பகிர, சுற்றத்தாரை அழைக்கும் காக்கையின்; பகிர்ந்தளிக்கும் குணமுள்ளவரையே, செல்வமும்/புகழும் சென்றடையும்.
(அது போல்...)
மறுக்காமல் - பயின்றதைப் பயிற்றுவிக்க, மாணவர்களைச் சேகரிக்கும் ஆசிரியரின்; பயிற்றுவிக்கும் முனைப்புடையவரையே, கல்வியும்/ஞானமும் சேரும்.

திங்கள், ஜனவரி 09, 2017

குறள் எண்: 0526 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 053 - சுற்றந்தழால்; குறள் எண்: 0526}

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்

விழியப்பன் விளக்கம்: அதீதமாய் கொடையளித்து/சினம் இல்லாமலும் - இருப்போரை விட; பெருமளவு சுற்றமுடையவர், விரிந்த உலகத்தில் மற்றொருவர் இல்லை.
(அது போல்...)
ஓயாமல் உழைத்து/குடும்பத்தைப் பிரியாமலும் - வாழ்வோரை விட; சுதந்திரமான சூழலுள்ளோர்; அகண்ட அகிலத்தில் வேறொருரவர் இல்லை.

ஞாயிறு, ஜனவரி 08, 2017

குறள் எண்: 0525 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 053 - சுற்றந்தழால்; குறள் எண்: 0525}

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்

விழியப்பன் விளக்கம்: இருப்பதைப் பகிர்வது/இன்மொழியில் பேசுவது - இரண்டையும் பழகினால்; பெருகிடும் சுற்றம், எப்போதும் சூழ்ந்து இருக்கும்.
(அது போல்...)
நல்லதைச் செய்வது/எளிமையாய் இருப்பது - இரண்டையும் செய்தால்; நிறைந்த தொண்டர்கள், எக்காலமும் தொடர்ந்து வருவர்.

சனி, ஜனவரி 07, 2017

குறள் எண்: 0524 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 053 - சுற்றந்தழால்; குறள் எண்: 0524}

சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்

விழியப்பன் விளக்கம்: ஒருவர் பெற்றிருக்கும், செல்வத்தின் உண்மையான பயன்; அவரின் உறவு மற்றும் நட்புகளால், சூழப்பட்டு வாழ்வதில் இருக்கிறது.
(அது போல்...)
ஒருவர் பெற்றிருக்கும், பிறவியின் நிறைவான பயன்; அவரின் எண்ணம் மற்றும் செயலில், பொதுநலத்தைச் சேர்ப்பதில் இருக்கிறது.

வெள்ளி, ஜனவரி 06, 2017

குறள் எண்: 0523 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 053 - சுற்றந்தழால்; குறள் எண்: 0523}

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று

விழியப்பன் விளக்கம்: உறவுகளும்/நட்புகளும் சுற்றியிருக்க, அவர்களுடன் உறவாடி வாழாதோரின் வாழ்க்கை; சுற்றுக்கரை இல்லாத குளத்தில், நீர் நிறைந்திருப்பதைப் போன்றதாகும்.
(அது போல்...)
எண்ணமும்/செயலும் ஒருமுகப்பட்ட, அவற்றை அலசி ஆராயாதோரின் செயல்பாடு; உயிர்ப்பு இல்லாத நிலத்தில், விதைகளை விதைப்பதற்கு ஒப்பாகும்.

வியாழன், ஜனவரி 05, 2017

குறள் எண்: 0522 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 053 - சுற்றந்தழால்; குறள் எண்: 0522}

விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்

விழியப்பன் விளக்கம்: குறையற்ற அன்புடைய சுற்றம், ஒருவருக்கு கிடைக்குமானால்; எல்லாவிதமான செல்வங்களும், குறைவில்லாத வளர்ச்சியுடன் தொடரும்.
(அது போல்...)
மாசற்ற வாய்மையுடைய குடும்பத்தலைவர், ஓர்குடும்பத்தை வழிநடத்தினால்; அனைத்து பண்புகளும், அழிவில்லாத நிறைவுடன் இருக்கும்.

புதன், ஜனவரி 04, 2017

குறள் எண்: 0521 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 053 - சுற்றந்தழால்; குறள் எண்: 0521}

பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் 
சுற்றத்தார் கண்ணே உள

விழியப்பன் விளக்கம்: ஒருவர் எல்லாவற்றையும் இழந்த பின்னும், அவருடனான கடந்தகால அனுபவங்களைப்; பாராட்டி வலிமையூட்டும் சிறப்பு, சுற்றத்தாரிடம் உண்டு.
(அது போல்...)
ஓர்தலைவர் உயிரோடு இல்லாத போதும், அவருடைய முந்தைய ஆட்சியை; மெய்சிலிர்த்து நினைவூட்டும் இயல்பு, சமுதாயத்தில் இருக்கும்.

செவ்வாய், ஜனவரி 03, 2017

அதிகாரம் 052: தெரிந்து வினையாடல் (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 052 - தெரிந்து வினையாடல்

0511.  நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த 
           தன்மையான் ஆளப் படும்

           விழியப்பன் விளக்கம்: வினையின், நன்மை/தீமை இரண்டையும் ஆராய்ந்து; நன்மையை
           மட்டுமே செய்யும் இயல்பினரிடம், ஆட்சியை ஒப்படைக்க வேண்டும்.
(அது போல்...)
           தொழிலின், நியாயம்/அநியாயம் இரண்டையும் உணர்ந்து; நியாயமாய் மட்டுமே
           வியாபாரம் செய்பவரிடம், பொருட்களை வாங்க வேண்டும்.
      
0512.  வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
           ஆராய்வான் செய்க வினை

           விழியப்பன் விளக்கம்: இடையூறுகளை ஆராய்ந்து தகர்த்து, வருவாயைப் பெருக்கி;
           வளத்தை மேம்படுத்தும் திறனுடையவரிடம், வினைகளை ஒப்படைத்தல் வேண்டும்.
(அது போல்...)
           விளைவுகளை அறிந்து முற்காத்து, சிந்தனையை தெளிவாக்கி; கற்பித்தலை
           மேற்கொள்ளும் குருவிடம், நம்மை சேர்ப்பிக்க வேண்டும்.
           
0513.  அன்புஅறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
           நன்குடையான் கட்டே தெளிவு

           விழியப்பன் விளக்கம்: அன்பு/அறிவு/தெரிந்து தெளியும் திறன்/பேராசை இல்லாமை -
           இந்நான்கு நற்குணங்களையும் உடையவரைக் கண்டறிந்து, வினைகளை ஒப்படைக்க
           வேண்டும்.
(அது போல்...)
           உண்மை/ஒழுக்கம்/உறவை மதிக்கும் குணம்/காழ்ப்புணர்ச்சி இல்லாமை - இந்நான்கு
           நற்பண்புகளை இருப்போரைத் தேர்ந்தெடுத்து, உறவுகளைப் பேணுதல் வேண்டும்.

0514.  எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
           வேறாகும் மாந்தர் பலர்

           விழியப்பன் விளக்கம்: அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து, தெளிவடைந்தவர்
           ஆயினும்; வினைகளைச் செய்து முடிக்கும் திறனால், வலுவிழக்கும் மக்கள் பலருண்டு.
(அது போல்...)
           அனைத்து நூல்களையும் கற்றறிந்து, உரையெழுதியவர் எனினும்; பாடங்களை ஆழ்ந்து
           கற்பிக்கும் வகையால், தோல்வியுறும் குருக்கள் பலருண்டு.

0515.  அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
           சிறந்தானென்று ஏவற்பாற் றன்று

           விழியப்பன் விளக்கம்: வினைகளை ஆராய்ந்து, நிறைவேற்றும் திறனுடையோரைத்
           தவிர்த்து; சார்ந்திருக்கும் ஒருவரைச் சிறந்தவரென, வினைகளைச் செய்ய நியமித்தல்
           முறையன்று.
(அது போல்...)
           தவறுகளை நடுநிலையோடு, தண்டிக்கும் இயல்புடையோரை விடுத்து; வேண்டியவர்
           ஒருவரை நியாயவாதியென, நீதியை வழங்க பதவியளித்தல் சரியல்ல.

0516.  செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
           எய்த உணர்ந்து செயல்

           விழியப்பன் விளக்கம்: வினையின் தன்மையோடு, அதைச் செய்வோரின் திறமையையும்
           ஆராய்ந்து; அவ்வினைக்கு சாதகமான காலத்தையும், உணர்ந்து செயல்படவேண்டும்.
(அது போல்...)
           உறவின் இயல்போடு, உறவில் இணைவோரின் இயல்பையும் உணர்ந்து, அவ்வுறவு
           பலப்படும் காரணிகளையும், ஆராய்ந்து அணுகவேண்டும்.

0517.  இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
           அதனை அவன்கண் விடல்

           விழியப்பன் விளக்கம்: குறிப்பிட்ட வினையை, குறிப்பிட்ட இயல்பால் - குறிப்பிட்ட நபர்,
           செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து; அந்த வினையை, அவர்வசம் ஒப்படைக்க
           வேண்டும்.
(அது போல்...)
           தகுதியான உறவை, தகுதியான திறனால் - தகுதியான சுற்றத்தார், வழிநடத்திச் செல்வர்
           என்பதை உணர்ந்து; அந்த உறவை, அவர்களுடன் இணைத்தல் வேண்டும்.

0518.  வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
           அதற்குரிய னாகச் செயல்

           விழியப்பன் விளக்கம்: ஒரு வினையைச் செய்வதற்குத் தகுதியானவராய், ஒருவரை நியமித்த
           பின்; குறுக்கீடு ஏதுமின்றி, முழு அதிகாரத்தையும் - அவருக்கு அளித்தல் வேண்டும்.
(அது போல்...)
           ஒரு நம்பிக்கையை வளர்ப்பதற்குக் காரணியாய், ஓர்சக்தியைத் தேர்ந்தெடுத்த பின்;
           கவனச்சிதறல் ஏதுமின்றி, முழு சிந்தனையும் - அச்சக்தி மேல் இருக்கவேண்டும்.

0519.  வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாக
           நினைப்பானை நீங்கும் திரு

           விழியப்பன் விளக்கம்: கொடுத்த வினையின்பால், மாறாத முனைப்புடன் இருப்போரின் -
           தொழில் தர்மத்தை; தவறுதலாய் விமர்சிப்போரை விட்டு, பொருளும்/புகழும் நீங்கும்.
(அது போல்...)
           கொண்டிட்ட உறவின்பால், குறையாத அன்புடன் வாழ்வோரின் - உறவுப் பிணைப்பை;
           இழிவாய் சித்தரிப்போரை விட்டு, மகிழ்ச்சியும்/அமைதியும் மறையும்.

0520.  நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
           கோடாமை கோடா துலகு

           விழியப்பன் விளக்கம்: வினைகளைச் செய்ய நியமிக்கப்பட்டவர், நேர்மை தவறாத வரை -
           உலகமும் நேர்மை தவறாது; எனவே, அரசாள்பவரை நாள்தோறும் கூர்ந்து கவனிக்க
           வேண்டும்.
(அது போல்...)
           குடும்பத்தைக் வழிநடத்தும் குடும்பத்தலைவர், வாய்மை மறக்காத வரை - குடும்பமும்
           வாய்மை மறக்காது; ஆகையால், குடும்பத்தலைவரை எப்போதும் ஆழ்ந்து மதிப்பிட
           வேண்டும்.

குறள் எண்: 0520 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 052 - தெரிந்து வினையாடல்; குறள் எண்: 0520}

நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு

விழியப்பன் விளக்கம்: வினைகளைச் செய்ய நியமிக்கப்பட்டவர், நேர்மை தவறாத வரை - உலகமும் நேர்மை தவறாது; எனவே, அரசாள்பவரை நாள்தோறும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
(அது போல்...)
குடும்பத்தைக் வழிநடத்தும் குடும்பத்தலைவர், வாய்மை மறக்காத வரை - குடும்பமும் வாய்மை மறக்காது; ஆகையால், குடும்பத்தலைவரை எப்போதும் ஆழ்ந்து மதிப்பிட வேண்டும்.

திங்கள், ஜனவரி 02, 2017

குறள் எண்: 0519 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 052 - தெரிந்து வினையாடல்; குறள் எண்: 0519}

வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாக
நினைப்பானை நீங்கும் திரு

விழியப்பன் விளக்கம்: கொடுத்த வினையின்பால், மாறாத முனைப்புடன் இருப்போரின் - தொழில் தர்மத்தை; தவறுதலாய் விமர்சிப்போரை விட்டு, பொருளும்/புகழும் நீங்கும்.
(அது போல்...)
கொண்டிட்ட உறவின்பால், குறையாத அன்புடன் வாழ்வோரின் - உறவுப் பிணைப்பை; இழிவாய் சித்தரிப்போரை விட்டு, மகிழ்ச்சியும்/அமைதியும் மறையும்.

ஞாயிறு, ஜனவரி 01, 2017

குறள் எண்: 0518 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 052 - தெரிந்து வினையாடல்; குறள் எண்: 0518}

வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்

விழியப்பன் விளக்கம்: ஒரு வினையைச் செய்வதற்குத் தகுதியானவராய், ஒருவரை நியமித்த பின்; குறுக்கீடு ஏதுமின்றி, முழு அதிகாரத்தையும் - அவருக்கு அளித்தல் வேண்டும்.
(அது போல்...)
ஒரு நம்பிக்கையை வளர்ப்பதற்குக் காரணியாய், ஓர்சக்தியைத் தேர்ந்தெடுத்த பின்; கவனச்சிதறல் ஏதுமின்றி, முழு சிந்தனையும் - அச்சக்தி மேல் இருக்கவேண்டும்.