ஞாயிறு, மே 27, 2012

இதை எவர் (தன்மையாய் கூட) கண்டிப்பது???     சில மாதங்களுக்கு முன் "வட-மொழி" திரைப்படம் ஒன்று, தென்னிந்தியாவில் (தமிழகத்தில்) வாழ்ந்து-மறைந்த ஓர் "(கவர்ச்சி)நடிகை"-யின் வாழ்க்கைப்பதிவு என்ற அடிப்படையில் வெளிவந்திருந்தது. அந்த திரைப்படத்தின் நோக்கமும், அதன் திரைக்கதையும் பெருந்தவறு என்பதையும் தாண்டி - அந்த படம் அமோக வெற்றிப்பெற்றதாய் அறிவிக்கப்பட்டது. இதை தவறான கண்ணோட்டத்தில் வியாபரமாய் ஆக்கியது - கண்டனத்துக்குரியது! என்ற உண்மை இருந்தும் கூட, ஏன் எந்த ஓர் அமைப்பும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று விளங்கவே இல்லை. குறைந்தபட்சம், எந்த ஓர் நடிகர் சங்கமோ அல்லது இயக்குனர் சங்கமோ கூட ஏன் இதை எதிர்க்கவில்லை? ஏன் எந்த ஓர் நடிகையும், இதைப் பற்றி ஓர் விமர்சனம் கூட செய்யவில்லை?? இதை எதிர்க்கவில்லை எனில், அதில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் உண்மை; அது மாதிரி தான் அந்த நடிகையும் இருந்தார் - இன்னும் பல நடிகைகளும் இருக்கின்றனர் என்று "ஒப்புக்கொள்வதாய்" ஆகிவிடாதா??? இதை ஏன் எவரும் (தன்மையாய் கூட) தட்டிக் கேட்கவில்லை என்று யோசிக்க ஆரம்பித்தேன். அதைப் பற்றி எவரும் விமர்சிப்பதை கூட எனக்கு தெரியவில்லை; எனவே, என் மனதை உறுத்திய - இந்த நிகழ்வை பதியவேண்டும் என்று உணர்ந்து தான் இந்த தலையைங்கத்தை எழுதியுள்ளேன். இதைப் படிப்பவர்கள் இத்தலையங்கத்தின் உண்மைப்பொருள் உணர்வார்கள் என்ற நம்பிக்கை மிகுந்துள்ளது. 

       இந்த திரைப்படம் ஆபாசம் இல்லை என்று கிட்டத்திட்ட அனைவரும் ஒப்புக்கொண்டதை என்னால் சீரணிக்க முடியவில்லை. ஆபாசம் என்பது "நிர்வாணத்தில் இல்லை" என்பதை முதலில் அனைவரும் உணரவேண்டும்; அது ஓர் கலைவடிவம் - அதனால் தான் நம் கோவில்களில் பெரும்பான்மையான சிலைகளும் அவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. உண்மையில், ஒருவரின் "பாலியல்" உணர்வை "நிர்வாணம்" தூண்டுவதில்லை; மாறாய் "அரைகுறை உடையும்", "காமம்-மிகு பார்வையும்" தான் அந்த உணர்வை அதிக அளவில் தூண்டும். அதைத் தான் இந்த திரைப்படம் செய்துள்ளது; பார்ப்பவரின் கற்பனையையும் தூண்டியுள்ளது; இந்த உண்மையை பலரும் உணர்ந்ததாய்  எனக்கு தெரியவில்லை. எனக்கு மிகவும் பிடித்த ஒரு எழுத்தாளர் ஓர் படைப்பில் கதாநாயகன், கதாநாயகியின் உடைகளை களைந்து அவளை நிர்வாணமாய் ஆக்கி மல்லாக்க கிடத்தினான் என்று நேரிடையாய் (இன்னும் சில சொற்கள் கொண்டு) எழுதி இருப்பார்; இதை, ஆபாசம் என்று வர்ணித்தவர்கள் பலருண்டு; ஆனால், அதே காலகட்டத்தில், ஓர் எழுத்தாளர் "அவள் வெள்ளை நிற மேல்-சட்டை அணிந்திருந்தாள்; அதன் மேல், BOOM என்ற வார்த்தை எழுதியிருந்தது; இரண்டு "O"க்களும் இருக்கவேண்டிய இடத்தில் இருந்தன;...." என்று தொடர்ந்து வர்ணித்துக்கொண்டே செல்வார். அதை எவரும் எதிர்க்கவில்லை; குறைந்த பட்சம், அது பாலியல் உணர்வை தூண்டுகிறது (குறிப்பாய், இளைஞர்களின் உணர்வுகள்) என்று பலரும் உணரவே இல்லை. அதே போல் தான் இந்த திரைப்படமும் உள்ளது; இது அந்த இயக்குனரின் திறமையாய் கூட கருதலாம்/ வாதிடலாம்; ஆனால், இங்கே கொச்சைப்படுத்தப்பட்டது "மறைந்த ஓர் நடிகை" என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.
     
      அது எப்படி, அந்த நடிகை "பல நபர்களுடன்" உடலுறவு, அதுவும் பணத்திற்காய், கொண்டதாய் அத்தனை நிச்சயமாய் "உடனிருந்து பார்த்தவர்" போன்று அந்த இயக்குனரால் கூற முடிந்தது? அவரிடம் என்ன சாட்சியம் இருக்கக் கூடும்? அப்படி சாட்சிகள் இருப்பின், படத்தில் வரும் அந்த "உயர்ந்த நடிகர்" யார், அவரின் தம்பியாய் வருபவர் யார்?? மற்ற காட்சிகளில் வரும் நபர்கள் யார் என்பதையும் குறிப்பிட வேண்டியது தானே??? ஒரு காட்சியில் ஒருவர் உணர்வைக் கட்டுப்படுத்த முடியாமல் காத்திருப்பாராம்; நடிகை உள்ளே செல்வாராம்; உடனே கதவு சாத்தப்பட்டுவிடுமாம் - என்ன சொல்ல வருகிறார் இவர்? - இது என்ன என்பது எவருக்கும் தெரியாதா?? இது ஆபாசம் இல்லையா???அவருக்கு இது மாதிரி "ஆபாசப்படம்" எடுக்கவேண்டுமெனில் மறைந்த அந்த நடிகையின் பெயர் சொல்லாமால் எடுக்க வேண்டியது தானே? வியாபாரத்திற்காய் ஏன் மறைந்த ஓர் பெண்மணியை கலங்கப்படுத்தவேண்டும்?? இது தான் வியாபார உத்தி; இதை விட "மிக ஆபாசமாய்" சில கதாநாயகிகளே  நடிப்பது அந்த இயக்குனருக்கு வெகு நிச்சயமாய் தெரியும்;  எனவே, இரசிகர்களை ஈர்க்க ஒரு காரணம் தேவைப்பட்டிருக்கும்; அதற்கு, "நடிகையின் கதை" என்ற போர்வை தேவைப்பட்டிருக்கிறது. எப்போதும் நமக்கு "கிசு கிசுவின்" மேல், குறிப்பாய் திரைப்பட நாயகிகளை குறித்து ஓர் ஆர்வம் இருக்கும். எந்த உண்மையும் தெரியாது "அந்த நடிகைக்கு, ஓர் இரவிற்கு இத்தனை இலட்சமாம்" என்று "கிசு கிசுவை" படித்துவிட்டு நாம் பேசுவதுண்டு; உண்மையில், நானும் அந்த மாதிரி பேசியவன் தான் - என்பதை உணர்ந்து இப்போது வெட்கப்படுகிறேன். இதை ஒப்புக்கொள்வதில், எனக்கு எந்த மனக்கசப்பும் இல்லை; ஆனால், இதை உணரும் மனப்பக்குவம் வந்ததற்காய் மகிழ்ச்சி கொள்கிறேன்.
       
        "கற்பு" பற்றி தன் கருத்தை கூறியதற்காய் ஒரு நடிகையை - அந்த கேள்வியை கேட்ட நிருபரைக் குறித்து விமர்சனமேதும் செய்யாது - "கீழ்த்தரமாய்" விமர்சித்த அமைப்புகளை கொண்ட சமுதாயம் தானே இது? வார்த்தையாய் பேசியதற்கே ஒரு நடிகையை அத்தனை எதிர்த்தவர்கள் இன்று "தமிழ் திரைப்பட நடிகை" பற்றி இத்தனை அசிங்கமான காட்சியமைப்புகள் கொண்டு கான்பித்திருந்தும் ஏன் விமர்சிக்க மறந்துவிட்டது? ஏனெனில், இங்கே அனைத்தும் வியாபார நோக்கில் பார்க்கப்படுகிறது; அந்த நடிகையை விமர்சித்ததால், அவர்களுக்கு விளம்பரம் கிடைத்தது. மாறாய், இறந்த ஒரு நடிகைக்கு "பரிந்து பேசுவதால்" அவர்களுக்கு என்ன பலன் கிடைத்து விடப்போகிறது?   அந்த நடிகையின் குடும்ப உறுப்பினர்கள் கூட (தம்பி ஒருவர் இருப்பதாய் அறிந்தேன்) எவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை?? ஒருவேளை, இதில் சம்பந்தப்பட்டிருப்பவர் "கவர்ச்சி நடிகை" என்பதாலா??? இல்லை என்றே தோன்றுகிறது, ஏனெனில் - இந்த படத்தை தொடர்ந்து "இதே கதையம்சம் கொண்டு" கதாநாயகி ஒருவர் இந்த மாதிரி பல நபர்களுடன் உறவாடியதாய் ஓர் திரைப்படம் வந்தது. "கவர்ச்சி நடிகை" பற்றிய படம் தமிழில் மொழி பெயர்த்து வந்த போதும், அது பற்றி எவருக்கும் வருத்தம் இல்லை; ஒரு கதாநாயகி அவ்வாறு செய்ததாய் ஒரு தமிழ்த்திரைப்படம் வந்த போதும் எவருக்கும் வருத்தம் இல்லை. இப்போது, நடிகையை பொது இடங்களில் ஆபாச எண்ணத்தோடு தொடும் ஆண்கள் (நடிகர்கள் உட்பட) அதிகமாகி விட்டதற்கு இந்த "எதிர்ப்பின்மை" கூட காரணமாய் இருக்கலாம்.  இப்போதாவது, சம்பத்தப்பட்டவர்களும், அதிகாரம் கொண்டவர்களும் - இம்மாதிரி விசயங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும்; எனக்கு இதில் சம்மந்தமில்லை எனினும் - எனக்கு எந்த அதிகாரம் இல்லை எனினும், என் "மனசாட்சியை" பதிவு செய்துவிட்டேன்.

           இந்த மாதிரி "ஆபாசப்படங்கள்" வருவதை தவிர்க்கமுடியாது என்பது எனக்கு நன்றாய் தெரியும்; அது என் நோக்கமும் அல்ல. ஆனால், உண்மை தெரியாது - ஓர் நடிகைப் பற்றி தவறான பார்வையை திரைப்படம் போன்ற ஊடகங்கள் செய்யக்கூடாது என்பதே என் தீர்மானம். உண்மை தெரிந்தே இறுப்பினும் - இது மாதிரி ஓர் திரைப்படம் எடுப்பது "தனி நபர் சாடல்" தான்; இதை எக்காரணம் கொண்டும் ஊக்குவிக்கக்கூடாது.  எனவே எல்லா நடிகைகளும்...

மற்றவர்களைப்போல் ஓர் "பெண்ணென்பதை" உணர்வோம்!!!   

    பின்குறிப்பு: சமீபத்தில், நம் அண்டை மாநிலத்தில் இந்த திரைப்படத்தை "மறு பதிப்பு" செய்யப்போவதாய் செய்தி வந்தது. இதுவே தவறு எனும்போது, அந்த இயக்குனர் கீழ்க்காணுமாறு சொல்லி இருக்கிறார்: "அசல்-படத்தில் வந்தததை விட அந்த நடிகையைப் பற்றி அதிக உண்மை செய்தி இருக்குமாம்". மன்னித்துவிடுங்கள்; இதை படித்தவுடன், இந்த இயக்குனர் அந்த நடிகையை இன்னும் நெருக்கமாய் இருந்து பார்த்து இருப்பாரோ என்று கோபமாய் கேள்வி எழுந்தது!!!                

நிர்வாணம்...


நிர்வாணத்தில் - அழகும்,
ஆபாசமும் இல்லை!
ஆயின்...
அரைகுறை ஆடையில் -
காமமும், காமமொத்த
கற்பனைகளும் மிகுதி!!

ஒற்றுமையில்லா தம்பதியர்...ஒற்றுமையில்லா தம்பதியர்...

சமுதாயத்திற்கு பயந்தோ, 
சம்பிரதாயத்திற்கு இசைந்தோ,
வெறுப்புடன் சேர்ந்திருக்காது;
விருப்புடன் பிரிந்திருத்தல் - நலம்!!!

நட்சத்திரமும், (உன்)முகச்சித்திரமும்...நீலவானில் இருக்கும்
நட்சத்திரமும்; என்
மனவானில் இருக்கும்உன்
முகச்சித்திரமும் - எத்தனை
தொலைவாயினும் தன்னிருப்பை
தெரிவிக்கும் தெளிவாய்!!!

சமரசத்தில் சமரசம்...சகலத்திலும் சமரசம்,
செயல் வேண்டுமென்பதாய்;
தெளிவில்லாதும், தேவையில்லாதும்
தோன்றும் விசயத்திற்காய் -
செயல் வேண்டும்;
சமரசத்திலும் சமரசம்!!!

நல்லதும், கெட்டதும்...


நல்லதை பின்பற்ற,
அறிவுரைகள்  மட்டுமல்ல; 
அனுபவங்களும், ஆதாரங்களும் தேவை!
கெட்டதை விட்டொழிய,
ஆதாரங்கள் வேண்டாம்;
அனுபவங்களும், அறிவுரைகளும் போதும்!!

ஞாயிறு, மே 20, 2012

கோடை(விடுமுறை) முகாம்...


      சில நாட்களுக்கு முன் நாளிதழ் ஒன்றில் ஒரு செய்தி படித்தேன். அது! குழந்தைகளுக்கான "கோடை(விடுமுறை) முகாம்" நடத்துபவர்கள் அதிக கட்டணம் வசூலித்துக்கொண்டு சரியான முறையில் பராமரிப்பதில்லை; குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவதில்லை என்பன போன்ற பெற்றோர்கள் தரப்பிலிருந்து கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள். இந்த செய்தியை  படித்ததிலிருந்து, இக்குற்றச்சட்டுகளுக்கான காரணங்களை அலசுவதை விட்டுவிட்டு இந்த "கோடை(விடுமுறை) முகாம்" என்பதே எதற்காய் வந்திருக்கக் கூடும்; அதற்கு மாற்று என்ன என்பதை யோசிக்க ஆரம்பித்தேன். நம்மால் செய்ய இயலாத ஒரு காரியத்தை செய்ய ஒருவரை அணுகுகிறோம்; அதை செய்ய அவர் பணம் வசூலிக்கிறார்! ஆனால், நாம் செய்யும் அனைத்தையும் - அதே விதத்தில் - அவர்களும் நம் குழந்தைகளுக்கு செய்ய வேண்டும் என்று எண்ணுவதில் என்ன நியாயம் இருக்க முடியும்? நமக்கு ஒன்றோ அல்லது இரண்டோ தான் குழந்தைகள்! அவர்கள், பல குழந்தைகளை பார்த்துக்கொள்கின்றனர்; அவர்களைப் பொறுத்தவரை அது இன்னுமொரு குழந்தை; அவ்வளவு தான். அந்த அடிப்படையில் தான் குழந்தைக்கு தேவையான அன்பும், ஆதரவும் கிடைக்கும். எனினும், இந்த முகாம்களை சிறப்பாய் செய்பவர்களும் உள்ளனர்  என்பதை மறுப்பதற்கில்லை; அவர்களுக்கு என் மனம்கனிந்த பாராட்டுக்கள்.

           இந்த மாதிரி முகாம்களை நாம் நாடி செல்ல காரணம் முதலில், பொருளாதாரப் பிரச்சனை என்று படுகிறது. அதாவது, பொருளாதாரப் பிரச்னையை சமாளிக்க தாய்-தந்தை (கணவன்-மனைவி) இருவரும் வேலைக்கு செல்வது தான் முக்கிய காரணம் என்று எண்ணத் தோன்றுகிறது. இருவரும் வேலைக்கு செல்வதால், தங்கள் குழந்தைகளை விடுமுறை காலங்களில் ஒரு குறிப்பிட்ட நேரமாவது பார்த்துக்கொள்ள இது மாதிரி முகாம்களில் சேர்த்துவிடுகின்றனர் என்பதே உண்மை. இது அவர்கள் தொழில் சார்ந்து பார்ப்பினும் அல்லது அவர்கள் சூழல் சார்ந்து பார்ப்பினும் சரியாய் இருப்பதாகவே படுகிறது. ஆனால், இதை நாம் - குழந்தைகள் பார்வையில் இருந்து பார்க்கத் தவறுவதாய்  தோன்றுகிறது! குழந்தைகளுக்கு விடுமுறை என்று கிடைப்பதே அவர்கள் "இளைப்பாரத்தான்"; அந்த தருணத்தில் கூட அவர்களை இந்த மாதி "விடுமுறை முகாம்" களுக்கு அனுப்பியோ அல்லது பள்ளிகள் அடுத்த வகுப்பிற்கான பாடங்களை சொல்லிக் கொடுப்பதோ எங்கனம் நியாயமாகும்? அவர்களுக்கும் தானே, ஒரு இடைவெளி (BREAK) தேவைப்படுகிறது? குழந்தைகளும் ஆரம்பத்தில் சில நாட்கள் இம்மாதிரி முகாம்களில் மகிழ்ச்சியாய் விளையாடக் கூடும்; ஆனால், அதன் பின் அவர்களுக்கு ஒரு வெறுமை தான் மிஞ்சும் என்பதை மறுக்கமுடியாது. ஏனெனில், குழந்தைகள் தொடர்ச்சியாய் அடிக்கடி மாற்றத்தை எதிர்பார்ப்பவர்கள்; அது அவர்களின் இயல்பும் கூட. எனவே தான் ஒரு கட்டத்தில் அது அவர்களுக்கு பிடித்தமில்லாதாய் போகிறது/போகக்கூடும்.

       குழந்தைகள் வீட்டிற்கு வந்ததும், அம்மா! நீங்கள் கொடுத்த பொருட்களை அவர்கள் சாப்பிட்டுவிட்டு எனக்கு கொஞ்சம் தான் கொடுத்தார்கள் என்றால் நீங்கள் எப்படி பதருவீர்கள்? இந்த குறுகிய காலத்தில் அவர்கள் சில தீய பழக்கவழக்கங்களை கற்றுக் கொண்டு  வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?? பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்வதால் தான், "கோடை(விடுமுறை) முகாம்" தேவைப்படுகிறது,  என்பது எனக்கும் புரிகிறது; ஆயின் அதற்கு மாற்று என்ன என்று தான் நான் யோசித்தேன். இப்படியே அவர்கள் பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரிப்படிப்பையும் முடித்து வேலைக்கு சென்ற பின் அவர்களுக்கு எங்கே கிடைக்க போகிறது ஓய்வு??? பிறகு, பெற்றோர்களுக்கும், அவர்களுக்கும் உண்டான பாசப்பிணைப்பு வளர்வது எங்கனம்? குறைந்த பட்சம், அந்த பாசம் நம் குடும்பத்தை சார்ந்தவர்களிடம் இருந்தாவது கிடைக்க வேண்டாமா?? அதைத் தான் "கூட்டுக் குடும்பம்" என்ற ஒன்று செய்து வந்தது. கண்டிப்பாய், கூட்டுக் குடும்பத்தில் அதிக சண்டை-சச்சரவு இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை; ஆனால், அந்த கூட்டுக் குடும்பத்தில் கிடைக்கும்  மகிழ்ச்சி அதை விட பன்மடங்கு பெரியது. குறைந்த பட்சம் விசேட காலங்களிலாவது,  இன்னமும் "கூட்டாய்" இருக்கும் சில குடும்பங்களை நான் "பொறாமையாய்" பார்ப்பதுண்டு. எந்த காரணமும் இல்லாது - சந்தோசத்தை முன்னிட்டு - பல விசேட காலங்களில் அந்த குடும்பத்தோடு நான் சேர்ந்து இருந்ததுண்டு. இன்னமும், கூட அவர்கள் மேல் "பாசம் கலந்த" ஓர் பொறாமை உண்டு.

    சரி, கூட்டுக் குடும்பம் தான் சிதைந்து விட்டது; அந்த உறவுகளிடமாவது - நெருங்கி இல்லாவிட்டாலும் - ஒரு சராசரி உறவைக் கூட நாம் வைத்திருக்கவில்லை. இது தான், மிகப் பெரிய காரணம் நாம் "கோடை(விடுமுறை) முகாம்"களை நாடிச் செல்ல! எனக்கு நன்றாய் நினைவிருக்கிறது; "என் தாய்" என்னை அடித்து விடும் போதெல்லாம், அடுத்த கணம் நான் இருப்பது என் "அப்பத்தா"வின் மடியில். எங்கள் வீட்டின் கொல்லைப்புறம் கடந்தால், என் அப்பத்தா வீடு. எத்தனயோ உணவு வகைகளை நான் சுவைத்திருப்பினும், ஏன், நானே பல உணவு வகைகளை சமைப்பினும் கூட, "பானையில்" சமைத்த சாம்பாரை சில நாட்கள் கழித்து சுண்டக் காய்ச்சிய, என் அப்பத்தாவின் "பழங்குழம்பிற்கு" இனையானதை நான் இதுவரை சுவைத்ததில்லை. என் அப்பத்தா மறைந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும், இதை நான் உணர்ந்து சொல்கிறேன் என்றால், அப்பத்தாவுடனான என்னுடைய உறவு எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்!!! என் அப்பத்தா, என் அம்மாவை சரியாக நடத்தவில்லை; என் அம்மா மிகுந்த சிரமம் அடைந்திருக்கிறார் என்பதை என் ஊர்க்காரர்கள் நிறைய பேர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனாலும் கூட என் அப்பத்தாவை என்னுடன் மட்டுமே உறவுப்படுத்தி பார்க்க எண்ணுகிறேன்; அந்த நிகழ்வுகள் நடக்கும் போது என் அப்பத்தாவிற்கு எடுத்துரைக்க காலம் எனக்கு அனுமதி கொடுக்கவில்லை. ஆனால், அவர்கள் என்னுடன் உண்மையாய் இருந்தார்கள் என்பதில் எந்த சந்தேகமும் எனக்கு இல்லை; இது தான் உறவின் வலிமை. 

       என் அம்மத்தாவின் வீடு என்பது "கிலோ மீட்டர்" தள்ளி இருக்கிறது; எங்கள் ஊரே ஓர் கிராமம் எனினும், என் அம்மத்தாவின் கிராமம் அதை விட சிறிய கிராமம். என்பது "கிலோ மீட்டார்" என்பது "எண்பது , தொன்னூறுகளில்" மிகப்பெரிய தூரம்; அதுவும் மூன்று பேருந்துகள் மாறிச் செல்லவேணும் எனில்???. இடைப்பட்ட ஓர் இடத்திலிருந்து அந்த ஊருக்கு செல்ல ஒரே ஒரு "பேருந்து" தான் அதுவும் ஒரு நாளைக்கு மூன்றோ அல்லது நான்கு முறையோ தான் செல்லும்; அதுவும் பல நாட்களில் பல காரணங்களுக்காக கால தாமதம் ஆகும். இதை எல்லாம், பொருட்படுத்தாது அங்கே விடுமுறைக்காய் செல்வேன்(வோம்). என் அம்மா, என் அம்மத்தாவின் வீட்டிற்கு மட்டுமல்ல; அந்த ஊருக்கே மிகுந்த "செல்லமான பெண்மணி"; அந்த காலகட்டத்தில், அத்தனை தூரம் கடந்து திருமணம் செய்து கொண்டு செல்வது சாதாரணம் அல்ல, என்பதால் கூட இது இருக்கலாம். எனவே, எங்களுக்கு (அதுவும், குறிப்பாய் எனக்கு) கிடைக்கும் வரவேப்பிற்கு அளவே இல்லை. உண்மையில், அது மாதிரி ஓர் மகிழ்ச்சி தரும் பயணத்தை இனி என் வாழ்நாளில் செய்வேனா என்பது எனக்கு தெரியவில்லை; அது தான் குழந்தைப் பருவத்தின் மகிமை. இது தான்; இந்த தருணமும், என் அப்பத்தாவின் பழங்குழம்புடன் கூடிய பாசமும் தான் என் குழந்தை பருவத்தில், குறிப்பாய் என் விடுமுறை காலத்தில் எனக்கு கிடைத்த அறிய விசயம் . இதை, இப்போதிருக்கும் சந்ததி முழுதுமாய் இழந்து கொண்டிருப்பதைத் தான் பெருகி வரும் இந்த "கோடை(விடுமுறை) முகாம்"கள் உணர்த்துவதாய் எனக்கு படுகிறது. 

        இது இரண்டு காரணங்களுக்காய் இழக்கப்படுவதாய் எனக்கு படுகிறது. 1. உறவுகள் மேல் நாம் கொண்டிருக்கும் வெறுப்பின் காரணமாய், நம் பிள்ளைகளை உறவுகளிடம் இருந்து பிரித்து வைத்தல்; 2. விடுமுறை காலத்தில் கூட நம் குழந்தைகள், ஏதேனும் ஒன்றை கற்று பிற்காலத்தில் அதிகம் பொருளீட்ட வேண்டும் என்று அவர்களை "பணம் சம்பாதிக்கும் இயந்திரமாய்" பார்க்கும் எண்ணத்தினால். காரணம், எதுவாயினும் - அவர்களின் சுதந்திரத்தை, அவர்களின் சந்தோசத்தை - நாம் அழிக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை; பெற்றோர்களே ஆனாலும், கண்டிப்பாய் நமக்கு அந்த அதிகாரம் இல்லை. மேலும், இந்த "அனுபவத்தை" பின் வாழ்நாளில் எத்தனை முயன்றாலும் (எத்தனை  செல்வமிருப்பினும்) ஒருபோதும் அடைய முடியாது. எனவே, நம் விருப்பு வெறுப்புகளை மறந்து நம் செல்வங்களை நம் உறவுகளிடம் உறவாட, குறைந்தது இந்த கோடை விடுமுறையையாவது - ஓர் சந்தர்ப்பமாய் உணர்வோம். என்னை மதிக்கவில்லை, அதனால் என் குழந்தைகளை மதிக்க மாட்டார்கள்; அவர்களை கவனித்து கொள்ள மாட்டார்கள் என்ற தேவை இல்லாத அச்சம் வேண்டாம்!!! "உண்மையில், என் தாயை போல் வேறெவரும் மருதாயின் கொடுமைகளை" சந்திருக்க மாட்டார்கள் என்று நான் முற்றிலும் நம்புகிறேன். ஆனால், என் அப்பத்தா ஒரு போதும் என்னை அந்த கண்ணோட்டத்தில் நடத்தியதில்லை! "கோடை(விடுமுறை) முகாம்" நடத்தும் எவரிடமோ செய்யும் சமரசத்தை நம் உறவுகளிடம் காண்பிப்போம்!!! எனவே, நம் குழந்தைகள் அவர்களின் விடுமுறையை கழிக்கட்டும்...

அப்பத்தா, அம்மத்தா முதலான எல்லா உறவுகளுடன்!!!

நிழலும் உள்ளமும்...வெளிச்சம் விழும்
விதத்திற்கேற்ப, உடலை
தொடரும் நிழல்போல்;
தொல்லைகள் எழும்
சூழலுக்கேற்ப, உறவை 
சுற்றவேண்டும் (நல்)உள்ளமும்!!!

உறவின் வலிமை...இடைவெளி அதிகமாயின்
உறவு வலுக்கும்;
உண்மைதான்...; ஆயின்
தம்பதியர் உறவு???
இடைவெளியின் காலத்தையும்
இணைத்தே நிர்ணயிக்கும்!!!

பொய்யில் உன்னதமானதோ???வருத்தப்படாது (தெரிந்தே)தவறும்
"வாய்மை"யை விட
வருந்தி மன்னிப்புகோரும்
"பொய்" உன்னதமானதோ???

மொழி...


உண்மையை, உண்மையாய்...
உயிர்ப்புடன் உரையாடவும்;
உணர்வுகளை பரிமாறவும்;
உ(ள்ள)ங்களை வெளிப்படுத்தவும்;
மொத்தத்தில், எம்மொழியாயினும்!
மொழியென்பது - எவர்க்கும்;  
தொடர்பு கருவியாயிருக்கட்டும்!!
தொல்லையின் காரமாய்வேண்டாம்!!!

வேண்டாதவர் கோழியாயின்???கோழி மிதித்து 
குஞ்சு சாகாது;
பிறகேன்... தெரியாமல்(கூட)
வேண்டாதவர் "கோழி"
மிதித்தால் மட்டும்
வருகிறது கடுஞ்சினம்???

திங்கள், மே 14, 2012

தமிழ் உணர்வு...        சென்ற வாரம் வேலை நிமித்தமாய் "இலண்டன்" மாநகரம் சென்றிருந்தேன். வேலை முடித்து அந்த வார இறுதியில், "சௌத்தாம்ப்டன்" நகரில் இருக்கும் என் நண்பனும், உறவுக்காரனும் (அத்தை மகன்) ஆன "மச்சானை" சந்திக்க சென்றிருந்தேன்; "மச்சான்" என்பது சரியான எழுத்து-நடை தமிழ்ச் சொல்லா என்று தெரியவில்லை! ஆனால், நாங்கள் அவ்வாறே அழைத்துக்கொள்வோம்!! அது எங்களுக்கு பிடித்தும் இருப்பதால் அவ்வாறே குறிப்பிட விரும்புகிறேன். அங்கே தமிழ் உணர்வு சார்ந்து நான் கொண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வது தான் இந்த தலையங்கத்தின் நோக்கம். பெரும்பாலும், வெளி நாட்டில் வசிப்பவர்கள் தங்களின் குழந்தைக்கு தமிழ் பேச தெரியாது அல்லது மற்றவர்களுடன் உரையாடும் அளவுக்கு தெரியாது! அந்த குழந்தைகள் அவர்களின் (ஆங்கிலம் தெரியாத) தாத்தாக்கள் மற்றும் பாட்டிகளிடம் உரையாடுவதே இல்லை! அல்லது உரையாடுவது மிகவும் சிரமம்!! என்று கூறியே கேட்டிருக்கிறேன். என்னதான் தாத்தாக்கள், பாட்டிகள் தங்கள் "பெயரக்"குழந்தைகளிடம் ஆங்கிலத்தில் உரையாடிக்கொன்டாலும், "பெயரா" அல்லது "பெயர்த்தி" என்று அன்புடன் அழைக்க ஏக்கம் (ஒரு கணமாவது) எழும் தானே? ஆனால், என்னை "புகைவண்டி" நிலையத்தில் பார்த்தவுடன் "மாமா" என்று அன்புடன் அழைத்ததில் துவங்கி என் மச்சான் மகளின் தமிழும், அவளின் உச்சரிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. இந்த தமிழறிவு எப்படி சாத்தியம் என்று வியந்தேன்.

      அடுத்த நாள் அதற்கு விடை கிடைத்தது! அந்த பெண் தான் பயிலும் பள்ளியில் தமிழ் பாடம் இல்லை எனினும், தனியாய் "தமிழ் பாடம்" பயில்வதை அறிந்தேன். அவள் தனது தமிழ் புத்தகத்தையும் என்னிடம் காண்பித்ததாள்! அதிசயத்து நின்றேன்!! அவள் இண்டாம் நிலை தமிழ் பயின்று கொண்டிருக்கிறாள்!!! மொத்தம் பன்னிரண்டு நிலைகள் இருக்கின்றனவாம். அவள் பயிலும் சில பாடங்கள், தமிழகத்தில் பயிலும் மாணாக்கர்கள் கூட பயில்கின்றனரா என்பது எனக்கு சரியாய் தெரியவில்லை! அத்தனை அருமையான பாடத் திட்டங்கள்; உண்மையில் எனக்கே அதில் நிறைய விசயங்கள் தெரியவில்லை/ புரியவில்லை! அவளின் உச்சரிப்பு அதிக தமிழுணர்வு கொண்ட வேறு நாட்டில் வாழும் தமிழர்களின் உச்சரிப்பு சார்ந்து இருக்கிறது; எவரென்று பிற்பாடு விளக்கி உள்ளேன். அவள் பேசும்போது, அந்த உச்சரிப்பு மிகவும் வசீகரமாய் இருக்கிறது; என் மச்சானின் தமிழ் உச்சரிப்பும் கிட்டத்திட்ட அவ்வாறே மாறிவிட்டதையும் உணர்ந்தேன்; சகோதரி (என் மச்சானின் மனைவி) கூட அவ்வாறே பேசி பழகுவதை அறிந்தேன். சர்வதேச அளவில் இம்மாதிரி வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் பிள்ளைகளுக்கு தமிழ் பயிற்றுவிப்பதற்காகவே ஓர் அமைப்பு இருப்பதாயும், இதை பல்வேறு நாடுகளில் நடைமுறைப் படுத்திக்கொண்டிருப்பதாயும் என் மச்சான் தெரிவித்தான். இவ்வாறு நடைமுறையில் இருப்பது தெரியாது என் போல் பலர் இருப்பர் - அவர்களிடம் இச்செய்தியை கொண்டு சேர்ப்பதே என் நோக்கம். இது ஒரு சிலரையாவது சென்று சேர்ந்தால் அதுவே எனக்கு போதுமானது.

    முன்பே குறிப்பிட்டது போல் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு "தமிழ் தெரியாது" என்று சொல்வதற்கு காரணம், இம்மாதிரி வாய்ப்பு இல்லாதது கூட காரணமாய் இருக்கலாம்; ஆனால், அவர்களுக்கு உண்மையில் தமிழ் உணர்வு இருப்பின் இந்த வசதியை அவர்கள் இருக்கும் இடத்திற்கு கொண்டு  வர செய்ய முடியும் என்றே தோன்றுகிறது. அந்த அமைப்பை தொடர்பு கொண்டாலே போதுமானது; அவர்கள் அதற்கு வழிமுறை சொல்வார்கள்; ஆனால், அதற்கு முதலில் "தமிழுணர்வு" வேண்டும். தமிழ் உணர்வு உள்ளதால் தான், என் மச்சானும் மற்ற தமிழ் குடும்பங்களும் சேர்ந்து அதைத் தான் "சௌத்தாம்ப்டன்" நகரில் செய்கிறார்கள். இது மாதிரி அனைவரும் செய்ய முன்வரலாம்; கண்டிப்பாய் ஒவ்வொரு தமிழ்க்குடும்பத்திற்கும் அருகே பத்து குடும்பங்களாவது எல்லா நாட்டிலும் இருக்கும். அவர்கள் ஒன்று சேர்ந்து இதை நடைமுறைப்படுத்த முயலலாம். என் மச்சான், அவனின் குழந்தைகளுக்கு அழகிய தமிழ் பெயர்கள் இட்டுள்ளான்; உண்மையில் அவனின் தமிழுணர்வு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. நம்மில் பலர், பெயரில் என்ன இருக்கிறது? என்று எண்ணுவதாலாயே தான் ஆங்கிலமும், வேற்று மொழியும் கலந்து பெயர் வைக்கிறோம். "தொண்டை" தாண்டியதும் சுவை தெரியாத உணவில் கூட அதிக கவனம் செலுத்துகிறோம்; ஆனால், நம் வாழ்நாளையும் தாண்டி நிலைக்கும் "பெயரில்" உள்ள மகிமையை தான் என் வலைப்பதிவின் முதல் தலையங்கத்தில் என் மகளின் பெயர் பிறந்த காரணத்தைக் கொண்டு  விளக்கி இருந்தேன். 

         இந்த தமிழுனர்வை கண்டு வியந்த பின், அவர்கள் இரண்டு வெள்ளிக்கிழமைகளுக்கு ஓர் முறை பல தமிழ் குடும்பங்கள் ஒன்று கூடி தமிழ்க்கடவுள் "முருகனை" வழிபடும் நிகழ்ச்சியை காணும் வாய்ப்பு கிடைத்தது. முதலில், என்ன இது ஓர் "புகைப்படத்தை" மட்டும் வைத்துக் கொண்டு வழிபடுகிறார்களே என்ற எண்ணம் எழுந்தது; பின், அதை தானே நான் என்னுடைய வீட்டில் தினமும் செய்கிறேன் - அதில் என்ன தவறு இருக்கிறது என்ற "நியாயமும்" பிறந்தது. அந்த வழிபாட்டு தளத்தை அவர்கள் "ஹாம்ப்ஷையர் கந்தன்" என்று பெயரிட்டு அழைக்கின்றனர். அவர்கள் ஒன்றாய் கூடி தமிழில் முருகனை துதித்து பாடுகிறார்கள்; அதில், தமிழ் பயிலும் மேற்குறிப்பிட்ட குழந்தைகளும் அடக்கம் - அவர்களும் ஒழுக்கமாய் அதை செய்கிறார்கள். வழிபாடு முடிந்ததும் குழந்தைகள் சமீபத்தில் கற்ற திருக்குறளும், பழமொழிகளும் சொல்கின்றனர்; தெளிவாயும் சொல்கின்றனர். என் மகள், தமிழ் பேசும் சூழலில் இருப்பது மட்டுமல்லாது, தமிழ்க் குடும்பத்தில் இருந்து வந்த என்னவள் சொல்லிக்கொடுத்து, திருக்குறள் சொல்வதை அத்தனை ஆனந்தத்துடன் என் சமீபத்திய தலையங்கத்துடன் கூட தொடர்பு படுத்தி எழுதி இருந்தேன். ஆனால், இந்த குழந்தைகள் முற்றிலும் மாறுபட்ட சூழலில் இருந்து இத்தனை கற்பதை எண்ணி மிகவும் மனம் மகிழ்ந்தேன். என்னதான் என் மகள் மிகச்சிறிய வயதிலேயே தெளிவாய் திருக்குறள் ஒப்பிப்பினும் - உண்மையில், இந்த குழந்தைகளின் சூழல் சார்ந்து உணர்ந்து பார்த்தால் - என் மகளின் செயல், கண்டிப்பாய் இதை விட பெரிது இல்லை!!!

   என்னுடைய மேற்கூறிய அனுபவத்தில் கண்ட குடும்பங்களில் பெரும்பான்மையோனோர் "இலங்கைத்"தமிழர்கள். அவர்கள் உச்சரிப்பின் தாக்கமும்/ சாயலும் தான் என் மாச்சானின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தது. அவர்களின் இந்த அசாத்திய முயற்சியும், தமிழையும் தமிழ்ப் பாரம்பரியத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற முனைவும் என்னை மிகவும் கவர்ந்தது. அவர்களின் செயலை பாராட்டிய அதே வேலையில், அவர்களுக்கு மாத்திரம் ஏன் இந்த எண்ணம் மேலோங்கி உள்ளது என்றும் யோசிக்க ஆரம்பித்தேன். ஒருவேளை அவர்கள் தங்கள் உயிர்களையும், உடமைகளையும் இழந்த வேதனையில், வேகத்தில் இருக்கக்கூடும் என்று முதலில் எண்ணினேன்; பின்னர், நான் அவ்வாறு ஒரு முடிவுக்கு வரின், அது அவர்களின் "தமிழ் உணர்வை" சற்று குறைத்து மதிப்பிடுவதாய் ஆகிவிடும் என்று உணர்ந்தேன். நான் கூட உறவு முறையை அவர்கள் அழைக்கும் விதம் பற்றி (அவர்களின் மொழி உணர்விற்கு ஓர் உதாரணமாய்) முன்னொரு தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். இந்திய தமிழர்களிடம் இந்த உணர்வு பலமாய் இல்லாததாய் படுகிறது. இல்லை எனில், என் குழந்தைக்கு  "தமிழ் தெரியாது" என்பதை பலர் "கௌரவமாய்" எண்ணி கூறுமாட்டார்கள். எந்த ஒரு "இலங்கைத் தமிழனும்" - எந்த சூழலில் இருப்பினும் - தன் குழந்தைக்கு தமிழ் தெரியாது என்று கூறுவதாய் எனக்கு தெரியவில்லை. முடிவில், என்னுடைய "சௌத்தாம்ப்டன்" பயணத்தில் இருந்து தமிழ் பயிலவோ, தமிழ் பண்பாட்டை பின்பற்றவோ நமக்கு வேண்டியது, கண்டிப்பாய்...

தமிழ் உணர்வேயின்றி, வேறில்லை!!!  

பின்குறிப்பு: "ஹாம்ப்ஷையர் கந்தன்" வழிபாட்டு முடிவில், குழந்தைகள் சொல்லும் திருக்குறள் மற்றும் பழமொழிகளில் ஒரு சிறு மாற்றம் வேண்டும் என்று தோன்றியது. உடனே, அவர்களிடம் சொல்ல முனைந்து, பின் அவர்கள் அத்தனை பரிச்சயம் இல்லாததால் என் மச்சானிடம் மட்டும் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். அந்த மாற்றம் இவை தான்: 1. திருக்குறள் சொல்லிய பின் குழந்தைகள் - அதன் பொருளையும் சொல்லி பழங்கவேண்டும்; முடிந்தால், அப்பொருளை நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிட்டு சொல்லுதல் வேண்டும்; 2. "ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது" போன்ற பழமொழிகளை கற்றுத்தருவதை (அன்று இந்த பழமொழியை குழந்தைகள் கூறினர்) நிறுத்தவேண்டும்; அது சரியான பழமொழியே அல்ல என்பதை என் புதுக்கவிதை ஒன்றில் கூறியிருக்கிறேன் - இது போன்றவை குழந்தைகளுக்கு எதிர்மறையான எண்ணத்தை உருவாக்கும் என்பது என் திண்ணமான எண்ணம்.                                                
                              

தாய்மொழியின் சிறப்பு...கற்பது பெரிதாயினும்,
கடலளவே ஆயினும்
கற்பனை நிகழ்வதென்னவோ
காலம்வெல்லும் "தாய்மொழியிலே"!
கற்பது குறைவாயினும்,
கடுகளவே ஆயினும்!!
குறைவேதும் இல்லாது
கற்போம் தாய்மொழியை(யும்)!!!
சிவமும் அன்பும்...சிவம் அன்பா?
அன்பு சிவமா??
என்பதிருக்கட்டும் - இப்போது
"அன்பே இல்லை"
என்பதே நிதர்சனம்!
பின்னெங்கே உருவாவது
இரண்டிற்குள் சமரசம்???

மக்கள் வளர்ச்சி....மக்கள் வளர்ந்து...
"மா"க்கள் ஆவதும்
"அம்மா"க்கள் ஆவதும்
"பிரம்மா"க்கள் ஆவதும்
(மாதா+பிதா+குரு)க்கள் வசமுள்ளது!!!

மரணமும், நோயும்...மரணமும், நோயும்...
மனிதரெவரையும் விட்டதில்லை - மாறாய்
மனிதத்தை இதுவரை தொட்டதில்லை!
மறைவது மனிதன் மட்டுமே!!
மனிதம் மறைவதில்லை - மரணம்
மறந்து மனிதம் வளர்ப்போம்!!!

அரசியல் கட்சி...நாட்டிற்கு, மாநிலத்திற்கு
என்றது மாறி!
சாதிக்கு, வீதிக்கு
என்றதும் மாறி!!
குடும்பத்திற்கு, பிள்ளைகளுக்கு
என்றானதும் தான்;
அரசியல் கட்சி, 
ஆனது (பொருட்)காட்சி!!!

ஞாயிறு, மே 06, 2012

கல்வி என்பது என்ன???...
     மீண்டும் நாளிதழில் வந்த செய்தியின் அடிப்படையில் எழுதப்பட்ட இன்னுமொரு தலையங்கம்! கல்வி என்பது வெறும் மனனம் செய்து ஒப்பித்தல் அல்ல - அதிக மதிப்பெண் (மட்டுமே) வாங்குவது அல்ல; மாறாய், படிப்பதை தெளிவாய் புரிந்து நடைமுறை அறிவை (Practical Knowledge) வளர்க்க உதவியாய் இருக்கவேண்டும். மதிப்பெண் வாங்குவதை மட்டுமே உயர்வாய் பள்ளிகளும், பெற்றோர்களும், ஊடகங்களும் எண்ணுவதையும், பறைசாற்றுவதையும் மாற்றிக்கொள்ளவேண்டும் என்று என்னுடைய முந்தைய தலையங்கத்தில் எழுதி இருந்தேன். அதைப்பற்றிய ஓர் திரைப்படம் கூட சமீபத்தில் வெளிவந்தது; நல்லவேலையாய் என்னுடைய தலையங்கத்தை நான் முன்பே வெளியிட்டிருந்தேன்;  இல்லை எனில், என்னுடைய கருத்துகளும், எண்ணங்களும் அதிகம் கவனிக்கப்படாது போயிருக்கக்கூடும். "திரைப்படம்" எனும் ஊடகத்தின் வலிமை அது. அதன் பின்னர், இந்த கருத்து சார்ந்து உரையாடும் போது என்னவளிடம் கூட அத்திரைப்படம் பற்றி குறிப்பிட்டு - கல்வி குறித்து ஒரு சமுதாய மாற்றமும் விழிப்பும் வரத் துவங்கி இருக்கிறது என்று வாதிட்டேன். எனக்கு அவ்வாறு தான் தோன்றுகிறது; எல்லா புரட்சிகளும், மாற்றங்களும் எல்லை தாண்டும் போது தான் (வேறு வழி இல்லாமல் கூட) தோன்றுகிறது. கல்வி மீதான எண்ணமும் எல்லையை அடைந்து விட்டது என்பதை தான் சென்ற வாரம் நான் படித்த செய்தி விளக்கியது; உண்மையில் கல்வி மீதான இத்தகைய தவறான அணுகுமுறை என்னை (மட்டுமல்ல; எல்லோரையும்) கலவரப்படுத்துகிறது.

          நாளிதழில் வந்த செய்தி இதுதான்; பொதுத் தேர்வில் மாணவர்கள் அனைவரும் "நூறு விழுக்காடு" தேர்ச்சி அடையவேண்டும் என்பதற்காய் ஓர் பள்ளியின் நிர்வாகமே ஆசிரியர்கள் உதவியுடன் (மாறாய் ஆசிரியர்களை வற்புறுத்தி என்று இருக்கவேண்டும்) மாணவர்களுக்கு "விடைத்தாள்" நகல் கொடுக்கும் போது, கல்வித்துறையை சார்ந்த கண்காணிப்பாளர்கள் அதை கையும் களவுமாய் பிடித்து தடுத்திருக்கின்றனர். மேலும், அந்த பள்ளியின் உரிமையை இரத்து செய்து பள்ளியை மூடவும் கல்வித்துறைக்கு பரிந்துரை செய்துள்ளனர். நான், முன்பே என்னுடைய தலையங்கத்தில் மனனம் செய்து, வெறுமனே அதிக மதிப்பெண்கள் எடுப்பதால் எந்த பயனும் இல்லை என்பதை தெளிவாய் எழுதி இருந்தேன். ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் மதிப்பெண் எடுக்கும் ஓர் மாணவியோ/ மாணவனோ அடுத்ததாய் "என்ன சாதித்தனர்" என்று வினவி இருந்தேன்!!! மதிப்பெண் முக்கியம் "இல்லை" என்று கூறவில்லை; அது தேர்ச்சி பெறுவதற்கான ஓர் அளவுகோலாய், வரைமுறையாய் இருக்கட்டும்; பள்ளி தாண்டிய பின் கல்லூரிகளில் (குறிப்பாய், தொழில்முறை படிப்பு சார்ந்தவைகளில்) மாணவர் பட்டியலை கொடுப்பதற்கு இது உதவுகிறது என்ற வாதத்தில் எல்லாம் எந்த உண்மையும் இல்லை. எனவே, இந்த மதிப்பெண் என்ற முறை மாறவேண்டும்; பின் மதிப்பெண் மீதானா பெற்றோர், சமுதாயம் மற்றும் பள்ளியின் பார்வை கண்டிப்பாய் மாற வேண்டும். இது சார்ந்த என் பார்வையை தான் என்னுடைய மேற்குறிப்பிட்ட தலையங்கத்தில் எழுதி இருந்தேன்.

           இந்த மதிப்பெண் குறித்தான, அது சார்ந்த தேர்ச்சி என்பது குறித்துமான ஓர் கவலையில் "பள்ளி" நிர்வாகம் எந்த எல்லைக்கு சென்றிருக்கிறது என்று உணர்ந்து பாருங்கள். இது குறித்தான குற்றச்சாட்டுகள் நெடுங்காலமாகவே வந்து கொண்டிருக்கிறது; ஆனால், எந்த ஒரு பள்ளியும் இவ்வாறு கையும் களவுமாய் பிடிபட்டதில்லை என்பதே கசப்பான உண்மை; இது மாதிரி இன்னமும் பிடிபடாத பள்ளிகள் மேலும் நிறைய உள்ளன என்பது இன்னமும் கசப்பான உண்மை. சரி, நாம் நம் கலந்தாய்விற்கு வருவோம். ஓர் மாணவனின் திறமையை சோதித்து அடுத்த நிலைக்கு தேர்ச்சி பெற்றவனா என்பதை அறிய தான் "தேர்வு" என்பதே உள்ளது. அந்த திறமையை வளர்க்கத் தான் பள்ளிகள் உள்ளன; ஒவ்வொரு மாணவனும் தேர்ச்சி பெற உதவத்தான் (கல்வி கற்றுவித்து!!! தேர்வில், விடைத்தாள் கொடுத்து அல்ல) பள்ளிகள் உள்ளன. அத்தகைய பள்ளிகள், இந்த மாதிரியான இழிசெயல்கள் செய்ய என்ன காரணம்? அவர்கள், பெற்றோர்களை ஒரு குறையாய் கூறுவர்; அதில் உண்மையும் இருக்கத்தான் செய்கிறது. பெரும்பான்மையான கல்விக்கூடங்கள் "வியாபாரக்கூடமாய்" மாறிவிட்ட இந்த தருணத்தில், சிறந்த பள்ளியில் சேர்ந்தால் தான் என் "மக்கள்" வெற்றி பெறுவர் - நல்ல மதிப்பெண் பெறுவர் என்ற பெற்றோர் எண்ணத்தில் ஒரு-பகுதி காரணம் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. மதிப்பெண் குறித்த அவர்களின் சிந்தனை மற்றுமல்ல; எல்லோரின் சிந்தனையும் மாறினால் தான் "கல்வி சார்ந்த' இது மாதிரியான பல பிரச்சனைகளை அடியோடு களைய முடியும். 

       இந்த மாதிரி தவறான முறையில், ஒரு மாணவனை தேர்ச்சி பெற வைப்பதும் அல்லது எதையும் புரிந்து கொள்ளாது "மனனம்" செய்து படித்து அதிக மதிப்பெண் எடுப்பதும், ஒரு மாணவனை சிறந்தவனாய் ஆக்கிட எந்த வகையிலும் உதவாது. "வல்லரசு" என்ற கனவை அடைய, ஓர் நாடு அதிக அளவில் "அணு ஆயுதங்களையும்", "பண ஆலைகளையும்" கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை; அது நிரந்தரமும் இல்லை. மாறாய், ஒவ்வொரு மாணவனுக்கும் சரியான கல்வி கொடுப்பதில் உள்ளது; சரியான கல்வி என்பது "புரிதலை" வரவைப்பது; படிப்பதை புரிந்து கொள்ளுதல் மட்டுமல்ல - வாழ்க்கையை புரிந்து கொள்வதும் அவசியம். அதாவது, "மனிதத்தை" வளர்ப்பது மிகவும் அவசியம்; இது கண்டிப்பாய் சரியான கல்வி முறையால் தான் கொண்டு வர முடியும்! இது தான் நம் மொழியில் உள்ள "அம்மா இங்கே வா வா" போன்ற பாடல்களில் உள்ளது. ஆனால், நாம் "Jack and Jill went up to the hill" என்பதை அதிகம் படிப்பதை எண்ணி தான் பெருமைப்பட்டுக்கொள்கிறோம். "Jack and Jill" எதற்கு "தண்ணீர் எடுக்க" மலைக்கு சென்றார்கள் என்பதை அவர்கள் யோசித்து,  கேள்வி கேட்கும் போதே  "அப்படி எல்லாம் கேட்கக்கூடாது" என்று அதட்டி அடக்கி விடுகிறோம்; ஏனெனில், நமக்கு அதற்கு விடை தெரியாது! நாமும் அதை அப்படியே படித்து "சிந்தனையை இழந்து" வளர்ந்தவர்கள் தானே!! நாம் முன்பே அது பற்றி சிந்தித்திருந்தால் தானே, அந்த சிந்தனை எழும் ஓர் "இளங்குருத்தை" நாம் அறிந்து கொள்ளள முடியும்?. சிறார்களின் கற்பனை சக்தி அடியோடு அழிக்கப்படுதலின் ஆரம்பம் அங்கே தான் துவங்குகிறது!

     நம்முடைய புரிதலில் உள்ள தவறினாலும் "நூறு விழுக்காடு" எனும் பள்ளியை நாம் அனுகவதாலும், இந்த மாதிரி பள்ளிகள் தவறு செய்ய நாமும் ஓரளவிற்கு துணை செல்கிறோம் என்பதும் உண்மை. ஆனால், பள்ளிகளின் பங்கு இதில் பெரும்பகுதி உள்ளது; பெரும்பணம் செலவழித்து பல பள்ளிகள் இந்த சேவையை... இல்லையில்லை! அவர்கள் மொழியில் இலாபமுள்ள வியாபரமாய் செய்கிறீர்கள்!! ஆனால், அதற்கு பிரதி பலனாய் கல்வி கொடுக்கவேண்டும் என்பது உங்கள் கடமை அல்லவா?? அதை நியாயமாய் செய்து தானே, நீங்கள் இந்த "நூறு விழுக்காட்டை" பெற வேண்டும்??? ஏற்கனவே, "வெறும் மதிப்பெண்" என்ற அடிப்படையில் புரியாது படிப்பதால் "மாணவச்செல்வங்கள்" இழப்பதையும், அதனால் ஓர் நாட்டுக்கு ஏற்படும் இழைப்பையும் மேலே கோடிட்டு காட்டியுள்ளேன். இதிலே, நீங்கள் செய்யும் இது போன்ற தவறுகளால் "விளைவு இன்னமும் விபரீதம்" ஆகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு மாணவனை உங்களால், உண்மையான வழியில், தேர்ச்சி பெறவைக்க முடியவில்லை என்றால், நீங்கள் தகுதியானவர் இல்லை என்பதை உணரவேண்டும்!  ஏனோ, என் மகள் அவளின் செல்ல-மொழியில் இரண்டு நாட்கள் முன் - மீண்டும் ஓர் முறை - சொன்ன "கற்க கசடற கற்பவை..." என்ற வள்ளுவப்பெருந்தகையின் குறள் நினைவுக்கு வருகிறது. கல்வி என்பது உங்களுக்கு (பள்ளிகளுக்கு) வேண்டுமானால் வியாபராமாய் இருக்கலாம். ஒரு மாணவனுக்கு கல்விதான் சகலமும். எனவே, கல்வி என்பது...

மதிப்பெண்ணும், தேர்ச்சியும் மட்டுமல்ல!!! 

பின்குறிப்பு: இத்தலையங்கம் முடிக்கும் முன், கல்வித்துறை அதிகரி ஒருவர் சொன்னதாய் நாளிதழில் வந்த செய்தியை குறிப்பிட விரும்புகிறேன். வழக்கமாய், அதிகாரிகள் பள்ளியின் அங்கீகாரத்தை இரத்து செய்வதாய் சொல்வார்களாம்; ஆனால், செய்ய மாட்டார்களாம். ஆனால், இந்த முறை கண்டிப்பாய் செய்து விடுவார்களாம். இது, என்ன விளக்கம் அல்லது நியாயம் ஐய்யா? இது போன்ற தவறு செய்யும் பள்ளிகளை முதலிலேயே தெரிந்தும் தண்டிக்காமல் விட்டுள்ளீர்களா?? இது தவறு இல்லையா??? குழந்தை செய்யும் தவறை, முதலில் பெற்றோர்கள் களைய வேண்டும்; அவர்களால் முழுதும் களைதல் இயலாது என்பதால் அந்த "பணியை" பள்ளிகள் ஏற்கின்றன. அந்த பள்ளிகள் தவறு செய்யாது காத்தல் தான் உங்கள் துரையின் "சிறப்பு" மற்றும் அதன் "தர்மம்".

கல்வி...


கல்வி என்பது...
கடிந்து மனனம் செய்வதல்ல
காசினால் மதிப்பெண் பெறுவதல்ல
கண்டிப்பாய்...
கற்றதை புரிந்து கொள்ளுதலும்
கற்றபடி நடந்து கொள்ளுதலுமேயாம்!!!

சொல்லிப் புரிவதில்லை...சொல்லிப் புரிவதில்லை மன்மதக்கலை...
சொல்லவே இல்லை எனில்?
சிக்கலின் உச்சமல்லவா புரிதல்??
சொல்ல முயலுங்கள் முதலில்...
சொல்லாமலே புரிதல் எங்கனம்???
சொல்லாததன் பாதிப்பே இங்கனம்!!!

காதலின் அளவுகோல்....தாஜ்மஹால்... காதலின் அடையாளம்!
உண்மை தான் - எனினும்
பெரும்பணத்தை செலவிட்ட
பின்னரே "ஷாஜகான்" காதலின்
மகத்துவம் உலகிற்கு பு(தெ)ரிந்தது!!!
பணம் எனும் "மாயை"தான்
காதலுக்கும் அளவுகோலோ????

காதல் புரிய...காதல் புரிய...
காமம் அறிதல் வேண்டும்
காமம்பற்றிய ஞானம் வேண்டும்
காமம் "பாடமாதல்" வேண்டும்
காமம் கற்றுவிக்கத்தவறி, காரணமின்றி
காமம் கட்டுப்படுத்தப் படும்போது,
காதல் புரிய வாய்ப்பேயில்லை!!!

அழகும் ஆன்மாவும்...அகத்தில் புறத்தில் மட்டுமல்ல;
அனுகுவோர் பார்வையிலும் உள்ளது  
அழகு, ஆன்மாவின் புரிதல்!
இருக்கிறது இரண்டிற்கும் விளக்கங்கள்!!
இல்லையெவரும் இறுதியாய் விளக்கிட!!!