திங்கள், செப்டம்பர் 25, 2017

குறள் எண்: 0785 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 079 - நட்பு; குறள் எண்: 0785}

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்

விழியப்பன் விளக்கம்: நட்பெனும் உறவு கொள்ள, அருகருகே இருந்து நெருங்கிப் பழகுதல் அவசியமில்லை! ஒருமித்த சிந்தனையே, நட்பெனும் உரிமையை நிலைநாட்டும்!
(அது போல்...)
பொதுமையெனும் கடமை செய்ய, கூட்டணி அமைத்து வெற்றிப் பெறுதல் அவசியமில்லை! ஒன்றுபட்ட செயல்பாடே, பொதுமையெனும் மக்களாட்சியைத் திடப்படுத்தும்!

ஞாயிறு, செப்டம்பர் 24, 2017

குறள் எண்: 0784 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 079 - நட்பு; குறள் எண்: 0784}


நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு

விழியப்பன் விளக்கம்: நட்பெனும் உன்னத உறவு, கூடி மகிழ்வதற்கு மட்டுமன்று! நட்பில் இருப்போரின் அறமீறல் அதிகமாகும் போது, தயக்கமின்றி தாமதிக்காமல் இடித்து உரைப்பதற்கும் ஆகும்!
(அது போல்...)
பணமெனும் காகிதப் பொருள், நாம் இன்பமடைய மட்டுமன்று! உடன்பிறந்த உறவுகளின் துன்பம் பெருகும் போது, காழ்ப்பின்றி ஆதாயமில்லாமல் கொடுத்து உதவுவதற்கும் ஆகும்!

சனி, செப்டம்பர் 23, 2017

குறள் எண்: 0783 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 079 - நட்பு; குறள் எண்: 0783}

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு

விழியப்பன் விளக்கம்: ஒவ்வொரு முறை படிக்கும் போதும், மகிழ்ச்சி அளிக்கும் நூல்கள் போல்; பண்புடைய நட்புகளின் தொடர்பு, ஒவ்வொரு முறை பழகும் போதும் மகிழ்வளிக்கும்.
(அது போல்...)
ஒவ்வொரு முறை கேட்கும் போதும், வைராக்கியம் தரும் பேச்சு போல்; அறமுடைய தலைவர்களின் வழிகாட்டல், ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் வைராக்கியமளிக்கும்.

வெள்ளி, செப்டம்பர் 22, 2017

குறள் எண்: 0782 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 079 - நட்பு; குறள் எண்: 0782}

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு

விழியப்பன் விளக்கம்: பகுத்தறியும் திறமுடையோரின் நட்பு, வளர்பிறை நிலவு போல் தொடர்ந்து வளரும்; மூடநம்பிக்கைக் கொண்டோரின் நட்பு, தேய்பிறை நிலவு போல் தொடர்ந்து தேயும்.
(அது போல்...)
பொதுநலம் காப்போரின் திருப்தி, இளமைப் பருவம் போல் உறுதியாய் இருக்கும்; சுயநலம் காப்போரின் திருப்தி, முதுமைப் பருவம் போல் தளர்வாய் இருக்கும்.

வியாழன், செப்டம்பர் 21, 2017

குறள் எண்: 0781 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 079 - நட்பு; குறள் எண்: 0781}

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு

விழியப்பன் விளக்கம்: எல்லோரிலும் நட்பு கொள்வதை விட, செய்வதற்கு அரியவை எவையுள்ளன? நட்பைப் போல்; தீய வினைகளுக்கு, அரிய பாதுகாப்பு முறைகள் எவையுள்ளன?
(அது போல்...)
அனைத்திலும் பகுத்தறிவு புகுத்துவதை விட, பழகுவதற்குச் சிறந்தவை எவையுள்ளன? பகுத்தறிவு போல்; அறியாமை இருளுக்கு, சிறந்த ஒளி மூலங்கள் எவையுள்ளன?

புதன், செப்டம்பர் 20, 2017

அதிகாரம் 078: படைச்செருக்கு (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 078 - படைச்செருக்கு

0771.  என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னை
           முன்நின்று கல்நின் றவர்

           விழியப்பன் விளக்கம்: ”என் தலைவரை எதிர்த்து, அவர்முன் போர்க்களத்தில் நிற்காதீர்கள்! 
           எண்ணிக்கையற்ற பகைவர்கள், என் தலைவர்முன் நின்று; இப்போது அவர்களின் 
           சமாதிமேல் கல்வடிவில் இருக்கின்றனர்!!” - என எச்சரிக்கைச் செய்வதே, படைச்செருக்கு 
           ஆகும்.
(அது போல்...)
           “என் அப்பனை விமர்சித்து, அவர்முன் சண்டைக்கு வராதீர்கள்! எவ்வளவோ எதிரிகள், என் 
           அப்பன்முன் சண்டையிட்டு; இப்போது அவர்களின் வாழ்க்கையில் மரம்போல் உள்ளனர்!!” - 
           என வீரமுடன் பேசுவதே, மகளதிகாரம் ஆகும்.
      
0772.  கான முயல்எய்த அம்பினில் யானை
           பிழைத்தவேல் ஏந்தல் இனிது

           விழியப்பன் விளக்கம்: பார்த்தவுடனே அஞ்சியோடும், காட்டு முயலைக் கொன்ற அம்பை 
           விட; கர்ஜித்து மிரட்டியும், எதிர்க்கும் யானையின் மீது பட்டுத்தெறித்த, அம்பைக் 
           கையிலேந்தி இருப்பது சிறப்பாகும்.
(அது போல்...)
           அதட்டினாலே பயப்படும், அப்பாவியான மனிதரை வீழ்த்திய பாதுகாவலரை விட; 
           வீச்சரிவாளால் வெட்டியும், சிலிர்த்தெழும வீரனிடம் தோற்றுப் பின்வாங்கிய, பாதுகாவலரை 
           உடன் வைத்திருப்பது உயர்ந்ததாகும்.
           
0773.  பேராண்மை என்ப தறுகண்ஒன்று உற்றக்கால்
           ஊராண்மை மற்றதன் எஃகு

           விழியப்பன் விளக்கம்: போர்க் களத்தில், இரக்கமின்றி ஏதிரிகளைத் தாக்குவதை; அதீத 
           வலிமை என்பர்! அதே எதிரிகள் இயலாமையால் துடிக்கும்போது, அவர்களுக்கு உதவும் 
           குணத்தை “வலிமையின் கூர்முனை” என்பர்!
(அது போல்...)
           குழந்தை வளர்ப்பில், மன்னிப்பின்றி குழந்தைகளைக் கண்டிப்பதை, சிறந்த வளர்ப்புமுறை 
           என்பர்! அதே குழந்தைகள் தோல்வியால் தளரும்போது, அவர்களை அரவணைக்கும் 
           விதத்தை "வளர்ப்பின் உச்சம்" என்பர்!

0774.  கைவேல் களிற்றோடு போக்கி வருபவன்
           மெய்வேல் பறியா நகும்

           விழியப்பன் விளக்கம்: தன்னைத் தாக்க வந்த யானையைக், கையிலிருந்த வேலெய்தி 
           துறத்திவிட்டு; அடுத்த தாக்குதலை எதிர்கொள்ள, தன்னுடம்பில் தைத்திருக்கும் வேலையே 
           பறித்து ஆயுதமாக்கி மகிழ்வதே - சிறந்த படையின் செருக்கு ஆகும்.
(அது போல்...)
           அமைதியைக் குலைக்க வந்த சிக்கலை, கையிலிருந்த சம்பளத்தால் சமாளித்து; அடுத்த 
           சிக்கலை எதிர்கொள்ள, சேமிப்பில் வைத்திருக்கும் பணத்தையே எடுத்து சம்பளமாக்கி 
           சமாளிப்பதே - தேர்ந்த குடும்பத்தின் தன்மானம் ஆகும்.

0775.  விழித்தகண் வேல்கொண்டி எறிய அழித்துஇமைப்பின்
           ஒட்டுஅன்றோ வன்க ணவர்க்கு

           விழியப்பன் விளக்கம்: வெற்றிக்காக விழித்திருக்கும் படைவீரரின் கண், எதிரியவன் வேலை 
           எறியும்போது; கடமை மறந்து இமைப்பது கூட, படைச்செருக்குடைய அம்மாவீரனுக்கு 
           புறங்காட்டுதல் தானே?
(அது போல்...)
           இலக்குக்காக காத்திருக்கும் போராளியின் நேர்மை, சூழலது அழுத்தம் தரும்போது; அறம் 
           கடந்து தடுமாறுவது கூட, சுயவொழுக்கமுடைய அப்போராளிக்கு தேசக்குற்றம் தானே?

0776.  விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
           வைக்கும்தன் நாளை எடுத்து

           விழியப்பன் விளக்கம்: படைச்செருக்கு உடைய வீரர்கள், தம் வாழ்நாட்களைக் 
           கணக்கிடும்போது; தம் உடம்பில் விழுப்புண் படாத நாட்கள் அனைத்தையும், இறந்த 
           நாட்களாய் எண்ணி அவற்றைக் கழித்திடுவர்.
(அது போல்...)
           தன்மானம் மிகுந்த அன்பர்கள், தம் செயல்களை மதிப்பிடும்போது; தம் சிந்தனையில் 
           அறவொழுக்கம் கலக்காத செயல்ள் எல்லாவற்றையும், குற்றச் செயல்களாய் மதித்து 
           அவற்றை நீக்கிடுவர்.

0777.  சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
           கழல்யாப்புக் காரிகை நீர்த்து

           விழியப்பன் விளக்கம்: புவியுலகில் நிலைத்திருக்கும் அழியாப் புகழை விரும்பி, உயிரை 
           விரும்பாதச் செருக்குடைய படைவீரரின்; காலில் கட்டப்படும் வீரக்கழல், பேரழகை 
           உடையதாகும்.
(அது போல்...)
           குடும்பத்தில் பரவியிருக்கும் நிலைத்தப் பிணைப்பை நாடி, சிற்றின்பத்தை நாடாத 
           ஒழுக்கமுடைய குடும்பத்தலைவரின்; நலனில் பேணப்படும் குடும்பப்பாசம், பேரக்கறைக் 
           கொண்டதாகும்.

0778.  உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
           செறினும்சீர் குன்றல் இலர்

           விழியப்பன் விளக்கம்: போரொன்று வந்தால், தன் உயிருக்கு அஞ்சாத போர் வீரர்; 
           அவ்வஞ்சாமை வேண்டாமென அரசாள்பவர் தடுத்தாலும், தன் சிறப்பியல்பில் இருந்து 
           குறையமாட்டார்.
(அதுபோல்...)
           இன்னலொன்று நேர்ந்தால், தன் சுகமிழக்கத் தயங்காதக் குடும்பத் தலைவர்; அக்கடினம் 
           வேண்டாமென குடும்பத்தினர் தடுப்பினும், தன் உயர்குணத்தில் இருந்து மாறமாட்டார்.

0779.  இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
           பிழைத்தது ஒறுக்கிற் பவர்

           விழியப்பன் விளக்கம்: படைச் செருக்குடன் சொல்லியவற்றைத் தவறாத வகையில், 
           போரிட்டுச் சாகத் துணிந்த வீரரை; அவர் செய்த பிழைக்காகத், தண்டிப்பவர் யாரிருப்பர்?
(அது போல்...)
           சேவை மனப்பாங்குடன் எடுத்தவற்றைச் சரியான முறையில், போராடிச் சாதிக்க வல்ல 
           தலைவரை; அவர் தாமதித்த காரணத்திற்காய், விமர்சிப்பவர் எவரிருப்பர்?

0780.  புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
           இரந்துகோள் தக்கது உடைத்து

           விழியப்பன் விளக்கம்: படைச்செருக்கு உடைய வீரர் இறந்த பின், ஆட்சியாளரின் 
           கண்களில் நீர் நிரம்பியிருப்பின்; அந்த இறப்பின் தன்மை, யாசகமாய் கேட்டுப் பெரும் 
           மகிமை உடையதாகும்.
(அது போல்...)
           தொழிற்திறம் மிகுந்த தொழிலாளி ஓய்வடைந்த பின், முதலாளியின் தொழிலில் வீழ்ச்சி 
           நிகழ்ந்தால்; அந்த ஓய்வின் சோகம், எதனை இழந்தும் அடையும் பெருமை உடையதாகும்.

குறள் எண்: 0780 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 078 - படைச்செருக்கு; குறள் எண்: 0780}

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து

விழியப்பன் விளக்கம்: படைச்செருக்கு உடைய வீரர் இறந்த பின், ஆட்சியாளரின் கண்களில் நீர் நிரம்பியிருப்பின்; அந்த இறப்பின் தன்மை, யாசகமாய் கேட்டுப் பெரும் மகிமை உடையதாகும்.
(அது போல்...)
தொழிற்திறம் மிகுந்த தொழிலாளி ஓய்வடைந்த பின், முதலாளியின் தொழிலில் வீழ்ச்சி நிகழ்ந்தால்; அந்த ஓய்வின் சோகம், எதனை இழந்தும் அடையும் பெருமை உடையதாகும்.

செவ்வாய், செப்டம்பர் 19, 2017

கடன் வாங்கத் தேவையானத் தகுதி...

குறள் எண்: 0779 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 078 - படைச்செருக்கு; குறள் எண்: 0779}

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்

விழியப்பன் விளக்கம்: படைச் செருக்குடன் சொல்லியவற்றைத் தவறாத வகையில், போரிட்டுச் சாகத் துணிந்த வீரரை; அவர் செய்த பிழைக்காகத், தண்டிப்பவர் யாரிருப்பர்?
(அது போல்...)
சேவை மனப்பாங்குடன் எடுத்தவற்றைச் சரியான முறையில், போராடிச் சாதிக்க வல்ல தலைவரை; அவர் தாமதித்த காரணத்திற்காய், விமர்சிப்பவர் எவரிருப்பர்?

திங்கள், செப்டம்பர் 18, 2017

குறள் எண்: 0778 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 078 - படைச்செருக்கு; குறள் எண்: 0778}

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும்சீர் குன்றல் இலர்

விழியப்பன் விளக்கம்: போரொன்று வந்தால், தன் உயிருக்கு அஞ்சாத போர் வீரர்; அவ்வஞ்சாமை வேண்டாமென அரசாள்பவர் தடுத்தாலும், தன் சிறப்பியல்பில் இருந்து குறையமாட்டார்.
(அதுபோல்...)
இன்னலொன்று நேர்ந்தால், தன் சுகமிழக்கத் தயங்காதக் குடும்பத் தலைவர்; அக்கடினம் வேண்டாமென குடும்பத்தினர் தடுப்பினும், தன் உயர்குணத்தில் இருந்து மாறமாட்டார்.

ஞாயிறு, செப்டம்பர் 17, 2017

குறள் எண்: 0777 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 078 - படைச்செருக்கு; குறள் எண்: 0777}

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து

விழியப்பன் விளக்கம்: புவியுலகில் நிலைத்திருக்கும் அழியாப் புகழை விரும்பி, உயிரை விரும்பாதச் செருக்குடைய படைவீரரின்; காலில் கட்டப்படும் வீரக்கழல், பேரழகை உடையதாகும்.
(அது போல்...)
குடும்பத்தில் பரவியிருக்கும் நிலைத்தப் பிணைப்பை நாடி, சிற்றின்பத்தை நாடாத ஒழுக்கமுடைய குடும்பத்தலைவரின்; நலனில் பேணப்படும் குடும்பப்பாசம், பேரக்கறைக் கொண்டதாகும்.

சனி, செப்டம்பர் 16, 2017

குறள் எண்: 0776 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 078 - படைச்செருக்கு; குறள் எண்: 0776}

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து

விழியப்பன் விளக்கம்: படைச்செருக்கு உடைய வீரர்கள், தம் வாழ்நாட்களைக் கணக்கிடும்போது; தம் உடம்பில் விழுப்புண் படாத நாட்கள் அனைத்தையும், இறந்த நாட்களாய் எண்ணி அவற்றைக் கழித்திடுவர்.
(அது போல்...)
தன்மானம் மிகுந்த அன்பர்கள், தம் செயல்களை மதிப்பிடும்போது; தம் சிந்தனையில் அறவொழுக்கம் கலக்காத செயல்ள் எல்லாவற்றையும், குற்றச் செயல்களாய் மதித்து அவற்றை நீக்கிடுவர்.

வெள்ளி, செப்டம்பர் 15, 2017

மனைவியும் மகளும்...

குறள் எண்: 0775 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 078 - படைச்செருக்கு; குறள் எண்: 0775}

விழித்தகண் வேல்கொண்டி எறிய அழித்துஇமைப்பின்
ஒட்டுஅன்றோ வன்க ணவர்க்கு

விழியப்பன் விளக்கம்: வெற்றிக்காக விழித்திருக்கும் படைவீரரின் கண், எதிரியவன் வேலை எறியும்போது; கடமை மறந்து இமைப்பது கூட, படைச்செருக்குடைய அம்மாவீரனுக்கு புறங்காட்டுதல் தானே?
(அது போல்...)
இலக்குக்காக காத்திருக்கும் போராளியின் நேர்மை, சூழலது அழுத்தம் தரும்போது; அறம் கடந்து தடுமாறுவது கூட, சுயவொழுக்கமுடைய அப்போராளிக்கு தேசக்குற்றம் தானே?

வியாழன், செப்டம்பர் 14, 2017

குறள் எண்: 0774 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 078 - படைச்செருக்கு; குறள் எண்: 0774}

கைவேல் களிற்றோடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்

விழியப்பன் விளக்கம்: தன்னைத் தாக்க வந்த யானையைக், கையிலிருந்த வேலெய்தி துறத்திவிட்டு; அடுத்த தாக்குதலை எதிர்கொள்ள, தன்னுடம்பில் தைத்திருக்கும் வேலையே பறித்து ஆயுதமாக்கி மகிழ்வதே - சிறந்த படையின் செருக்கு ஆகும்.
(அது போல்...)
அமைதியைக் குலைக்க வந்த சிக்கலை, கையிலிருந்த சம்பளத்தால் சமாளித்து; அடுத்த சிக்கலை எதிர்கொள்ள, சேமிப்பில் வைத்திருக்கும் பணத்தையே எடுத்து சம்பளமாக்கி சமாளிப்பதே - தேர்ந்த குடும்பத்தின் தன்மானம் ஆகும்.

புதன், செப்டம்பர் 13, 2017

குறள் எண்: 0773 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 078 - படைச்செருக்கு; குறள் எண்: 0773}

பேராண்மை என்ப தறுகண்ஒன்று உற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு

விழியப்பன் விளக்கம்: போர்க் களத்தில், இரக்கமின்றி ஏதிரிகளைத் தாக்குவதை; அதீத வலிமை என்பர்! அதே எதிரிகள் இயலாமையால் துடிக்கும்போது, அவர்களுக்கு உதவும் குணத்தை “வலிமையின் கூர்முனை” என்பர்!
(அது போல்...)
குழந்தை வளர்ப்பில், மன்னிப்பின்றி குழந்தைகளைக் கண்டிப்பதை, சிறந்த வளர்ப்புமுறை என்பர்! அதே குழந்தைகள் தோல்வியால் தளரும்போது, அவர்களை அரவணைக்கும் விதத்தை "வளர்ப்பின் உச்சம்" என்பர்!

செவ்வாய், செப்டம்பர் 12, 2017

குறள் எண்: 0772 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 078 - படைச்செருக்கு; குறள் எண்: 0772}

கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது

விழியப்பன் விளக்கம்: பார்த்தவுடனே அஞ்சியோடும், காட்டு முயலைக் கொன்ற அம்பை விட; கர்ஜித்து மிரட்டியும், எதிர்க்கும் யானையின் மீது பட்டுத்தெறித்த, அம்பைக் கையிலேந்தி இருப்பது சிறப்பாகும்.
(அது போல்...)
அதட்டினாலே பயப்படும், அப்பாவியான மனிதரை வீழ்த்திய பாதுகாவலரை விட; வீச்சரிவாளால் வெட்டியும், சிலிர்த்தெழும வீரனிடம் தோற்றுப் பின்வாங்கிய, பாதுகாவலரை உடன் வைத்திருப்பது உயர்ந்ததாகும்.

திங்கள், செப்டம்பர் 11, 2017

குறள் எண்: 0771 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 078 - படைச்செருக்கு; குறள் எண்: 0771}

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்என்னை
முன்நின்று கல்நின் றவர்

விழியப்பன் விளக்கம்: ”என் தலைவரை எதிர்த்து, அவர்முன் போர்க்களத்தில் நிற்காதீர்கள்! எண்ணிக்கையற்ற பகைவர்கள், என் தலைவர்முன் நின்று; இப்போது அவர்களின் சமாதிமேல் கல்வடிவில் இருக்கின்றனர்!!” - என எச்சரிக்கைச் செய்வதே, படைச்செருக்கு ஆகும்.
(அது போல்...)
“என் அப்பனை விமர்சித்து, அவர்முன் சண்டைக்கு வராதீர்கள்! எவ்வளவோ எதிரிகள், என் அப்பன்முன் சண்டையிட்டு; இப்போது அவர்களின் வாழ்க்கையில் மரம்போல் உள்ளனர்!!” - என வீரமுடன் பேசுவதே, மகளதிகாரம் ஆகும்.

ஞாயிறு, செப்டம்பர் 10, 2017

சாதி மதம் எனும் பிறவிக்கறைகள்...

அதிகாரம் 077: படைமாட்சி (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 077 - படைமாட்சி

0761.  உறுப்பமைந்து ஊறுஅஞ்சா வெல்படை வேந்தன்
           வெறுக்கையுள் எல்லாம் தலை

           விழியப்பன் விளக்கம்: அடிப்படையான போர்ப் படைகள் அமைந்து, விழுப்புண்களுக்கு 
           அஞ்சாமல் வெல்லும் திறமுடைய படை; அரசாள்பவரிடம் இருக்கும், செல்வங்களில் 
           எல்லாம் முதன்மையானது ஆகும்.
(அது போல்...)
           முக்கியமான உறவுப் பிணைப்புகள் இணைந்து, விமர்சனங்களுக்குப் பின்னடையாமல் 
           வாழும் இயல்புடைய வம்சம்; சமுதாயத்தில் இருக்கும், வம்சங்கள் அனைத்திலும் 
           சிறப்பானது ஆகும்.
      
0762.  உலைவிடத்து ஊறுஅஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
           தொல்படைக்கு அல்லால் அரிது

           விழியப்பன் விளக்கம்: போரில் அழிவு நேரும்போது, அச்சமின்றி போரிடும் திண்ணமான 
           வலிமை; பல போர்களை வென்ற அனுபவமானப் படையைத் தவிர்த்து, பிறர்க்கு இருப்பது 
           அரிது.
(அது போல்...)
           குடும்பத்தில் குழப்பம் விளையும்போது, சோர்வின்றி உறவாடும் உறுதியான அன்பு; பல 
           சூழல்களைக் கையாண்ட அனுபவமான அங்கத்தினரைத் தவிர்த்து, பிறர்க்கு இருப்பது 
           அரிது.
           
0763.  ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
           நாகம் உயிர்ப்பக் கெடும்

           விழியப்பன் விளக்கம்: அலைகடலாய் திரண்டு ஆர்ப்பரித்தாலும், எலி போன்ற பகைவர்கள்  
           என்ன அழிவை உருவாக்கிட முடியும்? நாகப்பாம்பு போன்ற படையினர், கோபப் பெருமூச்சு 
           விட்டாலே, அழிந்துவிடுவர்!
(அது போல்...)
           புயல்காற்றாய் சுழன்று வீசினாலும், பஞ்சு போன்ற தீப்பழக்கங்கள் என்ன விளைவை 
           உண்டாக்க முடியும்? நெருப்பு போன்ற நல்லோர், சிந்தனைச் சுடரை வீசினாலே, 
           பொசுங்கிவிடும்!

0764.  அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
           வன்க ணதுவே படை

           விழியப்பன் விளக்கம்: எப்போரிலும் அழிவைச் சந்திக்காமல், பகைவர்களின் சதிக்கு 
           பலியாகாமால்; பல போர்களை வென்றது மூலம், திண்ணமான வீரத்தைப் பெற்றதே 
           படையாகும்.
(அது போல்...)
           எவ்வுறவிலும் பிரிவைத் திணிக்காமல், தீயவர்களின் புரளிக்கு இரையாகாமல்; பல 
           உறவுகளைப் பேணியது மூலம், உன்னதமான அன்பைப் பரிமாறுவதே குடும்பமாகும்.

0765.  கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
           ஆற்றல் அதுவே படை

           விழியப்பன் விளக்கம்: உயிரைப் பறிக்கும் எமதர்மனே, பகைவனாய் போர் தொடுத்து 
           வந்தாலும்; புறமுதுகிட்டு ஓடி ஒளியாமல், ஒன்றுகூடி, எதிர்த்து நிற்கும் வலிமையுடையதே 
           படையாகும்.
(அது போல்...)
           வாழ்வை அழிக்கும் "சுனாமி"யே, பேரழிவாய் தம்மை நோக்கி வந்தாலும்; தன்னுயிரைக் 
           காக்க ஓடாமல், ஒருசேர, பிள்ளைகளைக் காக்கும் திண்ணமுடையோரே பெற்றோராவர்.

0766.  மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
           எனநான்கே ஏமம் படைக்கு

           விழியப்பன் விளக்கம்: அழியாத வீரம்/குறையாத சுயமரியாதை/அறவழியில் பயணிக்கும் 
           மாட்சிமை/அரசாள்பவரின் நம்பிக்கை - இந்நான்கு காரணிகளே, படைக்குப் பாதுகாப்பு 
           அரண்களாகும்.
(அது போல்...)
           மாறாத அன்பு/தவறாத சுயவொழுக்கம்/உறவுகளை அரவணைக்கும் கண்ணியம்/
           மூத்தவர்களின் வழிகாட்டல் - இந்நான்கு காரணிகளே, கூட்டுக்குடும்பத்திற்கு வலுவான 
           அடிதளங்களாகும்.

0767.  தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
           போர்தாங்கும் தன்மை அறிந்து

           விழியப்பன் விளக்கம்: கோட்டையை நெருங்கிய எதிரிகளையும், தகர்க்கும் 
           போர்முறைகளை அறிந்து; முதலாவதாய் வரும் எதிரியின் படையைத் தகர்த்து, 
           போர்க்களத்தில் முன்னேறிச் செல்வதே படையாகும்.
(அது போல்...)
           மனதை ஆக்கிரமித்தத் தீப்பழக்கங்களையும், தடுக்கும் வழிமுறைகளைக் கற்று; 
           முதலாவதாய் பழகும் தீப்பழக்கத்தின் ஆதிக்கத்தைத் தடுத்து, வாழ்க்கையில் உயர்ந்து 
           செல்வதே ஒழுக்கமாகும்.

0768.  அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
           படைத்தகையால் பாடு பெறும்

           விழியப்பன் விளக்கம்: மனதளவிலான வீரம்/அனுபவ அளவிலான ஆற்றல் - இவையிரண்டில்
           சிறந்ததாய் இல்லையெனினும்; ஒன்றிணைந்த அணியாய் போரிடும் போர்க்குணத்தால், 
           அப்படை மாட்சிமை பெறும்.
(அது போல்...)
           ஆத்மார்த்தமான அன்பு/சிந்தனை மூலமான புரிதல் - இவையிரண்டில் சிறந்ததாய் 
           இல்லையாயினும்; கூட்டுக்குடும்ப உறுப்பினராய் ஒன்றிணையும் சுயவொழுக்கத்தால், 
           அக்குடும்பம் உன்னதம் அடையும்.

0769.  சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
           இல்லாயின் வெல்லும் படை

           விழியப்பன் விளக்கம்: திறமையான வீரர்களின் எண்ணிக்கையில் குறைவு/அரசாள்பவரிடம் 
           மாறாத வெறுப்பு/தேவைகளை அடையமுடியாத வறுமை - இவையாயும் இல்லையாயின், 
           அப்படை நிச்சயமாய் வெற்றியடையும்!
(அது போல்...)
           அன்பான உறுப்பினர்களின் மனதில் குறை/முதியவர்களிடம் நீங்காத கசப்பு/ஒழுக்கத்தை 
           வற்புறுத்தாதப் பெற்றோர் - இவையாவும் இல்லையாயின், அக்குடும்பம் உறுதியாய் 
           கூடியிருக்கும்!

0770.  நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
           தலைமக்கள் இல்வழி இல்

           விழியப்பன் விளக்கம்: பல போர்களில் நிலைத்த, பல திறமையானப் படைவீரர்கள் 
           இருப்பினும்; தகுதியான படைத்தலைமை இல்லையெனில், அப்படை நீடித்ததாய் 
           இருப்பதில்லை.
(அது போல்...)
           பல போராட்டங்களில் சாதித்த, பல உறுதியான இளைஞர்கள் இருப்பினும்; நேர்மையான 
           ஒருங்கிணைப்பாளர் இல்லையெனில், அக்குழு நிரந்தரமாய் இருப்பதில்லை.

குறள் எண்: 0770 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 077 - படைமாட்சி; குறள் எண்: 0770}

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்

விழியப்பன் விளக்கம்: பல போர்களில் நிலைத்த, பல திறமையானப் படைவீரர்கள் இருப்பினும்; தகுதியான படைத்தலைமை இல்லையெனில், அப்படை நீடித்ததாய் இருப்பதில்லை.
(அது போல்...)
பல போராட்டங்களில் சாதித்த, பல உறுதியான இளைஞர்கள் இருப்பினும்; நேர்மையான ஒருங்கிணைப்பாளர் இல்லையெனில், அக்குழு நிரந்தரமாய் இருப்பதில்லை.

சனி, செப்டம்பர் 09, 2017

குறள் எண்: 0769 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 077 - படைமாட்சி; குறள் எண்: 0769}

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை

விழியப்பன் விளக்கம்: திறமையான வீரர்களின் எண்ணிக்கையில் குறைவு/அரசாள்பவரிடம் மாறாத வெறுப்பு/தேவைகளை அடையமுடியாத வறுமை - இவையாயும் இல்லையாயின், அப்படை நிச்சயமாய் வெற்றியடையும்!
(அது போல்...)
அன்பான உறுப்பினர்களின் மனதில் குறை/முதியவர்களிடம் நீங்காத கசப்பு/ஒழுக்கத்தை வற்புறுத்தாதப் பெற்றோர் - இவையாவும் இல்லையாயின், அக்குடும்பம் உறுதியாய் கூடியிருக்கும்!

வெள்ளி, செப்டம்பர் 08, 2017

குறள் எண்: 0768 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 077 - படைமாட்சி; குறள் எண்: 0768}

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்

விழியப்பன் விளக்கம்: மனதளவிலான வீரம்/அனுபவ அளவிலான ஆற்றல் - இவையிரண்டில் சிறந்ததாய் இல்லையெனினும்; ஒன்றிணைந்த அணியாய் போரிடும் போர்க்குணத்தால், அப்படை மாட்சிமை பெறும்.
(அது போல்...)
ஆத்மார்த்தமான அன்பு/சிந்தனை மூலமான புரிதல் - இவையிரண்டில் சிறந்ததாய் இல்லையாயினும்; கூட்டுக்குடும்ப உறுப்பினராய் ஒன்றிணையும் சுயவொழுக்கத்தால், அக்குடும்பம் உன்னதம் அடையும்.

வியாழன், செப்டம்பர் 07, 2017

குறள் எண்: 0767 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 077 - படைமாட்சி; குறள் எண்: 0767}

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து

விழியப்பன் விளக்கம்: கோட்டையை நெருங்கிய எதிரிகளையும், தகர்க்கும் போர்முறைகளை அறிந்து; முதலாவதாய் வரும் எதிரியின் படையைத் தகர்த்து, போர்க்களத்தில் முன்னேறிச் செல்வதே படையாகும்.
(அது போல்...)
மனதை ஆக்கிரமித்தத் தீப்பழக்கங்களையும், தடுக்கும் வழிமுறைகளைக் கற்று; முதலாவதாய் பழகும் தீப்பழக்கத்தின் ஆதிக்கத்தைத் தடுத்து, வாழ்க்கையில் உயர்ந்து செல்வதே ஒழுக்கமாகும்.

அண்ணாதுரை - ஓர் முன்னோட்டம்


     அண்ணாதுரை - உயர்நிலைப் பள்ளியில், என்னுடன் பயின்ற என் நண்பன் திரு. சீனுவாசன் அறிமுக-இயக்குநராக இயக்கி; விரைவில், வெளிவர இருக்கும் தமிழ்த் திரைப்படம். இணையாக "இந்திரசேனை" என்ற பெயரில், தெலுங்கிலும் வெளியாக இருக்கிறது. தேர்ந்தெடுத்தத் திரைப்படங்களுக்கு மட்டும், விமர்சனம் எழுதும் நான்; முதன்முதலாய், ஒரு திரைப்படத்திற்கு முன்னோட்டம் எழுதியிருக்கிறேன். விமர்சனங்களில், கதையைப் பற்றி எதையும் குறிப்பிடக் கூடாது என்பதில் உறுதியாய் இருப்பேன். ஆனால், விமர்சனம் சுவராஸ்யமாய் இருக்கவேண்டும் என்ற அக்கறையுண்டு. அதே அடிப்படையிலேயே, இந்த முன்னோட்டம் எழுதப்பட்டு இருக்கிறது.
 • இம்முன்னோட்டத்திற்கு முதற்காரணம் - என் நண்பன் சீனிவாசனின் திரைப்படம் என்பதில், எந்த மாற்றுக்கருத்தும் இல்லை; ஆனால், அது மட்டும் காரணம் அல்ல! இத்திரைப்படத்தின் முழு "ஸ்கிரிப்ட்"டையும் படித்து; அது என்னை உண்மையாய் கவர்ந்ததால் தான், இதை எழுதியிருக்கிறேன்.
 • ஏறக்குறைய 27 ஆண்டுகளுக்குப் பின்னர், ஓர் நாள் வாட்ஸ்-ஆப்பில் தொடர்பு கொண்டோம். உடனே, தொலைபேசியில் உரையாடினோம்! உரையாடல் முடியும்போது "இளங்கோ! உனக்கு ஸ்கிரிப்டை அனுப்புகிறேன்; படிச்சுட்டு சொல்லேன்!" என்றான். என்னால், இன்னும் அதை நம்பமுடியவில்லை!
 • 27 ஆண்டுகளாய், ஒரு வார்த்தைக் கூட பேசாமல் இருந்த நிலையில், எந்த நம்பிக்கையில் அப்படி சொன்னான்? அவன் நம்பிக்கையைக் காக்கும் வண்ணம், எனக்கு ஸ்கிரிப்டை அனுப்பியதை; என்னவள் மற்றும் என் நண்பன் சுரேஷ் பாபு மட்டுமே அறிவர். அவர்களுக்கு கூட, அதைச் செய்தியாய் தான் சொல்லி இருக்கிறேன்; அதைப் பகிரவில்லை. அதுதான், அவன் நம்பிக்கைக்கு நான் செய்த மரியாதை!
 • "ஸ்கிரிப்ட்டை" அனுப்புகிறேன் என, அவன் சொன்ன பிரம்மிப்பு அடங்குவதற்குள், அனுப்பியும் விட்டான். அதே பிரம்மிப்போடு, படிக்க ஆரம்பித்தேன். இன்றைய காலக்கட்டத்தில், 90 விழுக்காடு திரைப்படங்களில்; பார்வையாளர்களால், அடுத்தடுத்த காட்சிகளைக் கணிக்க முடிகிறது. இதைப் பார்வையாளனின் திறமை என்பதா? அல்லது படைப்பாளியின் திறமையின்மை என்பதா?? - தெரியவில்லை! அந்த "பார்வையாளனின்" திறமையோடு, திமிரும் கலக்க; 2-ஆவது காட்சியிலேயே, என் கணிப்பு தலைதூக்கியது! அதை அதே காட்சியிலேயே, சுக்குநூறாய் உடைத்ததில் துவங்கியது - அவனின் இராஜாங்கம்! ஸ்கிரிப்ட்டை எனக்கு அனுப்பியதில் இருந்த பிரம்மிப்பு, இப்போது அவனின் ஸ்கிரிப்ட்டின் மேல் கடந்தது.
 • படம் முழுவதுமுள்ள, இம்மாதிரியான திரைக்கதை பார்வையாளர்களைக் கவர்ந்து, படத்தின் சுவராஸ்யத்தைக் கூட்டும். சில காட்சிகள், நாம் கணித்தது போலவே தொடரும்; ஆனால், ஓரிரு நிமிடங்களில் அதைத் தகர்த்து, வேறொரு தளத்தில் இருந்து கதைப் பயணிக்கும். திரைக்கதை தான் அவனின் பலம்; அதுதான், படத்தின் பலமும்!
 • 5 காட்சிகள் வரைப் படித்துவிட்டு, அன்றிரவு உறங்கினேன்; அதிகாலை 02:30 மணியளவில், உறக்கம் களை(ந்/த்)து; தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். அன்றே, முழு ஸ்கிரிப்ட்டையும் படித்துவிட்டு, என் எண்ணங்களைத் தொகுத்து; ஓர் மின்னணுக் கோப்பாய் அனுப்பினேன். பெரும்பாலும், பல இயக்குனர்களின் முதல் படத்தில் - அதீத திறமை வெளிப்படும். அதைத் தொடர்ந்து, வெளிப்படுத்தி வெற்றியடைவோர் - மிகச் சிலரே! அந்த பட்டியலில், என் நண்பன் சேர்வான், என்ற நம்பிக்கை மிகுந்தது! அனுபவமான வசனங்கள் மற்றும் இயல்பான/உணர்வுப்பூர்வமான காட்சி அமைப்புகள்.
 • ஆழ்ந்த அர்த்தத்துடன் எழுதுவதோடு, குசும்பாயும் வசனங்கள் எழுதும் திறமை; இதுவோர், கொடை! படைப்பாளியின் வெற்றி, படைப்பைப் படிக்கும்போதே; வாசகனைக் கற்பனையில் காட்சிப்படுத்த வைத்து, சிந்தனையைத் தூண்டுவதில் இருக்கிறது. அதை மிகக் சிறப்பாய் செய்திருக்கிறான். இதை செய்யமுடியும் ஒரு படைப்பாளியால், வெகு நிச்சயமாய், அதை அற்புதமாய் காட்சிப் படுத்தமுடியும்; அதுதான் ஒரு படைப்பாளியின் வெற்றி! அந்த வகையில், என்னளவில், என் நண்பன் வெற்றியடைந்து இருக்கிறான்.
 • பல திரைப்படங்களில், (மன்னிக்கவும்!) கதாநாயகியைக் "காட்சிப்பொருளாய்" தான் காண்பிக்கிறார்கள். அதனாலேயே, அந்த நடிகைகளை நான் வெறுப்பதுண்டு! நிச்சயமாய், அவர்களின் தவறல்ல; அது, படைப்பாளியின் தவறு! அப்படிப்பட்ட படங்களில், கதாநாயகியே தேவையில்லை என்பதே என் எண்ணம். 2013-ஆம் ஆண்டு, அப்படியோர் அபூர்வ திரைப்படம் வெளிவந்தது; அதன் கதாநாயகியின் பாத்திரப்படைப்பு பற்றி, விமர்சனத்தில் சிலாகித்து எழுதி இருக்கிறேன். அவ்வகையில், அண்ணாதுரை படத்தில் - கதாநாயகியின் பாத்திரப் படைப்பு, மிக அருமை! "அழகான குறும்பு செய்யும்" பெண்களால் கவரப்படாத - பெண்களோ/ஆண்களோ இருக்கமுடியாது! இப்படத்தின், கதாநாயகி, அனைவரையும் நிச்சயம் கவர்வார்!
 • திரு. விஜய் ஆண்டனி நல்ல நடிகர் என்பது தெரியும்! ஆனால் "அவரின்  நடிப்புத் திறனுக்கு; இதுவரை, மிகச் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை!" என்பது என் புரிதல். அக்குறை, இப்படத்தில் பெரிதும் நிவர்த்தி செய்யப்படும். ஸ்கிரிப்ட்டைப் படிக்கும் போது, என்னுள் காட்சிகளாய் விரிந்த... இல்லையில்லை! என்னுள் காட்சிகளாய் விதைத்த, என் நண்பனின் எதிர்பார்ப்புகளை; நிவர்த்தி செய்யும் அனைத்து திறமைகளும், அவரிடம் இருக்கிறது. "அதை மிகச் சிறப்பாய் செய்திருப்பார்!" என நம்புகிறேன். வெகு நிச்சயமாய், இத்திரைப்படம் வெளிவந்த பின்; திரு. விஜய் ஆண்டனி "நல்ல நடிகர் என்பதிலிருந்து, சிறந்த நடிகர்" என்ற எண்ணத்தில், நம் மனதில் இருப்பார். அவருக்கும் என் வாழ்த்துகள்.
 • கதாநாயகன்/கதாநாயகி மட்டுமன்றி; அவர்களின் குடும்பம், அவர்களுடன் பயணிப்போர் மற்றும் பிற பாத்திரப் படைப்புகளும் அருமையாய்/இயல்பாய் இருக்கின்றன. அந்த இயல்பான பாத்திரப்  படைப்புகள், இயல்பான வசனங்களோடு நம்மை வசீகரிக்கும். இப்படம், கொஞ்சம்/கொஞ்சமாய் நாம் இழந்து கொண்டிருக்கும் உறவுகளை/உணர்வுகளை; நமக்கு, நினைவாய் மீட்டுத் தரும். 
*******
 • "படைப்பின் தரத்துடன் சேர்ந்து, தனிமனிதனாய் ஒரு படைப்பாளி எப்படி இருக்கிறான்?!"  என்பதிலும் ஒரு படைப்பாளியின் வெற்றி இருக்கிறது! அவ்வகையில், மேற்குறிப்பிட்டது போல்; தன் முதல் படைப்பையே, எனக்கு அனுப்பும் அந்த நம்பிக்கையில் துவங்குகிறது, அவனின் தனிமனிதத் தரம்.  பள்ளிப் பருவத்தில், நண்பர்கள் எங்களை எப்படி கவனித்து இருக்கிறான் என்பதை; அவன் விவரிக்கும் போது, அவனை மேலும் பிரம்மிக்கிறேன். அந்தப் பருவத்தில், என் போன்றோர் விளையாட்டாய் வாழ்ந்து கொண்டிருந்த போது; இவனெப்படி அதுபோல் ஆழ்ந்து கவனித்து இருக்கிறான்? அது தான் ஒரு படைப்பாளியின் திறன்! ஆம், நடப்பவற்றை ஆழ்ந்து கவனிப்பது, படைப்பாளியின் மிகப்பெரிய பலம். அவன் அப்போதே படைப்பாளியாய் தான் இருந்திருக்கிறான், என்பது இப்போது புரிகிறது.
 • அவனுக்கிருந்த வேலைப்பளு காரணமாய் (கடந்த சூலையில், இந்தியா சென்றபோது), படக்குழுவினர் தங்கியிருந்த; விடுதிக்கு சென்றும், அவனைக்  காணமுடியவில்லை! நாங்கள் ஒருவரையொருவர் பார்த்து, ஏறக்குறைய 27 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இப்போது நல்ல தொடர்பில் இருக்கிறோம்; இப்பதிவை, வரைவாய் எழுதும் முன் கூட; நாங்கள் வாட்ஸ்-ஆப்பில் உரையாடினோம். அத்தனை வேலைப்பளுவிலும், நட்புகளுக்காய்; நேரம் ஒதுக்கி உரையாடும், அவனின் இயல்பு அவனை இன்னும் உயரத்திற்கு இட்டுச்செல்லும்.
படைப்புடன், சீனுவின் தனிமனித தரமும் இணைந்து...
"அண்ணாதுரையை" வெற்றிப்படமாக்கும் என்பதில், எந்த மாற்றுக்கருத்தும் இல்லை!

"அண்ணாதுரையை" படைத்தவனுக்கும்...
"படைப்பில் துணைபுரிந்த அனைவருக்கும்" என் வாழ்த்துகள்!!

*******

- விழியப்பன் எனும் இளங்கோவன் இளமுருகு 
07092017
www.vizhiyappan.blogspot.com

{பதிவரைப் பற்றி: இளங்கோவன் இளமுருகு, இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்ற ஆராய்ச்சியாளர். தமிழ்ப் புலவரும், ஓய்வுப் பெற்ற ஆசிரியருமான; தன் தந்தை திரு. இளமுருகு அண்ணாமலை அவர்களால், தமிழ்ப்பால் ஊட்டப்பட்டு தமிழ்-பால் நாட்டம் கொண்டவர். "விழியமுதினியின் அப்பன்" என்ற பொருளில் "விழியப்பன்" எனும் புனைப்பெயரில் "விழியப்பன் பார்வை" எனும் தமிழ் வலைப்பதிவையும் (https://vizhiyappan.blogspot.com); "Vizhiyamudhini's Father Views" எனும் ஆங்கில வலைப்பதிவையும் (https://vizhiyappan-en.blogspot.com) எழுதி வருகிறார். சமூகம்/வாழ்வியல் சார்ந்த பார்வைகள் மற்றும் புரிதல்களை; தலையங்கம்/மனதங்கம் உட்பட பல பிரிவுகளில் எழுதி வருகிறார். குறிப்பிடப் படவேண்டியது - "திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை" என்ற பிரிவில், தமிழில் திருக்குறள் விளக்கவுரை மற்றும் "Thirukkural - Vizhiyappan's Translation" என்ற பிரிவில், ஆங்கிலத்தில் மொழியாக்கம் & விளக்கவுரை எழுதி வருவது ஆகும். இரண்டு வலைப்பதிவுகளில் "தினம் ஒரு குறள்" என பதிந்து வருகிறார். அவரைப் பற்றியும், அவரின் பதிவுகள் பற்றிமும் மேலும் அறிய விரும்புவோர்; மேலுள்ள இணைய இணைப்புகளைச் சுட்டவும்.}

புதன், செப்டம்பர் 06, 2017

குறள் எண்: 0766 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 09 - படையியல்; அதிகாரம்: 077 - படைமாட்சி; குறள் எண்: 0766}

மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு

விழியப்பன் விளக்கம்: அழியாத வீரம்/குறையாத சுயமரியாதை/அறவழியில் பயணிக்கும் மாட்சிமை/அரசாள்பவரின் நம்பிக்கை - இந்நான்கு காரணிகளே, படைக்குப் பாதுகாப்பு அரண்களாகும்.
(அது போல்...)
மாறாத அன்பு/தவறாத சுயவொழுக்கம்/உறவுகளை அரவணைக்கும் கண்ணியம்/மூத்தவர்களின் வழிகாட்டல் - இந்நான்கு காரணிகளே, கூட்டுக்குடும்பத்திற்கு வலுவான அடிதளங்களாகும்.