புதன், ஆகஸ்ட் 31, 2016

குறள் எண்: 0395 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 040 - கல்வி; குறள் எண்: 0395}

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்

விழியப்பன் விளக்கம்: செல்வந்தர் முன்பு, வறியவர் நிற்பது போல், கற்றவரை மதித்துக் கற்போரே, முதன்மையடைவர்! அப்படிக் கற்காதோர், பின்னடைவார்!
(அது போல்...)
இறைவன் முன்பு, பக்தர்கள் நிற்பது போல், பெற்றோரை வணங்கி வளர்வோரே, உயர்ந்தவராவார்! அப்படி வலராதோர், சாதாரணராவர்!
*****

செவ்வாய், ஆகஸ்ட் 30, 2016

குறள் எண்: 0394 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 040 - கல்வி; குறள் எண்: 0394}

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்

விழியப்பன் விளக்கம்: ஒன்றுகூடி, பகுத்தறிவு விரிவடைய மகிழ்ந்து; பின் மனது வருந்தப் பிரிவதே, மொழியில் புலமடைந்த புலவர்களின் இயல்பாகும்.  
(அது போல்...)
உறவாடி, உடல் அயர்ச்சிக்க ஆர்ப்பரித்து; பின் உள்ளம் உருக விலகுவதே, சுபநிகழ்ச்சிகளில் இணையும் உறவுகளின் தன்மையாகும்.
*****

திங்கள், ஆகஸ்ட் 29, 2016

குறள் எண்: 0393 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 040 - கல்வி; குறள் எண்: 0393}

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்

விழியப்பன் விளக்கம்: கற்றோரே, பார்வையுடைய விழிகளை உடையவராவர்! கல்வி கற்காதவர்கள், முகத்தில் - பார்வையற்ற இரண்டு வெற்றிடங்களை உடையவர் ஆவர். 
(அது போல்...)
புரிதலுடையோரே, கேட்கின்ற செவிகளை உடையவராவர்! புரிதல் அற்றவர்கள், தலையில் - கேட்காத இரண்டு ஓட்டைகளை உடையவர் ஆவர்.
*****

விமானப் பயணமும்; விழுங்கும் பயமும்...


விபத்தில்லாப் பயணமில்லை எனினும்,
விபத்தொன்று நேர்ந்தால் விடியலில்லை
என்பதால்; யானறிந்த பயணங்களில்
ஏதுமில்லை விமானம்போல் அச்சமூட்டுவது!

மதுப்பழக்கம் இருந்த போதினிலே
மரணபயமும் விலகிட்டதே போதையாலே!
மதுவதனை விலக்கிட்ட இந்நேரமும்
மறுபடியும் பயம்வந்து குடிகொண்டதே!

"மரணமில்லா மானிடனே இல்லை!"
மேலோர்"புத்தி" சொல்லியும் கேளார்
கீழோர்ஆன “மனமும்”! மனமதனை
மழுங்கடித்து பயமதுவும் மேலெழுகிறதே!

மதுவதுவும் துணையில்லா இப்பொழுதும்
மனத்திடமும் வந்திடுமோ எப்படியேனும்?
விமானப் பயணமதையும் நினைக்கையில்;
விழுங்கத்தான் பார்க்கிறதே பயமதுவும்!

ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2016

குறள் எண்: 0392 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 040 - கல்வி; குறள் எண்: 0392}

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு

விழியப்பன் விளக்கம்: எண்களை அடிப்படையாகக் கொண்ட, கணிதம் போன்ற கல்வி; எழுத்துகளை அடிப்படையாகக் கொண்ட, மற்ற கல்வி - இவ்விரண்டும், உலக உயிர்கட்கு இரு கண்களாகும். 
(அது போல்...)
சிந்தனைகளை ஒட்டியத் தழுவிய, தேடல் போன்ற முனைப்பு; செயல்களை ஒட்டியத் தழுவிய, மற்ற முனைப்பு - இவையிரண்டும், பகுத்தறிய முயற்சிப்போர்க்கு இரு கைகளாகும்.

{என்குறிப்பு: "செய்முறையும் (Practical/Experiment), கோட்பாடும் (Theory)" சம அளவில் கலந்த படிப்பறிவுதான் சிறந்தது என்பதை; 2000 ஆண்டுகளுக்கு முன், நம் பெருந்தகை  எவ்வளவு எளிதாய் சொல்லி இருக்கிறார்?!}

திருமணமும் - "திருட்டு"மனமும்...…

{இன்று காலை "கோவல் நண்பர்கள்" வாட்ஸ்ஆப் குழு உரையாடல் ஒன்று; 
என் மனதில்  ஆழ்ந்திருந்த இதை வெளிக்கொணர்ந்தது!}


"கண்டிப்பா எல்லோரும் வந்துடுங்கடா!"
பாரதிதாசன் பல்கலைகழக வளாகத்தில்
“நண்பன் விக்கிரமனும்” அன்புஅழைப்பு
விடுத்தான் - சகோதரிதிரு மணவிழாவுக்கு

நண்பர்கள் நாங்களும் குதூகலமாய்
“பெங்களூர்” சேர்ந்துதங் கும்விடுதியும்
அடைந்தோம்! உடல்மகிழ குளித்துவிட்டு
மனம்மகிழ ஊரும்சுற்றி விடுதியும்திரும்பி

பயணத்துக்கு பணம்தந்து தங்கிஉறங்கிட
விடுதியும்தந்த விக்கிரமனிடமே மதுவருந்த
காசும்கேட்டோம்! எப்படிதிரட் டினான்என்றே
இதுவரைஎச் சிந்தனையில்லை! குடிப்பதே

"கடமை"யென சிந்தனைமழுங்கி மதுக்கடை
நுழைந்துமது வையும்"சைட் டிஷ்ஷையும்"
வயிறுநிரப்பி தொண்டைவரை நிரப்பினோம்!
இருந்திட்ட காசும்"தண்ணி" யாய்கரையவே

வழியேயின்றி விடுதிசேர்ந்து தூங்கினோம்!
தூங்கியேபோ னோம்முகூர்த்த மதனையும்
காணாமலேயும்! இருந்தும்வெட் கமேதுமின்றி
"உணவெனும் அபத்தத்தை" திண்ணவேண்டி

தூக்கமும்களை த்துமணமண்ட பம்சேர்ந்து
வயிறுமுட்ட உண்டோம்! நல்லவேளை
மதுக்கடை காலையில்திறக் கப்படவில்லை!
இல்லையேல் சிற்றுண்டிக்காக வும்மண்டபம்

சென்றிருக்க மாட்டோம்; அடேவிக்கிரமா!
அன்றன்றியும் என்றேனும்நீ இப்பாவிகளை
உணர்ந்துவருந் தினாயோஇல் லையோநீயே
அறிவாய்!மது விளைவுகுறித்த சிந்தனைவரும்

போதெல்லாம் நான்இதனை மறப்பதில்லை!
குடித்தமதுவும் திண்ண"சைட் டிஷ்ஷும்"அன்றே
"ஒன்றாய்இரண் டாய்வெளிக்கு போயேபோனது!
என்மனம்மழு ங்கியநினைவு இன்னும்உள்ளேயே!

சனி, ஆகஸ்ட் 27, 2016

என்னில் "தூரெ"டுத்தவன்...

{என்னைவிட, 3 அகவை குறைவெனினும்; "பிறவிப் பெரும்பயன் கண்ட வகையில்" 
நீ சாகாவரம் பெற்று - பல அகவைகள் "மூத்து" வாழ்வாய்!} 

             நம்மையும் அறியாமல்,  சிலர் மரணம் நம்மை மிகவும் பாதிக்கும். 14 ஆகஸ்த்து, 2016 அன்று நிகழ்ந்த - முனைவர். திரு. நா. முத்துக்குமாரின் மரணம் என்னை மிகவும் பாதித்தது! ஏன் என்னைப் பாதித்தது என்பதாய் சரியாய் விளக்க முடியவில்லை; அதை ஆராயவும் முனையவில்லை. என் முகநூல் நண்பர் திரு. சுடர் பாலா முதன்முதலில் "ஆனந்த யாழை" என்ற பாடலைப் பற்றி குறிப்பிட்டு; அதை என் மகளோடு நான் கொண்டிருக்கும் உறவைத் தொடர்பு படுத்தியதால் இருக்கலாம்! திரு. கமல்ஹாசனின் அபிமானியான எனக்கு, அவரே முத்துக்குமாரைப் பற்றி அடிக்கடி பாராட்டக் கேட்டதால் இருக்கலாம்! அல்லது என்மகளும் இரசிக்கும் "ஆனந்த யாழை" பாடலை 500-க்கும் கூடுதலான முறை (கேட்ட/பார்த்த)தால் இருக்கலாம் - எதுவாயினும், அம்மரணம் என்னைப் வெகுவாய் பாதித்தது! அப்பாதிப்பு இன்னமும் நீங்கவில்லை. இறந்த ஒரு வாரத்தில் தந்தி தொலைக்காட்சியில் வெளியான "ஆனந்த யாழை மீட்டியவன்" என்ற...

    நிகழ்ச்சி துவங்கி (மேலுள்ள புகைப்படங்களைப் பார்க்கவும்); இன்று காலை இந்த தலையங்கத்தின் முதல் வடிவத்தை எழுதும் போது(ம்) அதே தொலைக்காட்சியில் வெளியான "கவிஞர் நா. முத்துக்குமார் நினைவலைகள்" நிகழ்ச்சி வரை; ஏதேனும் ஒரு வடிவில் அவரைப் பற்றிய நினைவுகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. கிட்டத்திட்ட 3 ஆண்டுகளுக்கு முன்; 8 செப்டம்பர், 2013 அன்று "நா. முத்துக்குமார் அவர்களுக்கு..." என்று நானெழுதிய மனதங்கம் (இணைப்பு: http://vizhiyappan.blogspot.ae/2013/09/blog-post_5021.html) பலருக்கும் தெரிந்திருக்கும். அதில் ஒரு சந்தேகத்தைக் கேட்டு, 2 பரிந்துரைகளையும் சொல்லி இருந்தேன்.  அதை அவர் படித்திருக்க "மிக மிக குறைவான வாய்ப்பே" உண்டு; ஏனெனில், அவர் போன்ற ஒரு படைப்பாளி - என்னைப்போன்ற ஒரு "சிறு படைப்பாளியின்" படைப்பை காண்பதற்கு வாய்ப்புகள் இல்லை. ஒருவேளை, நானும் பிரபலமாய் இருந்திருப்பின், என் மனத்தங்கம் அவரை...

             எளிதில் எட்டியிருக்கும். அல்லது அதைக் கவனித்து(ம்) "ஒரு சிறு புன்னைகையோடு" அவர் கடந்திருக்கக்கூடும். அப்பதிவு அவரின் படைப்பில் குறை காணும் முயற்சி அல்ல; அவரின் படைப்பு என்னுள் ஏற்படுத்திய பாதிப்பின் விளைவு! அவ்விளைவையும் "மகள்-தந்தை உறவு..." என்ற தலைப்பில், அது சார்ந்த என் பதிவுகளை சான்றுகளிட்டு - ஒரு தலையங்கமாய் எழுதி இருந்தேன் (இணைப்பு: http://vizhiyappan.blogspot.ae/2013/09/blog-post_4541.html). அதன்பின் கூட, அவர் மீதான கவனம் கூடவில்லை; ஆனால், கமல் தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டே இருப்பார். நான் மட்டுமல்ல; எழுத்து/இலக்கிய உலகம் கூட - அவரிருந்தபோது, அவரைக் கவனித்து/கொண்டாட தவறிவிட்டது - என்பதே மேற்குறிப்பிட்ட இன்று காலை நான் பார்த்திட்ட நிகழ்ச்சியில் - பலரின் ஆதங்கமாகவே இருந்தது. என்ன செய்வது? இவர் போன்ற படைப்பாளிகள் - உரிய காலத்தில் கொண்டாடப் படுவதில்லை! ஏன்? பாரதியைக் கூட அவரிருக்கும்போதே...

     அதிகம் கவனித்து/கொண்டாடப் படவில்லை. இவர்கள் அளவுக்கு இல்லையெனினும் - எனக்குரிய அங்கீகாரம் நான் இருக்கும்போதே கிடைக்கவேண்டும் என்ற ஆசை அவ்வப்போது எழுவதுண்டு. நான் இறந்தபின்னாவது கிடைப்பின்; அது(வே) என் பிறப்பிற்கு சான்றாகும். இருக்கும் போது - அவருக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது உண்மையாயினும்; இனிமேல்  அவருக்குரிய அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு மிகுந்திருக்கிறது. அதற்கு - அவர் என்னுள் ஏற்படுத்தி இருக்கும் தாக்கமே சான்று! அந்தப் பாதிப்பை, முறையாய் பிறருக்கு கடத்துவதே இந்த பதிவின் நோக்கம். அவர் இறந்து சரியாய் ஒரு வாரம் கழித்து, 21 ஆகஸ்த்து, 2016 அன்று - மேற்குறிப்பிட்ட "ஆனந்த யாழை மீட்டியவன்" என்ற நிகழ்ச்சியில்; ஒருவர் வாசித்துக் காட்டிய, கணையாழியில் வெளியான முத்துக்குமாரின் "தூர்" என்ற கவிதை (இணைப்பு: https://anbasivamgeevee.blogspot.ae/2012/01/blog-post_07.html) - என்னைத் தூக்கிவாரிப்...

            போட்டது. அதுவரை, அக்கவிதையைப் படித்ததில்லை. அன்றும் - சொல்லக் கேட்டது தான்; ஆனால், கேட்ட மாத்திரத்தில் என்னுள் பேர்விளைவை உண்டாக்கியது. என்னுள், நானே புதைத்த பலவற்றை "தூர்" வாரி போட்டது; நிறுத்தப் பட்டிருந்த கவிதை எழுதும் செயல் தொடர, தினம் ஒரு கவிதையாய் பதிகிறேன். ஏற்கனவே எழுதியதை "சீர்படுத்தி" பதியவேண்டும் என்ற உறுதியும் கொண்டேன். அன்றிலிருந்து நான் எழுதும் கவிதைகள் - எனக்கே அதிகம் பிடிக்கின்றன. அற்ப ஆசைகளில் மூழ்கி, என்னுள் நானே புதைத்திட்ட திறம் வெளியே "தூர்"ஆய் வாரிப் போடப்பட்டது. என்னைப் போன்று பலருள்; முத்துக்குமாரின் படைப்புகள் "தூர்" வாரும் என்பது உறுதி. என்னுடைய அனுபத்தை "இறந்தும் தூரெடுப்பவன் (நா. முத்துக்குமார்)" என்ற தலைப்பில் ஒரு கவிதையாயும் பதிந்தேன் (இணைப்பு:http://vizhiyappan.blogspot.ae/2016/08/blog-post_86.html). அதிலிருந்து, சில வரிகள் கீழே:

                                                         உன்னுயிர் மறைந்தாலும்;
                                                         உன்னுருவு மறையாமல்;
                                                         என்னவர் போன்றோரால்
                                                         எஞ்ஞான்றும் காக்கப்படுவாய்!

ஆம், முத்துக்குமார்! உனக்கு மரணமில்லை; பலருள்ளும் நீ வாழ்வாய்!!

பின்குறிப்பு: அவரின் மரணம் குறித்து, சிலர் கேலியாகவும் - அறிவுரை சொல்வது போலவும் "அற்ப ஆசையில்" பேசி மகிழ்கிறார்கள். திரு. கலாபவன் மணி இருந்தபோதும் - இம்மாதிரியான விமர்சங்கள் எழுந்ததை - தவறென்று சுட்டிக்காட்டி பதிந்திருக்கிறேன். அருள்கூர்ந்து, இவற்றைத் தவிர்த்திடுங்கள் அன்பு உள்ளங்களே! "ஆனந்த யாழை மீட்டியவன்" என்ற நிகழ்வில் ஒருவர் வைத்த வேண்டுகோளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்: "அவரின் சுடலை வெளிச்சத்தில், உங்கள் முகத்தை வெளிச்சாமாக்கிக் கொள்ள வேண்டாம்!" என்பதே அது! - என்னவொரு ஆத்மார்த்தமான வரி? முத்துக்குமாரை மட்டுமல்ல! இறந்த வேறெவரையும்(கூட) விமர்சிக்கும் முன், இந்த வேண்டுகோளை நினைவில் கொள்ளுங்கள் அன்புள்ளங்களே!  

இறந்து(ம்) தூரெடுப்பவன் (நா. முத்துக்குமார்)...


படிக்கக்கூட இல்லை;கேட்ட
பொழுதப்போதே என்னுள்ளும்
தூரெடுத்தது - கணையாழியில்
நீ(யெழு/யெடுத்)திட்ட "தூர்"!

அற்பஆசைகளில் புதைந்து;
பின்னர்பின்னர் என்றெனவே
என்எண்ணக் கிணற்றில்
புதை(ந்/த்)த சிந்தனைகளை,

கவிதைகளாக ஊற்றெடுக்க;
முனைப்பை "வேராய்"ஆக்கி
அற்பங்கள் ஒவ்வொன்றையும்
"தூராய்"அகற்ற லானேன்!

அதிசயமதை எப்படிவிவரிக்க?
புதைந்திட்ட ஊற்றகற்றிடவும்;
விளைந்தது புதுஊற்றுகளுமே!
வாழ்ந்திடுவாய் "முத்துக்குமார்!"

உன்னுருவு மறைந்தாலும்;
உன்னுயிர் மறையாமல்;
என்னவர் போன்றோரால்
எஞ்ஞான்றும் காக்கப்படுவாய்!

குறள் எண்: 0391 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 040 - கல்வி; குறள் எண்: 0391}

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

விழியப்பன் விளக்கம்: கற்பவை எதுவாயினும்குறையேதுமின்றி கற்கவேண்டும்அப்படிக் கற்றபின்,  கற்றவண்ணம் வாழ்தல் வேண்டும்.
(அது போல்...)
சிந்திப்பது எதுவாயினும்அறத்தவறின்றி சிந்திக்கவேண்டும்அப்படிச் சிந்தித்தபின்சிந்தித்தவாறு செயல்படுதல் வேண்டும்.
*****

வெள்ளி, ஆகஸ்ட் 26, 2016

என்வளர்ச்சியில் - "விமர்சன உரம்" இட்டவர்கள்...


"என் கருத்துக்களை (பிழை பொருத்தும்/தெரியாமலும்) ஏற்றுக்கொள்ளும் "பாண்டிய மன்னர்களுக்கும்"; குறைகளை சுட்டிக் காட்டும் "நக்கீரர்களுக்கும்" நன்றிகள் பல!!!"

        மேலுள்ள சொற்றொடர் என் வலைப்பூவின் "துணைத் தலைப்பாய்" இருப்பது. இயல்பிலேயே எனக்கு விமர்சனத்தைச் சரியாய் எடுத்துக் கொள்ளும் திறன் உண்டு; விமர்சிப்போரிடம் "விவாதம் செய்யும்" பழக்கம் உண்டு. பல விமர்சனங்களை விவாதமில்லாமல், எளிதில் ஒப்புக்கொள்வதில்லை. விவாதங்கள் நம் புரிதலை அதிகமாக்கும் என்பது என் அனுபவம்/நம்பிக்கை. அதேநேரம், என்னுடைய விவாதங்கள் விமர்சிப்போரைக் காயப்படுத்தக் கூடாது என்ற கவனமும் மிக அதிகம்; சில நேரங்களில் "சூழல் காரணமாய்" அதை தவறி விடுவதுண்டு. ஆனால், அதை அடுத்த வினாடியே - உணர்ந்துவிடுவதும் என் இயல்பு; உணர்ந்தவுடனேயே, எந்த தயக்கமும் இன்றி மன்னிப்பு கேட்பேன். இந்த அடிப்படையில், என் எழுத்து/இலக்கியப் பணி வளர்ச்சியில் - "விமர்சன உரம்" இடடவர்களை வெளியுலகுக்கு உரைக்கவே இத்தலையங்கம்.
  • என்னப்பன்: விமர்சனமென்று என்னப்பன் ஏதும் பெரிதாய் செய்யவில்லை எனினும்; இன்னமும் ஒரு "தமிழ் ஆசிரியராய்" இருந்து எனக்குக் கற்பிப்பவை அதிகம். இன்று கூட, என் சமீபத்திய கவிதையொன்றில் அதிக எண்ணிக்கையில் "அசை" உபயோகித்ததைக் குறிப்பிட்டு, அவரிடம் இலக்கணம் கற்றேன். இனி, அந்த தவறு நேராது. முன்பே "என் தமிழுக்கு வித்திட்டவர்..." என்ற தலையங்கத்தில் சான்றிட்டது போல் - வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம்; அவரிடம் என் படைப்புகளைக் காண்பித்து, நிறைய கற்பேன். அவரின் கற்பித்தல் - என் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. இந்தமுறை வேறு காரணத்திற்காய் எனினும்; மீண்டும் ஒருமுறை கும்பிடறேன்பா!. நன்றி என்னப்பனே! 
  • நண்பன் "முனைவர். திரு. சுரேஷ் பாபு": அடுத்து, நான் அடிக்கடி குறிப்பிடும் என் நண்பன். ஒரு எழுத்தாளனாய்/இலக்கியவாதியாய் - நான் வளரவேண்டும்; என்ற உண்மையான முனைப்பு/அன்பு/அக்கறை செலுத்துபவன். என் படைப்புகளைத் தொடர்ந்து "உண்மையாய் விமர்சித்து" வருபவன். என் படைப்புகளை மகிழ்ந்து சிலாகிக்கும் அதே வேளையில்; என் தவறுகளை எந்த தயக்கமும் இல்லாமல் "வீரியத்தோடு" சுட்டிக்காட்டுபவன். அவனைப் போல் ஒரு விமர்சகன் கிடைத்திருப்பது - என் கொடுப்பினை. அவனின் விமர்சனத்தை சரியான விதத்தில், புரிந்து கொள்ளும் மனநிலை எனக்கிருப்பது - என் கிருபை. மிக்க காட்டமாய் விமர்சிப்பான்! மிகக் காட்டமாய் விவாதிப்போம்! - எந்நேரத்திலும், படைப்பை விமர்சிக்கும் கண்ணியம் தாண்டி - தனிப்பட்ட வகையில் ஒருவரையொருவர் விமர்சித்ததே இல்லை! "என் எழுத்து பிடிக்கவில்லை என்றால்; விலகி செல்லடா!" என்று ஒருபோதும் நான் சொல்லியதில்லை. இந்த தலையங்கத்தின் முதல் வடிவத்தை எழுதிக் கொண்டிருக்கும்போது கூட - "கடமை" என்ற சொல்லை மையப்படுத்தி கடுமையாய் விமர்சித்தோம். அவன் ஒப்புக்கொள்ளும் வகையில் - அவனுக்கு விளக்கம் கொடுப்பினும்; அவனின் பார்வையில், இருக்கும் நியாயம்(உம்) புரிந்தது. அதை மாற்றிவிடலாம் என்று தீர்மானித்து இருக்கிறேன். இதுதான், ஒரு விமர்சகரை எதிர்கொள்ளும் விதம் - அவனின் விமர்சனத்தை நான் மதிக்கவில்லை எனில், அவன் விமர்சனம் தடைப்பட்டு இருக்கும். அவன் விமர்சனம் தடைபட்டு இருந்தால், என் வளர்ச்சி குறைபட்டிருக்கும். ஆனால், ஒருவரையொருவர் பரஸ்பரம் புரிந்து; ஒருவரையொருவர் பரஸ்பரம் மதித்து - அவனின் விமர்சனமும்/எங்கள் விவாதங்களும்/என் வளர்ச்சியும் - ஒருசேர வளர்ந்து கொண்டிருக்கிறது. நன்றியடா மாப்ளே!
  • நண்பன் "திரு. கதிர்வேல்": என் பள்ளித்தோழன்! தமிழ் பயின்றவன்! தமிழ் நேசன்! - நான் அடிக்கடி சொல்வது போல், என் படைப்பு நன்றாக இருக்கிறது என்ற விமர்சனம் எனக்கு சந்தோசம் கொடுக்கும் எனினும்; இவன் போல் குறைகளைச் சரியாய் சுட்டிக்காட்டும் விமர்சனத்தைத் தான் நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன். ஆம், பாராட்டை சொல்ல மறந்தாலும் - ஒருக்காலமும் "விமர்சனத்தை" மறக்காமல் செய்பவன். முக்கியமாய், திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதும் என் பணியை மையப்படுத்திய "குறளும் வாழ்வியலும்" என்ற எங்கள் வாட்ஸ்ஆப் குழுவில் - நிறையக் குறைகளைச் சுட்டிக்காட்டி; என் கருத்தை செம்மைப் படுத்தியவன். அவன்மகள் செல்வி. பவஸ்ரீ கூட என் குறை களைந்திட உதவி இருக்கிறாள்; அவளிடம் கூட மன்னிப்பு கேட்டு, அவளுக்கு நன்றி சொல்லி இருக்கிறேன். "அவளிடம் கூட" என்றது விமர்சகர் எவராய் இருப்பினும்; விமர்சனத்தை மதிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தவே. மற்றபடி, என்மகளிடம் கூட நான் மன்னிப்பு கேட்பதுண்டு; பவஸ்ரீயும் என்மகளே! அவளிடம் மன்னிப்பு கேட்க எனக்கு எந்த தயங்கும் இல்லை. இப்படி விமர்சனத்தை ஏற்பது தான் - ஒருவரின் வளர்ச்சிக்கு உரமிடும் என்று நான் திடமாய் நம்புகிறேன். குறைகளைச் சரியாய் சுட்டுவதனாலேயே எங்கள் நட்பு வட்டத்தில் "நக்கீரன் என்று அன்புடன்" அழைக்கப்படுபவன். நன்றியடா நக்கீரா!
  • கோவல் நண்பர்கள்: என் கிராமத்தின் அருகிருக்கும் திருக்கோவலூர் என்ற நகரில் உள்ள நண்பர்கள்; இதற்காகவும் "கோவல் நண்பர்கள்" என்ற பெயரில் ஒரு வாட்ஸ்-ஆப் குழுவுண்டு. திருக்குறள் தவிர்த்த, என் மற்ற படைப்புகளில் பலதும் இங்கே விவாதிக்கப்படும். 
  1. முதலில், பாரத்: என்னை வெகு உயர்வாய் பாராட்டுபவன். "பன்முக அறிவு" கொண்ட அன்பன்; குறிப்பாய், அவனின் ஆன்மீக மற்றும் வரலாற்று அறிவு - மிகுந்த பாராட்டுக்குரியது. அவன் முன்வைக்கும் அன்பு விமர்சனங்களும் - என் வளர்ச்சிக்கு காரணம்! அதேபோல், மறுப்புகளையும் மறைக்காமல் சுட்டிக் காட்டுபவன்.
  2. இரண்டாவது, ஜனா: மிக நேர்மையாய்/காட்டமாய் விமர்சிக்கும் விமர்சனன். "கபாலி ஸ்டைலில் ஒரு காலை வணக்கம்" என்றோர் காணொளியை உருவாக்கி யூ-டியூபில் பகிர்ந்தேன்! அதைப் பார்த்ததும், அவன் வைத்த விமர்சனம் - அப்பப்பா! அவன்(உம்) ஒரு கலைஞன் என்பதால் - மிகக் கடுமையாய் இருந்தது! அதே காட்டத்துடன் நிறைய விவாதித்தோம்; "வழக்கமான விடுமுறை நாள் தூக்கத்தை" இழந்து, அன்று மாலையே வேறோர் வடிவத்தில் காணொளி ஆக்கினேன். அதிலும் 5 விழுக்காடு அளவில் குறை கண்டிடினும் - வெகுவாய் பாராட்டினான். அப்படி குறைகளையும் முனைப்பு தான் நான்; அது தான் என் வளர்ச்சிக்கு ஆதாரம் - அதற்கு சரியான உரமிடுவோர் தான் இவனும், இங்கே குறிப்பிட்டிருக்கும் இவன் போன்றோரும்.
  3. மூன்றாவது, பாலாஜி: விமர்சனம் என்ற பெயரில் இல்லாமல்; விமர்சனமே செய்யாமல் - என் வளர்ச்சிக்கு உரமிடுபவன். ஆம்! விமர்சனத்தில் இரண்டு வகை உண்டு: ஒன்று - நேர்மறை; மற்றொன்று - எதிர்மறை. இந்த தலையங்கத்தில் குறிப்பிடப் பட்டிருப்போர் அனைவரும் - இரண்டாவது வகையில் "அதிக உரம்" இட்டவர்கள். பாலாஜி - இரண்டும் இல்லாமல், கேள்வியால் என் சிந்தனையை வளர்த்து; என் வளர்ச்சியில் பங்கு கொள்பவன். ஆம் - அவன் கேள்வியின் நாயகன்! அவன் கேள்விகளுக்கு பதில் அளிக்க - நான் செய்யும் சிந்தனையில், என் படைப்புகள் தரமுயர்வதுடன்; அதிலிருந்து புதிய படைப்புகளும் உருவாகும்.
  4. மற்ற நண்பர்கள்: காதர், ஜோதி போன்று இன்னும் பல நண்பர்கள் - தங்கள் அன்பான நேர்மறை விமர்சனங்கள் மூலமாக அவ்வப்போது என் வளர்ச்சியில் உரமிடுவார்கள். இதில், காதர் ஒரு தமிழ் நேசனும் கூட - வார்த்தை நாயகன்! அருவிபோல் வார்த்தைகளை வாரிக்கொட்டும் "வார்த்தைக்கடல்" அவன். நன்றிங்கடா நட்புகளே!
  • முகமறியா வாசகர்கள்: பரஸ்பரம் முகமறியா நிறைய அன்பர்கள் - வாசகர்களாய் அமையப் பெற்றது என் பாக்கியம். அவர்களில் சிலர் இடும் பின்னூட்டங்கள் எனக்கு ஊக்கியாகவும்; "குறைகளைப்பான்" களாகவும் அமைந்தன. நம் படைப்புகளைத் தொடர்ந்திட, சில வாசகர்கள் இருக்கிறார்கள் என்பதே - ஒரு படைப்பாளனுக்கு வீரியமுள்ள உரம்தான். நன்றி வாசகர்களே!
          ஒரு படைப்பாளியின் வளர்ச்சி - விமர்சனங்களில் இருக்கிறது என்பது என் பலத்த நம்பிக்கை. குறிப்பாய் - குறை உணர்த்தும் விமர்சனங்கள்! ஆனால், அவற்றை சரியான விதத்தில் உணர்ந்து; முறையாய் விவாதிக்கும் - திண்ணம் படைப்பாளிக்கு இருக்கவேண்டும். சரியான விமர்சனங்கள் இல்லாமல், வளர்ச்சி அடையாத படைப்பாளிகளும் உண்டு! சரியான விமர்சனங்களை, சரியாய் உணராமல் - வளர்ச்சி அடையாத படைப்பாளிகளும் இங்குண்டு!! என் வளர்ச்சியில் - எனக்கு மிகுந்த கவனம் இருக்கிறது; எனவே, உங்கள் விமர்சனங்களை அதிகமாய் இடுங்கள்...
உங்கள் "விமர்சன உரங்கள்" - என்னை விருச்சமாய் வளர்த்திடட்டும்!!!

முக்கிய(மானவர்) குறிப்பு: "வேலை மற்றும் வீடு" இரண்டையும் கவனிக்க நேரமே இல்லை என்பதால் - மேற்குறிப்பிட்டவர்கள் போல் "விமர்சன உரத்தால்" பெரிதாய் பங்கு கொள்ளவில்லை எனினும் - நான் கேட்கும்போது மட்டும் விமர்சித்த ஒருவருண்டு! அவர் மட்டும் "ஒரேயொரு விமர்சனத்தை செய்திருந்தால்" - என் எழுத்துப்பணி வளர்வது மட்டுமல்ல; தொடர்வதும் சாத்தியமில்லை! ஆம், பெரும்பான்மையான ஆண்களின் இம்மாதிரியான முயற்சிக்கு பெரிதும் முட்டுக்கட்டையாய் இருப்பது - "என்னங்க? எதுக்கு இந்த தேவையில்லாத வேலை உங்களுக்கு?!" - எனும் ஒரு மனைவியின் கேள்வியே. என்னவள் - இதுவரை அப்படி கேட்டதேயில்லை! இனியும் கேட்கமாட்டாள். ஏனெனில் - அவள் தமிழ் உணர்ந்தவள் மட்டுமல்ல; பாரம்பரிய தமிழ் குடும்பத்தில் இருந்தும் வந்தவள்!. எனவே, கேட்டபோது வைத்த விமர்சனங்களையும் தாண்டி - அவள் வைக்காத மேற்குறிப்பிட்ட ஒரு விமர்சனம் - என் வளர்ச்சியில்/தொடர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. நன்றியடி என்னவளே!  

அதிகாரம் 039: இறைமாட்சி (விழியப்பன் விளக்கவுரை)

{இணையத்தில் கிடைத்த புகைப்படத்தில், குறிப்பைச் சேர்த்திட்டேன்}

பால்: 2 - பொருள்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 039 - இறைமாட்சி

0381.  படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
           உடையான் அரசருள் ஏறு

           விழியப்பன் விளக்கம்: இணையற்ற “படைபலம்/குடிமக்கள்/உணவு/அமைசர்கள்/நட்பு/

           கோட்டை” எனும் ஆறுமடைய அரசன், அரசர்களில் சிங்கம் போன்றவன்.
(அது போல்...)
           ஒப்பற்ற “அரசாங்கம்/இராணுவம்/அறவொழுக்கம்/தேசப்பற்று/சுயசிந்தனை/நல்லிணக்கம்” 
           எனும் ஆறுமுடைய நாடு, உலக நாடுகளில் வல்லரசாகும்.
        
0382.  அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
           எஞ்சாமை வேந்தர்க் கியல்பு

           விழியப்பன் விளக்கம்: வீரம்/இரக்கம்/பகுத்தறிவு/வைராக்கியம் - இவை நான்கும்; எந்த 

           சூழலிலும் குறையாமல் இருப்பதே, அரசருக்கு இயல்பாகும்.
(அது போல்...)
           மண்வளம்/நீர்வளம்/தரமான-விதை/தழைச்சத்து - இவை நான்கும்; எந்த வகையிலும் 
           சிதையாமல் காப்பதே, விவசாயத்தின் அடிப்படையாகும்.
           
0383.  தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
           நீங்கா நிலனாள் பவர்க்கு

           விழியப்பன் விளக்கம்: விழிப்புணர்வு/கல்வியறிவு/செயல்துணிவு - இவை மூன்றும்; நிலத்தை 

           ஆள்பவரை, எந்நிலையிலும் நீங்காமல் இருக்கவேண்டும்.
(அது போல்...)
           பெற்றோர்/குடும்பத்தார்/உடன்பிறந்தோர் - இவர் மூவரும்; குடும்பத் தலைவரை, எப்போதும் 
           கைவிடாமல் இருக்கவேண்டும்.

0384.  அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
           மானம் உடைய தரசு

           விழியப்பன் விளக்கம்: அறவினைகள் தவறாமை/அறமற்றவற்றைத் தவிர்த்தல்/வீரத்தை  

           இழக்காமை - இவ்வித சுய கெளரவங்களை உடையதே, உண்மையான அரசாங்கமாகும்.
(அது போல்...)
           விமர்சிப்பவரை விமர்சிக்காதது/குறைகளைக் களைவது/சுயத்தை இழக்காதது - போன்ற 
           நல்ல ஒழுக்கங்களை உடையதே, உயர்வான மனிதமாகும்.

0385.  இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
           வகுத்தலும் வல்ல தரசு

           விழியப்பன் விளக்கம்: நிதி வளங்களை - உருவாக்குதல்/உயர்த்துதல்/பாதுகாத்தல்; 

           காத்தவற்றை முறையாய் பகிர்தல் - இவைகளில் வல்லமையுடையதே அரசாகும்.
(அது போல்...)
           சமூக அவலங்களை - கவனித்தல்/உள்வாங்குதல்/பிரதிபலித்தல்; பிரதிபலித்தவற்றைச் 
           சரியாய் கடைப்பிடித்தல் - இவற்றில் சிறந்தவரே படைப்பாளியாவர்.

0386.  காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
           மீக்கூறும் மன்னன் நிலம்

           விழியப்பன் விளக்கம்: அரசாள்பவர் - பார்ப்பதற்கு எளிமையாய், பிறர்மனம் புண்பட 

           பேசாதவனாய் இருப்பின்; அவர்கள் ஆளும் நாடு, உயர்வாய் புகழப்படும்.
(அது போல்...)
           படைப்பாளி - பழகுவதற்கு எளிதாய், விமர்சிப்போரை விமர்சிக்காத நேர்மையுடன் 
           இருப்பின்; அவர்கள் படைக்கும் படைப்புகள், அறமுடன் பயணப்படும்.

0387.  இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
           தான்கண் டனைத்திவ் வுலகு

           விழியப்பன் விளக்கம்: கனிவான பேச்சுடன், வேண்டியதைக் கொடுக்கும் திறனுடைய 

           ஆட்சியாளருக்கு;  அவர்கள் புகழ்காத்து, அவர்கள் விரும்பிய வண்ணம் - இவ்வுலகம் 
           அமையும்.
(அது போல்...)
           பொதுநல நோக்குடன், ஊழலை ஒழிக்கும் திண்ணமுடைய தலைவருக்கு; அவர்கள் 
           வெற்றிபெற, அவர்களுக்கு துணையாய் இருந்து - மக்கள் உதவுவர்.

0388.  முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
           இறையென்று வைக்கப் படும்

           விழியப்பன் விளக்கம்: அறச்செயல்களை வகுத்து, மக்களைப் பாதுகாக்கும் அரசாள்வோர்; 

           மக்கள் மனதில், இறைவனுக்கு நிகராய் உணரப்படுவர்.
(அது போல்...)
           சூழல்களை உணர்ந்து, குடும்பத்தை வாழ்விக்கும் பிள்ளை; உடன்பிறந்தோர் மனதில், 
           பெற்றோருக்கு நிகராய் மதிக்கப்படுவர்.


0389.  செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
           கவிகைக்கீழ்த் தங்கும் உலகு

           விழியப்பன் விளக்கம்: செவிமடுக்க முடியாத விமர்சன சொற்களையும், பொறுத்தருளும் 

           பண்புடைய; அரசனின் அருட்குடையின் நிழலில், உலகம் அமைதியாய் தங்கும.
(அது போல்...)
           அறமற்ற வகையில் விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளையும், அரவணைக்கும் குணமுடைய; 
           ஆள்பவரின் உன்னதமான சேவையில், மக்கள் பயமின்றி வாழ்வர்.

0390.  கொடைஅளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
           உடையானாம் வேந்தர்க் கொளி

           விழியப்பன் விளக்கம்: வேண்டியவருக்கு கொடுத்தல்/கனிவுடன் பேசுதல்/அறம் 

           கடைப்பிடித்தல்/மக்களைப் பாதுகாத்தல் - இந்நான்கு நல்லொழுக்கம் உடைய அரசனே
           மற்ற மன்னர்களுக்கு கலங்ககரை விளக்காவான்.
(அது போல்...)
          முறையாய் பகிர்தல்/எதிர்பார்ப்பற்ற தியாகம்/முதியோரை மதித்தல்/உறவுகளைப் பேணுதல் - 
          இந்நான்கு அறங்களை உடைய உறுப்பினரேமற்ற உறுப்பினர்களுக்கு குடும்பத் 
          தலைவராவர்.
*****

குறள் எண்: 0390 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 039 - இறைமாட்சி; குறள் எண்: 0390}

கொடைஅளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி

விழியப்பன் விளக்கம்: வேண்டியவருக்கு கொடுத்தல்/கனிவுடன் பேசுதல்/அறம் கடைப்பிடித்தல்/மக்களைப் பாதுகாத்தல் - இந்நான்கு நல்லொழுக்கம் உடைய அரசனேமற்ற மன்னர்களுக்கு கலங்ககரை விளக்காவான்.
(அது போல்...)
முறையாய் பகிர்தல்/எதிர்பார்ப்பற்ற தியாகம்/முதியோரை மதித்தல்/உறவுகளைப் பேணுதல் - இந்நான்கு அறங்களை உடைய உறுப்பினரேமற்ற உறுப்பினர்களுக்கு குடும்பத் தலைவராவர்.

இதில் எது சிறந்தது?


அகவை31-இலும் தந்தையின் தயவில்நான்
படித்துக் கொண்டிருக்க - என்வயதோர்
"வேலை/ தலைமுறைதொழில்/ வியாபாரம்"
என்றவொன்றால் பொருள் ஈட்டும்பணியில்!

ஊரும்/உறவும் பலவகையில் விமர்சிக்க
பெற்றோரும்உடன் பிறந்தோரும் ஆதரிக்க
படிப்பும் தொடர்ந்தது படிப்படியாயும்
முடிவில்நானும் முனைவனும் ஆனேன்!

என்வயதை ஒத்தோர்பலரும் விரைவாய்
"வீடுகட்டல் திருமணம் பிள்ளையென"
உயர்கையில் - நான்மட்டும் "முதல்"படியில்
எனக்கும்அவை நடந்தன - காலம்கடந்தே!

நிழலாய்இருந்த தந்தைக்கு நிழலானேன்
உந்திவிட்ட தமையன்-மக்களை உந்தினேன்
உரமிட்ட மருதமையன்-மக்கட்கு உரமானேன்
ஊக்கிவிட்ட வம்சத்தார்-மக்களை ஊக்கினேன்

என்வயதோர் பலர்விரைந்து வாழ்ந்து
(விரை/வாழ்)ந்தே ஓய்கையில்; நான்மட்டும்
"மெதுவாய்! இயல்பாய்!"இதில் எதுசிறந்தது?
"இறந்த/(பின்)வரும்" காலம் நிர்ணயிக்கும்!

வியாழன், ஆகஸ்ட் 25, 2016

குறள் எண்: 0389 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 039 - இறைமாட்சி; குறள் எண்: 0389}

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு

விழியப்பன் விளக்கம்: செவிமடுக்க முடியாத விமர்சன சொற்களையும், பொறுத்தருளும் பண்புடைய; அரசனின் அருட்குடையின் நிழலில், உலகம் அமைதியாய் தங்கும.
(அது போல்...)
அறமற்ற வகையில் விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளையும், அரவணைக்கும் குணமுடைய; ஆள்பவரின் உன்னதமான சேவையில், மக்கள் பயமின்றி வாழ்வர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

புதிதாய் பிறந்தேன்...


கடலளவில் மது
குளத்தளவில் புகை
குடத்தளவில் மாது
குவளையளவில் "கஞ்சா"வென...

என்நிலை மறக்கடிக்கும் சிற்றின்பம்
சேர் செய்கைகள் எண்ணவியலா!
என்நிலை சிறப்பிக்கும் பேரின்பம்
சேர் செய்கைகள் விரலே-எண்ணும்!

44-அகவையில் பாதி சிற்றின்பத்தில்
மீதமிருப்பது நான்கோ? ஐந்தோ?
இருப்பதில் மிகுதியை; பேரின்பம்
சேர்ப்பதில் தகுதியை வளர்க்க...

கல்லறைக்கு முன்-மீண்டும்
கருவறைக்குள் புகுந்திடாமல்
பிறந்தேன்நானும் புதிதாய்!
பதிவேன்நாளை என்பெயரை;

பிரபஞ்சம் இல்லையெனினும்
“பிறந்தமண்” வரலாற்றில்!
பெருந்தகையின் பேரருளுடன்
“பிறவிப்பெருங்கடல்” நீந்திடுவேன்!!

புதன், ஆகஸ்ட் 24, 2016

குறள் எண்: 0388 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 039 - இறைமாட்சி; குறள் எண்: 0388}

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்

விழியப்பன் விளக்கம்: அறச்செயல்களை வகுத்து, மக்களைப் பாதுகாக்கும் அரசாள்வோர்; மக்கள் மனதில், இறைவனுக்கு நிகராய் உணரப்படுவர்.
(அது போல்...)
சூழல்களை உணர்ந்து, குடும்பத்தை வாழ்விக்கும் பிள்ளை; உடன்பிறந்தோர் மனதில், பெற்றோருக்கு நிகராய் மதிக்கப்படுவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வாழ்க்கையெனும் வட்டம்...

{அப்பத்தா மற்றும் அப்பப்பா. வாழ்க்கை வட்டத்தை, புகைப்பட வட்டத்(தி/தா)ல்
குறிப்பாய் உணர்த்தி இருக்கிறேன்}

முயன்றுமுயன்று இறுதியில்வென்றும்
முதன்முதலாய் ஒருவெற்றிகசந்தது;
"முடித்துகொடடா" என்றுகேட்டவளிடம்
"முடித்துகொடுத்து"பேசிய - கேலிநினைவால்!

கண்மூடி"யதுபோல்" அன்றுசெய்ததை
கண்ணாடியணிந்தும் இன்றுமுடியவில்லை!
"ஆயா!இதுகூடவா முடியாதுஉனக்கு?"
அப்பத்தாவைக்கேட்டது - எனக்கு(ள்)கேட்டது!

வென்றதையெண்ணி ஆர்ப்பரிக்கவியலாது
அவள்நினைவுவந்து மனமும்கதறியது
"அப்பத்தா"வென்றே! - இன்றுகாலைநானும்
"ஊசியில்நூலைக்" கோர்த்திட்டபோதே!

கோர்க்கமுடியாத மனவலியினூடேயும்;
"தான்கோர்க்கமுடியாது வலிகொண்டவளிடம்"
நான்பேசியகேலி அவள்வலிபெரிதாக்கி
இருக்குமே?!-என்ற "கண்ணீர்"சிந்தனையில்

முழு-அப்பத்தாவும் என்மணக்கண்ணில்!
வாழ்க்கையெனும் முழுவட்டத்தில்...
அப்பத்தாஇருந்தவிடத்தில் இன்று-நான்!
நானிருக்கும்இடத்தில் நாளை-என்மகள்!!

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2016

ஆண்-திமிர்


இளங்கலை இயற்பியல் பயின்றபோது,
1989-ஆண்டின் ஓர்நாள் காலையில்;
"கைலியில் இரத்தம்!" - பயந்துபோய்...
இராவண அண்ணனிடம் கேட்டேன்;
"ஒன்னுமில்லை போடா"வென அதட்டினார்!
பெருமாள் அண்ணனிடம் கேட்டேன்;
"தன்னியல்பு நையாண்டி"யுடன் சிரித்தார்!

உடன்பயின்ற நண்பர்களிடம் கேட்டேன்;
"பெரிய மனிதனானதாய்" கண்ணடித்தனர்!
"என்வெட்கம்" உணர்ந்த முதல்நாளது;
ஆணுக்கும் வெட்கமுண்டு! மஞ்சள்நீராட்டு(ம்)
காட்டாமல், "வெட்கப்படவே வெட்கப்பட"
அடக்கப்பட்டது ஆணினம்! அடக்கப்பட்ட
வெட்கம்தான் "ஆண்-திமிர்" ஆனதோ?!

குறள் எண்: 0387 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 039 - இறைமாட்சி; குறள் எண்: 0387}

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு

விழியப்பன் விளக்கம்: கனிவான பேச்சுடன், வேண்டியதைக் கொடுக்கும் திறனுடைய ஆட்சியாளருக்கு;  அவர்கள் புகழ்காத்து, அவர்கள் விரும்பிய வண்ணம் - இவ்வுலகம் அமையும்.
(அது போல்...)
பொதுநல நோக்குடன், ஊழலை ஒழிக்கும் திண்ணமுடைய தலைவருக்கு; அவர்கள் வெற்றிபெற, அவர்களுக்கு துணையாய் இருந்து - மக்கள் உதவுவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

திங்கள், ஆகஸ்ட் 22, 2016

குறள் எண்: 0386 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 039 - இறைமாட்சி; குறள் எண்: 0386}

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்

விழியப்பன் விளக்கம்: அரசாள்பவர் - பார்ப்பதற்கு எளிமையாய், பிறர்மனம் புண்பட பேசாதவனாய் இருப்பின்; அவர்கள் ஆளும் நாடு, உயர்வாய் புகழப்படும்.
(அது போல்...)
படைப்பாளி - பழகுவதற்கு எளிதாய், விமர்சிப்போரை விமர்சிக்காத நேர்மையுடன் இருப்பின்; அவர்கள் படைக்கும் படைப்புகள், அறமுடன் பயணப்படும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

புழுக்கம்



புழுக்கம் வருத்தியது!
குளித்தேன் - மீண்டும்
புழுங்கியது; மீண்டும்
குளித்தேன் - மீண்டும்,
மீண்டு(ம்) குளித்தேன்;
புழுக்கம் நிற்கவேயில்லை!

அடேய்... உடல்புழுக்கமே
"சிளிர்நீரால்" தீரும்;
இது உள்(ள)புழுக்கம்;
"சிந்தனையால்"தான் தீரும்!
புத்தி(யும்) சொன்னது;
சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்...

குறிப்பு: சிந்திக்கவியலா விலங்குகள், யானை போன்று தன் உள்புழுக்கத்தை "மதம்" போன்ற வடிவில்தான் தீர்க்கமுடியும். ஆனால், மனிதனால் சிந்தனை மூலமே தீர்க்கமுடியும்.

ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2016

குறள் எண்: 0385 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 039 - இறைமாட்சி; குறள் எண்: 0385}

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு

விழியப்பன் விளக்கம்: நிதி வளங்களை - உருவாக்குதல்/உயர்த்துதல்/பாதுகாத்தல்; காத்தவற்றை முறையாய் பகிர்தல் - இவைகளில் வல்லமையுடையதே அரசாகும்.
(அது போல்...)
சமூக அவலங்களை - கவனித்தல்/உள்வாங்குதல்/பிரதிபலித்தல்; பிரதிபலித்தவற்றைச் சரியாய் கடைப்பிடித்தல் - இவற்றில் சிறந்தவரே படைப்பாளியாவர்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

சனி, ஆகஸ்ட் 20, 2016

கத சொல்லப் போறோம் (2016)...


     இன்று "கத சொல்லப் போறோம்" என்ற தமிழ்ப்படத்தைப் பார்த்தேன். பெரியதாய் ஏதும் விளம்பரம் இருந்ததாய் தெரியவில்லை; பலரும் இந்தப் படத்தின் பெயரைக் கேட்டிருக்கக்கூட வாய்ப்பில்லை. படம் பார்த்த பின்னர் தான் "2016 மே மாதம்" வெளிவந்ததைத் தெரிந்து கொண்டேன். குழந்தைகளை மையப்படுத்திய அற்புதமான படம்! எந்த ஊடகத்திலும் இது சார்ந்த விளம்பரம்/விமர்சனம் பார்த்தாதான் நினைவில்லை. படம் பார்த்த பின்னர் தான் "Behindwoods" இணையதளம் நல்ல விமர்சனத்தைக் கொடுத்திருப்பதைப் பார்த்தேன். இம்மாதிரியானப் படங்களை விமர்சித்து, மேலும் சிலருக்கு கொண்டு செல்வது என் கடமையென உணர்ந்தேன். படத்தைப் பற்றிய என் பார்வை கீழே:
  • பல படங்களைப் பார்க்கும் போது, ஒரு பார்வையாளனாய் - நம் மனது அடுத்த காட்சியை யூகிக்கும். பெரும்பான்மையான படங்களில், அதிக அளவில் நம் யூகங்கள் சரியாய் இருக்கும். ஆனால், மிக எளிமையான கதைக்களம் கொண்ட இந்த படத்தில் - முதல் காட்சியில் இருந்தே - நம் யூகங்களை "கிட்டத்திட்ட முழுதுமாய்" இயக்குனர் தகர்த்திருக்கிறார். ஒரு பார்வையாளனின் நிலையிலிருந்து அவர் அதிகம் யோசித்திருப்பதாய் உணர்கிறேன். எளிமையான காட்சி அமைப்புகள் தான்; ஆனால், நம் யூகங்கள் தவறாகின்றன; அவற்றை, என்னவென்று குறிப்பிட்டு உங்கள் அனுபவத்தைக் குறைக்க விரும்பவில்லை. படம் பார்த்து, நீங்களே உணருங்கள்.
  • சிறுவர்களை மையப்படுத்திய படம் - குறிப்பாய் ஆதரவற்ற சிறார்களை மையப்படுத்திய படம். சிறுவர்களை மையப்படுத்தி பல படங்கள் வந்திருப்பினும் - வணிக நோக்கத்தை முன்னிறுத்தாத - சிறுவர்களின் எதார்த்தத்தை முன்னிறுத்தி திரைக்கதையை அமைத்திருப்பது தான் இந்த படத்தின் மிகப்பெரிய பலம். சமரசம் செய்யாத படைப்பும்/படைப்பாளியும் - ஒரு சமுதாயத்திற்கு கொடுப்பினை. 
  • சிறார்களின் உணர்வுகளை, அதிலும் குறிப்பாய் ஆதரவற்ற சிறார்களின் உணர்வுகளை - இயக்குனர் யதார்த்தமாய்/அழகாய் காட்சிப்படுத்தி இருக்கிறார். காட்சிகளின் யதார்த்தத்தை உணர்ந்து; குழந்தைகளோடு பயணித்தது, காட்சிகளை கவனமாய் உள்வாங்குதல் மிக அவசியம். 
  • நகைச்சுவை, சிறார்களின் உணர்வுகள், மற்ற கதாபாத்திரங்களின் உணர்வுகள் - என்று பல்வகை நிகழ்வுகளை - மிகச்சரியான விதத்திதில்; திரைக்கதையில் புகுத்தி இருக்கும் இயக்குனரின் திறன் கவனிப்புக்கும்/பாராட்டுக்கும் உரியது.
  • படத்தின் வசனங்கள் மிகவும் கூர்மையாய் இருக்கின்றன. என்ன காரணமோ - முதல் 30 நிமிடங்களில் வரும் வசனங்களை, பின்னணி இசையால் சரியாய் கேட்கமுடியவில்லை. தணிக்கை காரணமென தெரியவில்லை - ஏனெனில், தணிக்கை செய்யும் விடயங்கள் அந்த வசனங்களில் நிச்சயம் இல்லை. ஆனால், அதன் பின்னர் பின்னணி இசை சரியாய் கையாளப்பட்டு இருக்கிறது.
  1. நீ கொடுத்து வச்சவ பிரியா - அம்மாவைப் பார்க்க முடியல்லைன்னாலும்; அம்மா மாதிரி இருக்கறவங்களையாவது பார்க்கமுடியுது!
  2. எங்களை மாதிரி குழந்தைகளை கடவுளின் குழந்தைன்னு சொல்வாங்க; ஆனால், அம்மாங்கற கடவுளோட இருக்கற நீங்கள் தான் கொடுத்து வைத்தவர்கள்.
  3. எனக்கு ஒரேயொரு ஆசைதான் - என்னை அனாதையாய் விட்டுவிட்டுப் போன, என் அம்மாவைப்  பார்த்து ஒரு முத்தம் கொடுக்கனும்.
  4. மேலுள்ளவை சில உதாரணங்கள்.
  • பிரியா, அருண் மற்றும் அனிதா என்பன படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள். மேலும் - அர்ஜுன், சீனு, ஜெனி - என்பன படத்தின் பிற முக்கிய கதாபாத்திரங்கள். 
  • "எங்க மாஸ்ட்டர் கூட அம்மாதான்!" என்று அனிதா பேசும்போது - நம் கண்ணீர் நீரை வர வைப்பது மட்டுமல்ல! ஒரு ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும் என்பதையும் "பசுமரத்தாணி போல்" பதிய வைக்கிறார் இயக்குனர். 
  • "மாயவித்தை (Magic)" செய்யும் கலைஞர்கள் பெரும்பான்மையை மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பர்; அவரைக் கூட, அனிதா தன் ஏக்கத்தைக் கேள்வியாய் கேட்டு அவரை நெகிழவைக்கும் காட்சி - நம் கண்ணிலும், கண்ணீரை வரவைக்கிறது.
  • அருணின் பாத்திர படைப்பு மிக அருமை; அந்த சிறுவன் அருமையாய் நடித்திருக்கிறான். சில இடங்களில் "சராசரி படங்களில் வருவது போல், பெரிய மனித தனமாய் பேசுவது" எரிச்சலைக் கொடுத்தாலும் - அவற்றையெல்லாம் மீறி அந்த சிறுவனின் பாத்திர படைப்பும், அவனின் நடிப்பும் பெருத்த பாராட்டுதலுக்கு உரியது.
  • பிரியாவின் நடிப்பு பாராட்டுதலுக்கு உரியது; இயல்பான/முதிர்ச்சியான நடிப்பு. அந்தக் குழந்தைக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. வாழ்த்துகள் மகளே!
  • அருண் - சீனு இடையே நடக்கும் "குழந்தைகளுக்கே உரித்தான சண்டைகள்" மிக யதார்த்தமாய் காட்சி படுத்தப்பட்டு இருக்கின்றன. உண்மையில், குழந்தைகளின் சண்டைகள் இப்படித்தான் இருக்கும். எந்த "வணிக"சாயமும் இல்லாமல் இயல்பான காட்சிகள்.
  • சிறார்களை மையப்படுத்திய, பல திரைப்படங்களில் வருவது போல் - "குழந்தைகளைச் சார்ந்த பெரியவர்கள் இடம்பெறுவது; அவர்களில் இடையே நடக்கும் உறவு/உரிமை பிரசனைகள்" - போன்றவை இந்தப் படத்தில் அறவே இல்லை. குழந்தைகளைச் சார்ந்த பெரியவர்களும், சிறார் கதாப்பாத்திரங்களுடன் இணைபிரியாமல் பயணிக்கின்றனர்.
  • சிறுவர்களை மையப்படுத்திய எல்லா திரைப்படங்களிலும் - வலுக்கட்டாயமாய் இளைஞன்/இளைஞி என்ற கதாபாத்திரங்களை உருவாக்கி; அவர்கள் இடையே ஒரு "காதல் கதையை" தனியே உருவாக்கி - வியாபாரப் புத்தியைக் காண்பிப்பது, தமிழ் திரைப்படத்தின் சாபக்கேடு. என் நினைவில் இருக்கும் வண்ணம், இதற்கு எந்த படமும் விதிவிலக்கில்லை.
  • இந்த படத்திலும் "அரவிந்த் - அஞ்சலி" என்ற ஆசிரியர்கள் இடையே ஒரு காதல் கதை இருக்கிறது. ஆனால், அவர்கள் இருவரும் - குழந்தைகளை விடுத்து; தனியே எங்கும் பயணிக்கவில்லை! மிக குறிப்பாய் "டூயட்" பாடவில்லை; அதுபோல், அவர்கள் இடையே ஒரு உறவு இருப்பதை - குழந்தைகளை மையப்படுத்திய காட்சிகளாலேயே நம்முள் விதைப்பது - இயக்குனரின் சாமர்த்தியம் (சபாஷ் கல்யாண்!).
  • அருண் - ஜெனி இடையே "சிறார் காதல்" போல் சித்தரித்து இருப்பது மிகவும் அழகு! எல்லாக் காலத்திலும், இவ்வயதொத்த சிறார்களுக்கு "சிறார் காதல்" எழுவது மிகவும் இயல்பான ஒன்றே!! அதை மிகச் சரியாய் இறுதிவரை காட்டிய இயக்குனர், இறுதியில் தடுமாறி இருப்பது சறுக்கல்!
  • அருண் - சீனு இடையில் நடக்கும் சண்டையை முடிவுக்கு கொண்டு வருவதாய், அந்த சறுக்கலை இயக்குனர் செய்திருப்பது புரிகிறது. ஆனால், அதை வேறு விதத்தில் "மேலும் அழகாய்" செய்திருக்கலாம் என்பது என் பார்வை.
  • "வடை சுடும் பாட்டி" அற்புதமான - நகைச்சுவை கலந்த கற்பனை; வெகு கவனமாய், அதை சில வினாடிகளுக்குள் காட்சியாக்கி நகர்ந்திருப்பது - இயக்குனரின் திறனை வெளிப்படுத்துகிறது.
  • படத்தில் வரும் "சம்மர் கேம்ப்பை" கூட - எந்த பிரம்மாண்டமும் இல்லாமல், யதார்த்தமாய் நம்மை அந்த சூழலோடும், நிகழ்வுகளோடும் ஒன்றவைத்து அமைத்திருப்பது பாராட்டுதலுக்கு உரியது. 
  • ஒவ்வொரு முறையும், சீனுவுக்கு பிரச்சனை எழும்போது - "அங்க பார்ரா வெள்ளைக் காக்கா பறக்குது!" - என்றபடி வசனம் பேசி சீனுவின் நண்பர்கள் "விலகி நகரும்" காட்சிகள் - மகிழ வைக்கின்றன.
  • "குழந்தைகள் காப்பக விடுதி"யின் காவலாளி கதாபாத்திரமும் அருமை; அவரின் நடிப்பும் பாராட்டுக்குரியது. 
  • பல திரைப்படங்களிலும், தேவையில்லாமல் "காவலர்களை வில்லன் போல்" சித்தரிக்கும் காட்சிகள் இல்லாதது - மிகவும் சிறப்பானது/பாராட்டுக்குரியது. அதிலும், பல படங்களிலும் வில்ல-காவலராய் வரும் அந்த நடிகரையையே நடிக்க வைத்திருப்பது - சிறப்பு!
  • அஞ்சலியாய் வரும் அந்த ஆசிரியர், இறுதிக்கு காட்சியில் அணிந்திருக்கும் "ஜாக்கெட்டின்" பின்புற வடிவமைப்பைக் கண்ணில் தெரியாதவாறு காட்சி படுத்தி இருக்கலாம். சிறார்களை மையப்படுத்திய பல படங்களில், இதைவிட "கீழ்த்தரமான ஆடைகளை" படத்தில் வரும் இளைஞிகள் அணிந்திருப்பதைப் பார்த்து பழக்கப்பட்டவர்கள் தான் நாம் என்னும் - இம்மாதிரியான ஒரு தரமான படத்தில்; அப்படியொரு காட்சி வருவதைக் கூட மனம் ஏற்க மறுக்கிறது
  • "படத்தின் முடிவை" இயக்குனர் ஏன் இப்படி வைத்திருக்கிறார் என்பது புரிந்தாலும்; அதை வேறொரு விதமாய் - மேலும் சிறப்பாய் சொல்லி இருக்கலாம் என்பது என் பார்வை. ஒருவேளை, இயக்குனர் - இங்கும் நம் எதிர்பார்ப்பைத் தகர்க்க எண்ணியிருப்பாரோ?
  • படம் மொத்தமும் "1 மணி நேரம் 43 நிமிடங்களில்" காட்சிப் படுத்தப்பட்டு இருக்கிறது; அதற்குள், நம்மை முழுதாய்/புதியதாய் ஒரு அனுபவத்தை உணர வைத்திருப்பது - இயக்குனரின் சிறப்பு.

பின்குறிப்பு: "கபாலி மற்றும் கமல் படங்களை" கொண்டாடுவது அவசியமானதே! நானும் அப்படி கொண்டாடி இருக்கிறேன். நாம் கொண்டாட மறந்தாலும், பெரும்பான்மையான ஊடகங்கள் - நமக்கு நினைவூட்டி கொண்டாட வைத்துவிடும். ஆனால், இம்மாதிரியான தரமான படங்களை "நாம்தான் தேடிச் சென்று" கொண்டாட வேண்டும்! நாம் கொண்டாடுவதோடு மட்டும் நில்லாமல்; பிறருக்கு கொண்டு சேர்ப்பதும் - நம் கடமையாகிறது. என் கடமையை நான் செய்துவிட்டேன்; உங்கள் கடமையையும் தவறாமல் செய்திட வேண்டுகிறேன். 

                      வாய்ப்பு கிடைப்போர்; தவறாமல் அவரவர் குழந்தைகளோடு பாருங்கள்! 
உறுதியாய் - உங்கள் அனுபவம்; மேலும் ஒரு கூடுதல் பரிமாணத்தைக் கொடுக்கும்!!

குறள் எண்: 0384 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 039 - இறைமாட்சி; குறள் எண்: 0384}

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு

விழியப்பன் விளக்கம்: அறவினைகள் தவறாமை/அறமற்றவற்றைத் தவிர்த்தல்/வீரத்தை இழக்காமை - இவ்வித சுய கெளரவங்களை உடையதே, உண்மையான அரசாங்கமாகும்.
(அது போல்...)
விமர்சிப்பவரை விமர்சிக்காதது/குறைகளைக் களைவது/சுயத்தை இழக்காதது - போன்ற நல்ல ஒழுக்கங்களை உடையதே, உயர்வான மனிதமாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வெள்ளி, ஆகஸ்ட் 19, 2016

குறள் எண்: 0383 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 039 - இறைமாட்சி; குறள் எண்: 0383}

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு

விழியப்பன் விளக்கம்: விழிப்புணர்வு/கல்வியறிவு/செயல்துணிவு - இவை மூன்றும்; நிலத்தை ஆள்பவரை, எந்நிலையிலும் நீங்காமல் இருக்கவேண்டும்.
(அது போல்...)
பெற்றோர்/குடும்பத்தார்/உடன்பிறந்தோர் - இவர் மூவரும்; குடும்பத் தலைவரை, எப்போதும் கைவிடாமல் இருக்கவேண்டும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை

வியாழன், ஆகஸ்ட் 18, 2016

குறள் எண்: 0382 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 039 - இறைமாட்சி; குறள் எண்: 0382}

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு

விழியப்பன் விளக்கம்: வீரம்/இரக்கம்/பகுத்தறிவு/வைராக்கியம் - இவை நான்கும்; எந்த சூழலிலும் குறையாமல் இருப்பதே, அரசருக்கு இயல்பாகும்.
(அது போல்...)
மண்வளம்/நீர்வளம்/தரமான-விதை/தழைச்சத்து - இவை நான்கும்; எந்த வகையிலும் சிதையாமல் காப்பதே, விவசாயத்தின் அடிப்படையாகும்.
*****
இணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை