ஞாயிறு, ஏப்ரல் 13, 2014

வீடு மாற்றுதல்...



          வீடு-மாற்றுதலில் உள்ள சிக்கல்களை/ சிரமங்களை - அதை மாற்றியோருக்கு தெரிந்திருக்கும்! நம் ஊரில், மாற்றுவதே பெருஞ்சிரமம்!! அதிலும், அபு-தாபி போன்ற நாடுகளில் மாற்றுவது என்பது?! அதிலும், நான் தன்னந்தனியாய் மாற்றுவது என்பது??!!... அப்பப்பப்பா! கடந்த 10 நாட்களுக்கும் மேலாய் நான் பட்ட சிரமம்... இன்னுமும், புதிய வீட்டில் முழுதுமாய் "செட்டில்" ஆகவில்லை! எனினும், ஒருவழியாய் வீட்டை மாற்றிவிட்டேன். இந்த பதிவை வெளியிட்ட சில மணி-நேரங்களில் சென்னையை நோக்கிய என் விமானப்பயணம் துவங்கும். ஆம்! 3-மாதங்கள்; 3-நாட்கள் கழித்து என்மகளை பார்க்கப்போகிறேன். அந்த ஒரு-உந்துதலால் தான், கடந்த 10 நாட்கள் எப்படியோ கடந்துவிட்டேன்! இல்லையெனில், நான் மனதளவில் மேலும் பெரும்-உளைச்சலுக்கு ஆளாகி இருப்பேன். நான் பட்ட சிரமங்களை; நான் உணர்ந்த விசயங்களை - என்னுடைய பார்வையில் இப்படியொரு தலையங்கமாய் எழுதவேண்டும் என்று தோன்றியது.

            இந்த காரணத்தினால் தான் சென்ற-வாரம் பதிவுகள் ஏதும் வெளியிடமுடியவில்லை! இன்றாவது,    வெளியிட வேண்டும் என்று தோன்றியது; ஏனெனில், அடுத்து 2 வாராங்களும் என்மகளுடன் இருக்கப்போவதால் ஏதும் வெளியிடமுடியாது! என்னுடைய பழைய வீட்டின் "ஒப்பந்தம்" ஏப்ரல்-20 வரை இருந்தது! அதனால், புதிய வீடு தேடுவதை கொஞ்சம் ஒத்திவைத்து; "அதிகம் மெனக்கெடாது" தேடிக்கொண்டிருந்தேன். திடீரென்று ஏப்ரல்-1 அன்று மாலை, என்னவள் அலைபேசியில் "ஏப்ரல்-15" அன்று என்மகளுக்கு ஆரம்பப்பள்ளி "சேர்க்கை" இருக்கிறது என்றாள்; 2-பெற்றோரும் இருக்கவேண்டும் என்பது அப்பள்ளியின் விதி! அதற்காய், நான் செல்லவேண்டும் என்று தெரிந்திருப்பினும், சரியான-தேதி தெரியாததால் கொஞ்சம் மெத்தனமாய் இருந்துவிட்டேன். சரியென்று, அன்றிரவு முடிவு செய்து; அடுத்தநாளே; ஏப்ரல்-13(இன்று) -க்கான விமானப்பயணச் சீட்டு வாங்கிவிட்டேன். சரியாய், 11 நாட்கள் இருந்தன!

        நான் புதிதாய், வீடு பார்த்து - பழைய வீட்டை காலி செய்து; பழைய-வீட்டில் அனைத்தையும் "செட்டில்" செய்து, புதிய வீட்டில் எல்லாவற்றையும் கொண்டு சேர்த்து - இன்று(ஏப்ரல் 13) புறப்படவேண்டும். முதலில், வீடு எதுவும் சரியாய் கிடைக்கவில்லை! சரியென்று, பழைய வீட்டை காலி-செய்வதற்கான விதிமுறைகளை - கேட்டால் எனக்கு மயக்கமே வந்துவிட்டது! எனக்கு, இந்த நாடும் - இந்த விதிமுறைகளும் புதிது! நான், ஏதோ - பொருட்களை எடுத்துக்கொண்டு; அவர்கள் கொடுத்த படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு, சாவியை கொடுத்து விட்டு சென்றுவிடலாம் என்றிருந்தேன். ஆனால், பொருட்களை எடுப்பதற்கே முதலில் ஒரு படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால், அவர்கள் 2 நாட்கள் கழித்து அதை மேலதிகாரிகள் கையொப்பமுடன் கொடுப்பார்களாம்! பின்னர் தான், நான் பொருட்களையே எடுக்கமுடியுமாம்! சரி, அதை 2-நாள் தானே என்றிருந்தால்; பொருட்களை எடுத்த பின், அவர்கள் ஆய்வுக்கு வருவார்களாம்!

         அதற்கு 1-வாரம் கூட ஆகுமாம்; அதன் பின்னர், நான் அவர்கள் கொடுக்கும் "தடையில்லா சான்று"     வாங்கி, அதை "மின்சாரம்/தண்ணீர்"துறையில் சமர்ப்பித்து நான் காலி-செய்கிறேன் என்று கூறி என்னுடைய பெயரில் இருக்கும் பதிவை இரத்து-செய்யவேண்டுமாம் (அதற்கு 3 நாட்கள் ஆகுமாம்!). இதையெல்லாம் செய்தால் தான், நான் முறைப்படியாய் வீட்டை காலி செய்ததாய் அர்த்தமாம்! இல்லையெனில், நான் அது முடியும் நாள் வரை வாடகைக்கு இருப்பதாய் கணக்காகுமாம்! "இந்தியன் தாத்தா"மருத்துவ மனையில் அல்லாடும் நிலை-போல் உணர்ந்தேன். பின்னர், என்வீட்டை வாடகைக்கு விடும் அலுவலகத்தில் ஒருவரை அணுகி-என்னுடைய நிலையை சொன்னேன். அவர், முடிந்த அளவில் போராடி என்னுடைய வேலைகளை மிக துரிதமாய் செய்ய பெரிதும் உதவினார். எப்படியோ, ஒரு வீட்டை பார்த்து "ஒப்பந்தம்"செய்து ஏப்ரல்-7 ஆம் தேதி முதல் துவங்குவதாய் ஏற்பாடானது! ஒருவழியாய், அந்த வீட்டிற்கு பொருட்களை எல்லாம் கொண்டு சேர்த்தால்...

     அங்கே "சமையலறை"கூட தயாராகவில்லை! எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு அலுவலகம் சென்றுவிட்டேன். மாலை வந்து பார்த்தால், தண்ணீர் வரவில்லை; குளிரூட்டும் சாதனம் வேலை செய்யவில்லை! ஒருவழியாய், அதை சரி செய்து கொடுத்தனர்!! பின்னர் தான், அந்த அரண்மனை போன்ற வளாகத்தில் நான் தான் முதல்-ஆளாய் நுழைந்திருந்த உண்மை (எனக்கு முன்பே தெரியும் எனினும்) நினைவில் வந்தது! மற்ற வீடுகள் எல்லாம் இன்னமும் தயாராகிக் கொண்டிருக்கின்றன! அன்று முதல் 4 நாட்கள் "தன்னந்தனியே"(இல்லையில்லை; என் "ஹோம்-தியேட்டர்"துணையுடன்...) இருந்தேன். நேற்றுதான் இன்னும் 2-தமிழ் பேசும் நபர்கள் அங்கே குடிபெயர்ந்தனர்! இன்று, நிம்மதியாய் பயணம் மேற்கொள்வேன்; என் பொருட்களுக்கு சிலர் பாதுகாப்புக்கு உள்ளனர் என்ற நம்பிக்கையுடன்! ஒரு-சாவியை "ஏஜென்டிடம்" கொடுத்து நான் வருவதற்குள் என்னென்ன செய்யவேண்டுமோ செய்துவிடப்பா என்று சொல்லி இருக்கிறேன்.

    இந்த 3-ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் - முதன்முதலாய், என்னவள் என்னுடன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது! அது மனதளவில் ஒரு பெரிய-வலிமையை கொடுத்திருக்கும். மேலும், அவளிருந்திருந்தால் - பல பொருட்களை அப்புறப்படுத்தி இருப்பாள். நானே, பல பொருட்களை அப்புறப்படுத்தினேன்; அப்படி எனின், அவளிருந்திருந்தால் - இன்னும் பல பொருட்கள் குறைந்திருக்கும். அடிக்கடி வீடு-மாற்றுவதில் இந்த நலன் இருப்பதாய் படுகிறது; வீடு-மாற்றுதல் என்பது சிரமமான காரியம் எனினும், கண்டிப்பாய் - நம் வீட்டில் உள்ள அனாவசியமான பொருட்கள் என்னவென்று தெரியவரும். அதற்காகவது, அடிக்கடி (வாடகைக்கு இருப்பின்) வீடு மாற்றுதல் நல்லது என்று படுகிறது. நான் இயல்பாகவே, அதிகம் பொருள் சேர்ப்பவன்; அதிலும், என்மகளுக்கு வேண்டுமென்று எதையெதை எல்லாமோ சேர்க்கும் வழக்கம் உண்டு. ஆனால், வீடு மாற்றுதல் என்பது அத்தனை சந்தோசமான விசயமாய் இருப்பதில்லை.

          நான் உணர்ந்த இன்னுமொன்று: வீடு மாற்றி "இணைய இணைப்பிற்கான"மாற்றுதலுக்கு எழுதிக் கொடுத்து இருக்கிறேன்; ஆனால், வரவில்லை! இணையம் இல்லாதிருப்பது எத்தனை கடினம், என்பதை உணர்ந்த, அதே வேளையில் இணையம் என்னை எத்தனை பாழடித்திருக்கிறது என்பதும் தெரியவந்தது! வீட்டில் இணையம் இல்லாத இந்த 6 நாட்களில் நிலுவையில் இருந்த பல வேலைகளை முடித்திருக்கிறேன்! நின்றுபோயிருந்த படிக்கும்-வழக்கம் மீண்டும் வந்தது! என்னுடைய மகளுடன் இணையத்தில் பேசமுடியாதது பேர்-குறையே!! இருப்பினும், பல நன்மைகள் விளைந்தன; இனிமேல், இணையத்தில் தேவையற்று பல-மணி நேரம் உட்கார்ந்திருக்கக்கூடாது என்ற உண்மை புரிந்தது! ஒருவேளை, அதற்காகத்தான் இணையம் மாற்றலாகி வருவது காலதாமதமானதோ என்று தெரியவில்லை?! இன்றிரவு, இங்கிருந்து கிளம்புகிறேன்; இன்னமும், வரவில்லை! ஆயினும், முதல் ஓரிரு நாட்கள் இருந்த அந்த படபடப்பு இல்லை...மனம் இலகுவாக ஆகியிருக்கிறது...

வீடு மாற்றுதல் எத்தனை சிரமம் எனினும்; அதிலும் பல நன்மைகள் இருக்கின்றன!!!        

என்மகளுக்காக...



    ஒரு-மாதத்திற்கு முன் என்னுடைய நட்பு ஒருவர் "கொரிய"நாட்டிற்கு சென்று வந்து "சாக்லெட்டுகள்" கொடுத்தார்! அதில் ஒன்றை சாப்பிட்டதும், சுவை மிகவும்-வித்தியாசமாய் இருந்ததால்;  என்னவென்று பார்த்தேன்! அது "மாதுளம்-பழத்தில்" செய்திருந்தது தெரிந்தது; மிகவும் நொந்துகொண்டேன். ஆம்! என்மகளுக்கு "மாதுளம்-பழம்" என்றால் உயிர்! "பாம்மி; பாம்மி..." என்று என்னவள் சொல்லிக்கொடுத்த-வண்ணம் அழகாய் சொல்வாள். சரியென்று, மீதியிருந்த 2-ஐயும் எடுத்து வைத்திருக்கிறேன். நாளை, இந்தியா சென்றதும் அவளுக்கு கொடுக்கவேண்டும். நான், இப்படித்தான்; சிலர், என்னை "கிறுக்குத்தனமாய்" இருப்பதை விமர்சிப்பர்! எனக்கு இதுபற்றி, எந்த கவலையும் இல்லை. எனக்கு, இவ்விதம் செய்வது பிடித்திருக்கிறது; மாதுளம்-பழத்தில் செய்த சாக்லெட் இங்கு கிடைக்குமா?! என்று தெரியவில்லை! இந்தவார தலையங்கத்தில் சொல்லி இருப்பது போல் "வீடு மாற்றும் அலைச்சலில் - அதை தேடிப்பார்க்க இயலவில்லை.

       முதல் படத்தில் இருப்பது அந்த சாக்லெட் தான்! இடையில் இருப்பது, அரேபிய-நண்பன் கொடுத்த இன்னுமொரு சுவையான சாக்லேட் கவர்!! அதையும், தேடி வாங்க இயலவில்லை. இரண்டாம் படத்தில் இருப்பது, உணவகத்தில் கொடுத்த சிறு-பிளாஸ்டிக் கப்புகள்! என்மகள் விளையாட உதவும் என்று கழுவி வைத்திருக்கிறேன். போர்ச்சுக்கல் நாட்டிலிருந்தபோது "பிஸ்ஸா"டெலிவரியில் இருக்கும் சிறு-பிளாஸ்டிக் முக்காலியை, பின்பு என்மகள் பொம்மைகள் வைத்து விளையாடுவாள் என்று சேர்த்து வைத்திருக்கிறேன். என்னவள் கூட "அவ, இதையெல்லாம் வச்சு விளையாடறாளோ? என்னவோ?; அதை ஏன் இப்படி சேக்கறீங்க?!" என்பாள். அதுபோன்றே, இருவரும் பின்பு இந்தியாவிலேயே இருப்பது என்று முடிவானதால், என்மகள் அவைகளை வைத்து விளையாடவில்லை! ஆனால், கிளம்பும் வரை அவைகளை வைத்திருந்தேன். இப்போதும், அப்படியே!! அவளுக்கு உதவும் என்று நம்புகிறேன்; இல்லாவிட்டாலும், பரவாய் இல்லை! இது, ஒரு திருப்தியான விஷயம்...

எத்தனை வயதானாலும், என்மகளுக்காய் இப்படி செய்வது நிற்காது என்றே நம்புகிறேன்!!! 

அய்யோத்(தி/தீ)யா?!...


"அய்யோத் தியா" வில்
அமைதியாய்...
அமர்ந்திருந்த கடவுள்களை(யே)

"அய்யோத் தீயா?!" வென
அலறவிட்டோர்...
அரைகுறை மனிதர்களே!!!