திங்கள், செப்டம்பர் 03, 2012

புரளி பேசுதல்...


        புரளி பேசுதல்! சிலருக்கு சுவராஸ்யமான விசயமாகும்; அது பலருக்கு பல விதமான இன்னல்களை விளைவிக்கிறது என்று "புரளி பேசுவோர்" உணர்வதில்லை!! அவர்கள் அதை தவறென்றே உணர்வதில்லை; பின் எங்கனம் அது மற்றவருக்கு விளைவிக்கும் இன்னல்களை பற்றி உணர்வது? பெரும்பாலும் புரளி பேசுவது மற்றவரை நேரடியாய் எதிர்க்க திறனில்லாத அல்லது எதிர்க்க விரும்பாத காரணத்தினாலாயே விளைகிறது; சில சமயங்களில் அடுத்தவரின் நலனில் அக்கறை கொண்டு அதை தவறான விதத்தில், தவறான நபரிடம் - புரளி பேசுவதாய் - கூட அமைந்து விடுகிறது. இந்த புரளி பேசுவதில் - பொது வாழ்வில் உள்ளவர்களை (அரசியல், திரைப்படம் மற்றும் அரசாங்க-அலுவல் சார்ந்தவர்கள்) பற்றி பேசுவது தான் முதலிடம் வகிக்கிறது! இதில், கண்டிப்பாய் அவர்களுக்கு எந்த விதமான காழ்ப்புணர்ச்சியும் இருப்பதில்லை; மாறாய், அவர்கள் அதில் ஒரு வித சந்தோசத்தை அடைவதாய் ஒரு "மாயையை" உருவாக்கிக் கொள்கின்றனர். இதற்கு அடுத்த நிலையில் உள்ள புரளி பேசுதல் - வெகு நிச்சயமாய் நம்முடைய நெருங்கிய உறவு மற்றும் நட்பு வட்டாரத்தை சுற்றியே இருக்கிறது! நமக்கு பிடிக்காத - அல்லது நமக்கு கெடுதலை உண்டாக்கும் - எதேச்சையாய் நடக்கும் ஒரு சிறு செயலால் - உறவு மற்றும் நட்பு வட்டாரத்தை பற்றிய "புரளி பேசுதல்" நிகழ்கிறது. இல்லையேல்! நேற்று வரை உறவாடிக்கொண்டிருந்த ஒரு சுற்றத்தை அல்லது நட்பை பற்றி நாம் புரளி பேசமாட்டோம்.

   பெரும்பாலும், புரளி பேசுதல் பெண்களுக்கு கை-வந்த கலையாயும்; அவர்களுக்கு அது இயல்பிலேயே வருவது போலவும் சித்தரிக்கப்படுகிறது. புரளி பேசுதல் என்பது பெரும்பாலும் உணர்ச்சிவயப்பட்டே நிகழும் காரணத்தினாலும், பெண்கள் எளிதில் உணர்ச்சி வயப்படக் கூடியவர்கள் என்பதாலும் - இது ஓரளவிற்கு உண்மை என்றே கொள்ளலாம்! ஆனால், உண்மையில் - ஆண்களும் புரளி பேசுவார்கள் என்பது மறுப்பதற்கில்லை; ஆண்கள், புரளி பேசும் போது உணர்ச்சியை தாண்டி ஒரு பெரிய காழ்ப்புணர்ச்சியும், பழி வாங்கும் எண்ணமும் அதிக அளவில் கலந்திருக்கும். ஆண்கள் பேசும் புரளியின் அளவும், எண்ணிக்கையும் குறைவு தானெனினும், அது சம்மந்தப்பட்டவரை மிகப்பெரிய அளவில் காயப்படுத்துவதாய் இருக்கும். இதை நான் என்னுடைய அனுபவத்தின் பால் - உணர்ந்திருக்கிறேன்; புரளி பேசுதலில் எனக்கு சிறு-உடன்பாடும் இல்லை எனினும், என் நெருங்கிய வட்டத்தை சார்ந்த இருவர் பற்றி புரளி பேசும் நிலை வந்துவிட்டது. அவர்கள் என்னை அந்த அளவிற்கு காயப்படுத்தி விட்டார்கள்; நானும், என் தன்னிலை தவறி அவர்களைப் பற்றி வாய்ப்பு கிடைக்கும் போதும்/ அதற்காய் வாய்ப்பை உருவாக்கியும் அவர்களிருவரைப் பற்றி புரளி பேசினேன்; தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தேன். நான் அவர்களைப் பற்றி கூறியதில் எந்த பொய்யும் இல்லை எனினும், நான் அவர்களின் குறைகளை மட்டுமே கூறினேன் எனினும் - நான் ஏன் அத்தகைய கீழ்த்தரமான செயலை செய்தேன் என்பது பின்னர் (கீழே விளக்கியுள்ள படி) விளங்கிற்று. எனவே, இங்கு புரளி பேசுவது - ஆண்களா? பெண்களா?? என்ற விவாதம் வேண்டாம்!!!

     இங்கே, பொது வாழ்வில் உள்ளவர் பற்றி பேசும்போது நமக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பே இருப்பதில்லை! அவர்களை நாம் பார்த்து கூட இருக்கமாட்டோம்; அவர்களுக்கு(ம்) நம்மை யார் என்றே தெரியாது!! இருப்பினும், பேசுகிறோம்; அதை கூட பெரும்பான சமயங்களில் நாம் வேறெங்கோ "கிசுகிசு"வாகவோ அல்லது புரளியாகவோ கேள்விப்பட்டு (இது இன்னமும் கவனிக்கப்பட வேண்டியது; நாம் அதை படித்து கூட இருக்கமாட்டோம்) அதை நாம் என்னவோ அருகில் இருந்து பார்த்தவாறு பேசுவோம். உண்மையில், இந்த புரளி பேசுதலால் - சம்மந்தப்பட்டவருக்கு எந்த பாதிப்பும் இருப்பதில்லை; அவர்களுக்கு இது தெரிந்து கூட இருக்காது! அதனால் தான், பெரும்பான்மையான பிரபலங்கள் இது பற்றி கருத்து தெரிவிப்பதில்லை; அல்லது மழுப்பலாய் கூறிவிடுவர். ஆயினும், சில நேரத்தில் அது அந்த பிரபலங்களைக் கூட அதிக அளவில் பாதித்துவிடும் என்பதை மறுப்பதற்கில்லை. எனினும், இந்த விதமான புரளி பேசுதலால் பெரும்பாலும் எந்த எதிர்வினையும் இருப்பதில்லை. இதில் விந்தையான விசயம்! சரியான புரிதல் உள்ள மிகுந்த மனமுதிர்ச்சி உள்ள பிரபலங்கள் இந்த மாதிரியான புரளிகளை எதிர்கொள்ளும் விதம்!! இதை நாம் கண்டிப்பாய் கற்றுக்கொள்ள முயலவேண்டும். மேலும், பொது வாழ்வில் உண்மையில் தவறுகள் செய்திருக்கும் போது, அதை கண்டிக்க சரியான அமைப்புகள் உள்ளன! அவர்கள், பொது வாழ்வில் உள்ள காரணத்தால் அது பொதுமக்களை பாதிக்கக்கூடாது என்பதால் அதற்கென உரிய அமைப்புகள் உள்ளன!! தேவை எனின், நாம் நேரடியாய் அந்த அமைப்புகளுக்கு (புரளி பேசாது) உதவி செய்ய முற்படலாம்.

   ஆனால், நம் சுற்றத்தையும் நட்பையும் பற்றி புரளி பேசுவது வேறு விதமானது; இங்கே சம்மந்தப்பட்டவர்களே எதிரே நின்று போராட வேண்டும்; அல்லது, புரளி பேசுபவரும் அதை எதிர்கொள்பவரும் பிறரை சேர்த்து குழுவாய் செயல் பட வேண்டும். இங்கே தான், உறவுக்குள்ளும் நட்புக்குள்ளும் பிரிவினைவாதம் உண்டாகிறது. பொதுவாழ்வில் உள்ளோரைப் பற்றியது போலல்லாது, இங்கே நாம் நேரடியாய் தொடர்பில் உள்ளோம்! வெகு நிச்சயமாய், இந்த புரளி பேசுதலை நாம் - நம் சுற்றத்தின் அல்லது நட்பின் குறையை முதன்மைப்படுத்தியே பேசுகிறோம்; அல்லது அவர்களுக்கு நல்லது செய்வதற்காய் (என்றெண்ணி) பேசுகிறோம்!! உண்மையில், இதை உள்ளாழ்ந்து பார்த்தால் நம் சுற்றத்தின் மற்றும் நட்பின் நன்மை சார்ந்து இருப்பது புலப்படும்!!! பின் ஏன், நாம் அதை புரளி பேசுதல் மூலம் செய்ய வேண்டும்? சரி, நாம் முன்பே (பலமுறை) கூட அவர்களுக்கு புரிய வைக்க முற்பட்டு அது சுவற்றில் மோதிய பந்தாய் நம்மை திரும்பவும் காயப்படுத்தி(கூட) இருக்கும்! நான் மேற்குறிப்பிட்ட, இரண்டு புரளி பேசும் நிகழ்வுகளும் இவ்வாறே நடைபெற்றது; பிறகு நான் எனக்குள் கலந்தாய்வு செய்த போது தான் இந்த கேள்விகளும், விளக்கங்களும் என்னுள் தோன்றின! நான் ஏன், அந்த மாதிரி கீழ்த்தரமாய் அவர்களைப் பற்றி மற்றவரிடம் பேசியிருக்க வேண்டும்? மென்மேலும், நான் ஏன் முயற்சி செய்திருக்கக் கூடாது?? குறைந்த பட்சம் நான் ஏன் அமைதியாய் இருந்திருக்கக் கூடாது? என் சுற்றமும் நட்பும் அல்லவா அவர்கள்?? அவர்களுடன் உறவு கொண்டிருந்தவன் தானே நான்???

      இந்த எண்ணமும், திண்ணமும் தான் நாம் நம் சுற்றத்தையும் நட்பையும் பற்றி புரளி பேசும் போது உருவாக வேண்டும்! மேற்குறிப்பிட்ட வண்ணம், பொது வாழ்வில் இருப்போரிடம் நமக்கு நேரடி தொடர்பு இல்லை எனினும் - இதே விதமான உணர்சி(கள்) தான் அடிப்படையாய் இருக்கவேண்டும்!! பொது வாழ்வில் உள்ளோரிடம், எதிர்காலத்தில் கூட நமக்கு தொடர்பு இல்லாமால் போகக்கூடும்!!! ஆனால், நம் தொடர்பில் இருந்த உறவோடு எதிர்காலத்தில் மீண்டும் தொடர்பு-ஏற்பட நிறைய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன அல்லவா? பின் ஏன், நாம் அவர்களைப் பற்றி புரளி-பேசி அவர்களின் மதிப்பை கெடுக்கவேண்டும்? உண்மையில், நாம் அவர்களை விரும்பி இருப்பின் - தக்க சமயத்திற்காய் காத்திருந்து அவர்களுக்கு அதை விளக்கவேண்டும்; அவ்வாறு செய்திடின், அவர்கள் கண்டிப்பாய் அதை உணர்ந்து பார்ப்பர்! இல்லை, அவர்கள் உணரவே மாட்டார்கள் என்று நீங்கள் எண்ணினால் (நினைவு கொள்க! இது நமது முடிவு மட்டுமே!!) அமைதியாய் இருந்துவிடுவோம்!! நாம் கூறியே கேட்காதோர் - புரளி பேசுவதால் மட்டும் எப்படி அதை உணர்வர்? அதனால் தான் சொன்னேன்! இது உணர்ச்சி வயப்பட்டு அதனால் விளையும் தன்னிலை தவறல்!! உண்மையில், நாம் அவர்கள் மேல் உண்மையான அன்பு வைத்திருப்பின், இந்த தவறு நமக்கு உணர்த்தப்படும்!!! எனக்கு அவ்வாறு உணர்த்தப்பட்டது. புரளி பேசுவதை விட - அமைதி எப்படி அற்புதமான ஆயுதமோ, அதே போல் புரளியை எதிர்கொள்வதுற்கும் அற்புதமான ஆயுதமும் அமைதியே! எனவே, புரளி பேச நேரினும் அல்லது புரளி பேசப்படினும் - நாம் காத்திட வேண்டியது…

அமைதி! அமைதி!! அமைதி!!!     

பின்குறிப்பு: இன்னமும் கூட என்னால் "புரளி-பேச"ப்பட்டவர்களுக்கு அவர்களின் தவறுகளையும், (அவர்கள் தவறென்று எண்ணும்) என் தவறுகளையும் விளக்கி கூறும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அவர்களிடம் விளக்கிடும் சூழலே வாய்க்காது போயினும், என் தன்னிலை தவறாது "அமைதியாய்" இருப்பதில் நான் உறுதியாய் இருக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக