{பாவேந்தரின் மகளின் திருக்கரங்களில் - என்மகள்}
ஒன்பதாம் ஆண்டின் சூலை2இல் பிறந்தமகளின்று;
ஒற்றையிலக்கம் கடந்து இரட்டையிலக்க வயதினுள்!
எப்படி வாழ்த்துவது? வளமுடன் வாழ்கவென்றா?
எஞ்ஞான்றும் வாழ்கவென்றா? பல்லாண்டு வாழ்கவென்றா?
“குடும்பவிளக்கு படைத்திட்ட பாவேந்தரின் மகள்வழி”
குடும்பத்தில் நுழைந்திட்ட பொன்மகளை வாழ்த்துவதில்;
புதுமையுடன் பொதுமையும் கலந்திட வேண்டுமென்றே
புலமையைப் பொலிவூட்டியே கண்டேன் கவியொன்றும்!
குடும்பஉறவு காப்பாய் மகளே! பாவேந்தர்
கொடுத்திட்ட புகழையும் காப்பாய் மகளே!
குடும்பத்தை ஒளியூட்ட விளக்காவாய் மகளே!
குணத்தை மெருகூட்ட நெருப்பாவாய் மகளே!
உறவுகள் வளர உணர்வுகள் வளரும்!
உணர்வுகள் வளர உரிமைகள் வளரும்!
உரிமைகள் வளர உள்ளங்கள் வளரும்!
உள்ளங்கள் வளர உறவுகள் வளரும்!
உலகமோர் சுழற்சி! உறவுகளில் ஆரம்பித்து,
உறவுகளிலே முடியும்; அதிசயமான சுழற்சி!
உறவுகள் உதிர்ந்தால், உலகமே உதிரும்!
உறவுகள் காப்பாய், உலகையும் காப்பாய்!