ஞாயிறு, ஆகஸ்ட் 11, 2024

என் முதல் பிறந்த நாள்...


தந்தை இல்லாத 

முதல் பிறந்த நாள்

மந்தை சேராத

ஆடாய் எனையும்

உணர்ந்த நாள்!


தந்தைகள்

எதிர்பார்ப்பில்லா விந்தைகள்!

எதிர்பாராத ஒன்றையும் 

வரமளிக்க நம்வீட்டில் 

குடிகொண்ட தெய்வங்கள்!


தந்தை இல்லா வீடும் - நல்

சிந்தை இல்லா நாடும் - நம்

வாழ்நாள் சாபங்கள்!

எப்படித்தான் ஆறுமோ - என்

மனதை ஆட்கொண்ட காயங்கள்?


புத்திர சோகத்தை

போதித்த சுற்றங்கள்

பெத்தவர் சோகத்தை

போதிக்க மறந்ததும்

எவரின் குற்றமோ?


இனியொரு பிறவி வரலாம்

என்னரு தந்தையும் வரலாம்

இந்நினைவுகள் யாவும்

உருக்குலையாமல் வருமோ?

விட்டகுறை தொடருமோ?


என் உயிருக்கும்

என் தமிழுக்கும்

விதையிட்ட விந்தையே!

எங்கிருந்தாலும் எனை

வாழ்த்துவாய் தந்தையே!