ஞாயிறு, மே 18, 2014

என்மகளின் முதல் கையொப்பம்...



        மேலுள்ள புகைப்படத்தில் இருப்பது - என்மகளின் 1-ஆம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பத்தில் நானும், அவளும் கையொப்பம் இட்ட பகுதி! சென்ற முறை விடுப்பில் இந்தியா சென்றதற்கு என்மகளின் பள்ளி-சேர்க்கையே காரணம் என்பதை முந்தைய தலையங்கத்தில் கூறி இருந்தேன். அவளின் பள்ளியில் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ததும், அவளும் கையொப்பம் இடவேண்டும் என்பதை அறிந்தேன். நான் என்னுடைய 1-ஆம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பத்தில் கையொப்பம் இட்டேனா?! என்பது எனக்கு தெரியவில்லை! இது, எந்த தலைமுறையில் ஆரம்பித்தது  என்பதும் தெரியவில்லை. சேர்க்கை நாளுக்கு 2-வாரங்களுக்கு முன்பிருந்தே என்னவளும்; என் மரு-பெற்றோர்களும் என்மகளுக்கு கையொப்பம் இடும் பயிற்சியை தொடர்ந்து அளித்தனர். பள்ளியில், அவளின் பெயரை எழுதிட சொல்லக்கூடும் என்பதால் அந்த பயிற்சி என்று என்னிடம் கூறியிருந்தனர். எனக்கு, என்மகள் விண்ணப்ப படிவத்தில் கையொப்பம் இடவேண்டும் என்பது தெரியாது!

    என்மகள் அப்படி கையொப்பமாய் எழுதி காண்பித்திருக்கிறாள் எனினும், அவள் முதன்முதலாய் அதிகாரபூர்வமாய் விண்ணப்பத்தில் அப்படி கையொப்பம் இட்டதை கண்டு - பெருத்த சந்தோசம்! இதற்கு முழுமுதல் காரணம் - என்னவளே!! அவளின் பெருத்த முயற்சியும்; அவள் கொடுத்த பயிற்சியும் முக்கிய காரணிகள். வேறெவருக்கும் இப்படி கையொப்பம் இட்டது நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை. அப்படி இட்ட கையொப்பத்தின் நகலை எத்தனை பெற்றோர்கள் எடுத்தனர் என்று தெரியவில்லை. நான் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதை அடுத்த அறையில் சென்று சமர்ப்பிக்கும் முன்னர் - என்னுடைய அலைபேசியில் "தவறாமல்" பதிவு செய்துவிட்டேன். இது எனக்களித்த சந்தோசத்தை விட - என்மகள் வளர்ந்தவுடன் அவளுக்கு பெருத்த சந்தோசத்தை கொடுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை! இது சிலருக்கு சாதரணமாய் படக்கூடும்; ஆனால், இந்த விசயம் எத்தனை பெரியது என்பது என்மகளுக்கு பிற்காலத்தில் புரியும். பணம், சொத்து - இவைகளைக் காட்டிலும்... 

இதுபோன்றவைகளை; என்மகளுக்காய் சேர்ப்பதில் தான் எனக்கு பெருத்த சந்தோசம்!!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக