செவ்வாய், அக்டோபர் 08, 2013

ராஜா ராணி (2013)



விழியப்பன் பார்வை: "ராஜா ராணி (2013)" திரைப்படம்

        நேற்று-மாலை பலரும் பரிந்துரை செய்ததன் பேரில், "ராஜா ராணி" திரைப்படம் பார்த்தேன். அந்த படத்தின் மீதான என்னுடைய பார்வையே கீழ்வருவது. முதலில், நான் படம் பார்க்க ஆரம்பித்த அந்த "திகிலான" அனுபவத்தை பகிர ஆசைப்படுகிறேன். ஆம்! திகில் தான்; 19:00 மணி காட்சிக்கு நான் இருக்கை-சீட்டு வாங்கியது 18:31 மணிக்கு (பார்க்க! மேலிருக்கும் புகைப்படம்; அதில், வாங்கிய நேரத்த்தில் ஏதோ தவறு உள்ளதாய் தெரிகிறது!); ஆனால், நான் தான் முதல் ஆள்! உடனே "என்னடா! சிக்கிட்டமா?"ன்னு ஓர் பயம். சரி, இன்னும் 29 மணித்துளிகள் இருக்கின்றனவே என்ற நிம்மதியோடு 2 சமோசாக்களை கொறித்துவிட்டு - திரையரங்கினுள் "ஓர் திகிலோடே??!!" நுழந்தே ந்! ஒருவரே வாங்கி இருந்தாலும், இங்கே படத்தை "காண்பிக்காமல்" விடமாட்டார்கள்! ஆனால், அங்கே ஒருவர் மட்டும் இருந்தார்; அப்பாடா! என் வரிசை எண் 8; இருக்கை எண் 11 (மேலுள்ள, படத்தை பார்க்க), அவரது இருக்கை எண் 13. "பயம்-நீங்கி" அவரருகே சிரித்துக்கொண்டே ஒரு வணக்கம் சொல்லி அமர்ந்தேன்; மனுசன்! ஒரு சிறு-புன்னகைக் கூட பதிலாய் வரவில்லை. பாவம்! அவர் எவ்வளவு நேரம் தனியாய் அமர்ந்து "நடுங்கிக் கொண்டு" இருந்தாரோ??!! அடுத்தது ஒருவர் வந்தார்; இருக்கை எண் 12 - எங்கள் இருவருக்கும் இடையில் வந்து அமர்ந்தவர், எல்லாமும் காலியாய் இருக்க வேறொரு இருக்கைக்கு சென்றார். என்ன காரணமோ (???!!!) அவர் அமர்ந்த இருக்கை எண் "9"!. அப்பாடா! மூவர் ஆயிற்று; தெம்பாய் படம் பார்க்க ஆரம்பித்(தேன்/தோம்)! பின், சிறிது நேரத்தில் 4 பேர் வந்து (அவர்களுக்குள்ளாகவே, எப்போது ஆரம்பித்ததோ என்ற சலனங்களோடும்) எங்கள் வரிசையிலேயே அமர்ந்தனர் என்பது வேறு விசயம். ஆனாலும், 7 பேர் மட்டும் பார்ப்பது ஓர் சுகம் தான் (இதற்கு முன், 5 பேர்களுடன் "பரதேசி" படம் பார்த்தேன் - அபுதாபியில் நான் காலடி வைத்து 2-ஆம் நாள் பார்த்த படம்!). இந்த சூழலில், நாம் சிரிப்பதை நாமே கேட்கும் ஓர் சுவராஸ்யம் இருக்கும் (மற்றவரின் சிரிப்பொலியையும் கூட!)...


சரி, திரைப்படத்திற்கு வருவோம்!

பாராட்டில் என்னுடைய பங்கு:
  • பலரும், குறிப்பிட்டபடி அருமையான படம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை!
  • ஏன் எல்லோரும் இன்னுமொரு "மெளன ராகம்" என்கின்றனர் எனபது எனக்கு புரியவில்லை. இரண்டுக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன என்பது என் கருத்து. இப்படி ஒப்பிடுவதால், மணிரத்னம் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் போகலாம்! ஆனால், இம்மாதிரி இயக்குனர்களை அது பாதிக்கக் கூடும்! என்பது என் எண்ணம்.
  • "ஏன், வெகுவாய் எல்லோராலும் பாராட்டப்படுகிறது?" என்றால், இங்கே பல திரைப்படங்களும் - கனவன்/அல்லது மனைவியின் "முதல் காதல்" பற்றி விவாதிக்கின்றன; ஆனால், அங்கே வாதங்களும்; பழிவாங்குதலும் தான் அதிகம் இருப்பதாய் காண்பிக்கப்படும்! "அவர்கள்"-ஐ விடவா இதற்கு ஓர் பெரிய உதாரணம் வேண்டும்? ஆனால், விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களே திருமணமான இருவரில்-ஒருவர் (கனவன் அல்லது மனைவி) மற்றவரின் "முதல் காதலை" இயல்பாய் பார்ப்பது போல் (இது மட்டுமே - சில காட்சிகளுடன் - எனக்கு தெரிந்து இப்படம் "மெளன ராக"த்துடன் தொடர்பில் இருப்பது!) காண்பிக்கின்றன. ஆனால், இங்கே திருமணமான இருவரும் மற்றவரின் "முதல் காதலை" இயல்பாய் பார்ப்பது போல் காண்பித்து இருக்கின்றனர். மேலும், காட்சிகள் யதார்த்தமாய்! அதனால் தான், இம்மாதிரியான படங்கள் பெரிதும் போற்றப்படுகின்றன என்பது என் எண்ணம்.
  • சரவெடிக்களில் என் நினைவில் இப்போது வந்தவை: 1. "கஸ்டமர் சர்வீஸ்"னா? எனக்கு "4 கஸ்டமர்ஸ்" பிடிச்சு தருவீங்களா? 2. "டார்லிங்! பியர் சாப்பிடறீங்களா/வேணுமா"? 3. "டார்லிங்" ஒரு "லாங்க்-டிரைவ்" போலாமா?? 4. என்ன மாபிள்ளை பரிசை பார்த்தீங்களா? ம்ம்ம்... பார்த்தேன்..."நானும் பார்த்தேன்". 5. என்ன ப்ரதர்? பலர் பல இடங்களில்; ஆனாலும், நஸ்ரியா கேட்கும்போது கொள்ளை-அழகு! 6. அவரு நிறைய "சினிமா" பார்ப்பாரு, போல தெரியுது! இப்படி பல இருக்கின்றன! ஆனால், எனக்கு அவை முழுதுமாய் நினைவில் இல்லை.
  • இயக்குனர் புதியவரா? எனக்கு கண்டிப்பாய் புதியவர்! "வாழ்த்துக்கள் தோழரே! தொடரட்டும் உமது கலைப்பணி". அவர் புதியவர் இல்லை எனில், இந்த வாக்கியத்தில் சிறிது மாற்றம் செய்து கொள்ளுங்கள்; ஆனால், என் "வாழ்த்துக்கள்" அப்படியே இருக்கட்டும்!

பலரும் பார்க்கத் தவறியதாய் - என் பார்வையில்:
  • ஏம்ப்பா? "சத்யராஜ் நல்லா பன்னி இருக்கார்னு" பொதுவா சொல்லிட்டா எப்படிப்பா? இம்மாதிரி கதைகளில் "தந்தை-மகள்" உறவை இதற்கு மேலும் என்னத்த சிறப்பாய் சொல்லிட/காட்டிட முடியும்?? ஒரு "அப்பனா" பெரு-மகிழ்ச்சி அடைந்து சொல்கிறேன்: "யோவ், சத்யராஜ்-ஜு! ஒரு அப்பனா வாழ்ந்து இருக்கய்யா நீ! வாழ்த்துக்கள் யா!". என்ன, இப்படி வாழ்த்தறேன்னு பார்க்கறீங்களா? இது சந்தோசம்-ங்க! அப்படித்தான் வரும் வார்த்தைகள். இன்னமும், புரியலைன்னா - பெண்டாட்டிகள் சந்தோஷமா "டேய், புருஷான்னு" கூப்பிடுவாங்களே! அதை நினைவுப் படுத்திக் கொள்ளுங்கள்; தெளிவாய் புரியும் (சந்தோஷத்துல-ங்கறத, "அடிக்கோடிட்டு" படிங்க! ரெண்டு பேருக்கும் தான் சொல்ட்றேன்!). என் பார்வைகளில் சில...
  • பதிவுத்-திருமண அலுவலக வாசலில் ஓர் நாள் முழுவதும் காத்திருந்து, அந்த ஏமாற்றத்தில் மகள் அழும்போது - தானும், இயல்பாய் அழும் அந்த காட்சி! இதை விட, ஓர் தந்தையை அத்தனை பொருப்பாய் காண்பிக்கவே முடியாது! மகள் அழுவது, காதலன் வராத ஏமாற்றத்தில்... ஆனால், அப்பன் அழுவது? அதுவும் இயல்பாய்?? ஆங்ங்... அது தான்! அதனால் தான், இங்கே அப்பனைப் பற்றி மட்டும் கூறி உள்ளேன். மகள் இம்மாதிரி இருப்பதை பலமுறை, பல விதங்களில், பல படங்களில் பார்த்துவிட்டதால் - அது பற்றி பெரிதாய் இங்கே பேச(ப்போவது) இல்லை (ஆனால், முன்பே ஒரு சிறிய விசயத்தில் சொல்லிவிடேன்; அது "டார்லிங்" என்ற ஒற்றை சொல்!). 
  • எனக்கென்னவோ? இந்த தந்தை-மகள் உறவை இன்னமும் காட்டி இருக்கலாம் என்று ஓர் ஏக்கம்! ஆனால், இன்னும் கொஞ்சம் "அதிகமாய்" சொல்லி இருந்தாலும் - அது படத்தின் கருவை அப்படியே மாற்றி விடும் "அபாயம் இருப்பதை" இயக்குனர் தெளிவாய் உணர்ந்து இருக்கிறார். இது போதுமய்யா!... அட! இதுவே போதுமய்யா!!
  • ஒரேயொரு விசயம், இதற்கு மகுடமாய்! கிளம்பும்போது, தேவையே இல்லாதது போல் தோன்றும்! மாப்பிள்ளையிடம் சொல்லும் "த்தேங்க்ஸ்"ங்க என்ற ஒற்றை சொல்! அடுத்த காட்சியிலேயே, வாசலில் "என்னை ஏமாத்த நீ நடிக்கற; ஆனால், மாப்பிள்ளை ஏம்மா நடிக்கனும்?"; தொடர்ந்து, தலையைத் தடவி "இது தான் உன் வீடு; இது தான் உன் வாழ்க்கை" - ஆயிரமாயிரம் விளக்கங்களை கொடுக்கும் நிகழ்வை - "வெறும் சொற்ப வார்த்தைகள்" கொண்டு! 
  • மன்னிக்கவும்! "தங்க-மீன்கள்" படத்தை இங்கே வெளியிடாததால் இன்னமும் பார்க்கவில்லை. ஓர் தந்தையாய், அந்த படத்தை திரையரங்கில் அல்லது அங்கீகரிக்கப்பட்ட விதத்தில் பார்க்கவேண்டும் என்று உணர்ந்து இன்னமும் பார்க்கவில்லை. ஆனால், ஒரு இளவயது-மகளையும் - தந்தையும் மைய்யப்படுத்திய படம் என்பது எனக்கு தெரியும். ஆனால், அந்த உறவு ஓர் கட்டாயம் போல் (மீண்டும், மன்னிக்கவும்!) எல்லா "தந்தை-மகள்" இடையேயும் பார்க்கலாம். ஆனால், இந்த வயது மகள்-தந்தை உறவு - வேறு! அது தான், உண்மையான உறவை நிலை-நாட்டும் என்பதை சமீபத்தில் என் தலையங்கம் ஒன்றின் மூலமாய் விளக்கி இருந்தேன். இந்த உறவை இப்படியோர் புரிதல் தான் அடுத்த கட்டத்திற்கு இட்டுச்செல்லும் என்பது என் எண்ணம். அந்த வகையில் - இந்த படம் "உயர் தர 'தங்க-மீன்கள்'" என்பதே என் கருத்து.

குறையில் என்னுடைய பார்வை:
  • அது என்னப்பா, அப்படி ஒரு "ட்விஸ்ட்" - அந்த சூர்யா கதா-பாத்திரத்தில்! இடைவேளையில் கழிவறை சென்றபோது, வழக்கம் போல் என் சிந்தனையில் (அது தானே, என் போன்ற பலருக்கும் போதி-மரம்???) அந்த "ட்விஸ்ட்" தெரிந்துவிட்டது (விவேக் ஓர் படத்தில் சொல்வது தான் நியாபகம் வருகிறது: "அங்க கொண்டுபோயா வச்சிருக்கீங்க "ட்விஸ்ட்"டை???). இன்னும், கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம்!!
  • இறுதியில், சூர்யா சொல்லும் காரணம் எதுவும் - நியாயமானதாய் படவில்லை. இங்கே, திரைக்கதையில் ஓர் தொய்வு இருப்பது தெளிவாகிறது. இதற்கு பேசாமல், மேற்கூறிய "ட்விஸ்ட்"டை கொடுக்காமலேயே இருந்திருக்கலாம்.
  • ஏம்ப்பா, அந்த "கீர்த்தனா"வை "இறக்கச்" செய்ய வேறு வழியே தெரியவில்லையா? அப்பட்டமாய் தெரிகிறது - அது சம்பந்தப்பட்ட காட்சிகள் ஆரம்பிக்கும் போதே??!! விபத்தை, விபத்தாய் காண்பிக்க ஆயிரம் வழிகள் இருக்கின்றன! இது, யதார்த்தமாய் தோன்றவே இல்லை; மன்னிக்கவும்! இதற்கு பேசாமல், அந்த பெண்ணை "கொலையே" செய்து இருக்கலாம்.
  • குட்டைப்-பாவாடையும், அது போன்ற உடைகளும் - நயந்தாராவுக்கு சற்றும் பொருத்தம் இல்லை என்பது என் எண்ணம். அழகில்லை! என்பதை காட்டிலும் அசிங்கமாய் தெரிகிறார். எவரேனும், அவருக்கு எடுத்து சொல்லவும்! சாதாரண "ச்சூடிதாரில்" அலலது ஓர் புடவை/அரைப்புடவையில் அவர் அபார-அழகாய் தெரிகிறார். 

என்னுடைய சரவெடி:
  • "போடா, டே!" - எப்படிப்பா, சூர்யாவுக்கு அப்படியோர் தைரியம் வந்தது? - அதுவும், "ஜான்"ஐ பார்த்து சொல்ல??!! "காதலித்து பார்" - என்னென்ன வரும் என்று ஓர் கவிஞர் அழகாய் சொல்லி இருப்பார். இங்கே பாருங்கள்! "திருமணம் செய்ததால்" எப்படி சூர்யாவுக்கு தைரியம் வந்ததுன்னு - ஏன்னா, திருமணம் "ரொம்ப கஷ்டம் பா"! எல்லா தைரியத்தையும் வரவைக்கும்.... ஹா...ஹா....ஹா...
  • "ஓன் சந்தோசம் தான் போயிடுச்சே; உங்க அப்பா, அம்மா சந்தோசத்துக்காக, வாழ்ந்தா தான் என்ன?" - அடப்பாவிகளா! கடைசியில - சந்தானத்தையும் இப்படி "சீரியஸா" பேச வச்சுட்டீங்களே!
  • யப்பா! "கஸ்டமர் சர்வீஸ்"-ங்கறதுக்கு இப்படி ஒரு விளக்கதத்தை "எந்த ஹோட்டல்ல" ரூம் போட்டு யோசிச்சீங்கன்னு சொல்ல முடியுமா??
  • "What? What??" மற்றும் "Funny(கிட்டத்திட்ட "பன்னி" என்பது போல்)  boy" யோவ்! "நான் கடவுள்" இராஜேந்திரன், நீயும் "கலக்கி" இருக்கய்யா!

முடிக்கும் முன்:

"There is (LIFE/LOVE) after love failure"- அழகாய் தான் இருக்கிறது இந்த சொற்றொடர்! ஆனால், நீங்களும் - இதே மாதிரி அந்த சொற்றொடரை படம் முடிந்து, திரை "மூடும் முன்"  போட்டிருந்தால் இன்னமும் - பொருத்தமாய் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக