ஞாயிறு, மார்ச் 08, 2015

மனித-தொடர்பு (Human Interaction) என்றால் என்ன?   மேலுள்ள புகைப்படம் Whatsapp-இல் என்னுடைய குழு ஒன்றில் பகிரப்பட்டது. இதைப் பார்த்தவுடன் என்னுள் பல கருத்துகள்/விவாதங்கள். உடனே அதை ஒரு தலையங்கமாய் எழுதவேண்டும் என்று தோன்றியது; அதனால், இதை அங்கே விவாதிக்கவில்லை, பின்னர் இணைப்பை அங்கே கொடுத்துவிடலாம் என்று தோன்றியது. உள்-புகைப்படங்களில் சொல்லி இருப்பது போல், இன்று பலரும் உடனிருப்போருடன் உரையாடாமல் தத்தம் நவீன-அலைபேசியில் வேறொருவருடன் பேசிக்கொண்டு தான் இருக்கின்றனர். உண்மையில், நாம் ஒவ்வொருவரும் ஒருமுறையாவது அப்படி செய்திருப்போம்! எனவே, அப்படி நடக்கவில்லை என்பதல்ல என் வாதம். ஆனால், மேதகு ஐன்ஸ்டீன் சொன்னதாய் ஊகிக்கப்பட்ட "மனித-தொடர்புகளை ஒருநாள் தொழில்நுட்பம் கடந்து நிற்கும். இவ்வுலகம் அறிவிலிகளை கொண்டிருக்கும்" சொற்றொடருடன் ஒப்பிடுவதைத் தான் மறுக்கிறேன். 

      இத்தலையங்கத்தின் ஆங்கில வடிவத்தை என் நண்பனுக்கு பிழை-திருத்துவதற்காய் அனுப்பிய போது, அவன் ஐன்ஸ்டீனின் கருத்துதானா என்று பரிசோதிக்க சொன்னான். என்ன அதிசயம்?! அப்படி முயன்றபோது, இது உலகின் புகழ்பெற்ற 7 "பொய்யான" சொற்றோடர்களுள் ஒன்றானது என்ற தகவல் கிடைத்தது. மேலும், பல தகவல்களை கூகுளில் தேடுவதன் மூலம் அறியலாம்.  முதலில், என்னால் நம் நட்பு/சுற்றம்/உறவு இப்படி எவருடனும் இணைந்திருப்பதை "மனித-தொடர்பு (Human Interaction)" என்றே அழைக்கமுடிவில்லை. அப்படியெனில், அந்த உள்-புகைப்படங்களில் இருக்கும் ஒவ்வொருவரும் இவ்வுலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒருவருடன் தொடர்பு கொண்டிருக்கிறார் என்றே அர்த்தம். நவீன-அலைபேசி கொண்டு அவர்கள் Whatsapp/Facebook மூலம் உரையாடுகிறார்கள் என்பதால் மட்டும், அவர்கள் மனித-தொடர்புகளை அறுத்துவிட்டார்கள் என்பதில் எந்த நியாயமும் இல்லை!

  மேலும், மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருப்பது மட்டுமே "மனித-தொடர்பு" என்றால், மேலுள்ளவர்கள் தொழில்நுட்பம் மூலம் அப்படி செய்வதும் மனித-தொடர்பே, அல்லவா? மேலுள்ள புகைப்படங்களில் இருக்கும் ஒரு குழு ஒரே நிறுவனத்திற்கு/ஒரே துறையில்/ஒரே-நிலையில் பணிபுரிவோர் என்று வைத்துக்கொள்வோம். மனதில் இருந்து சொல்லுங்கள்: அவர்களுள் ஒரு ஆத்மார்த்தமான மனித-தொடர்பு இருக்குமா? நிச்சயமாய், உங்கள் பதில் இல்லையென்றே இருக்கும் அல்லவா?! ஏனெனில், நம்மில் எவரும் அப்படி நாம் சார்ந்த நிறுவனத்திற்காய் ஒன்றுபட்டு செயல்பட விரும்புவதில்லை. அதை நான் தவறென்றும் சொல்லவில்லை; இங்கே, வலியதே எஞ்சும்! எனவே, நாம் கூடியிருக்கும்போது பொழுதுபோக்கு/விளையாட்டு/அரசியல் அல்லது அதுபோன்ற பொதுத்துறை பற்றியே உரையாடல் இருக்கும். நாம் சார்ந்த நிறுவனத்தில் இருக்கும் பிரச்சனைகளை பற்றி வேண்டுமானால் ஒன்றுபட்டு பேசுவோம்/போராடுவோம்!

   ஆனால், நிறுவனத்தின் முன்னேற்றம் என்று வந்துவிட்டால், ஒவ்வொருவரும் நம்மால் அது நடக்கவேண்டும் என்றே நினைப்போம். மேலுள்ள புகைப்படங்களில் உள்ளோர் அன்பெனும் உயர்ந்த பண்பை கூட பரிமாறிக் கொண்டிருக்கலாம். எனவே, மேலுள்ள உதாரணங்கள் மனித-தொடர்பே அல்ல. பின், மனித-தொடர்பு என்றால் என்ன? என்ற கேள்வி எழும்; என்னுள்ளும் எழுந்தது. என்னளவில் மனித-தொடர்பு என்பது அறிவு/அனுபவம் இவை போன்றவற்றின் பரிமாற்றமாய்; சமுதாயத்திற்கு பயனுள்ளதாய் இருக்கவேண்டும். தெரியாத மனிதர்களிடையேயும் நடக்கலாம். நிச்சயமாய், கடற்கரையில் அமர்ந்து கூத்தடிப்பது/உணவகங்களில் குடிப்பது/சாப்பிடுவது இதுபோன்ற கேளிக்கைகளில் இல்லை! இந்த உதாரணத்தை கவனியுங்கள்: எங்கள் விவசாய நிலத்தில் பலர் பல்வேறு வேலைகளை செய்வதை கண்டவன் நான்; அவர்களுடன் நானும் தொடர்புகொண்டு சில நுணுக்கமான விசயங்களை கற்றவன்.

      சில மணித்துளிகளே எனினும், அவர்களுடன் சேர்ந்து பணியாற்றி இருக்கிறேன். அவர்களுக்கு இடையேயும் பல தொடர்புகள் இருந்தன; அவர்கள் எல்லோரும் விவசாய முன்னேற்றம் என்ற ஒன்றை நோக்கி ஒருங்கிணைந்து பணியாற்றினார். பின்னர் தொழில்நுட்பம் "Tractor" என்ற ஒன்றின் மூலம் வந்தது. மெல்ல, மெல்ல அவர்கள் அனைவரும் வேலையற்று; பல்வேறு இடங்களில் பிரிந்து வேலை செய்ய ஆரம்பித்தனர். அவர்களுள், ஒரு சிறு-உரையாடல் கூட இல்லாமல் போனது. இன்று பயிரிடுவது துவங்கி அறுவடை வரை அனைத்திற்கும் தொழில்நுட்பம் வழி செய்துவிட்டது; ஆனால், மனித-தொடர்பு? என்னளவில், இது ஒரு சிறந்த உதாரணம். மேலும் சொல்லவேண்டுமானால்: மாணாக்கர்-ஆசிரியர் தொடர்பு அறுபட்டதற்கு முதற்காரணம் தொழில்நுட்பம். இன்று, மேலாண்மைக்கும் - பணியாளர்களுக்கும் நேரடித் தொடர்பு அறவேயில்லை. எல்லாம், மின்னணு-கோப்பைகளில் பரிமாறப்படுகின்றன.

       அந்த கோப்பைகளால் மனித உணர்வு/தொடர்பு போன்றவற்றை பரிமாற்ற முடியாது. சமீபத்தில், அமெரிக்காவின் அலபாமா மாகானத்தில் நடந்த சம்பவத்தை நினைவுகூருங்கள். அந்த காவலர்க்கு அறிமுகமற்ற ஒரு மனிதருடன் தொடர்பு கொள்ளவே தெரியவில்லை. அது, அவரின் பாதுகாப்பு உணர்வினால் விளைந்தது என்று ஆயிரம் காரணங்கள் சொல்லப்படலாம்; ஆனால், அங்கே மனித-தொடர்பே இல்லை என்பதே அப்பட்டமான உண்மை. அது அந்த காவலரின் தவறில்லை! அல்லது அவரின் தவறு மட்டுமில்லை! தன்னைத்தானே உலகின் வல்லரசு என்று கூறிக்கொள்ளும் ஒரு நாடு அணு/உயிரியல் ஆயுதங்களுக்காய் மிகப்பெரிய அளவில் பணத்தை முதலீடு செய்கிறது. என்னவொரு அவலம்? அவர்கள் "போர்க்களத்தில்" கூட நேரடியாக மனிதர்களுடன் தொடர்பு கொள்ள விரும்பவில்லை! இம்மாதிரியான அவலமான/அதீதமான மனித-தொடர்பு மீறல்களைப் பற்றி நாம் உணர்வதே இல்லை.  

     ஆனால், மேலுள்ளது போல் நகைச்சுவையான புகைப்படங்களை  மட்டும் வைத்துக்கொண்டு மனித-தொடர்புகள் மீறப்படுகின்றன/அழிக்கப்பட்டுவிட்டன என்று வாதிட்டுக்கொண்டு இருப்போம். உண்மையான மனித-தொடர்பு மீறல்கள்/அழித்தல்கள் ஆயிரமாயிரம் நடந்தேரிக்கொண்டே இருக்கின்றன. இப்புகைப்படங்களில் இருப்பது தான் உண்மையான மனித-தொடர்புகள் எனில், பல காலங்களாய் பேச்சு கூட இல்லாத நம் நட்பு/சுற்றம்/உறவு இவைகளை மீண்டும் நம்முடன் கொண்டு வந்து சேர்த்ததற்கு தொழில்நுட்பத்தை (நவீன அலைபேசி) நாம் பாராட்டிட வேண்டாமா? இருப்பினும், இதை நான் மனித-தொடர்பு என்பதாய் கருதவே இல்லை. அதனால் தான், என்னுடைய வாதங்களில் நான் திடமாய் இருக்கிறேன்; அதனால் தான், மனித-தொடர்பு என்பது இதுவல்ல என்று ஆணித்தரமாய் கூறமுடிகிறது. கண்டிப்பாக என்னுடைய புரிதல்கள், உங்களை உடன்பட செய்திருக்கும் என்று உறுதியாய் நம்புகிறேன்.
 
முதலில் மனித-தொடர்பு என்றால் என்னவென்று நாம் தெளிவாய் உணரவேண்டும்!!!     

பின்குறிப்பு: ஐன்ஸ்டீன் அவர்களின் ஊகிக்கப்பட்ட கருத்தாக இருப்பினும், அவருடன் ஒப்பிடுகையில் "மிகச்சிறு" இயற்பியலாளன் என்ற முறையில், அவருடன் தொடர்பு படுத்தி இத்தலையங்கத்தை எழுதும் வாய்ப்பு கிடைத்ததற்காய் பெருமிதம் கொள்கிறேன்.

ஆங்கில வடிவம்: http://vizhiyappan-en.blogspot.ae/2015/03/what-is-human-interaction.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக