வெள்ளி, மார்ச் 09, 2012

சுவாமியே சரணம் ஐயப்பா (பாகம்-1)...

                ("சபரி மலை" பாதையின் கடின தன்மையை உணர்த்தும் படம்; நன்றி - தினமலர்)
*******

        "சுவாமியே சரணம் ஐயப்பா" - தலையங்கத்தின் தலைப்பை பார்த்தவுடனேயே புரிந்திருக்கும்; எதைப் பற்றி எழுதப் போகிறேன் என்று. சரியாக, ஏழு வருடங்களுக்கு பின், இந்த வருடம் "மாலை" அணிந்து சபரி மலை சென்றேன். டிசம்பர் மாதம் இந்தியா சென்ற போது, சபரி மலை சென்று "ஐயனை"  கண்டு வந்தேன். "மாலை போடுதல்" தொடர்பாய் என்னுடைய எண்ணங்களை/ அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இத்தலையங்கம். இது கடவுள் இருக்கிறாரா? இல்லையா?? என்பது போன்ற வாதம் இல்லை! இருக்கிறார் என்பது என் நம்பிக்கை; இல்லை என்பது மற்றவர் நம்பிக்கை. நம்பிக்கை என்பது தனிப்பட்ட மனிதனின் விருப்பு/ வெறுப்பு கலந்தது. "மாலை" அணிந்தவுடன் நான் உணர்ந்த முதல் விசயம், எப்போதும் "ஒரு அசாதாராண மனம்" மூலம் எழும் கிளர்ச்சி,  இம்முறை இல்லை என்பது தான். தீர யோசிக்கும் போது, பின் வருவது புரிந்தது: "மாலை" அணியும் தினத்திற்கு முன்னிரவு, "மாலையை" பசும்பாலில் மூழ்கவைத்து அடுத்த நாள் காலை அணிவது வழக்கம். இத்தேசத்தில் (பெரும்பாலும் அனைத்து மேலை நாடுகளிலும்) கிடைக்கும் பால் செயற்கை முறையில் பதப்படுத்தப்பட்ட பால் ஆதலால், நம் ஊரில் (குறிப்பாய், மாட்டிலிருந்து கறந்தவுடன்) கிடைக்கும் பாலில் உள்ள அந்த வசீகர மனம் இல்லை என்பதை உணர்ந்தேன். இப்போது தான், எதற்கு பாலில் மூழ்கவைக்கிறோம் என்பதற்கு ஒரு காரணம் புரிந்திருப்பதாய் படுகிறது. அந்த மனத்தை "துளசி செடியில்" செய்த மாலையை அணிந்து உணர்ந்தவர்க்கு இதன் முழு பொருளும் தெரியும்.

      மாலை, அணியும்போது கடைபிடிக்க வேண்டிய விசயங்கள் என்று சிலவுண்டு; இது நம்மை வழிநடத்தும் "குரு சுவாமி"களை பொறுத்து சிறிது (சமயத்தில் பெரிதும்) மாறுபடுவது உண்டு. ஆனால், அதன் அடிப்படை ஒன்றாகத் தானிருக்கும். முதலில், காலை - மாலை, இரு நேரங்களில் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்பார்கள்; ஆரம்பத்தில் இதை செய்யவேண்டும் என்பதற்காய் செய்தேன். பிறகு, யோசித்து அதன் பொருள் உணர்ந்தேன்; பெரும்பாலும், மாலை அணிவது "கார்த்திகை" மாதத்தில் தான் அதிகமாய் இருக்கும்; அப்போது, குளிரும் அதிகமாய் இருக்கும். அம்மாதிரி சமயத்தில், அதிகாலை நேரங்களில் குளிர்ந்த நீரே வெதுவெதுப்பாய் தானிருக்கும்; அந்த பதத்தில் உள்ள நீரில் குளித்தால் பின் குளிரின் காட்டம் நம் உடலுக்கு தெரியாது. மாறாய், வெந்நீர் அந்நேரத்துக்கு இதமாய் இருக்குமே தவிர பின் குளிரின் தன்மை உடலை வாட்டும். இன்றைய காலகட்டத்தில், சபரி செல்லும் வழியில் நிறைய வசதிகள் வந்துவிட்டன; ஆனால், அந்த காலத்தில் இவ்வளவு வசதிகள் இல்லை; இவ்வளவு பாதுகாப்புகளும் இல்லை. அப்போது, "பெரும்பாதை" பயணமாய் காட்டு வழி செல்பவர்களுக்கு அதிகாலை (மற்றும் அந்தி சாய்ந்த) நேரம் தான் உகந்ததாய் இருந்திருக்கும் - வெய்யில், காட்டு விலங்குகள் போன்ற பல்வேறு தொல்லைகளிருந்து தப்பிக்க அது தான் சரியான நேரமாய் இருந்திருக்கும். அப்போது, குளிப்பதற்கு வெந்நீர் தேடி அலைய முடியாது; எனவே, ஒரு பயிற்சிக்காகக் கூட அது ஆரம்பித்திருக்கக் கூடும்.

           ஒரு வேலை மட்டும் உண்பது, அல்லது குறைத்து உண்பது என்பது. இப்போது இருப்பது போல் அந்த காலத்தில் அவ்வளவு கடைகள் வழியெங்கிலும் இருந்திருக்க சாத்தியமே இல்லை. அதனால், குறைத்து உண்டு 41 நாட்கள் (அல்லது குறிப்பிட்ட நாட்கள்) விரதமிருக்கும் போது, நம்முடைய உடல் உறுப்புக்கள் அந்த சூழலை சமாளிக்க தயாராகிவிடுகின்றன.  மேலும், அறிவியல் சார்ந்து பார்த்தால், உடல் உறுப்புகளுக்கு ஓய்வளிக்கும் பொருட்டு விரதமிருத்தல் ஒரு நல்ல பழக்கம். இது உலகின் பல மதங்களில் பொதுவாய் காணப்படுகிறது; மேலும் அனைத்து மதங்களிலும் இம்மாதிரி கடவுள் சார்ந்த விரதம் இருக்கும் வழக்கம் இருக்கிறது. காலனி இல்லாமல் நடந்து பழகுவது; பெரும்பாதையில் (அல்லது சிறுபாதையில் கூட) நடந்து அனுபவப்பட்டவர்களுக்கு தெரியும், அந்த மலைகளின் தன்மை என்னவென்று! அவைகளின் மேல் காலணியுடன் நடப்பது மிகவும் ஆபத்தானது; வெறும்கால்களுடன் நடப்பதே மிகவும் கடினம் - அதுவும் மழை வந்துவிட்டால், அது சிரமத்திலும் சிரமம். அங்கே, காலணிகளுடன் நடத்தல் ஆபத்து என்பதால், அதை பழகிக்கொள்வதற்கு வேண்டியே அதை ஒரு பயிற்சியாய் செய்ய பணித்திருக்கிறார்கள். புலால் உணவு இந்த மாதிரியான சூழலில் சரியாய் சீரனமடையாது என்பதால் தான் "சைவ" உணவை வலியுறுத்தி உள்ளனர்.  வேட்டி அணிவதன் அர்த்தம் எளிதாக விளங்கிவிடும்; மற்ற துணிகளை காட்டிலும், வேட்டியை எளிதில் துவைத்து, உணர்த்திவிட முடியும். அடர்த்தியான வண்ணமுள்ள வேட்டிகள் (குறிப்பாய், கருமை) விலங்குகளை அச்சுறுத்த மட்டுமல்ல; தொலைவில் வேறு ஒருவர் (அல்லது குழு) செல்வதை மிக எளிதாய் அறிந்து விடமுடியும்.

          வழியில், நிழற்படம் எடுக்கக் கூடாது என்பது (இப்போது அப்படி இல்லை என்பதும் உண்மை); ஒரு முறை நாங்கள் எண்ணற்ற நிழற்படங்கள் எடுத்தோம் நாங்கள் கடந்து செல்லும் வழியில். சபரி சென்று வந்த பின், அந்த "நிழற்ப்பட கருவி" எங்கள் விடுதியில் களவு போய்விட்டது. அது ஏன் களவு போனது? என்பது இன்னமும் கூட புரியவில்லை. இது தெய்வத்தின் செயல் என்று கூறவரவில்லை; ஆனால், எதனால் இது நிகழ வேண்டும்? புகைப்பங்களை அச்சிட்ட பின் களவு போயிருக்கலாம் அல்லவா? சில நேரங்களில், நடந்த செயலுக்கு நம்மால் சரியான காரணத்தைக் கொடுக்க முடியாது அல்லவா? அது போன்ற சம்பவம் இது. விரதத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் தண்ணீர், பழரசம், பால், சுவைநீர் தவிர (அதுவும் அளவுடனே) வேறு எதையும் சாப்பிடக்கூடாது என்று ஒரு நிபந்தனை உண்டு. நான், அப்படித்தான் ஒரு வேலை உணவு மட்டும் அருந்தி (இன்னமும்) இடையில் அனுமதிக்கப்பட்டவைகளை உண்பது வழக்கம். ஆனால், ஓராண்டு உடன் மாலை அணிந்திருந்த நண்பர்களுடன் சேர்ந்து பல விரத நாட்களில் சேர்ந்தாற்போல் குறைந்தது "10 வடைகள்" தின்றதுண்டு; அது எந்த மாதிரியான விரதம் என்பது இன்னமும் விளங்கவில்லை. மாலை நேரங்களில், அளவுக்கதிமாய் நொறுக்குத்தீனி தின்றதுமுண்டு. இது ஏதோ, ஓரிரு ஆண்டுகள் மாலை அணிந்திருந்தபோது செய்ததெனினும், செய்திருக்கிறேன்; கட்டுப்பாடுகளை மீறியிருக்கிறேன் என்பதே உண்மை. நான், மிக முயன்று தோற்றது, அதிகாலை எழுந்திருப்பது!  இந்த ஆண்டு, அந்த தவறை திருத்திக்கொள்ள தீவிர முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறேன்.

         என்னைப் பொறுத்தவரை, ஒரு கடமைக்காய் "மாலை" அணிவதை விட அதில் முடிந்த அளவு கட்டுப்பாடுகளை மேற்கொள்வதே சிறந்தது என்று நம்புகிறேன். என் அம்மா கூட என் பாதம் தொட்டு வணங்குவார்! நம்மைப் பெற்றவள், நம் பாதம் தொழுவது எவ்வளவு பெரிய விசயம்!! அதற்கு அந்த தாய் நம்மை எப்படி நம்பியிருக்க வேண்டும்? நம்மை தெய்வமாக மதித்து மற்றவர் தரும் மரியாதை அது; நமக்கு கொடுப்பதல்ல.  அதற்கு தகுதியாய் இருக்க, இம்மாதிரி சின்னஞ்சிறு காட்டுப்படுகளை கூட கடைபிடிக்கவில்லை எனில், மாலை அணிவதில் எந்த அர்த்தமும் இருப்பதாய் எனக்கு படவில்லை. எனக்கு சற்றும் மனது ஒவ்வாத விசயம் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். அது, மாலை அணிந்த பின் வீட்டிலுள்ள பெண்களிடம் (குறிப்பாய், மனைவியிடம்) அதிகம் பேசக்கூடாது; பற்றற்று இருக்கவேண்டும் என்பது. மேலும் அவர்கள் சுத்தமாய் இருந்து சமைத்த உணவை மட்டும் உண்ணவேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள். இங்கு, எனக்கு எழும் கடுமையான கேள்வி, இது தான். பிரமச்சரியரான "ஐயப்பனுக்கு" மாலையிட்டால் மட்டும் கடுமையான "பிரம்மச்சரியம்" கடைப்பிடிக்க வேண்டும் எனில், (மன்னிக்கவும்) "இரண்டு மனைவிகள்" கொண்ட கடவுளுக்கு "மாலை" அணிந்தால் என்ன செய்யவேண்டும்?? இந்த விசயத்தில் கட்டுப்பாடு வேண்டாம் எனவில்லை!; மனதை கட்டுப்படுத்த, "காமத்தை" கட்டுபடுத்த வேண்டும் என்பது மறுக்கமுடியாத உண்மை!!!. ஆனால், அதன் வரைமுறை கண்டிப்பாய் எல்லை கடந்து சென்றிருக்கிறது. இதன், ஒரு சாரலாய் தான் பெண்களுக்கு "சபரி மலை" செல்ல மறுக்கப்பட்டதும் அதனால் எழுந்த பிரச்சனைகளும். ஒருவேளை, இது பெண்களுக்கு "காட்டுவழி" பாதுகாப்பில்லை என்பதற்காய் கூட சொல்ல முற்பட்டிருக்கலாம்; சொல்லும் முறை மாறும்போதும், எல்லை மீறும்போதும் தான் பிரச்சனை எழுகிறது என்று தோன்றுகிறது.
      
     என்னளவில், "மாலை" அணிவதற்கு உண்டான கட்டுப்பாடுகளில் , பெரும்பாலானவற்றை நான் பின்பற்றுகிறேன். முடிந்த அளவிற்கு அவைகளுக்கான காரணங்களை அறிந்து கொள்ள முயற்சி செய்கிறேன். எத்துனை வசதிகள், சபரி பயணத்திற்காய் பெருகிக் கொண்டு போனாலும், அதன் அடிப்படையான மேற்கூறிய கட்டுப்பாடுகளை நான் எப்போதும் தொடர்ந்து கடைபிடிப்பேன். அதற்கு முக்கிய காரணம்! சபரி கோவில் என்பது மற்ற எல்லா கோவில்களிலிருந்தும் மாறுபட்டிருப்பதால்; அதாவது, நினைத்தவுடன் ஒருவர் "சபரி மலை" சென்று விட முடியாது; எல்லோராலும் செல்லவும் முடியாது. அங்கு செல்ல குறைந்தது "ஏழு மைல்" தூரம் (சரியான அளவுதானா எனத் தெரியவில்லை!) எவராயினும் நடந்து தான் ஆகவேண்டும். பெரும்பாதை (அல்லது சிறுபாதை கூட) கடந்து சந்நிதானத்தை அடையும் போது ஒரு பரவசம் வரும் பாருங்கள்! அதை நடந்து சென்று அனுபவித்தால் தான் புரியும். இதுவரை, நான் கார்த்திகை மாதம் மாலையணிந்து சென்ற போது "சிறிய பாதை"-யில் சென்றதில்லை. இந்த முறை, அப்படித் தான் செல்லப் போகிறேன்; எனக்கு இருக்கும் குறைந்த விடுப்பில், மற்ற வேலைகளையும் பார்க்க வேண்டும். இது, கண்டிப்பாக நான் நியாயப்படுத்த சொல்லும் காரணம் தான். எனினும், அது ஓர் சுகமான அனுபவம்; முடிந்தால் முயன்று பாருங்கள். "என்னய்யனை" பற்றி ஒரு தலையங்கத்தில் முடித்துவிட முடியாது; அதனால், மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் அடுத்த பாகம் எழுதுகிறேன்.

சுவாமியே! சரணம் ஐயப்பா…

பின்குறிப்பு: இந்த வருடம் அரசியல் சார்ந்த இருமாநில எல்லை பிரச்சனை காரணமாய், சபரி மலை சென்ற பக்தர்கள் அடைந்த துயரங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும். எனக்கு அந்த மாதிரி பிரச்சனை நேரவில்லை எனினும், எனக்கு வேறு மாதிரியான ஒரு பிரச்சனை வந்தது. அது இறைவழிபாட்டில் உள்ள ஒரு மிகப்பெரிய குறைகளுள் ஒன்றை எனக்கு சுட்டிக்காட்டி விளங்க வைத்தது. அது என்னவென்று ஒரு சில வாரங்களில் வேறொரு தலையங்கமாய் எழுதுகிறேன்.          

2 கருத்துகள்:

  1. அதன் அடிப்படையான மேற்கூறிய கட்டுப்பாடுகளை நான் எப்போதும் தொடர்ந்து கடைபிடிப்பேன். அதற்கு முக்கிய காரணம்! சபரி கோவில் என்பது மற்ற எல்லா கோவில்களிலிருந்தும் மாறுபட்டிருப்பதால்; அதாவது, நினைத்தவுடன் ஒருவர் "சபரி மலை" சென்று விட முடியாது; எல்லோராலும் செல்லவும் முடியாது. அங்கு செல்ல குறைந்தது "ஏழு மைல்" தூரம் (சரியான அளவுதானா எனத் தெரியவில்லை!) எவராயினும் நடந்து தான் ஆகவேண்டும். பெரும்பாதை (அல்லது சிறுபாதை கூட) கடந்து சந்நிதானத்தை அடையும் போது ஒரு பரவசம் வரும் பாருங்கள்! அதை நடந்து சென்று அனுபவித்தால் தான் புரியும்.

    பதிலளிநீக்கு