ஞாயிறு, செப்டம்பர் 09, 2012

காலச்சுழற்சியால் நாம் இழந்தவை!!!


     கடந்த வாரம், வெளியிடப்பட்ட "மின்-தடை" என்ற கவிதையில் - மின்சாரத்தால் நாம் இழந்த சிலவற்றை "அடிக்கோடிட்டு" கூறியிருந்தேன். அக்கவிதை எழுதும்போது, அவ்வாறு நாம் - காலச்சுழற்சியாலும், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியாலும் - பலவிதமான பொருட்களை, நிகழ்வுகளை, குணாதிசயங்களை இழந்துவிட்டதை உணர்ந்தேன். காலச்சுழற்சி நடைபெறும் ஒவ்வொரு காலகட்டத்திலும் - இந்த மாதிரியான இழப்புகள் தவிர்க்கமுடியாதது எனினும், என்னை (கண்டிப்பாய் - உங்களையும்) மிகவும் பாதித்த மாற்றங்களில் சிலவற்றை இங்கே அலசியிருக்கிறேன். இது - மீண்டும், நாம் கடந்த காலத்திற்கு செல்லவேண்டும் என்ற அடிப்படையில் அல்ல! மாறாய், (குறைந்தபட்சம்) முந்தைய-கால செயல்களின் அடிப்படையை புரிந்து, அவைகளை அவ்வப்போதாவது செய்யவேண்டும் என்பதை உணர்த்தவே!!! அந்த அடிப்படையை நாம் புரிந்து கொண்டு, அம்மாதிரி அடிக்கடி செய்ய பழகாது போனால், "மின்-தடை" இல்லாமல் பல வேலைகளை செய்ய இயலாது கடினப்படுவது போல் - பல செய்கைகளுக்காய் நாம் கடினப்பட வேண்டி இருக்கும் என்று தோன்றுகிறது. மின்சாரம் எனும் சுகம் கொடுத்த அனுபவத்தால் இன்று, "கை-விசிறி" இல்லாத வீடுகள் எத்தனை என்பதை சிறிது நினைத்து பார்ப்போம்! "எண்ணெய்-விளக்கு" இல்லாத வீடுகள் எத்தனை!! அதற்கும் மாற்றாய் கூட, battery மூலம் இயங்கும் விளக்கு தான் - அது தீர்ந்ததும் மீண்டும் இயங்க மின்சாரம் வேண்டும்; அல்லது, வேறு battery வேண்டும்; இது தான் இன்றைய நிலை!!!

       முதலில், கடிதம் எழுதுவது பற்றி குறிப்பிட விரும்புகிறேன்! கடிதம் எழுதுவது, என்பது ஓர் கலை!! எழுதுவதற்கு முன்பே, எழுத நினைக்கும் விசயம் பற்றி ஆழ்ந்து யோசிக்க வேண்டும்; பின் என்னென்ன விசயங்களை எழுதவேண்டும் - என்று அலசவேண்டும்!!! இப்போது "மின்னஞ்சலில்" இருக்கும் வசதி போல், delete & correct வசதி இருப்பதில்லை. அதிலும், "உள்-நாட்டு" கடிதம் எனில், இருக்கும் மூன்று (அரைப்)பக்கங்களில் - அனைத்தையும் எழுதவேண்டும். எழுத்துக்களை நுணுக்கி, நுணுக்கி எழுதியோர் பலரை எனக்கு தெரியும் (நான் உட்பட!). எனவே, கடிதம் எழுதுவதற்கென தனி நேரம் ஒதுக்கி ஒரு கலைபோல் பாவித்தல் அவசியமாயிருந்தது! இப்போது போல், வேலை இடையில் "மின்னஞ்சல்" அனுப்புவது போன்று சாதரண நிகழ்வல்ல! எனக்கு, "என்னப்பன்" எழுதும் கடிதங்கள் மிகவும் பிடிக்கும் (அவர் தான், எனக்கு அதிக கடிதங்கள் எழுதியவர்); அவருடைய கடிதங்கள் அனைத்தும் என்னிடம் பத்திரமாக உள்ளன!! வயது காரணமாய் விளைந்த மறதி காரணமாய், அவர் என்னிடம் சொல்ல வேண்டிய விசயங்களை பல நாட்களுக்கு அவ்வப்போது எழுதி(வைத்து) - தொகுத்தது - அனுப்பிய கடிதங்கள் நிறைய!!! "மின்னஞ்சலில்" எப்போது, எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம் என்பதால் - நாம் தனி-நேரம் ஒதுக்கி யோசித்து எழுதுவதில்லை. எனவே, கடிதம் எனும் கலையை அனுபவித்து செய்தலை; அதிலிருந்த உணர்வுப்-பரிமாற்றத்தை இழந்திருக்கிறோம். எழுதுவது - மிகவும் எளிது, என்றான பின் - எழுதுபவர்க்கும், எழுதப்படுபவர்க்கும் அதன் மகத்துவம் புரியாது போனது!!!

    அடுத்ததாய், தொலைபேசி உரையாடல்! பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, பேசியதற்கான பணத்தொகை காட்டும் "அலகை" பார்த்துக்கொண்டே பேசியது எனக்கு இன்னமும் நினைவு இருக்கிறது. கையில் இருக்கும் பணத்தின் அளவை "அலகு" நெருங்கும் போது சொல்லாமால் இணைப்பை துண்டித்த தருணங்கள் பலவுண்டு. அதற்காகவே, "கடிதம்" எழுதுவது போலவே, தொலைபேசியில் அழைக்கும் முன்னரே, பேசவேண்டிய விசயங்களை ஆழ்ந்து யோசித்து விட்டு பேசுவது வழக்கம். அந்த உரையாடலில் - ஓர் உணர்வும், உண்மையும் இருந்தது. தொலைபேசி கட்டணமும் குறைய ஆரம்பித்து, இந்த கைபேசி (அதிலும், குறிப்பாய், இலவசமான "இணையம்" மூலம் பேசும்) வசதி வந்த பின் - என்ன பேசுகிறார்கள், எதற்கு பேசுகிறார்கள் - என்று அவர்களுக்கே புரியாது பேசிக்கொண்டிருக்கின்றனர்! "அப்புறம், அப்புறம், அப்புறம்…." என்று கேட்டே மணிக்கணக்கில் பேசுவோர் பலர் அதிகரித்து விட்டனர். என்ன பேசுகிறோம், எதற்காய் பேசுகிறோம் என்ற எண்ணம் சிதைந்து, வெறுமையான உரையாடல்களே இன்று அதிகம்; அதனால், தேவையில்லாத விசயங்கள்  பேசி உறவுகளிடையே வாக்குவாதங்களும், வார்த்தை-தடித்தல்களும் அதிகரித்து விட்டது - என்பது தெரிந்த உண்மையே! பல உறவுகளுக்கு இடையே இருந்து வந்த "கலந்து-உரையாடல்" எனும் அழகியல் அழிந்துவிட்டது என்பது எத்தனை பேருக்கு புரிந்திருக்கும்? இந்த மின்னஞ்சல் மற்றும் கைபேசி போன்ற வளர்ச்சியால் தான் உறவுகளின் வலிமை குறைந்து விட்டது என்று தோன்றுகிறது!!!

      உணவு வகைகளில், நாம் இழந்தது கேழ்வரகு, கம்பு போன்ற சத்து-மிகுந்த தானியங்கள் மூலம் செய்யப்பட்ட கூழ், அடை போன்ற உணவுகள்! எளிதில் "சீரணிக்க" கூடிய அந்த உணவுகள், அசதியை தராது - வேலைகளை முனைப்புடன் செய்திட உதவிற்று. இதே குணாதிசயம் கொண்ட "கஞ்சி" கூட இப்போது அரிதான உணவாகி விட்டது. இம்மாதிரியான உணவுகள், குறைந்த பின் மனித-உழைப்பும் குறைந்து, "விவசாயம்" போன்ற மனித சக்தியை நம்பிய பல விஷயங்கள் அரிதாகிவிட்டது. அதனால், அந்த தானியங்களும் அரிதான விசயமாகி விட்டன; இப்போது, அந்த தானியங்களை எங்கோ - பணம் படைத்தவன், பண்ணை வைத்து உருவாக்கி - விவசாயம் செய்தவற்கே அதிக விலைக்கு விற்கும் நிலை உருவாகி விட்டது. இப்போது, அந்த மாதிரியான உணவு வகைகளை "பெரிய உணவு விடுதிகளில்" அதிக பணம் கொடுத்து உண்பது மட்டுமன்றி; அதை பாராட்ட வேறு செய்கிறோம். இருபது ஆண்டுகள் முன்பு வரை, எங்கள் குடும்பத்தில் எவரும் அரிசி, நிலக்கடலை, கேழ்வரகு, கம்பு போன்ற பல தானியங்களை விலைக்கு வாங்கியதே இல்லை! எங்கள் நிலத்தில் அனைத்தும் விளைந்தது. இப்போது அனைத்தையும் விலை கொடுத்து வாங்குகிறோம்; எனக்கு மிகவும் மனது வலிப்பது - எனக்கும், என்னப்பனுக்கும் பிடித்த நிலக்கடலையை விலை கொடுத்து வாங்கும் போது தான்! எங்கள் நிலத்தில் அறுவடை-செய்ய  நாளாகும் எனின், எவர் நிலத்தில் அறுவடை செய்யின் (என்னப்பன்) ஒரு வார்த்தை சொன்னதும் அன்றைய பொழுது வீட்டிற்கு வந்து கொடுத்து விட்டு செல்வர். அது ஒரு கனாக்காலம்!!!

        இறுதியாய், உறவுகளை இழந்தது பற்றி குறிப்பிட விரும்புகிறேன்! "இயந்திர மற்றும் கடும்போட்டி" நிலவும் இந்த வாழ்க்கை சூழலில் - நிற்காது (நிற்க முடியாது) ஓடி, ஓடி உழைக்க ஆரம்பித்து விட்டோம்!! இந்த காலச்சுழற்சியும், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியும் "மாயையாய்" உருவகப்படுத்திய பல விசயங்களை அனுபவிக்க ஓட ஆரம்பித்து விட்டோம்; நம் குழந்தைகளை கூட கவனிக்க நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கிறோம்!!! இந்த ஓட்டத்தில் - உறவு எனும் இன்னுமொரு "தொப்பூழ்" கொடியை அறுத்து அந்த உறவுகளை "நசுக்கி" மிதித்துவிட்டோம். அனைத்து பண்டிகைகளின் போதும், உறவுகளுடன் கூடி அளவளாவிய தருணங்கள் மாறி - பேசினாலே, "பணம்" கேட்டுவிடுவரோ என்று அஞ்சி; அதற்காகவே பேசாது-இருக்கும் சூழலை உருவாக்கவோர் பலர். அதிகப் பணப்புழக்கம் இல்லாத அந்த காலக்கட்டத்தில் இருந்த (நானும் கண்கூடாய் பார்த்து அனுபவித்த) அந்த தருணங்கள் இப்போது அங்கொன்றும், இங்கொன்றுமாய் இருக்கிறது. இப்போது பணம் பெரும்பாலும் அனைவரிடமும் தேவையான அளவு இருப்பினும்; அந்த "சந்தோச" தருணங்கள் இல்லை; வாழ்கை-முறை, அவ்வாறு இருக்க அனுமதிக்கவில்லை. இப்படி ஓர் வாழ்க்கை, எதற்கு? சரி, அவர்களுக்காவது அந்த பணம் முழுதும் உபயோகப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை! இரண்டு, மூன்று "வீடுளாய்", இருபது - முப்பது "பவுன்" தங்க நகைகளாய், மேலும் பல விதமான சேமிப்புகளாய்  (???!!!) உள்ளன. எவர்க்காய் இவை அனைத்தும்? உங்கள் பிள்ளைகளுக்காகவா?? இது அவர்களை, அதற்கும் மேலும் "ஓடிட" எத்தனிக்காதா??? இதுபோல், காலச்சுழர்ச்சியால் நாம் இழந்தவைகள்…

சொல்லில் மட்டுமல்ல; எண்ணிலும் அடங்காதவை!!!

பின்குறிப்பு: முன்பே குறிப்பிட்டவாறு - இந்த காலச்சுழற்சி மற்றும் விஞ்ஞான-தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் உருவாகும் - மாற்றங்கள் தவிர்க்கமுடியாதவை; அவை தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். மாற்றங்கள் வேண்டாம் எனவில்லை! மாற்றங்கள் ஒரு வரையறைக்குட்பட்டு இருக்கட்டும்!! அந்த செயலின் அடிப்படையை தொலைத்து விடாத விதத்தில் இருக்கட்டும். மீண்டும், "மின்-தடை" என்ற கவிதையில் குறிப்பிட்ட படி, அடிப்படையை மறந்த/ தொலைத்த எந்த மாற்றமும் நிலைப்பதில்லை!!!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக