திங்கள், செப்டம்பர் 24, 2012

போராட்டமும், ஆர்ப்பாட்டமும்…



         இரண்டு வாரங்களுக்கு முன், முற்றுகை போராட்டம் பற்றிய செய்தி ஒன்றை நாளிதழில் படித்தேன்.  அந்த செய்தியை தொடர்ந்து பல விதமான போராட்டங்களும், ஆர்ப்பாட்டாங்களும் நடந்த வண்ணமே இருந்து வருகின்றது. பெரும்பாலும் போராட்டம் மற்றும் கடையடைப்பு போன்ற செயல்கள்  "உணர்ச்சிவயப்பட்டு" நடக்கின்றன என்பது புரியினும் - அவை வரைமுறை மற்றும் எல்லை தாண்டி நடப்பது மட்டுமல்ல; அது நினைத்த காரியத்தை அல்லது இலக்கை நோக்கி பயணப்படாமல் திசை-மாறிச் செல்கிறது என்பது தான் கசப்பான உண்மை! இது அவர்களுக்கு புரியவில்லை என்பதைக் காட்டிலும்; அவ்வாறு புரிந்து கொள்ள முடியாமல் அவர்களை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றனர் - அவர்களின் தலைவர்கள்/ சங்கங்கள். இதை புரிந்தவர்கள் அவ்வாறு செய்யாமல் விலகி நிற்கின்றனர்; ஆனால், புரியாமல் செய்து கொண்டிருப்போர் தான் பலர். இதனால், பெரிதும் பாதிக்கப்படுவது - எந்த பொது மக்களுக்காய் இந்த ஆர்ப்பாட்டமும், போராட்டமும் நடக்கின்றனவோ - "அவர்கள் தான்" என்பது. போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் வேண்டாம் என்று கூறவில்லை; அவை நடைபெறும் விதமும், இடமும் தான் தவறு! நான் முதலில் படித்த போராட்டத்திற்கு காரணமான நாட்டை, "ஐக்கிய நாடுகள் சபை" கூட கடுமையாய் கண்டித்து உள்ளது. எனினும், அவர்கள் கூட "அதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெறுப்பான சூழ்நிலை, ஆபத்தான நிலைமை மற்றும் தாக்குதல்கள், மத அடிப்படையிலான வன்முறைகள் ஆகியவை கவலை அளிப்பதாக" குறிப்பிட்டுள்ளனர்.

      நான் படித்த செய்தி: "அமெரிக்காவில்" ஒரு மதத்தை பற்றி தவறான செய்திகளுடன் ஓர் திரைப்படம் வெளிவந்ததால் - அந்த போராட்டங்களின் தொடர்ச்சியாய் சென்னையில் உள்ள "அந்நாட்டு" தூதரகத்தை அந்த மதத்தை சார்ந்த ஓர் கட்சியின் ஆதாரவாளர்கள் முற்றுகை இட்டு "கல்லெறிந்தனர்" என்பது தான். எவருக்கும் எந்த மதம் சார்ந்தும் தவறான தகவல் பரப்ப உரிமை இல்லை; அது கண்டிக்கத்தக்கது என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், சென்னையில் உள்ள தூதரகத்தில் கல்லெறிவதால் பாதிக்கப் படப்போவது - பெரும்பகுதி, அங்கே கால் வலிக்க நிற்கும் - அவர்களின் சக இந்தியன் என்ற உணர்வு ஏன் வரவில்லை? மேலும், அவர்கள் மதம் சார்ந்த இந்தியர்கள் கூட பாதிக்கப்பவர் தானே?? நீங்கள் அமெரிக்கா சென்று போராடவேண்டும்; அல்லது பொதுமக்களுக்கு இடையூறாக இல்லாதவாறு இருக்கவேண்டும்??? சில வருடங்களுக்கு முன், பெரும்பான்மையான மதத்தை சார்ந்த ஓர் குழு "என் கடவுளின் ஊர் இது" என்ற அடிப்படையில் வேறொரு மதத்தை சார்ந்தவர்களின் வழிபாட்டு தளத்தை இடித்து தள்ளிய சம்பவம் உங்கள் அனைவருக்கும் தெரியும். அதில், பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு மதத்தையும் சார்ந்த பொது மக்கள் தான்! அதிலும், அதில் முற்றிலும் சம்பந்தப்படாத, சம்பந்தப்பட்ட இடத்திலேயே இல்லாத இரண்டு மதத்தையும் சார்ந்த "அப்பாவி - இந்தியர்கள்" தான். கண்டிப்பாக, இவை போன்றவைகளை சாமான்ய மனிதர்கள் செய்வது இல்லை; ஒவ்வொரு அமைப்பிலும் உள்ள சில நயவஞ்சகர்கள் தான்.

         இது மாதிரி கண்டிக்கத்தக்க செயல்கள் பல உண்டெனினும், எனக்கு தவறென்று உரைத்த சில விசயங்களை பற்றி இங்கே குறிப்பிட விரும்புகிறேன். சமீபத்தில், அண்டை மாநிலத்தை பிரிக்க ஆர்ப்பாட்டம் நடந்து, அதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்து - பின் அதை மாற்றியதும் அதைத் தொடர்ந்து நடந்த பல கலவரங்களும் அனைவரும் அறிந்ததே. இதில் முக்கியமாய் சம்பத்தப்பட்டவர்கள் கல்லூரியில் பயிலும் இளைஞர்கள் தான்; ஏதேனும் ஓர் சிலர் தவிர, மற்ற மாணவர்களுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இருந்திருக்க வாய்ப்பே இல்லை! அவர்கள் செய்ததெல்லாம் பேருந்தை தீயிட்டு கொளுத்தியது போன்ற சம்பவங்கள் தான்!! இதனால், பாதிக்கப்பட்டது அவர்களின் சக இந்தியன் மற்றும் சக-மாநிலத்தவன் என்ற எண்ணம் எழாத வண்ணம் - அவர்களை செயல்பட வைத்தது எவர்? எரிபொருள் விலை அதிகமானால், போராட்டம்; வரி-விதிப்பு அதிகமானால் போராட்டம்; இப்படி எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்து - அதில் துளியும் சம்பந்தப்படாதவர்களை காயப்படுத்தும் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. தன் தாய்-தந்தை இறந்ததற்கு கூட செய்யாத - தடியடி, கடையடைத்தல், பேருந்தை கொளுத்துதல், போராட்டம் - போன்றவை அவனின் தலைவன் இறந்ததற்காய் ஏன் செய்ய செய்யவேண்டும்? அந்த உணர்ச்சிபந்தம் தலைவனிடம் மட்டும் எப்படி வருகிறது?? ஒருவேளை, தலைவன் என்றால் - திருப்பி அடிக்க மாட்டார்கள் என்றா???

       இந்த மாதிரி சிறு, சிறு விசயத்திற்காய் உணர்ச்சிவயப்பட்டு "தகுதியும்-வாய்ப்பும் பெற்றவர்கள்" செய்ய வேண்டிய இடத்தில் செய்யத் தவறிய - செயலை "செய்யத்தகாதவர்கள்" பலர் செய்யக்கூடாத இடத்தில் செய்யும் இழிநிலை தொடர்ந்து "மிக உச்சமாய்" பின்வருமாறு நடந்தது. நம் சக-தமிழர்கள் "இலங்கையில்" செத்து மடிந்து கொண்டிருந்த போது, "இராமேசுவரத்தில்" நின்று கோஷமிட்டது! என்னளவில், அதற்கு-பதிலாய் அவர்கள் மெளனமாய் கூட இருந்திருக்கலாம். இதில் பத்திரிக்கைகள் வேறு: "அவர்களின் கூச்சல் (விண்ணைப் பிளந்து) இலங்கையில் எதிரொலித்தது" என்று உசுப்பி-விடுவது வேறு. அது எப்படி இடையில் எந்த தடையும் இல்லாமல் எதிரொலிக்கும்? அதுவும் இலங்கையில்?? அவர்களின் உணர்வை நான் மதிக்கிறேன்; ஆனால், இதைத் தான் அவர்கள் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார்கள்! ஆயின் என்ன பயன்? அதனால், எவருக்கு நன்மை?? அவ்வாறு செய்பவர்களில் பெரும்பாலும் அரசியல் சார்ந்து உள்ளவர்கள்; அவர்களுக்கு தகுதியும் ஓர் சிரிய படையும் உள்ளது. அப்படி இருக்கையில், கிளம்பி இலங்கை சென்று போராட வேண்டியது தானே? அவர்கள் அரசியல் சார்ந்தவர்கள் என்பதால், அவர்களை அவ்வளவு எளிதில் இலங்கை அரசு எதுவும் செய்திடல் இயலாது! ஏன் செய்யவில்லை? உண்மையில் - அவர்களில் பெரும்பான்மையோர் எண்ணம் இங்கே தமிழகத்தில் "ஓட்டு-வங்கியை" சேகரிப்பதில் தான் உள்ளது. அந்த இழி-செயலால் தான் எனக்கு அதில் உடன்பாடு இல்லை என்று கூறினேன்.

  முதன்முதலில், இம்மாதிரி ஆர்ப்பாட்டங்களைப் பார்த்து வேண்டுமானால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் நம்பிக்கை வைத்திருந்திருக்கக் கூடும். ஆனால், அதைப் பார்த்து-பார்த்து பழகிப்போய் இப்போது அவர்கள் நம்பிக்கை இழந்து நிற்கிறார்கள்; இன்னும் ஏன், இவர்கள் இது மாதிரியான விசயங்களை தொடர்ந்து செய்யவேண்டும்??? எரிபொருள்  விலையேற்றமோ, அதிக வரி விதிப்போ மக்கள் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்திற்கு வந்துவிட்டார்கள்; அது மிகச் சரியான வழிமுறையும் கூட. ஆனால், இவர்களின் போராட்டத்தால் விளையும் இழப்புகளை தான் அவர்களால் சமாளிக்க முடியாமல் போகிறது என்று எண்ணுகிறேன்! இவர்களின், போராட்டத்தால் அவர்கள் ஓர் நாள் வேலைக்கு செல்ல முடியவில்ல எனில், அதானால் அவர்களுக்கு ஏற்படும் இழப்பு - பன்மடங்கு பெரிதாகும். அந்த தவிப்பு தான் அவர்களுக்கு அதிகமாய் உள்ளதாய் தெரிகிறது!! மேலும், அவர்கள் நமக்கு வேண்டியதை நாமே தான் போராடி பெறவேண்டும் என்ற எண்ணத்தை  நோக்கியும் பயணிக்க தயாராகி வருகின்றனர். அதுவரை, அமைதியாய் இருப்போம் என்று தான் அவர்கள் விலகிச் செல்கின்றனர்; கண்டிப்பாய், இந்த மாதிரி கலவரம் செய்பவர்களைப் பார்த்து பயப்படுவதைக் காட்டிலும் - விலகிச் செல்வோம் என்று எண்ணுவோர் தான் அதிகம். அவர்கள் திருப்பி அடிக்கும் அந்த கணம் வரை தான் உங்கள் ஆட்டம் தொடரும்; நம்பிக்கையை மீண்டும், மீண்டும் இழந்த அவர்களின் "அடி" மிக-வளிமையானதாய் இருக்கும். அதற்கு முன், இழந்த நம்பிக்கையை மீண்டும் பெரும் முயற்சியாவது செய்யுங்கள். ஏனெனில், ஒருவரின் நம்பிக்கையை முதலில் பெறுவதைக் காட்டிலும்…

இழந்த நம்பிக்கையை பெறுதல், கடுஞ்சிரமம்!!!

பின்குறிப்பு: இப்போது, இலங்கை-அதிபர் இந்தியாவிற்கு வருவதை எதிர்த்து தமிழார்வலர்கள் (???!!!) பலர் "மிகப்பெரிய" ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடத்துகின்றனர். ஒருவர், தீக்குளித்து இறந்தும் விட்டார்; அவருக்கும், அவரின் குடும்பத்தார்க்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த-செயலை "வருந்தத்தக்க (தவறான) செயலாய்" இதற்கு ஆதரவான ஓர் கட்சியின் தலைவர் கூட குறிப்பிட்டிருந்தது - எனக்கு ஆச்சர்யமாகவும், ஆனந்தமாகவும் இருந்தது! அது தான் நிதர்சனம்; அதே போல், அத்தனை தமிழர்கள் மடிந்த போது - இலங்கை சென்று இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் செய்திருக்கவேண்டும் என்பதையும் அந்த தலைவர் உணரவேண்டும்!! இப்போதும், காலம் கடந்துவிடவில்லை!!! இலங்கை சென்று அங்கே எஞ்சியிருக்கும் தமிழர்களுக்கு ஆதரவாய் போராட முயலுங்கள்; அது தான் சரியான வழிமுறை! அது மட்டும் தான் அவர்களுக்கு ஏதேனும் ஓர் விதத்தில் உதவியாய் இருந்திட முடியும். மாறாய், நீங்கள் - இலங்கை அதிபரை - அவமானப்படுத்திவிட்டு (பொதுமக்களையும் அவதிப்படவைத்துவிட்டு) பின்பு அமைதியாய் ஆகிவிடுவீர்!! ஆனால், அது மீண்டும் அங்கே எஞ்சியிருக்கும் தமிழர்களை காயப்படுத்துவதில்-முடியும் வாய்ப்புள்ளதை அருள்கூர்ந்து உணர்ந்து செயல்படுங்கள்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக