ஞாயிறு, செப்டம்பர் 15, 2013

விநாயகர் சதுர்த்தி...



       
           இரண்டு நாட்களுக்கு முன், மும்பை கடலில் விநாயகர் சிலையை மூழ்கடிக்க சென்ற பக்தர்களை (???!!!) பாறை-மீன்கள் கடித்துவிட்டன என்ற செய்தியை நாளிதழ் ஒன்றில் படித்தேன். உடனே, ஆஹா! கடவுள் கண் திறந்துவிட்டான் என்று ஆனந்தப்பட்டேன்; ஆயினும், அவர்களின் உயிருக்கு எதுவும் ஆபத்தில்லை என்று தெரிந்து (மன்னிக்கவும்!)வருத்தப்பட்டேன்! அந்த கடவுள், அவர்களை கொன்றிருக்கவேன்டாமா? என்று சினம் வந்தது; பின் (எப்போதும் போல்!?) கடவுள் நின்று தான் கொல்வான்! என்று நானே சமாதானம் அடைந்தேன். ஒன்றுமட்டும் உண்மை! இயற்கை/இறைவன் இம்மாதிரி அறிவிலிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சரியான எச்சரிக்கை என்பதே அது. என்னென்ன ஆர்ப்பாட்டங்கள் இந்த சதுர்த்தி தினத்தில்?! ஓர் 20 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறெல்லாம் இருந்தது கிடையாது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது; நான் இளங்கலை (1989-1992) சென்னை-மாநிலக் கல்லூரியில் படிக்கும்போது தான் முதன்முதலில் சென்னையில் இதுபோன்ற-திருவிழா பெரிய அளவில் கொண்டாடப்பட்டது! அப்போது, எவனோ கிறுக்கு-பக்தன் ஒருவனால் திருவல்லிக்கேணி பெரு-சாலையில் உள்ள மசூதியில் தொழுதவர்களுடன் தகராறு ஆரம்பித்து பெருத்த பிரச்சனை வெடித்தது. இதுதெரியாத, நானும் என் நண்பர்கள் சிலரும் அதற்கருகில் இருக்கும் தெருவொன்றில் நடந்துகொண்டிருக்கும்போது - திடீரென எங்கள் முன் ஓர் "தேநீர் கண்ணாடிக்குடுவை" ஒன்று விழுந்து நொறுங்கியது! முதலும், கடைசியுமாய் அன்றுதான் நான் கண்ணீர்-புகையை நேரில் கண்டது!

  எப்படி, எங்கு ஓடினோம் என்றே எங்களுக்கு தெரியவில்லை; கிடைத்த வீட்டுக்குள் புகுந்துகொண்டோம்! பின்னர், நிலைமை சரியானதும் ஒருவாறாய் சேப்பாக்கம்-மைதானம் பக்கத்தில் இருக்கும் எங்கள் விடுதியை சென்றடைந்தோம்! பல நாட்கள் எங்களுக்கு அந்த படபடப்பு இருந்தது; பின், சில ஆண்டுகள் ஒவ்வொரு சதுர்த்தியின் போதும் அந்த நினைவும், படபடப்பும் இருந்தது. எனக்கு தெரிந்து, தமிழகத்தில் "விநாயகர் சதுர்த்தி" ஊரளவில் பெரிய திருவிழாவாய் கொண்டாட ஆரம்பித்ததற்கு அதுதான் ஆதியாய் இருந்திருக்கவேண்டும். அதற்கேற்றாற்போல் அந்த ஆண்டு துவங்கி தான் இந்த ஊர்வலங்கள் பிரபலம் ஆகத்துவங்கின. அதற்கு முன், ஒவ்வொருவரும் தத்தம் வீடுகளில் மட்டும் தான் ஓர் சிரிய சிலை-வைத்து வழிபட்டு பின்னர் அவரவர் வீட்டில் உள்ள/ ஊர்-பொதுக் கிணற்றில் 3-ஆம் நாள் விடுவது வழக்கம். நான் மேற்கூறிய ஆர்ப்பாட்டமும், போராட்டமும் கலந்த சதுர்த்தி திருநாளை காண்பதற்கு முன் ஒவ்வொரு ஆண்டும், எங்கிருந்தாலும் என் வீட்டிற்கு சென்றுவிடும் வழக்கம் கொண்டவன். சதுர்த்தி என்றால், நான் தான் என் வீட்டில் வினாயகர் சிலையை செய்துகொண்டு வருவது முதல், அவரை அலங்காரம் செய்வது வரை அனைத்தும் செய்வேன். இதற்காகவே, அன்று காலையே எங்கள் ஊரில் இருக்கும் ஆசாரி-வீட்டிற்கு சென்றுவிடுவேன். எங்கள்-ஊரில் அடுத்தடுத்து 3 ஆசாரிக்குடும்பங்கள் இருந்தன! அதில், நடுவில் இருந்த நாராயண-ஆசாரி வீடு தான் என் விருப்பம்; அவர், பலதரப்பட்ட சிற்பங்களையும் - அச்சுக்களையும் செய்வதில் வல்லவர்.

      ஆண்டுதோறும் சதுர்த்தி தினத்தின் காலை அவர் வீட்டிற்கு சென்று 3 மணிநேரம் கழித்து சிலையுடன் திரும்பி வருவேன்! எங்கள் தெருவின் முடிவில் தான் அவர் வீடு; பின் ஏன் 3 மணி நேரம் என்கிறீர்களா? சொல்கிறேன்! சிலை-வடிக்க ஓர் 5 நிமிடங்கள் போதும்; ஆனால், நான் அவருடனே இருந்து அனைவருக்கும் சிலைகள்-வார்ப்பதை இரசிப்பேன்; பின் அவருக்கு களிமண் பிசைந்து குழைவாய் கொடுக்க பழகினேன். பின், அச்சில் எண்ணையை தேய்க்கும் வேலையை செய்ய ஆரம்பித்தேன். பின் சிலையை வார்த்தவுடன் அதன் சுற்றியுள்ள பிசிறுகளை அகற்றி, அவருக்கு கண்கள் (குண்டுமணி என்று சொல்வோம்) வைப்பேன். இப்படியாய், சில ஆண்டுகளில் - நானே சிலையை வார்க்க பழகிவிட்டேன். இதனால், தான் ஒவ்வொரு ஆண்டும் 3 மணி நேரம்(ஆவது) ஆகும்; நான், அன்று விரதம் இருப்பேன் என்பதால் சிற்றுண்டி பற்றி கவலை இல்லை. என் அம்மாவும், படையலுக்கு வேண்டிய வேலைகளை செய்து கொண்டிருப்பார்; ஆதலால், என்னைப்பற்றி கவலைப்படுவதில்லை. சிலையை வார்ப்பது - மிக எளிதான வேலைதான்; அதுவும், களிமண்-சிலை! ஆனால், அதற்கு ஓர் அழகியல், பொறுமை, ஈடுபாடு அனைத்தும் வேண்டும். களிமண்ணில் இருக்கும் சிறு, சிறு கற்களை அகற்றுவதில் இருந்து அதில் இருக்கும் மற்ற மண்ணை களைந்து அதிலிருக்கும் தூசுகளை அகற்றுவது வரை - அது ஓர், சுகமான ஈடுபாடு! உண்மையில், என்னுடைய உணர்வில் - எனக்கு விநாயகர் சதுர்த்தி போன்று நான் மனமொன்றி ஈடுபட்ட/ஆனந்தப்பட்ட, இறை-சார்ந்த திருநாள் வேறெதுவும் இல்லை!

       எங்கள் விநாயகருக்கு நான் வீட்டிற்கு வந்து தான் அனைத்தும் செய்வேன்; முதலில், அவருக்கு கண்-கொடுப்பேன் (?!). பின், எங்கள் சேர்-குழியில் இருந்து புது-நெல் எடுத்து அவரைச் சுற்றிலும் ஒன்றொன்றாய், நெருக்கமாய் செருகுவேன்! இப்படியாய், அனைத்தும் செய்ததும், அவரை காணும் ஆனந்தம் இருக்கிறதே! அட, அட, அட... ஆனால், இப்போது போன்று அன்றைக்கு இந்த அளவில் தொழில்நுட்பம் இல்லை! இருந்திருந்தால், (இன்றுபோல்)என்னுடைய அலைபேசியிலேயே அவரை அத்தனை அலங்காரத்துடன் புகைப்படம் பிடித்து; என்னுடைய தொகுப்புகளில் "மின்னணு-கோப்பாய்" வைத்திருந்து இருப்பேன். அதில் ஒன்றை, இந்த தலையங்கத்தின் புகைப்படமாகவும் கொடுத்திருப்பேன். என்னுடைய சிலைகளின் ஒன்றின் நினைவாய் ஓர் புகைப்படம் கூட இல்லாது போனது என் துரதிஷ்ட்டம். அதனால்தான், எனக்கு மிகவும்-பிடித்த "திருச்சி உச்சிப்பிள்ளையார்" கோவில்-புகைப்படத்தை கொடுத்திருக்கிறேன்! அனைத்து அலங்காரமும் முடித்ததும், எங்கள் நிலத்திற்கு சென்று நெற்கதிர், சோளங்கதிர், கேழ்வரகு கதிர், கம்பங்கதிர் போன்றவற்றை சேகரித்து வருவேன். பெரும்பாலும், எங்கள் நிலத்தில் விளைந்தது தான்! இல்லையெனின், அண்டையர் நிலம்; நாங்கள் அன்று விலைகொடுத்து வாங்கிய பொருட்கள் மிகக்குறைவு. பின், சாலயோரம் இருந்த அரசாங்கத்தின் இலவம்பழம் (மண்படாது)சேகரித்து வருவேன். எல்லாவற்றையும் அவரிடம் கொண்டுவந்து சேர்த்ததும் சாமி-அறையே மிக அழகாய் காட்சி அளிக்கும்.

    மேற்கூறிய வண்ணம், நாங்கள் விளைவித்த அனைத்தையும் அவரிடம் சேர்ப்பது - "நன்றாக விளையவைத்து இருக்கிறாய், இறைவா! மகிழ்ச்சி" என்று நன்றி கூறும் செயலாய் தோன்றும்! இவை அத்தனையும் செய்து, 3-ஆம் நாள் அந்த சிலையை என்னையே என் தாய் எடுத்துசென்று கிணற்றில் வீச-சொல்லும் போது இனம்புரியாத சோகம் வரும்; ஆத்திரம் வரும். எனினும், அவரை நானே தான் கிணற்றிலும் வீசி-இருக்கிறேன்; ஆனால், இதில் இருக்கும் ஓர் பேருண்மையை பின்னால், நானே உணர்தேன்! அப்படி களிமண்ணால் செய்த சிலையை நம் கிணற்றில் வீசிடும்போது அந்த களிமண் நம் கிணற்றில் இருக்கும் மண்ணின் தன்மையை மாற்றும்; நீர் சுத்தமாக உதவும் - இது போன்ற பல காரணங்கள்/நியாயங்கள் இருந்தன. ஆனால், இப்போது பலதரப்பட்ட இரசாயனப் பொருட்கள் கொண்டு செய்திடும் பெருஞ்சிலைகளை கடலில் சேர்த்திடும் போது - பாதகங்கள் தான் விளையும். உண்மையில், சதுர்த்தி என்பது இப்போதிருக்கும் பிரம்மாண்டம் அடைந்தவுடன் - மனமொன்றி செய்த அந்த திருநாளை சுத்தமாய் மறந்துவிட்டேன். இந்தமுறை கூட, இங்கிருக்கும் என் தமக்கை-மகன் கூறி தான் அன்று சதுர்த்தி என்றே எனக்கு தெரியும். இப்போது சொல்லுங்கள்! பக்தி என்ற பெயரில் "என்போன்றோர் கொண்ட எந்த உணர்வும்" இல்லாது, பக்தி என்பதை நகைப்புக்குள்ளாக்கி சில அறிவிலிகள் முறையற்ற வழியில் சதுர்த்தியை கொண்டாடுதல் மட்டுமன்றி கடல் போன்ற நீர்-நிலைகளை மாசுபடுத்துவது பார்த்து மனம் கொதிக்கத்தானே செய்யும்?? அதனால் தான்...

மீன்கடிபட்டவர்கள் மேலும் துன்பபட்டிருக்க வேண்டும் என்று நினைத்தேன்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக