ஞாயிறு, செப்டம்பர் 15, 2013

நான் - வரவா? செலவா??


      என்னப்பன் "வரவு-செலவு" கணக்கு எழுதும் பழக்கம் உள்ளவர்! பல-ஆண்டுகள் தொடர்ந்திடும் அப்பழக்கத்தை இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறார். எந்த சூழலிலும், இன்றுவரை அப்பழக்கத்தை நிறுத்தியது இல்லை!! 20 ஆண்டுகள் இருக்கும் என்று நினைக்கிறேன்; அன்றொரு நாள் என்னப்பனின் மேலும் 20 ஆண்டுகள் பழைய "வரவு-செலவு" கணக்கு ஏடு ஒன்றை காண நேர்ந்தது! ஓர் ஆர்வத்தில் அதை புரட்டி பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு ஓர் அதிர்ச்சி!! ஆம்; 11.8.1972 என்ற தேதியிட்டு "இன்று இளங்கோவன் பிறந்தான்" என்று எழுதி இருந்தார்! அதை "வரவு, செலவு" என்ற இரண்டு பத்திகளுக்கு பொதுவாய் எழுதி இருந்தார். எனக்கு பெருத்த ஆர்வம் எழுந்தது; என்னப்பனிடம் - அவருக்கு "நான் - வரவா? அல்லது செலவா??" என்று கேட்கவேண்டும் என்று தோன்றியது. ஓரிரு நாட்கள் கழித்து அவரிடமே கேட்டேன்; அவர் சிரித்துக்கொண்டே நாயகன்-கமல் பாணியில் "தெரியலையேப்பா!!" என்றார். நானும் அத்துடன் விட்டுவிட்டேன்.

        அதன் பின், நான் மேலும் பழைய ஏடுகளை தேடலானேன்; ஆனால், என் தமையன் மற்றும் தமக்கை பிறந்த நாளில் அவர் அவ்வாறு எழுதியிருந்ததாய் எனக்கு சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை! நான் பிறந்ததை மட்டும் ஏன் அவ்வாறு எழுதினர்? உண்மையில், நான் ஏன் அவ்வாறு எழுதினீர்கள் என்று கேட்டபோது அப்படி ஒன்றை எழுதியதே அவருக்கு நினைவில்லை!! இன்றுவரை அவர் ஏன் அப்படி எழுதினர் என்று எனக்கு தெரியவில்லை; ஆனால், இது நடந்து ஓர் 10 ஆண்டுகள் கழிந்ததும் - கண்டிப்பாய், நான் என்னப்பனுக்கு வரவாய் தான் இருந்திருக்கிறேன் என்று தோன்றியது! மறுப்பேதுமின்றி, இன்று-நான் அந்த கேள்வியை அவரிடம் கேட்டால் அவரும் இதையே சொல்வார்!! ஆனால், நான் இன்றுவரை அப்படி கேட்டதில்லை; அது தேவையும் இல்லை!  ஆனால், இந்த சம்பவத்தை நினைக்கும்போதெல்லாம் என்னுள் வேறோர் கேள்வியை கேட்டு பதிலும் தேடுவேன்! அது, என்னப்பன் தவிர வேறெவருக்கும் நான் வரவாய் இருக்கிறேனா என்பது...

வெகுநிச்சயமாய், நான் பலருக்கும் வரவாய்-தான் இருந்திருக்கிறேன்/இருக்கிறேன்!!!   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக