ஞாயிறு, நவம்பர் 09, 2014

குறையொன்றுமில்லை (2014)...


     
     கடந்த வெள்ளியன்று வழக்கம் போல் இணையத்தில் என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருந்தபோது, குறையொன்றுமில்லை என்ற படம் கண்ணில் பட்டது. எவர் நடித்தது என்று தெரியவில்லை; பெரும்பாலும் புதுமுகங்கள்! இந்த நிமிடம் வரை கூட தெரியாது. தெரிந்துகொள்ளவும் தோன்றவில்லை; எவர் என்று தெரியாமலேயே அந்த படத்தைப் பற்றிய உயர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று தோன்றியது. என்னுடைய பார்வை கீழே:
 • முதலில் குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டிருப்பது சிறப்பு. படத்தின் ஆரம்பத்தில், பார்வையாளர்கள் தான் "தயாரிப்பாளர்கள்" என்பது மிகவும் பொருத்தம். ஆனால், தொடர்ந்து சொன்னது போல் என்னால் திரையரங்கில் அல்லது முறையான-குறுந்தட்டில் பார்க்க இயலவில்லை! இங்கே அந்த படம்  வெளியாகவில்லை. அதற்காய், அவர்கள் பொறுத்தருளவும்! வாய்ப்பு கிடைத்தவர்கள், இப்படத்தை திரையரங்கில் காணுங்கள்.
 • இம்மாதிரி புதுமுகங்கள் கொண்டு; குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்படும் படங்கள் சொல்ல வந்த விசயத்தை விட்டு விலகாமல் அந்த கருத்தில் மையம் கொண்டிருக்கும் என்பதற்கு இந்தப்படம் ஒரு சாட்சி. சமீபத்திய, கத்தி திரைப்படமும் இம்மாதிரி ஒரு கருத்தை மையப்படுத்தியது எனினும், அதில் சில சறுக்கல்கள் இருப்பதை குறிப்பிட்டிருந்தேன். தேவையற்ற கதாநாயகி; அதனால், வலுக்கட்டாயமாய் திணிக்கப்பட்ட பாடல்கள்; தேவையற்ற இன்னொரு கதாபாத்திரம் என்று?! இந்தியன், அந்நியன் போன்ற படங்கள் வேண்டுமானால் - இந்த வகையில் விதிவிலக்குகளாய் இருக்கலாம். ஆனால், பெரும்பான்மையில் குறைந்த தயாரிப்பில் வரும் படங்கள் அதிக தரம் வாய்ந்தே இருக்கின்றன என்பது என் கணிப்பு.
 • படம் ஆரம்பித்து 10 நிமிடம் கூட இல்லை! படத்தின் மையக்கரு ஆரம்பித்து விட்டது. எந்த "பில்ட்-அப்"பும் இல்லை; மையக்கரு வரவேண்டும் என்ற நோக்கத்தில் எந்த "ஃபிளாஷ் பேக்"கும் இல்லை. கதை இயல்பாய், மையக்கருவிற்குள் செல்கிறது. கதாநாயகனும், அவ்வாறே!
 • கார்ப்பரேட் நிர்வாகம் என்றால் என்ன? என்பதை மிக எளிமையான திரைக்கதை/காட்சிகள் கொண்டு விளக்கி இருப்பது மிகமுக்கியமாய் பாராட்டப் படவேண்டும்.
 • எடுத்துக்கொண்டிருக்கும் சவாலான விசயத்தை கதையின் நாயகன், வழக்கமான திரைப்பட-பிரம்மாண்டத்தில் இருந்து பெருமளவில் விலகி "மிக எதார்த்தமாய்" நிகழ்த்துவதாய் காண்பித்து இருப்பது தனி சிறப்பு!
 • வள்ளியூர் என்றொரு கிராமத்தை சுற்றி படம் நகர்கிறது. அது உண்மைப் பெயரா என்று தெரியவில்லை. ஆனால், அந்த ஊர் அவ்வளவு இயற்கையாய்/அழகாய் இருக்கிறது. பச்சைப்-பசேல் என்ற வயல்கள், அருமையான மலை சூழ்ந்த பகுதி, உண்மையான கிராம மக்களின் தோற்றம் - அனைத்தும் அருமை. வழக்கமாய் திரைப்படங்களில் இருப்பது போல், கதையின் நாயகன் வீடு மட்டும் "அரண்மனை"போன்ற அழகுடன் தனித்து தெரியவில்லை!
 • படத்தில் "அனல் பறக்கும் பஞ்ச்" வசனங்கள் இல்லை. கதாநாயகன் ஒரேயொரு இடத்தில் "நான் அமைதியா இருக்கறதுனால; என்கிட்ட பதில் இல்லைன்னு அர்த்தம் இல்லை! சொன்னால், உங்களுக்கு புரியாது!!" என்பது போல் ஒரு வசனம் இயல்பாய் பேசுவார். அடுத்த காட்சியில், தானே "கதையின்"நாயகியிடம் "இப்போ தான் ஒரு பஞ்ச் டையலாக்" பேசினேன் என்று இயல்பாய் கூறுவார். உண்மையில், அது ஆர்ப்பாட்டமில்லாத அருமையான பஞ்ச்!
 • கதாநாயகனின் நண்பனாய் வரும் கதாபாத்திரம் அருமை! இயல்பான தோற்றம்; அமைதியான நடிப்பு! அவரின் நண்பனாய் வருபவர் கூட "இயல்பான வசனங்களால்" நகைச்சுவை உண்டாக்குகிறார். தேர்ந்த நடிகர்கள் போல் நடித்திருக்கின்றனர்.
 • இந்த படத்திலும் கதாநாயகி உண்டு. ஆனால், ச்சுமா கதாநாயகனை சுற்றி வரும் அழகுப்பதுமையோ?! "சதைப்பிண்டாமோ"! அல்ல; கதையில் ஒரு பாத்திரமாய் வருகிறாள். அவளும், கதையின் மையக்கருவான விவசாயம் மற்றும் கிராமங்களுக்கு உதவுவது என்று கதியினூடே வருகிறாள்.
 • இயல்பான விதத்தில் வரும் காதல்(கள்)! வெகு இயல்பாய் வரும் காதலர் சண்டைகள்/ஊடல்கள். திரைப்படம் என்பதற்காய் பல அபத்தங்கள் இல்லை! ஆபாசங்கள் இல்லை. ஆனால், காதல் இருக்கிறது. கதையின் நாயகனும்/நாயகியும் தங்களின் வேலை/சமுதாயக்கடமை - இதில் இருந்து எள்ளளவும் மாறாமல் காதலிக்கின்றனர். மிகமுக்கியமாய் "வாழ்வை ஒட்டிய காதல்" என்ற அளவிலேயே காண்பிக்கப் பட்டு இருக்கிறது.
 • இந்த படத்திலும் பாடல்கள் வருகின்றன. ஆனால், திணிக்கப்பட்ட பாடல்கள் அல்ல! கதாநாயகியின் ஆடை குறைக்கப்படவேயில்லை! ஏன், ஆடையே மாற்றப்படவில்லை! காட்சிகளின் பின்னணியில் தான் பாடல்கள் வருகின்றன. குறுகிய நேரத்தில்; அழகிய உணர்வில் - வரும் பாடல்கள். பாடல்களுக்காய் எவரும் விமானம் ஏறி; வேறு நாடுகளுக்கு செல்லவில்லை! ஏன், இந்தியாவின் பல பகுதிகளுக்கும் கூட சுற்றித் திரியவில்லை. இருக்கும் இடத்தில்;  இருக்கும் வண்ணமே உள்ள பாடல்கள்.
 • படத்தில் ஒருவர் கூட மற்றொருவரை "ச்சும்மா" கூட அடிக்கவில்லை! பூஜை/கத்தி படங்களில் மற்றும் பல படங்களில் வருவது போல், எவரும் இன்னொருவரிடம் "அவனை; செதில், செதிலாய் வெட்டனும்!" என்று இரைச்சல் இடுவதில்லை!  ஒருவரும், இன்னொருவரை பார்த்து "முஷ்ட்டி" மடக்குவதில்லை. இவ்வளவு ஏன்? படத்தில் வில்லன் என்று யாருமே இல்லை! ஆம்; இங்கே நாம் எல்லோருமே "விவாசியிக்கும்/கிராமத்திற்கும்" வில்லன்! என்பது தெளிவாய் இருக்கும்போது, தனியே எதற்கு வில்லன்?!  
 • இப்போது, எனக்கு மிகப்பெரிய குழப்பம் வருகிறது! இம்மாதிரி பாடல்கள், ஆடைக்குறைப்பு, அடிதடி என்பனவற்றை "திரைப்படத் துறையினர்" தொடர்ந்து சொல்லி வருவது போல்; நாமா எதிர்பார்க்கிறோம்?! இல்லையென்றே தோன்றுகிறது; குறைந்த பட்சம், இந்த சூழலில் இல்லை. ஒரு காலத்தில் "நாக்கை தொங்கப்போட்டு" பார்த்து; ஒரு-கூட்டம் ஏங்கி இருக்கக்கூடும். ஆனால் அது(வும்) "இலைமறை; காய்மறை"ஆய் இருந்தபோது, இருந்திருக்கவேண்டும். இப்போது "இலையே" இல்லையே அய்யா! பின் எப்படி, அதில் நம் விருப்பம் இருக்கும்? கலைத்துறையினர் இந்த விசயத்திற்கு செவி-சாய்க்க வேண்டும்!!
 • என்னளவில், அந்த படத்தில் "வேலைக்காரியாய்" வரும் நடிகையை வேறேதோ படத்தில் பார்த்ததாய் நினைவு! அதே வேலைக்காரி போன்ற கதாபாத்திரம் என்று நினைக்கிறேன். "வேலைக்காரி"வேடத்திற்கு மட்டும் "படத்தின் பட்ஜெட்"உடன் எந்த சம்பந்தமும் இல்லை போலும்!
 • சில குறைகள் இருந்தாலும்; மேற்குறிப்பிட்ட போல் இன்னும் இருக்கும் பல நிறைகளினால் - அவைகள் நமக்கு பெருசாய் தெரிவதில்லை! உண்மையில், அவைகளை குறைகளாய் பார்க்கவேண்டிய அவசியமே இல்லை என்பதால்; அவைகளைக் குறிப்பிடவில்லை!
குறிப்பு: இம்மாதிரியான படங்கள் அவ்வப்போது வரத்தான் செய்கின்றன! ஆனால், இம்மாதிரியான படங்களை நாம் தான் கொடுக்கவேண்டிய "அங்கீகாரம்"கொடுத்து வரவேற்காமல் போய்விடுகிறோம். அதனால் தான் "பல குப்பைகள்" இங்கே வந்துகொண்டிருக்கின்றன. அந்த குப்பைகளை நாம் மறுக்க/தடுக்க முடியவில்லை என்பதால் தான் "ஆடைக்குறைப்பு" போன்ற பல அசிங்கங்களை நாம் தான் எதிர்பார்க்கிறோம் என்ற "பொதுவான குற்றச்சாட்டு" இருக்கிறது. ஏதேனும் ஒரு "ஈனக்கும்பல்" வேண்டுமானால், அம்மாதிரி(மட்டும்) எதிர்ப்பார்க்கலாம். தொடர்ந்து நாம் அமைதியாய் இருப்பாதால் தான் அது "பொதுக் குற்றச்சாட்டாய்" வைக்கப்படுகிறது என்று தோன்றுகிறது.

இம்மாதிரியான படங்களை ஆதரிப்போம்! தவறான படங்களை எதிர்ப்போம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக