ஞாயிறு, நவம்பர் 26, 2017

குறள் எண்: 0847 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 085 - புல்லறிவாண்மை; குறள் எண்: 0847}

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு

விழியப்பன் விளக்கம்: கிடைக்கற்கரிய உபதேசங்களைப் பெற்றும், அவற்றைப் பின்பற்றத் தவறும் அறிவு இல்லாதோர்; தமக்குத் தாமே, பெருந் துன்பங்களைச் செய்துக்கொள்வர்.
(அது போல்...)
காண்பதற்கரிய தலைவர்களைக் கண்டும், அவர்களைத் தொடரத் தவறும் அரசியல் அறமற்றோர்; தமக்குத் தாமே, அதீத தோல்விகளை வகுத்துக்கொள்வர்.

சனி, நவம்பர் 25, 2017

குறள் எண்: 0846 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 085 - புல்லறிவாண்மை; குறள் எண்: 0846}

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி

விழியப்பன் விளக்கம்: தம் மனதிலுள்ள குறைகளை நீக்கி, அவற்றை அழிக்க முனையாதோர்; தம் உடம்பிலுள்ள பகுதிகளை மறைக்க, ஆடை உடுத்துவது பொய்யறிவு ஆகும்!
(அது போல்...)
தமது கட்சியின் ஊழல்களை அறிந்து, அவற்றைக் களைய முடியாதோர்; தமது எதிர்க்கட்சியின் ஊழல்களை விமர்சித்து, பிரச்சாரம் செய்வது பொய்யரசியல் ஆகும்!

வெள்ளி, நவம்பர் 24, 2017

குறள் எண்: 0845 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 085 - புல்லறிவாண்மை; குறள் எண்: 0845}

கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்

விழியப்பன் விளக்கம்: கற்றறியாத விடயங்களிலும், பொய்யறிவுப் போர்வையோடு ஒழுகுதல்; தாம் குழப்பமின்றி கற்று, வல்லமையடைந்த விடயங்களின் மேலும் ஐயத்தை உருவாக்கும்!
(அது போல்...)
செய்யாத திட்டங்களையும், பொய்பிரச்சார அரசியலோடு அணுகுதல்; அவர்கள் ஊழலின்றி செய்து, வெற்றியடைந்த திட்டங்களின் மீதும் அவநம்பிக்கையை அளிக்கும்!

வியாழன், நவம்பர் 23, 2017

நட்டம் நமக்கும் தானென உணர்வோம்...

குறள் எண்: 0844 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 085 - புல்லறிவாண்மை; குறள் எண்: 0844}

வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு

விழியப்பன் விளக்கம்: நட்பியலில் அறிவின்மை எனப்படுவது என்னவெனில்; "யாம் அறிவுடையோர் ஆவோம்!" எனத் தாமே அறிவித்துக் கொள்ளும் ஆணவம் ஆகும்!
(அது போல்...)
அரசியலில் திறமின்மை என்பது யாதெனில்; “யாம் நிரந்தரமாய் ஆள்வோம்!” எனத் தொண்டர்களை அறிவிக்க வைக்கும் செருக்கு ஆகும்!

புதன், நவம்பர் 22, 2017

குறள் எண்: 0843 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 085 - புல்லறிவாண்மை; குறள் எண்: 0843}

அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது

விழியப்பன் விளக்கம்: நட்பியலில் அறிவில்லாத ஒருவர், தாமே தம்மை வருத்திக் கொள்ளும் வருத்தங்கள்; அவர்களின் பகைவர்களும், செய்வதற்கு அரிதானவை ஆகும்!
(அது போல்...)
அரசியலில் திறமில்லாத ஒருவர், தாமே தம்மை அடிமையாக்கிக் கொள்ளும் அடிமைத்தனம்; அவர்களின் எதிர்க்கட்சியும், பணிப்பதற்கு விரும்பாதது ஆகும்!

செவ்வாய், நவம்பர் 21, 2017

குறள் எண்: 0842 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 085 - புல்லறிவாண்மை; குறள் எண்: 0842}

அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்

விழியப்பன் விளக்கம்: நட்பியல் ஞானம் இல்லாதவர், மனம் உவந்து கொடுப்பது; அதைப் பெறுபவர் செய்த தவத்தால் விளைவதே அன்றி, வேறெதுவும் இல்லை!
(அது போல்...)
அரசியல் அறம் இல்லாதவர், கையூட்டு வாங்காமல் செய்வது; அப்பயனை அடைபவர் நடத்திய போராட்டத்தின் வெற்றியே அன்றி, வேறொன்றும் இல்லை.

திங்கள், நவம்பர் 20, 2017

குறள் எண்: 0841 (விழியப்பன் விளக்கவுரை)

{பால்: 2 - பொருட்பால்; இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 085 - புல்லறிவாண்மை; குறள் எண்: 0841}


அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு

விழியப்பன் விளக்கம்: நல்ல நட்பை உணரும் அறிவு இல்லாமையே, இல்லாமை அனைத்திலும் கொடிய இல்லாமையாகும்! வேறேதும் இல்லாததை, இவ்வுலகம் இல்லாமையாக எண்ணாது!
(அது போல்...)
நல்ல ஆட்சியை அளிக்கும் வைராக்கியத்தை நாடாமையே, நாடாமை அனைத்திலும் அழிவான நாடாமையாகும்! வேறெதையும் நாடாததை, இச்சமூகம் நாடாமையாக தூற்றாது!

எதற்கு இம்மாதிரி ஒரு இரட்டைத்தனம்?

ஞாயிறு, நவம்பர் 19, 2017

முக்கியமானதைக் கவனிப்போம்...

அதிகாரம் 084: பேதைமை (விழியப்பன் விளக்கவுரை)

பால்: 2 - பொருள்இயல்: 10 - நட்பியல்; அதிகாரம்: 084 - பேதைமை

0831.  பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
           ஊதியம் போக விடல்

           விழியப்பன் விளக்கம்: நட்பைச் சேர்ப்பதில், அறியாமை என்பது என்னவெனில்; தீமை 

           அளிப்போரை ஏற்றுக்கொண்டு, நன்மை அளிப்போரை விலகிச்செல்ல விடுவதாகும்.
(அது போல்...)
           ஆட்சியைத் தேர்ந்தெடுப்பதில், குற்றம் என்பது யாதெனில்; இலவசம் அளிப்போருக்கு 
           வாக்களித்து, ஊழலொழிக்க முனைவோரை தோற்கடிக்கச் செய்வதாகும்.
      
0832.  பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
           கையல்ல தன்கட் செயல்

           விழியப்பன் விளக்கம்: அறியாமைகள் அனைத்திலும், அதீதமான அறியாமை என்பது; தம் 

           சுயத்திற்கு ஒவ்வாத, கூடா நட்பின் மேல் விருப்பம் கொள்வதாகும்!
(அது போல்...)
           துன்பங்கள் எல்லாவற்றிலும், கொடிய துன்பம் என்பது; மக்கள் ஆட்சிக்கு தகுதியற்ற, தீய 
           கட்சி ஒன்றைத் தேர்வு செய்வதாகும்!
           
0833.  நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
           பேணாமை பேதை தொழில்

           விழியப்பன் விளக்கம்: தீயவைக்கு நாணாதது/தேவையை நாடாதது/நல்லோரிடம் 

           அன்பில்லாதது/முறையான எவ்வொன்றையும் பேணாதது - இவையாவும் நட்பியலின் 
           அறியாமையாகும்!
(அது போல்...)
           இலவசத்துக்கு வெஃகாதது/ஊழலாளிகளை ஒதுக்காதது/நல்லோரை ஆதரிக்காதது/ 
           நியாயமான விதிகளைக் கடைப்பிடிக்காதது - இவையாவும் மக்களாட்சியின் 
           எதிர்வினைகளாகும்!

0834.  ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
           பேதையின் பேதையார் இல்

           விழியப்பன் விளக்கம்: நட்பியல் சார்ந்த நூல்களைக் கற்றுணர்ந்தும்/பிறருக்கு 

           எடுத்துரைத்தும்; தாம் பின்பற்றாத அறியாமை நிறைந்தோரை விட, அதீத அறியாமை 
           கொண்டோர் எவருமில்லை!
(அது போல்...)
           அரசியல் சார்ந்த அறங்களை அறிந்தும்/பிறருக்குக் கற்பித்தும்; தாம் பழகிடாத 
           கொடுங்கோன்மை நிறைந்தோரை விட, அதிக கொடுங்கோன்மை உடையோர் 
           எவருமில்லை!

0835.  ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
           தான்புக் கழுந்தும் அளறு

           விழியப்பன் விளக்கம்: நட்பியலில் அறியாமை கொண்டோர்; முதல் பிறவியிலேயே; ஏழு 

           பிறப்புகளுக்கும் நரகத்தில் தள்ளும் செயல்களை, செய்யும் ஆற்றலுடையோர் ஆவர்!
(அது போல்...)
           வேலையில் அறமின்மை உடையோர், வாரத்தின் முதல்நாளே; ஏழு நாட்களுக்கும் 
           விரக்தியில் ஆழ்த்தும் சோம்பலை, கொள்ளும் திறமுடையோர் ஆவர்!

0836.  பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
           பேதை வினைமேற் கொளின்

           விழியப்பன் விளக்கம்: கூடா நட்பை உணரமுடியாத அறியாமை கொடோர், ஒரு செயலைத் 

           துவங்கினால்; அச்செயல் மட்டுமா தடம் புரளும்? அவர்களும் சேர்ந்தே தடம் புறள்வர்!
(அது போல்...)
           தவறான தலைவரை அறியமுடியாத அனுபவமின்மை உடையோர், ஓர் கட்சியை 
           ஆதரித்தால்; அக்கட்சி மட்டுமா ஊழல் செய்யும்? அவர்களும் சேர்ந்தே ஊழல் செய்வர்!

0837.  ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
           பெருஞ்செல்வம் உற்றக் கடை

           விழியப்பன் விளக்கம்: நட்பியலில் அறியாமையுள்ள ஒருவரிடம், பெருமளவு செல்வம் 

           சேரும்போது; அவர்களுக்கு தொடர்பற்றோரும் பசியாற, அவர்களின் சுற்றத்தார் 
           பசித்திருப்பர்!
(அது போல்...)
           அரசியலில் பொய்மையுள்ள ஒருவரிடம், அதிகளவு ஆட்சியதிகாரம் சேரும்போது; 
           எதிர்க்கட்சியும் ஊழலால் பயனடைய, வாக்களித்த மக்கள் அல்லாடுவர்!

0838.  மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
           கையொன்று உடைமை பெறின்

           விழியப்பன் விளக்கம்: நட்பியலில் அறியாமை கொண்டவரிடம், அதிக மதிப்புடைய பொருள் 

           கிடைத்தால்; அவரின் நிலைமை, பித்தம் உடையவர் ஒருவர் மதுவருந்தியது போலிருக்கும்!
(அது போல்...)
           பிரிவினையில் பிரம்மை கொண்டவரிடம், அதீத சக்தியுடைய அதிகாரம் கிடைத்தால்; 
           அவரின் செயல்கள், கூர்மையான ஆயுதத்தில் நஞ்சை கலந்தது போலிருக்கும்!

0839.  பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
           பீழை தருவதொன் றில்

           விழியப்பன் விளக்கம்: பிரிந்து செல்லும்போது, துன்பமளிக்க எதுவொன்றும் இல்லை 

           என்பதால்; அறியாமை கொண்டோரிடம் கொள்ளும் நட்பு, மிகவும் இனிமை ஆனதாகும்!
(அது போல்...)
           வெறுத்து கைவிடும்போது, சோம்பலளிக்க எதுவும் இல்லை என்பதால்; போதைப் 
           பழக்கங்களில் கொள்ளும் நாட்டம், அதிக ஒவ்வாமை உடையதாகும்!

0840.  கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
           குழாஅத்துப் பேதை புகல்

           விழியப்பன் விளக்கம்: அறிவார்ந்தோர் நிறைந்த நட்புக் குழுவில், அறியாமை கொண்டோர் 
           இணைவது; தூய்மையான படுக்கையின் மேல், கழுவாத காலை வைப்பது போன்றதாகும்!
(அது போல்...)
           திறமையானோர் வழிநடத்திய அரசியல் கட்சியை, அடிமை வழிவந்தோர் நிர்வகிப்பது;  
           அழகான சிலையின் மேல், வெளுக்காத உடையை அணிவிப்பது போன்றதாகும்!