வெள்ளி, பிப்ரவரி 10, 2012

இறைவன் இருக்கிறாரா? இல்லையா??...

(மிகக் கடினமான "விவாதங்களில்" ஒன்று )

      இறைவன் இருக்கிறாரா? இல்லையா?? என்பது நீண்ட நெடுங்காலமாய் சர்ச்சைக்குரிய விவாதமாய் தான் இருந்து வருகிறது. இந்த தலையங்கம் இக்கேள்விக்கு விடை சொல்வதற்கு அல்ல; இறைவனை "இல்லை" என்பவர்கள் அதை எப்படி தவறான செய்கையில் மறுக்கிறார்கள், அதில் உள்ள அபத்தங்கள் என்னென்ன என்பதை விளக்கவே!. பெரும்பாலும், இறைவன் இல்லை என்று சொல்பவர்கள் தங்களை "பகுத்தறிவுவாதி" என்று பறைசாற்றிக் கொள்கிறார்கள். பெரும்பாலும், இறை மறுப்புக் கொள்கை உடையவர்கள் பெரிதும் தங்களின் ஆசானாய் கோடிட்டு காண்பிப்பது, "தந்தைப் பெரியார்" அவர்களைத் தான். அவர் தன்னுடைய இறை மறுப்புக் கொள்கையை, இறைவனைப் பற்றி பெரிதாய் கேலி, கிண்டல் எதுவும் செய்யாது - ஆனால் இறை வழிபாட்டில் உள்ள "மூட நம்பிக்கை" பற்றி (அவர் கருத்தை) எடுத்துறைப்பதன் மூலமாய் தான் செய்துள்ளார். தவிரவும், அவர் இறை வழிபாட்டில் உள்ள மூட நம்பிக்கை பற்றி மட்டுமே  பேசவில்லை; மற்ற எல்லா விதமான மூட நம்பிக்கை பற்றியும் பேசியுள்ளார். அவர், கோவிலில் பணியாற்ற வேண்டிய சூழல் வந்தபோது அதை மறுக்காது தன் கடமையாய் செய்தார்; கடவுளே இல்லை, அதன் பின் கோவில் எதற்கு, நான் ஏன் நான் அதில் பணியாற்ற வேண்டும் என்று அவர் வாதிட்டதாய் தெரியவில்லை. அவர் அடுத்தவர்களின் நம்பிக்கையை மறுக்கவில்லை; மாறாய், அதை மதித்தார். ஆனால், இன்று பகுத்தறிவுவாதி என்று பறை சாற்றிக் கொள்கிறவர்கள் அனைவரும், அந்த தவறைத் தான் செய்கின்றனர். 

       இந்த பகுத்தறிவாளிகள் பலரும் (குறிப்பாய் அரசியல்வாதிகள்), வேற்று மத கடவுள்களைப் பற்றி எதுவும் சொல்லாது அவர்கள் நடத்தும் விசேடங்களில் பங்கேற்று அந்த நடைமுறைகளை செய்யும் அவலங்களும் - ஏதேனும் ஒரு காரணத்திற்காய் (ஓட்டு வாங்குவது போன்று) - நடக்கின்றன. மற்ற மதம் சார்ந்த வழிபாட்டில் கலந்து கொண்டு செயல்படும்போது மட்டும் உங்களின் பகுத்தறியும்  அறிவு "மங்கிப்போய்" விடுகிறதோ? அல்லது நீங்கள் "இரட்டை-வேடம்" பூணும் நயவஞ்சகர்களா?? அதிலும், இந்த பகுத்தறிவுவாதிகளுக்கு கொஞ்சம் தமிழ்ப் பற்று இருந்துவிட்டால் போதும்; ஒரு குறிப்பிட்ட கடவுளை "தமிழ்க் கடவுள்" என்று வழிபடத் துவங்கி விடுவார்கள். கடவுளே இல்லை! எனில், "தமிழ்க் கடவுள்" எங்கே வருகிறார்? இன்னும் சிலர், குடுமபத்தில் இறந்தவர்களை "வழிபடும்" வழக்கத்தையும் மேற்கொள்கின்றனர். இவையனைத்தும் என்ன விதமான நம்பிக்கை? உங்கள் நம்பிக்கை தவறில்லை எனில், இறை-நம்பிக்கையும் தவறில்லை தானே?? முதலில் நீங்கள், உங்களின் நிலைப்பாட்டை "பகுத்தறியவேண்டும்" என்று சொல்ல தோன்றுகிறது. நீங்கள் கொண்டிருக்கும் இந்த நிலைப்பாடும் "மூட நம்பிக்கை" என்றால் எப்படி எதிர்கொள்வீர்கள்? இந்த "பகுத்தறிவுவாதிகள்" சிலர் ஒரு குறிப்பிட்ட நிற உடை ஆடை அல்லது உபகரணம் அணிவர்!!! இது என்ன நம்பிக்கை ஐயா? இறைவன் இருக்கிறார் என்பது என் நம்பிக்கை; இல்லை என்பது உங்கள் நம்பிக்கையாயின் வைத்துக் கொள்ளுங்கள்! ஆனால், என் நம்பிக்கை தவறு என்று சொல்ல உங்களுக்கு அதிகாரம் இல்லை; அதுவும், உங்களையே பகுத்தறிய முடியாத போது உங்களுக்கு அந்த தகுதியே இல்லை. 

          இந்த பகுத்தறிவுவாதிகளில் பலர், இறைவன் இல்லை என்று வாதிடும் போது, இறைவழிபாட்டில் அதிக தொடர்புடைய, ஒரு குறிப்பிட்ட "இனம்" சார்ந்த மக்களையும் சேர்ந்து எதிர்ப்பதை பார்க்கும் போது, நான் மிகவும் குழம்பிப்போகிறேன். இவர்கள் யாரை எதிர்க்க வருகிறார்கள்? இவர்களின் உண்மையான கோபம் தான் என்ன? அந்த இனம் சார்ந்த ஒரு பிரபல நடிகர் கூட இறை மறுப்புக் கொள்கை உடையவர் தான்; ஆனால், அவரின் மறுப்புக்கொள்கை என்னை மிகவும் கவர்ந்த ஒன்று! அவரிடம் "உண்மையான" பகுத்தறியும் குணம் உடையது என்று திடமாய் நம்புகிறேன். அவரைப் போன்ற பலர்,  அதை வேறொரு பரிமாணத்தில் பார்க்கின்றனர்; நம்புகிறவர்களுக்கு "இறைவனே அன்பு" எனில், இறைவனை நம்பாதோர்க்கு "அன்பே இறைவன்" என்று கூறுகிறார்கள். இப்படித்தான் இருக்கவேண்டும் "பகுத்தறிவுவாதி" என்பவர்கள்; இறைவன் என்பது நீங்கள் நம்புவது (மட்டும்) அல்ல - மாறாய் அன்பு(ம்) தான் இறைவன் என்று கூறுகிறார்கள் அல்லவா, அது தான் சரி. எந்த ஒரு கருத்திற்கும் "உண்டு" அல்லது "இல்லை" என்ற இரண்டு சாத்தியக் கூறுகள் இருப்பதை மாற்ற முடியாது. ஒருவர், "உண்டு" என்பதை அவர்களிடம் உள்ள சான்றுகளைக் கொண்டு வாதிடும் போது - "இல்லை" என்பவர் அதற்கான சான்றுகளைக் கொண்டு வாதிடுதல் தான் சரியாய் இருக்கக் கூடும். இல்லையேல், அதற்கு மாற்றாய் ஏதேனும் கூறவேண்டும். இவை இரண்டையும் விடுத்து, இறைவன் "உண்டு" என்பவன் அறிவிலி; அவன் மூட நம்பிக்கை உடையவன் என்பது எப்படி சரியான வாதமாகும்? 

         மேற்கூறிய நடிகர் வேறொரு திரைப்படத்தில், இந்த மறுப்புக் கொள்கையை முற்றிலும் வேறொரு பரிமாணத்தில் கூறியிருப்பார். சூழ்நிலை இதுதான்; ஓர் பேரழிவின் விளைவாய் எண்ணற்ற பேர் இறந்திருப்பார்கள்  - அந்த சூழலில் கதாநாயகனும், கதாநாயகியும் பேசும் உரையாடலில் தான் அந்த மகத்துவத்தை அந்த நடிகர் (அவரே கதை, திரைக்கதையும் எழுதியவர்) பொதித்திருந்தார். முதலில், "இறை-நம்பிக்கை" மிகுந்த கதாநாயகி அத்தனை பேர் இறந்ததைக் கண்டு அடைந்த வேதனையில், மனித நேயத்துடன்"இந்த மாதிரி நேரத்தில் தான் கடவுள் இருக்கிறாரா? இல்லையையா?? என்ற சந்தேகம் வருகிறது!" என்பார். இதைக் கேட்டு, "இறை-நம்பிக்கையற்ற" கதாநாயகன் ஒரு பார்வை பார்ப்பார்; உடனே, கதாநாயகி நான் உங்களை மாதிரி இல்லை; எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்பார். அதற்கு நாயகன் "நான் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை; இருந்தால் நன்றாய் இருந்திருக்கும்" என்பார்; அவரின் சோக பார்வை எந்த வசனமும் இல்லாமல், அவரும் அத்தனை மனித உயிர்கள் தந்த இழப்பால் விளைந்த மனித நேயத்துடன் பேசுவதை உணர்த்தும். இங்கே கவனிக்கப் படவேண்டிய ஒன்று, இருவரும் மனித நேயத்துடன் பயணப்பட்டிருப்பது தான்; அது தான் முக்கியம். நம்பிக்கை எதுவாயினும் இருக்கட்டும்; அது மனித நேயத்துடன் இருக்கவேண்டும். இங்கே வேதனையான விசயம் - இந்த தலைசிறந்த நிலைப்பாட்டை நாம் கடைபிடிக்கவேண்டும் என்பதை உணராதது மட்டுமல்லாமல் அந்த நடிகரையும் தவறாய் விமர்சிப்பது தான்.

      இறுதியாய், இந்துக்களின் கோவில்கள் (அல்லது மற்ற மதம் சார்ந்த கோவில்கள்) அனைத்தும் அறிவியலுடன் மிகுந்த தொடர்புடையது என்பது பெரும்பான்மையோனோர்க்கு (குறிப்பாய் இந்த பகுத்தறிவுவாதிகளுக்கு) தெரியாதது தான். மிகச் சிறந்த உதாரணம் (சமீபத்தில் மின்னஞ்சல் மூலம் கூட இச்செய்தி பரவலாய் உலா வந்தது), திருநள்ளாறு கோவில் பற்றிய செய்தி. உலகிலேயே அதிக அளவில் புற-ஊதாக் கதிர்கள் (ultraviolet rays) விழும் இடத்தை கண்டறிந்து (திருநள்ளாறு) அந்த இடத்தில் ஒரு கோவிலைக் கட்டி, அக்கதிர்களுடன் தொடர்புடைய "சனிப்பெயர்ச்சி" என்ற ஒரு நிகழ்வை, அதிக கதிர்வீச்சு விழும் ஓர் நாளை (அறிவியல் ஆராய்ச்சி  அதிகம் இல்லாத காலத்தில்) பலவருடங்களுக்கு முன்பே கணக்கிட்டு அந்த நாளில் அந்த இடத்திற்கு பக்தர்களை வரச் செய்தது. அவ்விடத்தில், அதிக அளவில் கதிவீச்சு உள்ளது என்பதை உலகின் தலைசிறந்தவைகளில் ஒன்றான ஒரு விண்வெளி ஆராய்ச்சிக்கூடம் கூட உறுதி செய்துள்ளது. இறைவழிபாட்டில் உள்ள பல செய்கைகளுக்கு இம்மாதிரி அறிவியல் விளக்கங்கள் உள்ளன; எப்படியோ இந்த விளக்கங்கள் அனைத்தும் அடுத்தடுத்த சந்ததிகளுக்கு சென்று சேராது மறைக்கப்பட்டுள்ளன. இதை அறியாத மேற்கூறிய "பகுத்தறிவுவாதிகள்" தான், அனைத்தும் மூட நம்பிக்கை என்கின்றனர். எனவே, இறைவழிபாட்டில், பெரும்பான்மையானவை அறிவும், அறிவியலும் சார்ந்தவை என்பதை உணர முற்படுவோம். சுருக்கமாய் சொல்லவேண்டுமெனில், எந்த ஒன்றையும் "பகுத்தறிய" முயல்வோம்.          


நம் நம்பிக்கை எதுவாயினும், மற்றவர் நம்பிக்கையை மதிப்போம்!!


பின்குறிப்பு: இறைவழிபாட்டில் அபத்தங்களும் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை; எந்த ஓர் நம்பிக்கையும் வரைமுறை தாண்டி அதிகமாகும் போது "மூட நம்பிக்கை" உருவாவதை தடுக்க முடியாது; அது அளவு கடந்த நம்பிக்கையின் பால் விளையும் ஒரு விளைவு. அம்மாதிரியான மூட-நம்பிக்கைகளில் எனக்கும் உடன்பாடில்லை. ஒவ்வொரு முறையும் நான் (தான்) வெல்வேன்/ வெல்ல வேண்டும் என்பது கூட எல்லையைத் தாண்டின (மூட)நம்பிக்கை தான்! அதனால், இங்கே இறை நம்பிக்கையில் மட்டும் "மூட-நம்பிக்கை" உள்ளது என்பதை எப்படி நியாயப் படுத்தமுடியும்? உண்டு எனில், அதை "பகுத்தறிபவர்" எப்படி சரி செய்யவேண்டும் என்று தெளிவு படுத்தவேண்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக