வெள்ளி, பிப்ரவரி 17, 2012

உறவுகளை அழைப்பதில் ஒரு திருத்தம்...

         



         சில உறவுகளை அழைப்பதில் திருத்தம் வேண்டும் என்று நான் தீர்மானமாய் விரும்புகிறேன்;  அந்த உறவுகளை அழைக்கும் விதத்திலேயே ஒரு பிடிமானம் இல்லாததாய் படுகிறது; அதை சரிவர அழைக்கும்போது அந்த உறவுகளின் பலம், மேலும்  பலப்படும் என திடமாய் எண்ணுகிறேன். இது, ஆங்கில மொழியில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது;  நம் மொழியில் சில உறவுகளுக்கு அப்படி உண்டெனினும், முழுதுமாய் இல்லை. முதலில், மாமியார் - மாமனார்   என்பதை எடுத்துக்கொள்வோம். ஆங்கிலத்தில் "mother-in-law" - "father-in-law" என்று, தெளிவாய் குறிப்பிடுகிறார்கள்; இங்கு, இரண்டு உறவிலும் அம்மா, அப்பா என்ற வார்த்தைகள் வருகின்றன. இது ஏன், நம் தமிழ் மொழியில் அவ்வாறு அழைக்கப்படவில்லை? இது, மொழிக்கு மொழி மாறுபடும் என்ற விதண்டாவாதம் வேண்டாம்! நம் மொழியில் கூட, மரு-மகன், மரு-மகள் என்ற இரண்டு உறவுகளுக்கு அடிப்படை உறவான மகன், மகள் என்ற வார்த்தைகள் வருகின்றன; ஆங்கிலத்திலும் அவர்கள் "son-in-law", "daughter-in-law" என்று அவ்வாறே அழைக்கிறார்கள். எனவே, நம் மொழியில் அவ்வழக்கம் கூட உண்டு என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும். எனக்கு தெரிந்த இந்திய மொழிகளில் கூட மாமியார்-மாமனார் என்பதற்கு ஆங்கிலத்தில் உள்ளது போல் இணையான வார்த்தைகள் இல்லை. வேறு இந்திய மொழிகளில் இதற்கு இணையான வார்த்தைகளைக் கொண்டு அழைக்கும் பழக்கம் இல்லை என்றே நினைக்கிறேன். 

             என் தந்தை "தமிழ்த் திருமணம்" செய்தவர்; ஏனோ என் தமையன், தமக்கை - களுக்கு அவ்வாறு செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை. என் மனைவி பாரம்பரியம் மிக்க தமிழ்க்குடும்பத்தில் இருந்து வந்தவள் ஆதலால், என் திருமணம் "சுயமரியாதைத் திருமணம்"-ஆய் நடக்க வழி வகுத்தது. இம்மாதிரித் திருமணங்களில் தமிழறிஞர்களும் பெரியோர்களும் தமிழில் வாழ்த்துவது வழக்கம்; அவ்வாறே நடந்தது. அப்போது நான் பேசுவதற்கு ஒரு வாய்ப்பு கேட்டு, என் நன்றியை தெரிவித்துவிட்டு என்னுடைய இந்த ஆதங்கத்தை கூறி அங்கிருந்த பெரியோர்களை அதற்கு இணையான வார்த்தைகளை உபயோகிக்க பழக்குமாறு கூறினேன். திருமண மண்டபத்தில் இருந்த சப்தத்தில் எத்துனை பேர்களின் செவிகளை (என் குடும்பத்தார் உட்பட) இது சென்று சேர்ந்தது எனக்கு தெரியவில்லை. திருமண நிகழ்ச்சிகள் முடிந்து  மேடைக்கு வந்த "இளங்கலை" பட்டப்படிப்பில் உடன் படித்த நண்பன் திரு. இரமேசு என்பவன், என்னுடைய அந்த சிந்தனையை மெச்சினான்; அது எனக்கு கிடைத்த முதல் வெற்றியாய்  உணர்ந்தேன். நாம் ஏன், இந்த முயற்ச்சியை துவக்கக் கூடாது? மாமியாரை - "மருதாய்" அல்லது "மரு-அம்மா" என்றும், மாமனாரை - "மருதந்தை" அல்லது "மரு-அப்பா" என்றும்  ஏன் அழைத்து பழகக் கூடாது? மேலும், தம்பியின் மனைவி அல்லது அண்ணியைக் கூட "மருதங்கை/ மருதமக்கை" என்று அழைத்து பழகலாம். தங்கையின் கணவனை "மருதம்பி" என்றும், தமக்கையின் கணவனை "மருதமையன்" என்றும் அழைத்துப் பழகலாமே?

           மாமனார், அத்தையின் கணவன், சகோதரியின் கணவன் மூன்று பெயரையும் பொதுவாய் "மாமா" என்றழைக்கிறோம். மற்ற உறவுகளைப் போல், அந்த தனித்தன்மை (கூட) இல்லாதாய் படுகிறது. எனக்கு ஏனோ, அத்தையின் கணவனை மட்டும் "மாமா" என்றழைத்துவிட்டு, மற்றவர்களை மேற்கூறியவாறு ஒரு தனித்துவமான உறவு-முறைச் சொல் கொண்டு அழைக்கவேண்டும் என்று திடமாக தோன்றுகிறது. ஏனெனில், அத்தை என்ற வார்த்தைக்கு மாற்று என்னவென்று தெரியவில்லை; சிறிய-அம்மா, பெரிய-அம்மா என்பதை அம்மாவின் சகோதரிகளுக்காய் பயன்படுத்துகிறோம். இங்கே நாம் கவனிக்க வேண்டியது, தனித்துவமான சொல்லை வேறு ஒரு உறவுக்கு பயன் படுத்துகிறோம் என்பது தான் (குறிப்பாய் நம் அண்டை தேசமான "இலங்கையில்"). ஆம்! தாத்தா - பாட்டி (ஆயா) என்ற அந்த உறவுகளைப் பற்றி தான் இங்கே குறிப்பிடுகிறேன்; ஆங்கிலத்தில் கூட இப்படி தனித்துவமாய் அழைக்க வார்த்தைகள் உள்ளனவா எனக்கு தெரியவில்லை. "திருச்சி" மக்கள் இந்த தனித்துவமான சொற்களை பயன்படுத்துவது என்னை மிகவும் கவர்ந்தது; தமிழகத்தில் வேறு எந்த பகுதியில் இவ்வாறு அழைக்கிறார்கள் என்று தெரியவில்லை. நான் பல சமயங்களில், அவ்வாறு என் தாத்தா-பாட்டியை அழைக்கவேண்டும் என்று எண்ணியதுண்டு. பின், அவர்கள் - நான் வேறு யாரையோ அழைப்பதாய் எண்ணிவிடக்கூடாது என்பதால் தவிர்த்துவிட்டேன். இப்போது, அப்படி அழைத்து பார்க்க நால்வரில் எவரும் இம்மண்ணுலகில் இல்லை. ஆம்! நாம் அப்பம்மா (அப்பத்தா) - அப்பப்பா, அம்மப்பா - அம்மம்மா (அம்மத்தா) என்று "தனித்துவமாய்" அழைத்து பழக வேண்டும் என்று தோன்றுகிறது.

    இப்போதுள்ள தலைமுறைக்கு, இதை உடனடியாக சொல்லிக் கொடுக்க முயன்றால் அது குழப்பத்தை விளைவிக்கக் கூடும் என்பதால், இதை அடுத்த தலைமுறையில் இருந்தாவது பழக்க ஆரம்பிக்கவேண்டும் என்று தோன்றுகிறது. யார் ஆரம்பிப்பது? நாம் தான் ஆரம்பிக்க வேண்டும்! நான், என் மகளிடம் இருந்தே இதை துவங்க எண்ணுகிறேன். அவளுக்கு புரியும் வயது வந்தவுடன், இதை சொல்லிக்கொடுக்க வேண்டும் என முடிவெடுத்து இருக்கிறேன். முக்கியமாய், அம்மம்மா - அப்பம்மா வில் இருந்து துவங்கவேண்டும் என்று எண்ணுகிறேன்; அது தான் மிகவும் குழப்பமான உறவுமுறையாய் படுகிறது. என் மகளுக்கு இரண்டு வயது கடந்தவுடனே இந்த சூழ்நிலை வந்தது. ஒரு முறை நான், என் தாய் மற்றும் தமக்கையுடன் அமர்ந்து, என் மகள் விளையாடுவதை இடையில் பேச்சும் கலந்து பார்த்துக்கொண்டு இருந்தேன். திடீரென, என் மகள் தன் அத்தையிடம் "ஆயா எங்கே?" என்று கேட்டாள்; அவர், என் அம்மாவைக் காட்டி "இதோ!" என்றார். என் மகள், சிறிது யோசித்து விட்டு பின், மிக புத்திசாலித் தானமாய் "சின்ன ஆயா, எங்கே?" என்று கேட்டாள். அதாவது, என்னுடைய "மருதாயை (மாமியார்)" எங்கே என்று கேட்டாள் என்பது அப்போது புரிந்தது.  எங்கள் அனைவருக்கும், பெரும் ஆச்சர்யம்! அவளின் சாதுர்யத்தைக் கண்டு; ஏனெனில், நாங்கள் எவரும் என் மகளுக்கு "சின்ன ஆயா/ பெரிய ஆயா" என்று  சொல்லியதில்லை. ஒருவேளை, என் மகள் அவர்களின் வயது வித்தியாசத்தை முதன்மைபடுத்தி இப்படி கேட்டிருக்கக் கூடும! இது குழப்பத்தின் அடிப்படையில் வந்த யோசனை. ஆனால், மாமியார்-மாமனார் உறவில் கோரப்பட்ட திருத்தம்…

என் உணர்வின் அடிப்படையில் எழுந்தது!!!

பின்குறிப்பு: என் மகளின் சாதுர்யத்தைப் பற்றி இன்னுமொரு செய்தி. அவள், என்னவளை அழைக்கும் போது "அம்மா, அம்மன்னா! அம்மன்னா!!" என்று ஒரு அழகிய-இராகமாய் அழைப்பாள். இது எவரும் சொல்லிக்கொடுத்தது இல்லை; இது அவளே பழகிக் கொண்டது. எனக்கு பல முறை பொறாமை கூட வந்ததுண்டு; என்னவளை (மட்டும்) அப்படி அழைக்கிறாளே என்று. எனினும், நான் கடந்த "டிசெம்பர் 2011" - இல் விடுமுறையில் சென்ற போது தான் அந்த அதிசய ஆனந்தம் நிகழ்ந்தது. ஆம்! என் மகள், என்னையும் "அப்பா, அப்பச்சா! அப்பச்சா!!" என்று அதே இராகத்தோடு அழைக்க ஆரம்பித்தாள். ஒருவேளை, இன்னும் மூன்று வயது கூட ஆகாத என் மகளும், உறவுகளை ஒரு "தனித்துவமாய்" அழைக்க எண்ணி, இவ்வாறு அவளே முயன்று இருக்கிறாளோ? வளர்ந்த பின், அவள் தான் இதற்கு விளக்கம் தர வேண்டும்.                               

2 கருத்துகள்: