ஞாயிறு, அக்டோபர் 28, 2012

தமிழழகனும், "ஸ்ரிவிஷ்வேஷ்"-உம்...



      சமீபத்தில் - "தமிழழகன்" என்ற பெயரை நாளிதழில் வாசிக்கும் வாய்ப்பு நேர்ந்தது!  தமிழ்ப்பெயர்கள் மேல் எனக்கு உள்ள தாகத்தை பலமுறை எடுத்து கூறியுள்ளேன்; தமிழின் சிறப்பு எழுத்தாம் "ழ"-கரம் பற்றி ஓர் கவிதையில் முன்பே வெளியிட்டிருக்கிறேன். அதிலும், மேற்குறிப்பிட்ட பெயரில் "2 ழ-கரங்கள்"  அடுத்தடுத்து இருந்தததை கண்டபோது - நான் பெருமகிழ்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தேன். உண்மையில், இது முன்பே தெரிந்திருப்பின் என் மகளின் பெயரில் கூட அவ்வாறு வர முயற்சித்திருக்கலாமே என்ற ஓர் "சிறு-ஆசையும்" உண்டாயிற்று. இலங்கையைச் சேர்ந்த ஓர் தமிழன்பர் பெயர் கூட எனக்கு மிகவும் பிடிக்கும் - "சிவரூபன்". இது போன்ற பெயர்களை உள்வாங்கி - ஆழ யோசித்துக்கொண்டிருக்கும் போது - நிகழ்கால தமிழர்கள் எவ்வாறெல்லாம் "தமிழ் அல்லாத" பெயர்கள் வைக்கிறார்கள் என்ற எண்ணமும் என்னுள் எழுந்தது! இது, கண்டிப்பாய் சம்பந்தப்பட்டவர்களின் "உரிமை" என்பது புரிந்திடினும் - அவர்கள் அந்தப் பெயர்களை தமிழில் வைக்கலாமே! என்பதை என்னுடைய பார்வையில் விளக்கியிருக்கிறேன். முழுக்க, முழுக்க "தமிழ் அல்லாத" பெயர்கள் வைத்திருப்பவர்களைப் பற்றி நான் இங்கே குறிப்பிடவில்லை - அது விடுவிக்கப்படலாம். தமிழும் அல்லாது பிறமொழியும் அல்லாது - கலப்படமான பெயர்களை மட்டுமே நான் விவாதத்துக்கு எடுத்துள்ளேன். கண்டிப்பாய், இது சம்பந்தப்பட்டவர்களை காயப்படுத்தும் முயற்சி அல்ல; "பெயரில் என்ன இருக்கிறது?" என்று கவனக்குறைவாய் இருக்கவேண்டாம் என்பதை உணர்த்தவே!

      பெரும்பாலும், வடமொழி எழுத்துக்கள் அடங்கிய பெயர்கள் நிறைய தமிழ்ச்சூழலில் காணலாம்! தமிழ் - அம்மாதிரி "வேற்று மொழி" எழுத்துக்களை அனுமதிக்கிறது என்பதை நானுமறிவேன்! எனினும், அது தவிர்க்கமுடியாத காரணத்தினாலும், அல்லது அதை ஏன் தமிழ்ப்படுத்தவேண்டும் என்ற நம்மொழியின் "பெருந்தன்மை"யாலும் என்பதை உணரவேண்டும். கண்டிப்பாக, குறைந்த பட்சம் நம் குழந்தைகளுக்கு பெயரிடும் போதாவது அம்மாதிரி எழுத்துக்கள் வருவதை தவிர்க்கவேண்டும் என்று உரைத்திட தோன்றுகிறது. இதில் இரண்டு வகைகள் உண்டு; "இரமேஷ்", "சுரேஷ்" என்று நமக்கு மிகவும் இயல்பாய் ஆகிவிட்ட பெயர்கள் உண்டு (இந்த இரண்டு பெயர்களிலும் எனக்கு நெருங்கிய நண்பர்கள் இருப்பதற்காய் சொல்லவில்லை); இம்மாதிரி பெயர்களை தமிழ்ப்படுத்துவது இயல்பு - "இரமேசு", "சுரேசு" என்று எளிதில் எழுதிவிட முடியும்! ஆனால் சில பெயர்கள் பல வேற்றுமொழி எழுத்துக்களை கொண்டிருக்கும்; அதை தமிழ்ப்படுத்தவது எளிதல்ல; மேலும், அதை தமிழ்படுத்தும்போது பெரிய வேறுபாடு கூட வந்துவிடும். அதை, தமிழ்ப்படுத்தாமல் இருப்பதே நல்லது! என்று கூட தோன்றக்கூடும். "ஸ்ரிவிஷ்வேஷ்" என்ற பெயரை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம்! உண்மையில், அந்த பெயருக்கு நல்ல அர்த்தம் கூட உண்டு!! இதை எப்படி தமிழ்ப்படுத்துவது? ஏன், தமிழ்ப்படுத்தவேண்டும் என்ற விதண்டாவாதம் வேண்டாம்! தமிழ்ப்படுத்தவேண்டும் எனில், எப்படி வரையறுப்பது?? அது, மிகப்பெரிய அர்த்த-மாற்றத்தை உருவாக்கிடாதா???

      இரண்டாவது - அழகு, "ஸ்டைல்" என்று நினைத்துக்கொண்டு முற்றுப்பெறாத பெயர்களை வைப்பது! அத்தகைய பெயர்கள் வேற்று-மொழியில் "பிரபலமான" பெயர்கள் என்பதை மறுக்கவில்லை; நாம் கவனிக்கவேண்டியது, நம்முடைய தமிழ் சூழலுக்கு உகந்ததா? என்பதைத்தான். என்னுடைய, உறவு மற்றும் நட்பு வட்டத்திற்குள் - மிகவும் பொதுவாய்-போன பெயர் ஒன்று அவ்வாறு உள்ளது. வினோத்! உண்மையில், எனக்கு இது "வினோதமான" பெயர்; உண்மையில், அப்பெயரின் அர்த்தமும் "வினோதம்" என்று பொருள்படும் எனினும், "வினோத்" என்ற சொல்/பெயர் முற்றுப்பெறாதது; மேலும், தமிழில் "த்" என்ற எழுத்தில் முடியும் "வார்த்தைகள்"கூட இருப்பதாய் என்னறிவுக்கு எட்டவில்லை. இந்த மெய்யெழுத்து மட்டுமல்ல; "தமிழ்" என்பதே ஓர் "மெய்யெழுத்தில்" முடியினும், "மெய்யெழுத்தில்" முடியும் உண்மையான "வார்த்தை"கள் தமிழில் மிகவும் குறைவு. இத்தலையங்கத்தில் உள்ள வார்த்தைகளை கூட உற்று கவனியுங்கள்; இந்த உண்மை புரியும். இம்மாதிரி "முற்றுப்பெறாத" தமிழிப்பெயர்கள் நிறைய உள்ளன. சிலர், "அஷ்வின்" போன்ற தமிழல்லாத பெயர்களை ஆங்கிலத்தில் எழுதும்போது - "Ashvin" என்ற இயல்புக்கு மாற்றாய் "Ashwin" என்று எழுதுவர். அதாவது எல்லாவற்றிலும், "WIN" செய்வார்களாம் - "nuemerology" எனும் விசயம் படுத்தும் பாடு! அப்படி பொருள்படவேண்டும் எனின் "விக்டர்" என்று பெயரிட வேண்டியது தானே??? முழுப்பொருளும் அடங்குமே! அந்த பெயரும் தமிழில் உண்டாயிற்றே - வெற்றி!

       என்னிடம், என் நண்பன் ஓர் முறை அவனின் தங்கை-மகளுக்காய் ஓர் "தமிழ்" பெயர் வேண்டும் என்று வேண்டினான்! நான் மிகவும் யோசித்து "ரூபமறா" அல்லது "ரூபமறாள்" என்று கூறினேன்; அந்தப்பெயர் வைக்கப்படவில்லை என்பது வேறு விசயம். "உருவம் அற்றவள்" என்ற அர்த்தத்தில் அந்தப்பெயரை உருவாக்கினேன்; அந்தப்பெயர் நடைமுறையில் இருப்பதாய் எனக்கு தெரியவில்லை! அந்தப்பெயரில் பல தத்துவங்கள் அடங்கியுள்ளன; அந்தப் பெயரில் உள்ள ஆழ்ந்த அர்த்தத்தை அடிப்படையாகக் கொண்டு ஓர் தலையங்கமே எழுத முடிவெடுத்து பல வாரங்கள் ஆயிற்று! இன்னும், ஓரிரு வாரங்களில் அத்தலையங்கம் வெளியிடப்படும். என் மகளுக்கு கூட அந்தப்பெயரை வைக்கலாம் என்று யோசித்து - அது முன்பே என்னால் வேறோருவருக்காய் யோசிக்கப்பட்டது என்பதால் - அப்பெயரை வைக்கவில்லை. அதிலிருந்து, எவர் என்னிடம் பெயர் கேட்பினும் - நான் கூறுவதில்லை! ஏன், அந்த நண்பனே - அவன் மகனுக்காய் கேட்டபோது கூட நான் எதுவும் ஆலோசனை கூறவில்லை!! இது அவர்களின் விருப்பம்; மேலும், நம் முயற்சியை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதால் அதை நிறுத்திவிட்டேன்! தோல்வி என்பதாலோ/ கோபத்தாலோ அல்ல; என்னுடைய - கற்பனையும், முனைப்பும்; அந்த அழகியலும் - வீணாகப் போகிறதே என்ற ஆதங்கத்தில்! ஆனால், இப்படி பெயர் வைக்கலாம் என்று பொதுவாய் விளக்கலாம் என்பதால் தான் இத்தலையங்கம் உருவாயிற்று!! பெயர் வைப்பதில் நமக்கு பெரிய "மெனக்கெடல்" தேவை என்று தோன்றுகிறது.

       பெயர் என்பது ஒருவரின் உரிமை; அதை முடிவு செய்வதும் அவரவரின் உரிமை என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை; ஆனால், தமிழில் பெயர் வைப்பது நம் கடமையும் கூட! ஏனோ, பெயர் வைக்கவேண்டும் என்ற காரணத்தினால் அல்லது "ஸ்டைல்" என்ற மோகத்தில் அல்லாது - பெயர் என்பதில் நம் உணர்வும், முனைப்பும் கலந்து இருக்கவேண்டும். உலகில், வேறு எந்த மொழியிலும் வேற்றுமொழி பெயர்கள் அல்லது வார்த்தைகள் கலந்த பெயர்கள் "அதிகம்" இருப்பதாய் எனக்கு தெரியவில்லை! மாறாய், பல நாடுகளில் - அங்கு பிறக்கும் வேற்று நாட்டை சேர்ந்த குழந்தைகளுக்கு கூட உள்ளூர்-பெயர்கள் இடப்படவேண்டும் என்று வற்புறுத்தல்கள் கூட இருக்கின்றன! அவர்களுக்கு "பெயர்" என்பதில் ஓர் ஆழ்ந்த-பிணைப்பு உள்ளது; அங்கே, உணர்வும்-முனைப்பும் பிணைந்திருக்கிறது. நம் மொழியில் மட்டுமே - இந்த கலப்புகள் அதிக அளவில் உள்ளன! இதற்கு, மிகமுக்கிய காரணம் நாம் நம்முடைய பெயர்க்காரணம் குறித்த பெரிய விழிப்புணர்வு இல்லை என்று தோன்றுகிறது!! இதை எண்ணும் போது, இதை இன்னமும் அழுந்தச் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது; மேலும், என்னுடைய மகளின் பெயர் பிறந்த காரணத்தைப் பற்றி இன்னுமொரு முறை கூறிட தோன்றுகிறது!!! இது தற்பெருமை அல்ல; பெயருக்கு எப்படி நாம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்த! பெயர் வைப்பதன் மீதான, இந்த எண்ணமும் - முனைப்பும், புரிந்து விடின்; எல்லாத் தமிழ்ப்பெயர்கள் பற்றிய அர்த்தத்தை நாம் அறிய முற்படுவோம்; பின், தமிழ்ப்பெயர்களில் உள்ள…

வசீகரமும், அழகும் தானாய் புரியும்!!!

பின்குறிப்பு: அருள்கூர்ந்து, இனியாவது - பெயர் என்பதில் உள்ள உணர்வை அதன் உண்மைப்பொருளை உணர்வோம்! மொழிக்கும், பெயருக்கும் உண்டான உறவை உணர்வோம்!! ஏதோ, பெயர் வைத்துவிட்டு பின்னால், அப்பெயரை நம்மொழியில் எப்படி எழுதவேண்டும் என்ற குழப்பம் வேண்டாம். நம் குழந்தைகளுக்கு முதலெழுத்தை (initial) மட்டும் கொடுப்பது நம் கடமை அல்ல; அவர்களுக்கு நல்ல தமிழ்(தாய்) மொழியில் பெயரிடுவதும் நம் கடமை என்பதை உணர்வோம்!!!

சம்சாரமும், மின்சாரமும்...



"சம்சாரத்தை" - அன்றைய;
மின்சாரத்துடன் ஒப்பிட்டதைவிட!
இன்றைய "மின்சாரத்துடன்";
ஒப்பிடுவது - சாலச்சிறந்ததோ???

எண்ணிக்கை முக்கியமல்ல...



ஐய்யிரண்டு; ஈரைந்து!
எண்ணிக்கை, எதுவாயினும்!!
அம்மா…
சுகமாய் - நீஎன்னை;
சுமந்ததே பெரும்பாக்கியம்!!!

மழைத்துளியும் கண்ணீர்த்துளியும்…


மழைத்துளி…
சிப்பியில் சேர்ந்தால் முத்து!
கடலில் சேர்ந்தால் உப்பு!!
கண்ணீர்த்துளி…
பிறப்பில் வழிந்தால் ஆக்கம்!
இறப்பில் வழிந்தால் அழிவு!!

உண்மையால் வெல்லலாம்...


உணர்வும், உறவும்!
இயக்காது; உண்மையால்!!
இயங்கும் - மனிதனே;
உலகை வெல்லமுடியும்!!!

நினைவெனும் பறவை...


நினைவெனும் பறவை
நகர்வதை நிருத்திடின்,
நின்றிடும்; "வாழ்க்கை
நதியின்" உறவுஓடம்!!!

ஞாயிறு, அக்டோபர் 21, 2012

"தமிழ்(தனி)-ஈழம்" கனவு, இனியும் வேண்டுமா???


(விரக்தியின் எல்லையை அடைந்தவனின் பார்வை!!!)

     "தமிழ் ஈழம்", "தனி ஈழம்" என்ற கனவும்; போராட்டமும் மெல்ல, மெல்ல நீர்த்து வரும் இந்த வேளையில் - அது குறித்து ஒரு பார்வையை - விரக்தியின் எல்லையை அடைந்தவனின் நிலையிலிருந்து விளக்கியிருக்கிறேன். இது பலரின் எதிர்ப்புக்கு ஆட்படக்கூடும்; ஆயினும், இது பற்றி என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை. ஊடகங்களும், அரசியல்வாதிகளும் - தங்களின் பொதுவாழ்வை மறந்து - தங்களின் பணியை ஓர் வியாபாரமாய் பார்ப்பதால் இது குறித்த உண்மையை, மறைத்து வேறுவிதமான தகவல்களை கொடுக்கலாம்; கொடுத்து, இதில் சம்பந்தப்பட்டவர்களை இன்னமும் உணர்ச்சிவயப்டச் செய்து நாட்களை கடத்தலாம். ஆனால், நான் "தமிழ்/தனி ஈழம்" என்பதை ஓர் சராசரி மனிதனாய் நின்று பார்க்கிறேன்; அது தவிர வேறு எந்த எண்ணமும் இல்லை. நேரடியாய், இன்னமும் "தமிழ்/தனி ஈழம்" எனும் கனவு வேண்டுமா? என்ற கேள்வி எழின்; துளியும் தாமதிக்காது "வேண்டாம்" என்று என்னால் கூற இயலும். அதற்கு, எனக்கு தெரிந்த நியாயமான காரணங்களையும் குறிப்பிட்டிருக்கிறேன். இது, இனியும் இந்த இன்னல்கள் தொடர்ந்திட வேண்டாம் என்ற எண்ணத்தில் எழுந்தது! ஈழம் என்பது நம் தமிழர்களின் நிலம் என்பதற்கு எத்தனை ஆதாரம் இருப்பினும், அதை எல்லாம் தாண்டி இந்த எண்ணம் எழ காரணம் - இனியும், இது தொடர்ந்திடின் என்ன செய்வது என்ற பயம்!! இதை பலரும் யோசித்து எப்படி வெளியில் சொல்வது என்று தயங்கி இருக்கக்கூடும். நானே பல நாட்கள் என்னுள்ளேயே நிகழ்ந்த விவாதங்களுக்கு பின்னே இதை எழுதுகிறேன்.

       முதலில், பிரபாகரன் எனும் அந்த "மாவீரன்" இல்லாதது தான் இவ்வாறு யோசித்திட வைத்தது! அவரைப்பற்றி இன்னமும் கூட எதிர்மறை விவாதங்கள் இருக்கக்கூடும்!! ஏன், இந்தியாவில் நடத்திட்ட ஓர் "அரசியல்-கொலை"யை மட்டும் கொண்டு (தங்கள் தவறை ஒப்புக்கொண்ட பின்னும்) அவரை தூற்றுவோர் பலருண்டு!!! எவர், எப்படி கூறிடினும் - அவர் மாவீரன் என்பதை எவரும் மறுத்திடுதல் இயலாது; தன் குடும்பத்தை கடந்து, ஓர் சமுதாயத்திர்க்காய், தன் இனத்திற்காய் தன்னை முழுதாய் அர்ப்பணித்தல் என்பது எளிதான விசயமன்று! அவர் இறந்து (இறப்பு குறித்தே இன்னமும் விவாதங்கள் இருப்பினும்) 3 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. அவர் மீண்டும் ஓர்முறை மீண்டெழுவார் என்ற நம்பிக்கை முற்றிலும் தகர்ந்துவிட்டது. அவருக்கு மாற்றாய் இனி எவரும் வரப்போவதில்லை! அப்படியே வந்திடினும் இது விளையாட்டல்ல; "விட்ட இடத்திலிருந்து" துவங்கிட; மீண்டும் முதலில் இருந்து துவங்கவேண்டும்!!! அது அத்தனை எளிதல்ல; அதற்கு இன்னமும் பல ஆண்டுகள்-போராட்டம் தேவைப்படும்! அதற்கு மீண்டும் ஓர்முறை - இதுவரை இழந்திட்ட அனைத்தையும் (மீண்டும்)இழக்க நேரிடும்! அது இப்போதைய இழப்பைக்காட்டிலும் பன்மடங்கு அதிகமாய் இருக்கும்!! சரி, அத்தனையும் நடந்து - இதே நிலை வந்து; "மேலே" காண்பிக்கப்பட்டிருக்கும் படத்தைப் போல் "மனிதனும், மனிதமும் - இல்லாத, வெறும் கட்டடம்" மட்டும் உள்ள சூழ்நிலை ஏற்படின்??? அதற்காகவா, இத்தனை போராட்டங்களும் "வீர-மரணங்களும்"? இதை இப்போதேனும் - உணர்ந்திட வேண்டாமா?

   சரி, ஒருவேளை - மீண்டும் ஒருவர் வந்து "தமிழ்/தனி ஈழமும்" பெற்றுவிட்டோம் என்று வைத்துக்கொள்வோம்! அதன் பிறகு, என்ன நடக்கும் என்பதை கீழ்க்காணுமாறு விளக்க விரும்புகிறேன். இந்தியாவில் இருந்து பிரிந்து சென்றதால் "பாகிஸ்தான்" எனும் நம் தொப்பூழ்கொடி-நாட்டுடன் எத்தனை எல்லைப்பிரச்சனைகள் இன்னமும் தொடர்கின்றன? உண்மையில், "ஈழக்கொடுமை" போல் நிகழும்-முன்னம், நிகழா-வண்ணம் கூட பாகிஸ்தான் பிரித்து விடப்பட்டிருக்கும். அப்போதைக்கு இருபாலருக்கும் அது மகிழ்ச்சியை கொடுத்திருக்கும். பிரிந்து சென்று, 60 ஆண்டுகளுக்கு மேலாகியும், இப்போது நடப்பதென்ன?? அத்தனை தொலைவு மலைகளையும், நிலங்களையும் கொண்ட "இந்தியா-பாகிஸ்தான்" எல்லையிலேயே இத்தனை பிரச்சனைகள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறதே! ஓர்கணம், "ஈழத்தின் எல்லையை" வரையறுக்கும் வரைபடத்தை பாருங்கள்!! என்னுடைய "பயம்" உங்களையும் தொற்றிக்கொள்ளும்; "கிட்டத்திட்ட" ஈழத்தின் அத்தனை பகுதியும் எல்லையே!!! பின் எப்படி "இலங்கை" எனும் ஓர் சிறிய நாட்டை இரண்டாய் பிரிக்கும்போது - அங்கே அமைதியான சூழல் நிலவும்? பெரிய-இழப்புக்கு முன்னரே பி(ற/ரி)ந்திட்ட இரண்டு நாடுகளுக்கு இடையிலேயே இத்தனை காழ்ப்புணர்ச்சிகள் எனில், மிகப்பெரிய இழப்புகளுக்கு பின் - ஓர் நாடு பிரிந்து இரண்டாகின், எத்தனை பெரிய காழ்ப்புனர்ச்சிகளும், பிரச்சனைகளும் தொடரும்??? நம் கண்-முன்னரே, எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பதை; நிகழ்-கால சரித்திரத்தை பார்த்த பின்னாவது நாம் உணர்ந்திடல் வேண்டாமா?

        இதையும் தாண்டி, நாம் இலங்கையில் வாழும் தமிழர்களை "இலங்கைத்-தமிழர்கள்" என்று தான் அழைக்கிறோம்! அடையாள-நிமித்தம் என்பதையும் தாண்டி - இந்த மாதிரியான அழைப்பு அவர்களுக்கு என்று "ஓர் நாடு இருப்பதை உணர்த்தவும்" என்று பொருள் கொள்ளுதல் வேண்டும்; அது அவர்களின் உரிமை கூட! இங்கே வரும் அத்தமிழர்களுக்கு "அகதிகள்" என்ற பெயரில் எத்தனை இன்னல்கள் விளைவிக்கிறோம் என்பதை நான் விவரிக்கத் தேவையில்லை!!! பின் எப்படி, அவர்கள் நம் இரத்தம் என்று கூறி "வாய்-கூசாமல்" இங்கே அரசியல் என்ற பெயரில் அத்தனை கோமாளிகளும் - இன்னமும் அங்கே எஞ்சியிருக்கும் தமிழர்களை "உசுப்பி விடுகின்றனர்?". இங்கே நான் கேட்டிட விரும்புவது, இது ஒன்று தான்! இந்த அரசியல் கோமாளிகள், இலங்கையில் (எஞ்சி)இருக்கும் தமிழர்களுக்காய் ஏதும் செய்திடல் வேண்டாம்; உண்மையில், அவர்களால் எதுவும் செய்திட முடியாது என்பதே பேருண்மை! அவர்களின், உணர்வும், உணர்ச்சியும் உண்மையாயின் - முதலில் இந்தியாவிற்கு திரும்பி வந்த தமிழர்களை "அகதிகள்" எனும் அடையாளம் அகற்றி - சராசரி, தமிழனாய் உலவிட செய்யட்டும்! அது(மட்டுமே) இலங்கையில் எஞ்சியிருக்கும் மற்ற தமிழர்களுக்கு ஓர் வலிமையையும், நம்பிக்கையையும் தரும்!! இங்கே ஒரேயொரு கேள்வி கேட்கிறேன்: "இந்தியா-இலங்கை" இடையே (வெறும்)ஓர் விளையாட்டு போட்டி நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம்; இலங்கையில் இருக்கும் தமிழர்கள் எந்த நாட்டை ஆதரிப்பர்? அல்லது ஆதரிக்கவேண்டும்??

    அவர்கள், இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மையின் வெளிப்பாடே - அவர்களை அடையாளமிட்டு "இலங்கைத்-தமிழர்கள்" என்றழைப்பதில் உள்ள உண்மை. தமிழர்கள் வாழாத நாடே இல்லை; இலங்கையை விட தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகள் பலவுண்டு. "அமெரிக்கா" போன்ற நாடுகளில் வசிக்கும் ஓர் தமிழன் அந்நாட்டு "குடியுரிமையை" வாங்குவதை "கெளரமாய்" கருதுகிறான்; அதை பெரிதும் போராடியும் அடைகிறான்; அதில் அவர்களுக்கு ஓர் "வறட்டு-பெருமிதம்" கூட! வேறு எந்த நாட்டில் இருக்கும் தமிழர்களும் அந்நாட்டை பிரித்துகொடுக்க போராடவில்லை!! பின் எப்படி, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு மட்டும் அப்படி ஓர் எண்ணம் விளைந்தது அல்லது விதிக்கப்பட்டது? தமிழ்நாடும், இந்தியாவும் மிக அருகில் இருக்கும் காரணத்தினாலா?? அப்படியிருப்பின், அந்த எண்ணத்தில் "ஒரு விழுக்காது, தவறில்லை!!!". ஆனால், முதலில் இந்தியாவில் - மேற்குறிப்பிட்ட "அகதிகள்" எனும் அடையாளமும், இழி-நிலையும் மாறவேண்டும்! அவர்களுக்கு நம் நாட்டின் ஆதரவு கிடைக்கவேண்டும்!! அதைவிட கொடுமை "ஈழக்கொடுமையின் பொது" தமிழ்நாட்டிலிருந்தோ/ இந்தியாவிலிருந்தோ எந்த "அவசியமான உதவியும்" கிடைக்கவில்லை என்பது தான்; அதை நாம் செய்யத் தவறிவிட்டோம். அதற்காய், நான் அவமானப்படுகிறேன்; வள்ளுவனின் "காலத்தினால் செய்த உதவி" போன்று - ஓர் சிறிய அளவில் கூட தேவையானபோது நாம் செய்யவில்லை. இனியொருமுறை அந்த அவமானத்தை என்னால் தாங்கிட இயலாது என்பதால், என்னுடைய பார்வையில்…

"தமிழ்/தனி ஈழம்" எனும் கனவு, எப்போதும் தேவையில்லை!!!

பின்குறிப்பு: மேலே, அடிக்கோடிட்டது போன்று - இது என்னுடைய பயத்தால் விளைந்தது என்பதை ஒப்புக்கொள்ள எந்த தயக்கம் இல்லை. இந்த பயம், என்னுடைய இனம் இன்னுமொருமுறை இப்படிப்பட்ட கொடுமைகளை அனுபவிக்கக்கூடாது என்பதால்! "கையாலாகதவனாய்" வெறும் "வாய்ச்-சவடாலில்" மட்டும் அவர்களுக்குள் "நம்பிக்கையெனும் நஞ்சை" விதைத்து - அவர்கள் இன்னுமொரு முறை கொடுமையை-அனுபவிப்பதை "கைகட்டி பார்க்கும் நிலை" வேண்டாம் என்பதால்!! எஞ்சியிருப்பவர்களையாவது, அவர்களுக்கு உரித்தான-உண்மையான சுதந்திரத்தோடு வாழவிட வேண்டும் என்பதால்!!!

வியப்பதா? விம்முவதா??



கதை, பாட்டு, எண்கள்;
கூறுகிறாள், எழுதுகிறாள் - என்மகள்!
அவைகளை வியந்து பாராட்டும்-முன்;
அவளும், என்னவளும் - அனுபவித்த,
"அவஸ்தைகள்" அல்லவா! மனக்கண்ணில்;
அனைத்தையும் புறந்தள்ளி - விழுகின்றன?!

பிரிவும், உறவும்...



பிரிவிலிருக்கும் "சுகத்தை"
பிரித்தறிய தெரிந்திடின்;
"பிரியா"வரம் கிடைக்கும் -
பற்பல உறவுகளுக்கும்!!!

வானமா, எல்லை?



கட,கட-வென கடந்தும்!
பற,பற-வென பறந்தும்!!
ஓடு,ஓடு-வென ஓடியும்!!!

வரையறையே, இல்லையே;
வானமா, எல்லை???

உறுதியான உறவு...



சண்டையும், சச்சரவும்;
சேர்ந்து இராத!
உறவு எதுவும் -
உறுதியானது அல்ல!!!

தியானம்...



உடற்சோர்வும், மனச்சோர்வும்;
உடலும், உயிரும்-போல்!
இணைவதில் இருக்கிறது;
இனிமையான "தியானம்"!!

ஞாயிறு, அக்டோபர் 14, 2012

கற்பழிப்புக்கு காரணம், பெண்களின் திருமண வயதா???



   கடந்த மாதத்தில் மட்டும் "ஹரியானா" மாநிலத்தில் நடந்த 19-க்கும் மேலான கற்பழிப்பு வழக்குகளையும் - அதை தொடர்ந்த செய்திகளையும் பலரும் படித்திருக்கக் கூடும். இதற்கான காரணங்களாய் கூறப்படும் விசயங்களில் "பெண்களின் எண்ணிக்கை குறைவு" என்பதும் ஒன்று. அதன் விளைவாய் திருமணத்திற்கு பெண்கள் கிடைக்கவில்லை எனவும் - அதனாலேயே பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அதனால், பெண்களின் திருமண வயது வரம்பை 18-லிருந்து 15-ஆக குறைக்கவேண்டும் என்று தொடர்-போராட்டங்கள் நடைபெறுகிறது. அதிலும் சிலர், வரலாற்றை காரணம் காட்டி "முகலாய அட்டூழியங்களை" தவிர்க்க பால்ய-விவாகங்கள் நடந்தது போல், இப்போதும் நடக்கவேண்டும் என்றும் கூறுகின்றனறாம். இது குறித்து, அங்கிருக்கும் "பஞ்சாயத்து" சங்கம் ஒரு முடிவுக்கு வரப்போவதாயும் செய்திகள் வருகின்றன. இதனிடையில், அம்மாநில கட்சியின் தலைவர் "பெண்கள் விரும்புவாதாலேயே, கற்பழிப்புகள் நடக்கின்றன" என்றும் கூறி உள்ளார். இப்படி, பலவேறு காரணங்கள் பலவேறு தரப்பில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் வேளையில் - இது குறித்தான என்னுடைய பார்வையை பதிவு செய்யவேண்டும் என்று தோன்றியது. இவர்கள் கூறும் காரணங்களை விடுத்து, கற்பு எனும் விசயத்தை அலசுவது மிகமுக்கியம் என்று படுகிறது. கற்பு எனும் "வேலியை" முதலில் உடைத்தெறிய வேண்டும் என்று தோன்றுகிறது. இது எளிதல்ல - எனின், "வன்முறை" மூலாமவது உணர்த்தப்படவேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது.  

    பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் (அல்லது பெரும்பான்மையோனோர்) தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது உண்மை எனில், இதை மிகுந்த ஆழமாய் ஆராயவேண்டும்; இதை எக்காரணம் கொண்டும் தொடர விடக்கூடாது. இன்னுமா, இந்த சாதியக்-கொடுமைகள் நடக்கின்றன? இந்த மனம்-சார்ந்த வளர்ச்சி அடையாமல் எத்தனை தொழில்நுட்ப மற்றும் அறிவியல் வளர்ச்சி நடந்து என்ன பயன்? அதே மாநிலத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த ஓர் ஆண் - உயர்சாதி பெண்ணை காதலித்தாலே கொன்று விடுவார்களாம்! இது என்ன(டா) நியாயம்?? அந்த சாதியின் "பாதுகாப்பு அரண்" என்று முழக்கமிடும் கட்சிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? தமிழகத்தில் இருக்கும் அந்த சாதியின் கட்சி ஒன்று சமீபத்தில் "இலங்கை-அதிபர்" வருவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தது! இங்கே, சக-இந்தியர்கள் இக்கொடுமைக்கு ஆட்படும்போது நீங்கள் முதல் ஆளாக நின்று போராட வேண்டாமா? அவர்களுக்கு பாதுகாப்பாய் அரசியல்-கட்சியை சார்ந்தவர்கள் இந்நேரம் அங்கு சென்றிருக்க வேண்டாமா?? சட்ட-ரீதியாய் அவர்களை தண்டிக்க என்ன நடவடிக்கைகள் எடுத்தீர்கள்??? இத்தனை சட்டங்களை "அம்பேத்கர்" போன்றவர்கள் பெற்றுத்தந்து என்ன பயன்? குறைந்தது, அம்மக்களின் பெயரால் - அம்மக்களுக்காய் ஆரம்பிக்கப்பட்ட கட்சிகள் கூட இதை செய்யாது போனதை என்னென்று சொல்வது?? இப்படிப்பட்ட நேரத்தில் தான் அக்கட்சிகள் தங்களின் நிலைப்பாட்டை உணர்த்திடுதல் வேண்டும்.

       கற்பழிக்கப்பெடும் பெண் எந்த சமூகத்தை சார்ந்தவர் என்றாலும், தடுக்கப்பட வேண்டும்! அதிலும் இந்த மாதிரி ஓர் குறிப்பிட்ட சமூகத்தை மைய்யபடுத்தி நடக்கும்போது - தேவையெனில் "அடக்குமுறையை"யும் கையாளவேண்டும்!! "கருவை தாங்குபவள்" பெண் என்ற "ஒரே காரணத்தால்" - கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் தான் என்பதை நியமித்தவன் எவன்? என்னவிதமான, சமூக-நியதி இது?? அதிலும், சூழ்நிலை காரணத்தால் - தன் தவறேதுமின்றி கொடுமைக்குள்ளாகும் இம்மாதிரி பெண்களை - "சமூகம்" என்ற போர்வையில் எவர் காயப்படுத்தினாலும் கடுமையாய் தண்டிக்கவேண்டும்! எந்த சந்தேகமும் இல்லாமால் - இதை அதிகம் சுட்டிக்காட்டி காயப்படுத்துபவர்கள் பெண்களே என்ற உண்மையை கவிதை ஒன்றில் முன்பே வெளியிட்டு இருக்கிறேன். உண்மையில், ஓர் பெண்ணாய் - சில வருடங்களுக்கு முன் - தமிழ்-நடிகை ஒருவர் கற்பு குறித்த "முற்போக்கு சிந்தனை" கொண்ட கருத்தை நாம் "அங்கீகரிக்க" தவறி விட்டோம்; வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், நான் அவரின் கருத்தை வழி-மொழிந்து கொண்டே வருகிறேன். உடை துவங்கி பலவேறு விசயங்களில் நாம் பாரம்பரியத்தை விட்டு மாறியது(கூட) முக்கியமில்லை; இது மாதிரியான சிந்தனைகளில் இருந்து மாறுபடவேண்டும். இந்த போலி-சமுதாயத்திற்கு பயந்து (கற்பென்பது மாயை என்பதையுணராது) கற்பழிக்கப்பட்ட பல பெண்கள் "தற்கொலை" செய்துகொள்கிறார்கள்! உண்மையில், அவர்களுக்கு கற்பழிப்பு-எனும் கொடுமையை விட இந்த சமூகக்-கொடுமைகள் தான் அதிவலியை கொடுப்பதை தெரிகிறது.

      கற்பு என்பது ஒவ்வொரு பெண்ணின் சுதந்திர-எண்ணமாய், அது குறித்து அவளே முடிவு செய்பவளாய் இருக்கவேண்டும்; இது சாத்தியமாயின் - ஓர் பெண் "ஆணை கற்பழிக்க" தயங்க(வே) மாட்டாள். ஒவ்வொரு வன்முறையும் "பொறுமையின் எல்லையில்" தான் துவங்குகிறது; ஓர் பெண் மட்டும் கற்பு-ரீதியான இந்த அடக்குமுறையில், பொறுமையின் எல்லையை அடைந்துவிடின், "ஆண் கற்பழிக்கப்படுவது" கண்டிப்பாய் நடக்கும். பெண்கள் மட்டும் அதை செய்ய ஆரம்பித்தால் - அது மிகக்கொடூரமாய் இருக்கும்! அவளால், அதை எளிதாயும் செய்யமுடியும்!! எனவே, கற்பு குறித்தான பார்வையில் பெரும் மாற்றம் வேண்டும்!!! இதுவெல்லாம், ஆண்களாலே வகுக்கப்பட்டது; கற்பழிப்பில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு மட்டும் "வயிறு-வீங்கும்" என்பது "இயற்கை/ இறைவன்" நிர்ணயித்தது. திருமணம் என்ற போர்வையில் அதே "வயிறு-வீங்கும்" விசயம் அங்கீகரிக்கப்பட்டே நடக்கிறது; ஆனால், ஓர் விபத்தாய் - தன் விருப்பின்றி நடக்கும் போது மட்டும் அதே காரணத்திற்காய் பெண் தண்டிக்கப்படுவது - எந்த விதத்தில் நியாயம்? ஏன், கற்பழிப்பு என்பது பெண்ணுக்கு மட்டும் ஒழுக்கம் சார்ந்த விசயமாய் கற்பிக்கப்பட்டது?? இந்த தடையை முதலில் தகர்த்தெறிய வேண்டும்! அதற்கு, மிகப்பெரிய ஒற்றுமை "பெண்களிடத்தில்" வேண்டும்!! அவர்கள் முதலில் மனதளவில் இந்த கற்பு எனும் "சிறையில்" இருந்து வெளிவர தயாராகவேண்டும்! "தாயாராவது" தன் தனித்தன்மை என்ற "பொய்-கர்வம்" தவிர்த்து - இயற்கை/ இறைவனின் படைப்பு அது என்பதை உணரவேண்டும்.

   இந்த கற்பு எனும் விசயத்தில் மேற்கூறிய தெளிவு வந்துவிடின், திருமணம் எனும் உறவின் உண்மையான அர்த்தம் விளங்கும். "பெண்-சுகத்தை அனுபவிப்பதற்கு மட்டுமே திருமணம்" என்ற தவறான எண்ணம் விலகும்! பெண் என்பவள் குழந்தை-பெரும் கருவி என்ற நினைப்பு மாறும்!!! பெண் என்பவள், உடல்-சுகத்திற்கு மட்டும் என்ற "தவறான உணர்தலால்" தான் அல்லது அது மட்டும் முன்னிருத்தப்பட்டிருக்கும் காரணத்தினால் தான் - எண்ணிக்கை குறைவென்பதால், திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை, என்ற காரணம் காட்டி - பெண்ணை கற்பழிக்கிறான். இல்லை எனில், அந்த பெண்ணை - திருமணம் செய்ய என்ன செய்ய வேண்டும் என்று யோசித்திருப்பான்; இவ்வாறு கூட்டாய் (???!!!) சேர்ந்து பெண்ணை கற்பழிக்கும் கொடுமைகள் மறையும்! கற்பழித்துவிட்டால் மட்டும் ஓர் பெண் "மனைவியாய்" ஆகிவிடுவாளா? இல்லை, கற்பழித்துவிட்டால் திருமணம் நடந்து விட்டதாய் "உணர்வு" வந்துவிடுமா?? இதே நிகழ்வு, திருமணமான பின்பும் பொருந்தும்! திருமணம் நடந்துவிட்டதால் மட்டும் - ஓர் பெண் (அல்லது ஆண்) எப்போதும் உடலுறவுக்கு இணங்கவேண்டும் என்பதும் தவறான அணுகுமுறை!! எனவே, திருமணம் என்பது என்னவென்பதை உணரும் வரை - கற்பழிப்புக்கு காரணம் பெண்களின் எண்ணிக்கை என்பதிலோ அல்லது திருமண வயது என்பதிலோ எந்த அர்த்தமோ/ உண்மையோ இல்லை. மேலும், இந்த கற்பழிப்பு காரணமாய், திருமண வயதை குறைத்தால் - கண்டிப்பாய் அது…

மென்மேலும், பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்!!!                       

மாற்றற்றது!!!



எவரேனும், எப்போதேனும்;
எத்தனையேனும் - சுமக்கலாம்!
என்னை(யே) மீண்டும்;
எவரும் "கருவாய்"
தாங்கிட முடியாதென்பதால்;
"தாய்"ஒன்றே மாற்றற்றது!!!

கற்புக்கரசி?


கற்பு என்பதே
கற்பிக்கப் பட்டதாயின்
"அழிதல்" மட்டுமல்ல;
அதற்கு "அரசி"யும்
சாத்தியமில்லை! பின்னேன்
சான்றில்லை "கற்புக்கரசனுக்கு?"

உடற்குரையும், மனக்குறையும்...




உடற்குறை நீங்க;
மனவலிமை உயரவேண்டும்!
மனக்குறை நீங்க;
உடல்வலிமை(உழைப்பு) உயரவேண்டும்!!

பொறுமையின் எல்லை எது???



வன்முறையின் பிறப்பிடம்;
அதுவாதலால் - பொறுமைக்கு,
எல்லை(யே) இல்லை!!!

எல்லையும், விளையாட்டும்…



எல்லையில் - தேவையில்லாமல்;
"விளையாட்டாய்" சண்டை!
விளையாட்டில் - எதற்கு,
"எல்லையில்லாத" சண்டை???

ஞாயிறு, அக்டோபர் 07, 2012

உள்ளூர் விசயம்னா, இளக்காரமா???

     
        நான் பெரும்பாலும், ஆங்கில திரைப்படங்களை பார்ப்பதில்லை; அதற்கு முழுமுதல் காரணம் - என்னால் அனைத்து உரையாடல்களையும், உணர்வுப்பூர்வமாய் "புரிந்து" உள்வாங்க முடியாது என்பதே! தமிழ்-திரைப்படங்கள் பார்க்கும் போது கூட சில உரையாடல்கள் தெளிவாய் கேட்கவில்லை என்றால், மீண்டும் அதை கேட்கும் வழக்கம் உண்டு. ஆங்கிலப் படங்களில் வலுவான-கதைக்களங்கள் இருந்தும், அவர்கள் நம் திரைப்படங்கள் போல் அதிகம் உணர்வுகளுக்கும், உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை!! அவர்கள் அதிகம், தொழில்நுட்பத்தை ஒட்டி "பிரம்மாண்டம்" காண்பிப்பர் என்பது என் எண்ணம். பெரும்பாலான ஆங்கில திரைப்படங்கள் வேற்று-கிரகவாசிகள் (Aliens) அல்லது வேற்று-கிரக பொருட்கள் (UFO போன்று), "நம்பமுடியாத கதாநாயகர்கள்" மற்றும் "மாயாஜாலங்கள்" - இவற்றை அடிப்படையாகக் கொண்டது! கண்டிப்பாய், சில தலைசிறந்த படங்கள் உண்டென்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இத்தலையங்கம் எந்த மொழி திரைப்படம் சிறந்தது என்பதை முன்னிறுத்தியும் அல்ல!! நம்மில் பெரும்பாலானோர், ஆங்கிலத் திரைப்படங்களையும் - நம் திரைப்படங்களையும் எவ்வாறு "இரு-நிலை" கொண்டு விமர்சிக்கிறோம் என்பதை உணர்த்தவே. நமக்கு, "உள்ளூர் சரக்கு" எனும் ஓர் இளக்காரம் இருப்பதை மறுக்க முடியாது. சென்ற வாரத்தில், சமீபத்தில் வெளியான 3 தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கிலப்படங்களை பார்த்தேன். இயற்கையாய், 3 திரைப்படங்களும் வேற்றுகிரகம் சார்ந்த கற்பனையை மையம் கொண்டிருந்தது. 

      உண்மையில், அந்த 3 திரைப்படங்களும் அருமையான விதத்தில் எடுக்கப்பட்டுள்ளன என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. என்னுடைய கேள்வி - ஏன் நாம் அதே மாதிரியான படங்கள் தமிழில் (அல்லது வேறு எந்த இந்திய மொழியில்) வந்தால் மட்டும் அதே உணர்வோடும், விருப்புடனும் பார்க்க மறுக்கிறோம்? உதாரணத்திற்கு; பேய் அல்லது சாமி- பிடித்திருக்கும் கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் என்று வைத்துகொள்வோம்! பேய் மற்றும் சாமி-பிடித்தல் என்பவை "உண்மை" இல்லை என்ற "அதிபுத்திசாலித்தனம்" உடனடியாய் வந்துவிடும். அது எப்படி? எவரும் பார்த்திராத வேற்றுக்கிரக வாசிகள் (அல்லது பொருட்கள்) பற்றி ஓர் ஆங்கிலத் திரைப்படம் சொல்லும்போது வராத "அதிபுத்திசாலித்தனம்" உள்ளூரில் வெளியான தமிழ்த் திரைப்படம் பார்க்கும் போது மட்டும் வருகிறது? நன்றாக, நினைவு கொள்ளுங்கள்: இந்த "பறக்கும்-தட்டு" போன்ற விசயங்களை குறிப்பிட்ட ஓர் சில நாடுகள் மட்டுமே தொடர்ந்து பார்த்ததாய் - அது குறித்த கதைகளை பரப்பி வருகின்றன! எதுவாயினும், அந்த நம்பிக்கை உண்டென்பது ஏற்கப்படின் - நம் கிராமம் மற்றும் சாதாரண மக்கள் கூறும் "பேய் மற்றும் சாமி-பிடித்தல்" உண்டென்பதும் ஏற்கப்படவேண்டும். ஏன் இந்த மாறுபட்ட நிலை? ஒருவேளை, அவர்கள் காண்பிக்கும் "பிரம்மாண்டங்களால்" சிந்திக்கும் திறன் மறு(றை)க்கப்படுகிறதோ? அல்லது "வெள்ளையா, இருப்பவன் பொய் சொல்லமாட்டான்" என்பது போல, வெளிநாட்டவன் சொன்னால் உண்மை என்று கொள்கிறோமா?

        நிலவிற்கு செல்வதாயும், அங்கே வித்தியாசமான மனிதர்கள் (அல்லது ஜந்துக்கள்) இருப்பதாயும் காண்பிப்பதை நம்பும்போது, ஏன் நம் ஊரில் நிலவில் "பாட்டி - வடை சுடுகிறாள்" என்று கூறும்போது "இளக்காரம்" வருகிறது? இரண்டும் கற்பனையே! கற்பனையின் வீரியமும், செயல்படுத்தும் மனிதர்கள் வேண்டுமானால் வேறுபடலாம்!! ஒருவன் "வேற்றுக்கிரக மனிதர்கள்" இருப்பதாய் கூறுகிறான்; இன்னுமொருவன் அங்கே பேய்களும், பிசாசுகளும், தெய்வங்களும் இருப்பதாய் கூறுகிறான்!!! ஒன்று இருவரையும் நம்புங்கள்; அல்லது எவரையும் நம்பாதீர்கள். ஏன் இந்த இரட்டை வேடம்? இரண்டு நம்பிக்கை சார்ந்த விசயங்களுக்கும் எந்த திடமான-ஆதாரமும் இதுவரை இல்லை; பின் எப்படி, ஒன்றை மட்டும் நம்பத் தோன்றுகிறது? மேலும், இன்னொன்றை நம்பாதது மட்டுமல்லாது, "கீழ்த்தரமாய்" விமர்சிக்கவும் முடிகிறது?? "ஆங்கிலம்" பேசுவது தான் புத்திசாலித்தனம் என்ற "style statement" போல "ஆங்கிலத்-திரைப்படம்" தான் சிறந்தது என்ற "நஞ்சை" நம்முள் விதைத்து விட்டோமா/ விட்டார்களா? ஆங்கிலப்படங்கள் பார்க்கவேண்டாம் என்று கூறவில்லை! ஆனால், அதற்கு நிகரனான/ அது போன்ற தமிழ்த்திரைப்படங்களையும் ஆதரியுங்கள் என்றே கூறுகிறேன். ஓர் தமிழ்-கதாநாயகன் "தோட்டாவை" கையால் பிடிப்பதையே "கிண்டலடிக்கும்" இவர்கள், ஆங்கிலப்படங்களில் தன் உடம்பில் புதைந்த தோட்டாக்களை - கதாநாயகன் - "Just like that" தொடைத்தெரிந்து விட்டு போகும்போது மட்டும் ஆரவரிப்பது ஏன்? பெரிய இரும்பு-கதவுகளை பிளந்து செல்லும்போது "வாய்-பிளந்து" பார்ப்பதேன்??

   ஓர் தமிழ்-திரைப்படத்தில் ஒரு காட்சி அல்லது கதைக்கரு வேறொரு ஆங்கிலப்படத்தில் இருந்துவிட்டால் போதும், உடனே - நான் அந்த ஆங்கிலப் படத்தை பார்த்திருக்கிறேன்; அதை அப்படியே எடுத்திருக்கிறார்கள் என்று உடனே தன் "அறிவு-ஜீவி" தனத்தை காண்பிப்பது! அந்த ஆங்கிலப்படம் எந்த மொழியின் தழுவல் என்பதை அவர்கள் ஆய்வதில்லை!! ஆங்கிலம் தான் அவர்களின் எல்லை!!! உண்மையில், ஒரு திரைப்படமோ/ நாவலோ/ கதையோ ஒரு மொழியில் இருந்து மற்ற மொழிக்கு தழுவி செல்லவேண்டும்; அது புலம்-பெயர வேண்டும். "பாரதி" என்ற கவிஞனின் விடுதலை-உணர்வை நேசித்து, தழுவி - தன்னை "பாரதி-தாசனாய்" மாற்றிக்கொண்டவரை எவரும் "தழுவியவர்" என்று வாதிட்டதில்லை; மாறாய், அவர் "புரட்சிக்-கவிஞர்" என்றானார்! ஒரு மொழிக்குள்ளேயே, கருத்து-தழுவல் பெரிய வேறுபாட்டை காட்டுமெனில், இருவேறு மொழிகளில் உருவாகும் இரு-திரைப்படங்களில் தழுவல் இருப்பதில் தவறெதுவும் இல்லை. சொல்லப்படும் இடமும், சென்று சேரும் இடமும் தான் கவனிக்கப்படவேண்டும். தழுவல் கூடாது எனின், Pizza துவங்கி இங்கே பிரபலமாகி இருக்கும், பலவும் தழுவல் தான். இது மாதிரி பல தழுவல்களை நாம் சிறிதும்-கூச்சமின்றி ஏற்கிறோம். ஆனால், ஒரு திரைப்படம் வந்து விட்டால் மட்டும் "அறிவுஜீவித்தனம்" வந்து விடுவது ஏன்??? ஏனெனில், ஆங்கிலப்படங்கள் பார்க்கிறேன் என்பதையே ஓர் "கர்வத்துடனும், திமிருடனும்" சொல்லப் பழகி விட்டோம்! அதுதான் சிறந்தது என்று "போலியாய்" நம்ப ஆரம்பித்துவிட்டோம்!!

         ஆங்கிலப்படங்களில் உலாவந்த பலவேறு "சூப்பர் ஹீரோ"-க்களை கொண்டாடிய நாம், சமீபத்தில் "எதார்த்த-கதையோடு" வெளிவந்த "முதல்-தமிழ் - சூப்பர் ஹீரோ" திரைப்படத்தை நெருங்கி சென்று கவனிக்கக் கூட தவறிவிட்டோம் - உள்ளூர் "சூப்பர் ஹீரோ" என்பதாலா? எத்தனையோ ஆங்கிலப்படங்களில், "மிக அருவருப்பான" உருவம் கொண்ட மனிதர்கள் அல்லது எந்த இனம் என்றே தெரியாத "ஜந்துக்கள்" காண்பிக்கப்படும் போது, மெய்-சிலிர்க்கிறோம்; "ஆஹா" என்ன ஒரு தொழில்நுட்பம் என்று வியக்கிறோம். அது அருவருப்பு என்று உணர்வதே இல்லை! நம் ஊரில் - ஒரு நடிகன் "தசாவதாரம்" என்றொரு திரைப்படம் எடுத்து - பல வேடங்களை காண்பிக்கும் போது - மட்டும், "பாட்டி-வேடம்" அருவருப்பாய் உள்ளது என்ற "விமர்சனம்" (அதுவும் "திருட்டு VCD - ல் பார்த்துவிட்டு). உருவம் முக்கியம் எனில், ஆங்கிலப்படத்தையும் விமர்சிக்க வேண்டும்; மாறாய், அதை பாராட்டக்கூடாது. அவர்களுக்கு ஆங்கிலம் தவிர்த்து மற்ற திரைப்படங்களை குறை-கூறுவதற்கு ஏதேனும் ஒரு காரணம் வேண்டும் - அவ்வளவே; நியாயம் பற்றி அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. தசாவதாரம் திரைப்படத்தில் "வேடங்கள்" தவிர்த்து பல அபூர்வமான விசயங்கள் உள்ளன; அதை அவர்கள் உணரக்கூட முயற்சிக்கவில்லை! ஆனால், எத்தனையோ ஆங்கிலப்படங்களில் வரும் அருவருப்பான-உருவங்களை தாண்டி சென்று அவர்களால் திரைப்படத்தை பாராட்ட முடிகிறது. ஏன், அது தமிழ்ப்படம் என்று வரும்போது மாறுகிறது? ஏனெனில், அவர்களுக்கு உள்ளூர் விஷயம் எனில்…

மிகவும் இளக்காரமாய் படுகிறது!!!

பின்குறிப்பு: திரைப்படம் என்பது ஓர் வலிமையான ஊடகம் என்பதால் தான், அதைக் கொண்டு இந்த "இளக்கார" எண்ணத்தை விவாதித்துள்ளேன். சென்ற வாரம், "பொறுமை(காத்து), மன்னிக்க(வும்)… நன்றி!!!" என்ற தலையங்கத்தில் மேலைநாடுகளில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய உண்டு என்பதை உணர்த்தியிருந்தேன்! அதே போல் நாம் - உள்ளூரில் உள்ள பல விசயங்களை பாராட்ட, அதை தொடர்ந்து செய்திட தவறக்கூடாது!! சுயத்தை மதிக்க தவறிய எந்த மனிதனும், வளர்வது இல்லை!! ஏனோ முடிக்கும் முன் நான் அடிக்கடி கேட்கும் "நெஞ்சே, நெஞ்சே… மறந்து விடு" என்ற தமிழ்-திரைப்பட பாடல் நினைவுக்கு வந்தது; உடனே அந்த பாடலை கேட்டுக்கொண்டே தான் தான் இந்த "வரியை"  தட்டச்சு செய்து நிறைவு செய்தேன்.

மறந்துவிடாதே, என்-அம்மா!!!...



கருவுக்கு - உயிர் மட்டுமல்ல;
உருவும் கொடுத்து - என்னை
உருவாக்கிட எத்தனை வலிகளை;
உள்வாங்கியிருப்பாய் என் அம்மா!

சிறுவயதில் நான்கொடுத்த - எல்லா
சிரமங்களையும்; பொறுத்தருளிய என்தாயே!
உனக்கு தெரியாத சிறுசெயல்களில்(கூட);
உன்னை அரவனைக்கவில்லையே என்-அம்மா!!

ஏணியாய் - இந்தஉயரத்திற்கு என்னை;
ஏற்றிவிட்ட - உன்னை, "கேவலம்"
"எஸ்கலேடர்" ஏறத்தெரியாத காரணத்திற்காய்;
எதற்காய், கடிந்தேன் என்னம்மா?

காற்றிலசையும் கதவிடுக்கில்; சிக்கிடாத,
கலையை - கனிவாய் கற்றுக்கொடுத்தவளே!
தானியங்கும் "மெட்ரோ-வாயிலில்" நுழையத்தயங்கிய
"தாயுன்னை" - திட்டிவிட்டேனே எந்தெய்வமே!

விரல்சேர்த்து உணவை, பொருளை;
விருட்டென்று எடுக்க - பயிற்றுவித்தவளே!
"போர்க்-நைப்" வைத்து நாசுக்காய்;
"பிஸ்ஸா"வை, சாப்பிடவில்லையென நொந்தேனே?

வெந்ததென தெரிந்தும் - உணவை;
விரலால் நசுக்கி ஊட்டினாயே!
"அரை-வேக்காட்டு" மாமிசத்தை - நாகரீகமென;
அறிந்தே உண்ண-உன்னை வற்புருத்தினேனே!

இதுபோல் எத்தனை, எத்தனை;
இழிவாய் உன்னை-நடத்திட்ட தருணங்கள்?
இதற்காகவா, அனைத்தையும் தாங்கினோம்-என;
இக்கயவனை சபித்திருப்பாயோ? என்னுயிரே!

ஏனம்மா? ஏதுமறியாத சிசுவெனக்கு;
எல்லாம் கற்றுத்தந்த, உனக்கு -
எதுவும் கற்றுத்தர மறந்தேன்?
என்னையே-நான் வெறுக்கிறேன் அம்மா!

ஆழயோசித்ததில் எனக்கு ஒன்று-புரிந்ததம்மா!
அம்மாவாய்(மட்டும்) உன்னை பார்த்திராது;
"என்-மகளாய்(உம்)" உன்னை பார்த்திருப்பின்;
எல்லாம்-பொறுத்து கற்றுத்தந்து இருப்பேனம்மா!

மனதில்-சிறிதும் வருத்தமின்றி - என்னை;
மன்னித்துவிடுவாய் என்பது தெரியுமம்மா!
மறந்தும்; இந்த-இழி செயல்களுக்காய்
"மறந்துவிடாதே", என் அம்மா!!!

மகிழ்ச்சி…


நினைத்ததை அடைவதில்;
நிகழ்வதை நினைப்பதில்;
இல்லை! மாறாய் -
"இம்மியளவும்" குற்றவுணர்வில்லா;
இதயத்திலிருக்கிறது… மகிழ்ச்சி!!!

மகளான என்-தாய்...


மனமுவந்து கருவில்;
மாதங்கள் - பத்து!
எனை-சுமந்தவளை, மனதில்;
"என்மகளாய்" சுமக்கிறேன்!!!

விருப்பும், வெறுப்பும்...


விருப்பு, வெறுப்பை;
வித்தியாசமின்றி பிரித்தறிய -
மற்றவரின் விருப்பு-வெறுப்பை;
மறுப்பின்றி அறிதல்வேண்டும்!!!

போரும், வெற்றியும்...


எத்தனை வாகைகள் சூடியவனாயினும்;
எவரிடமும் தோற்றதில்லை மரணம்!
என்பதை நினைகூர்ந்து போரிடின்;
எதிரியை, வெல்லலாம் எளிதில்!!!

பிள்ளைகளும், பெற்றோர்களும்...



பிள்ளைகளை, மட்டுமல்ல;
பெற்றோரையும், குழந்தையாய் -
பாவித்தால்; பிரச்சனை-குறைந்து
பாசப்பிணைப்பு வலுக்கும்!!!