ஞாயிறு, நவம்பர் 24, 2013

இரண்டாம் உலகம் (2013)




விழியப்பன் பார்வை: இரண்டாம் உலகம் (2013) திரைப்படம்

         மிகுந்த எதிர்பார்ப்புடன் 2 நாட்களுக்கு முன் இரண்டாம் உலகம் (2013) திரைப்படம் பார்த்தேன். இறுதியில், சராசரியான "காதல் கதை" கொண்ட திரைப்படத்தை பார்த்ததை விட எந்த பெரிய-நிறைவும் இல்லை.
  • முதலில், படம் மிகப்பிரம்மாண்டமாய் எடுக்கப்பட்டு இருக்கிறது - என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை! அதிகம்  செலவாகி இருக்கும் என்பதிலும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை!! ஆயினும், பிரம்மாண்டம் மட்டுமே படம் அல்லவே?! ஆனால், ஆரம்பம் முதலே ஏதோ பெரிய குறை இருப்பது - உறுத்திக்கொண்டே இருந்தது.
  • பலரையும் போல், இடைவேளைக்கு பின் படம் சரியான தளத்தில் செல்லும்; செல்வராகவன் ஏமாற்றமாட்டார் என்ற எண்ணம் நிறைந்திருந்தது. உடன் வந்திருந்தவரிடம், அதையே சொல்லி வந்தேன். அதே எண்ணத்துடன் தான் - இரண்டாம் பாகத்தைப் பார்க்க ஆரம்பித்தேன்.
  • சிலர் "அவதார்" படம் பார்த்துவிட்டு அனைவரும் "ஜேம்ஸ் கேமரூனை" பெருமையாய் சொல்லி "படம் மிகப்பெரிய "காட்சி-விருந்து (Visual Treat)" என்று பாராட்டினோம் அல்லவா?! ஓர் தமிழ்ப்படத்தைப் பற்றி அவ்வாறே பாராட்ட வேண்டிய தருணம் இது என்று வாதிடுகின்றனர்! இல்லை எனவில்லை, தமிழ் திரை-வரலாற்றில் நல்ல "காட்சி-விருந்து" கொண்ட படங்களில் ஒன்று என்பதில் எந்த ஐயமும் இல்லை!
  • காட்சி விருந்தை மட்டும் எப்படி பார்க்கமுடியும்? அப்படியானால் - கும்கி, தங்க-மீன்கள், மைனா, எந்திரன் - போன்ற பல படங்கள் காட்சி-விருந்தை வெகுவாய் படைத்தனவே?! மேலும், "அவதார்" படம் - "காட்சி விருந்து" மட்டுமல்லாமல் நல்ல கதையை, நல்ல அறிவியல் அடிப்படையை கொண்டு இருந்ததை எவரும் மறுக்க முடியாது. அதனால் தான், அவதார் திரைப்படம் அத்தனை பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றது.
  • இந்த படத்தில் செல்வராகவன் என்ன சொல்ல வருகிறார் என்பதை இறுதி வரை புரிந்துகொள்ளவே முடியவில்லை!!! இன்னமும், என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை! இரண்டாம் உலகம் ஒன்று இருக்கிறது என்கிறார் - சரி, (கற்பனையே என்றாலும்) இருக்கட்டும்; ஒப்புக்கொள்கிறோம்! அதை நோக்கித்தான் "இன்றைய அறிவியலும், இந்திய அறிவியலும்" பயணப்பட்டுக் கொண்டு இருக்கிறது. 
  • எனவே, இந்த திரைப்படத்திலும் - இரண்டாம் உலகம் உருவாக்கப்பட்டு விட்டது! ஒப்புக்கொள்வோம்!! சரி, அங்கேயுமா?! வில்லன் ஒருவரை கடத்த (சரி, பெரும்பான்மையான பெண் என்ற காரணத்தை விட்டுவிட்டு "கடவுள்" என்ற மாற்றம் உள்ளதே?! என்றே கொள்வோம்?!) முயல்வதாய், அதனை முறியடிக்க "ஹீரோ" சண்டை இடுகிறார்... என்று தொடர்வது??
  • புதிய உலகம் - எவரும் பார்த்திராத உலகம்! அறிவியல் கூட அங்கே இன்னும் உயிர்கள் வாழ சாத்தியம் இருக்கிறதா என்று ஆராய்ந்து கொண்டிருக்கும் உலகம்!! அங்கே, வாழ்வியல் அடிப்படையில் - எத்தனை கற்பனைகளை திணிக்கலாம்?! இயல்பு-உலக மக்கள் பொல்லாத தோற்றம், குடிக்க நல்ல தண்ணீர் இல்லாதது, சரியான மின்சாரம் இல்லாதது, சரியான மருத்துவ வசதி இல்லாதது போல் - எத்தனை, எத்தனை காரணிகளை கையாண்டிருக்க வேண்டிய தளம் இது? அந்த உலகத்தில் வேறுபட்டு எதையாவது சொல்லி இருக்கலாமே??!!
  • அந்த உலகத்தில் எல்லா வசதிகளும், வண்ணமயமான விளக்குகள் முதல் கொண்டு - அனைத்தும் இருக்குமாம். மாட-மாளிகைகள் இருக்குமாம்! அனைத்து சராசரியான வார்த்தைகள் கொண்டு (கணவன், மனைவி உட்பட) தமிழ் பேசுவார்களாம்; ஆனால், காதல் என்னவென்றே தெரியாதாம்! ஏன், அந்த வரத்தை கூட தெரியாதாம்!! காதல் இல்லாததால் "பூக்கள்" மட்டும் பூக்காதாம்?! ஆஹா.... என்ன ஒரு அற்புதமான சிந்தனை?!?!
  • அதனால், இங்கே இயக்குனர் எடுத்துக்கொண்டிருப்பது - காதல் இன்னமும் அந்த உலகத்தில் முளைக்கவில்லை என்பதை காட்டவாம்!? என்னையா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க, என்னை மாதிரியான "கோடிக்கணக்கான இரசிகர்கள்"??-ஐப் பற்றி?!! ஹீரோவின் அப்பாவுக்கு தன்-மகன் சிங்கத்தைக் கொல்ல காட்டுக்கு செல்லும்போது பதறும் அளவுக்கு "அன்பும்/ பாசமும்" இருக்குமாம்??!! ஆனால், (அவர் உட்பட) எந்த ஆணுக்கும் பெண் மீது காதல் இருக்காதாம்! பெண்ணை போதைப்பொருளாகவே எல்லாரும் பார்ப்பார்களாம்?! பெண் மீது காதல் இல்லாமல் மகன் என்ற பாசம் எப்படி வரும்? என்ன விதமான கதையம்சம் இது?!
  • கதையின் கருவாய் சொல்லப்படும் - இன்னுமொரு காரணம் "காதல் ஒருவனை எத்தனை தூரம் வேண்டுமானாலும் பயணிக்க வைக்குமாம்"! சரி, அதுவும் இருக்கட்டும்; "முதல் உலக" ஹீரோவை "இரண்டாம் உலகம்" வரை பயணிக்க வைக்கிறது. அவனின் வேலை, அங்கே இருக்கும் ஓர் பெண்ணுக்கு "காதலை" உணர்த்துவது/ காதலை வரவைப்பது/ காதலை புரிய-வைப்பது என்பது போல் - கதை நகர்கிறது!
  • ஆனால், அதற்கான திரைக்கதை அமைப்பில் - எந்த வலுவான காட்சியும்/செய்கைகளும் இல்லை!! "சக்களத்தி சண்டை" போன்று இரண்டு உலக ஹீரோக்களுக்குள் "சக்கலத்தன் சண்டை" என்பது போல்  தொடர்ந்து திரைக்கதை நகர்ந்து கொண்டு இருக்குமாம்! திடீரென, ஒரேயொரு இடத்தில் முதல் உலக ஹீரோ "புகைப்படத்தை" காட்டி கதை சொல்வானாம் - உடனே, இரண்டாம் உலக ஹீரோயினுக்கு காதல் புரிந்து விடுமாம்! அதன் பின், இரண்டாம் உலக ஹீரோயின் காதல்-வயப்பட்டு, இரண்டாம் உலக ஹீரோ மேல் "ஒரே காதலாய்" பொழிவாளாம்; உதட்டோடு முத்தமிடுவாளாம்! உடனே, இரண்டாம் உலக ஹீரோ "காதல்னா என்ன?"ன்னு கேட்கும்போது, முதல்-உலக ஹீரோ தான் காதலை சொல்லிக்கொடுத்ததாய் சொல்கிறது காட்சி அமைப்புகள்.
  • சரி, காதல்னா என்னன்னே தெரியாது; இரண்டாம் உலக ஆண்கள் அனைவரும், அனைத்துப் பெண்களையும் போதைப்பொருளாய் பார்க்கும் போது - இரண்டாம் உலக ஹீரோ மட்டும், ஒரு பெண்ணை அத்தனை காதல் நிறைந்து - ஒரு பெண்ணை முறையாய் அடைய நினைப்பது எப்படி வந்தது? (காதல் என்ற)பெயரே தெரியாது வந்தது என்றே கொண்டாலும், அதே வண்ணம் அந்த பெண்ணுக்கும் (இயல்பாய், போகப்போக)வந்ததாய் காட்டி இருக்கலாமே?!  இறுதியில் - அப்படித்தானே, இயல்பாய் அந்த பெண்ணுக்கு வந்ததாய் தோன்றுகிறது?! பிறகு, என்ன முதல்-உலக ஹீரோவுக்கு இரண்டாம் உலகில் வேலை?! அதுவும், அந்த வேலையை சற்றும் சரியாய் செய்யாத போது??!!
  • என்னைக்கேட்டால், இந்த படத்திற்கு 2 காதல்கள் தேவையே இல்லை! அதுவும், காதல் பற்றியே அத்தனை ஆழமாய் படத்தை நகர்த்தி இருக்க தேவையில்லை!! இல்லை எனில், குறைந்த பட்சம் படத்தின் பெயரை "இரண்டாம் காதல்" என்றாவது வைத்து இருக்கலாம்!
  • இம்மாதிரி பல கேள்விகள் எழுகின்றன! அனைத்தையம் கேட்டிட நான் விரும்பவில்லை; படம் எடுப்பது எத்தனை சிரமமான விசயம் என்பதை - அனுபவம் இல்லை எனினும் - என்னால் முழுதுமாய் உணர முடிகிறது! ஆனால், இவை எல்லாம் அடிப்படையான விசயங்கள்! இரண்டு விதமான காதல்களை சொல்வதற்கு "ராஜா-ராணி" போன்ற திரைப்படங்கள் போதாதா??!! அதற்கு ஏன், 6 ஆண்டுகள் சிரமமும், இத்தனைப் பொருட்செலவும்??!!
  • இன்னமும், இரசிகர்களாகிய எங்களையே காரணம் சொல்லி - அதனால் தான் காதல் காட்சிகள் வைத்தோம்! ஆடைகள் குறைந்த பாடல்கள் வைத்தோம்! என்று கூறி - எங்களை மென்மேலும் கொச்சைப் படுத்தாதீர்கள்!!! ஆளவந்தான், விக்ரம், குணா, மகாநதி - போன்ற படங்கள் இரசிகர்களால் பெரிதும் நிராகரிக்கப்பட்ட காலம் எல்லாம் எப்போதோ மாறிவிட்டது. அதனால் தான் - சேது, பிதாமகன், நந்தா, மைனா, பிஸ்ஸா, ஆடுகளம், எந்திரன், அந்நியன், கும்கி போன்று பல படங்கள் - இப்போது தொடர்ந்து வெற்றிபெற்று வருகின்றன! இரசிகர்களின் இரசிப்புத்தன்மை வெகுவாய் உயர்ந்து - வெகுகாலம் ஆகிவிட்டது. உண்மையில், இப்போது இயக்குனர்களின் திறமையும், திரைக்கதை வலுவும் குறைந்து வருகிறதோ என்ற சந்தேகமே எனக்கு வலுக்கிறது.
பின்குறிப்பு: இந்த படத்தை ஒரு முறையாவது பாருங்கள் - அதுவும், திரையரங்கில் பாருங்கள்! இம்மாதிரியான, தயாரிப்பாளர்களை காப்பாற்றவாவது - இதை செய்யுங்கள்!! இல்லையெனில், இது போன்ற படங்களை எடுக்க ஒருபோதும் "எவரும்" முன்வர மாட்டார்கள்! நான் முன்பே கூறிய வண்ணம் - இது மிகவலுவான தளம்-கொண்ட திரைப்படம்! நல்ல காட்சி-விருந்தாய், (சிறு, சிறு குறைகள் இருப்பினும்) நல்ல "கிராபிக்ஸ்" வேலைகள் நிறைந்த படம். ஆனால் - மிகக்குறைந்த தரமான கதை, மிகவும் வலுவிழந்த திரைக்கதை போன்றவற்றால் - இந்த படம், ஒரு சாதாரணமான படமாகத் தான் தோன்றுகிறது! மிகமுக்கியமாய் "இரண்டாம் உலகம்" என்ற தலைப்பு சற்றும் பொருந்தவே இல்லை!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக