ஞாயிறு, ஜூன் 01, 2014

என்மகளின் அலைபேசி உரையாடல்...



     என் வீட்டார் அனைவரும் - என்மகள் "அலைபேசியில்" சரியாய் உரையாடுவதில்லை என்று எப்போதும் சொல்வதுண்டு. அவர்களிடம் மட்டுமல்ல; என்னிடம் கூட அவள் அதிக நேரம் அலைபேசியில் உரையாடுவதில்லை. இணையத்தில் வேண்டுமானால், அதிக நேரம் உரையாடுவாள்; இதைப்பற்றி என்நண்பனிடம் கூட விவாதித்ததுண்டு. அவன், குழந்தைகள் பெரும்பாலும் (அலை/தொலை)பேசியில் அதிகம் உரையாடுவதில்லை; அது, அவர்களின் இயல்பு என்பான். உண்மைதான்; என்மகளும் அவ்வாறே! ஒருமுறை, அவள் அலைபேசியில் என்னிடம் பேசாததால் - நான் "அறிவிலி"யாய் கோபம் கொண்டதை-கூட முன்பொரு தலையங்கத்தில் எழுதி இருக்கிறேன். ஆனால், அதன்பின் எனக்கு அவள் அலைபேசியில் அதிகம் உரையாடவில்லை என்பதில் பெரிய-கவலையேதும் இல்லை. என்னுடைய கோபம் தவறு எனினும், அவள் என்னிடம் அதிகம் உரையாடவேண்டும் என்ற ஆசை எனக்குள் எப்போதும் இருந்தது. அதே எண்ணம்தான் என்வீட்டில் உள்ளவர்களிடமும் இருந்தது.

       அப்படிப்பட்டவள், சமீபகாலமாய் அலைபேசியில் நீண்ட-நேரம் உரையாடுகிறாள் என்று என் வீட்டார் கூறினர். என்னால் நம்பமுடியவில்லை; ஏனெனில், எனக்கு தெரிந்து அவள் என்னைத்தவிர வேறெவரிடமும் அதிக நேரம் அலைபேசியில் உரையாடுவதில்லை! என்னவளிடம் உரையாடுவதற்கான வாய்ப்பே தேவைப்படுவதில்லை; அவள் என்மகளுடனே இருக்கிறாள். இந்நிலையில் மே-20 ஆம் தேதியன்று என்னவள் "விழி ஒங்ககிட்ட ஏதோ சொல்லனுமாம்; உங்கள ஃபோன் பண்ண சொன்னா!" என்று சொன்னாள்; என்மருதந்தை வீட்டில் இருப்பதாயும், அவர் அலைபேசிக்கு அழைக்கும்படியும் கூறினாள். நான் அப்போது தான் எழுந்து அலுவலகம் கிளம்பிக்கொண்டு இருந்தேன். சரி, அவள் எவ்வளவு நேரம் பேசிவிடப்போகிறாள்?!; அவளிடம் பேசிவிட்டு கிளம்பலாம் என்று அலைபேசியில் அழைத்தேன். இன்னமும், என்னால் அவள் அத்தனை நேரம் பேசியதை நம்பமுடியவில்லை; ஆம்! மேலிருக்கும் புகைப்படங்களைப் பாருங்கள், தெரியும்!

            ஒரு-நிலைக்கு மேல் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை! என்மகளோ அலைபேசியை துண்டிக்கக்கூடாது என்கிறாள்; நானோ, அலுவலகம் கிளம்பவேண்டும். அதிலும், அதற்கு 2 நாட்கள் முன்புதான் என்-மேலதிகாரியிடம் கடுமையான வாக்குவாதம் நிகழ்ந்தது. நானும், சரி என்மகளும் நானில்லாமல் துன்பப்படுகிறாளே - வேலையை விட்டுவிட்டு சென்றுவிடலாமா?! என்று ஆலோசித்துக் கொண்டிருந்த தருணங்கள் அவை. எங்களுக்கென்று இப்போதுதான் பணம் சேமிக்க ஆரம்பித்திருக்கிறேன் என்று வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இங்கே எழுதியுள்ளேன். ஆனால், இன்னமும் ஒரு திடமான பொருளாதார-நிலை வரவில்லை! எனவே, நான் இங்கு இன்னும் சிலகாலம் இருந்தே ஆகவேண்டும்; குறைந்தது, அடுத்த வேலை கிடைக்கும் வரையாவது இருக்கவேண்டும். இந்த சூழலில், நான் காலதாமதமாய் செல்ல விரும்பவில்லை. என்னுடைய இந்த நிலையை என்னவளிடமே நான் விவாதிக்கவில்லை; பின் எங்கனம்/எப்படி என்மகளிடம் கூறுவது?

           எனவே, என்மகளிடம் "அப்பா ஆஃபிசுக்கு போகனும் குட்டி! அப்பா லேட்டா போனா, வீட்டுக்கு போக சொல்லிடுவாங்க; அப்புறம் பாப்பாவுக்கு தேவையானதெல்லாம் வாங்க அப்பாக்கிட்ட பணம் இருக்காதுடி.." அப்படி, இப்படியென்று என்னென்னவோ சொல்லி பார்க்கிறேன். அவளோ "அப்பா! உங்ககிட்ட இப்படி பேசறது ஜாலியா இருக்குதுப்பா; இன்னும் கொஞ்ச நேரம் பேசுங்கப்பா..." என்று சொல்கிறாள். இதைக்கேட்டவுடன், எப்படி அலைபேசியை துண்டிக்க முடியும்? சரியென்று, சிறிது நேரம் பேசிவிட்டு - மீண்டும் "அப்பா ஆஃபிசுக்கு போயிட்டு பேசறன் குட்டி..." என்று சொன்னால், அவள் மீண்டும் அதேவிதமாய் இன்னும் சிறிது நேரம் பேசுங்கள் என்கிறாள். துண்டித்துவிட்டு செல்ல ஒரு-வினாடி தான் ஆகும்; ஆனால், என்மகளின் அந்த-சந்தோசத்தை/அந்த-எதிர்பார்ப்பை அது சிதைத்துவிடும். நான், எப்போதும் முன்கூட்டியே செல்வேன் என்பதால் சரி அவளிடம் பேசிவிட்டு செல்வோம் என்று  தொடர்வேன்; பின், மீண்டும் நான் நேரம் ஆகிறதம்மா என்று சொல்வேன்.

            இப்படியாய், நேரம் செல்ல செல்ல நான் செய்வதறியாது அவளிடமான உரையாடலை "ஸ்கிரீன் ஷாட்" எடுக்க ஆரம்பித்தேன்; அதுவும், "ஃபேன்சி நம்பர்" வரும்வண்ணம் எடுத்த பல "ஷாட்"களில் சிலதான் மேலுள்ளவை. இந்த நேரத்தில்... அவள் சொல்ல, சொல்ல நான் "ம்...ம்...ம்... என்று கொட்டிவிட்டு; அப்புறம்..." என்று கேட்க ஆரம்பித்தேன். அவளோ "அப்பா! நான் என்ன கதையா சொல்றேன்? அப்புறம்; அப்புறம்...ங்கறீங்க?!" என்று கேட்டுவிட்டு சிரிக்கிறாள். நானோ... அப்பா அவசரமாய் கழிவறை செல்லவேண்டும்; பிறகு பேசுகிறேன் என்றால், அவளோ அலைபேசியை எடுத்துக்கொண்டு பேசிக்கொண்டே செல்லுங்கள் என்கிறாள். எனக்கோ அவளின் அறிவார்ந்த பேச்சை இரசிப்பதா? இல்லை நேரம் தவறுகிறதே என்று பதறுவதா?? என்று தெரியவில்லை. இப்படியாய்... அவளிடமான அன்றைய உரையாடல் முடியும்போது நேரம் 63 நிமிடங்களுக்கு சற்று குறைவாய் ஆகி இருந்தது. என்னதான்... என்சூழல் சிறிது பதட்டத்தை கொடுத்திருப்பினும்;

முதன்முதலாய், என்மகள் அவ்வளவு நேரம் பேசியது எனக்கு பெருத்த மகிழ்ச்சியே!!!

பின்குறிப்பு: அன்றைய தினம் முதல் என்மகள் என்னுடன் அதிக-நேரம் அலைபேசியில் பேச ஆரம்பித்து இருக்கிறாள். இப்போதெல்லாம்... மிகக்கவனமாய், தேவையான நேரம் இருக்கும்போது மட்டுமே என்மகளுடன் அலைபேசியில் பேசி வருகிறேன். நான் எதிர்பார்த்து, அவள் அதிகம் பேசவில்லை என்றாலும் கவலை இல்லை... அப்படியும் சில முறைகள் இந்த இடைவெளியில்-கூட நடந்தது. ஆனால், இனியொரு-முறை அவள் எதிர்பாத்து நான் பேசமுடியாத சூழலில் இருக்க எனக்கு விருப்பமில்லை. நேற்று என்னவள் சொன்னது போல், அதிக-நேரம் அலைபேசியை காதோடு வைத்து பேசுவது முறையல்ல... என்பதும் உண்மை! எனவே, சென்ற அக்டோபர்-மாதம் நான் வாங்கிக் கொடுத்த  "ஹெட்-ஃபோனை" என்மகள் உபயோகிக்க பழக்குமாறு என்னவளிடம் கூறினேன்;  அவளும், ஆமோதித்து இருக்கிறாள். இங்கு தான், பெரும்பான்மையில் ஒரு-தந்தையின் சிந்தனையும்; ஒரு-தாயும் சிந்தனையும் "மாறுபடுகின்றன" என்ற உண்மை விளங்கியது. என்னுடையது வெறும் "உணர்வு சார்ந்தது!"; ஆனால், என்னவளின் சிந்தனை "உணர்வுடன்; எம்மகளின் உடல்நலனும்" சேர்த்தது!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக