ஞாயிறு, நவம்பர் 18, 2012

தீபாவளியும், பட்டாசும்…



(இந்த ஆண்டும், கடந்த ஆண்டுகளிலும் "பட்டாசு-விபத்தால்" இறந்த குழந்தைகள் உட்பட அனைவருக்கும் சமர்ப்பணம்)

      தீபாவளி என்றாளே - பெற்றோருக்கும், குழநதைகளுக்கும் - முதலில் நினைவுக்கு வருவது பட்டாசு தான்! பெற்றோருக்கு எப்படி பொருளாதாரத்தை சமாளித்து பட்டாசுகளை குழந்தைகளுக்கு வாங்கித் தருவது என்ற "கவலையான" சிந்தனைகள்!! குழந்தைகளுக்கு, எந்த மாதிரியான பட்டாசுகளை வாங்குவது, எவருடன் சேர்ந்து வெடிப்பது என்ற "சந்தோசமான" சிந்தனைகள்!!! எது எப்படியாயினும், எல்லோருக்கும் பரவலாய் நினைவுக்கு வருவது "பட்டாசாய்"த்தான் இருக்கமுடியும். வழக்கமாய், ஒவ்வொரு ஆண்டும் இந்த தீபாவளி பண்டிகையின் போது - "வெடிவிபத்துகள்" தவிர்க்கமுடியாததாய் இருந்து வருகிறது. பட்டாசு உற்பத்தி செய்யும் கிடங்குகளில் அல்லது பெரிய-கடைகளில் - இது தொடர்ந்து நடந்தவண்ணமே வருகிறது. இதில் பெரும்பாலும், பலியாகுவது குழந்தைத் தொழிலாளர்கலான சிறுவர்கள் தான்; இது கண்டிப்பாய் வருந்தத்தக்க, கண்ணீரை-வரவைக்கும் நிகழ்வு தான்! இது, கண்டிப்பாய் கட்டுப்படுத்தவேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை! ஆனால், அதற்காய் என்னென்ன காரணங்களை மற்றும் ஆலோசனைகளை, சமூக-சிந்தனையாளர்கள் கூறுகிறார்கள் என்பதையும் - அவைகளின் மீதான என்னுடைய பார்வையையும் இங்கே விளக்கியுள்ளேன். என்னுடைய சிந்தனைகள் இந்த விபத்துக்களை பெருமளவில் குறைக்கும் என்று நம்புகிறேன். ஆனால், வழக்கம்போல், இதை எவர் நடைமுறைப்படுத்துவது? எவர் இதை முதலில் துவக்குவது என்ற கேள்விகளே இதற்கும் முட்டுக்கட்டையாய் இருக்கக்கூடும். 

      முதலில், இதில் பல உயிர்கள் பலியாகிறது என்பதற்காய் - பட்டாசு வெடிப்பதையே தடுக்கலாம் என்று பலர் வாதிடுகின்றனர். மேலே, குறிப்பிட்டது போல் - உயிர் இழப்புகள் தவிர்க்கப்படவேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை! ஆனால், பட்டாசு வெடிப்பதை ஏன் தவிர்க்கவேண்டும்? விபத்துக்களை தடுக்க என்னென்ன விதமான பாதுகாப்பு-செய்முறைகளை அதிகப்படுத்துவது என்று தான் யோசிக்கவேண்டும்; அது தான் முக்கியம்! எல்லா, செயல்களிலும் உயிர்-பலி என்பது இருந்து கொண்டு தான் வருகிறது! மீன்-பிடிக்க செல்லும் மீனவர்கள் எல்லையை தாண்டினார்கள் என்பதற்காய் (உண்மையாகவோ, பொய்க்காரணம் காட்டியோ) கொல்லப்படுவது தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது; அதனால், மீன் பிடிக்க செல்லவேண்டாம் என்று எவரும் வாதிடுவதில்லை; அது தொழிலாகிறது! அடிக்கடி குழந்தைகள் பயிலும் பள்ளியிலோ அல்லது வாகனத்திலோ விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படினும் - எவரும் பள்ளிகளோ, வாகனங்களோ வேண்டாம் என்று வாதிடுவதில்லை; அது தேவையாகிறது!! விளையாட்டு மைதானங்களில் விபத்து ஏற்பட்டு உயிரழப்புகள் ஏற்படுவதால் - எவரும் மைதானமும், விளையாட்டும் வேண்டாம் என்று வாதிடுவதில்லை; அது திறமையாகிறது!!! அது போல் தான், தீபாவளியின் போது - பட்டாசு வெடிப்பது என்பது பாரம்பரியமாகிறது; மேற்குறிப்பிட்ட நிகழ்வுகளின் போது - எங்கனம் எல்லோரும் பாதுகாப்பு அதிகமாக்கப்படவேண்டும் என்று வாதிடுகின்றனரோ - அது போல் தான், இங்கும் பாதுகாப்பு அதிகமாக்குவதை பற்றி பேசவேண்டும்!

   அடுத்ததாய், சமூக ஆர்வலர்கள் பலரும் வாதிடுவது - சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்பது! மறுப்பேதுமில்லாமால், இதை ஒப்புக்கொள்ளவேண்டும்! ஆயினும், இது ஆண்டுக்கு ஓர் முறை - சில தினங்கள் - நடைபெறும் செயல்; வாகனங்களின் புகை ஏற்படுத்தும் மாசு-பற்றி பல அறிவியல் ஆராய்ச்சிகள் மூலம் அறியப்படினும், நாள்தோறும் ஓர் புதுவாகனம் உருவாகிக் கொண்டு தான் வருகிறது (சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வாகனங்கள் வந்திடினும், அவற்றின் விலை எல்லோருக்கும் உகந்தது அல்ல); தொடர்ந்து வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு தான் வருகிறது!! தினந்தோறும் வெளியேற்றப்படும் இந்த அளவுக்கு அதிகமான "வாகனக்-கழிவுகள்" ஏற்படுத்தும் மாசை கட்டுப்படுத்த என்ன செய்கிறோம்? எத்தனை வாகனங்கள், அதற்குரிய பரிசோதனையை முழுதுமாய், முறையாய் செய்து இயங்குகின்றன?? ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வெளியேறி ஆங்காங்கே தேங்கி நிற்கும் சாக்கடை-கழிவுகளை கட்டுப்படுத்த என்ன செய்கிறோம்? ஒவ்வொரு தொழிற்சாலையும் வெளியேற்றும் "வேதியியல்-கழிவுகளை" கட்டுப்படுத்த என்ன செய்கிறோம்? இந்த கழிவுகள் அனைத்தும் குளங்களையும், ஆறுகளையும், கடலையும் சென்று சேர்கிறதே; அதற்கு என்ன செய்தோம்? அவை விலை-நிலங்களையும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்துகின்றனவே; அதற்கு என்ன செய்தோம்/ செய்கிறோம்? இது போன்று - எத்தனை, எத்தனை காரணிகள், தினந்தோறும் - சுற்றுச்சூழலை மாசு படுத்துகின்றன?? இவையாவும், உடனடியாய் தடுத்து நிருத்தப்படவேண்டியவை அல்லவா???

     முதலில், இந்த மாதிரியான மிகமுக்கியமான, சிக்கலான காரணிகளை சரிசெய்ய முயலுவோம்; இதை செய்தாலே, இன்னமும் பல தலைமுறைகளுக்கு சுற்றுச்சூழல் மாசு குறித்து எந்த கவலையும் தேவை இராது! அப்படி செய்தும், இன்னமும் தேவைப்படின் - பட்டாசு வெடிப்பதை/ விற்பனையை தடை செய்வது குறித்து ஆலோசிக்கலாம்!! இத்தனை தலைமுறைகள், கொண்டாடிய "தீபாவளி" எனும் ஓர்   திருநாளை - அதன் சிறப்பம்சமான "பட்டாசு-வெடிப்பதை" - மேற்கூறிய அல்லது வேறு பல காரணங்களுக்காய் எப்படி திடீரென விட்டுவிட முடியும்? பட்டாசு வெடிப்பதை நிறுத்தி/ அந்த எண்ணமே அற்றுப்போய் பல ஆண்டுகள் ஆயினும் - என் 3 வயது மகள் பட்டாசை பார்த்து காட்டிய பரவசத்தால் என்னுடைய நினைவுகள் பல ஆண்டுகள் பின்னோக்கி சென்றனவே! அது எத்தனை முக்கியம்; அந்த நினைவுகள் எத்தனை அதிசயமானது? இந்த நினைவுகள் என்னுடைய மகளுடன் - சில ஆண்டுகள் கழித்து பரிமாறப்படும்போது - இன்னும் எத்தனை பெரிய நினைவாய் மாறும்? இந்த மாதிரியான நினைவுகள் தானே, நம்முடைய வாழ்க்கையின் மைல்கற்களில் ஒன்றாய் இருக்க முடியும்? அதை எப்படி, இழந்து விடமுடியும்?? மாறாய், இதை எப்படி சமாளிப்பது அல்லது கட்டுப்படுத்துவது என்றல்லவா யோசிக்க வேண்டும்??? அதை விடுத்து, பண்டிகையின் சிறப்பம்சத்தையே மாற்றவேண்டுமெனில் - அது அந்த பண்டிகையையே சிதைத்து விடாதா? மேலும், இது மாதிரி யோசிக்க ஆரம்பிப்பின் - ஒவ்வொரு பண்டிகையும் கூட மாற்றம் கண்டு அழிந்துவிடாதா??

      பட்டாசு வெடிப்பதை தடுக்க முயல்வதை விட்டுவிட்டு பாதுகாப்பு குறித்த செயல்களை எவ்வாறு  அதிகப்படுத்துவது, என்று யோசிக்கவேண்டும். ஏன், தீபாவளி நேரத்தின் போது மட்டும் - அத்தனை தொழிற்சாலைகளும்  அவசரம், அவசரமாய் - பட்டாசு உற்பத்தியை செய்ய/அதிகரிக்க வேண்டும்? தேவைக்கேற்ப, முன்பே தயாரித்து அதை பல ஊர்களில், பல இடங்களில் பிரித்து வைத்து பாதுகாக்கலாமே? ஆட்கள் குறைவாய் (அதுவும், கிடங்கின் வெளியில்) இருந்து பாதுகாக்கும்போது - விபத்து ஏற்பட்டால், உயிர்ச்சேதம் அறவே இராதே? விற்பனையை ஏன் வழக்காமான - இறுக்கமான சூழல் உள்ள, மக்கள் அதிகம் புழங்கும் - இடங்களில்/கடைகளில் செய்யவேண்டும்? ஊருக்கு வெளியே, தனித்தனி (ஒரே இடமென்றால், விபத்துகள் பெருத்த சேதத்தை உருவாக்கும்) இடங்களில் தீபாவளிக்-கால தற்காலிக-கடைகள் அமைத்து விற்கலாமே? உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், பல்வேறு இடங்களில் (குறிப்பாய், இம்மாதிரி காலங்களில்) கிளைகளை உருவாக்கி உற்பத்தி செய்யலாமே? அவ்வாறு செய்யும்போது, போக்குவரத்து மூலம் நிகழும் விபத்துகளையும் தவிர்க்கலாமே? இம்மாதிரி, பல காரணங்கள் உள்ளன - விபத்துகளை அறவே தடுக்க; அல்லது, மிகக்குறைந்த அளவில் விபத்துகள் நடக்கும் வண்ணம் பார்த்துக்கொள்ள! விபத்தே இல்லாத எந்த நிகழ்வும் சாத்தியம் இல்லை; நடந்து செல்லும்போது இடறி-விழுவது கூட விபத்துதான்!! நடைபாதையில் நடப்பவர்கள்/இருப்பவர்கள் மீது வாகனங்கள் மோதி விபத்துகள் நிகழ்கின்றன!!! என்னுடைய பார்வையில், தீபாவளியும் - பட்டாசும்…

பிரிக்க-முடியாதவை; பிரிக்க-வேண்டாதவை!!!


பின்குறிப்பு: சில கிராமங்கள் பட்டாசு வெடிப்பதால் தங்கள் ஊரிலுள்ள பறவைகள் சிரமப்படுகின்றன என்றும், மேலும் சில காரனகளுக்காகவும் - தீபாவளி காலங்களில் கூட பட்டாசு வெடிப்பதில்லை என்ற செய்திகளை படித்திருக்கிறேன்; அவர்களுக்கு என்னுடைய மதிப்பு கலந்த வணக்கங்கள்! பெருத்த கட்டுப்பாடு வேண்டுமானால், இதை சாத்தியப்படுத்தியிருக்கலாம்!! ஆனால் - அந்த ஊர்களில் இருக்கும் சிறார்களின் ஆசைகள்/மன-உளைச்சல்கள் பற்றி ஏதும் தகவல்கள் இல்லையே???                                          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக