புதன், டிசம்பர் 24, 2014

உங்களை ரொம்ப மிஸ் பண்ட்றேன்ப்பா...




       என்மகளுக்கு நேற்று (திசம்பர் 23) முதல் அரையாண்டு விடுமுறை. வழக்கம்போல், நேற்று மாலை ஆவலுடன் அலைபேசியில் அலவலாவிக்கொண்டு இருந்தபோது அவள் "நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ட்றேன்ப்பா!" என்றாள். எனக்கு மிகப்பெரிய ஆனந்த-அதிர்ச்சி. 5-வயது மகளா இவள்? என்ற கேள்வி (மீண்டும்) எழுந்தது. இந்த தலைமுறை குழந்தைகள் இம்மாதிரியான முதிர்ச்சியான கேள்விகளால்/பார்வைகளால் நம்மை திகைக்க வைப்பதை பலரும் அறிந்ததே! நானும், அம்மாதிரியான பதிவுகள் பலவும் இட்டிருக்கிறேன். இத்தனை நாள் அவள் பள்ளி/படிப்பு என்ற தன் கடமையை சரிவர செய்து வந்தாள்; என்னைப்பற்றிய நினைப்பு அதிகம் இருப்பதாய் கூட அவள் காட்டியதில்லை! ஏன்... பல நேரங்களில் அலைபேசியில் உரையாடக் கூட அவள் மறுத்ததுண்டு. ஆனால்... நேற்று?! பின்னர் தான் அவளின் நியாயம் புரிந்தது. நான் என் கடமையை சரியாய்  செய்திருக்கிறேன். இப்போது, நான் அவளுடன் இருப்பது என் கடமையல்லவா?!

      ஒருவேளை "டே! அப்பா!!" உன் கடமையை தவறி விட்டாயே! என்பதைத்தான் அப்படி நாகரீகமாய் சுட்டிக்காட்டி இருப்பாளோ?! என்று யோசித்தேன். ஆம்... நான் நேற்றைய முன்தினமே அவளை சென்று சேர்ந்திருக்க வேண்டும்; இனியொரு முறை இத்தவறை செய்யக்கூடாது என்ற உறுதி கொண்டேன். மன்னித்து விடு... மகளே! இனியொரு முறை, இத்தவறு நிகழாது; நானும் என் கடமையை சரிவர செய்வேன். "ரொம்ப மிஸ் பண்ட்றேன்ப்பா!" என்ற அந்த வார்த்தைகள் என்னுள் மீண்டும், மீண்டும் ஒலிக்கின்றன! ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு புரிதலை விதைக்கிறது. கண்டிப்பாக... அவை அவளின் அடிமனதில் இருந்து வந்தவை! இன்று காலை பேசும்போது கூட மீண்டும், மீண்டும் "இன்னைக்கே வாங்கப்பா!" என்று கெஞ்சிக் கொண்டு இருந்தாள்; என்னால், மீண்டும், மீண்டும் அவளுக்கு ஏமாற்றும் தரும் அந்த பதிலைக் கூற தயங்கியபோது, நல்லவேளையாய் அலைபேசியை துண்டித்துவிட்டது; நானும் அப்படியே விட்டுவிட்டேன்.

நானும் "உன்னை ரொம்ப மிஸ் பண்ட்றேன், மகளே!"   

வெள்ளி, டிசம்பர் 12, 2014

லிங்கா - சிங்கமும்; சிங்கிள்-உம்...


{லிங்கா படம் பார்க்கும் முன்னேயே; விமர்சனம் கேட்டே, என்னுள் எழுந்த பஞ்ச்!!!}

சிங்கிளா வர்றது எல்லாம் சிங்கமும் இல்லை!
சிங்கம் சிங்கிளாத்தான் வர்றனம்னு அவசியமும் இல்லை!!

ஏன்னா... 

"லிங்கா"வுல சிங்கம் "டபுளா(வும்)" வந்திருக்கு!!!


திங்கள், டிசம்பர் 08, 2014

நானும்; என் கைக்கடிகாரமும்...



      திசம்பர் 2-ஆம் தேதி முதன்முதலாய் நானே, எனக்கென ஒரு கைக்கடிகாரத்தை வாங்கினேன். அதுதான் புகைப்படத்தில் உள்ளது; நீண்ட நாட்களாய் திட்டமாய் இருந்தது அன்று தான் செயலாய் ஆனது. மிகவும் மகிழ்ச்சி தந்த செயல்களில் ஒன்று. இதுவரை, என் உறவுகளும்; நட்புகளும் தான் எனக்கான கைக்கடிகாரத்தை வாங்கி கொடுத்தனர். எனக்கும்; என் கைக்கடிகாரத்துக்கும் நிறைய உணர்வுகளும்/தொடர்புகளும் உள்ளன. கண்டிப்பாக, இம்மாதிரியான எண்ணங்கள் உங்களுக்குள்ளும் இருக்கும்; எனவே, என் கைக்கடிகாரத்தின் மீதான என் பார்வையை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இத்தலையங்கம். இளவயதில் என்னுள் ஒரு அர்த்தமற்ற கர்வமும்/எண்ணமும் இருந்தது; அது கைக்கடிகாரம் அணியக்கூடாது என்பது. காரணம்; நான் நேரம் பார்த்து உழைக்கும் அளவுக்கு இன்னும் வளரவில்லை! அதனால் வேண்டாம் என்பதே என் அன்றைய புரிதல். ஆனால், இன்று கைக்கடிகாரத்தின் மேல் எனக்கிருக்கும் புரிதலும்/உறவும் வேறு விதமானது.

         1997-இல் முதன்முதலாய் என் சக-ஊழியரான நட்பொருவர் ஒரு கைக்கடிகாரத்தை பரிசளித்தார்.  அவரின் அன்பை நிராகரிக்க விரும்பாததால்; என்னுடைய கொள்கையை??!! விட்டு கொடுத்து அதை அணிந்தேன். அதன் பின்னர், என் முக்கிய உறவுகள் எனக்கு சில கடிகாரங்களை கொடுத்தனர். திடீரென 2008-இல் என் உறவுகள் ஒரே நேரத்தில் 4 கைக்கடிகாரங்களைப் பரிசளித்தனர். எவ்வளவு முயன்றும்; ஒன்றுக்கு மேற்பட்டு கொடுப்பதை தடுக்க முடியவில்லை. மீண்டும், அன்புக்காய் அவைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியாதாயிற்று. இந்த கைக்கடிகாரத்தை வாங்கும் முன் 5 ஆண்டுகளுக்கும் மேலாய் நான் அணிந்திருந்த கைக்கடிகாரம் என் "மிக முக்கிய" உறவு பரிசளித்தது. ஆம்! அது என்னவள் எனக்கு வாங்கி கொடுத்தது. அதை முடிந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டியே இத்தனை ஆண்டுகள் காத்திருந்து இதை வாங்கினேன். அந்த திட்டம் கிட்டத்திட்ட 4 ஆண்டுகள் கால திட்டம். இப்போது தான் அது நடந்தேறியது.

          எனக்கு என் கைக்கடிகாரமே ஒரு தனிப்பட்ட உறவு. ஆம்! நான் கைக்கடிகாரத்தை ஒரு உறவாய் பார்க்கிறேன். அதனால், ஒரே நேரத்தில் பல கைக்கடிகாரங்களை வைத்திருப்பது என் மனதுக்கு ஒவ்வாத ஒன்று! அது தேவையற்றதும் கூட, என்பது வேறு விசயம். ஆனால், எனக்கு அதில் விருப்பமே இல்லை. ஆனாலும், என் உறவுகளுக்காய் அதை செய்தேன். கண்டிப்பாக, எனக்காக இத்தனை கைக்கடிகாரங்கள் வாங்கிக் கொடுக்க இத்தனை உறவுகள் இருக்கின்றன! என்பது மகிழ்வான விசயம் தான். ஒரு கைக்கடிகாரம் கூட கிடைக்கப்பெறாதவர்கள் ஏராளம்! அதனால், ஒரு விதத்தில் பலவற்றை உபயோகித்த போது இருந்த; அந்த வலி ஒரு விதமான "இன்ப"வலி தான் என்பதை மறுக்கவில்லை! ஆனால், நான் போதுமான அளவிற்கு அந்த "இன்ப"வலியை அனுபவித்து விட்டேன். எனவே, இந்த நேரத்தில் எனக்கிருக்கும் ஒரேயொரு விருப்பம்; இன்னொரு முறை எனக்கு எவரும் ஒரு கைக்கடிகாரத்தை கொடுக்கக்கூடாது என்பதே!

     இந்த விருப்பத்திற்கு காரணம், நான் கைக்கடிகாரத்தை மேற்கூறிய வண்ணம் ஒரு உறவாய் பார்ப்பது தான். ஆம்! நம் உள்ளங்கை பிடித்து நடந்து; அன்பு காட்டும் உறவுகள் இருக்கின்றன! நம் தோல் தட்டி/அணைத்து அன்பு காட்டும் உறவுகள் இருக்கின்றன. கட்டியணைத்து அன்பு காட்டும் உறவுகளும் உள்ளன; இம்மாதிரி பலவகைகளில் அன்பு காட்டும் பல உறவுகள் உள்ளன. ஆனால், நம் மணிக்கட்டை தொட்டு/தழுவும் உறவுகள் இருப்பதாய் தெரியவில்லை. மருத்துவர் கூட ஒருவரின் உயிரை சோதிக்கும் போது அல்லது நோயை சோதிக்கும் போது; ஒருவரின் மணிக்கட்டை தொட்டு தான் உறுதி செய்கிறார். அப்படிப்பட்ட அந்த உன்னதமான மணிக்கட்டை ஒட்டி உறவாடும் எந்த உறவும் இல்லை என்பதே என் பார்வை. ஆனால், அதை நம் கைக்கடிகாரம் உன்னதமாய் செய்து வருகிறது! அதனால் தான், எனக்கு கைக்கடிகாரம் என்பதே ஒரு உறவு! என்பதாய் படும். அந்த உறவு ஒரு நேரத்திற்கு ஒன்றாய் தான் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

      அதை இழந்த பின் அல்லது வேண்டுமளவு உபயோகித்த பின்னர் வேண்டுமானால்; வேறொன்றை வாங்கலாம்! ஒரு நேரத்தில் ஒன்றாய் தான் இருக்கவேண்டும். அதை உறவாய் பார்ப்பதாலோ?! என்னவோ; நான் கைக்கடிகாரத்தை இறுக்கமாகத்தான் அணிவேன். பலரும் அப்படி அணியக்கூடாது! என்று அறிவுறுத்தியும், இன்றுவரை அதை மாற்றியதில்லை! என் உறவை இருக்க அணைப்பது போலவே, என் கைக்கடிகாரத்தையும் அணிய விரும்புகிறேன். அந்த தடம் எப்போதும், என் கையில் இருக்கும். முதன் முதலாய் கிடைத்த கைக்கடிகாரத்தில் விழுந்த கீறலால்; நான் கைக்கடிகாரத்தை என் உடலோடு ஒட்டி இருக்கும் வண்ணம் உட்புறமாய் தான் அணிவேன். அது, மணி பார்க்கவும் வசதியாய் இருக்கும். குளிக்கும் நேரம்/கணினியில் பணிபுரியும் நேரம் (கீரலை தவிர்க்க!)/கடின வேலை செய்யும் நேரம் - போன்ற நேரங்கள் தவிர; என் கைக்கடிகாரம் எப்போதும் என் மணிக்கட்டோடு இருக்கும். இன்னும் பல விசயங்கள் உள்ளன - கைக்கடிகாரம் பற்றி எழுத! எனவே, என்னளவில்...

கைக்கடிகாரம் என்பது; என் இன்னுமோர் உறவு!!!  

மகிழ்வுந்து; மகிழ்வு-தந்ததா???



        நான் முன்பொரு முறை கூறியிருந்த வண்ணம், அபுதாபி வந்ததும் ஒரு மகிழ்வுந்து வாங்கினேன். கண்டிப்பாக என்னுடைய வசதிக்காய் அல்ல! என்மகளும், என்னவளும் இங்கு வந்து இருப்பதாய் ஒரு திட்டம் இருந்தது; அதுதான் முதற்காரணம். இருப்பினும், விடுமுறையில் வரும்போது அவர்களை வசதியாய் அழைத்து செல்லவேண்டும் என்ற ஓர் எண்ணம். இவை தவிர; நான் இதை ஒரு சேமிப்பாய் பார்த்ததும் ஒரு காரணம். ஆம்! மாதந்தோறும் வங்கிக்கு சிறு தொகை தான் கட்டி வருகிறேன். இன்னும் சில மாதங்களில் அக்கடன் முழுதும் அடைந்து; வண்டி என்னுடையதாகும். பின்னர், என்ன விலைக்கு அது விற்கப்பட்டாலும் அது ஒரு சேமிப்பே! ஆனால், உண்மையில் மகிழ்வுந்து எனக்கு மகிழ்வு தந்ததா?! என்று யோசிக்க ஆரம்பித்தேன். என்னதான் நான் சௌகர்யமாய் சென்று வந்திடினும்; என்மகளும்/என்னவளும் இங்கு வரும்போது அவர்களை அதில் அழைத்து சென்று மகிழ்ந்தினும் - மகிழ்வுந்து எனக்கு பெரிய மகிழ்வு-தந்திருக்கிறதா என்பதில் ஐயம் இருக்கிறது!

       அதற்கு காரணம் - என்மகளும்/என்னவளும்; இந்தியாவில் வெய்யிலில் இருசக்கர வாகனத்தில் செல்வதே! என்மருதந்தை மகிழ்வுந்து வைத்திருப்பினும்; என்னவள் அதை உபயோகிப்பதில்லை. வேறொன்று வாங்கவும் ஒப்புக்கொள்ளவில்லை. இருசக்கர வாகனத்தில் செல்வதே; நடைமுறையில் எளிதென்பதால் மறுத்து விட்டாள். ஆனாலும், அவர்கள் வெய்யிலில் செல்வதை என்னால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. அதுபோலவே, இன்னமும் எங்கு சென்றாலும் பேருந்தில் பயணிக்கும் என் பெற்றோர்! அதிலும், விசேட நாட்களில் கூட்டத்தினூடே பயணிக்கும் கொடுமை. அதிக செலவு என்பதால்; வாடகை-மகிழ்வுந்திலும் பயணிப்பதில்லை. அவர்களுக்கு ஒரு மகிழ்வுந்து வாங்கிக் கொடுக்கும் வசதியும் வாய்க்கவில்லை; மேலும், எவர் அதை பராமரிப்பது என்ற கவலை. இந்த வெய்யில் தன்மையில்; எவரேனும், பேருந்து நிறுத்தத்தில் நிற்பதை/அல்லது இருசக்கர வாகனத்தில் செல்வதைப் பார்த்தால் - எனக்கு, இவர்கள் நால்வரின் நினைவுதான் வரும். என்  கலங்கும்; எனவே...

மனதளவில்; மகிழ்வுந்து எனக்கு மகிழ்வு தரவில்லை!!!

டையாப்பர்-உம் பேட்-உம்...



     குழந்தைகளுக்கான "டையாப்பர்"-ஐ எந்த தயக்கமும் இல்லாமல் வாங்கும், ஆண்; பெண்களுக்கான மாதவிடாய் காலத்து "பேட்"-ஐ வாங்க தயங்குவதேன்?!

      அடப்பாவிகளா... இரண்டுமே "உடற்கழிவை" சேகரிப்பதுதான்!   

களவாடிய பொழுதுகள்...



      களவாடிய பொழுதுகள் திரைப்படத்தில் "தேடித் தேடிப் பார்க்கிறேன்! அவன் ஓடி, ஓடி ஒளியிறான்!!" என்ற பாடலை இதுவரைக் கேட்காதவர்கள்; ஒருமுறை(யேனும்) கேளுங்கள்!! அதில் வரும் அனைத்து வரிகளும்  மிகப்பிரம்மாதம் எனினும்...

"ஒருவனுக்கு ஒருத்தியின்னா; அதுவும் இங்கே காவியம்!
அஞ்சு பேருக்கொருத்தியின்னா; அதுவும் இங்கே காவியம்!!"

என்ற வரி எனக்குள் ஆயிரமாயிரம் கேள்விகளை! புரிதல்களை!! தேடல்களை!!! உருவாக்கியது; இன்னமும் அதைப்பற்றி ஆழ்ந்து யோசித்து கொண்டிருக்கிறேன். கிராமிய மனம் மிதக்கும் இன்னிசை-குரல்! இயல்பான பேச்சு தமிழ்!! ஆழ்ந்த சொற்களும்; கருத்துகளும்!!! "வியப்பானவை" என்ற என் பாடல் தொகுப்பில் சமீபத்தில் இடம் பெற்ற பாடல். இதுவரை எத்தனை முறைகள் அப்பாடலை கேட்டிருக்கிறேன் என்று தெரியவில்லை! 

        தங்கர்பச்சான் எனும் கலைஞனின் எல்லாப் படங்களும் நம்மில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த தவறியதில்லை! இந்த படமும் அதற்கு விதிவிலக்காய் இருக்காது என்று திடமாய் நம்புகிறேன். வாய்ப்பு கிடைப்போர், இந்த படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டுகிறேன், நட்புகளே! இம்மாதிரியான கலைஞன் மென்மேலும் பல படைப்புகள் படைத்திட அது கண்டிப்பாய் உதவிடும்!!  

ஜெய்ஹிந்த் 2...



        ஜெய்ஹிந்த் 2 - அருமையான கதைக்களம்! அர்ஜூனின் சமுதாய அக்கறையை உணர்த்தும் இன்னுமொரு படம். இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே பாடல்களை கேட்டு வந்ததாலும்; கதையின் கரு நான் நிறைய-எழுதிய "கல்வி"யை மையப்படுத்தியது என்பதாலும், மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. முதல் 1 மணி நேரம் வரை; எதிர்பார்ப்புக்கு எந்த குறைவும் இல்லாமல் இருந்தது! நானும், இத்திரைப்படம் பற்றி என் பார்வையை பதியவேண்டும் என்று குறிப்பும் எடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால், திரைக்கதையை அதிரடியாய் துவக்க வேண்டிய இடத்தில் "அதீத மசாலா"நெடியை தூவ ஆரம்பித்துவிட்டார். அதன் பின்னர், சமூக அக்கறையுள்ள ஒரு படத்தைப் பார்க்கிறோம் என்ற உணர்வே வரவில்லை. அருமையான கதையை திரைக்கதையால் சிதைத்துவிட்டார் அர்ஜூன்.

       படம் பார்த்த பின்னர், அது பற்றிய என் பார்வையை எழுதினால் - படத்தின் வியாபாரத்திற்கு நன்றாக இருக்காது என்பதால் எழுதவில்லை!

செவ்வாய், டிசம்பர் 02, 2014

காவியத்தலைவன் (2014)



        காவியத்தலைவன்! - பெயருக்கு ஏற்றாற்போல் ஒரு காவியத்தை தலைமையேற்று நடத்தும் ஒருவனின் கதை. தமிழ் திரைப்பட சூழலில், பெரும்பான்மையில் இப்போது வந்துகொண்டிருக்கும் "காதல்"கருமங்களின் மத்தியில் "மிகவும்"மாறுபட்ட கதைக்களம் (புதிய களமல்ல! ஆனால், இப்போதைய சூழலில் மாறுபட்ட களம்!) கொண்ட ஒரு திரைப்படம். இந்த ஒன்று மட்டுமே போதும்! இந்த படத்தை பார்க்கும் எண்ணம் எழ; எனவே, இந்த படத்தை கண்டிப்பாய் பார்க்கலாம். ஆனால், பெரிய-எதிர்பார்ப்பு வேண்டாம்; ஏனெனில், பெரிய எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் தரக்கூடும்.
  • மேடை நாடகத்தை அடிப்படையாக கொண்ட படம்! என்னளவில், இந்த படத்தை ஆதரிப்பதற்கு காரணம்; நாடகம் எனும் கலை இப்போது எனக்கு கொடுத்திருக்கும் புரிதல். ஆம்! நாடகம் என்பது மனித இயல்புனூடே பயனிப்பது; அங்கே, மனிதனால் இயலாத காட்சிகள் எதுவும் இடம்பெற வாய்ப்பே இல்லை; சராசரி மனிதானால் இயலாத காட்சிகள் இருக்கலாம்! அதில் தவறேதும் இல்லை. மிகச்சிறந்த உதாரணம்: திரைப்படங்களில் நாயகன் "அசாத்திய ஸ்டைலில்" ஒருவரை உதைக்க, அந்த இன்னொருவர் 10/15 அடிகள் அப்படியே பறந்து அல்லது பூமியில் சரிந்து கொண்டே செல்வது!!
  • திரைப்படத்தில் கற்பனையையும் தாண்டிய அளவில் மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் நம்முள் இருக்கும் இயல்பு தன்மையை நம்மிலிருந்து அகற்றிவிட்டது! என்றே தோன்றியது. காதல், சண்டை, உறவுச்சிக்கல் - இப்படி எதை எடுத்துக்கொண்டாலும், திரைப்படங்கள் நம் இயல்பை மாற்றி விட்டது என்றே தோன்றியது. அதனால், நம் எதிர்பார்ப்பும் பன்மடங்கு பெருகி எல்லாவற்றிலும், பெருத்த சிக்கலை உருவாக்கிவிட்டது என்று தோன்றியது. 
  • திரைப்படங்கள் தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று சொல்ல வரவில்லை! ஆனால், திரைப்படங்கள் "உணர்ச்சியின்"அடிப்படையில் நம்மை பெரிதும் பாதிக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை!  "எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்..." என்ற வள்ளுவன்  வாக்கு போல்; நாம் தான் அவற்றில் இருக்கும் மெய்ப்பொருளை காணுதல் வேண்டும்.
  • இந்த படத்தை பார்த்ததும் என்னுள் ஒரு குற்ற-உணர்வு எழுந்தது. ஆம்! 1990-களின் ஆரம்பத்தில், எங்கள் ஊரில் திருவிழா/பண்டிகை காலங்களின் போது, ஆட்சி செய்து கொண்டிருந்த "தெருக்கூத்து" எனும் கலையை "வீடியோ"மூலம் திரைப்படங்களை பார்க்க வைத்த செயலில் எனக்கு (மற்றும் என் குடும்பத்தார்க்கு) முக்கிய பங்கு உண்டு. நான் செய்யவில்லை எனினும்; அது நடந்திருக்கக்கூடும் என்று சொல்லி நியாயப்படுத்த விரும்பவில்லை! உண்மையில், அப்படித்தான் அது நடந்திருக்கும். இருப்பினும், எனக்கு அந்த குற்ற உணர்வு இப்போது இருக்கிறது. எங்கள் கிராமத்தில் இருந்த கலைஞர்கள் எல்லோருமே இன்று சென்னை போன்ற இடங்களில் என்னென்ன வேலைகளோ செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். 
சரி... என்னுடைய புரிதல் தாண்டி; திரைப்படத்திற்கு வருவோம்!
  • இதுபோன்ற படங்களில் ப்ரித்விராஜ் முன்பே நடித்து நிரூபித்து இருக்கிறார் எனினும், சித்தார்த்திற்கு இந்த படம் கண்டிப்பாய் "ஒரு மையில்"கல்லாய் இருக்கும்; அவரும், தெலுங்கில் சரித்திரப் படங்களில் நடித்திருப்பினும், தமிழில் கண்டிப்பாய் இப்படம் அவருக்கு ஒரு மையில் கல் என்பதை மறுப்பதற்கில்லை.
  • நல்ல கதையை; நல்ல திரைக்கதையோடு கலந்து கொடுத்திருப்பது படத்திற்கு பெரிய பலம். சிறிதும், தொய்வில்லாமல் நகரும் கதை! இயல்பான வகையில் இருக்கும் கதாப்பாத்திரங்கள்.
  • நான் 2 மாதங்களுக்கு முன்பிருந்தே கேட்டுக்கொண்டிருப்பதால் மட்டுமல்ல!... உண்மையில், பாடல்கள் அனைத்தும் - முதல் முறை கேட்கும் போதே அனைவரையும் கவரும். நல்ல பாடல்கள்! திருப்புகழ் பாடல் கூட இருக்கிறது.
  • மேடை நாடகங்கள் விடுதலைப் போராட்ட காலத்தில்; தங்களின் எதிர்ப்பை காட்டி தங்களின் கருத்தை பரிமாறிக்கொள்ள நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் போராடி இருக்கிறார்கள் என்பதை காட்டும் இன்னொரு படம். விருப்பம் இருப்பின், நம் கற்பனை சிறகுகளையும் அதன்பால் பறக்கவிட்டு பார்க்கலாம்; நான் பார்த்தேன்!
  • இதற்கு மேலும் எழுதலாம்! ஆனால், அது கதையைப் பற்றி சொல்வதில் முடியக்கூடும். கதையைப் பற்றி என்னுடைய எந்த விமர்சனத்திலும் இருக்கப்போவதில்லை! அதற்கு, எனக்கு உரிமை இல்லை; குறைந்த பட்சம் திரைப்படம் வெளியான புதிதில். 
கீழ்க்கண்டவைகளில் சிறிது கவனம் செலுத்தி இருப்பின், இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.
  • படத்தில் முக்கிய பாத்திரத்தில் வரும் இரண்டு பெண்களும்; தமிழ் சூழலில் இருந்து வந்திருப்பின் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. தமிழ் நாட்டில் "அழகான பெண் நடிகைகளே இல்லையே?!" என்ற குமுறல் மீண்டும் ஒரு முறை வந்தது.
  • நடிகர்களின் உடையில், இன்னும் சிறிது கவனம் கொண்டிருக்கவேண்டும். கதை விடுதலைக்கு முன்பிருந்த காலக்கட்டத்தில் பயணிப்பதால்; இதில் கூடுதல் கவனம் இருந்திருக்கவேண்டும்.
  • உடை போலவே, பேச்சு-வழக்கையும் கவனமாய் கையாண்டிருக்கவேண்டும் என்று தோன்றியது. பெரிய மாற்றம் வேண்டும் என்று சொல்லவில்லை. எனக்கு தெரிந்தே 1990-களில் சென்னையில் பேசப்பட்ட வழக்கு இப்போதில்லை. அப்படியெனில், விடுதலைக்கு முன்பிருந்த காலக்கட்டத்தில் பேச்சு-வழக்கு வேறுபட்டு அல்லவா இருந்திருக்க வேண்டும்?!
  • நாசரின் முடிவு அப்படி இருப்பது சரியே! ஆனால், அதற்கான திரைக்கதையில் இன்னும் சிறிது மெனெக்கெட்டு இருக்கலாம் என்று தோன்றியது.
  • பிரித்விராஜுக்கு சித்தார்த் மேல் வரும் கோபத்தை/ஆற்றாமையை புரிந்து கொள்ள முடிந்தாலும்; அதை நியாப்படுத்தும் காட்சிகள் போதவில்லை; அவைகளில் நியாயமும் இல்லை. அதிலும், அந்த எல்லை வரை செல்வதை கண்டிப்பாய் ஒப்புக்கொள்ள (என்)மனம் மறுக்கிறது.
சிறப்பு: நம் கவனம் மேடை-நாடகங்கள் பக்கம் திரும்பவேண்டும் என்று இந்த திரைப்படம் உணர்த்தியதாய் எனக்கு தோன்றியது. அதைப்பற்றிய சில புரிதல்கள் எனக்கு கிடைத்தது; அதை, இப்படத்தின் சிறப்பாய் இங்கே குறிப்பிட விரும்பினேன்:
  • திரைப்படங்களில் வருவது போல், நாடகங்களில் "ஆக்க்ஷன்" என்ற போர்வையில் "கோமாளித்"தனங்கள் செய்யமுடியாது. விமர்சனம் உடனடியாய் கிடைக்கும். "கல்லடி"கிடைக்கும் என்ற பயம் கூட நாடகத்தை நடத்துபவர்களுக்கு இருக்கும். 
  • இயல்பான நாடகத்தை பார்க்கும்போது, மேற்கூறிய வண்ணம் அல்லாமல்; நாமும் நம் இயல்பு நிலைக்கு திரும்பும் வாய்ப்பு இருக்கிறது. வாழ்க்கையின் நிதர்சனம், நாடகங்கள்/தெருக்கூத்துகள் பார்ப்பதால் தான் புரியும் என்று தோன்றியது. அப்படி இருந்தவர்கள் தானே நாம் அனைவரும்?!
  • அருள்கூர்ந்து, இந்த படத்தை பார்த்த பின்; வாய்ப்பு கிடைப்பவர்கள் நாடகங்கள் (தெருக்கூத்துகள்) பார்க்கும் வழக்கத்தை மேற்கொள்ளுங்கள். முக்கியமாய், குழந்தைகளை அழைத்து செல்லுங்கள்! "நம்மால் சொல்லிக்கொடுக்க(முடியாத/தவறிய) வாழ்வியலின் யதார்த்தத்தை; நம் இளைய தலைமுறைக்கு அவை சொல்லிக் கொடுக்கும்" என்று திடமாய் நம்புகிறேன்.
  • கண்டிப்பாக, நம் இயல்புகள் நிறைய நாடகங்கள்/தெருக்கூத்துகள் பார்ப்பதன் மூலம் திரும்ப கிடைக்கும் என்று நம்புகிறேன். ஆனால், அவை சாத்தியப்படுமா??!!... சாத்தியப்படுத்த தேவையான முயற்சியையாவது செய்யலாமே???!!!