புதன், டிசம்பர் 24, 2014

உங்களை ரொம்ப மிஸ் பண்ட்றேன்ப்பா...




       என்மகளுக்கு நேற்று (திசம்பர் 23) முதல் அரையாண்டு விடுமுறை. வழக்கம்போல், நேற்று மாலை ஆவலுடன் அலைபேசியில் அலவலாவிக்கொண்டு இருந்தபோது அவள் "நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ட்றேன்ப்பா!" என்றாள். எனக்கு மிகப்பெரிய ஆனந்த-அதிர்ச்சி. 5-வயது மகளா இவள்? என்ற கேள்வி (மீண்டும்) எழுந்தது. இந்த தலைமுறை குழந்தைகள் இம்மாதிரியான முதிர்ச்சியான கேள்விகளால்/பார்வைகளால் நம்மை திகைக்க வைப்பதை பலரும் அறிந்ததே! நானும், அம்மாதிரியான பதிவுகள் பலவும் இட்டிருக்கிறேன். இத்தனை நாள் அவள் பள்ளி/படிப்பு என்ற தன் கடமையை சரிவர செய்து வந்தாள்; என்னைப்பற்றிய நினைப்பு அதிகம் இருப்பதாய் கூட அவள் காட்டியதில்லை! ஏன்... பல நேரங்களில் அலைபேசியில் உரையாடக் கூட அவள் மறுத்ததுண்டு. ஆனால்... நேற்று?! பின்னர் தான் அவளின் நியாயம் புரிந்தது. நான் என் கடமையை சரியாய்  செய்திருக்கிறேன். இப்போது, நான் அவளுடன் இருப்பது என் கடமையல்லவா?!

      ஒருவேளை "டே! அப்பா!!" உன் கடமையை தவறி விட்டாயே! என்பதைத்தான் அப்படி நாகரீகமாய் சுட்டிக்காட்டி இருப்பாளோ?! என்று யோசித்தேன். ஆம்... நான் நேற்றைய முன்தினமே அவளை சென்று சேர்ந்திருக்க வேண்டும்; இனியொரு முறை இத்தவறை செய்யக்கூடாது என்ற உறுதி கொண்டேன். மன்னித்து விடு... மகளே! இனியொரு முறை, இத்தவறு நிகழாது; நானும் என் கடமையை சரிவர செய்வேன். "ரொம்ப மிஸ் பண்ட்றேன்ப்பா!" என்ற அந்த வார்த்தைகள் என்னுள் மீண்டும், மீண்டும் ஒலிக்கின்றன! ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு புரிதலை விதைக்கிறது. கண்டிப்பாக... அவை அவளின் அடிமனதில் இருந்து வந்தவை! இன்று காலை பேசும்போது கூட மீண்டும், மீண்டும் "இன்னைக்கே வாங்கப்பா!" என்று கெஞ்சிக் கொண்டு இருந்தாள்; என்னால், மீண்டும், மீண்டும் அவளுக்கு ஏமாற்றும் தரும் அந்த பதிலைக் கூற தயங்கியபோது, நல்லவேளையாய் அலைபேசியை துண்டித்துவிட்டது; நானும் அப்படியே விட்டுவிட்டேன்.

நானும் "உன்னை ரொம்ப மிஸ் பண்ட்றேன், மகளே!"   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக