திங்கள், டிசம்பர் 08, 2014

நானும்; என் கைக்கடிகாரமும்...



      திசம்பர் 2-ஆம் தேதி முதன்முதலாய் நானே, எனக்கென ஒரு கைக்கடிகாரத்தை வாங்கினேன். அதுதான் புகைப்படத்தில் உள்ளது; நீண்ட நாட்களாய் திட்டமாய் இருந்தது அன்று தான் செயலாய் ஆனது. மிகவும் மகிழ்ச்சி தந்த செயல்களில் ஒன்று. இதுவரை, என் உறவுகளும்; நட்புகளும் தான் எனக்கான கைக்கடிகாரத்தை வாங்கி கொடுத்தனர். எனக்கும்; என் கைக்கடிகாரத்துக்கும் நிறைய உணர்வுகளும்/தொடர்புகளும் உள்ளன. கண்டிப்பாக, இம்மாதிரியான எண்ணங்கள் உங்களுக்குள்ளும் இருக்கும்; எனவே, என் கைக்கடிகாரத்தின் மீதான என் பார்வையை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இத்தலையங்கம். இளவயதில் என்னுள் ஒரு அர்த்தமற்ற கர்வமும்/எண்ணமும் இருந்தது; அது கைக்கடிகாரம் அணியக்கூடாது என்பது. காரணம்; நான் நேரம் பார்த்து உழைக்கும் அளவுக்கு இன்னும் வளரவில்லை! அதனால் வேண்டாம் என்பதே என் அன்றைய புரிதல். ஆனால், இன்று கைக்கடிகாரத்தின் மேல் எனக்கிருக்கும் புரிதலும்/உறவும் வேறு விதமானது.

         1997-இல் முதன்முதலாய் என் சக-ஊழியரான நட்பொருவர் ஒரு கைக்கடிகாரத்தை பரிசளித்தார்.  அவரின் அன்பை நிராகரிக்க விரும்பாததால்; என்னுடைய கொள்கையை??!! விட்டு கொடுத்து அதை அணிந்தேன். அதன் பின்னர், என் முக்கிய உறவுகள் எனக்கு சில கடிகாரங்களை கொடுத்தனர். திடீரென 2008-இல் என் உறவுகள் ஒரே நேரத்தில் 4 கைக்கடிகாரங்களைப் பரிசளித்தனர். எவ்வளவு முயன்றும்; ஒன்றுக்கு மேற்பட்டு கொடுப்பதை தடுக்க முடியவில்லை. மீண்டும், அன்புக்காய் அவைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியாதாயிற்று. இந்த கைக்கடிகாரத்தை வாங்கும் முன் 5 ஆண்டுகளுக்கும் மேலாய் நான் அணிந்திருந்த கைக்கடிகாரம் என் "மிக முக்கிய" உறவு பரிசளித்தது. ஆம்! அது என்னவள் எனக்கு வாங்கி கொடுத்தது. அதை முடிந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டியே இத்தனை ஆண்டுகள் காத்திருந்து இதை வாங்கினேன். அந்த திட்டம் கிட்டத்திட்ட 4 ஆண்டுகள் கால திட்டம். இப்போது தான் அது நடந்தேறியது.

          எனக்கு என் கைக்கடிகாரமே ஒரு தனிப்பட்ட உறவு. ஆம்! நான் கைக்கடிகாரத்தை ஒரு உறவாய் பார்க்கிறேன். அதனால், ஒரே நேரத்தில் பல கைக்கடிகாரங்களை வைத்திருப்பது என் மனதுக்கு ஒவ்வாத ஒன்று! அது தேவையற்றதும் கூட, என்பது வேறு விசயம். ஆனால், எனக்கு அதில் விருப்பமே இல்லை. ஆனாலும், என் உறவுகளுக்காய் அதை செய்தேன். கண்டிப்பாக, எனக்காக இத்தனை கைக்கடிகாரங்கள் வாங்கிக் கொடுக்க இத்தனை உறவுகள் இருக்கின்றன! என்பது மகிழ்வான விசயம் தான். ஒரு கைக்கடிகாரம் கூட கிடைக்கப்பெறாதவர்கள் ஏராளம்! அதனால், ஒரு விதத்தில் பலவற்றை உபயோகித்த போது இருந்த; அந்த வலி ஒரு விதமான "இன்ப"வலி தான் என்பதை மறுக்கவில்லை! ஆனால், நான் போதுமான அளவிற்கு அந்த "இன்ப"வலியை அனுபவித்து விட்டேன். எனவே, இந்த நேரத்தில் எனக்கிருக்கும் ஒரேயொரு விருப்பம்; இன்னொரு முறை எனக்கு எவரும் ஒரு கைக்கடிகாரத்தை கொடுக்கக்கூடாது என்பதே!

     இந்த விருப்பத்திற்கு காரணம், நான் கைக்கடிகாரத்தை மேற்கூறிய வண்ணம் ஒரு உறவாய் பார்ப்பது தான். ஆம்! நம் உள்ளங்கை பிடித்து நடந்து; அன்பு காட்டும் உறவுகள் இருக்கின்றன! நம் தோல் தட்டி/அணைத்து அன்பு காட்டும் உறவுகள் இருக்கின்றன. கட்டியணைத்து அன்பு காட்டும் உறவுகளும் உள்ளன; இம்மாதிரி பலவகைகளில் அன்பு காட்டும் பல உறவுகள் உள்ளன. ஆனால், நம் மணிக்கட்டை தொட்டு/தழுவும் உறவுகள் இருப்பதாய் தெரியவில்லை. மருத்துவர் கூட ஒருவரின் உயிரை சோதிக்கும் போது அல்லது நோயை சோதிக்கும் போது; ஒருவரின் மணிக்கட்டை தொட்டு தான் உறுதி செய்கிறார். அப்படிப்பட்ட அந்த உன்னதமான மணிக்கட்டை ஒட்டி உறவாடும் எந்த உறவும் இல்லை என்பதே என் பார்வை. ஆனால், அதை நம் கைக்கடிகாரம் உன்னதமாய் செய்து வருகிறது! அதனால் தான், எனக்கு கைக்கடிகாரம் என்பதே ஒரு உறவு! என்பதாய் படும். அந்த உறவு ஒரு நேரத்திற்கு ஒன்றாய் தான் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

      அதை இழந்த பின் அல்லது வேண்டுமளவு உபயோகித்த பின்னர் வேண்டுமானால்; வேறொன்றை வாங்கலாம்! ஒரு நேரத்தில் ஒன்றாய் தான் இருக்கவேண்டும். அதை உறவாய் பார்ப்பதாலோ?! என்னவோ; நான் கைக்கடிகாரத்தை இறுக்கமாகத்தான் அணிவேன். பலரும் அப்படி அணியக்கூடாது! என்று அறிவுறுத்தியும், இன்றுவரை அதை மாற்றியதில்லை! என் உறவை இருக்க அணைப்பது போலவே, என் கைக்கடிகாரத்தையும் அணிய விரும்புகிறேன். அந்த தடம் எப்போதும், என் கையில் இருக்கும். முதன் முதலாய் கிடைத்த கைக்கடிகாரத்தில் விழுந்த கீறலால்; நான் கைக்கடிகாரத்தை என் உடலோடு ஒட்டி இருக்கும் வண்ணம் உட்புறமாய் தான் அணிவேன். அது, மணி பார்க்கவும் வசதியாய் இருக்கும். குளிக்கும் நேரம்/கணினியில் பணிபுரியும் நேரம் (கீரலை தவிர்க்க!)/கடின வேலை செய்யும் நேரம் - போன்ற நேரங்கள் தவிர; என் கைக்கடிகாரம் எப்போதும் என் மணிக்கட்டோடு இருக்கும். இன்னும் பல விசயங்கள் உள்ளன - கைக்கடிகாரம் பற்றி எழுத! எனவே, என்னளவில்...

கைக்கடிகாரம் என்பது; என் இன்னுமோர் உறவு!!!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக