செவ்வாய், டிசம்பர் 02, 2014

காவியத்தலைவன் (2014)        காவியத்தலைவன்! - பெயருக்கு ஏற்றாற்போல் ஒரு காவியத்தை தலைமையேற்று நடத்தும் ஒருவனின் கதை. தமிழ் திரைப்பட சூழலில், பெரும்பான்மையில் இப்போது வந்துகொண்டிருக்கும் "காதல்"கருமங்களின் மத்தியில் "மிகவும்"மாறுபட்ட கதைக்களம் (புதிய களமல்ல! ஆனால், இப்போதைய சூழலில் மாறுபட்ட களம்!) கொண்ட ஒரு திரைப்படம். இந்த ஒன்று மட்டுமே போதும்! இந்த படத்தை பார்க்கும் எண்ணம் எழ; எனவே, இந்த படத்தை கண்டிப்பாய் பார்க்கலாம். ஆனால், பெரிய-எதிர்பார்ப்பு வேண்டாம்; ஏனெனில், பெரிய எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் தரக்கூடும்.
 • மேடை நாடகத்தை அடிப்படையாக கொண்ட படம்! என்னளவில், இந்த படத்தை ஆதரிப்பதற்கு காரணம்; நாடகம் எனும் கலை இப்போது எனக்கு கொடுத்திருக்கும் புரிதல். ஆம்! நாடகம் என்பது மனித இயல்புனூடே பயனிப்பது; அங்கே, மனிதனால் இயலாத காட்சிகள் எதுவும் இடம்பெற வாய்ப்பே இல்லை; சராசரி மனிதானால் இயலாத காட்சிகள் இருக்கலாம்! அதில் தவறேதும் இல்லை. மிகச்சிறந்த உதாரணம்: திரைப்படங்களில் நாயகன் "அசாத்திய ஸ்டைலில்" ஒருவரை உதைக்க, அந்த இன்னொருவர் 10/15 அடிகள் அப்படியே பறந்து அல்லது பூமியில் சரிந்து கொண்டே செல்வது!!
 • திரைப்படத்தில் கற்பனையையும் தாண்டிய அளவில் மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் நம்முள் இருக்கும் இயல்பு தன்மையை நம்மிலிருந்து அகற்றிவிட்டது! என்றே தோன்றியது. காதல், சண்டை, உறவுச்சிக்கல் - இப்படி எதை எடுத்துக்கொண்டாலும், திரைப்படங்கள் நம் இயல்பை மாற்றி விட்டது என்றே தோன்றியது. அதனால், நம் எதிர்பார்ப்பும் பன்மடங்கு பெருகி எல்லாவற்றிலும், பெருத்த சிக்கலை உருவாக்கிவிட்டது என்று தோன்றியது. 
 • திரைப்படங்கள் தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்று சொல்ல வரவில்லை! ஆனால், திரைப்படங்கள் "உணர்ச்சியின்"அடிப்படையில் நம்மை பெரிதும் பாதிக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை!  "எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்..." என்ற வள்ளுவன்  வாக்கு போல்; நாம் தான் அவற்றில் இருக்கும் மெய்ப்பொருளை காணுதல் வேண்டும்.
 • இந்த படத்தை பார்த்ததும் என்னுள் ஒரு குற்ற-உணர்வு எழுந்தது. ஆம்! 1990-களின் ஆரம்பத்தில், எங்கள் ஊரில் திருவிழா/பண்டிகை காலங்களின் போது, ஆட்சி செய்து கொண்டிருந்த "தெருக்கூத்து" எனும் கலையை "வீடியோ"மூலம் திரைப்படங்களை பார்க்க வைத்த செயலில் எனக்கு (மற்றும் என் குடும்பத்தார்க்கு) முக்கிய பங்கு உண்டு. நான் செய்யவில்லை எனினும்; அது நடந்திருக்கக்கூடும் என்று சொல்லி நியாயப்படுத்த விரும்பவில்லை! உண்மையில், அப்படித்தான் அது நடந்திருக்கும். இருப்பினும், எனக்கு அந்த குற்ற உணர்வு இப்போது இருக்கிறது. எங்கள் கிராமத்தில் இருந்த கலைஞர்கள் எல்லோருமே இன்று சென்னை போன்ற இடங்களில் என்னென்ன வேலைகளோ செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். 
சரி... என்னுடைய புரிதல் தாண்டி; திரைப்படத்திற்கு வருவோம்!
 • இதுபோன்ற படங்களில் ப்ரித்விராஜ் முன்பே நடித்து நிரூபித்து இருக்கிறார் எனினும், சித்தார்த்திற்கு இந்த படம் கண்டிப்பாய் "ஒரு மையில்"கல்லாய் இருக்கும்; அவரும், தெலுங்கில் சரித்திரப் படங்களில் நடித்திருப்பினும், தமிழில் கண்டிப்பாய் இப்படம் அவருக்கு ஒரு மையில் கல் என்பதை மறுப்பதற்கில்லை.
 • நல்ல கதையை; நல்ல திரைக்கதையோடு கலந்து கொடுத்திருப்பது படத்திற்கு பெரிய பலம். சிறிதும், தொய்வில்லாமல் நகரும் கதை! இயல்பான வகையில் இருக்கும் கதாப்பாத்திரங்கள்.
 • நான் 2 மாதங்களுக்கு முன்பிருந்தே கேட்டுக்கொண்டிருப்பதால் மட்டுமல்ல!... உண்மையில், பாடல்கள் அனைத்தும் - முதல் முறை கேட்கும் போதே அனைவரையும் கவரும். நல்ல பாடல்கள்! திருப்புகழ் பாடல் கூட இருக்கிறது.
 • மேடை நாடகங்கள் விடுதலைப் போராட்ட காலத்தில்; தங்களின் எதிர்ப்பை காட்டி தங்களின் கருத்தை பரிமாறிக்கொள்ள நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் போராடி இருக்கிறார்கள் என்பதை காட்டும் இன்னொரு படம். விருப்பம் இருப்பின், நம் கற்பனை சிறகுகளையும் அதன்பால் பறக்கவிட்டு பார்க்கலாம்; நான் பார்த்தேன்!
 • இதற்கு மேலும் எழுதலாம்! ஆனால், அது கதையைப் பற்றி சொல்வதில் முடியக்கூடும். கதையைப் பற்றி என்னுடைய எந்த விமர்சனத்திலும் இருக்கப்போவதில்லை! அதற்கு, எனக்கு உரிமை இல்லை; குறைந்த பட்சம் திரைப்படம் வெளியான புதிதில். 
கீழ்க்கண்டவைகளில் சிறிது கவனம் செலுத்தி இருப்பின், இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.
 • படத்தில் முக்கிய பாத்திரத்தில் வரும் இரண்டு பெண்களும்; தமிழ் சூழலில் இருந்து வந்திருப்பின் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. தமிழ் நாட்டில் "அழகான பெண் நடிகைகளே இல்லையே?!" என்ற குமுறல் மீண்டும் ஒரு முறை வந்தது.
 • நடிகர்களின் உடையில், இன்னும் சிறிது கவனம் கொண்டிருக்கவேண்டும். கதை விடுதலைக்கு முன்பிருந்த காலக்கட்டத்தில் பயணிப்பதால்; இதில் கூடுதல் கவனம் இருந்திருக்கவேண்டும்.
 • உடை போலவே, பேச்சு-வழக்கையும் கவனமாய் கையாண்டிருக்கவேண்டும் என்று தோன்றியது. பெரிய மாற்றம் வேண்டும் என்று சொல்லவில்லை. எனக்கு தெரிந்தே 1990-களில் சென்னையில் பேசப்பட்ட வழக்கு இப்போதில்லை. அப்படியெனில், விடுதலைக்கு முன்பிருந்த காலக்கட்டத்தில் பேச்சு-வழக்கு வேறுபட்டு அல்லவா இருந்திருக்க வேண்டும்?!
 • நாசரின் முடிவு அப்படி இருப்பது சரியே! ஆனால், அதற்கான திரைக்கதையில் இன்னும் சிறிது மெனெக்கெட்டு இருக்கலாம் என்று தோன்றியது.
 • பிரித்விராஜுக்கு சித்தார்த் மேல் வரும் கோபத்தை/ஆற்றாமையை புரிந்து கொள்ள முடிந்தாலும்; அதை நியாப்படுத்தும் காட்சிகள் போதவில்லை; அவைகளில் நியாயமும் இல்லை. அதிலும், அந்த எல்லை வரை செல்வதை கண்டிப்பாய் ஒப்புக்கொள்ள (என்)மனம் மறுக்கிறது.
சிறப்பு: நம் கவனம் மேடை-நாடகங்கள் பக்கம் திரும்பவேண்டும் என்று இந்த திரைப்படம் உணர்த்தியதாய் எனக்கு தோன்றியது. அதைப்பற்றிய சில புரிதல்கள் எனக்கு கிடைத்தது; அதை, இப்படத்தின் சிறப்பாய் இங்கே குறிப்பிட விரும்பினேன்:
 • திரைப்படங்களில் வருவது போல், நாடகங்களில் "ஆக்க்ஷன்" என்ற போர்வையில் "கோமாளித்"தனங்கள் செய்யமுடியாது. விமர்சனம் உடனடியாய் கிடைக்கும். "கல்லடி"கிடைக்கும் என்ற பயம் கூட நாடகத்தை நடத்துபவர்களுக்கு இருக்கும். 
 • இயல்பான நாடகத்தை பார்க்கும்போது, மேற்கூறிய வண்ணம் அல்லாமல்; நாமும் நம் இயல்பு நிலைக்கு திரும்பும் வாய்ப்பு இருக்கிறது. வாழ்க்கையின் நிதர்சனம், நாடகங்கள்/தெருக்கூத்துகள் பார்ப்பதால் தான் புரியும் என்று தோன்றியது. அப்படி இருந்தவர்கள் தானே நாம் அனைவரும்?!
 • அருள்கூர்ந்து, இந்த படத்தை பார்த்த பின்; வாய்ப்பு கிடைப்பவர்கள் நாடகங்கள் (தெருக்கூத்துகள்) பார்க்கும் வழக்கத்தை மேற்கொள்ளுங்கள். முக்கியமாய், குழந்தைகளை அழைத்து செல்லுங்கள்! "நம்மால் சொல்லிக்கொடுக்க(முடியாத/தவறிய) வாழ்வியலின் யதார்த்தத்தை; நம் இளைய தலைமுறைக்கு அவை சொல்லிக் கொடுக்கும்" என்று திடமாய் நம்புகிறேன்.
 • கண்டிப்பாக, நம் இயல்புகள் நிறைய நாடகங்கள்/தெருக்கூத்துகள் பார்ப்பதன் மூலம் திரும்ப கிடைக்கும் என்று நம்புகிறேன். ஆனால், அவை சாத்தியப்படுமா??!!... சாத்தியப்படுத்த தேவையான முயற்சியையாவது செய்யலாமே???!!!   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக