ஞாயிறு, ஜூன் 10, 2012

தம்பதியர்க்கிடையே என்ன பிரச்சனை???


        இந்த வாரம் எடுத்திருப்பது சிக்கலான விவாதம்; இதை விவரிக்க சரியான உணர்தல் வேண்டும். சிறிது எல்லை தாண்டினாலும், கருத்து வேறு விதமாய் மாறிவிடும் என்று எனக்கு நன்றாய் தெரியும். எனினும், இதை என்னால் சரியாய் செய்ய முடியும் என்ற நம்பிக்கையின் பால் - இந்த தலையங்கத்தை எழுதி உள்ளேன். உண்மையில், தம்பதியர்க்கு இடையே எழும் எந்த பிரச்சனையிலும் நியாயம் இருப்பதில்லை; இன்னும், தெளிவாய் சொல்ல வேண்டுமெனில் அவை பிரச்சனையே இல்லை; சிறிது நாட்கள் கழித்து நாமே நகைக்கும் நிகழ்வுகளாகத்தான் இருக்கும். இதை படிக்கும் தம்பதியர் ஓர் கணம் சில மாதங்களுக்கு அல்லது சில வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்த ஓர் பிரச்சனையை எண்ணிப் பாருங்கள். இப்போது, அந்த பிரச்சனைக்கான அடிப்படை காரணத்தை தேடுங்கள்; வெகு நிச்சயமாய், எந்த நியாயமான காரணமும் உங்களுக்கு கிடைக்கப்போவதில்லை. காரணம், இருந்தால் தானே கிடைப்பதற்கு? அதே சமயம், ஆழ்ந்த தெளிவான காரணம் சார்ந்த பிரச்சனைகள் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை; அவை கண்டிப்பாய், விழுக்காட்டில் குறைவு. அதைப் பற்றி நான் இங்கே விவாதிக்கப்போவதில்லை; ஏனெனில், அவர்கள் சேர்ந்து வாழ்வதை விட பிரிவது நல்லது; இதை என்னுடைய சமீபத்திய புதுக்கவிதை ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். அவர்கள் பிரிந்து இருப்பது, அவர்களுக்கு மட்டுமல்ல; அவர்களின் குழந்தைகள் உட்பட அவர்கள் சார்ந்த அனைவருக்கும் நல்லது.

       மேலும், இணக்கமில்லா தம்பதியர்க்குள் உண்டான பிரச்சனையை வேறெவரும் தீர்க்க முடியாது; அவர்களே தான் தீர்த்துக்கொள்ள வேண்டும். கண்டிப்பாய், எந்த நடுவராலும் (அவர்கள் பெற்றோர்கள் உட்பட) சமாதானத்தை/ புரிதலை உருவாக்க முடியாது; சமாதனம் நிகழ அவர்களுக்குள் உண்மையான, விருப்பு வெறுப்பு கலவாத குற்றச்சாட்டுகள் நிகழ வேண்டும். அது நிகழ, அவர்கள் ஒருவரை ஒருவர் பகையாய் எண்ணாதிருத்தல் வேண்டும்; அப்படி எண்ணிட அவர்கள் ஒருவரை ஒருவர் நேசித்திடல் வேண்டும். நேசம் இல்லை என்பதால் தானே, அவர்கள் வேறொருவரை நாடுகின்றனர்?  எனவே, நான் இங்கே எடுத்துக்கொண்டிருப்பது பெரும்பான்மையான தம்பதிகளை. ஓர் இல்லறத்தில், மனைவி செய்த தவறால் எழும் பிரச்சனைகள் - கிட்டத்திட்ட  அனைத்தையும் - அந்த மனைவி நினைத்தால், எந்த கணம் வேண்டுமானால் சரிசெய்துவிடலாம் என்பதே நிதர்சனம். ஓர் கணவன், எத்தனை கோபமாய் இருப்பினும் "என்னங்க, என்னங்க" என்று அழைக்கும் போதே, அவன் பாதி விசயத்தை/ கோபத்தை மறந்து விடுவான். அதன் பின், மனைவி செய்யும் சிறு சிறு குறும்புகள் அல்லது வார்த்தை விளையாட்டுகள், அவனை படிப்படியாய் மாற்றி அதிக பட்சம் ஓர் பத்து நிமிடத்துக்குள் அவனை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து விடும். "நானெல்லாம் அப்படி கிடையாது என்று மார் தட்டுபவர்கள் கூட", ஏதும் செய்யவில்லை எனினும் - குறிப்பிட்ட காலத்திற்கு பின் - தானாய் இயல்பு-நிலைக்கு வந்துவிடுவர்; குடும்பம் வேண்டுமெனில், வேறு வழியேதுமில்லை.  

       ஆனால், இது மனைவி நினைத்தால் தான் சாத்தியம்; இல்லை எனில், கோபமாய் இருந்து கொண்டு - கணவன் தனியாய் சங்கடப்பட்டுக் கொண்டிருக்க வேண்டியது தான். இல்லையேல், மனைவியின் தவறு தெரிந்தும், அவன் எந்த உணர்வும் காட்டாது - கோபப்படாமல் இருக்க வேண்டும். ஆண் எத்தனை "கோபக்காரனாய்" சித்தரிக்கப்படினும், அவன் தொடர்ச்சியாய் தன் தாயை, தமக்கையை, தங்கையை பார்த்தே வளர்கிறான்; அவனுள், பெண்ணின் மீதான ஓர் பாசம்/ பரிசம் தொடந்து இருந்து கொண்டே இருக்கும். மனைவியிடத்தில் அவன் இதை காண்பிப்பதில்லை எனினும், அந்த உணர்வு மனைவி சார்ந்தும் உள்ளதை மறுக்கமுடியாது. அதனால் தான் அவனை எளிதில் ஒரு மனைவியால் சாந்தப்படுத்தப்படுகிறது. இதை ஆண்களின் - பலகீனம் என்று பலரும் சொல்கிறார்கள்; ஆனால், நான் இதை ஆண்களின் "பலமாய்" உணர்கிறேன்; அதனால் தான் பல பிரச்சனைகள் எளிதில் தீர்க்கப்படுகின்றன. மாறாய், பிரச்சனையின் காரணம் கணவன் என்று வைத்துக்கொள்ளுங்கள்; அவன் எத்தனை முயன்றும், மனைவி என்பவள் அத்தனை எளிதில் அதை மறப்பதில்லை. மனைவியை எளிதில் சாந்தப்படுத்தும் அளவிற்கு கணவனுக்கு திறமை இல்லை அல்லது அவனுக்கு அந்த சாதுர்யம் போதவில்லை என்றும் கொள்ளலாம்; இதற்கு வயது என்பது ஓர் தடையே அல்ல ; எந்த தம்பதியர்க்கும் இது பொருந்தும். இங்கே எவரின் கோபம் உயர்ந்தது என்பது முக்கியமல்ல; சமாதானமும் சந்தோசமும் தான் முக்கியம்.

         ஆதலால் தான் "ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே" என்றார்கள். பெண்ணிற்கு தான் இந்த சாதுர்யம் இருக்கிறது என்பது உண்மை. எனக்கு தெரிந்த அளவில், இன்றைய காலகட்டத்தில், ஓர் கணவனால் தம்பதியர்க்கு இடையே உருவாகும் பல பிரச்சனைகளுள் முக்கியமானது, அவன் குடும்பம் சார்ந்த உறுப்பினர்களுக்கு பணம் செலவிடுவதால் விளைகிறது என்று தோன்றுகிறது. இந்த விசயத்தை இரண்டு சாயல்களில் பார்க்கலாம்; 1. ஓர் பிரிவனர், பணம் முழுவதையும் அவன் குடும்பத்தார்க்கு செலவழித்து விட்டு தன் குடும்பம் வருத்தப்படும் படி நடக்கும் கணவன்கள் (குறைந்த விழுக்காட்டில்);  2. இரண்டாம் பிரிவினர், ஓரளவு பணத்தை அவன் குடும்பத்தார்க்கு செலவழித்து விட்டு, தன்குடும்பத்தை மகிழ்ச்சியோடு வைத்திருக்கும்/ வைத்திருக்க முயலும் கணவன்கள் (அதிக விழுக்காட்டில்). முதல் பிரிவில் வரும் கணவன்கள் செய்வது கண்டிப்பாய் தவறு!!! இரண்டாம் பிரிவில் வரும் கணவன்களை, நிச்சயமாய் மனைவி என்பவள் புரிந்து கொள்ள முயல வேண்டும்; அவர்களை எளிதில் அறிந்து கொள்ள முடியும் - அவர்கள் தங்கள் மனைவிக்கோ அல்லது குழந்தைகளுக்கோ எந்த செலவும் செய்ய தயங்காதவர்கள்; அந்த மாதிரி கணவன்கள் கண்டிப்பாய் தன் மனைவி மற்றும் பிள்ளைகள் மேல் அதிக பற்றுடன் இருப்பர். "சிறந்த கணவன் ⇔ சிறந்த தந்தை" என்பதில் குறிப்பிட்டது போல், ஓர் குடும்பத்திலுள்ள சிறந்த மகனும் - சிறந்த கணவன்!!! என்பதும் உண்மை. அதே நேரம், அவன் முதல் பிரிவு கணவன் போல் - சூழ்நிலையால் மாறி விடாமல் தடுப்பது மனைவியின் உரிமை/ கடமை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதை ஓர் நடுநிலையோடு செய்ய முயலுதல் வேண்டும்.

         மனைவி என்பவள் செய்யும் பெரும்பான்மையான தவறுகள், தங்கள் குடும்பத்தை "பணம்" சார்ந்து அல்ல "மனம்" சார்ந்து இருப்பதில் தான் துவங்குகிறது என்று எண்ணுகிறேன். எப்படி ஓர் ஆண் "தன் குடும்பத்தை (குறிப்பாய், தன் தாயை)" போற்றி/ சார்ந்து பேசும்போது "மனைவிக்கு" கோபம் வருகிறதோ, அதே போல் ஓர் மனைவி எப்போதும் "என் தந்தை" என்றோ அல்லது என் குடும்பம் என்றோ பேசுவது அந்த "கணவனை" காயப்படுத்துகிறது என்பதையும் மனைவி புரிந்து கொள்ளவேண்டும். இங்கே, கணவன்-மனைவி இருவரும் திருமணத்திற்கு முன்னான "தன் குடும்பம்" என்பதை எப்படி வரையறுக்கவேண்டும் என்பதில் தான் அதிக பிரச்சனைகள் உள்ளதாய் எனக்கு படுகிறது. மேலும், என்ன தான் ஓர் ஆண் தன்  தாயை புகழ்ந்து அல்லது சார்ந்து பேசினும் அவன் ஒரு போதும் மனைவியை விட்டு "தாய் வீட்டிற்கு" சென்று விடுவதில்லை; அவனால், அத்தனை எளிதாய் விட்டு செல்ல முடியாது என்பதே உண்மை. ஒரு வாதத்திற்காய், அவ்வாறு ஒரு கணவன் சென்றால் மனைவி என்ற நீங்கள் என்ன செய்வீர்கள் என்று ஓர் கணம் யோசித்து பாருங்கள்! அதன் வலி புரிகிறதா என்று பாருங்கள்!! எதற்கெடுத்தாலும் "என் தந்தை வீட்டிற்கு சென்றுவிடுவேன்" என்று அடிக்கடி ஓர் மனைவி மிரட்டுவது மட்டுமல்ல; அவ்வப்போது சென்றும் விடுகிறார்கள். உண்மையில், அந்த தம்பதியர் உண்மையான/ அழகான ஓர் வாழ்க்கை வாழ்ந்திருபின் "ஒரு கணத்திலாவது" தன் தவறை மனைவி உணரக் கூடும்/வேண்டும்; அப்படி உணரவில்லை எனின், அவர்கள் வாழ்ந்ததில் உண்மையில்லை/ அழகில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

           இந்த உணர்வு வந்ததும் கூட, தன் தவறை தன் தந்தையிடமும் கூறாது, தன் கணவனிடமும் கூற முடியாது தவிக்கின்ற மனைவிகள் அதிகம். இதில் என்ன தயக்கமோ அல்லது அசிங்கமோ வேண்டி இருக்கிறது? கணவனை விட்டு உங்கள் தந்தை வீட்டிற்கு சென்ற போது எழாத "தயக்கமோ/ அசிங்கமோ" இந்த உணர்தலின் போது மட்டும் ஏன் வரவேண்டும்?? அவன் உங்கள் கணவனில்லையா??? அவனுடன், உடலும்-உணர்வும் கலந்த உறவுதானே நீங்கள்! பின் ஏன், இந்த இடைப்பட்ட நிலை? இதை உணராத மனைவியை விட; உணர்ந்தும் அதை திருத்திக் கொள்ளாத மனைவி செய்யும் தவறு தான் பெரிதாய் எனக்கு படுகிறது. முன்பே குறிப்பிட்டது போல், தம்பதியர்க்கிடையிலான பெரும்பான்மையான பிரச்சனைகளின் காரணம், கண்டிப்பாய் சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் தாண்டியதும் - நினைத்து பார்ப்பினும் நினைவுக்கு வருவதில்லை; அப்படியே வரினும், அவைகள் தம்பதிகளே நகைக்கும் வண்ணம் இருக்கும். பிரச்சனையின் காரணத்தை அறிய முற்பட்டு, இந்த உண்மை புரியும் போது எல்லாப் பிரச்சனைகளும் கண்டிப்பாய் மறைந்து விடும்! பிரிந்திருந்த தம்பதியர் கூடிவிடுவர்; பிரச்சனைகளால் விளைந்த காரணிகளும், காயங்களும் கூட மறைந்து விடும்!! ஆனால், அந்த இடைப்பட்ட காலத்தில் இழந்த இளமையும், அந்த நாட்களும் கண்டிப்பாய் திரும்ப கிடைக்காது. எனவே, தம்பதியர்கள் தங்களுக்கிடையே இருக்கும் எந்த பிரைச்சனையும் நிரந்தரமில்லை என்பதை உணர்ந்து இந்த மாதிரியான பிரிவை தடுத்து, ஒருவரை ஒருவர் புரிந்து - விட்டு கொடுத்து வாழ்து மட்டுமல்ல....

மாறாய், ஒன்றாய் இணைந்து(ம்) வாழவேண்டும்!!!                              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக