ஞாயிறு, ஜூன் 17, 2012

பாடலை எப்படி வரையறுப்பது???



        சில மாதங்களுக்கு முன் தமிழ்த்திரைப்பட பாடல் ஒன்று - திரைப்படம் வெளியாவதற்கு முன்பே - இணையதளத்தில் வெளியாகி குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை அடைந்தது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஏதோ ஓர் புரட்சித்-தீ போல் அப்பாடல் பரவிற்று என்றால் கூட மிகையல்ல! அதிக அளவில் ஆதரவாளர்களை கொண்டது மட்டுமல்லாமல், அப்பாடலுக்கு பெருத்த எதிர்ப்பும் இருந்தது. எதிர்த்தவர்கள் அனைவரும் பெரும்பான்மையாய் சொல்லிய காரணம் அந்த பாலில் இருந்தது அனைத்தும் ஆங்கில வார்த்தைகள் (ஓரிரு தமிழ் வார்த்தைகள் தவிர) என்ற குற்றச்சாட்டு! அப்பாடல் தமிழுக்கும், தமிழ்த்திரைப்படத் துறைக்கும் பெருத்த அவமானத்தை உருவாக்கியதை போல் கோபப்பட்டார்கள்!! இதற்கு முன், பல தமிழ்த் திரைப்பட பாடல்களில் ஆங்கிலம் பெருத்த அளவில் கலந்து இருந்திருக்கிறது; இன்னமும் இருந்து கொண்டு வருகிறது என்பதை எவர் மறுக்க முடியும்? இத்தலையங்கத்தை படிப்போர், ஓர் கணம் சிந்தியுங்கள்; எத்தனை தமிழ்த்திரைப்பாடல்களில் "எவருக்கும் விளங்கா வண்ணம்" ஆங்கிலச் சொற்களைக் கொண்டு  இடையிடையே பாடுவார்கள் என்று!!! என்ன வார்த்தை, என்ன சொல்ல வருகிறார்கள் என்று அவர்களுக்காவது விளங்கி இருக்குமா என்று எனக்கு தெரியவில்லை? ஆனால், இங்கே விவாதத்திற்கு எடுத்துக் கொண்டிருக்கும் பாடலில் வரும் அனைத்து ஆங்கில வார்த்தைகளையும் தெளிவாய் கேட்கமுடியும்; மேலும், அதை பாடியவரும் தெளிவான உச்சரிப்பில் நிதானமாய் பாடுவார். 

       அப்பாடல் இத்தனை அளவில் கவனிக்கப்பட, தெளிவான உச்சரிப்பு கூட காரணமாய் இருக்குமோ? ஏன் பல பேர் இந்தப்பாடலை எதிர்த்தனர் என்று யோசித்தபோது, அவர்கள் அனைவரும் விளம்பரத்தை நாடியே செய்ததாய் எனக்கு விளங்கியது. இத்தலையங்கம் கூட விளம்பர-முயற்சியாய் உணரப்படக்கூடாது என்பதற்காய் தான் இத்தனை காலம் கடந்து எழுதுகிறேன்; அந்த பரவசங்கள் அனைத்தும் அடங்குவதற்காய் காத்திருந்தேன். அதனால் தான் ஓர் நடிகையைப் பற்றி ஏன் எவரும் கவலைப்படவில்லை என்ற தலையங்கத்தை கூட காலம் கடந்து எழுதினேன். என்னுடைய பார்வையும், இந்த வலைப்பதிவும்  விளம்பரத்திற்காய் அல்ல; விளங்குவதற்காய்/ விளக்குவதற்காய். நான் அப்பாடலை வேறொரு பரிமாணத்தில் இருந்து பார்க்க முயற்சித்திருக்கிறேன். அதற்கு முன், ஓர் முக்கியமான எதிர்ப்பு பற்றி கூற விரும்புகிறேன். அப்பாடல் குறித்து, இந்த ஆண்டு தேசிய விருது வாங்கிய ஓர் கவிரிடன் நிருபர் ஒருவர் கருத்து கேட்கிறார்; அதற்கு அந்த கவிஞர் எந்த பதிலும் கூறாமல், அதற்கு பதிலளிப்பது "அவமரியாதை" என்பது போன்ற ஒரு கருத்தை கூறினார். இதில் முக்கியமானது, அவருக்கு தேசிய விருது கிடைத்த பாடலின் முதல் வரியின் இரண்டாவது வார்த்தை "ஆங்கிலம்"; மேலும் அதிக அளவில் "கொச்சைத் தமிழ்" போன்ற வார்த்தைகள் இருக்கும்; அதையும் பெரும்பாலோர் இரசித்ததனால் தானே விருதும் கிடைத்தது? எனவே, இரசிகர்கள் அனைத்தையும் இரசிக்கின்றனர் என்பதே உண்மை. எனவே, இங்கு தமிழுணர்வு பற்றி வீண்-விவாதம் செய்யாது அந்த முயற்சியை பாராட்டவேண்டும்.

     இவ்விதமான எதிர்ப்புகளுக்கும் மேலாய், அந்த பாடல் வெகுவாய் பலரையும் கவர்ந்தது; அந்தப்பாடலை தழுவி பலபாடல்கள் வந்தன; அந்தப்பாடலை பலர் பலவிதமாய் பாடினர்; அந்தப்பாடல் (கிட்டத்திட்ட) இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது; உலக அளவில் கூட பிரசித்திபெற்றது. ஓர் வெளிநாட்டவர் அப்பாடலை "கித்தார்" இசைக்கருவியில் எப்படி வாசிப்பது என்று ஓர் வகுப்பே எடுத்து இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார். இதை கவனிக்க வேண்டாமா? ஓர் தமிழன் இதை சாதித்திருப்பதை எண்ணி பெருமைப்படவேன்டாமா?? ஆங்கில வார்த்தைகள்  இருக்கும் ஒரே காரணத்திற்காய் அதை எவ்வாறு இப்படி தூற்றமுடிகிறது??? அப்படியாயின் அவ்வாறே மேற்கூறிய வண்ணம் பல பாடல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் போதெல்லாம் இவர்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள்? சமீபத்தில் நடந்த பெரிதும்-கவனிக்கப்படும் "கிரிக்கெட் தொடரில்" வடமாநிலத்தில் நடந்த ஓர் போட்டியின் போது (இடைவெளியில்) அந்த பாட்டு ஒளிபரப்பப்பட்டது; பலரை கவர்ந்ததால் தானே இது சாத்தியம் ஆயிற்று?  இதற்கெல்லாம் உச்சமாய் "இலங்கைத்தமிழர்" ஒருவர் இந்த பாடலை வேறொரு விதத்தில் தமிழைப் போற்றும் விதமாய் கொடுத்திருந்தார். வாய்ப்பு கிடைப்பின், அதைப் பார்க்காதோர் ஒருமுறை கேட்டுப்பாருங்கள். தமிழின்/ தமிழனின் பெருமையை உணர்த்தும் விதமாய் ஓர் பாடல் உருவாக காரணமாய் இருந்ததற்காய் பெருமைப்படவேன்டாமா? ஒருவேளை, இந்த தமிழ்ப்பாடலை கூட அவர்கள் விவாதத்திற்குட்பட்ட பாடலின் சாயல் என்பதால் வெறுத்து எதிர்ப்பார்களோ?? ஏன் இவர்களுக்கு இந்த "விளம்பர வெறி???". 
         
           பலரைக்கவர்ந்து அதன் தாக்கமாய் பல வடிவத்தில் பல திறமைகளை உணர காரணமாயிருந்த ஓர் பாடலை ஏன் எந்த காரணமும் இன்றி வெறுக்கவேண்டும்? உண்மையில், அந்த பாடலின் பால் எனக்கு "பெரிய ஈர்ப்போ" "அல்லது "சிறிய வெறுப்போ" இல்லை. அந்த பாடல் பற்றி இங்கிருக்கும் தமிழன்பர்கள் பலமுறை சொல்லியும் கூட நான் அதை பார்க்க முயற்சிக்கவில்லை. என்னவள் கூட பலமுறை அப்பாடல் குறித்து கூறினாள்; அப்போதும் கூட நான் அந்த பாடலை பார்க்கவில்லை. ஓர் நாள் - என் மகள் (அப்போது, இரண்டரை வயதுக்கு சற்று குறைவு) அந்தப்பாடலை முணுமுணுத்தது கண்டதும், அந்த பாடலை உடனடியாய் பார்த்தேன்; அப்போது கூட அந்தப்பாடல் குறித்து பெரிய அபிமானம் தோன்றவில்லை! "என்ன வாழ்க்கை இது?" என்ற தலையங்கத்தில் குறிப்பிட்டது போல், என் மகளுக்காய் நான் சேகரித்த பாடல்கள், "கேலிச்சித்திர" படங்கள் அனைத்தும் அவளை வெகுவாய் கவர்ந்தது எனினும், அவளாய் விரும்பிட்ட முதல் பாடல் எனும்போது அப்பாடல் மேல் ஓர் அபிமானம் தோன்றிற்று. ஓர் சிறுமியை கவர்வதை காட்டிலும் ஒரு பாடலைப் பற்றி பாராட்ட வேறு என்ன காரணம் வேண்டும்? எந்த தடையும் தேவையில்லை என்று தோன்றுகிறது; இது ஓர் உதாரணம் தான், அப்பாடல் கவர்ந்த பில்லைச்செல்வங்கள் ஏராளம். நான் சில மாதங்களாய் "கித்தார்" இசைக்கருவி வாசிக்கப்பழகி வருகிறேன்; என்னுடைய இப்போதைய இலக்கு, என் மகள் அந்த பாடலிலிருந்து கேட்கும் குறிப்பிட்ட வரியை இசைத்து காண்பிப்பது; கூடிய விரைவில் இதை நிறைவேற்றவேண்டும்.

            தேவையில்லாமால் அப்பாடலை பற்றி குறை கூற வேண்டாம் என தோன்றுகிறது; அப்பாடலை போற்றமுடியாது போயினும், குறைந்தபட்சம் தூற்றாமலாவது இருக்கலாம். இதை விட இன்னொரு விசயம், உண்மையில் அந்த திரைப்படத்தில் மற்ற அனைத்து பாடல்களும் கூட அருமை. ஒரு பாடலில் - மீண்டும் ஆங்கில வார்த்தைகள் அதிகம் எனினும் - ஆழமான கருத்துகள் மிக எளிய வகையில் கூறப்பட்டிருக்கிறது. விவாதத்திற்கு உண்டான பாடலின் அதீத விளம்பரம் மற்றும் புகழால் கூட இந்த பாடல்(கள்) அதிகம் கவனிக்கப்படாது போயிருக்கக்கூடும்; வாய்ப்பு கிடைப்பின், மற்ற பாடல்களை கூட கேட்டு இரசியுங்கள். நமக்கு பிடிக்கவில்லை என்பதற்காய், அதிகம் கவனிக்கப்பட்ட, விரும்பப்பட்ட ஓர் பாடலை பற்றி தவறாய் விமர்சிப்பது எந்த விதத்திலும் நியாயமாக இருக்க முடியாது என்பது என் எண்ணம். மேலும், தமிழ் வளர்வதற்கு அல்லது தமிழைப் பறைசாற்ற வேறு பல வழிகள் உள்ளன என்பதை நான் தொடர்ந்து தலையங்கம் மூலமாயும், கவிதை மூலமாயும் வலியுறுத்தி வருகிறேன். பிற மொழிக்கலப்பால் எந்த மொழியும் அழிந்ததாய் அல்லது சிறப்பு குறைந்ததாய் இங்கே எந்த சான்றும் இல்லை. குறிப்பாய்,  தமிழ் போன்ற ஓர் "செம்மொழியை" எந்த மொழியும் எந்த விகிதத்தில் கலப்பினும் ஒன்றும் செய்து விடமுடியாது. எனவே, இம்மாதிரி தேவையில்லாத விமர்சனங்களை தவிர்த்து, அந்த பாடலையும், அதனால் உண்டான நல்ல-விளைவுகளை (மேற்குறிப்பிட்ட வண்ணம்) எண்ணி போற்ற முயல்வோம். எனவே, ஓர் பாடலை - அதன் புதுமுயர்ச்சியை அதன் தாக்கத்தை பாராட்ட மறுத்து…

மொழியை முன்னிறுத்தி விமர்சிக்கத் தேவையில்லை!!!                              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக