திங்கள், ஆகஸ்ட் 13, 2012

சமையல் எனும் கலை...



       சமையல் ஓர் அற்புதமான கலை! அதை அன்யோன்யமாய் அனுபவித்து செய்பவர்க்கு அக்கலையின் உன்னதம் புரியும். எனக்கு மிகவும் பிடித்த, நான் அனுபவித்து செய்யும் விசயங்களில் "சமையலும்" ஒன்று. அக்கலையின் மகத்துவத்தை என்னுடைய பார்வையில் வழக்கம் போல், நம்முடைய நடைமுறை வாழ்க்கையை கலந்து எழுதவேண்டும் என்று தோன்றியது. இத்தலையங்கம் எழுத இன்னுமொரு காரணம், சமையல் குறித்து "இவ்வலைப்பதிவில்" ஒரு பகுதி துவங்கி அதில் என்னுடைய சமையல் குறிப்புகளை வெளியிடவேண்டும் என்ற என்னவளின் கோரிக்கை. ஆம்! என் சமையலின் முதல் "விசிறி" அவள் தான்!! கூடிய விரைவில் என்னவளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்!!! நான் சமையலை வெறும் பொழுதுபோக்காய் பார்க்கவில்லை; சமையல் என்பது எனக்கு "தியானம்" போன்றது. உண்மைதான்! என்னுடைய மிக துக்கமான/வெறுமையான சூழல்களில் நான் சமைக்க ஆரம்பித்து விடுவதுண்டு; சமையல் செய்ய எண்ணமும், செயலும் ஒருமுகப்படவேண்டும். இரண்டும் ஒரு சேர இணையவில்லை எனில் சமையல் சரியாக வராது; எப்படி வேண்டுமானாலும் சமைக்கலாம் என்பது இருக்கலாம்; ஆனால் அதை கலையாய் பார்க்கும்போது, இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற வரைமுறை அவசியமாகிறது. மிக கவனமாய் இருத்தல் அவசியம்; அந்த கவனம் வரும்போது, இயல்பாய் நாம் அதை மனம் ஒன்றி செய்ய ஆரம்பித்து விடுவோம். என்னுடைய பல படைப்புகள், நான் சமைக்கும்போது உருவானவை/ உருமாறியவை .

   என்ன இது? சமையலுக்கும், உணவுக்கும் இத்தனை முக்கியத்துவம் வேண்டுமா?? என்று சிலர் வினவக்கூடும். எந்த இடத்தில் எந்த விதமான உணவு சுவையாய் கிடைக்கும் என்று நாம் விவாதிப்பதுண்டு; பின் சமையல் எனும் செயலை ஓர் கலையாய் அணுகுவதில் என்ன தவறு? நம்முடைய தாயும், தமக்கையும், தங்கையும் இதைத் தானே செய்தனர்?? அவர்களுக்கு உணவு இல்லை எனினும், மனமுவந்து செய்தது அத்தனையும் நமக்காய் பரிமாறுபவர்கள் தானே???  தினமும் மூன்று வேலை சமைக்கவேண்டும் என்று கட்டாயம் இருந்தபோதும், எந்த சூழ்நிலையிலும் அவர்கள் இதை மனமுவந்து செய்வது எங்கனம் சாத்தியம் ஆனது? அவர்கள் அதை கலையாய் இரசித்து, தியானம் போல் அமைதியாய் செய்ததால் தான் சாத்தியப்பட்டிரூக்கக்கூடும்! இதை எழுதும் போது ஒரு கேள்வி எழுந்தது!! "நலபாகன்" துவங்கி இன்று பெரும்பான்மையில் வணிக-ரீதியாய் ஆண் தான் சமையல் செய்கிறான்; ஆனால், வீடு என்று வரும்போது மட்டும் ஏன் பெண்தான் சமைக்கவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறான்?? வீட்டில் ஆண் சமைப்பது தவறென்று, எவர் அவனுக்கு உரைத்தது??? ஒருவேளை, சமையல் என்பதை ஓர் ஆண் கலையாய் பார்க்கத் தவறியதால் இருக்கக்கூடுமோ! ஆனால் இன்றைய தலைமுறையில் இது சற்று மாறி இருக்கிறது!! பெண்ணும் வேலைக்கு செல்வது அவசியம் என்று ஆனதால் கூட இருக்கலாம். பொருளாதாரப் பிரச்சனை ஓர் வழியில் ஆணை (குறைந்தது) இந்த விசயத்திலாவது பண்படுத்தி இருக்கிறது என்பது நல்ல விசயமே.

       சமையலில் என் குரு, என்னுடைய தமக்கை! எப்போது எந்த சந்தேகம் எனினும், உடனே அவருக்கு தான் தொ(ல்)லைபேசுவது வழக்கம்!! என்னுடைய தமக்கையின் குறிப்பில் எனக்கு எந்த தயக்கமும் இருந்ததில்லை; அவர் என்ன செய்ய சொல்கிறாரோ அதை அப்படியே செய்வேன்; அந்த அளவிற்கு நம்பிக்கை. என் தமக்கையின் சமையலில் அதிகமான வகையறாக்கள் இருக்கும்; புதிது புதியதாய் அவர் எதையாவது கற்று, கேட்டு செய்து கொண்டே இருப்பார். அவரின் மீதிருந்த நம்பிக்கையும், அவரின் சமையற்-திறமையும் தான் "சமையலை" ஓர் கலையாய் பார்க்கும் மனோபாவத்தை என்னுள் விதைத்தது. பின், என் தொழில் சார்ந்த ஆராய்ச்சி-அறிவை சமையலிலும் புகுத்த ஆரம்பித்தேன்; அதனால், நானே புதிது-புதியதாய் செய்த உணவு வகைகள் ஏராளம். சமீபத்தில் கூட, கோழி-முட்டையையும், மீனையும் இணைத்து ஒரு குழம்பு செய்ய கற்று அதை என் நண்பர்களுக்கும் ஓர் நாள் செய்து கொடுத்தேன். அதை அவர்கள் வெகுவாய் பாராட்டி சுவைத்தார்கள் (உண்மை எனவே நம்புகிறேன்!!!). ஒரு முறை, என் தமக்கை வழக்கத்திற்கும் அதிகமான நபர்களுக்கு உணவு செய்ய ஆரம்பித்து, பாத்திரம் சரியாய் இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தது! உடனே, நான் எத்தனை விகிதம் அரிசி மற்றும் தண்ணீர் என்று கேட்டு இரண்டையும் அந்த பாத்திரத்தில் சேர்த்து, இதற்கு மேல் உணவு வராது என்று உறுதியளித்தேன். அவர்களும் என்னை நம்பி சமைத்து அதே மாதிரி வந்தது கண்டு அனைவரிடமும் பெருமையாய் கூறினார். அதில் பெரிய விசயம் எதுவும் இல்லை; கவனம் குறையாது, ஓர் கலையாய் எண்ணி சமைக்க ஆரம்பிக்கும் போது, இது ஓர் சாதாரண விசயம் என்பது புரியும்.

      என்னுடைய ஆராய்ச்சி அறிவு மட்டுமலாது, என்னுடைய சூழலும் எனக்கு நிறைய உதவி செய்து இருக்கிறது. முதலில், தனியாக இங்கே இருப்பதால் நானே சமைக்க வேண்டிய நிர்ப்பந்தம்; அதுதான் முதலில் சமையல் செய்ய எனக்கு வாய்ப்பு அளித்தது. சமையலின் மீது ஓர் ஈர்ப்பும் பிடிமானமும் வந்த பின் இங்கே பல நாட்டவர் சமைக்கும் சமையலை காணவும், அதை சுவைக்கவும் நிறைய சந்தர்ப்பம் கிடைத்தது. நம் நாட்டில் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சமைக்கும் வித்தியாச உணவுவகைகள் மட்டுமன்றி; நம் மாநிலத்தின் பிற பகுதிகளைச் சார்ந்தவர் சமைக்கும் பலதரப்பட்ட உணவு வகைகளை அறிய முடிந்தது. ஒவ்வொரு புதிய உணவு வகையையும், நம் பழக்கத்திற்கு ஏற்றார்ப்போல் மாற்றி சமைக்கும் திறனும் வளர்ந்தது. இவ்வாறாய் என்னுடைய சமையலின் திறன் படிப்படியாய் வளர்ந்து அதை ஓர் கலையாய் பாவிக்கும் நிலையை அடைந்த பின் சமைப்பது எனும் செயல் எந்த நெருடலும் இல்லாது-இயல்பாய், இனிதான ஓர் நிகழ்வாய் மாறிற்று. எந்த ஒரு கலையின் மேலும் ஓர் ஈர்ப்பு வர முதலில் வாய்ப்பு கிடைக்கவேண்டும்; பின்பு அதில் பல்வேறு வகைகள் இருக்கவேண்டும்; அதன் பின் அந்த கலையின் மேல் நமக்கு ஈடுபாடு வரவேண்டும். இவை அனைத்தும் எனக்கு தானாய் சமையல் எனும் கலை மேல் வந்தது. எவர்க்கும் சமைப்பதர்க்காய் நான் வருந்தியதே இல்லை; எவரெவற்கோ சமைத்ததால், என்னவளுக்காய் சமைக்க நான் தயங்கியது இல்லை. நமக்கு பிடித்த வேலை செய்வதற்கு தயக்கம் எப்படி வரும்?

       என் அனுபவத்தின் வாயிலாய், நான் அடிக்கடி பிறரிடம் குறிப்பிடும் ஓர் செய்தி "சமைப்பதை விட கடினமான விசயம், சமைத்த பின் பாத்திரங்களை கழுவது" என்பது தான். சமைத்து முடித்து, பாத்திரங்களை கழுவி அனுபவித்தவர்களுக்கு இதன் அர்த்தமும், வலியும் புரியும். இதை அனுபவப்பூர்வமாய் உணரும் முன்னரே எனக்கு ஓர் பழக்கம் உண்டு; எவர் வீடாய் இருப்பினும் சாப்பிட்டு முடித்தவுடன், சாப்பிட்ட தட்டை கழுவும் வழக்கம்; அல்லது சாப்பிட்ட இலையை எடுக்கும் வழக்கம். எனக்கு தெரிந்து கிட்டத்திட்ட இருபது வருடங்களாய் இந்த பழக்கத்தை கடைபிடிக்கிறேன். எவரேனும், தட்டை கழுவ வேண்டாம் என்று கண்டிப்பாய் வற்புருத்தின் கூட "சாப்பிட்ட எச்சத்தை"-யாவது எடுத்து குப்பையில் போட நான் ஒருபோதும் தவறியது இல்லை. நாம் சாப்பிட்ட எச்சத்தை இன்னொருவர் (எவராய் இருப்பினும்) தொடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை; என் வீட்டில் எவரும் செய்யும் போது, நான் மறந்தும் அதை மறுப்பது இல்லை. முடிந்தால், இதைப் பழகிப் பாருங்கள்; இந்தப் பழக்கம் வந்ததாலோ என்னவோ, பாத்திரங்களை கழுவுவதும் எனக்கு இயல்பாய் வந்தது. நான் சமைத்து முடிக்கும் போது, நான் உபயோகித்த அத்தனை பாத்திரங்களும் சுத்தமாய் கழுவி இருக்கும். சமையலின் இடையில் அதிக நேரம் கிடைக்கும்; அப்போதே எளிதாய் பாத்திரங்களை கழுவி விட முடியும். அவ்வப்போது தேவை இல்லாமல் சமைத்து விட்டு பாத்திரத்தை கரைபிடிக்க வைத்து "திட்டு வாங்கும்" நிறைய கணவர்களை எனக்கு தெரியும்; என்னப்பன் அவ்வப்போது வாங்கிக்கொள்வார். எனவே, சமைக்க தெரியவில்லை எனினும் பரவாயில்லை! குறைந்த பட்சம் முதலில்…

பாத்திரங்கள் கழுவவாவது முயற்சிப்போம்!!!

பின்குறிப்பு: பெரும்பாலும் மனைவி/தாய் குறையாய் கூறுவது, "சாப்பிட்டுவிட்டு எப்படி இருந்தது என அவர்(சாப்பிட்டவர்) ஒரு வார்த்தை கூட கூறியது இல்லை" என்பது தான். சாப்பிட்ட உணவு நாவால் சுவைக்கப்பட்டு தொண்டையில் இருக்கும் போது இல்லையெனினும், சாப்பிட்ட பின்னாவது, சமையலைப் பற்றி பாராட்டுங்கள். வெளியே சென்று "என் மனைவி (அல்லது தாய்) எப்படி சமைப்பாள் தெரியுமா? என்று பெருமை-பேசுவது மட்டும் போதாது! அவர்களிடம் நேரிடையாய் சொல்ல வேண்டும்!! சமைக்க தெரியவில்ல எனினும், அவர்களின் கடின உழைப்பை உணர்ந்து பாராட்டியாவது பேசுங்கள்; அது தான் சமைத்தவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக