ஞாயிறு, ஆகஸ்ட் 19, 2012

இந்திய இளைஞர்களின் உண்மை முகம்...

(தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றை கருவாகக் கொண்டு எழுதப்பட்டது) 

      பெரும்பான்மையான ஊடகங்கள் - பலதரப்பட்ட நிகழ்ச்சிகளின் மூலமும், சில உண்மை சம்பவங்கள் மூலமும்; இந்திய இளைஞர்கள் தவறான வழி நடப்பதாயும், சமுதாய அக்கறை இன்றி இருப்பதாகவும் தான் சித்தரித்து இருக்கின்றன. அப்படிப்பட்ட நிகழ்ச்சிகள்/செய்திகள் தொடர்ந்து வெளிவந்து, "இளைஞர்கள், அப்படித்தான்" என்ற முடிவிற்கு வர நிர்ப்பந்திக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். இரண்டு நாட்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியை பார்க்கும் முன்னர் கூட நான் அத்தகைய எண்ணத்துடன் தான் இருந்தேன்; ஆனால், அந்த நிகழ்ச்சி என்னை புரட்டிப்போட்டது! உண்மை நிலையை சாட்டையடி போல் உணர வைத்தது!! இதை என் போன்று தவறான கண்ணோட்டத்தில் உள்ளவர்களுக்கு புரிய வைப்பதை என் கடமையாய் உணர்ந்தேன்!!! இவ்வலைப்பதிவு தொடங்கிய நாள் முதல் கிடப்பில் போட்டிருக்கும் இரு தலையங்களுள் ஒன்றை இந்த வாரம் வெளியிட வேண்டும் என்று உறுதியாய் இருந்தேன். ஆனாலும், இந்த நிகழ்ச்சியை பலரிடம் உடனடியாய் கொண்டு சேர்ப்பது என் தலையாய கடன் என்பதால், இந்த தலையங்கத்தை எழுதி விட்டேன். முதலில் - சில தகவல்களுக்காய் - அந்நிகழ்ச்சியை மீண்டும் தேவையான இடத்தில் பார்த்து மிகவும் நுணுக்கமாய் எழுதவேண்டும் என்று தீர்மானித்தேன். அது செயற்கையாய் போய்விடும் என்பதால், என்னுள் இந்நிகழ்ச்சி ஏற்படுத்திய தாக்கத்தை என் நினைவில் உள்ளது போல் எழுதவேண்டும் என்று தீர்க்கமாய் முடிவு செய்தேன்; மேலும், அதை பார்க்கவேண்டும் என்று உங்களுக்கு தூண்டினால் போதுமானது என்றுணர்ந்தேன்.

    என்னுடைய வலைப்பதிவில் மற்றவரைப் பற்றி விளம்பரம்-போல் எழுதக்கூடாது என்பதில் நான் மிகவும் கண்டிப்பாய் இருந்தேன். அதனால் தான் சில பிரபலங்களைப் பற்றி கூறும் போது, அவர்களின் பெயரை இருட்டடிப்பு செய்தேன். சமீபத்தில், "ஜெர்மனி" நாட்டில் வசிக்கும் "அருள் சக்கரவர்த்தி" என்ற நண்பன், நான் அம்மாதிரியானவர்களை கண்டிப்பாய் நேரடியாய் கூறவேண்டும் என்று விமர்சித்தான். அவனின் விமர்சனம் ஒரு முக்கிய காரணம், நான் இந்த நிகழ்ச்சியை நேரடியாய் விவரிப்பதற்கு. நான் குறிப்பிடும் நிகழ்ச்சி "நீயா நானா" விவாத நிகழ்ச்சியில் இந்த 2012 ஆம் ஆண்டு "சுதந்திர தினத்தை" முன்னிட்டு எடுத்துக்கொண்ட கலந்துரையாடல் பற்றி தான். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், இந்த "பசங்க" என்னத்த பேசிடப்போறாங்க! என்ற என் அசட்டுத்தனத்தை முதலிலேயே ஓர் இளைஞன் உடைத்தார்; "பகத்சிங்" என்ற மாவீரனின் வெளி உலகத்திற்கு தெரியாத மற்ற பரிமாணங்களை கூறியதன் வாயிலாய்! எனக்கு விழுந்த முதல் சாட்டையடி அது; அதன் பின் விழுந்தது அடி மேல் அடி. இளைஞன் - இளைஞி என்ற எந்த பாகுபாடுமின்றி அனைத்து இளைஞர்களும் அவர்களை பாதித்த "ஆளுநர்கள்"  பற்றி எடுத்து வைத்த விவாதங்கள் மெய்-சிலிர்க்க வைத்தன. கண்டிப்பாய் பேசிய அனைவரும், நிகழ்ச்சியில் பேசவேண்டும் என்பதற்காய் அவசரமாய் படித்துவிட்டு வந்து பேசவில்லை. அவரவரின் ஆளுநர் பற்றி - ஆழப்படித்து, மிக ஆழமாய் சிந்தித்து, சிறிதும் உணர்ச்சிவயப்படாது - "நிதானமாய்" பேசினார்கள். 

     மிகவும் முக்கியமான ஓர் விசயம், அனைத்து இளைஞர்களும் இன்றைய நடைமுறை வாழ்க்கையோடு மிக நேர்த்தியாய் அவரவரின் ஆளுநரின் கருத்துக்களை கோர்த்து பேசியது தான். ஓர் இளைஞி பாரதியின் "பெண் விடுதலை"-க்கு காரணியான விசயங்கள் இன்று வர்த்தக-நிறுவனங்களில் எப்படி நவீனமாய் கையாளப்படுகிறது என்பதை அருமையாய் விவரித்தார். ஓர் இளைஞன் "தந்தை பெரியாரை" பிரபலமான (தொடராய் வெளிவந்த) ஓர் திரைப்படத்தின் கதாப்பத்திரத்தோடு கச்சிதமாய் ஒப்பிட்டு, அவரைப்பற்றி எடுத்து வைத்த கருத்துக்கள் அனைத்தும் மிகவும் அற்புதம். பேசிய அனைவருள், மிகவும் பாத்தித்த இளைஞர் பேசியது "அம்பேத்கர்" பற்றியது; அவர் பேசும்போதே, வழக்கமான பரிசு அவருக்கு என்பது உறுதியாயிற்று. அவரின் ஒரு கேள்வியை மட்டும் நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்; "சமுதாய விஞ்ஞானி" (Social Scientist) இருந்த போது "தொழில்நுட்ப விஞ்ஞானி" (Technological Scientist) இல்லை!; இன்று தொழில்நுட்ப விஞ்ஞானிகள் பல்கிப்பெருகி இருக்கும்போது, சமுதாய விஞ்ஞானிகள் வெளிவரமுடியாத நிலை ஏன்? என்பது தான் அவரது கேள்வி! மிகவும் எளிதான வார்த்தைகளைக் கொண்டு-எதார்த்தமாய் பேசிய அவர் ஓர் துயர செய்தியையும் கூறினார்; அது, சாதி காரணமாய் அவரின் நண்பன் வீட்டுக்குள் நுழைய முடியவில்லை என்ற கசப்பான உண்மை - மனம் கலங்கிவிட்டது (சற்று சிந்தியுங்கள்! சுதந்திரம் கிடைத்து எத்தனை ஆண்டுகள் கழித்து இன்னமும், இவ்வாறு நடக்கிறதென்று???).

  சிறப்பு விருந்தினர்களில் ஒருவர் மீண்டும் "அம்பேத்கர்" பற்றி பேசினார்; அவர் பெயர் "முத்துகிருட்டிணன்" என்று நினைக்கிறேன்; அவர் அடிக்கடி "நீயா நானா" நிகழ்ச்சியில் சிறப்பு-விருந்தினராக வருவதுண்டு. பலவிதமான சமுதாய காரணிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒருவர். அவர் அம்பேத்கர் பற்றி ஒரு விஷயத்தை கன்னத்தில் அறைந்தார்போர் பின்வருமாறு கூறினார்: "சேரியே வேண்டாமென்று சொன்ன மாமேதையின் படைப்புகள், நூலகத்தில் ஒரு அலமாரியில் அடுக்கி - சேரியை - போன்று ஒதுக்கி வைத்திருக்கின்றனர்" என்பது தான்; எவ்வளவு கசப்பான உண்மை. மேலும், பள்ளியில் குழந்தைகள் பயிலும் வரலாற்று நிகழ்வுகளில் அம்பேத்கரின் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டிருகிறது என்பதையும் சுட்டிக்காட்டினார். இன்னுமொரு சிறப்பு விருந்தினரான, திரு. தமிழருவி மணியன், அவர்கள் காந்தி, நேரு போன்ற தலைவர்களைப் பற்றி சுருங்க கூறினார். அவர் காந்தி பற்றி கூறிய ஒரு விளக்கம் என்னை மிகவும் கவர்ந்தது; "காந்தி ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்று இரண்டு குணாதிசயங்கள் கொண்டவர் - ஒருபுறம் உண்மை இருக்கும்; மறு புறம் அன்பு இருக்கும்" என்றார். என்னவொரு அருமையான விளக்கம். இன்று பலவிதமான பிரச்சனைகளுக்கும் காரணம் உண்மையும், அன்பின்மையும் தான் காரணம்; ஒன்று இல்லாதிருப்பதோ அல்லது இரண்டும் இல்லாதிருப்பதோ அல்லது இரண்டும் சரிவர கலக்காததால் தான் விளைகிறது. இவ்விரண்டையும் என்னுடைய படைப்புகளில் அடிக்கடி வெளிப்படுத்தி இருக்கிறேன். 

    இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் திரு. கோபிநாத் அவர்களைப் பற்றி நிறைய கூறிக்கொண்டே செல்லலாம். பலமுறை அவரைப் பற்றி சொல்ல எண்ணியும், தனி நபர் விளம்பரம் கூடாது என்ற எண்ணத்தால் பலமுறை சொல்லாது தவிர்த்து இருக்கிறேன். பல துறைகளைப் பற்றியும் அதிக ஞானமும், கருத்து-வன்மையும் கொண்ட மனிதர்; எக்காரணம் கொண்டும் எவரும் தவறான வழியில் பேசும்போது கண்டிக்க தவறாதவர். எந்த விவாதத்தையும் அவர் நிறைவு செய்யும் போது கூறும் சொற்றொடர்கள் மிகவும் வலிமையாய் இருக்கும்; இந்த நிகழ்ச்சியும் அவ்வாறே! அவர் இறுதியாய் கூறியது "இன்றைய இளைய தலைமுறை அவரவர் ஆளுநர்கள் பற்றி சாட்டையால் அடித்தது போல் அடித்து கூறி இருக்கிறார்கள்; வலி உணர்ந்தவர்கள் இதை திருத்திக்கொள்ளவும்; வலி-தெரியாதவர்கள் இன்னுமொரு முறை அடி வாங்கலாம்" என்று கூறி முடித்தார். உண்மை தான்! நான் வலியை முழுமையாய் உணர்ந்தேன்; நான் மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்று தெளிவாய் விளங்கிற்று. தீண்டாமை துவங்கி - உண்மை பேசுதல் வரை அனைத்து விசயங்களையும் நானே (எனக்குள் விவாதித்து) தான் என்னுடைய சூழ்நிலையை கொண்டு  விளங்கிக் கொண்டுள்ளேன். என்னுடைய அனைத்து புரிதல்களும், எவரோ ஒருவர் விரிவாய் அனுபவ-ரீதியாய் விளக்கி இருக்கிறார் என்பது தெரியும்; ஆயினும், அவற்றை படித்து அறிய நான் பெரிதாய் முயற்சி செய்ததில்லை - ஒரு சில செய்திகள் தவிர. இந்நிகழ்ச்சியை பார்த்தவுடன், இனிமேலாவது குறிப்பிட்ட சில சிறந்த ஆளுநர்களைப் பற்றியாவது படிக்கவேண்டும் என்ற சிந்தனை வலுத்துள்ளது. ஒரு சிலர் தவறான பாதையில் செல்வதை ஒப்புக்கொண்டாலும், கண்டிப்பாய் இன்றைய இந்திய இளைஞர்கலில் பெரும்பான்மையோனோர்…

முற்போக்கு சிந்தனை கொண்டவர்களே!!!

பின்குறிப்பு: என்னுடைய ஆராய்ச்சி படிப்பின் போது (ஆராய்ச்சியாளர் சங்க தலைவராய் இருந்த சமயம்) மாணவர்களை ஒன்றிணைத்து, அவர்களின் மூலம் ஓர் கட்சி துவங்கி நாட்டிற்கு நல்லது செய்யவேண்டும் என்ற ஓர் இலட்சிய-கனவு இருந்தது; இன்னமும் கனவாகவே இருக்கிறது! அதற்கு பெயர் கூட இட்டிருந்தேன், Students Integrity Resource (மாணவர்கள் ஒருங்கிணைப்பு சக்தி) என்று! அதை SIR என்று சுருக்கி  அனைத்து உறுப்பினர்களின் பெயருக்கு முன்னாள் "அடைமொழியாய்" இடவேண்டும் என்று கூட முடிவெடுத்தேன். என்னுடைய பொருளாதாரம் மற்றும் மற்ற சூழல்கள்  என்னை அவ்வாறு செய்திட முடியாது செய்து விட்டது. எனினும், இன்னமும் கூட அந்த கனவு என்னுள் தொடர்ந்து கொண்டே தானிருக்கிறது. இந்த சிந்தனை சார்ந்த பல திரைப்படங்கள் கூட (தமிழில்) பிற்ப்பாடு வந்துள்ளது; வேறு எவரேனும் கூட இதை செய்திடின், எனக்கு சந்தோசமே!! என்னால் இயன்ற உதவிகளை கண்டிப்பாய் அவர்களுக்கு செய்திடுவேன்!!!                                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக