ஞாயிறு, டிசம்பர் 01, 2013

தமிழில் பேசினால் அபராதம்???




       நண்பர் ஒருவர் 2 நாட்களுக்கு முன் தன்னுடைய பேச்சு-ஆங்கிலப்பயிற்சி வகுப்பு அனுபவம் பற்றி கூறிக்கொண்டு இருந்தார். அவ்வப்போது, இந்த அனுபவம் பற்றி பலரும் கூறக்கேட்கும் வாய்ப்பு கிடைப்பதுண்டு. அந்த நண்பர் - ஆங்கில வகுப்பில் "தமிழில் பேசினால்" ஒரு வார்த்தைக்கு 10 உரூபாய் அபராதம் விதிக்கின்றனர் என்றார். முதலில் எனக்கு திகீரென்றது?! இவர்கள் தமிழ் நாட்டில் தான் இருக்கின்றனரா?! என்ற ஐயம் வந்தது. பின்னர், சரி ஆங்கிலம் கற்க விருப்பப்பட்டு தானே?! செல்கின்றனர். தமிழில் பேசாது இருந்தால் ஆங்கிலம் பேசுவது எளிதாய் இருக்கும்; அதனால் தான் அபராதம் விதிக்கின்றனர் என்ற உண்மை விளங்கிற்று. அந்த செயல் சரியென்றே எனக்கு தோன்றியது. ஆயின், அதே போல் அபராதம் விதிக்கும் வேறொரு சூழல் எனக்கு நினைவில் வந்தது! இதை பலரும் கண்டிப்பாய் கேட்டிருப்பீர்; சமீபத்தில் வெளியான "தங்க-மீன்கள்" திரைப்படத்தில் கூட இது சார்ந்த ஓர்-வசனம் வரும். ஆம்! அதே தான்... பள்ளியில் விதிக்கும் அந்த அபராதம் பற்றி தான்!!

     பள்ளியில் ஆங்கிலம் தவிர்த்து பல பாடங்களும் - குறிப்பாய், வாழ்வியல் பற்றியும் கற்பதே ஒவ்வொரு குழந்தையின் முதல் தேவையாய் இருக்கிறது. அப்படி எனும்போது - தமிழ்நாட்டில் "தமிழை தாய்மொழியாய்" கொண்ட ஒரு குழந்தையிடம் "தமிழில் பேசினால், அபராதம்!" என்று பல பள்ளிகளும் செயல்படுவது எப்படி நியாயமாகும்? ஆங்கில் கற்கவேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை! குழந்தைப்பருவம் எதையும் கற்கும் வல்லமை கொண்ட அபூர்வபருவம்! அவர்கள் ஒரேநேரத்தில் பலத்தையும் கற்கும் ஆற்றல் கொண்டவர்!! அவர்கள் அனைத்தையும் கற்கும்போதுதான் அவர்களின் "தனித்திறன்" என்னவென்பதை அறிய(வும்)முடியும்! அப்படி இருக்கும் போது, அறிவியல் மற்றும் பிற பாடங்கள் குறித்து (ஆங்கிலத்தில் தான் படிக்கின்றனர் எனினும்)தமிழில் ஓர் ஆசிரியர்/ ஆசிரியையிடம் சந்தேகமோ/விளக்கமோ கேட்பது எப்படி தவறாகும்?! தமிழில் விளக்கம் கூறி பின்னர் ஆங்கிலத்தில் விளக்குவதில் என்ன தவறு இருக்கிறது. அதை விடுத்து தமிழ்ச் சூழலில் வளரும்...

ஓர் குழந்தை தமிழில் பேசுவதற்கு அபராதம் விதிப்பது எப்படி நியாயமாகும்???!!!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக