ஞாயிறு, டிசம்பர் 15, 2013

இது எப்படி/ஏன் சாத்திய(ம்/மில்லை)???...




      இது மட்டும் எப்படி சாத்தியமாகிறது? எனை சார்ந்த உறவிடமும், நட்பிடமும் இல்லாத அந்த நம்பிக்கை இந்த விசயத்தில் மட்டும் எப்படி சாத்தியமாகிறது! எனது நட்பும், உறவும் என்னிடம் காட்டிடாத அந்த நம்பிக்கை இந்த விசயத்தில் மட்டும் எப்படி வருகிறது? ஏன் வருகிறது?? வேறு வழியில்லை என்பதாலா? ஒருவேளை எனக்கும், என் உறவுக்கும்/நட்புக்கும் - ஒருவரையொருவர் விட்டால் வேறு வழியில்லை என்ற நிலை வந்தால் தான் - இப்படிப்பட்ட நம்பிக்கை பலப்படுமோ?! ஆம்! திசம்பர் 25-ஆம் தேதி இரவு பயணிக்க என்னால் எப்படி "ஓர் பேர்-நம்பிக்கையோடு" திசம்பர் 3-ஆம் தேதியே "விமான பயணச்-சீட்டு" வாங்க முடிகிறது? உண்மையில், இது சாதாரணம் தான்! நான் 3 மாதங்களுக்கு முன்பெல்லாம் சீட்டு வாங்கிய அனுபவம் உண்டு; 6 மாதங்களுக்கு முன்பு சீட்டு வாங்(கியோ/குவோ)ரையும் நான் பார்த்ததுண்டு! இந்த நம்பிக்கை எப்படி வருகிறது?! எவர் கொடுத்த தைரியத்தால் வருகிறது??!! இது ஏன் மற்ற விசயங்களில் வருவதில்லை?

       6 மாதத்திற்கு பின் நான் உயிர்த்திருப்பேன் என்ற நம்பிக்கையை விட அதிகமான-நம்பிக்கை எதுவும் இருக்க முடியுமா? ஏன் "நாம் இல்லை என்றால் என்னாவது?" என்று யோசிப்பதே இல்லை? அடிக்கடி, நான் இது சார்ந்து எழுதுவது "அபத்தமாய்" படக்கூடும்; ஆனால், நான் சொல்லும் இது போன்ற உவமானங்களுக்கும், நம் வாழ்வியலுக்கும் பேர்-ஒற்றுமை உண்டு! என்னைக்கேட்டால், இது போன்ற நம்பிக்கைகள் தான் "நம்பிக்கையின் எல்லையாய் (Height of Belief)" இருக்க முடியும்! இதை தாண்டிய நம்பிக்கை எதுவும் இருக்கமுடியாது என்பதே என் நம்பிக்கை. அப்படி இருக்க, ஏன் நா(ன்/ம்) நம் உறவுடனும், நட்புடனும் - அவநம்பிக்கை கொண்டு முரண்பட்டு நிற்றோம்??! ஏன், நம்மால் ஒருவரை ஒருவர் நம்பிக்கை எனும் "கை" கொண்டு "அரவணைத்து" செல்ல முடிவதில்லை? இப்படியோர் அவநம்பிக்கை கொண்டு நாம் என்ன சாதிக்கப் போகிறோம்?? எல்லோரும், எல்லோரையும் அனுசரித்து போவது சாத்தியமில்லை என்பது எனக்கும் தெரியும். குறைந்தது...

முதல்-நிலை (உறவு/நட்பு)களிடம் ஒரு "சிறிய-நிலைத்த" நம்பிக்கை கொள்ளலாமே???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக