ஞாயிறு, டிசம்பர் 08, 2013

ஆண்களின் குணம்...



      "ரொம்ப சந்தோஷம்பா!" என்று சொல்லிவிட்டு அடுத்து "என்ன திடீர்னு?" என்றொரு கேள்வியையும் கேட்டார். "என்ன திடீர்னு?" என்ற கேள்வி என்னுள் "ஓர் தேடலை" விதைத்தது! ஏன் அவர் அப்படி கேட்டார் என்று யோசிக்க ஆரம்பித்தேன். ஆனால், அதே விசயத்தை என் தாயிடம் சொல்லியபோது "வாப்பா! வந்து சந்தோஷமா இருந்துட்டு போப்பா!! நானே கேட்கனும்னு இருந்தேன்" என்றார். என்னப்பன் மட்டும் ஏன் அப்படி கேட்டார் என்று யோசிக்க ஆரம்பித்தேன். செய்தி இது தான்: சென்ற வாரம் என்னப்பனிடம் அலைபேசியில் "இன்னைக்கு தான் விமானச்-சீட்டு" வாங்கினேன்; 25-ஆம் தேதி கிளம்பி 26-ஆம் தேதி ஊருக்கு வருகிறேன் என்றபோது தான் என்னப்பன் அப்படி கேட்டார். "என்ன திடீர்னு" என்பது ஓர் சாதாரண கேள்வி தான்! அதற்கு முந்தைய நாள் கூட அவரிடம் பேசினேன்; அப்போது கூட நான் ஊருக்கு போகும் திட்டம் இல்லை; அடுத்த நாள் காலை தான் "திடீர்னு" நானே விமானச்-சீட்டு வாங்கினேன்.

    அதனால், அவரின் கேள்வி மிக நியாயமானது; ஆனால், முந்தைய-நாள் என் தாயிடமும் தான் பேசினேன்; ஆனால், அவர் மட்டும் அப்படி ஏன் கேட்கவில்லை?! என்னப்பனும் அங்ஙனம் கேட்காமல் இருந்திருக்கலாமே?! என்ற கேள்வியும் எழுந்தது. இது தான், ஆண்களின் குணம் என்ற பேருண்மை புரிந்தது; இங்கே தான், பெண்ணிலிருந்து மாறுபட்டு "முரண்பட்டதாய்" ஆணினம் இருக்கிறது. எந்த ஒரு விசயத்தையும் "உயிரோடும்/உணர்வோடும்" மட்டும் பார்த்திட ஓர் பெண்ணால் மட்டுமே முடியும்; அது அவர்களுக்கு கிடைத்த வரம். ஓர் ஆண் மட்டும் "இந்த 2 உ-க்களையும்" தாண்டி உண்மை என்ற 3-ஆவது "உ"-வையும் ஆராய முற்படுகிறான். உண்மையை ஆராய்தல் தான் ஆண்மையின் அடையாளமாய் இருக்கிறது. இதையே ஓர் ஆழ்ந்த விசயத்தை கொண்டு பார்ப்போம்;  ஓர் பெண் தன் காதலன்/கணவன் ஆகிய ஓர் ஆணை "மிக எளிதில்" நான் உங்களை "முழுமையாய் நம்புகிறேன்" என்று கூறிவிடுவாள். அதை சார்ந்த அனைத்தையும் எளிதில் அந்த ஆண்-மகனுக்காய் செய்ய ஆரம்பிப்பாள்.

      ஆனால், ஓர் ஆண் தன் காதலி/மனைவி ஆகிய ஓர் பெண்ணை "அத்தனை எளிதில்" நான் உன்னை "முழுமையாய் நம்புகிறேன்" என்று (வாய்விட்டு)கூறிவிடுவதில்லை. சற்றே சிந்தித்து பாருங்கள்: அதனால் தான் ஓர் பெண் "என்னங்க என்னை உண்மையாகவே விரும்பறீங்களா?/ என்னை கடைசிவரைக்கும் கைவிட மாட்டீங்களா??/ என்னை யார் என்ன சொன்னாலும் விட்டுக்கொடுக்காமல் இருப்பீங்களா???" போன்ற கேள்விகளை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறாள். அதாவது, ஓர் பெண்ணின் சிந்தனை "உறவும்/உணர்வும்" வரை மட்டும் இருக்கிறது; ஆனால், ஓர் ஆண் இவையிரண்டையும் தாண்டி "உண்மை" என்னவென்பதையும் அறிய முற்படுகிறான். காதல்/திருமண பந்தத்தில் இணைந்த தருணத்தில்; அந்த ஆரம்ப காலத்தில் ஓர் பெண் தான் சார்ந்த ஆணிடம் மட்டுமன்றி ஊரார் அனைவரிடமும் "என் காதலன்/ கணவன் மாதிரி யாரும் இல்லை" என்று கூறுவாள்; அதில் எந்த அளவிற்கு உண்மை என்று  ஓர் பெண் ஆராய்வதோ/ கவலை கொள்வதோ இல்லை.

      அதனால் தான், அவர்களுக்குள் ஓர் பிரச்சனை வந்துவிட்டால், ஓர் பெண் உடனடியாய் அந்த உறவை "அறுத்து விட" துணிகிறாள். திருமணமான பெண் எனில், முதலில் கணவனை பிரிந்து "தந்தை வீட்டிற்கு" சென்றுவிடுவது; அவர்களால், ஓர் காதலியை போல் உடனடியாய் "அறுத்து விட" முடிவதில்லை. அதிலும் குழந்தை இருப்பின் - கண்டிப்பாய் உடனடியாய் "அறுத்து விடுதல்" பற்றி யோசிப்பதேயில்லை; ஆனால், பிரிந்து-இருக்க எந்த தயக்கமும் காட்டுவதில்லை. ஆண்கள் தவறே செய்யவில்லையா?! என்ற விதண்டா-வாதம் வேண்டாம்! நான், இங்கே பெரும்பான்மை சார்ந்த நிகழ்வுகள் கொண்டு ஓர் புரிதலை நோக்கி பயணப்படுகிறேன். "என் ஆணைப்போல் யாருமில்லை" என்று கூறிய அதே பெண் அதே ஊராரிடம் "ஒரு நாள் அந்த ஆளு கூட இருந்து பாருங்க!, தெரியும்!!" என்கிறாள். இந்த சொற்றொடர் வந்த பின், அங்கே எவராலும் ஏதும் பேச இயலாது போகிறது. ஆக, இந்த 2 நிலையிலும் - ஓர் பெண் "உண்மை" என்னவென்பது பற்றி சிந்திப்பதே இல்லை.

        ஒரேயொரு விசயத்திற்கு எப்படி 2 உண்மைகள் இருக்க முடியும்? ஓர் ஆணுக்கு காதல்/திருமண பந்தத்தில் இணைந்த தருணத்தில் அவனின் பெண் மீது சந்தேகம் (எது குறித்தும்) இருக்கும். ஆனால், ஓர் கட்டத்தில் அவன் உண்மை அறிந்து நம்பிக்கை கொள்கிறான்; அதன் பின், அவனின் சிந்தனையும் செயலும் உறவை விரிவுபடுத்துவதில் (குழந்தை, மற்ற உறவுகள் என) இருக்கும். அவனின் நம்பிக்கை எந்த சூழலிலும் மாறுவதில்லை. என்னப்பனின் அந்த கேள்வி! ஓர் உண்மை/விளக்கம் வேண்டியே! அதே உண்மை/விளக்கம் தேடல்தான் - ஒட்டுமொத்த ஆணின் குணம் பற்றி என்னை அலச வைத்திருக்கிறது. இங்கே இன்னுமொரு சிக்கலும் இருக்கிறது; தன் மகன்/தந்தை - உறவுகளிடம் இருக்கும் குறைகளை/தவறுகளை தாண்டி - அவர்களை ஓர் பெண்ணால் நேசிக்கமுடிவது போன்றே; தன் காதலன்/கணவன் (மற்றும் பிற உறவுகள்) இடத்திலும் இருக்கமுடியும் எனின், பெரும்பான்மையான பிரச்சனைகளின் தடயமே அழிந்திடும். எனவே, என்னுடைய பார்வையில் ஓர் ஆணின் குணம் எப்போதும்...

உண்மையை சார்ந்தே பயணப்பட்டு கொண்டு (இருக்கிறது/இருக்கும்)!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக