ஞாயிறு, டிசம்பர் 01, 2013

பெண்கள் "மது"அருந்துவது தவறா???



     முக-நூலில் நண்பர் ஒருவர் 2 பெண்கள் "டாஸ்மாக்" கடையில் நிற்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அவர்கள் ஏதும் மது வாங்கினார்களா? என்பது பற்றி (புகைப்படம் மூலம்)எனக்கு எந்த உறுதியான-சான்றும் இல்லை! அதனால் தான் "நிற்கும்" என்று கூறினேன். உடனே, இது பற்றி (வழக்கம்போல்)பலரும் தங்களுடைய வாதங்களை "காமெண்ட்டு"களாய் கூறி இருந்தனர்; ஓரிருவர் தவிர மற்ற எல்லோரும் - அது தவறு, பண்பாடு கெட்டுவிட்டது, பெண்ணென்றால் அடக்கம் வேண்டும் - இப்படி பலவிதமாய் சாடி இருந்தனர். நானும் அதற்கு "காமெண்ட்டு" எழுதி இருந்தேன்: "ஆணென்ன? பெண்ணென்ன?? நீயென்ன??? நானென்ன???? எல்லாம் ஓர் (குடிகார)இனம் தான்" என்பதே அது. அதன் பின், என்னுள் ஓர் கேள்வி எழுந்தது?! பெண்கள் "மது"அருந்துவது தவறா??? என்று! உடனே, இந்த தலையங்கம் எழுத ஆரம்பித்துவிட்டேன். வெகு-நிச்சயமாய், இது அவர்களின் சுதந்திரம் சார்ந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

       ஓர் முகம்மதிய சகோதரர் - திருக்குரானில் சொல்லப்பட்டிருக்கும் ஓர் செய்தியை கொடுத்து அதன் சான்றையும் கொடுத்து இருந்தார். அதில் - பெண்கள் "முன்-கை மற்றும் முகம்" போன்ற உறுப்புகளை மற்றும் தான் வெளியில் காட்டலாம்; மற்ற உறுப்புகளை மறைக்க வேண்டும் என்று இருப்பதை குறிப்பிட்டு - அதை அந்த பெண்களிடம் தெரிவியுங்கள் என்று கூறியிருந்தார். முகம்மதிய சமூகத்தியர் மேல் எனக்கு அளவு-கடந்த மரியாதையும், அவர்கள் நம்பிக்கை குறித்து பெருத்த ஆச்சரியமும் இருப்பது வேறு விஷயம்; அவர்களின் உருவிலா-வழிபாட்டை பற்றி கூட மிகப்பெருமையாய் எழுதியவன் நான். ஆனால், இந்த விசயத்தில் எனக்கு பெரிதும் உடன்பாடு இல்லை; இது, அவர்கள் மதத்தில் "முறையாய்" கடைபிடிப்பதை நானும் அறிவேன்; ஆனால், அதில் ஓர் அடக்குமுறை இருப்பதாய் எனக்கு தெரிகிறது - அவ்வாறு சொல்லியெல்லாம் "மற்ற மதத்தில்" இருக்கும் இக்காலப் பெண்களை இதுபோன்ற விசயத்தில் கட்டுபடுத்த முடியாது என்று தோன்றியது!

    இன்னுமொருவர் "மாதராய்ப் பிறந்திடவும் நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா..." என்ற முண்டாசுக் கவிஞன் வரிகளை குறிப்பிட்டு இருந்தார். இதைப்படித்தவுடன் - எனக்குள் ஓர் பொறி தட்டியது; முண்டாசுக் கவிஞன் என்ன சொல்ல வந்திருப்பார் என்று யோசிக்க ஆரம்பித்தேன். முண்டாசுக்கவிஞன் - பெண்மையும், அவர்களுக்குள் இருக்கும் தாய்மையும் அவர்களுக்கே உரித்தான முதல் மற்றும் தனிப்பெருமை என்பதால் தான் அப்படி சொல்லி இருக்கவேண்டும். இது புரிந்ததும், மேலே குறிப்பிட்ட முகம்மதிய சகோதரர் குறிப்பிட்டதும் இது சார்ந்தே இருக்கவேண்டும் என்ற உண்மை புரிந்தது; அவர்கள் இதை அணுகும்-முறை வேண்டுமானால் அடக்குமுறை கொண்டதாய் இருக்கலாம்; சொல்ல எத்தனித்திருக்கும் கருத்து ஒன்றே என்று தோன்றியது. எனவே, நம் முன்டாசுக்கவிஞனும், திருக்குரானும் - பெண்மையும், தாய்மையும் போற்றி பாதுகாக்க படவேண்டும் என்ற ஒன்றுபட்ட கருத்தில் தான் இவைகளை சொல்லி இருக்கவேண்டும் என்பது புரிந்தது.

        இவ்விரண்டும் புரிந்த பின் - மற்றவர்கள் கருத்தும் இது சார்ந்ததாய் தான் இருக்கவேண்டும் என்பது   புரிய ஆரம்பித்தது. அதை அவர்கள் தவறான விதமாய், தவறான வார்த்தைகள் கொண்டு வேண்டுமானால் சொல்லி இருக்கலாம். ஆனால், அவர்களின் அடி-மனதில் - அவர்களுக்கு தெரிந்தோ/தெரியாமலோ இந்த எண்ணம் தான் இருந்திருக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது. இந்த புரிதல் வந்த பின், இந்த விசயத்தை எப்படி தெளிவாய் பார்ப்பது என்று யோசிக்க ஆரம்பித்தேன். எனக்குள் ஓர் கேள்வி எழுந்தது; தாய்மை என்பது பெண்களுக்கு மட்டுமே சாத்தியமானது என்ற இயற்கை/இறைவனின் நிமித்தத்தால் - அவர்கள் இப்படி மது-அருந்துவது போன்ற செய்கையை செய்வது தவறு என்று சொல்வது எப்படி நியாயமாகும்?! என்ற கேள்வி எழுந்தது. 8 ஆண்டுகள் ஐரோப்பிய-கண்டத்தில் வாழ்ந்தபோது "நிறைய மது அருந்தும் - நிறைய புகைப் பிடிக்கும்" பல பெண்கள் தாய்மை அடைந்து, தாய்மையை அனுபவித்து நல்ல தாயாய் இருப்பதை பார்த்திருக்கிறேன்.

      அங்கே, பெண்கள் மது-அருந்துவது போன்ற செய்கைகள் செய்வது தவறாய் பார்க்கப்படுவதில்லை. மேலும், ஒவ்வொரு பெண்ணும் - தாய்மை அடைய ஆயத்தமாகும் முன் 2 மாதங்கள் "பல விதமான சோதனைகள் செய்து, பல விதமான மருந்துகள் உட்கொண்டு" (புகைப்பிடித்தல், மது-அருந்துதல் போன்ற பல விசயங்களை அறவே நிறுத்தி) பின்னர் தான் தாய்மை அடைய தேவையான செயலில் ஈடுபடுகின்றனர். இது போன்ற எவ்வித பழக்கமும் இல்லாதவர்களும் கூட - அதே முறையில் தான் தாய்மை அடைகின்றனர். அவர்கள் சார்ந்த ஆண்களும் அதற்கு எல்லாவிதத்திலும் உதவியாய் இருந்து பொறுமை காக்கின்றனர். இங்கே - குறிப்பாய், ஆண்கள் சார்ந்து எந்த நிபந்தனையும் இல்லை; அவன் - எதை வேண்டுமானாலும் செய்யலாம். இது சார்ந்த எந்த புரிதலும் இங்கே இல்லை; ஒரு பெண்ணின் தாய்மையில் ஆணுக்கும் பங்குண்டு என்பதை எவரும் உணர்வதே இல்லை. அதனால் தான் - ஓர் பெண் மதுக்கடையில் நிற்பது-கூட தவறு என்பதாய் பார்க்கப்படுகிறது. எனவே, என்னுடைய பார்வையில்...

ஓர் பெண் "மது-அருந்துவதில்" எந்த தவறும் இல்லை!!!     

பின்குறிப்பு: ஆயினும், பெண்கள் யாரும் - தாய்மை அடையும் அந்த வாய்ப்பு/வரத்தை இயல்பாய் பார்க்கவேண்டும் என்ற வேண்டுகோளும் எனக்கு இருக்கிறது. ஒரு பெண் தாய்மை அடைவதில் வேண்டுமானால் - ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் சரிவர பங்கும்/பொறுப்பும் - இருக்கலாம்; ஆனால், தாய்மையை - அனுபவிப்பது/ காப்பது/ நிறைவு செய்ய வைப்பது - போன்ற எதிலும் "ஆண்களுக்கு எந்த வாய்ப்பும்"இல்லை என்பதை பெண்கள் உணரவேண்டும். அதனால் தான் முண்டாசுக்கவிஞன் "நல்ல மாதவம், செய்திடல் வேண்டுமம்மா" என்றார். அதற்காய் - சில நேரங்களில், சில விசயங்களில் - அவர்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டுமெனில், அவர்கள் அதை மனமுவந்து செய்யவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக