ஞாயிறு, அக்டோபர் 26, 2014

கத்தி (2014)



      நேற்று (25.10.2014) அபுதாபியில் உள்ள சஃபீர்-மால் திரையரங்கில் 13:00 மணி காட்சிக்கான  நுழைவுச் சீட்டு வாங்கிவிட்டு; அருகே இருக்கும் "சங்கீதா"வில் ஃபுல்-மீல்ஸ் அடித்துவிட்டு திரையரங்கினுள் நுழைந்து அமர்ந்தேன். சரியாய் 13:00 மணிக்கு காட்சி துவங்கியது. மிகச் சிறந்த படம் இல்லை என்றாலும்; விஜய் படங்களில் ஒரு மாறுபட்ட படம். ஆனால், இன்னமும் விஜய் படங்களில் எனக்கு பிடித்த படம் என்றால் அது "துப்பாக்கி" தான்! துப்பாக்கி தான் இந்த படத்தை பார்க்கவேண்டும் என்ற என் ஆவலை; அதிலும், திரையரங்கில் பார்க்கவேண்டும் என்ற என்னத்தை உருவாக்கியது. முருகதாஸ் மேலும், அப்படியொரு நம்பிக்கை! நான் மிகவும் எதிர்பார்த்துவிட்டேன் போல?! ஆனால், அவர்கள் அளவில் சரியாய் செய்திருக்கிறார்கள் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை! 

    என் பார்வையை பகிர்வதற்கு முன், பெரும்பான்மையான விமர்சனங்கள் சொல்லும் ஒரு குற்றச்சாட்டு: "கோலா"பற்றி விளம்பரம் செய்த விஜய்-க்கு இந்த படத்தில் நடிக்க தகுதியில்லை என்பது!! விஜய் என்பவர் ஒரு நடிகர். இரண்டிலும், அவர் நடித்திருக்கிறார். "கோலா"விளம்பரம் தவறென்றால் அதை ஒதுக்கி விடுங்கள்! நல்லதை எடுத்துக்கொள்ளுங்கள். ஏன்... மதுபான விளம்பரங்களில் "எத்தனை கோடி"கொடுத்தாலும், நடிக்க மாட்டேன் என்ற சச்சின் கூட பல வருடங்கள் "பெப்சி"விளம்பரத்தில் நடித்திருக்கிறார். அதை நாமெல்லாம், கை தட்டி கொண்டாடியவர்... இன்னமும் கொண்டாடுபவர் தானே?! இம்மாதிரி, மற்றும் சில நடிகர்கள் முரணான காதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஒரு பட்டியலை "ஃபேஸ்புக்"கில் பார்த்தேன். அங்கே கேட்டிருக்கும் கேள்வியையே நானும் இங்கே கேட்கிறேன்: "விஜய்"செய்தால் மட்டும் என் தவறு? எனவே, அதையெல்லாம் விடுத்துவிட்டு படம் சொல்லும் செய்தியைப் பார்ப்போம்.

      மேலும், இவர்களிடம் எம்.ஆர்.ராதா (குறிப்பாய் இரத்தக்கண்ணீர்) ஸ்டைலில்: "ஏண்டாப்பா! நியாயஸ்தன்களா?!... ஒடம்புல துணி இருக்கா? இல்லையாண்ணே?? தெரியாம டிரெஸ்ஸ போட்டுக்கிட்டு பல படங்கள்லையும் நடிச்ச பொண்ணுங்க அம்மனா நடிக்கும் போது எங்கடாப்பா போனீங்க?!... அடப்பாவிகளா! கொஞ்சோண்டு ட்ரெஸ் போடறதால-மட்டும், அந்த பொண்ணுங்கள "அம்மாதிரி"ன்னு நெனைக்கறதும் தப்பு! அம்மனா நடிச்சதால, கடவுளா நெனைக்கறதும் தப்புடா! தப்புடாப்பா!... தப்பு!!..." - இப்படித்தான் சொல்ல தோணுது. அவர்களை வெறும் நடிகர்/நடிகையராய் மட்டும் பார்போம். ஏதேனும் ஒரு தவறாவது செய்து, பின்னர் அதை திருத்தி வளர்ந்தவர்கள் தான் நாம் எல்லோரும்! விஜய்யும் அதை உணர்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இல்லை என்றாலும்; பரவாயில்லை. அது வெறும் நடிப்பு! தேவையானது/தேவையற்றது என்பதை நாம் தான் முடிவு செய்யவேண்டும்! 

       இடையில், படத்தின் கதை வேறொருவருடையது என்பதே, பலரும் குற்றம் சாட்டிக்கொண்டு இருக்கிறார்கள், மேலும், அது சார்ந்த வழக்கும் நடந்து கொண்டிருப்பதை கேள்வி. இப்போதைக்கு, எனக்கு கதை எவருடையது என்பது பற்றி கவலை இல்லை; இது, அவர்களின் பிரச்சனை. மேலும், நீதிமன்றத்தில் வழக்கில் இருக்கும் ஒன்றைப் பற்றி, நான் கருத்து சொல்ல ஏதுமில்லை! வழக்கம்போல், கதை என்னவென்பது பற்றி எந்த தகவலும் என்னுடைய பார்வையில் இருக்காது. பலரும், முழுக்கதையும் சொல்லி இருக்கலாம்! எனக்கு அதில் உடன்பாடு இல்லை. எனவே, படத்தை பற்றிய என் நடுநிலையான பார்வை மட்டும் கீழே:
  • "லைக்கா" மொபைல் லோகோவும், விளம்பரமும் தமிழகத்தில் மட்டும் தான் நீக்கப்பட்டு இருக்கிறது போலும்! இங்கே... எந்த "ஆரவாரமும்" இல்லாமல் அந்த விளம்பரத்தோடு தான் படம் ஆரம்பித்தது. அடப்பாவிகளா!... நம் இலங்கைத் தமிழர்கள் அதிகம் இருப்பது, இலங்கையிலும்; வெளிநாடுகளில் தானே?! அவர்கள் எல்லோரும் அமைதியாய் தானே பார்க்கிறார்கள்?! யாருக்காக அய்யா?!... இன்னமும் இந்த அரசியல்? "(தமிழ்/தனி) ஈழம் கனவு, இனியும் வேண்டுமா?!" என்ற என் தலையங்கம் தான் (மீண்டும்)நினைவுக்கு வந்தது.
  • பெருசு/பழசு என்று முதியோர்களை ஒதுக்கி "முதியோர் இல்லங்களை" வளர்த்துவிட்ட இந்த சமுதாயத்தில்; ஒரு முதியோர்-கூட்டத்தை வைத்துக்கொண்டு படத்தின் கருவை நகர்த்தி இருப்பது; அதிலும், அதில் விஜய் போன்ற நடிகர் நடித்திருப்பது பாராட்டுதலுக்கு உரியது. சபாஷ்!
  • "டைட்டில்"எழுத்துக்கள் ஓடும் போது, பின்னணியில் வரும் நிழற்படங்களும்; சிறு-"அனிமேஷன்"களும் படத்தின் கருவோடு சம்பந்தப்பட்டவை! முன்பே, கதையைப் பற்றி சிறிது தெரிந்திருந்ததால் தான் என்னால், அதை இரசிக்க முடிந்தது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை! ஆனால், இதுவரை எவரும் அது பற்றி சொல்லவில்லை; கவனிக்கவில்லையோ என்று கூட தோன்றியது! என்பதால், அதை இனிமேல் படம் பார்க்கும் பலரும் இரசிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இதை சொல்கிறேன்.
  • சிறைச்சாலையில் இருந்து விஜய் தப்பிக்கும் அந்த முதற்காட்சியில் "ஒரு லாஜிக்கே... இல்லையேப்பா!" என்று நாம் யோசிக்க சிறிது அவகாசம் கொடுத்து; அதை நாம் மேலும் சிந்திக்கும் முன்னர் அதை "உடைத்திருப்பது" பாராட்டப்படவேண்டிய ஒன்று! படத்தில் இது போல் பல காட்சிகள்.... "லாஜிக்" இல்லாமல் இருக்கறதே?! என்று நாம் யோசிப்பதை இயக்குனரும் யோசித்து அதை காட்சிகளால் விளக்கி இருப்பது அருமை. குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொரு காட்சி: ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்று விஜயை பேட்டி எடுப்பது போல் வரும் காட்சி.
  • கம்யூனிசத்தை ஒரேயொரு இட்லியை உதாரணம் கொண்டு விவரித்து இருப்பது சிறப்பு! படத்தில், ஆங்காங்கே, இதுபோல் பல கூறிய-வசனங்கள் உள்ளன. குறிப்பிட்டு சொல்ல... "நம்மள பட்டினி போட்டவங்களுக்கு; நாம சோறு போடணும்!"; "தற்கொலை செய்துகொள்வது என் மதத்திற்கு எதிரானது; ஆனால், ஒரு ஏழைக்கு துணை போகணும்ங்கற (சரியான வசனம் நினைவில் இல்லை!) செயலை முன்னிறுத்தி இதை செய்கிறேன்!" போன்ற வசனங்கள்.
  • இறந்தவர்களை ஒவ்வொருவராய் பார்த்துவிட்டு; ஒரு முகம்மதியர் சடலத்தின் அருகே அமர்ந்து விஜய் அழும் காட்சி, அருமை! இதற்கு முன் "துள்ளாத மனமும் துள்ளும்" என்ற படத்தில் விஜய் அழுவது எனக்கு பிடித்திருந்த ஒன்று. "அழுவது போல் நடிப்பது" மிகவும் கடினமான ஒன்று! விஜய்யின் நடிப்பு திறன் அதிகரித்து இருப்பதாய் எனக்கு தோன்றியது. "ஸ்டீரியோ டைப்"விஜய் நடிப்பைப் பார்த்து; வெறுப்பானவர்களில் நானும் ஒருவன் என்பதால், இதை அழுந்த சொல்ல நினைக்கிறேன்! விஜயின் நடிப்பில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது; ஆனால், இன்னும் நெடும்தூரம் போகவேண்டும்!
  • விஜயின் நண்பராய் வரும் சதீஷ் பல இடங்களில் "சபாஷ்" வாங்குகிறார். குறிப்பாய் "I love him"னு; சமந்தா சொன்னதும்; என்னடா?! இது??!! இந்த பொண்ணு, லூசு மாதிரி சொல்லுதேன்னு நாம யோசிச்சுக்கிட்டே... அதிகமா கடுப்பாகறதுக்குள்ள; சதீஷை வைத்து அந்த காட்சியை - குறிப்பாய்... அந்த வசனத்தை நியாப்படுத்தி இருப்பது பாராட்டுக்கு உரியது.
  • சமந்தா அணிந்துவரும் "ச்சுடிதார்கள்" அனைத்தும்; மிக-எளிமையாய்; அதே சமயம் "மிக அழகாய் (அவர் உட்பட!)" காட்டுகிறது. ஆனாலும் "ராஜா ராணி"பட பார்வையில் சொன்னது போல், இவருக்கும் குட்டைப்பாவாடை (என்னளவில்)பொருத்தமாய் இல்லை!
  • சில சண்டைக்காட்சிகள் இரசிக்கும் வண்ணம் இருக்கின்றன. ஆனால், கீழே சொல்லி இருப்பது போல், பல அவலங்களும் உள்ளன.
  • படத்தின்-கரு பெரும் பாராட்டுதலுக்கு உரியது! பன்னாட்டு நிறுவனங்களால், அழிந்து வரும் விவசாய நிலங்கள் பற்றிய விழிப்புணர்வை அருமையாய் விளக்கி இருக்கிறது. அதிலும், கதாநாயகன் முதுகலை "நீரியல் (Hydrology)" படித்திருப்பதாய் காட்டி இருப்பது குறிப்பிட வேண்டிய ஒன்று! ஏனெனில், இப்போது வரும் பல படங்களில் பல கதாநாயகர்கள் என்ன "வேலை" செய்கிறார்கள் என்றே காட்டுவதில்லை. ஆனால், தண்ணி அடிக்க; தம் அடிக்க; மற்றும் பலதுக்கும் சர்வ-சாதரணமாய் அவர்களிடம் பணம் இருக்கும்! இங்கே அதற்கு விதிவிலக்கு.
  • அதேபோல், இன்னமும் பலராலும் உணரப்படாத "தண்ணீர்"வறட்சியை சாட்டையால் அடித்தது போல் சொல்ல முயன்றிருக்கும் விதம் வெகுவாய் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
  • பெரும்பாலும், இம்மாதிரியான கதைக்களங்கள் கொண்ட படங்கள்; பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும். அப்படி ஏதும் இல்லாமல் (சம்பளம் பற்றி நான் குறிப்பிடவில்லை!!!), மிக-எளிமையாய் படம் எடுக்கப்பட்டு இருப்பதும் சிறப்பு! ஒரு பாடலில் சில செட்டிங்கள், செலவு கண்டிருக்கும். ஆனால், அந்த "கிதார்"உட்பட அந்த செட்டிங்குகள் அனைத்தும் அருமை.
  • போராட்டம் முடிந்து விஜய் நெடிய-வசனம் பேசும்போது பின்னணி இசை ஏதும் அறவே இன்றி காட்சி படுத்தி இருப்பது, மிகவும் அருமை! குறிப்பாய், நம் ஊரில் இரசிகர்களின் விசில்-சத்தத்திற்கு இடையில் வசனங்கள் நன்றாக கேட்கும்.
  • "இம்மாதிரி படத்தில் சொல்லிவிட்டால்" ஆயிற்றா? என்று பலரும் வாதிடலாம்! நாம் ஒப்புக்கொண்டாலும்/ ஒப்புக்கொள்ளா விட்டாலும் திரைப்படம் என்பது ஒரு வலிமை-மிகுந்த ஆயுதம். பல்வேறு தரப்பினரும், "சூரியூர் போராட்டம் போல்" களத்தில் நின்று இதுசார்ந்து போராடுவதை யாரும் மறுக்கவில்லை; மறுக்க முடியாது! அவர்களுக்கான, ஆதரவாய் இதை எடுத்துகொள்வோம். இம்மாதிரி பல தரப்பினரும், களத்தில் பனி செய்துகொண்டிருப்பினும்; இந்த திரைப்படம் தான் அதை பெருமளவிற்கு வெளியுலகிற்கு கொண்டு வந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இப்போது, நம்மில் பலருக்கும் இது தெரிந்திருக்கிறது! இப்போது, நாம் என்ன செய்யப்போகிறோம்?! என்று நம்மை நாமே கேள்வி கேட்பது தான் புத்திசாலித்தனம். நம்மிடம் கொண்டு வந்து சேர்த்ததே, அவர்களின் மிகப்பெரிய கடன் என்பதாய் தான் நாம் உணரவேண்டும். 
   
         படத்தில், வழக்கம் போல், பல படங்களிலும் வருவது போல் சில அபத்தங்களும்/லாஜிக்-மீறல்களும் {உதாரணம்: சர்வசாதாரணமாய் ஒரு நீதிபதியை மிரட்டுவது!} இருப்பினும்; சிலவற்றை கண்டிப்பாய் மாற்றவேண்டும் என்ற ஆதங்கத்தில் இங்கே பட்டியல் இட்டுள்ளேன்!
  • முதலில், எதற்கு இரட்டை வேதங்கள் என்பது இன்னமும் எனக்கு விளங்கவே இல்லை! ஒரு வேடத்திற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. அந்த வேடத்தை நீக்கி இருந்தால், சில மணித்துளிகள் குறைந்திருக்கும். அது, படத்தை இன்னமும் கருத்தை மையப்படுத்தி/முதன்மை படுத்தி சொல்ல பயன்பட்டிருக்கும். அது, ஒரு சருக்கல்! 
  • நான் "துப்பாக்கி"படத்திலேயே சொன்னது போல், கதையின் நாயகியாய் வருபவருக்கு போதுமான அளவிற்கு காட்சி அமைப்புகள் இல்லை எனில்; அந்த படத்திற்கு கதாநாயகியே தேவை இல்லை! என்ற என் கூற்றில் (இன்னமும்)எந்த மாற்றமும் இல்லை! இந்த படத்திலும் சமந்தாவிற்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லை எனினும், பல படங்களிலும் வருவது போல் (ஒரு சில பாடல்கள் தவிர!)அவரை "சதைப்பிண்டமாய்(மட்டும்)" காண்பிக்கவில்லை என்பது ஆறுதல். "ராஜா-ராணி" திரைப்படத்தில் 2 கதாநாயகிகள் இருந்தும்; அவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் இருந்தன. அந்த அளவில் இல்லை எனினும், ஓரளவிற்காவது; வாய்ப்பு இருக்கவேண்டும். இல்லையேல்... கதாநாயகியே தேவை இல்லை என்பது என் பார்வை.
  • இம்மாதிரி வலுக்கட்டாயமாய், கதாநாயகியை ஒரு படத்தில் திணிக்கும் போது, வேறு வழியே இல்லாமல்; பாடல் காட்சிகள் திணிக்கப்படுகின்றன. சாதரணமாகவே, அம்மாதிரியான பாடல்கள் நம்மை வெறுப்பேற்றும்! அதிலும், இம்மாதிரியான ஒரு கதைக்களத்தில் "கதாநாயகன்" சமுதாய நோக்கில் "குழாயில்"அடைந்து போராட்டம் செய்யும் போது "ரிங்கை(மோதிரம்) மாற்றிக்கொண்டு; engaged என்ற வார்த்தையை கொண்டு" ஒரு அபத்தமான வசனம் வைப்பதே எரிச்சலான விசயம்! அதிலும், அங்கே ஒரு பாடலை வைப்பது எரிச்சலிலும், எரிச்சல்.
  • போராட்டத்தின் போது, அந்த சமந்தாப் பொண்ணு "சமத்தா" கதாநாயகன் கூடவே சுத்துது! ஒரு வசனம் இல்லை!! "ஒரு நோட்டீஸ்"கூட யாருக்கும் கொடுக்கலை!! இப்படி பல காட்சிகள்... கடைசில டைரக்டருக்கே போரடிச்சு ஒரு சீன்ல "சென்னையில, மொத்தம் எத்தனை ஏரி இருக்குது?!"ன்னு கேட்டு ஒரு-வசனம் பேச வச்சுட்டாரு போல?! ஆனால், எல்லா சீன்லயும் "நல்லா டிரஸ் பண்ணிக்கிட்டு" கூடவே சுத்துது!! ;)
  • ஆ... ஊன்னா... விஜய் "ப்ளூ பிரிண்ட்" கேக்கறாரு! உடனே, அதுவும் வந்துடுது!! அவரு, ச்சும்மா அனாவசியமா "அனிமேஷன்" உதவியோட "பூமியைப் பிளந்து"சென்று பார்த்துடுவாரு! "கவுண்டர் ஸ்டையிலுல; அடேங்கப்பா! ரீலு அர்ந்து போயிடாதாப்பா!!"ன்னு தான் கேட்கணும்.
  • அவன "செதில், செதிலா வெட்டனம்!"ங்கறது பல படத்துலயும் வர்ற ஒரு வசனம்! அடப்பாவிகளா! மனுசனுக்கு மீனு மாதிரி செதிலாவா? இருக்குன்னு கேட்கனும்னு தோணுது! ஆனால், யாருக்கிட்ட கேட்பதென்று தான் தெரியவில்லை! 
  • மக்களே! தயவு செஞ்சு "எட்டி உதைத்ததும்"ஒருவர் பறந்து போற மாதிரி சீன்களை இனிமே வைக்காதீங்கய்யா! உங்களுக்கு புண்ணியமா போகும்! ஒன்னும் வேணாம்யா... ஒரு 25-கிலோ (எடைக்)கல்லை, "யாராவது"ஒரு ஹீரோவை எட்டி உதைச்சு பறக்க வைக்க சொல்லிட்டு; அசால்டா நிக்க சொல்லுங்க பார்ப்போம்! நல்ல பாடி-பில்டிங் உள்ளவங்களுக்கே கஷ்டம் அய்யா! என்ன தான் "அவங்க துணை நடிகர்கள்"னாலும் இப்படியாய்யா பந்தாடுவீங்க?! தயவு செஞ்சு இனிமேலயாவது நிறுத்துங்கப்பா!!! 
  • பின்னணி இசை பல இடங்களில் நெருட வைக்கிறது. அனிருத் இன்னமும் "விஜய் படத்திற்கு" இசை அமைக்கும் வாய்ப்பு-அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை போலும்! பெரும்பாலும், பின்னணியில் பாடல்-வரிகளே இசையாய் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. சில சண்டைக் காட்சிகள் போன்று சில இடங்களில் இரசிக்கும் வண்ணம் இருப்பினும், பல இடங்களில் நெருடல்கள் தான்!
  • உணர்ச்சி பொங்கி பேசும் பல காட்சிகள் "விஜய்யின்; வழக்கமான - அதிகப்படியான - உடல்மொழி"யால் எரிச்சல் தருவது மட்டுமன்றி; அந்த காட்சிகளின் அழுத்தத்தை குறைத்து விடுகிறது! இதை விஜய்யை காணும் வாய்ப்பு இருக்கும் யாரும் அவருக்கு எடுத்துக் கூறினால், நமக்கு "நடிப்பில் சிறந்த"இன்னுமோர் நடிகர் கிடைப்பார்! என்பது என் நம்பிக்கை.

என்-எண்ணம்: படத்தின் கரு/சமுதாயப்-பார்வை/விஜய்யின் வித்தியாசப் படம் - இப்படி ஏதேனும் ஒரு அடிப்படையிலாவது; ஒவ்வொருவரும் ஒருமுறையாவது பார்க்கவேண்டும் என்பதே என் எண்ணம். ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் பார்ப்பது அவரவரின் விருப்பம்; ஆனால், கண்டிப்பாக ஒருமுறையேனும், அதிலும் (பார்க்கும் வாய்ப்பிருப்போர்) திரையங்கில் பார்க்கவேண்டும்! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக