வெள்ளி, நவம்பர் 18, 2011

முன்னுரை...

        என்னுடைய முதல் தலையங்கமான "எம்மகள் (அவள் பெயரும்) தோன்றிய கதை"-யில் குறிப்பிட்டது போல், என்னப்பன் ஒரு தமிழ்ப் புலவர். அவர் பெயர் திரு. இளமுருகு அண்ணாமலை; அவர் நிறைய கவிதைகளை/ கட்டுரைகளை எழுதி இருக்கிறார். ஏனோ, அவர் அதை ஒரு சேர்க்கையாய், ஒரு பதிவாய் செய்ய முனைய வில்லை. அவருக்கு, என் போன்று ஒரு வாய்ப்பு (வலைப்பதிவு போல்) அமையவில்லை என்பதும் உண்மை. நான் எத்துனையோ முறை அவரிடம் அவரின் படைப்புக்களை ஏதேனும் ஒரு இதழில் வரும்படியாய் (முடிந்தால் தொடர்ச்சியாய்) முயற்சி செய்யுங்கள் என்று மன்றாடியும், வற்புறுத்தியும் வேண்டியிருக்கிறேன்; அவரால், முடியவில்லை. அவரின் அகவை (09.11.1939; சென்ற வாரம் தான் 73-ஐ துவங்கியிருக்கிறார்) மற்றும் குடும்ப சூழல் போன்றவை அவரை அவ்வாறு செய்ய அனுமதிக்கவில்லை என்பதையும் ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும். இன்னமும், எங்கள் ஊரில், சிலர் திருமணம் போன்ற விசேட நிகழ்ச்சிக்களுக்காய் கேட்பின், அவர் எழுதிக் கொண்டுதானிருக்கிறார்.

            எனக்கு இன்னமும், நினைவில் இருக்கிறது; அவரின் சொற்பொழிவை "புதுவை" வானொலி நிலையத்தில் பல ஆண்டுகளுக்கு முன் பேசக் கேட்டது; தொடர்ந்து பல ஆண்டுகளாய் பேசிக்கொண்டிருந்தார். வானொலியுடன், வீட்டுத் தெருவில் சுற்றமும்/ நட்பும் கூடி காத்திருப்போம்.  அவர் அப்போது புரட்சிக் கவிஞர் "பாரதிதாசன்" அவர்களின் மகனார் "உயர்திரு. மன்னர் மன்னன்" அவர்களுடன் இனைந்து பேசுவார். இருவருக்குள்ளும் ஒரு நட்பு உண்டு; இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது. இன்னமும் அவர்களிருவரும், சந்திக்க நேர்ந்திடின் சிறிது நேரம் அந்த நட்புடன் அளவலாவுவர். ஏனோ, அந்த வானொலியில் ஆற்றிய சொற்பொழிவும் கூட ஒரு காலகட்டத்தில் நின்றுவிட்டது. அந்த நேரத்தில், வானொலி என்பது மிகப் பெரிய ஊடகம். அதுவும், எங்கள் ஊர் புதுவைக்கு அருகில் என்பதால், எங்களுக்கு சென்னை வானொலி நிலையத்தை விட, புதுவை வானொலி மிகவும் பரிச்சயம். ஏனோ, அவரின் திறமை ஒரு சிறிய வட்டத்துக்குள்ளேயே அடங்கி விட்டது.

           என் தந்தை அடிக்கடி உபதேசிக்கும் "நடந்தவை, நடந்தவையாக இருக்கட்டும்; இனி, நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்" என்பதன் அடிப்படையில், இப்போது என்ன செய்ய வேண்டும் என யோசிக்க தொடங்கினேன். அப்போது தான், என்னுடன் இப்போதிருக்கும் அவரின் படைப்புக்களை கொண்டு, என்னுடைய வலைப்பதிவிலேயே அவருக்கென ஒரு பிரிவை "என்னப்பன் பதிவுகள்" என்று உண்டாக்கியிருக்கிறேன். முதலில், என்னுடன் இருப்பவைகளை சேகரித்து பதிய உள்ளேன். இரண்டு பதிவுகளை இப்போதே வெளியிட்டும் இருக்கிறேன். என்னப்பனையும், அவரிடம் உள்ள அவரின் படைப்புகளை சேகரிக்க சொல்லியிருக்கிறேன். அடுத்த முறை இந்தியா செல்லும் போது, அவைகளையும் கொணர்ந்து வந்து பதிய முடிவு செய்துள்ளேன். அவரை இன்னமும் எழுதவும் வலியுறுத்தி இருக்கிறேன். என்னுடைய (தமிழ்)அறிவின் அடிப்படையில் அவரின் தமிழறிவும், தமிழ்த்திறனும் அபாரானமானவை. அவைகளை, என்னால் முடிந்த அளவில் எத்துனை நபர்களுக்கு கொண்டு சேர்க்க முடியுமோ அதை செய்வேன்.

           தமிழை இவர் வளர்க்கவேண்டும்/ வளர்க்கவில்லை; அவர் வளர்க்கவேண்டும்/ வளர்க்கவில்லை என்று புலம்புதலை தவிர்த்து, என்னுடைய மற்றும் என்னப்பன் படைப்புக்களை முடிந்த அளவிற்கு மற்றவரை சென்று சேர்க்கவே இந்த முயற்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக