வெள்ளி, நவம்பர் 18, 2011

நன்றி நவிலல்...


(நன்றி "சொல்ல" மறப்பது"ம்" நன்றன்று!!!)
*******

              என்னை ஊக்குவித்தவர்களுக்கும், இன்னும் ஊக்குவிக்கப் போகிறவர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும் என உணர்ந்தேன்; அதனால், "வலைப்பதிவை சார்ந்தது" என்ற இப்பிரிவு உண்டானது.  எனக்கு மின்னஞ்சல் மூலம் வந்த சில வாழ்த்து செய்திகளை வாசித்தபோது, மிகவும் ஊக்குவிப்பதாய் இருந்தது. அதில் சில என்னை மிகவும் பாதித்தது (நல்ல விதத்தில் தான்); அது என்ன, எவர் என்பது இங்கு அவசியம் இல்லை என படுகிறது! அவைகளை அறிந்த பின், என்னை இதுவரை ஊக்குவித்தவர்களுக்கும், ஊக்குவிக்க நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கும், ஊக்குவிக்க போகிறவர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டுமெனப் பட்டது. அது சரியானதும் கூட; என்னுடைய வார்த்தைகளை கவனித்தால் நான் "பாராட்டு அல்லது அங்கீகாரம்" என்ற வார்த்தையை அறவே நீக்கி இருப்பது புரியும். என்னளவில் ஒரு படைப்பாளனும் , அவனது படைப்புகளும் இந்த "பாராட்டு அல்லது அங்கீகாரம்" தரும் இன்ப மயக்கத்தால் பதிக்கப்படும் என திடமாக நம்புகிறேன். உங்களுடைய கருத்துக்களை (எப்படி இருப்பினும்) நான் "என்னை ஊக்குவிக்க" என்ற அடிப்படையிலேயே பார்க்க விரும்புகிறேன்; இதை நான் செய்யவில்லை எனில் என்னுடைய அடிப்படை கோட்பாட்டிலிருந்து நான் விலகிச் செல்லக்கூடும். சரி, இப்போது நன்றி சொல்லவதற்கு வருவோம்; இந்த வலைப்பதிவு வெளியான பின் உங்களிடமிருந்து வந்த ஊக்கக் கருத்துக்களுக்கு நன்றி சொல்லும் முன், இந்த வலைப்பதிவு உருவாகிக் கொண்டிருக்கும் போது (அல்லது உருவாகக் காரணமாய்) என்னை ஊக்குவித்த நபர்கள் பற்றி சொல்ல வேண்டும் என படுகிறது! அதை என் கடமையாகவும் கருதுகிறேன். 

              முதலில், என் மனைவி. எங்கள் மகளின் எதிர்காலத்திற்காய் இந்தியாவில் இப்போது தனியாய் எங்கள் மகளுடன் இருக்கிறாள். அவளின் பெற்றோரும் உதவியாய் இருப்பினும், அவள் மிகுந்த சிரமத்துடன் இந்த சூழ்நிலையை சமாளித்துக் கொண்டிருக்கிறாள்! அவளின் படிப்பையும், உத்தியோகத்தையும் தாற்காலிகமாய் நிறுத்தி வைத்துவிட்டுதான் இதை செய்து கொண்டிருக்கிறாள்!! இந்த நிலையில், என்னுடைய இம்முயற்சியை அவளிடத்தில் சொன்ன போது ஒரு சிறு மனக்குரைவுமின்றி (நான் இங்கே கடினப்படுகிறேன்; உங்களுக்கு இதெல்லாம் தேவையா? என்பது போல் கூட அல்லாமல்) அதை வரவேற்றாள்; என்னை ஊக்கப்படுத்தினாள். ஒருவேளை, நானும் இங்கே அவர்கள் இல்லாமல் கடினப்படுகிறேன் என்ற புரிதலின் அடிப்படையில் கூட இருக்கலாம். மேலும், நான் இவ்வலைப்பதிவை வெளியிடும் முன் என்னவளுக்கு என்னுடைய படைப்புக்களை அனுப்பி கருத்து கேட்டேன். நன்றாய் இருப்பதாய் கூறினாள்; அவள் ஒரு தமிழ்ப் பாரம்பரியக் குடும்பத்தில் இருந்து வந்தவள் என்பதை என் முதல் தலையங்கமான "எம்மகள் (அவள் பெயரும்) தோன்றிய கதை" என்பதில் குறிப்பிட்டிருக்கிறேன். அவளின் தமிழ் திறமை அசாத்தியமானது; ஆனால் அவ்வளவு எளிதில்  எவரிடத்திலும் அதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டாள். அவளிடம் இருந்து நிறைய கருத்துக்களையும், குறைகளையும் எதிர் பார்த்தேன்; ஆனால் அது கிட்டவில்லை. முதலில், அவளின் வேலைச் சுமை காரணம் என்று எண்ணினேன். பின், அவள் எதற்கோ தயங்குவதை உணர்ந்தது; அவளிடம் மேலும், மேலும் விசாரித்தபோது, அதிலுள்ள குறைகளை சுட்டிக்காட்டி என்னுடைய முயற்ச்சியை வீணடிக்கக் கூடாது என்று கருதியிருந்தது விளங்கியது. அதிலும், அந்த குறையை எனக்கு சுட்டிக்காட்டியவர், இன்னொருவர்; அவர் தான் இரண்டாமவர். அதனால் தான், என்னவளின் மனதில் இருந்ததை வெளிக்கொண்டு வர முடிந்தது.

            இரண்டாவது நபர், என் மிக நெருங்கிய நண்பனான முனைவர். சுரேசு பாபு; அமெரிக்காவில் "பிட்சுபர்கு" நகரில் வசிப்பவன். இங்கே, "அவன்" என்று குறிப்பிடுவதற்காய் எவரும் சங்கடப்படவேண்டாம். "அவர்" என்று குறிப்பிடும்போது அவன் அன்னியப்பட்டு போவதாய் தோன்றும்; மாறாய், அவனும் இதைத் தான் விரும்புவான். அவனிடமும், என்னுடைய படைப்புக்களை வெளியிடம் முன் தெரிவித்திருந்தேன். அதில், என்னுடைய முதல் தலையங்கமாய் வைத்திருந்தது வேறு ஒரு பார்வை; எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது கூட. ஆனால், அவன் தீர்க்கமாய், மூர்க்கமாய் மறுத்தான்; அதை என் போன்ற வளரும் எழுத்தாளர்கள் அதுவும் முதல் பதிப்பிலேயே எழுதுவது சரியில்லை என்றான். முதலில் அவனிடம், சமாதானம் சொல்ல முயன்றேன்; அவன் விடாப்பிடியாய் வாதிட்டு (அதாவது, வழக்கம் போல் கடிந்து திட்டி) என்னைப் புரிந்து கொள்ளச் செய்தான். இது தெரிந்த பின் தான் என்னவளிடம், அதைப் பற்றி விளக்கம் கூறி அவள் கருத்தை கேட்டேன். அவள், ஆமாம்! அது ஓர் மிகக் கருத்தாழம் உள்ள விசயம்; அதுவும் அது சரியாய் மற்றவர்களை சென்றடைய, முதலில் மற்றவர்கள் "உங்களுடைய" பார்வையை புரிந்து கொள்ளச் செய்வது அவசியம் எனறாள்! அப்போது தான் எனக்கு புரிந்தது; அவள் என் முயற்சியை குறைத்து விடக்கூடாது என்பதற்காய் அதை மறைத்திருக்கிறாள் என்று. இங்கே, இன்னொரு விசயம் புரிகிறது மனைவி என்பவள் நடுநிலையாய்  இருக்க விரும்பினும் சிலவற்றை வேண்டும் என்றே விட்டுக் கொடுக்கிறாள் என்று (அதிலும், எதையும் தீர்க்கமாய் யோசிக்கும் என்னவளே அப்படி நடந்திருக்கிறாள்). ஆனால், ஒரு நெருங்கிய நண்பன் இதை மறைக்க வேண்டியதில்லை; ஏனெனில், அது வேறொரு உறவு முறை; இதுவே, வேறொருவர் எழுதி அதை என்னவள் படித்திருந்தால், எடுத்தவுடனே "அதிகப்பிரசங்கித்" தனமாய் எழுதுகிறானே! என்று  விமர்சித்திருப்பாள். எப்படியாயினும், அது தடுக்கப்பட்டுவிட்டது; அதன் பின் தான், நான் வேறொரு தருணத்தில் எழுத எண்ணியிருந்த "எங்கள் மகள்" பற்றிய விசயத்தை முதல் தலையங்கமாய் எழுதினேன். அதற்கு முக்கிய காரணம் என் நண்பன்; பிறகு அதை ஆமோதித்து என்னை தீர்க்கமாய் உணரச் செய்த என் மனைவி. அதற்காய் தான் அவர்கள் இருவருக்கும் முதலில் நன்றியை தெரிவிக்க விரும்பினேன்.

       இதனிடையில், எனக்கு இந்த மாதிரி பகிர்தலை செய்யவேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாய் இருந்தது எனினும், நான் அதிகம் அதிகமாய் கற்பனை செய்த ஊடகம் "திரைப்படம்". நாம் நிறைய, அதிபலசாளியான நாயகனை (Super Hero) பார்த்துபழக்கப்  பட்டதினால் கூட இருக்கலாம். மேலும், என்னுடைய கற்பனைகள் அந்த "அதிபலசாளியான நாயகனை" போன்று ஒரு வன்முறை கலந்த வடிவத்தில் தான் இருந்து வந்துள்ளது. நான் சொல்ல வந்த விசயத்தை "சாட்டையால் அடித்து" கூறவேண்டும் என்றே கற்பனை செய்து கொண்டிருப்பேன். அவ்வாறு ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பின் கூட, வன்முறை கலந்த செயலாக்க எண்ணத்தால், என்னுடைய கருத்துக்கள் திசை தெரியாமல் போயிருக்கக் கூடும்! அதற்கு மாறாய், எனக்கு "வலைப்பதிவை" ஆரம்பிக்கும் சிந்தனை வர காரணமாய் இருந்தவர்கள் முனைவர். பெரியசாமி, முனைவர். ராசா என்ற இரண்டு தமிழ் பேசும் இந்தியர்கள்! (அதிலும் குறிப்பாய், முனைவர். பெரியசாமி). என்னை போல் கடல் கடந்து வந்து இங்கே வாழ்பவர்கள். அவர்களிடம் ஒரு மூன்று வாரங்களுக்கு முன் கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது, தளம் "தமிழ்" என்பதை வந்தடைந்தது! அப்போது அவர்களிடம் என்னுடைய "தமிழ் வளர" என்ற கவிதையை பகிர்ந்துகொள்ள வேண்டிய சூழல் வந்தது; அப்போது அவர்கள் தந்த ஊக்கம் தான் என்னை "வலைப்பதிவு" எனும் ஊடகத்தை நோக்கி பயணிக்க வைத்தது. என்னுடன் இருப்பவர்கள் என்னுடைய கருத்தை ஊக்குவிக்கும்போது, நான் ஏன் திரைப்படம் எனும் துறையில் வாய்ப்புக்காக போராட வேண்டும் என்ற கேள்வி எழுந்தது! (போராடியும் வெற்றி கிடைக்குமா என்பது இன்னுமொரு கேள்விக்குறி! அதற்கு ஒரு வேள்வியும் கூட வேண்டும் என்ற எண்ணமும் வந்தது; இதையும் தாண்டி அதற்கான முயற்சியை கூட இன்னும் துவக்கவில்லை; பின் எங்கே வாய்ப்பு கிடைப்பது?) உடனே, அதற்கு மாற்றாய் தோன்றியது தான் இந்த எண்ணம். அதற்கு பின், "வங்காள" மொழி பேசும் "முனைவர். சுமன் நந்தி" எனும் இந்திய(நண்ப)ர், எனக்கு வலைத்தளம் பற்றி விளக்கி சொல்லிக் கொடுத்தார். கணினி-அறிவியலில் ஆராய்ச்சி செய்யும் என்னவள், என்னுடன் இருந்திருப்பின் இதை இன்னமும்  கூட சிறப்பாய் அளித்திருக்கக் கூடும் என எண்ணத் தோன்றுகிறது!! இவர்கள் எல்லோரும் தான் என்னுடைய பார்வையை இவ்வலைப்பதிவின் மூலம் துவக்க வலிமையான அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர்கள்.

          இப்போது, உங்களுக்கு நன்றி சொல்லும் நேரம். நான் "அழைப்பிதழில்" குறிப்பிட்டிருந்தது போல், இந்த வலைப்பதிவை "எழுச்சிப் பெறச்" செய்வது உங்களிடம் தான் உள்ளது. உடனே, கிடைத்த உங்களின் ஊக்கமளிக்கும் செய்திகளுக்காய், என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான், இங்கே "பல பரிமாணங்களின்" மீதான என் பார்வையை  பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அது சார்ந்த பார்வை உங்களில் பலருக்கும் இருக்கும் என்று திடமாக நம்புகிறேன். என்னுள் உணர்ந்ததை, உங்களுக்கு தெரிவிக்கும் போது அது விருச்சமாய் வளரும். நான் எனக்குள் உள்ள பலவிதமான தீய-எண்ணங்களுக்கான, தீய-செயல்களுக்கான "வேரை" கண்டறிந்து,  "வேரறுக்கும்" முயற்சியில்/ பயிற்சியில் இருக்கிறேன். அதை உங்களிடம் கொண்டு சேர்த்து, அது உங்களுக்குள் இருக்கும் "வேரை" அறுக்க உதவியாய் இருக்க முயல்கிறேன். இது "புரட்சி" அல்ல; இது "புரிதல்". மேலும், நான் என்னுள் இருக்கும் பல வேர்களை அறுக்க முயன்று கொண்டிருக்கும் போது, எப்படி புரட்சி செய்ய முடியும்? மேலும், புரட்சி என்பதே ஒரு அழிவை அழிக்க, இன்னொரு அழிவை செய்யும் செயலாய் எனக்கு படுகிறது; இதற்கு பல உதாரணங்களை "மேற்கோள்" காட்டி கூற முடியும். என்னுடைய முயற்சி ஒரு அழிவை (நம் தீய-எண்ணம் மற்றும் தீய-செயல் மூலம் உண்டாகும் அழிவை), அதன் ஆதியை அழிப்பதில் இருந்து தொடங்க எண்ணுகிறேன். இது செய்யப்படின் பல அழிவுகள் அறவே தடுக்கப்படும் என்பதற்காய் தான் இந்த முயற்சியை, புரிதலை உங்களையும் சென்று சேர பிரியப்படுகிறேன். என்னுடைய பார்வையில் குறை இருப்பின் அதை சுட்டிக்காட்டுவது உங்களின் கடமை; அது தெரிவிக்கப்படின் என்னுடைய பார்வை குறைவு நீங்கி, பார்வை இன்னும் தெளிவு பெரும். அதற்கு உங்களின் ஆதரவை வேண்டுகிறேன்; இந்த வலைப்பதிவில் உள்ள குறைகளையும், நிறைகளையும் சுட்டிக்காட்டுவதன் மூலம் என்னுடைய பார்வை விசாலமாகும். இந்த வலைப்பதிவை  நீங்கள் விரும்பும் பட்சத்தில், உங்களுக்கு தெரிந்த (எனக்கு தெரியாத) உறவு மற்றும் நட்பு வட்டாரத்திற்கு இதைக் கொண்டு செல்லுங்கள். நீங்கள் இதுவரை படித்து பாராட்டியதற்காயும், இனி மற்றவர்களை சென்றடைய உதவப் போவதற்காயும், மீண்டும் ஒரு முறை என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

        முயன்ற வரை, புதிய படைப்புக்களை ஒரு குறிப்பிட்ட நாளில் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் பதிவிக்க முயல்கிறேன். நீங்கள் என்னுடைய படைப்புக்களை உடனுக்குடன் அறிய விருப்பமிருப்பின், வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள "மின்னஞ்சல் மூலம் தொடர்க (Follow by E-mail)" என்ற பிரிவில் உங்கள் "மின்னஞ்சலை" பதிவதன் மூலமாய் செய்யலாம். முடிக்கும் முன், மீண்டும் ஒரு முறை, இதுவரை என்னை ஊக்கப்படுத்தி கருத்துக்கள் அனுப்பியவருக்கும், அனுப்ப எண்ணிக் கொண்டிருக்கிறவர்களுக்கும், இனிமேல் அனுப்பப் போகிறவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், உங்களின் கருத்துக்கள் தான் என்னை, என்னுடைய படைப்பை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்ல உதவும் என்ற உண்மையை கூறி முடிக்கிறேன். உங்களுக்கு விருப்பமிருக்கும் பட்சத்தில், உங்களுடைய கருத்துக்களை வலைப்பதிவில் பொதுப்படியாய் பதிய வேண்டுகிறேன். நீங்கள், எனக்கு மட்டும் மின்னஞ்சல் அனுப்பும் பட்சத்தில் சில கடுமையான கருத்துக்களை நான் மறைக்கக் கூடும்/ அல்லது அது போல் முயற்சிக்க கூடும். மாறாய், பொதுப்படியாய் வெளிப்படும் பட்சத்தில், அது அனைவரையும் சென்று சேரும். அதன், தாக்கம் இன்னும் அதிகமாகும்; அதனால் என்னுடைய சிந்தனை இன்னும் தெளிவும்/ வளமும் பெரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக