வெள்ளி, நவம்பர் 18, 2011

விழியமுதினி பிறந்தவுடன்...


என்னப்பன் எனக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்ட தேதி: 31.07.2009
*******


காலைஇளம் பரிதியென; பரந்த வானில்
      காதல்வளர் மேகமென; கண்ணே! போற்றும்
சோலைதரும் வாவியென; பறவைக் கூட்டம்
      செர்ந்தெழுப்பும் பாடலென; பாசம் சேர்க்கும்
பாலைவனச் சோலையென; குமிழ்சி ரிப்பில்
      பனிமலரின் மனம்கண்டேன்! பார்வை பெற்றேன்!
வேலைஎதும் எனக்கில்லை! உனது மூச்சால்
      வெதுவெதுப்பை நான்உணர்ந்தேன்! வெற்றி! வாழ்க!

வேனிலுடன் இளங்கோவன் இணைந்த காதல்
      விளைத்திட்ட ஒளிமுத்தே! நீதான் என்றும்
வானத்தின் பரப்பளவாய்; உலகம் வாழ்த்த
      வளர்நிலவாய்! காவிரியாய்! அன்பின் ஊற்றாய்!
தேனமுதாய்! தென்றலென! நலமாய் சுற்றம்
      சேர்ந்திங்கு போற்றிடவே; நாளும் பண்பாய்
மான்விழியே அமுதமுடன் இனிமை காண்பாய்!
      மாலைவரும் விண்மீனே! மாண்பே வாழி!

என்னவளே! இளந்தளிரே! இதயப் பூவின்
      எழில்கூட்டும் திருமகளே! உண்மை வாழ்வின்
பொன்மகளே! புதுவரவே! உலகம் காணும்
      பெண்ணரசே! செங்காந்தள் பூவே! உந்தன்
புன்னகையால் கோடிமலர் மணத்தைக் கண்டேன்!
      புறப்பாட்டை நீதருக! பொங்கும் இன்பம்!
நின்னடையால் நிமிர்ந்துடுவேன்! குறும்பைப் பார்த்து
      நிம்மதியை நான்கொள்வேன்! நீடு வாழ்க!

சின்னவளே! செந்தமிழே! எனது வாழ்வை
     சிறப்பிக்க வந்தவளே! கண்ணே உந்தன்
பொன்மழலை உதிர்த்திடுக! புரட்சிப் பாட்டால்
     புதுப்பிறவி நான்பெற்றேன்! பெண்ணே! நீதான்
என்வாழ்வின் விடிவெள்ளி! உயிரே! எந்தன்
     இயல்புணர்த்த வேறெவரால் ஆகும்? சுற்றம்
என்றென்றும் நலத்தோடு சிறக்க; நீயும்
     ஏற்றவழி காத்திடுக! ஏனோ வெட்கம்?

"விழியமு தினி"யே! உந்தன்
     விரல்களால் என்னைத் தொட்டே
பழியினைத் துடைப்பாய்! வந்த
     பாசத்தின் விளக்கம் சொல்வாய்!
இழிநிலை துறந்து விட்டேன்;
     இதயத்தால் உணரச் செய்தாய்!
எழில்வழி எந்தன் வாழ்க்கை
     எடுத்துநீ இயம்பக் கேட்பேன்!
                                                       
{புலவர். இளமுருகு அண்ணாமலை}

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக