வெள்ளி, நவம்பர் 18, 2011

விழியமுதினியின் முதல் பிறந்த நாளில்...

என்னப்பன் தேதியிட்டது: 21.06.2010
*******

பொன்மகளே! புதுவரவே! இளங்கோ வேனில்
      பெற்றெடுத்த விழியமுதே! கனியே! எங்கள்
கண்ணொளியே! ஓராண்டைக் கடக்கும் நீயும்
      கொண்டிடுக பல்லறிவும்! பண்பும் அன்பும்
மண்ணுலகில் பெறுவதுடன், மகிழ்ச்சி பொங்கும்
      மலர்மனமாய்! பொறுமையுடன் சுற்றம்; நண்பர்; 
உண்மையுடன் போற்றிடவே உறுதி கொள்க!
      உரிமைதரும் சொந்தமுடனே வாழ்க! வாழ்க!

திருமகளே! தென்மொழியே! தெளிந்த ஓடை
      தருகின்ற சலசலப்பாய்! மழலை இன்பம்!
பெருமையுடன் தருபவளே! பொதுமை எண்ணம்
      பூத்திடவே! உலகெங்கும் போற்றும் பண்பாம்!
ஒருவனுக்கு ஒருத்தியென: வாழும் நாட்டில்
      உதித்திட்ட செங்கரும்பே! தமிழர் கொள்கை
கருப்பொருளாய் இருக்கட்டும்! நாடும் ஏதும்
      காதலுடன் வாழ்த்தட்டும் வளர்க நாளும்!

பெரியவளே! முத்தமிழே! விழியே! அந்நாள்
      பிதற்றிட்டார் மேடைதொறும் "கவிஞர்" பாடல்!
பிரியமுடன் தமிழ்வாழ்த்தி அறுபத் தைந்தில்
      படைத்திட்டார் போராட்டம்! பல்லோர் மாண்டார்!
"சிரித்திட்டார்" ஆட்சியினில்! தமிழன் ஏற்றம் 
      சிறிதளவும் சேர்த்தாரா? "குடுமபம் காத்தார்!"
உரிமைக்குரல் நீஉடனே எழுப்பு! நாட்டோர்
      உணர்வுகளைத் திறந்திடுக! தமிழைக் காப்பாய்!

                                                                  {புலவர். இளமுருகு அண்ணாமலை}

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக