ஞாயிறு, ஜனவரி 26, 2014

இராசி-பலன்கள் பார்ப்பது சரியா???



        எனக்கு ஜோதிடம்/குறி-பார்ப்பது அல்லது எதிர்காலத்தை கணிப்பது என்பதில் எந்த நம்பிக்கையும் இல்லை. ஆனால், நடப்பது எல்லாம் முன்பே திட்டமிடப்பட்டு விட்டது என்பதில் ஓர் அலாதி-நம்பிக்கை உண்டு. ஆனால், அது என்னவென்று தெரிந்துகொள்வதில் எந்த ஆர்வமும் இல்லை; அதை உறுதியாய் சொல்வோர் எவரும் இருத்தல் சாத்தியமில்லை என்றும் ஓர் நம்பிக்கை உண்டு. என்ன வந்தாலும், சந்தித்துதான் ஆகவேண்டும் என்ற எண்ணம் மிகுந்திருக்கிறது; என்னை அப்படியே புரட்டிப்போட்ட விசயங்கள் என்று 2 உண்டு; இரண்டும் என் வாழ்க்கையையே முடித்துக்கொள்ளும் அளவிற்கு கூட என்னை இட்டுச்சென்றிருக்க வேண்டிய விசயங்கள். ஆனால், தற்கொலை என்ற முட்டாள்தனமான ஓர்-முடிவில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை; அதை சில புதுக்கவிதைகள் மூலமாய் கூட வெளிப்படுத்தி இருக்கிறேன். ஆனாலும் கூட, எந்த விசயத்திற்காகவும் ஜோதிடம்/குறி-செல்வது என்ற விசயங்களை நாடிச் சென்றது இல்லை.

         ஆனாலும், சில ஆண்டுகளாய் "அன்றைய இராசிப்பலன்" பார்க்கும் பழக்கம் உள்ளது. ஏனென்று தெரியவில்லை! என்மகளுடன் இருக்கும் எந்த நாளிலும் நான் இராசிப்பலன் பார்ப்பதே இல்லை. இணையத்தில் நாளைய பலனை முதல்-நாள் நள்ளிரவே (இந்திய நேரப்படி) பார்க்கும் வழக்கம். அதில் மேலோட்டமான செய்திகள் தான் இருக்கும்; பல அறிவுரைகள் போன்றும் இருக்கும். உதாரணத்திற்கு, சில நாட்கள் முன் "இன்று பின்-விளைவை எண்ணி பேசுதல் நலம் என்று" இருந்தது; அது போல், என் மேலதிகாரியிடம் ஓர் வாக்குவாதம் நிகழ்ந்தது. அந்த இராசிப்பலனை நான் படிக்காமல் இருந்திருந்தால் இன்னும் அதிகமாய் பேசி, பின்விளைவு ஏதேனும் உருவாகியிருக்கும். அது, தடுக்கப்பட்டது; நான் பெரும்பான்மையனவற்றை பொது-அறிவுரையாய் எண்ணி எல்லா-நாட்களிலும் தொடரவே விரும்புகிறேன். மீண்டும் மேற்கூறிய உதாரணம்தான்; எப்போதும் எவரிடமும் பின்-விளைவை எண்ணிப்பார்த்து பேசுதல் நல்லது தானே??!! என்னைப்பொருத்தவரை, இராசிப்பலன் பார்த்து...

அதிலுள்ளவை போன்று நம் செய்கைகளை வரையறுப்பது மிகவும் சரியே!!! 

பின்குறிப்பு: சில நாட்களில் "இன்று புத்திரர் விரும்பியப் பொருள் வாங்கித்தந்து மகிழ்வீர்கள்/ அல்லது இல்லறத்துனை கேட்ட பொருள் வாங்கித்தருவீர்கள்" என்பன போன்று சில விசயங்கள் வரும். அதைப் படித்தவுடன் நான் சிரித்துக்கொள்வேன்; என்னுடைய உறவு/ நட்பு எல்லோருக்கும் தெரியும், நான் அவர்கள் கேட்கும்-முன்னே கூட வாங்கித்தரும் பழக்கம் உள்ளவன் என்று! இதை சொல்ல ஒரு இராசிப்பலனா??!! என்று தோன்றும். ஆனால், உண்மையில் அதில் பல நல்ல விசயங்கள் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக